தமிழ்இனிது-45

 

(நன்றி -இந்துதமிழ்-30-4-2024)

“எண்ணும் எழுத்தும்”என்றால் என்ன?

‘எண்ணும் எழுத்தும் இரண்டு கண்கள்’ -குறள்-392. இதற்கு, எண் - கணிதம், எழுத்து -இலக்கியம் என்றே பலரும் விளக்குவர். ஆனால், கலைஞர், ஆர். நல்லக்கண்ணு, கவிஞர் இன்குலாப் முதலானோரின் ஆசிரியர் சி.இலக்குவனார், ”எண் எனப்படும் அறிவியலும்(Science), எழுத்து எனப்படும் கலையும்(Arts), வையத்தில் வாழ்வார்க்கு இரண்டு கண்கள்” என்று பொருள் சொல்லி வியக்க வைக்கிறார்!  

இப்போது உயர் கல்விப் பிரிவுகள் பலவாயினும், அடிப்படை இரண்டுதான்! “ஆனால்,  ‘Science அறிவியல் அல்லவா? அது எப்படி எண் கணக்கில் வரும்?” என்றால், அறிவியலும் கணக்கின் அடிப்படையில் வந்தது தானே? தண்ணீரை அறிவியல் H20 என்கிறது. இருபங்கு ஹைட்ரஜன் ஒருபங்கு ஆக்சிஜன்! ஆக, அறிவியலின் அடிப்படை கணக்கே என்பதால் எண்ணறிவு அடிப்படையாகிறது! “எண்ணும் எழுத்தும்”தான் அடிப்படைக் கல்வி என்பது, இப்போது கலை,அறிவியல் (Arts and Science) கல்லூரிகளுக்கும் பொருந்தும் அல்லவா! இதுதான் குறள் நுட்பம்!

கண்டிப்பாகவா? கனிவாகவா?

            கண்டிப்பாக, உறுதியாக, நிச்சயமாக எனும் சொற்களை ஒன்றாகவே நினைக்கிறோம். ஆனால் இட வேறுபாட்டால் பொருள் மாறுவதுண்டு. நண்பரிடம் ஓர் உதவி கேட்ட போது அவர், “கண்டிப்பாகச் செய்கிறேன்” என்றார். நான், “ஏன் கண்டிப்பாக? கனிவாகவே செய்யலாமே?” என்றதும் அவர் சிரித்து விட்டார்! இந்த இடத்தில், உறுதியாக என்னும் பொருளில் அவர் சொன்னாலும், கண்டிப்பு எனும் சொல்லுக்கு “கடிதல்”   எனும் பொருளும் உண்டல்லவா? ‘குற்றங் கடிதல்’ என்றொரு அதிகாரமே திருக்குறளில் உள்ளதே! குழந்தைகள் வளர்ப்பில் தண்டிப்பை விட, கனிவும், தேவையெனில் கண்டிப்பும் தானே நல்ல பலனளிக்கும்?   

படுத்துவது ஏன்?

            ‘கேட்டுக் கொள்ளப் படுகிறீர்கள்’ (You are requested) என்பது ஆங்கில வழிச் சிந்தனை! இந்தச் செயப்பாட்டு வினையில்  ஒரு அந்நியத்தனம் கலந்த அதிகார தோரணை இருக்கும். உயர் அலுவலர்கள் தமக்குக் கீழுள்ள ஊழியரிடம் “கேட்டுக் கொள்கிறேன்” என்று சொல்ல முடியாத  மேட்டிமைத்தனம், அடிமைத் தனத்தின் மறுபக்கம்! எழுத்தர்களில் கீழ்நிலை, உயர்நிலை, ஏவலர்(பியூன்) -LDC, UDC, OA- எனும் பணி நிலைகளைப் பின்னர் முதுநிலை உதவியாளர்(Senior Asst), இளநிலை உதவியாளர்(Junior Asst), அலுவலக உதவியாளர்(OA) என்று மாற்றிய காரணமும் சரிதான். எனினும் செயப்பாட்டு வினை மாறவில்லை!

            இப்போது, திருவிழா மற்றும் மரண அறிவிப்புகளில், “கேட்டுக் கொள்ளப் படுகிறோம்” என்கிறார்கள்! தொலைக்காட்சியில் ஞாயிறு மதியம் நடக்கும் புகழ்பெற்ற விவாத அரங்கில் – ஏப்-14அன்று - “பரப்பப் பட்டிருக்கிறது” “தெரியப் படுகிறார்கள்” என்றெல்லாம் வந்ததைப் பற்றி வருந்தினார், திருப்பூர் சிக்கண்ணா அரசுக் கல்லூரி முதல்வர் முனைவர் வ.கிருஷ்ணன் அவர்கள்.  தமிழர்களே! இப்படித் தமிழைப் ’படுத்த’லாமா!

நன்பகலா?  நண்பகலா?

வெக்கை அடிக்காத நல்ல பகல் ஆயினும், அது நன்பகலாகாது! நண்பகல் என்றே சொல்ல வேண்டும்! நள்-நடு. நள்ளிரவு  என்னும் எழுத்துமொழி, பேச்சில் ‘நடுச் சாமம்’ ஆகிறது. யாமம்-சாமம்-இரவு. நள்ளிரவில் கூவுவது சாமக் கோழி ஆனது! “நள்ளென் யாமத்தும் பள்ளி கொள்ளான்“-நெடுநல்வாடை-186. ஆக, என்ன தான் நல்ல இரவாக இருந்தாலும் அது நல்லிரவு ஆகாது!  நள்ளிரவு என்பதே சரி.   

-----------------------------------------------------------------------------

அமெரிக்கா, கனடா தமிழ்க் கவிதைப் போட்டியும் FeTNA கவியரங்க வாய்ப்பும்!


வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின்

(FeTNA) அறிவிப்பு 

அனைவருக்கும் வணக்கம்!

வட அமெரிக்க வாழ் கவிஞர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு!! சான் ஆண்டோனியோவில் நடைபெறவுள்ள 37ஆவது பேரவை விழாவில் கவிஞர் முத்துநிலவன் அவர்களின் தலைமையில் நடைபெற இருக்கும் கவியரங்கத்தில் பங்கேற்க கவிஞர்கள் வரவேற்கப்படுகிறார்கள். 

"என்ன படித்தால் மனிதராகலாம்?" என்ற தலைப்பில் கவிதை வரைந்து எங்களுக்கு கீழ்க் கண்ட படிவத்தின் வழி அனுப்ப வேண்டும்.

https://tinyurl.com/FetnaKaviyarangam2024

1. ஒருங்குறி (யுனிகோடு) எழுத்துருவில் தட்டச்சுச் செய்து,                         கவிதையை வேர்ட்(word) கோப்பாக இணைக்க வேண்டும்.

2. கவிதை அளவுமரபுக் கவிதையாக இருந்தால் 24 வரிகள் இருக்க வேண்டும் புதுக் கவிதை எனில் 30-32 வரிகள் இருக்கலாம்

3. இறுதி நாள் - வரும் 2024, மே 10ஆம் தேதிக்குள் கவிதை வந்து சேர வேண்டும்.

4. இந்தச் சுற்றில் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கு பேரவை விழா கவியரங்கத்தில் பங்கேற்கும் வாய்ப்பு அளிக்கப்படும்.

5. கண்டிப்பாக வட அமெரிக்காவில் (அமெரிக்கா, கனடா) இருப்பவர்கள் மட்டுமே கவியரங்கத்தில் பங்கேற்க முடியும்.

6. கவியரங்கத்தில் பங்கேற்கும் கவிஞர்கள் கொடையாளர்களாக பேரவை விழாவில் பங்கேற்றால் அவர்களுக்கு டிக்கெட் விலையில் 20 சதவீத அளவு தள்ளுபடி செய்யப்படும் வாய்ப்பும் உள்ளது.

7.இறுதித் தேதிக்குள் வரும் கவிதைகள் மட்டுமே ஏற்கப்படும்

கவியரங்கத் தலைவரின் தீர்ப்பே இறுதியானதுஏதேனும் கேள்விகள் இருப்பின் kaviyarangam@fetna.org என்ற மின்னஞ்சல் முகவரியில் எங்களைத் தொடர்பு கொள்ளலாம்.

நன்றி!

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை

--------------------------------------------------------- 

இந்த அறிவிப்பை அவர்களது முகநூலில் பார்க்க -

https://www.facebook.com/fetnaconvention/   

------------------------------------------------- 

இதைப் படிக்கும் நண்பர்கள்,

அமெரிக்கா, கனடாவில் வாழும் தத்தம்

உறவு-நட்பு வழியான

தமிழ்க் கவிஞர்களுக்குத்

தெரிவித்துதவ வேண்டுகிறேன்.

நன்றி, வணக்கம்.

-நா.முத்துநிலவன்,

புதுக்கோட்டை

----------------------------------

இது நிற்க.

கடந்த கடந்த 20-03-2024 அன்று

FeTNA சார்பாக 

எனது தலைமையில் நடந்த

“முப்பாலில் சிறந்தது எப்பால்” எனும் தலைப்பிலான

சுழலும் சொல்லரங்கம் (இணைய வழி) நிகழ்வின்

இணைய இணைப்பு-

https://fb.watch/rK3XjVtG3y/

இந்நிகழ்வில் நமது நிகழ்வு

சரியாக 1மணி 58நிமிடத்தில் தொடங்கி

3-18க்கு நிறைவடைகிறது – அதாவது 80நிமிடம்

வாய்ப்பிருப்போர் பார்த்து மகிழ்ந்து,

இந்த நமது வலைப்பதிவில்

பின்னூட்டமாகக் கருத்தும் பகிரலாம். 

------------------------------ 

தமிழ் இனிது -44, நன்றி-இந்துதமிழ் நாளிதழ்-22-4-2024.

 

'ஈ'  'தா'  'கொடு' சொற்களின் தமிழ் நுட்பம்

கொப்பூழா? தொப்புளா?

         தாய் வயிற்றில் உள்ள குழந்தைக்கு உணவைக் கொண்டு செல்லும் கொடி தொப்புள் கொடி. ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகளை, “தொப்புள் கொடி உறவுகள்” என்பர். இதைப் பழந்தமிழ் ‘கொப்பூழ்’ என்கிறது. “நீள்நிற உருவின் நெடியோன் கொப்பூழ்“ (பெரும்பாண்-402). கொப்பூழ் மருவி தொப்புழ்- தொப்பை –தொப்பு-உள்-கொடி –தொப்புள் கொடியானதோ! பாலூட்டிகள் அனைத்தும் தாயின் வயிற்றிலிருந்து வந்ததன் அடையாளக் குறியே தொப்புள்(Navel). மனிதர்க்கு மட்டுமே பளிச்சென்று தெரிகிறது.  

பரிணாமமும், பரிமாணமும்

            பரிணாம வளர்ச்சி பற்றி டார்வின் எழுதிய புகழ்பெற்ற நூல்- ‘உயிரினங்களின் தோற்றம்’(1859).  பரிணாமம் (Evolution) – படிப்படியாக வளர்ந்து மேம்படுவது. குரங்கிலிருந்து பரிணமித்ததே மனித இனம்.  தமிழில் இதைப் ‘படிவளர்ச்சி’ என்கிறார்கள்.

பரிமாணம் (Dimention) அளவு, கோணம்.  முப்பரிமாணம், எனும் சொல்லிலேயே அதன் விளக்கம் உள்ளது. முப்பரிமாண(3D) திரைப்படம் பார்க்க ஒரு சிறப்புக் கண்ணாடி அணிகிறோம் அல்லவா?  

ஈ, தா, கொடு

            ஆங்கிலத்தில் You எனும் சொல்லை, சொல்லும் முறையில் தான் மரியாதை அமையும். இதற்குத் தமிழில் நீ, நீர், நீயிர், நீவிர், நீங்கள் எனப் பல சொற்கள் உண்டு. இப்போது, ஒருமையில் ‘நீ’ யும், பன்மை மற்றும் மரியாதை ஒருமையில் ‘நீங்கள்’ என இரண்டு மட்டும் வழக்கில் உள்ளன. இதே போல give எனும் ஆங்கிலச் சொல்லைத் தமிழில் மூன்று வகையாகச் சொல்லலாம். மூன்றும் மூன்று நுட்பமான பொருளில் வரும்!

            ஈ-என்பது தாழ்மையுடன் கேட்பது. (இன்றைய தமிழில் “எனக்குக் கொஞ்சம் கொடுப்பா“ எனக் கெஞ்சிக் கேட்பது)

            தா-என்பது சம உரிமையுடன் கேட்பது (“மச்சான் உன் சட்டையைத் தா  டா“)

            கொடு-என்பது உயர்ந்த(?) இடத்தில் உள்ளவர்கள் அதிகாரமாகக் கேட்பது. “வரிகொடு“ என்பதுபோல. இந்த விளக்கத்தை, தொல்காப்பியரை வழிமொழிந்து நன்னூலார் சொல்கிறார். “ஈ தா கொடு எனக் கிளக்கும் மூன்றும், இழிந்தோன் ஒப்போன், மிக்கோன் இரப்புரை” (நன்னூல்-பொது-407)  தமிழ்ச்சொற்கள் நுட்பமானவை!

ரயிலடியும் காரடியும்

            இலக்கிய, இலக்கணங்களை மொழியறிஞர் உருவாக்குகின்றனர். ஆனால் மொழிகள் சாதாரண மக்களால் தான் வாழ்கின்றன! சாதாரண மக்களுக்கான இலக்கியங்கள் இருபதாம் நூற்றாண்டில் தான் எழுந்தன. பாஞ்சாலி சபதத்தை, “ஓரிண்டு வருஷத்து நூல் பழக்கமுள்ள, சாதாரண மக்களுக்காக” எழுதியதாக அதன் முன்னுரையில்  சொல்கிறான் பாரதி.  

பேச்சு மொழியில் பிறசொல் கலப்பதைத் தவிர்க்க முடியாது. ஆனால், நீரோடும் ஆற்றைத் தூர்வார மறந்தால் நாளடைவில் நீரோட்டமே  தடைப்படும் அல்லவா? அதுபோல, மொழியைத் தூர்வார இலக்கணம் அவசியம். அறிஞர்கள் உருவாக்கும் சொற்களை விட மக்களின் மொழி பொருத்தமாய் அமைந்து நிலைத்து விடுவதுண்டு!

            ரயிலடி(தஞ்சை), இடைப் பலகாரம்-சிற்றுண்டி- (செட்டிநாட்டுப் பகுதி), மெய்யாலுமா? செம(சிறப்பு), சகோ! (சென்னை)  போலும் புதிய சொற்களை மக்களே உருவாக்கிக் கொள்கிறார்கள். ஆனாலும் ‘ஜி’ போலும் பிறமொழி ஒட்டுச் சொற்களைத் தவிர்க்கலாம். மிதிவண்டி அழகான சொல்தான். அதற்குள் இருக்கும் முந்நூற்றுக்கும் மேற்பட்ட சிறு பாகங்களில் ஒன்றுகூட தமிழில்லையே? சிந்தித்துப் பார்த்தால், புதிய கண்டு பிடிப்புகள் தமிழர் வழி வந்தால்தான் தமிழ்ப் பெயர்களை வைக்க முடியும் என்பது தனி ஆய்வுக்குரியது. 

------------------------------------- 

பின் குறிப்பு

தொப்புள் என்பதை ஆங்கிலத்தில் Navel என்பார்கள். நான் தவறுதலாக, “தொப்புள் கொடி“ என்னும் இடத்தில் அந்த ஆங்கிலச் சொல்லை இட்டுவிட்டேன். இதை நேற்று காலையில் (இந்து-தமிழ் நாளிதழில் படித்தவுடனே) எனக்குக் குறுஞ்செய்தி வழி தெரிவித்து தொப்புள்கொடிக்கும் விளக்கம் தந்தார்  

மேட்டுர் நண்பரும் எழுத்தாளருமான 

துணை மருத்துவப் பணிகள் பயிற்றுநருமான

 திரு குருநாதன் அவர்கள்.

பிறகு இந்த நமது வலைத்தளத்தில் திருத்தியதோடு, அச்சு நூலாக வரும்போதும் திருத்தி விடுவதாக நண்பருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டேன். இவை ஆக்கபூர்வமான தகவல்கள். 

நாம் தவறு செய்து, திருத்தி, கற்றுக் கொள்ளலாம்!

தமிழில் தவறு நேர்ந்துவிடக் கூடாது!

எடுத்துரைத்த நண்பர்க்கு நன்றி.

-----------------------------------------

தமிழ் இனிது -43 -------- நன்றி- இந்து தமிழ் திசைகாட்டி - 16-04-2024

 தமிழ்ப் பெயர் தானா?

         நண்பர்கள் சிலர், “என் பெயர் தமிழ்தானா?” என்று கேட்டனர்.  “பொதுவாக அன், உ என முடியும் ஆண் பெயரும் அள், ஐ என  முடியும் பெண் பெயரும் தமிழ்ப் பெயராக இருக்கும், இ இருபால் பெயரிலும் வரும். இதனால்தான் பாரதி, மணி என்பன இருபாலிலும் உள்ளன“ என்றேன். இதைக் கேட்ட ஒருவர், “அய்யோ! நான் பெருமாள், இது  பெண் பெயரா?”என்று பதறிவிட்டார்! இன்னொருவர் ”நடிகை சிம்ரன் ஆண்பாலா?” என்று என்னை மடக்கினார்.   

தமிழில்தான் அன் ஆண்பால், சிம்ரன் தமிழ்ப் பெயரல்ல என்றதும் சற்றே நிம்மதியடைந்தார்! கடவுள் பெயர்களுக்கும், ஜ,ஸ்ரீ,ஷ,க்ஷ,உற,ஸ  கிரந்த எழுத்துப் பெயர்களுக்கும் தமிழ் விதி பொருந்தாது.

            ஆ என முடியும் வடமொழிப் பெயர்கள் தமிழாகும் போது ஆண் எனில் அன் எனவும் பெண் எனில் ஐ எனவும் மாறும் அதர்வா-அதர்வன், சீதா-சீதை போல. தமிழில் பெயர்வைக்கும் உணர்வு இப்போது  பெருகி வருவது மகிழ்ச்சி. பெயர் வெறும் பெயரல்ல, பண்பாட்டின் அடையாளம்! உங்கள், குழந்தைப் பெயர்கள், தமிழ்ப் பெயரெனில் நல்லதுதான். அதைவிட சாதி, மதம் காட்டாத பெயராக இருந்தால் மிகவும் நல்லது.  

நோக்கும் பார்வையும்

            நோக்கம், பார்வை  இரண்டும் ஒன்றுபோல் தோன்றினாலும் வேறு வேறு பொருள் தருவன! பயணத்தின் போது, நம் கையில் உள்ள செய்தித்தாளைக் கேட்பவர், “ஒரு பார்வை (Glance)பாத்துட்டுத் தர்ரேன்” என்பது மேலோட்டமான பார்வை. காதலியைக் காதலன் -ஒரு நோக்கத்தோடு(Sight)- பார்ப்பது நோக்கம்! “அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள்“-கம்பன். இதை, “இவள் இருவித நோக்கம் கொண்டவள், ஒரு நோக்கு நோய் தரும், மற்றது அந்நோய்க்கே மருந்தாகும்”(குறள்1091) என்பது கதைக் கவிதை!

ஒற்றுமையும் ஒருமையும்

         ’பன்மையில் ஒருமை’, ‘ஒற்றுமையே வெற்றிக்கு வழி’ என்பதை அடிக்கடி கேட்கிறோம். ஒருமை, ஒற்றுமை இரண்டும் ஒன்றல்ல!

போர்க்கால நிலையில்  ‘இந்தியர் அனைவரும் ஒருதாய் வயிற்று மக்கள்’ என்பது உணர்ச்சியூட்டும் ஒருமைப்பாடு. எல்லா நிலைக்கும் இது பொருந்தாது. மதம், மொழி, இனம், பண்பாடு கடந்து, ‘இந்திய உணர்வில்’ ஒருவருக்கொருவர் உறவு சொல்லி வாழ்வது ஒற்றுமை! இதுதான் இந்தியாவின் பெருமை! இலக்கணத்தில் சொன்னால், ஒருமை தற் கிழமை (என் கை) போல, பிரிக்க முடியாதது. ஒற்றுமை பிறிதின் கிழமை (என் பேனா) போல, தேவைக்கேற்பப் பிரிந்தும் சேர்ந்தும் இருக்கலாம்.

‘ஒருமைக்கண் தான் கற்ற கல்வி, ஒருவற்கு எழுமையும் ஏமாப்புடைத்து’ -குறள்-398. ‘ஒருதலைமுறையில் கற்கும் கல்வி, ஏழு தலைமுறைக்கும் உதவும்’ எனும் பொருளன்றி ஒற்றுமைப் பொருளல்ல!

காலமும் நேரமும்

         அழைப்பிதழ்களில், நிகழ்ச்சி நடக்கும் நேரத்தை, ‘காலம்: காலை 10மணி’ என்று அச்சிடுகிறார்கள். இந்த இடத்தில் நேரம் என்பதே சரியானது. காலம், ஆண்டின் பெரும்பிரிவு. நேரம், நாளின் சிறுபிரிவு. இதைப் பெரும்பொழுது, சிறுபொழுது என்பது தமிழ் நுட்பம்! கடந்த (தமிழ்இனிது-42) கட்டுரையில் ‘இது தேர்தல் நேரம்’ என்று எழுதிவிட்டேன்! ‘தேர்தல் காலம்’ என்பதே சரி. சுட்டிக் காட்டாத நண்பர்களுக்கு நன்றி. “கால நேரம் பாப்பமா, கல்யாணத்த முடிப்பமா?” என்பது திரைப்பாடல்.

-----------------------------------

தமிழ் இனிது-42


தமிழ்மரபு உயிர்ப்போடு உள்ளதா?

சிந்தாமல்  சிதறாமல்..

இது தேர்தல் நேரம். “தமிழனுக்கு வாயெல்லாம் பல், பல்லெல்லாம் சொத்தை“ என்ற கந்தர்வன் கவிதைதான் நினைவுக்கு வருகிறது. வாக்குக் கேட்போர், “உங்கள் வாக்குகளை, சிந்தாமல் சிதறாமல் எங்களுக்கே போடுங்கள்” என்கிறார்கள். நீர்மப் பொருள்தான் வழிந்து சிந்தும் (எண்ணெய் தரையில் சிந்தும்), திடப்பொருள் உடைந்து சிதறும் (கண்ணாடி உடைந்து சிதறிவிட்டது). எனில், சிந்தவும் சிதறவும் நமது வாக்கு என்ன, திரவப் பொருளா? திடப்பொருளா? அப்படிப் பேசிப் பழகிவிட்டார்கள்! வாக்களிப்பது ஒவ்வொருவரின் வாழ்க்கைக் கடமை! வாய்ச்சொல்லில் உண்மை தேர்வது வாழ்க்கைக் கடன்!   

மக்கள் தமிழ் கொச்சையல்ல!

         பேச்சுத் தமிழைக் கொச்சை(vulgar) என்று சொல்வது தவறு. உலக மொழி அனைத்திலும் பேச்சுமொழி, எழுத்துமொழி இரண்டும் உண்டு. எழுத்து இல்லாத மொழிகள் பேச்சுமொழியால் மட்டுமே  வாழ்வதுண்டு. நூற்றுக்கு மேற்பட்ட மொழிகள் பேச்சு வழக்கில் இருந்தும், ஆங்கில எழுத்துகளைக் கொண்டே எழுதப்படுகின்றன! எழுத்திலக்கியம் வந்த பின்னரே இலக்கணம் உருவாகும். ‘எள்ளில் இருந்து எண்ணெய் எடுப்பது போல, இலக்கியத்தில் இருந்தே இலக்கணம் உருவாக்கப்படும்‘

இலக்கணத்தின் முன்னோடி பேச்சுவழக்கே என்பதால்தான் தொல்காப்பியத்துக்குப் பாயிரம் (அணிந்துரை) தந்த பனம்பாரனார் “வழக்கும் செய்யுளும்” என்று வழக்கை முன்னே வைத்தார்! இப்போது, பன்னாட்டுப் பண்பாட்டுக் கலப்பாலும் பிறமொழியாளர் வாழ்வியல் தொடர்பாலும் நுழையும் வேற்றுமொழிச் சொற்களை ‘இழுத்துப் பிடித்து’ தமிழ் இலக்கண மரபைக் காப்பதும் பேச்சுமொழி வழக்கே!  “உயிர் மெய்யல்லன மொழிமுதல் ஆகா” என்னும் இலக்கணம் அறியாத படிக்காத கிராமத்துக் கிழவி, ப்ரியா(Priya)  என்பதை பிரியா என்பது எப்படி? அப்படி, தமிழ் எழுத்துகளில் மொத்தம் 24எழுத்துகள்தான் மொழியிறுதியில் வரும் என்னும் நன்னூல் படிக்காத பாமரர் ஒருவர் Road என்பதை ரோடு என்பதும், Nut-என்பதை நட்டு என்பதும் எப்படியெனில் அதுதான் தமிழரின் வாழ்வு, பண்பாடு, உச்சரிப்பு முறையின் மரபு! இதுபோல, படித்தவர்கள் கலப்பதும், படிக்காதவர்கள் தவிர்ப்பதுமான நுட்பத்தால் தான் தமிழ்மரபு இன்னும் உயிர்ப்போடு இருக்கிறது!

ஆனால், வரம்பின்றிப் பேச்சுமொழியை ஏற்றால் அதுவே புதிய மொழி தோன்றவும் காரணமாகிவிடும். இன்னும் சில நூற்றாண்டுகளில் சென்னைத் தமிழ் வேறொரு கிளை மொழியாக உருவெடுப்பது உறுதி! கொங்குத்தமிழ், நெல்லைத்தமிழ் சற்றே தாமதமாகலாம். எனவே, இலக்கணமாக அச்சுறுத்தாமல், பள்ளிக் குழந்தைகளுக்கு வாழ்வியல் மொழிநடையைக் கற்பிக்கும் தேவை உள்ளது.  

எழுத்துப் பேணும் தமிழ் உறவுகள்!

         ஔவையின் ஆத்திசூடியில் “ஙப்போல் வளை“ என்றொரு தொடர் வரும். இதற்கு, “வாழ்க்கையில் முன்னேற ஏற்றம், இறக்கம், வளைவு உயர்வு அனைத்தையும் கற்க வேண்டும்“ என்று, ங எழுத்தின் அமைப்பைக் கொண்டு விளக்குவதுண்டு.  மாற்றிச் சிந்தித்தால், தமிழின் நுட்பத்தைப் புரிந்து சொல்லலாம்!

ங வருக்கத்தில் 12எழுத்துகள் உள்ளன. அதில், இந்த ங என்னும் எழுத்தைத் தவிர மற்ற 11எழுத்தும் பயன்படுவதில்லை! ங என்னும் ஓர் எழுத்து, மற்ற 11எழுத்துகளையும் காப்பாற்றி வருவது போல, “உடல் நலமற்ற, மூத்த, குறையுள்ள மனிதரை, நாம்தான் காப்பாற்ற வேண்டும்” என, எழுத்தின் வழி வாழ்வியல் கற்பிக்கலாமே! தமிழ் இனிது!

------------------------------------ 

(வெளியீட்டுக்கு நன்றி-09-04-2024 இந்து தமிழ் நாளிதழ்)

தமிழ்இனிது-41 --நன்றி - 02-04-2024 இந்து தமிழ் திசைகாட்டி நாளிதழ்



பேச்சுத் தமிழின் பேரழகு!

பல்நோக்கு மருத்துவமனை, சரியா?

            தமிழ்நாடு அரசு, “ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை”  என்று பெயர்  வைத்துள்ளது. ஆனால், தனியார் பலரும் “பல்நோக்கு மருத்துவமனை” என்று வைத்துள்ளனர்! இதுதான் குழப்பம்.

“பல்நோக்குத் திட்டங்கள்“ பற்றிய செய்திகளையும் பார்க்கலாம். பத்தாம் வகுப்பு புவியியல் பாட நூலில் “இந்தியா - பல்நோக்கு ஆற்றுப் பள்ளத்தாக்குத் திட்டங்கள்”(பக்-169) என்றே உள்ளது! இதுபோல Multy purpose Projects, Multy Speciality Hospital  பல உள்ளன. தமிழில் மட்டும் -பல்நோக்கு என- ஏன் பல்லை நோக்க வேண்டும்? “பல்நோக்கு சுகாதார ஆய்வாளர்“ என்றால் குழப்பமே இல்லாமல்  ‘பல்லை நோக்கும் ஆய்வாளர்’ என்று பொருள் வருமே! பிறகு, பல்மருத்துவர் என்னாவது?!

எனவே, “பலநோக்கு“  என்பதை, பல வேறுபட்ட மருத்துவமும் செய்யக் கூடிய எனும் பொருளில்-  “பன்னோக்கு”  என்பதே சரி. இன்னும் எளிமையாகப் புரிய வேண்டும் என்றால், “பல நோக்கு” என்று பிரித்தே போடலாம். அல்லது, மற்ற பல்வேறு அரசுத் துறைகளில் உள்ளது போல “ஒருங்கிணைந்த” எனும் சொல்லைப் பயன்படுத்தினால் கூடுதல் நலம்.  

நோன்பு திறப்பா, துறப்பா?

இஃப்தார் எனில், ரமலான் மாத நோன்பு நோற்கும் இஸ்லாமியர், நோன்பு முடித்து மாலையில் அனைவரும் இணைந்து உணவருந்துவது. ஆனால் சுவரொட்டி சிலவற்றில் “நோன்பு துறப்பு” என்றும் வேறு சிலவற்றில் “நோன்பு திறப்பு” என்றும் போட்டிருப்பதுதான் குழப்பம்.   

ஒருநாள் உண்ணா நிலையை முடித்து -துறந்து- உண்பது எனில்,  தமிழில் “நோன்பு துறப்பு“ என்பதே சரி. பிறகு “திறப்பு” எப்படி வந்தது? “நோன்பு“ என்பதை வழக்கில் ”நோம்பு” என்கிறோம் அல்லவா? அப்படித்தான்! “நோன்பு துறப்பு“ என்பது எழுத்துத்தமிழ். “நோம்பு திறப்பு“ என்பது பேச்சுத்தமிழ். “நோம்புக் கஞ்சி” குடித்தவர்களுக்குத் தான் தெரியும் அதன் தனிச் சுவை! மதம்கடந்த அன்பின் சுவை!

ஆமா’ல்ல? எனில், ஆமாவா? இல்லையா?

         பேச்சு வழக்கில் இப்போது பலரும் பயன்படுத்தும் சொல் “ஆமா’ல்ல?“ என்பது! அதாவது ஆமா, இல்லை!  இதன் பொருள் ஆமாம் என்பதா? இல்லை என்பதா? என்று யாரும் குழம்புவதில்லை, அந்தச் சூழலில் அது தெளிவாகவே புரிந்து விடும். இதில் ஆமா(ஆம்ஆம்), இல்லை எனும் இரு சொற்களும் எதிர் எதிர்ச் சொற்கள்! அது எப்படி ஒரே தொடரில் இணைந்து வருகின்றன? அதுதான் பேச்சுத் தமிழின் பேரழகு!   

            ‘அவனுக்கு எப்படி இது தெரிந்தது?’ ‘அவள் எப்படி இதை ஒத்துக் கொண்டாள்?’ போலும் உரையாடலில், அவர்கள் முன்பு நினைத்திராத ஒன்று புதியதாகத் தெரிய வரும்போது, இப்படி வரும். ஆங்கிலத்தில் இரண்டு எதிர்ச்சொல் சேர்ந்தால் ஒரு நேர்ப்பொருள் (Two Negatives Make a positive) வருவது போல! அட, ‘எதிரிக்கு எதிரி நண்பன்’ போல என்று வைத்துக் கொள்ளுங்களேன்! சொல்லுக்கான பொருள் அகரமுதலியில் இருந்தாலும், பயன்படுத்தும் சூழலில்தான் அது முழுமையாகப் புரியும். சூழல் புரியாமல் செய்வது எதுவும் தவறாகி விடுவது போல, சூழல் புரியாமல் எழுதுவதும், பேசுவதும் கூடத் தவறாகி விடும்! அரசியலில் மட்டுமல்ல, பேச்சு வழக்கிலும் கூட இதெல்லாம் உண்டு’ல்ல?!  

---------------------------------------------------------- 

ஒரு பின்னிலை விளக்கம் 

இக்கட்டுரையின் இறுதிச் சொல்லை, இன்றைய இந்து-தமிழ் நாளிதழில் வந்திருப்பது போல “சகஜமப்பா” என்றுதான் எழுதி அனுப்பி விட்டேன். பிறகுதான் இக்கட்டுரையின் இறுதிச் சிறுதலைப்புக்கும் ஏற்ப இப்படி மாற்றலாமே என்று சற்றுத் தாமதாகவே அவர்களுக்கும் தெரிவித்தேன், அதற்குள் அச்சாகி விட்டது போல. சரி நமது வலையில் திருத்தி விடுவோம் என்று இப்படி மாற்றிவிட்டேன். இது நான் செய்த மாற்றம்தான். மாற்றியது நல்லாருக்கா? இல்ல இந்து தமிழில் வந்ததே நல்லாருக்கா? நண்பர்கள் சொல்லுங்களேன்... - நா.மு.,

---------------------------------------------------------