எனக்கு என் மாணவன் தந்த “ நல்ல ஆசிரியர்“ விருது!


ஆயிற்று... இதோ 33ஆண்டுகள் உருண்டோடி விட்டன...
என்னால் இயன்றவரை -தமிழாசிரியராகவும் பள்ளியின் துணை முதல்வராகவும் வாங்கும் சம்பளம் அதிகம்தான் என்றாலும்- எனது ஆசிரியப் பணியை மனச்சாட்சிக்கு விரோதமில்லாமல் நிறைவாகவே ஆற்றிவருவதாகத்தான் நினைக்கிறேன். அடுத்த கல்வியாண்டின் இறுதியில் முழுநேர எழுத்தாளராகப் போகிறேன்...

ஆனால் நமது தமிழக அரசும் பள்ளிக்கல்வித்துறையும்தான் சங்கப்புலவர்போல -
“பெரியோரை வியத்தலும் இலமே
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே!“ என்றிருக்கிறார்களே!

என் நண்பர்கள் -குறிப்பாக ஆசிரியர்கள் என்னைச் சந்திக்கும் போது “உங்களுக்கு அடுத்த வருடம் நல்லாசிரியர் விருது கிடைக்கும் பாருங்க“ என்னும்போது நான் மனசுக்குள் சிரித்துக்கொள்வேன். எனது 'விண்ணப்பித்து வாங்குவதா விருது?“ எனும் தினமணிக் கட்டுரையே (02-08-2011) அப்படியான எண்ணங்களின் விளைச்சல்தான்.

ஆனால்.. பாருங்கள்.. அரசு தரலன்னா என்ன? நாங்க தர்ரோம் என்று என் மாணவர்கள் சொல்வதுபோல ஒரு நிகழ்வு... அதைத்தான் இந்த எனது வலையின் நூறாவது பதிவாக இடுகிறேன்...

அட, ஆமாங்க... விஜய் தொலைக்காட்சியில் “ஏழாம்வகுப்பு சி பிரிவு“ அப்படின்னு ஒரு தொடர் வருதுல்ல..? அதுல மாணவர்களுக்கு “என்னைக் கவர்ந்த ஆசிரியர்“ எனும் தலைப்பில் வைத்த போட்டியில் கலந்து கொண்டு, என் மாணவன் - இப்போது என் வகுப்பில் (10-ஈ பிரிவு) படிக்கும் சையது இர்ஃபான் எனும் என் மாணவன் - என்னைப்பற்றி எழுதிய குறிப்போடு தேர்வுசெய்யப்பட்டிருக்கும் சுட்டிவிகடன் 
விளம்பரத்தைக் கொண்டுவந்து காட்டினான்.

அதில் அவன் எழுதியிருந்தது தான் என்னை நெகிழ வைத்தது -
எனக்குப் பிடித்த ஆசிரியர் எனும் இடத்தில் என்பெயர்.
காரணம் -  எனும் இடத்தில் எழுதியிருந்தான் - “நகைச்சுவையாகப் பாடம் நடத்துவார், உலக விஷயங்களை யெல்லாம் பாடத்தோடு சேர்த்துச் சொல்வார், மாணவர்களின் திறமைகளை அறிந்து ஊக்கப் படுத்துவார், அனைத்து மாணவர்களையும் ஏற்றத்தாழ்வு பாராமல் சமமாக நடத்துவார்..” என்று இன்னும் சில தொடர்களையும் எழுதியிருந்தான்...

இதைவிட அரசு தரும் “நல்லாசிரியர்“ விருது பெரிதா என்ன?

இது போதும்பா... நாம் விதைத்த விதைகள் வீணாவதில்லை... சரியான நிலத்தில் சரியானபடி விழுந்தது ஆங்காங்கே வளர்ந்துகொண்டுதான் இருக்கிறது...  

நம் உழைப்பு வீணாகிவிட வில்லை என்று மனசின் ஓரத்தில் சிறு கசிவு... என் பிள்ளைகள் புரிந்துகொண்டுதான் இருக்கிறார்கள்... வேறுயாரும் புரிந்துகொண்டால் என்ன? புரியாவிட்டால் என்ன?

நம் கடன் பணிசெய்து கிடப்பதே... - 27-09-2012

(இந்த இடுகையைக் கிட்டத்தட்ட 3மாதங்களுக்குப் பிறகு நமது வலையில் இடுகிறேன்... வீட்டில் நடந்த சில கட்டடப் பணிகள்... இயக்கப் பணியில் இடையில் விழுந்த மனச்சோர்வுகள் அம்மா உடல்நலமின்மை எனச் சில காரணங்கள்... இனித் தொடர்ந்து எழுதுவோம்)


6 கருத்துகள்:

  1. ஆகா! ஒரு ஆசிரியருக்கு இதைவிட வேறென்ன வேண்டும்.அவன் எழுதியதை ப்ரேம் செய்து வீட்டில் போடுங்க நிலவன்
    த.செ.
    அனுப்புனர்: sa.tamil selvan tamizh53@gmail.com
    பெறுநர்: "நா.முத்து நிலவன்"
    தேதி: 28 செப்டம்பர், 2012 9:49 pm

    பதிலளிநீக்கு
  2. உண்மைதான் தோழர்...
    ஆள் பிடித்து, சிபாரிசு செய்து
    "வாங்கு"வதாகவே
    இன்றைய நல்லாசிரியர் விருதுகள் உள்ளன.
    நீங்கள் மாணவர்களுக்கு மட்டுமல்ல...
    எங்களைப்போல் வெளியே இருக்கும்
    இளையவர்களுக்கும்
    எப்போதுமே நல்லாசிரியர்தான்.
    மாணவர்களின் மனதை வெல்பவர்
    நீங்கள்.
    அடுத்த ஆண்டு பணி நிறைவா?
    காலம் எவ்வளவு வேகமாக ஓடுகிறது...
    எப்போதும் உங்களின்
    சமூக - இலக்கியப் பணிகள்
    தொடரத்தானே போகின்றன.
    பணி நெருக்கடியிலிருந்து விடுபட்டு,
    அவ்வப்போது எழுதுங்கள்...தோழரே. -மு.மு
    அனுப்புனர்: murugesh mu haiku.mumu@gmail.com
    பெறுநர்: "நா.முத்து நிலவன்"
    தேதி: 29 செப்டம்பர், 2012 7:52 am

    பதிலளிநீக்கு
  3. அனுப்புனர்:- Karuppiah Ponnaiah pavalarponka@yahoo.com -
    பெறுநர்: "நா.முத்து நிலவன்"

    வெளியில் தெரிந்தது ஒன்று... இன்னும் வெளியில் தெரியாமல் வேரோட்டமாகத் தங்களை வரிந்து கொண்டிருக்கும் முன்னாள் இந்நாள் மாணவர்களின் பாசமிகுப் பாராட்டு விருதுகள் எத்தனை எத்தனையோ. வஞ்சகமி்ல்லா நெஞ்சங்கள் வழங்கும் விருதுகளே நம்மைத் தாங்கும் விழுதுகள்.
    வாங்கும் விருதுகள் நமக்கெதற்கு? ---- பொன்.க
    தேதி: 4 அக்டோபர், 2012 9:05 pm

    பதிலளிநீக்கு
  4. நன்றி, எழுத்தாளர் தமிழ்ச்செல்வன்,கவிஞர் மு.மு., ஆசிரியர்-பாவலர் பொன்.க. ஆகியோர்க்கு.
    பாவலர் பொன்.க.போலும் உண்மையிலேயே தகுதியால் விருது“தரப்பெற்ற“ நல்லாசிரியர்கள் சொல்லும்போது இதன் உண்மை மென்மேலும் ஒளியேறுகிறது.
    நன்றி அய்யா!
    (இப்போது “வாங்கும்“விருது மார்க்கெட் ரேட் ரூ.3லட்சத்தைத் தாண்டிவிட்டதாமே? மெய்யாலுமா? என்று மீசை முருகேசன்தான் கேட்க வேண்டும்!)

    பதிலளிநீக்கு
  5. இன்று உங்கள் முன்னாள் மாணவர் உங்களை ஆசிரியர் என்பதற்கு இலக்கணம் அய்யா தான் என்றார் மகிழ்வை உணர்ந்தேன் .வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  6. தங்களைப் போல ஒவ்வொரு அரசுப் பள்ளிக்கும் ஒரு ஆசிரியர் இருந்தால் போதும்.கொள்ளையடிக்கும்தனியார் பள்ளிகள் இல்லாமலே போய்விடும்.
    வாழ்க வளமுடன்
    கொச்சின் தேவதாஸ்

    பதிலளிநீக்கு