தேசிய கல்விக் கொள்கை – 2019 வரைவு அறிக்கை , கல்வியை அழிக்க ஒரு கல்வித் திட்டமா?!



கல்வியை அழிக்க ஒரு கல்வித் திட்டமா?!
--நா.முத்துநிலவன்--
--------------------------------------------------------- 
பிரதமர் மோடி இரண்டாவது முறையாகப் பதவியேற்ற 
இரண்டாவது   நாளில் வெளியிடப் பட்ட
 தேசியக் கல்விக் கொள்கை–2019 வரைவு அறிக்கை” 
நாடு முழுவதும் 
பலத்த எதிர்ப்புக்கு ஆளாகிவருகிறது.


இந்த அறிக்கை, “சூத்திரனுக்குக் கல்வி கற்பிக்கக் கூடாதுஎன்ற மனு தர்மத்தில் (அத்:2,சுலோகம்85) உள்ளபடி, மக்கள் கல்வியை  அழிக்கவும், “பணம் இருந்தால்தான் படி என்பதாகவும் வந்திருப்பதே முதற் காரணம்!
குதிரை கீழே தள்ளி, குழியும் பறித்த கதை!
மாநில உரிமையும் கடமையுமாக இருந்த கல்வித்திட்டம், இந்திரா காந்தியால் ஒத்திசைவுப் (பொது)பட்டியலில்  சேர்க்கப்பட்டது.  அதாவது  கல்வியை மாநிலஅரசும் மத்திய அரசும் சேர்ந்து பார்த்துக் கொள்ளும் இதிலும் மத்திய அரசின் முடிவே இறுதியானது என்று ஆக்கப்பட்டது!
இப்போது, முற்றிலுமாக மத்தியஅரசே எடுத்துக்கொண்டு, கல்வியில் மாநில அரசுக்கு எந்த உரிமையும் இல்லை என்கிறது இந்தத் திட்டம்! “தேசியஎனும்  சொல்லே  அதைச் சொல்லி  விடுவதோடு,  உள்ளே  உள்ள பல பிரிவுகளும்  அதை  அப்பட்டமாகவே  சொல்கின்றன.  ஒரேநாடு,ஒரேபண்பாடு,ஒரேமொழி,ஒரேவரி, ஒரே கல்வி…   அப்புறம்  இப்போது பேசப் படுவதுபோல  ஒரே மதம், ஒரே அரசியல்    ஒரே தேர்தல்   ஒரே தலைவர்   திட்டம் புரிகிறதா..?! எதிர்க்க வேண்டிய காரணமும் இதுவே!
இந்தக் கல்விக் கொள்கை வரைவை நிராகரிப்பதாக, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் முன்னெடுப்பில் நடந்தகல்வியாளர்  சமூக ஆர்வலர் கலந்தாய்வுக் கூட்டத்தில் 12-6-2019  அன்று  முடிவானது.  ஏன் இந்த முடிவு என்று பார்ப்போம் வாருங்கள்  
(1)  கல்வி தருவது, மாநில அரசின் உரிமையும் கடமையுமாகும்
கல்வி  தருவது  மொழிவழி  மாநில  அரசின்  உரிமையும்  கடமையும் ஆகும். மாநில அரசுகள்  தமது  தாய்மொழி வழிக்  கல்வியை ஒவ்வொரு குழந்தைக்கும்  தருவதை  உறுதிப்படுத்த  வேண்டும்.  இதுதான் உலகம் முழுவதும்  உள்ள நாடுகளில் இருந்த, இந்தியாவிலும் இருக்கும் மரபு. இதை மீறும் அறிக்கையின்படி, “பால்வாடி முதலாக, பல்கலைக் கழகம் வரை இனி மத்திய அரசின் கீழ் இயங்கும் தேசியக் கல்வி ஆணையம் தான் அனைத்தையும் கட்டுப் படுத்துமாம்! இதை எப்படி ஏற்க முடியும்?
கல்லூரிகள், பல்கலைக் கழகங்களுக்கு அரசுஏற்பு (Govt-Recognition)  வழங்குவதிலிருந்து, அதன் பாடத்திட்டம் வரை  மத்திய  அரசுக்  கல்வித்  துறையின்கீழ் வரும் "பொதுக் கல்விக் குழு– (GEC- General Education Council)  பார்த்துக் கொள்ளுமாம் (18.3.2). அந்தந்தக் கல்லூரியே சுயஆட்சி பெற்று-பட்டம் வழங்கும்!   கல்லூரிகள்   சுயஆட்சித்  தகுதி   பெறும்வரை அதையும் இக்குழுவே கவனித்துக் கொள்ளும்! மாநில அரசு சும்மா பார்த்துக் கொண்டுஇருக்கலாம்! வெளியே நின்று காவல் வேலையை மட்டும் மாநில அரசு பார்த்தால் போதும்! உள்ளே நடப்பதை மத்திய அரசு பார்த்துக் கொள்ளுமாம்!இதை எதிர்க்க   வேண்டிய   நமது  மாநில    அரசு கைகட்டி, வாய்மூடி நிற்கிறது.
இவர்கள் நடைபாவாடை விரித்து வரவேற்கும்  அமெரிக்காவில் கூட,  பொதுக் கல்வி மாநில மற்றும் பிராந்திய அரசாங்கங்கள் மூலமே இயங்குகிறது.   பன்னாட்டு   வணிகத்தில்  அமெரிக்கா வை வரவேற்கும்  இவர்கள்,   கல்வியில்   மட்டும்  ஏற்காதது,   தமது   அகண்டபாரத   கனவை நிறைவேற்றும் தந்திரமுயற்சியே என்பதன்றி வேறென்ன?
மாநிலஉரிமை பறிப்பு என்பது ஜனநாயகவிரோதம் மக்கள் விரோதம் என்பதால் நாம் இதை எதிர்த்து முறியடித்தே ஆகவேண்டியுள்ளது
          (2)  இருமொழித் திட்டமே தொடர வேண்டும்.
 ஆரம்பக் கல்வியைத் தாய்மொழி வழியே தொடங்கி, ஆறாம் வகுப்பிலிருந்து--இடைநிலைக் கல்வி தொடங்கும்போது--ஒரு    தொடர்பு   மொழியைஅறிமுகப்படுத்தலாம்.  தமிழ்நாட்டில் 1965முதலே ஆங்கிலம் இரண்டாம்  மொழிப்பாடமாக உள்ளது. இதுதான் தொடரவேண்டும்.  அன்றி, “மும்மொழி என்றோ, “விருப்பப் பாடம்   என்றோ  வந்தால்  மறைமுகமாக  இந்தித்  திணிப்பாகவேஇருக்கும் என்பதால் தமிழ்நாட்டுப் பள்ளிகளில், இருமொழித்திட்டமே தொடரவேண்டும். “மும்மொழி எவ்வழியில் வந்தாலும் அது கல்வியைச் சுமையாக்கி,  மாணவர் இடைநிற்றலை அதிகப்படுத்தும்.
அதோடு, இந்தியைப் பற்றியே எல்லோரையும் பேசவைத்து, சத்தமின்றி சமஸ்கிருத்தத்தை அனைத்து நிலைப் பள்ளிகளிலும் புகுத்தப் பார்க்கும்(4.5.14)வஞ்சகத்தையும் புரிந்து அதையும் எதிர்க்க வேண்டி யுள்ளது. இந்தி ஆசிரியர்களை இறக்குமதி செய்யவும் வழிசெய்திருப்பதை (4.5.7) புரிந்து கொண்டால்,இவர்கள் நோக்கத்தைப் புரிந்துகொள்ள முடியும்.
          (3)  பாடம் நடத்துவோரே தேர்வும் நடத்த வேண்டும்
3வயதிலிருந்தே பள்ளிக் கல்வியைத் தொடங்கிவிட  இந்த அறிக்கை கூறுகிறது. இதைத் தனியாக விவாதிக்க வேண்டும். 
இது ஒருபுறமிருக்க,  12ஆம் வகுப்பிற்குப் பிறகு,  எந்தக் கல்லூரியில் சேர்வதானாலும், அகில இந்திய அளவில் நடத்தப்படும் NTA  (NATIONAL TESTING AGENCY) தேர்வை எழுதி அந்தச் சான்றிதழ் பெற்றுத்தான்  எந்தக் கல்லூரியிலும் கால்வைக்க முடியுமாம்! (4.9.6) இதை ஏற்றால் கல்வி வளருமா?அழியுமா?இதுமருத்துவத்தை அழிக்கும் நீட்போல, கல்வியை அழிக்கும் ஏற்பாடு!
இதில் தமிழ்நாட்டவர்க்கு என்ன பிரச்சினை என்றால், ஏற்கெனவே பள்ளி இறுதி (12ஆம் வகுப்பு) முடித்து, கல்லூரி உயர்கல்விக்குப் போகின்ற விழுக்காடு, இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிகமாக உள்ளது! இந்தியச் சராசரி-20.4%,  குஜராத்-17.4%,  ம.பி.-17.6%,  உ.பி.,16.8%,  ராஜஸ்தான்-18%  ஆனால் தமிழகமோ இந்தியச் சராசரியைவிட கிட்டத்தட்ட இரண்டு மடங்கு- 38.2% வைத்துள்ளது. இது தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை தானே? பள்ளிப் படிப்பை இங்கு முடித்துவிட்டு, டெல்லியிலிருந்து மறுதேர்வு வைக்கவேண்டிய அவசியம் என்ன வந்தது? எனவேதான் இது கூடாது!
 (4)  பண்பாட்டை வளர்ப்பது அவரவர் தாய்மொழிக் கல்வியே!
உயர்கல்வியில் சமற்கிருத மொழிக்குப் பலசலுகைகளை வழங்கும்  திட்டம் உள்ளதாக அறிக்கை தெரிவிக்கிறது.(“Sanscrit will opt in all levels of schools”) இது பண்பாட்டு வளர்ச்சிக்காக என்கிறது. பண்பாடு  என்பதை  அவரவரின்  தாய் மொழியில்  தான் இனங்காணவும்   வளர்க்கவும்  முடியும். இது மொழித்திணிப்பு மற்றும் பண்பாட்டுத் திணிப்பு, மற்றும் மொழி உரிமைப் பறிப்பன்றி வேறில்லை.தாய்மொழிக் கல்வியே பண்பாட்டுக் கல்வி என உலகம் முழுவதும் ஏற்றுள்ளதை நடைமுறைப் படுத்த வேண்டும். எம்மொழிக்கும்தனிச் சலுகை என்பதைஎற்க இயலாது. இல்லையெனில், கல்வி காவிமயமாவதைத் தடுக்க இயலாது!
(5)  தனியார் கல்வி வணிகம் தடுக்கப்பட வேண்டும்.
 தனியார் பள்ளிகள் அவரவரே தமது கட்டணங்களை நிர்ணயித்துக் கொள்ளலாம் (‘Private schools may be free to set their fees’)   என  உள்ளது ஆபத்து! கல்வி தருவது அரசின் கடமை என்பதை மறந்து, தனியார் கல்வியை ஊக்குவிப்பதாக  வரைவறிக்கை உள்ளது. இது,“கல்வி  வள்ளல்எனும் பெயரில் கொள்ளையரை ஊக்குவிப்பாகும்! மறுபக்கம், வணிகமயமாகும் கல்வி ஏழைக்கு எட்டாக் கனியாகிவிடும். இது,
அனைவர்க்கும் இலவச,சமமான கட்டாயக் கல்வி எனும் அரசியல் சட்டத்திற்கே எதிரானதாகும். மாறாக, “கட்டணமில்லா சேவை நோக்கில் தனியார்  கல்வி நிறுவனம்  இருந்தால் அதற்கு  அனுமதி  தரலாம்.   வெளிநாட்டுப் பல்கலைக்  கழகங்கள் இங்கு வந்து கல்விக்கடை திறப்பதை ஊக்குவிக்க இந்த அறிக்கை வழிகாட்டுகிறது  (12.4.11) எனவே  தான் நாம்  எதிர்க்கிறோம்  வணிக  நோக்கில்,   தனியார் பயிற்சி  மையங்கள்  நடத்துவதும் தனியார் உரைநூல்களை விற்பதும் தடைசெய்யவேண்டும்.
(6)  பொதுப்பள்ளி, அருகமை பள்ளி தேவை
உலகின் முன்னேறிய நாடுகளில் எல்லாம், பொதுப்பள்ளி, அருகமை  பள்ளி எனும் திட்டங்கள் நடைமுறையில் உள்ளது இது பற்றி ஏதும் வாய் திறக்காமல் அனைவர்க்குமான கல்வியை மறுத்துவிட்டு, காவிமய- கார்ப்பரேட் மயமாக்க நினைக்கும் அறிக்கையை எப்படி ஏற்க முடியும்?
(7)  கல்விக்கான நிதியை அதிகரிக்க வேண்டும்
குழந்தைகள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், சமுதாய உறுப்பினர்கள், மற்றும் சமுதாயப் பணியாளர்களைப்  பள்ளி வளாகங்களில்  அமர்த்திக் கொள்ளலாம்” (2.16,17) என்பதென்ன? காசு செலவழிக்காமல் கல்வியை அழிப்பதும்,  தமக்கு வேண்டியவர்களைகல்விக்கூடத்தில் கொண்டு போய்  விடுவதுமாகத் தெரிகிறதே!
பா... தனது 2014 தேர்தல்  அறிக்கையில்  கல்விக்கான  நிதி 6%  ஒதுக்குவதாகத் தெரிவித்திருந்தது. ஆனால் கடந்த 5ஆண்டுகளில் கல்வி நிதி  ஒதுக்கீடு  3.8% ஐத்  தாண்டவில்லை !  எனவே  கல்விக்கான  நிதியை கியூபா போல  17% ஒதுக்காவிட்டாலும் தான் உறுதியளித்த 6% நிதியைஒதுக்கினால் கூடப் போதுமானது. இந்திய நாட்டிலுள்ள அனைவரிடமும் பல ஆயிரம் கோடிரூபாய் கல்விவரி வசூலிக்கப் படுவதோடு, வருமான வரியில்கூடுதல் வரியும் வசூலிக்கப் படுகிறது. அப்படி இருந்தும், கல்விக்கு நிதி குறைப்பதை ஏற்க இயலாது. இதை ஏற்காத அறிக்கையை எப்படி ஏற்க முடியும்?
(8) ஆசிரியர்களை நெருக்கடியிலேயே வைத்திருப்பதா?
பணிமுதிர்ச்சியில் ஆண்டு ஊதியஉயர்வும், பதவிஉயர்வும், பெற்று வரும் ஆசிரியர்கள் அவ்வப்போது தேர்வு எழுதி வெற்றிபெற்ற பிறகே இந்த உரிமைகளை அடைய முடியும் என்பது ஆசிரியர்களை நெருக்கடிக்கு உள்ளாக்கி, கற்பித்தல் பணிகளைச் செய்யவிடாமல் தடுத்துவிடும். உலகம் முழுவதும் 1:15 அல்லது1:20 என உள்ள ஆசிரியர் மாணவர் விகிதத்தை இந்த அறிக்கை சட்டபூர்வமாகவே 1:30 எனக் கொண்டுவருவது ஆசிரியர் பணியிடங்களைக் குறைத்து பணிவாய்ப்பைப் பறிக்கவே செய்யும்.எனவே இதையும் எதிர்க்க வேண்டிய நிலையில் ஆசிரியர்களைத் தள்ளுகிறார்கள்
(9)  சமூக நீதி, இடஒதுக்கீடு பின்பற்றப் பட வேண்டும்
2016இல் வெளியிடப் பட்ட வரைவு அறிக்கை போலவே, இந்த அறிக்கையிலும் சமூக நீதி  (Social Justice)  பற்றி விவாதிக்கப் படவில்லை!  எனவே,இடஒதுக்கீடு பற்றியும் இல்லை! இது சமத்துவ சமூகம் காணும் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்திய அண்ணல் அம்பேத்காரின், தந்தை பெரியாரின்,முற்போக்காளர் அனைவரின் கனவுகளை மறுப்பதாகும். இது இட ஒதுக்கீட்டால் முன்னேறிய சமூகத்தைப் பின்னுக்கிழுப்பதும் ஆகும். .
(9)  கால அவகாசமும் வேண்டும், உரிய திருத்தங்களும் வேண்டும்.
எனவே, நிறைய திருத்தங்களைக் கோரும் இந்த வரைவு அறிக்கை  தேசம் முழுவதும், அனைத்து மாநிலங்களிலும் உள்ள கல்வியாளர், சமூகஆர்வலர் அனைவரும் படித்துக் கருத்துக் கூறும் வகையில் அட்டவணையில் உள்ள மாநில மொழிகளில் வெளியிடப்பட வேண்டும் என்பதோடு, கருத்துக்கூறும் கால அவகாசத்தையும் குறைந்தது  ஆறுமாத காலமாவது நீட்டித்து டிசம்பர்-31வரை தரவேண்டும்! ஆனால்  31-7-19வரை ஒரு மாத நீட்டிப்பு என இப்போது வந்திருக்கிறது! இது போதாது என்பதே எதார்த்தம்!  
இந்தப் பிரச்சினைகளை,  தமிழ்நாடு அரசும்  மத்திய அரசுக்கு வற்புறுத்த வேண்டும்.  சமூக  அக்கறையுள்ள  அமைப்புகளும், சமூக ஆர்வலர்களும் வற்புறுத்திக் கல்விக்கொள்கை திருத்தம் செய்யப்பட  வேண்டும். 
இல்லையெனில், பெரும் போராட்டத்தின் பிறகு இந்த வரைவு-கல்வித் திட்டத்தைத் திருத்தம் செய்ய வேண்டிய நிலை உருவாகும்.
----------------------------------------------------------------------------------------------
இக்கட்டுரையைத் தனது தலையங்கப் பக்கத்தில் (21-6-2019 வெள்ளி) வெளியிட்ட தீக்கதிர் நாளிதழுக்கு நெஞ்சார்ந்த நன்றி. 



11 கருத்துகள்:

  1. கல்வியை அழிக்கவும், மாநில அரசின் உரிமையைப் பறிக்கவுமே இத்திட்டம் என்பது வேதனையே.

    பதிலளிநீக்கு
  2. கல்வியை தடுக்கும் புதிய கல்வி கொள்கையை அனைவரும் கட்சி பேதம் இன்றி ஒன்றிணைந்து எதிர்க்க வேண்டும் .. மனு அநீதியை நம் மீது திணிக்க அனுமதியோம்!

    பதிலளிநீக்கு
  3. அறிவுதான் மனிதனை உயர்நிலைக்குக் கொண்டு செல்லும் அதனைத் தரும் கல்வியை மனிதனுக்குத் தர மறுக்கும் கொள்கையை யாராக இருந்தாலும் எதிர்க்க வேண்டும்

    பதிலளிநீக்கு
  4. மற்றி மாநில அரசுகளின் “தூக்கம்” பற்றி மிகக் கவலையாக உள்ளது. எழுந்திருக்கவே மாட்டார்களா?

    பதிலளிநீக்கு
  5. மாநில அரசு நடவடிக்கையில் எந்த பயனும் இல்லை.. நம் எதிர்கட்சி, கம்யூனிஸ்ட், எழுத்தாளர்கள், மாணவர்கள் மற்றும் மக்கள் அனைவரும் உங்கள் கட்டுரையை நன்கு படித்தால்.. மாற்றம் நிச்சயம் சார்... நான் உங்களுடைய கட்டுரையை என்னுடைய குடும்ப மற்றும் நண்பர்களுக்கு அனுப்புகிறேன்.. அவர்களும் படித்தால் எளிதாகப் புரிந்துக் கொள்வார்கள் சார்.. வாழ்க வளமுடன்...

    பதிலளிநீக்கு
  6. ஐயா, மிக மிக மிக அருமையாக எழுதியுள்ளீர்கள்! இந்தப் புதிய கல்விக் கொள்கை விதயத்தைப் பொறுத்த வரை மக்களுக்குத் தெரிந்ததெல்லாம் இதன் மூலம் இந்தி திணிக்கப்படுகிறது என்பது மட்டும்தான். ஆனால் அது நீருக்குள் மறைந்திருக்கும் நீர்மூழ்கிக் கப்பலின் பெரிசுகோப்புப் போன்றதுதான் எனவும் உண்மையில் அதை விடப் பன்மடங்கு பெரிய, ஒரு கப்பல் அளவு ஆபத்து இந்தத் திட்டத்தில் மறைந்திருக்கிறது எனவும் விலாவாரியாக நீங்கள் விளக்கியுள்ளீர்கள். படிக்கப் படிக்க உள்ளம் பதறுகிறது. ஐயமே வேண்டியதில்லை; இந்தத் திட்டம் அமல்படுத்தப்பட்டு விட்டால் நாடு இருநூறு ஆண்டுகள் பின்னோக்கிப் போகும் என்பது மட்டுமின்றி தமிழினம் உட்பட அனைத்து இனங்களின் மொழி, பண்பாடு முதலான எல்லா விழுமியங்களும் அழிந்தே விடும். உடனடியாக இதைத் தடுத்து நிறுத்தியே ஆக வேண்டும். என்னால் முடிந்தது, இதை முடிந்த அளவு பரப்புகிறேன். இப்படி ஒரு கட்டுரைக்காக மிக மிக மிக நன்றி!

    பதிலளிநீக்கு
  7. ஐயா, முந்தைய கருத்தில் ஒன்று சொல்ல மறந்து விட்டேன். இந்தத் திட்டத்தின் ஆபத்துகள் குறித்து இவ்வளவு எழுதியுள்ள நீங்கள், கடைசியில் இதைத் திருத்த வேண்டும் என்றும் ஏன் எழுதியுள்ளீர்கள் என்பது புரியவில்லை. இவ்வளவு சீர்கேடுகளைத் தரும் இந்தத் திட்டத்தை எப்படித் திருத்த முடியும்? இது முற்றிலும் தள்ளுபடி செய்ய வேண்டியது இல்லையா? பொதுவாகவே அரசோ தனியாரோ ஒரு சீர்கேடான திட்டத்தை முன்வைத்தால் அதை முற்றிலுமாக எதிர்ப்பதுதான் சரியான முறையாக இருக்க முடியும் என்பது என் பணிவன்பான கருத்து. மாறாக, "இப்படி வேண்டா! திருத்தி அமல்படுத்தலாம்" என நாம் இறங்கி வந்தால் அவர்கள் "இதைத் திருத்தலாம், அதைத் திருத்த முடியாது" என வீம்பு பேசுவார்கள். அப்படிப் பேச்சுவார்த்தை என நாம் ஒப்புக் கொண்டாலே இறுதியில் சிலவற்றையாவது நம் தரப்பில் நாம் விட்டுக் கொடுக்க வேண்டிதான் வரும். இதுதான் வரலாறு நமக்குச் சொல்லும் பாடம். இப்படித்தான் நாம் காலங்காலமாகச் சீரழிந்து வருகிறோம். எனவே கைகூப்பிக் கேட்டுக் கொள்கிறேன்! திருத்தம் என்பதே வேண்டா ஐயா! அப்படி ஒரு கோரிக்கையை முன்வைப்பதே சமரசத்துக்கான, பேச்சுவார்த்தைக்கான செய்கைதான் (signal). ஆகவே முற்று முழுதாக இந்தத் திட்டத்தை அப்படியே புறக்கணிக்க வேண்டும் என்பதும், கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலில் கொண்டு வர வேண்டும் என்பதுமே நம் முதலும் முடிவுமான கோரிக்கையாய் இருத்தல் வேண்டும் எனத் தங்களை வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்! நன்றி!

    பதிலளிநீக்கு
  8. மிகச் சிறப்பான விரிவான கட்டுரை ஐயா...
    இது குறித்தான தெளிவான சிந்தனை மக்களிடம் மட்டுமின்றி பல ஆசிரியர்களிடமும் இல்லை.
    இதை எல்லாருக்கும் கொண்டு செல்ல வேண்டும்.
    உங்கள் இந்தப் பணி தொடரட்டும் ஐயா.

    பதிலளிநீக்கு
  9. மிக விளக்கமான கட்டுரை ....நாளை முழுக் கட்டுரையும் பகிர வேண்டிய தளங்களில் பகிர விருப்பம் ...

    பதிலளிநீக்கு
  10. வேதனைதான்..என்ன செய்வது பெரும்பகுதி கூமுட்ட... படித்த சிறு பகுதி சுயநல கூட்டம்...மற்றது காக்கா கூட்டம்...

    பதிலளிநீக்கு