அருணன் எழுதிய ”காலந்தோறும் பிராமணியம்” – நூல் அறிமுகம்.


சமூக ஆய்வாளர்கள் படிக்க வேண்டிய ஆகச் சிறந்த ஆய்வு நூல்!
 
நான் எத்தனையோ ஆயிரம் புத்தகங்களைப் படித்திருக்கிறேன். சில ஆயிரம் புத்தகங்களை என்வீட்டில் சிறு நூலகமாகவும் வைத்திருக்கிறேன் – அதற்காகவே என்வீட்டில் ஒரு மாடி கட்டி அதில்தான் இப்போது குடியும் இருக்கிறேன். (மூத்தமகள் வால்கா – தன் கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளுடன்- துபையில் இருக்கிறாள், மகன் நெருடா – தன் மனைவி, குழந்தைகளுடன்- சென்னையில் இருக்கிறான். மூன்றாவதாகப் பிறந்த மகள் லட்சியாஇப்போதுதான் செட்டிநாடு பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு கணினிக்கல்வி படித்து வருகிறாள் –எனவே, நூலகம் இருக்கும் மாடிப்பகுதியை வாடகைக்கு விடமுடியாமல், கீழ்வீட்டை வாடகைக்கு விடலாம் என்ற முடிவுக்கு இப்போதுதான் வந்திருக்கிறோம்...)
என் மனைவி முதன்முறையாகக் கருவுற்றிருந்த போது நான் படித்த “வால்காவிலிருந்து கங்கை வரைஎனும் வங்காள எழுத்தாளர் ராகுல சாங்கிருத்தியாயனின் நூல் என்னைப் பெரிதும் பாதித்தது. பலநாள்கள் என்னைத் தூங்க விடவில்லை! அதன் காரணமாகவே என் முதன் மகளுக்கு “வால்கா“ என்று பெயரிட்டேன்.
இப்போதும் “என்னைப் பாதித்த நூல்வரிசையில் “வால்காவிலிருந்து கங்கை வரைநூலைத்தான் முதல் நூலாக வைத்திருக்கிறேன். அதன் பிறகு ஆர்.பி.டி எனும் ரஜினி பாமிதத் எழுதிய “இன்றைய இந்தியாமொழிபெயர்ப்பு நூல் ஆய்வு நூல் எப்படி இருக்க வேண்டும் என்று தடம் போட்டுத் தந்தது. தமிழில், வையாபுரியாரின் “காவிய காலம்”,  “தமிழ்ச் சுடர்மணிகள்நூல்கள் அவற்றின் ஆய்வுப் பார்வையில் என்னைப் பெரிதும் கவர்ந்தன.
இடையில் “பாரதி-காலமும் கருத்தும்எனும் ரகுநாதன் அவர்களின் நூலும், கோ.கேசவன் எழுதிய “பள்ளு இலக்கியம்- ஒரு பார்வைமுதலான நூல்களும், பின்னர் “பாரதி-மறைவு முதல் மகாகவி வரைஎனும் -அ.மார்க்சும் கா.சிவத்தம்பியும் சேர்ந்து எழுதிய- நூலும் என்னைப் பெரிதும் ஈர்த்தன.
இலக்கியத் தகவல் தரும் நோக்கில் உ.வே.சா. தொடங்கி பெ.சு.மணி தொடர, வீ.அரசு வரை பலரும் எழுதிய மற்றும் தொகுத்தளித்த நூல்கள் நமக்குப் பயன்பட்டாலும், ஆய்வு நோக்கில் நம்மை வியக்கவும் தொடரவும் வைத்த நூல்கள் அவற்றில் வெகு சிலவே.
கார்த்திகேசு சிவத்தம்பியின் ஆய்வுகள் என்னை வியக்க வைத்தாலும் அவரது நடை அலுப்படித்ததையும் சொல்லாமல் இருக்க முடியவில்லை. உள்நுழைந்து சொல்வதாகச் சொல்லி அவர் இழுக்கும் இழுவை நடையை என்னால் ரசிக்க முடியவில்லை, ஆனாலும் அவரது “தமிழ் இலக்கணம் காட்டும் தமிழ்ச் சமூக நிலை”(?)  மற்றும் “சங்க காலம் – வீரயுகம்முதலான நூல்களின் ஆய்வுச் சாரம் தந்த மகிழ்ச்சியையும மறுக்க இயலாதுதான்.
இவ்வாறே சமகால ஆய்வாளர் எஸ்.வி.ராஜதுரை, வ.கீதா இருவரும் எழுதிய “இந்து-இந்தி-இந்தியாமுதலான- சில ஆய்வு நூல்கள் மலைக்க வைத்தாலும் தேவைக்கு அதிகமான சான்றுகள் கொஞ்சம் அச்சுறுத்திவிட்டன.
“சங்க காலம்“ பற்றிய தலித்தியப் பார்வையில் எழுதப்பட்ட நூல்கள் சில மகிழ்ச்சியளித்தாலும் ஆய்வுப் போதாமைக்கும் சான்றாக நிற்கின்றன.
இவற்றைக் கடந்து வந்தபிறகு –
அருணன் எழுதிய ஆய்வுநூல் தொகுதிகளை அவ்வப்போது பார்த்து, வியந்திருந்தாலும் அதை அவர் சமகாலம் வரையும் நீட்டியிருப்பதுதான் மிக மகிழ்ச்சி தருவதாக உள்ளது. இரண்டாயிரம் ஆண்டுக்கால இந்தியாவின் நீண்ட வரலாற்றைச் சமூகவியல் பார்வையில் யாரேனும் தரமாட்டார்களா? (அல்லது நாம்தான் எழுத வேண்டுமோ?) எனும் மயக்கத் தயக்கத்தில் நான் இருந்தபோது இந்த நூல்கள் வந்து பெருமகிழ்வு தந்திருக்கின்றன.
இந்த “இந்தியா பற்றிய சமூக ஆய்வு நூல்கள்“ பற்றிய விமர்சனத்தைத் தனியே வைத்துக்கொள்ளலாம். இப்போது மகிழ்ச்சியோடு அறிமுகம் செய்வதையே பெரும் பெருமையாகக் கருதுகிறேன்.
எட்டுப் பாகங்கள் – ஏழு நூல்கள் –  3236 பக்கங்கள்!
பாகம் 1 –வேதகாலமுதல் சோழர்காலம் வரை-பக்கம் -384
பாகம் 2,3–சுல்தான்கள் காலம், முகலாயர் காலம்-பக்கம்-588
பாகம் 4 –கிழக்கிந்தியக் கம்பெனி காலம் –பக்கம்-264
பாகம் 5 –பிரிட்டனின் நேரடி ஆட்சிக் காலம் – பக்கம் - 552
பாகம் 6 –நேரு காலம் – பக்கம் – 396
பாகம் 7 –இந்திரா காலம் – பக்கம் - 416
பாகம் 8 –ராஜிவ், ராவ் காலம் – பக்கம் – 636

இதனை எழுதிய பேராசிரியர் அருணன் அவர்களுக்குத் தமிழர்களும், இந்திய ஆய்வாளர்களும் பெரிதும் கடமைப் பட்டிருக்கிறார்கள்.
இலக்கியம் – வரலாறு – மார்க்சியம் ஆகிய இந்த மூன்றிலும் தெளிவாகத் தேர்ந்த ஒருவர்தான் இந்தமாதிரியான ஆய்வுகளைச் சரியாகச் செய்யமுடியும் என்பதை இந்த நூல்களைப் படிப்பவர்கள் உணர முடியும்.
எட்டுப்பாகங்கள் அடங்கிய ஏழு நூல்களின் விலை ரூ.2,000. ஆனால், இருபது விழுக்காடு கழிவு தந்து அஞ்சல் செலவையும் பதிப்பகமே ஏற்றுக்கொள்கிறது.

நூல் கிடைக்குமிடம் –
வசந்தம் வெளியீட்டகம்,
69-24ஏ அனுமார் கோவில் படித்துறை,
சிம்மக்கல், மதுரை-625 001
தொலை பேசி-0452 2625555,
நூலாசிரியரின் அலைபேசி- 9443701997
மின்னஞ்சல் – vasanthamtamil@yahoo.co.in
-------------------------------------------------------------------------------------------------- 

4 கருத்துகள்:

  1. பேராசிரியர் அருணன் அவர்களின் நூலை அறிமுகம் செய்தமைக்கு நன்றியன்.

    அன்புள்ள
    மு இளங்கோவன் muelangovan@gmail.com

    பதிலளிநீக்கு
  2. உடனுக்குடன் படித்து, பதில் எழுதி வியப்பளிக்கிறீர்கள் பேராசிரியரே!
    நன்றி.
    தாங்கள் கேட்டிருந்த படத்தை, அதே வலைப்பக்கத்தில் படத்தொகுப்பு (கேலரி) பகுதியில் எடுத்துக்கொள்ளலாம்
    மீண்டும் நன்றி வணக்கம்

    பதிலளிநீக்கு
  3. I read many of arunan writing, all about social, against communalism is good. Thanks for introducing this book series.
    Hariharan Doha

    பதிலளிநீக்கு
  4. வணக்கம் அரிகரன்,
    நீங்கள் முன்னர் ஒரு முறை அருணனின் தொலைபேசி எண்ணைக் கேட்டீரகள் அல்லவா? அவர்களுடன் தொடர்பு கொண்டு பேசினீர்களா? - வள்ளுவர் சொல்வது போல அவர் “நுணங்கிய கேள்வியர் ஆதலால் வணங்கிய வாயினர்” மிகச்சிறந்த பண்புகள் சான்ற மனிதர் அதற்காகவும் அவரைப் பின்பற்றலாம்... தங்கள் மின்னஞ்சலுக்கு நன்றி, தொடரட்டும் இந்தத் தொடர்புகள் - நா.மு.

    பதிலளிநீக்கு