பிரபல நாடக, திரைப்பட வசன ஆசிரியர் கிரேசி மோகன்
இன்று காலமானார் என்று செய்தி வந்து, அவரது ரசிகர் பலரும் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
அவரை நான் அறிமுகப்படுத்த வேண்டியதில்லை. ஆனால்,
நான் பார்த்த கோணம் இது!-
அவர் அழகான-தமிழ்ச் செய்யுள் மரபு மாறாத வெண்பாக்களையும் எழுதுவார் என்பதை மகிழ்ச்சியோடும் அவர் காலமானதற்கு எனது வருத்தம் தெரிவித்தும் அறிமுகம் செய்யலாம்தானே?
எழுபதுகளில் எழுதவந்த வர்களின் வேடந்தாங்கலான “தீபம்“ இலக்கிய இதழின் ஆசிரியராக இருந்தவர் முந்திய தலைமுறையின் பிரபல எழுத்தாளர் நா.பா.அவர்கள். அவரது மாணவரும் இன்றைய பிரபல எழுத்தாளருமான “அமுதசுரபி“ ஆசிரியர் திரு. திருப்பூர் கிருஷ்ணன். தனது குருநாதர் நா.பா. அவர்களைப் போலவே மரபில் காலூன்றி புதுமையோடு கைகுலுக்குபவர் என்பது, 2014-அமுதசுரபி தீபாவளி மலரைப் பார்க்கும்போது தெரிகிறது. (ஆலங்குடி ஜெயராமன் இதன் புதுக்கோட்டை செய்தியாளர், அவருக்கு எனது நன்றி)
வழக்கமான தீபாவளி பற்றிய புராண இதிகாச விளக்க்க் கட்டுரைகள், வண்ண ஓவியங்களிடையே வித்தியாசமான எட்டு வெண்பாக்கள்!
யாரென்று பார்த்தால் எழுதியவர் கிரேசி மோகன்!!
நீங்களே படித்துப் பாருங்கள் –
(எட்டு வெண்பாக்களில் இரண்டரை மட்டும் இங்கு...)
(எட்டு வெண்பாக்களில் இரண்டரை மட்டும் இங்கு...)
(1)நாக்கில் நரம்பின்றி நாளும்
வசைபாடி,
தீக்குள்
குளிர்காயா தே,நெஞ்சே! – வாக்கில்
கலைவாணி
வந்து குடியேறும் வண்ணம்
அலைபாய்ந்
திடா(து) அடங்கு
(4)நவையூறும்
நாவில் சுவையூறச் செய்து
அவையேறும்
வாழ்வை அளிப்பாய்! -
(8)கண்ணன்
குழலில் கணபதி மோதகத்தில்
வண்ண
மயிலூர்வோன் வேல்முனையில் – மின்னும்
திருவில்
மகேசன் தவத்தில் திகழ்வாள்
உருவிலிவள்
பாயும் ஒளி.
இவற்றிலும் கூட குற்றியலுகரத்தால் வரும் ஓசைக்குறை, வெண்பா இடையில் வரக்கூடாத ஓரசைச் சீர் முதலான, செய்யுள் மரபில் பிழைபடும் இடங்கள் உள. இருந்தாலும் (பிரபல எழுத்தாளர் சுஜாதா, கிருபானந்த வாரியார் போலும் பெரியவர்களின் வெண்பாக்களிலும் இவைபோலும் பிழைகளைக் காணலாம்) கிட்டத்தட்ட மறைந்து வரும் தமிழின் மூத்த கவிதை வடிவத்தை, இவர் இந்தளவுக்குப் படித்திருக்கிறாரே என்னும் வியப்பு “கிரேசி மீதான கிரேசை“ மிகுவித்தது. (கற்பூர வாசனை தெரிஞ்ச கழுதைதான் என்று அபூர்வ ராகங்கள் படத்தில் கமல் சொல்லும் வசனம் நினைவில் வருகிறதா?)
Tamil Poet Puthiya Maadhavi |
கவிதையை மட்டுமே முழுநேரமாக எழுதிவரும் இளைய நம் கவிஞர்கள் இன்னும் எவ்வ்வ்வ்வவளவு படிக்க வேண்டும் என்னும் கருத்தே என் நெஞ்சில் அலைமோதியது. அதற்காக நமது மரபுப் பா வகைகள் எல்லாவற்றையும் கரைத்துக் குடித்து, பிறகுதான் எழுதவேண்டும் என்று சொல்ல மாட்டேன். ஆனால்...
“காரிகை கற்றுக் கவிபாடுவதிலும்
பேரிகை கொட்டிப் பிழைப்பது மேலே” என்று அலட்சியமாக எதையும் நினைக்க வேணடாம்
கொட்டிக் கிடக்கும் குவியலான பாவகைத் தங்க வைரக் கட்டிகளை எடுத்து, அதில் வகைவகையான புதுக்கவிதை ஆபரணங்களைச் செய்து தமிழ்த்தாய்க்குச் சூட்டுங்கள் என்றுதான் உரிமையோடு வேண்டுகிறேன்.
ஆழமாக வேரோடாமல்,
இன்றைய பிரபல கவிஞர்கள் பலரும் நம் தமிழ்மரபுச் செல்வங்களின் மாறாத மதிப்பறிந்து பயன்படுத்தினர்! அவர்களிடம் பாடம் கற்றுக்கொள்ளாமல் இலக்கிய உலகில் சாதிப்பதெப்படி?
இளைய கவிஞர்கள் படிக்க வேணடிய தொகுப்புகளாக நான் சிபாரிசு செய்யும் -தமிழின் மரபை உள்வாங்கிய- புதுக்கவிஞர்களின் தொகுப்புகள் –
(1) வெளிச்சங்கள் – வானம்பாடிகளின் தொகுப்பு
(3) சிற்பி கவிதைகள்
(4) அப்துல் ரகுமான் கவிதைகள்
(5) ஈரோடு தமிழன்பன் கவிதைகள்
(6 தணிகைச்செல்வன் கவிதைகள்
(7) காசிஆனந்தன் கவிதைகள்
(8) வைரமுத்து கவிதைகள்
(9) மு.மேத்தா கவிதைகள்
(10)தாராபாரதி கவிதைகள்
கடந்த 25ஆண்டுக்குள் எழுதத் தொடங்கி இப்போது வெற்றிபெற்ற கவிஞர்களாக வலம் வருவோர் கவிதைகளைச் சொல்லச்சொன்னால் –
(1) ஆதவன் தீட்சண்யா
(2) ஜெயபாஸ்கரன்
(3) புதியமாதவி
(4) நா.முத்துக்குமார்
(5) யுகபாரதி
(6) அ.வெண்ணிலா
(7) இளம்பிறை
(8) தங்கம் மூர்த்தி
(9) ஆர்.நீலா
(10)இன்னும் ஒரு தொகுப்பும் போடாமலே அருமையாக எழுதிவரும் இரா.தனிக்கொடி, மைதிலி கஸ்தூரிரெங்கன்.
(இந்தப்பட்டியலில் கடைசியில் இருக்கும் 4 பேரும் எங்கள் ஊர்க்காரர்கள் என்பதால் பட்டியலில் இடம்பெற்று விட்டார்கள் என்று நினைக்காதீர்கள்.இக்கட்டுரையை எழுதுபவன் நான்
என்பதால்தான் இவர்கள் எனது பட்டியலில் கடைசியில் இடம்பெற் றிருக்கிறார்கள். மற்றவர் பட்டியலில் இன்னும் முன்னே வருவார்கள். எதிர்காலம் என்னை வழிமொழியும், காத்திருங்கள்.)
Tamil Poet Thangam Moorthy |
இன்னும் நிறையப் பேரைச் சொல்லலாம். சட்டென்று நினைவு வந்தோர் இவர்கள்! இது எனது பார்வைக் குறைவாகவும் இருக்கலாம். ஆனால், தற்காலக் கவிதைகளை ஆய்வு செய்வோர் மறுக்கவியலாப் பட்டியல் இது. மரபுக் கவிதை, சந்தக் கவிதைகளை அற்புதமாக எழுதிவரும் “ஊமைக்கனவுகள்“ திருச்சி விஜூ அவர்களின் தளத்தைப் பார்க்க வேண்டுகிறேன்...
குறைந்த பட்சம் இவையிரண்டிலும் சேர்த்துப் பத்துப்பேர் கவிதைகளையாவது முழுவதும் படிக்காமல் எழுதப்படும் கவிதைகள் காலத்தை வென்று நிற்பதரிது. (அய்க்கூ, இசைப்பாடல் பட்டியல் தனி.)
இவர்களின் கவிதைகளிலும் எடுத்துக் காட்டான தொகுப்புகள் எனச் சிலவற்றைத்தான் குறிப்பிடலாம். ஆனால் அதையும் நானே சொல்வதைவிடப் படித்துத் தெரிந்து கொள்வதுதான் அவரவர் சுவைக்கும் நோக்கிற்கும் ஏற்றதாக இருக்கும்.
“நூறு பூக்கள் மலரட்டும்” -மாஓ.
“நூறு பூக்கள் மலரட்டும்” -மாஓ.
எனவே,
என்இனிய இளைய கவிகளே!
நிறையப் படியுங்கள்
குறைவாகவும் நிறைவாகவும்
எழுதுங்கள். என் இனிய வாழ்த்துகள்.
---------------------------------------
( இது மீள் பதிவுதான், ஒருசில திருத்தங்களுடன்.
அவரது இழப்பு கிளர்த்திய நினைவுகளுடன் எனது கட்டுரைஅஞ்சலி!)
( இது மீள் பதிவுதான், ஒருசில திருத்தங்களுடன்.
அவரது இழப்பு கிளர்த்திய நினைவுகளுடன் எனது கட்டுரைஅஞ்சலி!)
ஆழ்ந்த இரங்கல்கள்...
பதிலளிநீக்குபயன் தரும் மற்ற பல தகவல்களுக்கு நன்றி...
கிரேசி மோகன் அவர்களின் மறைவு வருத்தம் அளிக்கிறது...
பதிலளிநீக்குஅவரின் ஆன்மா சாந்தி அடையட்டும்.
வாசிக்க சொன்ன கவி வரிசை அருமை அய்யா.
மறக்காமல் இருப்பதற்கு மிக்க நன்றி சார்.
பதிலளிநீக்குவெண்பா கற்றுக் கொள்ள வேண்டும்தான் ஐயா! எதற்காக இல்லாவிட்டாலும் குறட்பா பிழையில்லாமல் எழுதுவதற்காகவாவது கற்றுக் கொள்ள விருப்பம். விஜு ஐயா கற்றுத் தருகிறேன் என அழைத்தார். வலிய வந்த பொன்னான வாய்ப்பை நழுவ விட்டேன். இனி யாராவது அப்படி வந்தாலும் எதையும் பொறுமையாக நேரம் செலவிட்டு, ஆழ்ந்து கற்றுக் கொள்ளும் அளவில் வாழ்க்கை முறை இல்லை.
பதிலளிநீக்குகிரேசி மோகன் அவர்கள் மறைவு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. இப்பொழுதுதான் சில கீச்சுகள் எழுதி விட்டு வருகிறேன், அவர் மறைவு பற்றி. இன்று நான் ஓரளவாவது உங்களைப் போன்றோர் கவனிக்கும் அளவு சிந்திக்கிறேன் என்றால் அதற்கு அவர் நாடகங்களும் ஒரு காரணம். ஒரே போல் செல்லும் வாழ்க்கை முறையை, அதில் நமது பேச்சு மொழியை, பார்வையைக் கட்டுடைத்த உரையாடல்கள் அவருடையவை. போய் விட்டார்! நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும் பெருமை படைத்ததிவ்வுலகெனும் குறளை நினைந்து மனதைத் தேற்றிக் கொள்ள வேண்டியதுதான். வேறென்ன செய்வது!