திருவள்ளுவ மாலை எனும் தில்லுமுல்லு மாலை

திருவள்ளுவ மாலை எனும் 

தில்லுமுல்லு மாலை!

--நா.முத்துநிலவன்--

திருவள்ளுவ மாலை எனும் நூல், திருக்குறளின்  பெருமை களையும்திருவள்ளுவரின்   பெருமைகளையும் புகழ்ந்து எழுதப்பட்ட பாடல்களின் தொகுப்பு ஆகும். ஒருநூலுக்கோ, நூலாசிரியனுக்கோ இப்படி எல்லாப் புலவர்களும் வரிசை கட்டிப் புகழாரம் தொடுத்தளித்தது, திருக்குறளுக்கும் திருவள்ளுவருக்கும் மட்டுமே கிடைத்த முதற் சிறப்பு. திருவள்ளுவமாலையில் ஐம்பத்தைந்து பாடல்கள் உள்ளன. ஐம்பத்து மூன்று புலவர்கள் பாடியுள்ளார்கள். இடைக்காடர் ஔவையார் இருவரும் குறட்பாவிலும், ஏனைய ஐம்பத்து மூவரும் வெண்பாக் களாலும், வள்ளுவரையும் திருக்குறளையும் புகழ்ந்த பாமாலைகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன எனும் இந்த வரிகளும் இக்கட்டுரைக்கான ஆதார நூலும் விக்கிப்பீடியாவில் உள்ளனhttps://ta.wikipedia.org/s/ai2 )

திருக்குறளை ஆழ்ந்து படித்தவர்கள், திருக்குறளைப் புகழ்ந்து(?) எழுதப்பட்ட திருவள்ளுவ மாலை  நூலைப்பற்றி அறிந்திருப்பார்கள்.

திருவள்ளுவ மாலை என்னும் நூல், திருக்குறள் தோன்றி சுமார் ஆயிரம் ஆண்டுக் கழித்துத் தொகுக்கப்பட்டதாகத் தெரிகிறது. இதனை எழுதியவர் ஒருவரா, பலரா என்னும் சந்தேகம் எழுவதோடு, திருக்குறளின் மூலக் கருத்துகளுக்கு முற்றிலும் முரணான கருத்துகளை இந்நூல் கொண்டுள்ளது என்பதால் இது பற்றிய ஆய்வை இக்கட்டுரையின் வழி முன்வைக்கிறேன். 

திருதராட்டிர ஆலிங்கனம்

மகாபாரதக் கதையில் “திருதராஷ்டிர ஆலிங்கனம்என்றொரு தொடர் வரும். இறுதிப் போரில் தன்மகன் துரியோதனனைக் கொன்ற பீமனை, பிறகு பழி வாங்க நினைப்பான் துரியோதனன் தந்தையான திருதராட்டிரன். ஆனால், கண்பார்வையற்ற தன்னால் அவனுடன் போரிட்டுக் கொல்ல முடியாது என்பதால், பீமனை அருகில் அழைத்து, இரு கரங்களாலும் பீமனை நெருக்கி அணைத்தே கொல்லத் திட்டமிடுவான். வழக்கம்போல இதனை முன் உணர்ந்த கண்ணன், தந்திரமாகத் தடுத்துவிடுவான் என்றாலும், இப்படிநெருக்கி அணைத்தே கொன்று விடத் திட்டமிடுவதுஎன்னும் பொருளில்திருதராட்டிர ஆலிங்கனம்என்னும் தொடர், இன்றும் மக்கள் வழக்கு உரையாடலில் கூட சொல்லப்படுகிறது. 

திருவள்ளுவ மாலைக்கும் இந்தத் தொடர் பொருந்தும்! அதாவது குறளில் இல்லாததையும் பொல்லாதததையும் இருப்பதாகச் சொல்லி புகழ்ந்தே இழிவு படுத்தி திருக்குறளின் புகழைக் கெடுத்து விடுவது! இது எல்லாருக்கும் புரிந்துவிடாது என்பதே இந்நூலைத் தொகுத்தவர்களின் உளவியல் அறிவு! இன்று வரை, திருவள்ளுவ மாலை எனும் நூல் திருக்குறளையும் திருவள்ளுவரையும் புகழ்ந்து எழுதப்பட்டதான பொதுப் புத்தியே இதற்குச் சான்று!

திருவள்ளுவ மாலை என்னும் பொய் மாலை

திருவள்ளுவ மாலையில், (நாலடி கொண்ட நேரிசை/இன்னிசை வெண்பா 53உடன், குறட்பாக்கள் 2 சேர்த்து) மொத்தம் 55வெண்பாக்கள் உள்ளன.

இதில்-

முதல் வெண்பா அசரீரி (ஆளற்ற ஒலி) எழுதியதாக உள்ளது!

இரண்டாம் வெண்பாகலைமகள் எழுதியதாக உள்ளது

மூன்றாம் வெண்பா - இறையனார் எழுதியது. இதிலிருந்தே இது எந்த அளவிற்கு மிகையானது என்பது புரியும். இறையனார் என்னும் பெயரிலான புலவர் ஒருவர் சங்கஇலக்கியமான குறுந்தொகையில் ஒரு பாடல் எழுதியதாக உள்ளது. (பாடல் எண்-02) இதில் இறையனார் என்ற குறிப்பு மட்டுமே உள்ளது. இந்தப் பெயரை வைத்துக் கொண்டு, பெரியபுராணத்தில் (படலம்-52, தருமிக்கு பொற்கிழி அளித்த படலம்) என ஒரு கதை உள்ளது. இதை வைத்து, “திருவிளையாடல்என்றொரு திரைப்படமும் வந்தது! உண்மையில் சங்கக் குறுந்தொகை அடிக்குறிப்பில் இப்படி எதுவும் இல்லை!, நாகேஷ்-தருமியும் இல்லை, சிவாஜிகணேச-சிவனும் இல்லை! “நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமேஎன்ற நக்கீர-.பி.நாகராஜனின் புகழ்பெற்ற வசனமும் இல்லை! இதற்கு,  கரந்தைப் பாவலர் பாலசுந்தரம் எழுதிய ஓர் இலக்கிய நாடகமே ஆதாரம்! இந்தப் பெயரோடு திருவள்ளுவ மாலையில் ஒரு பாடல் என்ன கதை! 

இந்தக் கதைக்குரிய இறையன் பெயரைத் திருவள்ளுவ மாலையில் சேர்த்தது நல்ல நகைச்சுவை! (இறையனார் வேறு எந்த சங்கப் பாடலும் எழுதி யிருப்பதாகவோ, சங்கம் பற்றிய பற்பல கற்பனைகளுக்கு இடம்தந்த இறையனார் அகப்பொருள் என்னும் பிற்கால இலக்கண நூல்தவிர திருவிளையாடல் நிகழ்ச்சிகள் நடந்ததாக வேறெந்த ஆதாரமும் இல்லை!)

நான்காம் வெண்பாஉக்கிரப் பெருவழுதி எனும் மன்னன் எழுதியதாக உள்ளது. ஆனால் இந்த மன்னன் எழுதியதாக சங்கஇலக்கியத்தில் இரண்டு பாடல்கள் நற்றிணை(98) அகநானூறு(26) உள்ளன. இரண்டுமே  அகப்பாடல்கள்!  https://ta.wikipedia.org/s/twd எனில் இதையும் நம்புவதற்கில்லை! எனினும் இதைத் தொகுக்க உதவியிருக்கலாம் அதோடு பாடல்ஒன்றையும் எழுதியிருக்கலாம் என்று வேண்டுமானால் ஏற்கலாம் என்றாலும் காலக் குழப்பம் நீடிக்கிறது.

அப்படி வைத்துக் கொண்டாலும், அந்த சங்கப் புலவர்கள்49பேர், மற்றும் இந்த நால்வர் ஆக 53தானே வரவேண்டும். 55பேர் திருவள்ளுவ மாலையில் எழுதியிருக்கிறார்களே என்றும் குழப்பம் வருகிறது. ஏனெனில் அதே நூலில் (இறையனார் அகப்பொருளில்) உள்ளகடைச்சங்கப் புலவர்கள்பட்டியலில் உள்ள பலர் பெயர் இந்த திருவள்ளுவ மாலையில் இல்லை! அதில் இல்லாத பலர் பெயர்கள் இதில் உள்ளன! அட என்னடா! இந்த மதுரைக்கு (நகரில் அரங்கேற்றப்பட்ட திருவள்ளுவ மாலை நூலுக்கு) வந்த சோதனை!

இந்த நூல், பலபெயர்களில் ஒருவர் அல்லது ஒரு குழுவினரே பலபெயர்களில் எழுதியிருக்கலாம் என்று நான் சொல்வதற்கான ஆதாரங்கள்

வள்ளுவர் பாடாததை யெல்லாம் பாடியதாகப் புகழும் பாடல்கள் பல உள்ளன-

வள்ளுவர் அறம் பொருள் இன்பம் என முப்பாலே பாடியிருக்க, அவர்பாடாத நான்காம் பொருளான வீடும் குறளில் உள்ளதாகப் புகழ்வது--

அறம் முதலாகிய மும்முதற் பொருள்என, தொல்காப்பிய (செய்யுளியல் நூற்பா-102) தமிழ்நெறியில் எழுதப்பட்ட திருக்குறளில், வடமொழியில் உள்ள (தர்ம அர்த்த காம மோட்சம் எனும்) நான்காவது பொருளான வீடுபேறு இல்லை! ஆனால் திருக்குறள் வீடுபேறு எனும் நான்காம் பொருளையும் பாடி இருப்பதாகப்  பெருமையோடு பாராட்டும் பத்து வெண்பாக்கள் இதில் உள்ளன (திருவள்ளுவ மாலை பாடல்எண்கள்- 7, 8, 19, 20, 22, 33, 38, 40, 44, மற்றும் 50) பத்துப் பொய்களில் குத்து மதிப்பாய் ஒரே ஒரு பொய்யைப் பார்ப்போம்

      பாடல் எண்-8

      அறம்பொருள் இன்பம்வீ டென்னும்அந் நான்கின்

      திறம்தெரிந்து செப்பிய தேவைமறந்தேயும்

      வள்ளுவன் என்பானோர் பேதை, அவன்வாய்ச் சொல்

      கொள்ளார் அறிவுடை யார்    (எழுதியவர் மாமூலனார்.

இதற்கு விளக்கம் தேவையில்லை என்று கருதுகிறேன்.

வடமொழி வேதம் சொன்னதையே வள்ளுவர் பாடினார் என்பது--

வர்ண தர்மத்தை வலியுறுத்தியே வேதமும், மனு()தர்ம நூலும், பகவத் கீதையும் பாடியிருக்க, இவற்றுக்கு எதிரானமனித சமத்துவத்தைவலியுறுத்தியே வாழ்வியல் பாடியிருக்கும் வள்ளுவரை வேதம் சொன்ன வழிகளைத் தமிழில் பாடியவர் என்பது அவருக்குப் பெருமையா என்ன?

இப்படி ஒன்பது வெண்பாக்கள்  (பாடல்எண்கள் -2,4,15,18,28,30,32,37,42) இதற்கும் ஓர் உதாரணம் பார்ப்போம்

      அறமுப்பத்து எட்டு, பொருள் எழுபது, இன்பத்

      திறம்இருபத் தைந்தால் தெளியமுறைமையால்

     வேத விழுப்பொருளை  வெண்குறளால வள்ளுவனார்                

     ஓத அழுக்கற்றது உலகு  (மதுரைப் பெருமருதனார் பா.எண்-37)

வள்ளுவர் மனிதரே அல்ல, தெய்வத்தன்மை வாய்ந்தவர்

 எனப்புகழ்வது--

மிகையாகப் புகழ்வது நம்காலத்திலும் சாதாரணமாக நடப்பதுதான். என்றாலும்மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதப் பாடலே அல்ல அல்ல அதையும் தாண்டி புனிதமானதுஎன, (கமலகாசன் போல) இதில் 9பாடல்கள் உள்ளன. இதுவும் வள்ளுவரின் இயல்புக்கு மாறானதுதான். அவர் சொல்வன்மையில் எதை எந்த அளவுக்கு எப்படிச் சொல்லவேண்டும் என்றவர். ஆனால் அவரைப் புகழ்கிறேன் பேர்வழி என்று இவர் மனிதரே அல்ல, தெய்வத்தன்மை பொருந்தியவர் என்பது அவருக்குப் பெருமையா என்ன?

பாடல் எண்கள்1,3,6,21,28,36,39,41,49 இப்படி உள்ளன

ஒரு சோறு

“…தெய்வத் திருவள்ளுவர் செப்பிய குறளால்

வையத்து வாழ்வார் மனத்து (எண்-49, தேனீக் குடிக் கீரனார்) 

ஒருசில அருமையான பாடல்களும் உள்ளன

      வெறும் பொய்யைச் சொன்னால் எப்போதுமே பருப்பு வேகாதல்லவா? எனவே பொய்யைக் கொஞ்சம் உண்மை கலந்தும் தருவதுதானே உலகநடப்பு! இந்தக் கருத்துக் கேற்ப நல்ல சில பாடல்களையும்திருக்குறளின் உண்மையான பெருமைகளைச் சொல்வதான பாடல்களும் இதில் உள்ளன. கபிலர் பாடல் அப்படி நல்லவிதமாகவே உள்ளது      

பாடலைப் பாருங்களேன்

தினையளவு போதாச் சிறுபுல் நீர்கண்ட

பனையளவு காட்டும் படித்தால் மனையளகு

வள்ளைக்கு உறங்கும் வளநாட வள்ளுவனார்

வெள்ளைக் குறட்பா விரி  (பாடல்எண்-5)

    வடமொழியில் தோன்றிய வேதம் மூலநூல், குறள் அதன் வழிநூல் என்று ஒரு பாடல் கருத்து உரைக்க அதற்கு மாறாகத் திருக்குறள் மூலநூலே, திருக்குறளோடு எந்த நூல்களையும் ஒப்பிட்டுப் பார்த்தல் பொருத்தமாகாது என்பதை வேறு ஒரு பாடல் உணர்த்துகிறது.

தொன்மை நூலாகிய தொல்காப்பியம், சங்க நூல்கள், திருக்குறள் முதலியவற்றில் வீடுபற்றிப் பேசும் நான்காம் உறுதிப்பொருள் இல்லை; பண்டைத் தமிழ் இலக்கியத்தில் காணப்பெறும் ஒரே திறனாய்வு நூல் திருவள்ளுவமாலையே என்பர் அறிஞர். திருக்குறள் பற்றிய ஆராய்ச்சிக்கு வள்ளுவமாலையில் ஓரு தொடக்கம் உண்டானது எனலாம். இது திருக்குறளுக்குச் செய்யப்பட்ட சிறப்பு எனவும் கொள்வர்.

எவ்வாறாயினும் மூலம் கொண்டிருந்த கருத்துகள் காலப்போக்கில் வள்ளுவமாலையாலும்,  உரைகளாலும் மாறிப்போயின என்பது உண்மை.

    தொன்மை நூலாகிய தொல்காப்பியம், சங்க நூல்கள், திருக்குறள் முதலியவற்றில் ‘வீடுபற்றிப் பேசும் நான்காம் உறுதிப்பொருள் இல்லை; அறம், பொருள், காமம் என்ற மூன்று மட்டுமே பேசப்படுகின்றன; திருக்குறள் உணரும் நெறியை மாற்றிவிட்டது என்பார் கு..ஆனந்தன் 

நூற்றாண்டு வரிசையில் தமிழ் இலக்கிய வரலாறு எழுதியுள்ள அறிஞர் மு.அருணாசலம் அவர்களும் திருவள்ளுவ மாலை திருக்குறளுக்குப் பெருமை சேர்க்காத வண்ணம் பொய்யாகத் தொகுக்கப்பட்டது என்னும் பொருளிலேயே கருத்துரைக்கிறார்.

எனவே,
திருக்குறளை 

அதன் மூலம்கொண்டு மட்டுமே 

அறிவது நல்லது.

மிகையாகப் புகழ்வதும் தவறு, பழிதூற்றுவதும் தவறு என்பதை, திருக் குறளையும் திருவள்ளுவ மாலையையும் ஒப்பிட்டு ஆய்வு செய்தால் புரியும்.

      எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

      மெய்ப்பொருள் காண்பது அறிவு (குறள்-423)

-------------------------------------------------------------------------------------------------------------

வெளியீட்டுக்கு நன்றி

தீக்கதிர் –நாளிதழ் 30-01-2022 தேதியிட்ட 

வண்ணக்கதிர் இணைப்பு

மற்றும் 

மறுபதிவு செய்த

தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்தமிழ் மேடை மின்னிதழ்

https://mymintamil.blogspot.com/2022/01/blog-post_29.html

-----------------------------------------------------------

8 கருத்துகள்:

  1. உண்மை தான் ஐயா... அதுவும் இயல்கள் வைப்பு முறைகளும் ஒரு சான்று...

    பதிலளிநீக்கு
  2. பகுத்தறிவோடு பகுத்தாய்ந்த கட்டுரை ஐயா.

    பதிலளிநீக்கு
  3. மாலை என்ற பெயரில் சனாதனப்
    பார்ப்பனச் சுருக்குதான் திருவள்ளுவ மாலை எனும் புரட்டு.
    நல்ல எடுத்துரைப்பு.

    பதிலளிநீக்கு
  4. நல்ல கட்டுரை ஐயா.
    //மிகையாகப் புகழ்வதும் தவறு, பழிதூற்றுவதும் தவறு// மிகச் சரியான வார்த்தைகள். மிக அதிகமான புகழ்ச்சி ஐயத்தை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை

    பதிலளிநீக்கு
  5. ஆகா! அருமையான ஆய்வுரை ஐயா! ‘திருவள்ளுவ மாலை’ என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் அது இப்படி ஒரு புளுகு மூட்டை என்பது தெரியாது. பண்டைத்தமிழ் நூல் என்றாலே அதிலிருக்கும் அனைத்தும் உண்மைதான் எனத் தலையில் தூக்கிக் கொண்டாடுவோர் இடையில் சரியான பார்வையில் சீர்தூக்கிப் பார்த்து இந்த நூலின் உண்மை முகத்தை எடுத்துக்காட்டியமைக்கு நன்றி ஐயா!

    பதிலளிநீக்கு
  6. மிகச்சிறப்பு. தங்கள் பதிவு மூலமாகத்தான் இவ்வாறான ஒரு நூல் உள்ளது என்பதை அறிகிறேன். நன்றி.

    பதிலளிநீக்கு
  7. வள்ளுவம் பெற்ற திரிபிற்கு வள்ளுவமாலையும் அடிப்படை என்னும் நிலையில் பல காரணங்களைக் காட்டுவார் கு ச ஆனந்தன். திருக்குறளின் உண்மைப் பொருளையும் உள்ளுறை நோக்கையும் அமைப்பையும் மூலத்திலிருந்து மாற்றியமைத்து வேறுவிளக்கம் தரும் பல பாட்டுகள் வள்ளுவமாலையில் இடம் பெற்றுள்ளன; தொன்மை நூலாகிய தொல்காப்பியம், சங்க நூல்கள், திருக்குறள் முதலியவற்றில் 'வீடு' பற்றிப் பேசும் நான்காம் உறுதிப்பொருள் இல்லை; அறம், பொருள், காமம் என்ற மூன்று மட்டுமே பேசப்படுகின்றன; ஆனால் வள்ளுவமாலையின் பல பாடல்களில் (7,8,20,22,33,38,40,50) திருக்குறளில் இல்லாத நாற்பால் வலியுறுத்திச் சொல்லப்பட்டுத் திருக்குறளின் ஆராய்ச்சிப் போக்கை அல்லது திருக்குறள் உணரும் நெறியை மாற்றிவிட்டது என்பார் இவர்.- From Kuralthiran website

    பதிலளிநீக்கு
  8. திருவள்ளுவ மாலையைத் ‘தில்லு முல்லு மாலை’ எனத் தள்ளவும் முடியாது; கொள்ளைச் சிறப்புடையது என்று கொள்ளவும் முடியாது. திருவள்ளுவ மாலை மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்னும் உந்துதலை உங்கள் கட்டுரை உருவாக்கி விட்டது என்பது உண்மை. அந்த வகையில் நீங்கள் ஒரு முன்னேர்; பின்னேர் பல தொடரலாம்; தொடர வேண்டும்.

    பதிலளிநீக்கு