என்னதான் செய்கிறான் முத்து நிலவன்?
“வலைப்பூ ஆரம்பித்து விட்டான் முத்துநிலவன்” என்பதோடு “ஆரம்பித்து விட்டுவிட்டான் நிலவன்” என்று யாரேனும் சொல்லிவிடுவார்களோ என்று அஞ்சிக் கொண்டேதான் ஒவ்வொரு நாளும் ஓடுகிறது. நம் வேலைகளை நாமே திட்டமிடக் கூடிய அளவிற்கு நான் பெரிய மனிதனும் இல்லை, திட்டமிடாமலே வேலை செய்யும் அளவிற்குத் தாழ்ந்த மனிதனும் (மினிதன்?) இல்லை நான்.
ஏற்கெனவே எழுதிய நூல்கள், “மறைமலை அடிகள் பிள்ளைத்தமிழ்”, க.நா.சு., ஜெ.கா. பற்றிய “முழு” விமர்சனம், “புதிய மரபுகள்” கவிதைத் தொகுப்பு, “நல்ல தமிழில் --பிழையின்றி-- எழுதுவோம், பேசுவோம்” மற்றும் -தினமணி, கணையாழி, செம்மலர், தீக்கதிர், ஜனசக்தி, புதியஆசிரியன், மற்றும் பல்வேறு மலர்களில் எழுதிய கட்டுரைகள் இவற்றோடு ‘கல்கி’ சிறுகதைப்போட்டியில் பரிசு பெற்ற இரண்டு சிறுகதைகள் உள்ளிட்ட எனது படைப்புகளை இந்த எனது வலைப்பூவில் இட வேண்டும் என்றும் ஆசைதான்.
கையில் இருக்கும் இவற்றை தட்டெழுதி வெளியிட நேரம் கிடைக்காமல் நான் விரும்பாமலே நாடுமுழுவதும் --நாவால் நடந்து– திரிவது எனக்கே பிடிக்கவில்லை.
ஆனால், ‘ஊடக வெளிச்சத்தில்’ நான் பேசும் பேச்சு சிலர் பலரைக் கவர்ந்து ஏதோ செய்து வருவதையும் பார்க்காமல் இருக்க முடியவில்லை.
இதோ நேற்றைய தினம் -ஒரே நாளில் நான் கலந்து கொண்ட- மூன்று நிகழ்ச்சிகளையும் நேரில் கண்ட ‘நல்ல ஆசரியரும்’ தாமே எழுதிய இசையமைத்த பாடல்களைத் தாமே எடுப்பான குரலில் பாட வல்லவரும், அதைவிட முற்போக்கான --வார்த்தைகளால் அல்ல வாழ்க்கையால் என்னைக் கவர்ந்தவருமான என் அருமைத் தோழர் பாவலர் பொன்.கருப்பையா அவர்கள் இன்று எனக்கு எழுதிய மின்னஞ்சல் எனது ‘நிறைவற்ற மனதிற்கு’ ‘நாமும் ஏதோ செய்துகொண்டுதான் இருக்கிறோம்’ எனும் ஆறுதலைத் தந்தது.
அதனை ஆவனப் படுத்த வேண்டும் என்பதற்காகவே நம் வலைப்பூவில் இடுகிறேன்….
---------------------------------------------------------------------------------------------------------------------
தோழமைமிகு நிலவன் அவர்களுக்கு.
வணக்கம்.
செப்தம்பர் 25ல் தங்களுடன் கலந்து கொண்ட மூன்று நிகழ்வுகள் மனதிற்கு மிக இதமாக இருந்தது.
ஆலங்குடியில் கவிஞர் நீலாவின் மூன்று நூல்கள் வெளியீட்டு விழாவில் நமது அறிவொளி நாயகி திருமதி ஷீலாராணி சுங்கத் அவர்களை வரவழைத்து, தங்கள் தலைமையில் நூல்கள் வெளியிட வைத்து, அறிவொளிக் குடும்பத்தினரை ஒருங்கிணைத்து அறிவொளிப் பாடல்கள், மனதில் நீங்கா நிகழ்வுகள் ஆகியவற்றை மீட்டுறுத்தியது மனதிற்குள் மலரும் நினைவுகளாக மலர்ந்தது.
அடுத்து அன்று பிற்பகல் தமிழ்நாடு அறிவியல் இயக்க அலுவலகத்தில் அம்மையாரோடு, பழைய அறிவொளித் தொண்டர்களும் புதிய சமூக ஆர்வலர்களும் சந்தித்த வேளையில், அறிவொளி வெற்றிவிழாவின் இருபதாம் ஆண்டினைக் கொண்டாடத் தாங்கள் முன்வைத்த ஆலோசனைகள் மனதைஅசைபோட வைத்தது.
நிறைவாக, அன்று மாலை புதுக்கோட்டை நகர்மன்றத்தில் பாவேந்தர் பாரதிதாசன் இலக்கியப் பேரவை நடத்திய எழில்மிகு ஏழு நூல்கள் வெளியீட்டில்,கவிஞர் தங்கம் மூர்த்தியின் ”கவிதை வெளியினிலே” நூல் மதிப்பீட்டுரை அவ்விழாவிற்கே மகுடம் சூட்டியதாக அமைந்திருந்தது.
கவிஞர் பாலாவின் முற்போக்குச் சிந்தனைகளை த.மூ பதிவுகளிலில் இருந்ததிலும் பன்மடங்கு பகுத்துப் பாங்குற வீசிய உரத்தசிந்தனைகள், சுவைஞர்களை உணர்ச்சிப் பெருவெள்ளத்தில் மூழ்கடித்ததை அரங்கை அதிரவைத்த கரவொளிகளே சான்று பகர்ந்தது.
முத்தாய்ப்பாகத் தங்களுக்கு முன்னதாக வரலாறு படைத்த வைரமங்கையர் நூலுக்குக் கருத்துரை வழங்கிய இரா.சம்பத்குமார், பெரியார் நாகம்மையின் கூற்றினைத் தவறாகப் புரிந்துகொண்டு ”மனிதர்களில் 99.9 சதம் ஆன்மீக வாதிகள்தான், வெறும் எழுத்துகளில் வேண்டுமானால் பகுத்தறிவு,நாத்திகம் காணப்படலாம் என்ற கொச்சைக் கூற்றுக்குத் தாங்கள் ”நான் 100 சதம் நாத்திகவாதி, பகுத்தறிவுப் பதிவுகள் முற்போக்கிற்கு வழிவகுக்கும் முனைப்பான பாதை ”என நெஞ்சுயர்த்தி பதிலடி கொடுத்தது என் போன்று அவையில் இருந்த 99.9 விழுக்காட்டினருக்கு பெருமையாயிருந்தது.
“மெய்ப்பொருள் காணின் பொய்யுரை பொசுக்கும் போக்கினில் தயங்காதே” என்னும் அய்யாவின் கூற்று தங்களால் செயலாக்கம் பெற்றது கண்டு பெருமிதம் கொள்கிறேன்.
தோழமையுடன்
பாவலர் பொன்.க
புதுக்கோட்டை
26-09-2011
-------------------------------------------------------------------------------------------------------------------------------
எவ்வளவு நாட்களுக்கு ஒரு முறை வருவார் நிலவன்....
பதிலளிநீக்குநிலவுக்கு கூட சுற்று முப்பது நாள் மட்டுமே
‘நாம் என்ன செய்கிறோம்’ என்பதை நாம் அறிவோம்.
பதிலளிநீக்குஆனால், ‘நாம் என்ன செய்தோம்’ என்பதை வைத்துத்தான்
‘நாம் என்ன செய்வோம்’ என்பதை மற்றவர்கள் கணக்கிடுவர்.
பார்க்கலாம்…
நான் என்ன செய்கிறேன் என்பதைச் சொல்லிக்கொண்டு இருப்பதைவிட
இன்னும் ஓரிரு நாள்களில் நம் வலைப்பூவின் இடுகைகளில் காட்டுவோம்…
அதன்பின்….
ஓரிரு மாதங்களில்…
பலரும் அறிந்த ஊடகம் ஒன்றில் காட்டுவோம்…
இன்னும் ஓரிரு நாள் பொறுத்துக்கொள்ளுங்கள் ‘அனாமதேயரே!’
அன்புடன்,
நா.மு
03-12-2011
பி.கு.:
(ஏன் உங்கள் பெயரை- விவரத்தை நாங்கள் தெரிந்துகொள்ளக் கூடாதா அய்யா?
இதில் என்ன ரகசியம்?)
வந்துவிட்டேன் நண்பரே,
பதிலளிநீக்குஎனது படைப்புகள் அனைத்தையும் - ஏற்கெனவே எழுதி, தினமணி-தீக்கதிர்-ஜனசக்தி-கணையாழி-மற்றும் பல மலர்கள் மற்றும் இதழ்களில் வெளிவந்த கட்டுரைகள் மற்றும் கல்கி பரிசுபெற்ற சிறுகதைகள் தனி நூல்கள் அனைத்தையும் ஒவ்வொன்றாக இனி வெளியிடுவேன்…
இனியேனும் உங்கள் பெயரை வெளிப்படுத்தலாமே அனாமதேயரே!
தங்கள் அன்புக்கு எனது நன்றி
நா.மு.
கைபேசி: 94431 93293