கார்த்தி காப்பி குடிக்கட்டும், சூர்யா பெப்சி குடிக்காதிருக்கட்டும்



இந்த வாரக் கல்கி (10 மார்ச், 2013) அட்டைப்படம் பார்த்தீர்களா?
உள்ளே அட்டைப் படக் கட்டுரை படித்தீர்களா?

நடிகர் கார்த்தி ஒரு காப்பி விளம்பரத்தில் நடிக்கும் காட்சியை நேரடி ஒளி/ஒலி பரப்பு செய்திருக்கிறார்கள்...

கட்டுரையை எழுதிய திரு எஸ்.சந்திரமௌலி
கார்த்தியிடம்ஒரு கேள்வியைப் போட்டிருக்கிறார்...
“என்ன கார்த்தி அப்பா காஃபியே தொடமாட்டார். அண்ணனும் தம்பியும் போட்டிபோட்டுக் கொண்டு காஃபி விளம்பரங்களில் நடிக்கிறீர்கள்?”
அதற்கு கார்த்தி சொல்கிறார்-
“காஃபி குடிக்காதது அப்பாவோட பாலிசி ஆனா அம்மா நல்லா காஃபி பொடுவாங்க நாங்க நல்லாவே காஃபி குடிப்போம்“

தன் கொள்கையை விட்டுக்கொடுக்காமல், அதே நேரம் தனது
குடும்ப ஜனநாயகத்திற்கும் மரியாதை தரும் நடிகர் திரு சிவகுமாரின் இன்னொரு நல்ல குணத்திற்கும் சேர்த்துப் பாராட்டுகளைச் சொல்வோம்.

அதே நேரம் -
“பொழுதெலாம் எங்கள் செல்வம்
கொள்ளை கொண்டு
போகவோ - நாங்கள் - சாகவோ
அழுதுகொண் டிருப்போமோ நாங்கள்
ஆண்பிள்ளைகள்
அல்லமோ - உயிர் - வெல்லமோ?” - என்ற பாரதியைப் படித்த திரு சிவக்குமார் தன் பிள்ளை சூர்யா அந்நிய மூலதன பகாசுரக் குளிர்பானக் கம்பெனியான “பெப்சி“ விளம்பரத்தில் நடிக்க அனுமதித்தாரா என்ன? தெரியவில்லையே?

அனுமதித்திருந்தால் அது குடும்ப ஜனநாயகம் அல்லவே? தேசப்பற்று அற்ற குடும்ப அடிமைத்தனமல்லவா அது?
நடிகர் திரு சூர்யா எல்லாவற்றையும் அப்பாவிடம் கேட்டே முடிவெடுப்பார் என்கிறார்கள். அப்பா ஊரறிந்த நல்லவர் என்பதால் இதுவும் நல்லதுதுதான். ஆனால், அவராகவே முடிவெடுத்திருந்தால்... இது நல்ல முடிவல்லவே?
பெற்றோர் உற்றாருடன் போராடித் தன் காதலியை மனைவியாகக் கைப் பிடித்த சூர்யா இதில் இன்னும் யோசித்திருக்க வேண்டாமோ?

ஏழாம் அறிவு படத்தில் சுதேசிப் பெருமை -பாரம்பரிய அறிவுச் சொத்து தமிழ்நாட்டில் தமிழர்களால் (தெலுங்கில் தெலுங்கர்களால் இந்தியில் இந்தியர்களால்) அறியப்படாமல் இருப்பதுபற்றி நெருப்புப் பறக்க வசனம் பேசி, சருகு பறக்கச் சண்டையிட்டவர்... பெப்சி விளம்பரத்தில் நடிக்கலாமா?


மலையாள நடிகர் மம்முட்டியும் மோகன்லாலும் பெப்சி, கோக் போலும் பன்னாட்டுக் குளிர்பான விளம்பரங்களில் நடிக்கமாட்டேன் என்று சொன்னதாகச் சொல்வது உண்மையெனில் அதுவலலவா உண்மையான சுதேசி உணர்வு?  இதைக் கார்த்தியிடம் பேட்டிகண்டு எழுதிய திரு சந்திரமௌலியே கேட்டு கல்கியில் எழுதவேண்டும்.
----------------------------------------------------------------------------------------- 

9 கருத்துகள்:

  1. மிகச்சரியான கேள்வி... பதில் வருமா தெரியவில்லை...

    ஏனென்றால் ப ண ம்...

    பதிலளிநீக்கு
  2. எல்லாமே பணத்துக்கே!
    இவர்கள் விதி விலக்கா? பூவித்த காசு மணக்கவா போகிறது.
    கொள்கையாவது? நாம் இவ்வளவு ஏமாளியாக இருக்கக் கூடாது?

    பதிலளிநீக்கு
  3. நன்றி தனபாலன்
    உடனே படித்துவிட்டு
    உடனுக்குடன் கருத்துக் கூறும் உங்கள் அன்பால் நான் உற்சாகமாக நிறைய எழுத முடிகிறது.
    இல்லை திரு யோகன்,
    நான் அப்படி நினைக்கவில்லை.
    திரு சிவக்குமார் தன் பிள்ளைகளை அப்படி வளர்க்கவில்லை என்றே நான் நம்புகிறேன்.
    “இன்னதென அறிகில்லார் தாம் செய்வது இவர் பிழையை மன்னியும்” என்று வீரமாமுனிவர் தேம்பாவணியில் எழுதவில்லையா?
    இந்தத் தலைமுறைக்குப் பல விடயங்களை நாம் கொண்டு சேர்க்கவில்லையோ என்னும் உறுத்தல் அவ்வப்போது எனக்கு எழுகிறது.
    ஊடகங்களின் பங்களிப்பே இதில் பெரும் பங்காற்ற முடியும்..
    அவசரம் வேண்டாம்.
    நல்லவர்கள் நல்லதையே செய்வார்கள்

    பதிலளிநீக்கு
  4. அருமை, மிக நியாயமான கேள்விகளை கேட்டிருக்கீங்க சார்!!

    பதிலளிநீக்கு
  5. Not only Karthik. All who are popular
    in various fields and who have earned a place of eminence in the society should desist from appearing for popularising/marketing such foreign products. will it happen? it is a million dollar question. SRK

    பதிலளிநீக்கு
  6. நன்றி திரு எஸ்ஆர்கே அவர்களே!உங்களைப் போன்றவர்கள் தமிழில் நிறைய எழுத வேண்டும் தமிழ்வலைப்பக்கம் அல்லது இணையப்பக்கம் வைத்திருக்கிறீர்களா? இருந்தால் தெரிவிக்க வேண்டுகிறேன்.மீண்டும் நன்றி, வணக்கம்.

    பதிலளிநீக்கு
  7. வாழ்க்கையின் பல்வேறு சந்தர்ப்பங்களில் நாம் சந்தர்ப்பவாதிகளாக இருப்பது எதார்த்தம். சூர்யாவும் அதற்கு விதிவிலக்கல்ல. நம்மிடமும் பணத்தை அள்ளிக்கொடுக்க முதலாளிகள் தயாராக இருந்தால், சம்மதம் சொல்லவே செய்வோம்; குறைந்தபட்சம், சபலப்படவாவது செய்வோம்!
    - கோபிநாத் ஜம்புலிங்கம்

    பதிலளிநீக்கு
  8. நண்பர் கோபிநாத் ஜம்புலிங்கம் அவர்களுக்கு வணக்கம். நீங்கள் சொல்வது எதார்த்தம்தான். அதைமீறி நிற்க வேண்டும். “கோடி கொடுப்பினும் தன்னுடைநா கோடாமை வேண்டும்” என்பதுதானே நம் தமிழ்வழிகாட்டுதல்? அதிலும் நம்மைவிடவும் கூடுதலாக மக்களைக் கவரக்கூடியவர்கள் இன்னும் கூடுதலான எச்சரிக்கையோடு இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பதில் தவறென்ன? இப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக தவறான கருத்துகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் நல்ல மனம் படைத்த திரு சிவகுமாரின் குடும்பத்திலிருந்து வந்த ஒரு நல்ல கலைஞன் பங்கேற்பதை மறுபரிசீலனை செய்யக் கேட்பது அப்படித்தான். “சொல்லுதல் யார்க்கும் எளிய, அரியவாம் சொல்லிய வண்ணம் செயல்” எனும் குறளை நானும் படித்திருககிறேன். மலையாள திரைப்படக் கலைஞர் மோகன்லால் -கோடி கொட்டித்தந்தாலும் நடிக்கமாட்டேன் என்று- கோக் விளம்பரத்தில் நடிக்க மறுத்தாராமே? அது உண்மையெனில் அவரைப் பாராட்டலாமா கூடாதா? நான் சூரியாவைப் பெரிதும் விரும்புகிறேன். அதனால்தான் இந்த வேண்டுகோள். தங்கள் கருத்துக்கு மீண்டும் நன்றி. தொடர்ந்து விவாதிப்போம்.

    பதிலளிநீக்கு
  9. அன்புத் தோழர்க்கு,பணம் கைநிறைய வருகிறது.அகரம் கட்டளை மூலம் தொண்டு செய்யும் சூர்யாவுக்கு இன்னும் உலகம் புரியவில்லை.ஒவ்வொரு மேனாட்டுப் பொருளையும் சந்தைக்குள் கொண்டுவர நடக்கும் அரசியல் சூதாட்டமும் அவருக்குப் புரியவில்லை.ஏழாவது அறிவைச் சொன்ன நண்பருக்கு ஆறாவது அறிவைப் பற்றி எவரேனும் சொன்னால் நல்லது.

    பதிலளிநீக்கு