ஆசிரியர் உமாவைக் கொலை செய்தது யார்?


chennai_teacher_uma
அருச்சுனன் விட்ட அம்புமழையில் கர்ணன் குற்றுயிரும் குலைஉயிரும் ஆகிவிட்டான். ஆனால்,சாகவில்லை. அவனால், சாக முடியவில்லை. தரும தேவதை அவன் சாவைத் தடுத்து அருச்சுனன் விடும் அம்புகளை யெல்லாம் மலர்மாலையாக மாற்றி அவன் கழுத்தில் விழுமாறு செய்கிறாள் 

 அருச்சுனன் திகைக்கிறான்! கண்ணனோ சிரிக்கிறான். அப்போது அங்கே ஓடோடி வந்த தன் தாய் குந்திதேவி, "அய்யோ மகனே!என்று கர்ணனைப் பார்த்துக் கதறித் துடிப்பதைப் பார்த்து, மேலும் அருச்சுனன் குழம்ப, கண்ணன், கர்ணன்தான் குந்திதேவியின் மூத்தமகன் எனும் கதையைச் சொல்ல, சிறிது நேரம் கழித்துக் கர்ணன் உயிர்விடுகிறான். 
 இப்போது அருச்சுனனும் கதறியவாறு கர்ணன் அருகில் ஓடிச் சென்று "அய்யோ அண்ணா! நானே உன்னைக் கொன்று விட்டேனே! நானே உன்னைக் கொன்று விட்டேனே" என்று சொல்லி அழுதபோது, கண்ணன் அவனைக் கிண்டலாகப் பார்த்துச் சொன்னானாம்
 "நான் கொன்றேன் நான் கொன்றேன் என்கிறாயே! அருச்சுனா! நீ மட்டுமா கர்ணனைக் கொன்றாய்? அவனது குருநாதர் "சரியான நேரத்தில் உன் அம்புக்குறி தவறட்டும்" என்று கொடுத்த சாபம்தான் முதலில் அவனைக் கொன்றது. பின்னர், மாறு வேடத்தில் சென்ற இந்திரன், கவச குண்டலங்களைத் தானம்கேட்டு வாங்கிக்கொண்ட போது கர்ணன் மீண்டும் கொல்லப்பட்டு விட்டான். பிறகு உங்களின் தாய் குந்தி, "போரின்போது இரண்டாவது முறையாக நாகபாணத்தை அருச்சுனன் மீது ஏவுவதில்லை" எனும் வரத்தைக் கேட்டு அவனை இறுதியாகவும் கொன்று முடித்தாள். பிறகுதான் இந்த பாரதப் போரே தொடங்கியது. போதாத குறைக்கு இதோ நானும் இப்போது அவனது புண்ணியத்தையெல்லாம் தானமாகக் கேட்டு வாங்கிய பிறகே அவனது உயிரைத் தரும தேவதை விட்டுத்தந்தாள். இப்படி ஏற்கெனவே மாதா-பிதா-குரு-தெய்வம் ஆகிய நான்குபேருமே அவனைக் கொன்று முடித்த பிறகுதான் உன் அம்பு அவனைத் துளைத்தது. என்னவோ நீயே உன் வீரத்தால் அவனைக் கொன்றுவிட்டதாக நினைத்துக் கொண்டு, "நான் கொன்றேன் நான் கொன்றேன்" என்று பிதற்றுகிறாய்! செத்தபாம்பை அடித்த உன்னாலா அவன் கொல்லப்பட்டான்?" என்று சொன்னதாக ஒரு பாரதக் கதை உண்டு.

இப்போது சொல்லுங்கள்
 ஆசிரியர் உமாமகேஸ்வரியை வகுப்பறையிலேயே குத்திக் கொன்றது யார்?
 இர்பான் வெறும் அருச்சுனன் மாதிரி செத்த பாம்பை அடித்தவன் தான்!
  அந்தச் சகோதரியின் உடலில் கத்திக் குத்து மீண்டும் மீண்டும் விழ விழக் கத்திக் கதறிய கதறலில், பொங்கிப் பெருகிய ரத்தத்துளியின் கறைபட்டு யார் யாரெல்லாம் குற்றவாளி களாகி நிற்கிறார்கள் தெரியுமா? நாம் எல்லாரும்தான்! இது, உண்மை வெறும் இகழ்ச்சி இல்லை!

 இந்தக் கட்டுரையை எழுதுகிற நானும், இதை வெளியிடும் இதழாசிரியரும், படிக்கும் நீங்களும் என இந்தச் சமூகத்தில் வாழும் நாமெல்லாருமே ஆளுக்கு ஒரு வகையில் குற்றவாளிகள் தாம்"யு டூ புரூட்டஸ்?"  என ஒருவரை ஒருவர் கேட்டுக்கொள்ளத்தான வேண்டும். ஏனெனில் -
அனைத்து ஆசிரியர்களும் அரசு ஊழியர்களும், அதிர்ந்து கூடப் பேசத் தெரியாத புதுக்கோட்டை ஆசிரியர் சாரதாவை முதல் களப்பலியாக்கி, தமிழகம் முழுவதும் 36 ஆசிரியர்களை இழந்து பல லட்சம் ஆசிரியர்- அரசு ஊழியர் அதிகபட்சமாக 56 நாள் வரை சிறையிருந்து, --1986இல் "ஜேக்டீஎன்றும் 1989இல் "ஜேக்சாட்டோ" என்றும்-- கத்திக் கதறிப் பெற்றதுதான் இன்று கைநிறைய வாங்கும் மத்திய அரசுக்கு நிகரான சம்பளம் என்று, இன்று வேலைக்கு வரும் எத்தனை பேருக்குச் சொல்லியிருக்கின்றன நம்ஆசிரியர்-அரசுஊழியர் இயக்கங்கள்
 வரலாற்றை மறந்தவர் அதில் திரும்பவும் வாழ சபிக்கப்படுவர் என்பது உண்மைதானே? நாம் சபிக்கப்பட்டு விட்டோம்! இப்போது சம்பளம் கிடைக்கிறது! மரியாதை போய்விட்டது!

 போராடக் கற்றுத்தந்த சங்கம், பாடம் நடத்தவும் பள்ளிக்கு வரும் பிள்ளைகளை நம் சொந்தப் பிள்ளைகளாகப் பார்த்துக் கொள்ளவும், அலுவலகத்திற்கு வரும் பாமரனை மரியாதையாக நடத்தி அவனது நியாயமான கோரிக்கைகளைப் பரிவோடு பரிசீலிக்கவும் கற்றுத் தந்திருந்தால் இன்றைய ஆசிரியர்கள் மதிப்பிழந்து, வெண்ணிறஆடை மூர்த்தி, லூசுமோகன்களாக நமது ஊடகங்களால் கிண்டலாகவும் கேலியாகவும் சித்திரிக்கப்படும் நிலைக்கு ஆளாகி யிருப்பார்களா என்ன? "பணிப் பண்பு" (work culture) பற்றிய கவலை எந்த ஆசிரியர்-அரசு ஊழியர் அமைப்புகளுக்கு இருக்கிறது

 பதவி உயர்வின்போதும், புதிய புத்தகம் வரும்போதும், பணியிடைப் பயிற்சியை அரசு மேற்கொள்வதை விட, அந்தந்தச் சங்கங்களே மேற்கொள்வது தானே சரி? இதை ஏன் எந்த ஆசிரியர் சங்கமும் செய்வதில்லை? புதிய புதிய விஷயங்களில் அது பாடப்பகுதியாக இருந்தாலும் சரி, மாணவர் உளவியல் சார்ந்ததாக இருந்தாலும் சரி- ஆசிரியர் களுக்குச் சந்தேகம் வந்தால் கேட்டு, பொறுப்பான பதில்பெறும் இடம் என்று ஏதாவது உண்டா? உமாவுக்கு இரங்கல் ஊர்வலம் நடத்தினால் மட்டும் போதாது, இனி உமாக்கள் கொல்லப்படாமல் தவிர்க்கவும் யோசிக்க வேண்டும்.

 அதிகாரிகளைக் கால்கை பிடித்தால் போதும், பாடங்களைப் பள்ளிக்கூடத்தில் நடத்துவதை விட ஏழை மாணவர்களானாலும் தன் வீட்டில் நடத்தும் தனிப்பயிற்சிக்கு எப்படியாவது இழுத்து மாணவனின் தன்மானத்தை சிதைத்து, எதையும் செய்து கொள்ளலாம் எனும் துணிச்சலை வளர்த்ததும் சங்கங்கள் தானே?

 கடமை பற்றிப் பாடம் நடத்தும் ஆசிரியர், தன் கண்ணெதிரில் நடந்து கொள்வதைப் பார்த்துத் தானே மாணவர் கற்றுக் கொள்வர்? மனச்சாட்சிக்கு மட்டுமே பயந்து பணியாற்ற வேண்டிய ஆசிரியர்களுக்குள் சாதி-மத-குழுபேதம், பணிமூப்பு-பதவிபேதம், பள்ளிக்கு வந்தும் சொந்தவேலை பார்ப்பது, வகுப்பு நேரத்தில் கதைபேசுவது, பெரிய இடத்துப் பழக்கம் தரும் துணிவில் பொறுப்பின்றி நடந்துகொள்வது, புதிதாக வந்திருக்கும் கல்வி முறை தொடர்பான செய்திகளைப் பேசும் "பிழைக்கத் தெரியாத" ஆசிரியரை அணிசேர்ந்து கொண்டு கிண்டல்செய்வது இவ்வளவையும் மாணவர் முன்பே அரங்கேற்றுவது என எத்தனை எத்தனை அசிங்கம்! இவற்றைக் களைவதில் ஆசிரியர் அமைப்புகளுக்குப் பொறுப்பில்லையா?

 இவ்வளவு ஏன், ஏதாவது ஒரு செய்தித் தாளையாவது காசு கொடுத்து வாங்கிப் படிக்கும் ஆசிரியர் எத்தனை பேர்? என்று புள்ளிவிவரம் எடுத்தால் கதை கந்தல்தான்! இதில் நல்ல மனசோடும், ஈடுபாட்டோடும் தன் கைக்காசு போட்டுப் பணியாற்றும் ஆசிரியர்களை நீண்ட நாளாகவே அரசுகள் கண்டு கொள்வதில்லை. ஆசிரியர் அமைப்புகளோ தவறு செய்பவரைக் காப்பாற்ற மட்டுமே இருப்பதாகத் தோன்றுகிறது!

 நூறு விழுக்காடு தேர்ச்சிக்காகப் பல தனியார் பள்ளிகளும் சில அரசுப்பள்ளிகளும் கூட எடுக்கும் நடவடிக்கைகளை மனச்சாட்சியுள்ள ஆசிரியர் எவரேனும் தட்டிக் கேட்டால் கல்வித்துறை பேரைச் சொல்லியே அவர்களை ஓரங்கட்டி விட்டு மாணவர்களைப் படுத்தும்பாடு கொஞ்சமா நஞ்சமா? காலை 4மணிக்கே எழுப்பி விட்டு வீட்டுப்பாடம், பிறகு தனிப்பயிற்சிக்கு ஓடி, பிறகு வந்து பள்ளிக்கூடம் ஓடி, பிறகு மாலை பள்ளியிலிருந்து வந்ததும் எதையோ வாயில் கொட்டிக் கொண்டே உடைமாற்றிக் கொண்டு, மீண்டும் தனிப் பயிற்சிக்கு ஓடி, இரவு 8மணிக்கு மேல் வீட்டுக்கு வந்து மீண்டும் மாடுபோல அன்று நடந்த, முந்திய நாள்களில் படிக்க விட்டுப்போன பகுதிகளை அசைபோட்டு- இரவு படுக்க 11மணி யாகிவிடும் குழந்தைக்கு வயது 15! "ஓடி விளையாடு பாப்பா" என்ற பாரதி பாட்டைப் படித்து ஒப்பிக்காமல் விளையாடப்போன குழந்தைக்கு கடுமையான தண்டனை தரும் நமது பள்ளிக் கூடங்களால் மனஅழுத்தம் வராதா என்ன? அந்த அழுத்தம் கட்டாயப் படுத்தி சிரித்துக்கூடப் பேசாத ஆசிரியரால்- அதிகமாகாதா என்ன?

 இதில் பெற்றோர் வந்து பார்க்கக் கூட அனுமதி கேட்டு அரை மணிநேரம் நின்றபின் அனுமதி மறுக்கப்படும் "ஸ்ட்ரிக்ட்"ஆன பள்ளிக்கூடம்தான் சிறப்பான பள்ளிக்கூடம் என்று பெற்றோரே பீற்றிக்கொள்ளும் மனநிலையை எங்குபோய்ச் சொல்வது? கவிஞர் நந்தலாலா சொல்வதுபோல- "மாணவர்களிடம் வெளியே விட்டுவிட்டு வரச்சொல்லும் தின்பண்டத்தையும் தண்ணீர் பாட்டிலையும் எப்போது உள்ளே மாணவரோடு வைத்துக்கொள்ளச் சொல்லிவிட்டு, உள்ளே அவர்கள் சுமக்கும் புத்தகக் கட்டைத் தூக்கி வெளியே வீசுகிறார்களோ அப்போது தான் மாணவர்கள் சுதந்திரமாய் உணர்வார்கள்" என்பது நூறு விழுக்காடு உண்மை அல்லவா?

 நான் ஒருமுறை மாணவரிடம் பேசும்போது, "புத்தகம் நோட்டே இல்லாத, வீட்டுப் பாடம் இல்லாத, பரிட்சை இல்லாத பள்ளி வகுப்பறை எப்படி இருக்கும்?" என்று கேட்க, அவர்கள் ஓவென்ற சத்தத்துடன் "ரொம்ப நல்லா இருக்கும் சார், ஆசிரியரும் இல்லை என்றால் ரொம்ப ரொம்ப நல்லா இருக்கும் சார்என்றது இன்னும் காதில் ஒலிக்கிறது! பள்ளி விடுமுறை என்றால் மாணவர் எழுப்பும் மகிழ்ச்சிக் கூச்சல் கூட ஒருவகையில் கல்விமுறை மீதான மாணவர் விமர்சனம்தானே?

 பாடத்திட்டத்தில் மதிப்பெண்ணை மட்டுமே விரட்டும் போட்டியில், மாணவரின் மற்ற பல திறமைகள் கண்டுகொள்ளப் படாததில் விரக்தி அடைவது இயல்பு அல்லவா? "மாணவர் முன்னேற்ற அறிக்கை" (Progress Card) இல் அவனது பாடும் திறமை, பேசும் திறமை, ஓவியத் திறமை, விளையாட்டு, சேர்ந்து செயலாற்றுவது, முக்கியமாக அடுத்தவருடன் அன்பாக இருப்பது என, இதர பல பண்பு-திறமைகளையும் பாராட்டி அவற்றுக்கும் மதிப்புப் போட்டு, பெற்றோர்க்கு அறிக்கை தருவதாக இருந்தால், "இதில் நான் இல்லை, இதோ இதில் நான் இருக்கிறேன்" என்னும் நிறைவு மாணவர்க்குக் கிடைக்கும். இப்போது மதிப்பெண்ணை மட்டும் காட்டும் முறையை நிச்சயமாக மாற்றியாக வேண்டும். அங்கீகாரம் தரப்படும் ஒவ்வொரு திறமையும்-பண்பும் மற்ற திறமைகளையும் வளர்க்கும் என்பதைக் கல்வித்துறை நிச்சயமாகப் பரிசீலிக்க வேண்டும்!

 நமது தேர்வுமுறை தோல்வியடைவதை மையமாகக் கொண்டிருப்பதாகவே எனக்குப் படுகிறது. தாள் திருத்தும் மையங்களில் தரப்படும் மாதிரி விடைத்தாள் (key)களைக் கட்டிக்கொண்டு அழாமல், சிந்தித்து எழுதும் மாணவர்க்கே சிறந்த மதிப்பெண் கொடுக்கும்படி ஆசிரியர்களுக்கும் பயிற்சிதர வேண்டும். மாணவர் எழதியதை தரப்பட்ட விடைக்குறிப்போடு ஒப்பிட்டு "சரியாக இருக்கிறது" என்று எந்தவித சிந்தனையும் இல்லாமலே திருத்தப்படும் தேர்வுக்குத்தான் நோட்ஸ் தேவைப்படும். சிந்தித்து எழுதப்படும் விடைக்கு நல்ல மதிப்பெண் கிடைக்கும் என்றால் ஆசிரியர்களையே அசர அடிக்கும் விடைகளை மாணவர் தருவார் என்பதில் நம்பிக்கை வேண்டும்.

 தேர்வு முறை மட்டுமல்லாமல், திருத்தும் முறையும் மாறவேண்டும். அல்லது, ஒவ்வொரு மாணவருக்கும் கணினியில் சேமிக்கப்பட்டிருக்கும் நூற்றுக்கணக்கான வினாத்தாள்களில் ஒன்றைத் தந்து, அவரே விடையை இட்டு, கணினியால் உடனுக்குடன் திருத்தப்படும் விடைத்தாள் மதிப்பெண் படியை அவரே எடுத்துக்கொண்டு செல்லும் தேர்வு முறையை அறிமுகப் படுத்தலாம். இப்போது நடக்கும் தேர்வுகளால் மனித உழைப்பு விரயம் மட்டுமல்ல, மனஅழுத்தம், தேர்வு அறைக் கண்காணிப்பாளர்-மாணவர் மோதல் களையும் தவிர்க்கலாம். இதில் தனியார் பள்ளி நிர்வாகங்களின் நேரடிப் பங்களிப்பும் உண்டு! சொல்லும்விதம் நடந்துகொண்டால் தனிக்கவனிப்பும், நேர்மையுடன் நடந்து கொண்டால் அவரது வாகனம் சேதப்பட்டுக் கிடக்கும் பரிதாபத்தையும் தவிர்க்கலாம்.

தாய்-தந்தை இருவரில் ஒருவராவது தன் குழந்தையின் மீது அன்பு செலுத்த நேரம் ஒதுக்கி அதை வெளிப்படையாகக் காட்டவும் வேண்டும். இரண்டுபேரும் கண்டிப்பாக இருக்கும் இடம் குழந்தையின் கல்வி குறித்தே என்பதை மாற்றியாக வேண்டும். மருத்துவராகவும், பொறியாளராகவும், வழக்குரைஞராகவும் வரவேண்டும் எனும் கனவில் அவன் மனிதனாகவும் இருக்க வேண்டும் என்பதை மறந்து விடுகிறார்களே! பணம் கறக்கும் படிப்பாகப் பிள்ளை படிக்கவேண்டும் என்ற ஆசையில் 9ஆம் வகுப்பிலிருந்தே அந்தக் குழந்தையின் தலையில் தன் பேராசையை ஏற்றிவிட்டு, பாடாய்ப் படுத்தும் பெற்றோர், என்ன சம்பாதித்தாலும் அவன் வாழும் முறையைக் கற்றுக்கொள்ளாமல் எப்படி வாழ்வான் என்பதை எப்போதுதான் யோசிப்பார்கள்?

 குழந்தை பள்ளிக்கு வருவது நல்ல மதிப்பெண் வாங்குவதற்காக மட்டுமல்ல. இதை வீட்டிலிருந்து தனிப்பயிற்சி வழியாகவும் கற்றுக்கொள்ள முடியும். பலருடன் பழகி இந்த உலகத்தோடு ஒட்டி வாழக் கற்பதுதான் உண்மையான கல்வி! ஆசிரியர்கள்- பள்ளியில் இருக்கும் பெற்றோராகவும், பெற்றோர்- வீட்டிலிருக்கும் ஆசிரியராகவும் நடந்து கொள்வதுதான் ஒரு குழந்தையை அறிவோடும் பண்போடும் வளர்க்கும் ஒரே வழி!

கண்டிப்பும் கனிவும் சரிவிகித்த்தில் காட்டவேண்டிய பெற்றோர் இரண்டில் ஒன்றை மட்டுமே காட்டுவதில் குழந்தையின் மன அழுத்தம் நிச்சயமாகப் பாதிக்கப்படும். இது வெளிப்படும் இடமாக வகுப்பறை இருக்கும்போது, மனப்பிறழ்ச்சி அதிகமாகி தோல்விகளைத் தாங்காத மனநிலை இயல்பாகச் சிந்திக்க விடுமா?
அரசுகளின் முதல்பார்வை படவேண்டிய கல்விக்கு ஓரப்பார்வையே கிடைக்கிறது! ஒவ்வோராண்டும் கல்விக்கு ஒதுக்கப்படும் நிதி விழுக்காடு குறைந்துகொண்டே வருவதை கல்வியாளர் மட்டுமல்ல, நாட்டு வளர்ச்சியில் அக்கறை கொண்ட யாரும் ஒத்துக்கொள்ள மாட்டார்கள். வளர்ந்துவரும் தொழில்நுட்பத்தின் பலனை முதலில் கல்வித்துறைக்கல்லவா வழங்க வேண்டும்? அதுதானே உடனடித் தேவை! ஆனால், நமது நாட்டில் தலைகீழாக அல்லவா நடக்கிறது?

சுவையாக இனிக்க வேண்டிய பாடம் கசப்பதும், வெறுக்கத் தகுந்த சீரழிவு ஊடகங்கள் பலவண்ணத்திலும்-பலமடங்கு முன்னேறிய வாய்ப்பு-வசதிகளோடும் பல்லை இளிப்பதில் பலியாவது நம் சந்ததிகள் தானே என அரசுகள் கவலைப்பட வேண்டாமா?
மக்களுக்கு இலவசமாகத் தரப்படவேண்டிய கல்வியும் மருத்துவமும்தானே நம்நாட்டில் ஏழைக்கு எட்டாக் கனியாக இருக்கிறது?! மற்ற இலவசங்களையெல்லாம் நிறுத்திவிட்டு அனைவருக்கும் உயர்கல்வி வரை இலவசம், அனைத்து மருத்துவமும் இலவசம் என்று கொண்டுவரட்டும், கல்விவள்ளல்கள் கடையை மூடி-ஓடிவிட மாட்டார்களா? மற்றவற்றை இலவசமாகக் கொடுக்க முன்வரும் அரசுகள், ஏழைக்கு எட்டாக் கனியாகிவிட்ட கல்வி-மருத்துவம் இரண்டையும் எப்படியாவது வாங்கிவிடும் போட்டியில்தான் இளைய தலைமுறை பலியாகிறது என்பதை உணர வேண்டாமா?

திரைப்படங்களிலும் தொலைக்காட்சித் தொடரிலும் வரும் குழந்தைகள் "பிஞ்சிலே பழுத்தது"போலப் பேசும்பேச்சுகளைப் பார்த்தால், வியப்புக்குப்பதிலாக நமக்கு வேதனை தான் மிஞ்சுகிறது. அதிலும் சில காட்சிகளில் நகைச்சுவை எனும் பெயரில் குழந்தைகள் பேசும் சிலவசனங்கள் எரிச்சலையும் ஆற்றாமையையும் அல்லவா எழுப்புகின்றன?

"தமிழகத்தின் தங்கக் குரல்” "செல்லக்குரல்" "குட்டிக்குரல் தேடல்" என்று ஒவ்வொரு தொலைக்காட்சியும ஒவ்வொரு பெயர் வைத்துக்கொண்டாலும் போட்டிக்கு வரும் குழந்தைகள் பாடும் பாடல் குழந்தைள் பாடக் கூடியதாக இருக்கிறதா என்று எந்த நடுவராவது கவலைப் படுகிறாரா? 5வயதுக் குழந்தை முக்கி முணகிப் பாடும் காமரசப் பாடல்களைப் பாடும் குழந்தையின் வயதுக்கு இது சரிதானா என்று யோசிக்க வேண்டாமா? இவர்களின் வணிக நோக்கத்திற்கு, பாடிக்கொண்டிருக்கும் சில நூறு குழந்தைகள் மட்டுமல்லாமல், பார்த்துக் கொண்டிருக்கும் பல கோடிக் குழந்தைகளும் பலியாகி ஒரு தலைமுறையே "குழந்தைமை"யை இழந்து பிஞ்சிலே பழுத்து உதிரவேண்டியதுதான் விதியா?பேச்சு பாட்டு நடிப்பு மூன்றையும்தான் கேட்கிறேன்.
 தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில், "வாடா மாப்பிள வாழப்பழத் தோப்புல வாலிபால் ஆடலாமா?” என்பன போலும் பாடல்களை ஏராளமான முகபாவங்களுடனும் தாராளமான இடுப்பாட்டத்தோடும் ஐந்து வயதுக் குழந்தை அனுபவித்துப் பாடுவதைப் பார்வையாளர்கள் பார்த்து பரவசப்படுவதும், நடுவர்கள் பார்த்துப் பாராட்டுவதும் சரியானதுதானா? இர்பான் கூட இப்படி ஒரு இந்தி திரைப்படம் பார்த்த்தாகச் சொன்னானே?
 ஒரு சிலர் மிகச் சரியான விமரிசனங்களோடு அந்த 'மீத்திற'க் குழந்தைகளின் அபாரத் திறமையை மனம்விட்டுப் பாராட்டும்போது நமக்கும் ஏற்படும் மகிழ்ச்சி, இதுபோன்ற வயதை மீறிய விஷயங்களோடு வரும்போது அதற்குப் பயிற்சி கொடுக்கும் பெற்றோரிடம் "இப்படிச் செய்வது தவறு, இது குழந்தைகளுக்கும் நல்லதல்லஎன்று எடுத்துக் கூறித் திருத்துவதல்லவா கலைத் தாய்மையின் கடமையாக இருக்கும்? அவர்களே இதைப் பாராட்டிவிட்டால் பிறகு பெற்றோர்களின் குழந்தைப் பயணம் அந்தத் திசையில் தானே அதிவேகமாக இருக்கும்!
இப்போது சொல்லுங்கள்
 ஆசிரியர் உமாமகேஸ்வரியை வகுப்பறையிலேயே குத்திக் கொன்றது யார்?
கல்விமுறை, ஆசிரியர்கள், பெற்றோர்கள், ஊடகங்கள், அரசுகள் ஆகிய நாம் எல்லாரும்தானே?

செத்துப் போன உமாவை உலகம் தெரிந்து கொண்டது.

குற்றுயிரும் குலை உயிருமாகத் திரியும் ஆயிரக்கணக்கான உமாக்களும் இர்பான்களும் சாகுமுன், நாமெல்லாரும் ஏதாவது செய்தாக வேண்டும். அதுதான் உமாவின் ரத்தம் நமக்குச் சொல்லியிருக்கும் செய்தி.
----------------------------------------------------------------- 
நன்றி,  கீற்று இணைய இதழ்  
http://www.keetru.com/ ஞாயிறு, 11 மார்ச் 2012
--------------------------------------------------------------- 
இக்கட்டுரையை விரும்பி எடுத்து வெளியிட்ட அறந்தாங்கி மண்வாசம்சிறப்பு மலர்க்குழு -சிபிஐ(எம்) தோழர்கள்  குறிப்பாக அதன் தலைவர்-கவிஞர் கவிவர்மன் அவர்களுக்கு எனது நன்றி. இதே நிகழ்வு  தொடர்பான  எனது கவிதையைப் படிக்க -http://valarumkavithai.blogspot.com/2012/02/blog-post_7985.html

----------------------------------------------------------------------------------------------------------------------------------------- 

21 கருத்துகள்:

 1. நா.முத்துநிலவன் அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றி.மகாகவியே மறுபடி வந்து நமக்கு சொன்னதுபோல் இருக்கிறது,அரசு,பள்ளிகள்,ஆசிரியர்கள்,பெற்றோர்கள்,ஆசிரியர் சங்கங்கள் எல்லோருடைய பொறுப்பையும்அழகாக சொல்லி உள்ளீர்கள்.

  பதிலளிநீக்கு
 2. சிறப்பான கட்டுரை. நன்கு உணர்ந்து எழுதப்பட்டுள்ளது. அணைவரும் கு்றறவாளிகள் தான், மறைமுகமாக. தனியார் பள்ளி க்கு கட்டணத்தை நிர்ணயித்தவர்கள் ஏன் ஆசிரியர்களின் பணியை, ஊதியத்தை, பணிநேரத்தை நிர்ணயிக்க வில்லை. தனியர் பள்ளிகளில் நடக்கு அத்து மீறல்களை அணைவரும் ஏற்றுக் கொண்டுதான் அந்த பள்ளியில் தங்கள் பிள்ளைகளை கொண்‌டுபோய் பணத்தை கொட்டி பணம் சம்பாதிக்கும் இயந்திரமாக்க முயலுகின்றனர். பாவம் மாணவர்கள் அவர்கள் தங்கள் இளமைப்பருவத்தில் அணுபவிக்க வேண்டிய விளையாட்டு கலை போன்றவற்றை இழந்து மதி்ப்பெண்களை துரத்திதுரத்தி மனித தன்னை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து இறுதியில் குற்றவாளியாகிவிடுகின்றனர். அதில் முதல் பங்கு பெற்றோருக்கு தான் உள்ளது. அணைவரும் ஒரே அளவில் கற்கும் திறன் உடையவர்கள் கிடையாது. கற்பி்ககும் அளவு அதிகமாக இருந்தால் அதை மாணவர்கள் சுமையாகவே கருதுவார்கள். சிலருக்கு அதிக நேரம் எடுத்துக் கொள்ளும் எனவே அவர்களால் கற்க முடிந்தாலும் உரிய காலத்தில் அதை முடிக்க நிர்பந்திக்கும் போது விளைவு எதிர்மறையாகிறது. மாணவர்கள் உரிமையை அங்கீகரிக்காதவரை இதுபோன்ற இன்னல்களை அதிகம் சந்திக்க வேண்டிய மோசமான சூழலுக்கு ஆசிரியர்கள் தள்ளப்படலாம். உடனடி தேவை தனியர் பள்ளிகளை முறைப்படுத்த வேண்டிய தே. கட்டுரையாசிரியருக்கு பாராட்டகள்.

  பதிலளிநீக்கு
 3. பாராட்டுகள் ஐயா
  தங்களால் தமிழ் தழைக்கட்டும்.
  தொடர்ந்து எழுதுங்கள்.
  பணிவுடன்
  மு.இளங்கோவன்

  பதிலளிநீக்கு
 4. நல்ல விமர்சனம்.
  அரசு ஊழியர் ஆசிரியர் இயக்கங்கள் ஊழியர்களுக்கு சமூக பாதுகாப்பையும்,
  சமூக அந்தஸ்தையும் தந்திருக்கிறதே தவிர சமூக பொறுப்புணர்வை வளர்க்க தவறியிருக்கிறது
  என்பதே நிதர்சனமான உண்மை.
  கல்வியையும்,மருத்துவ வசதிகளையும் தரவேண்டியது அரசின் கடமை.
  சாராயம் விற்பது வேண்டுமானால் தனியாரிடம் இருக்கலாம்.
  ஆனால் தலைகீழாக சாராயத்தை அரசு விற்கிறது.
  தனியாரிடம் கல்வியையும்,மருத்துவத்தையும் விற்று விட்டது.
  ஒட்டு மொத்த சமூகமோ பணம்...பணம்...என்று தான் அலைகிறதே தவிர
  சமூக அவலங்களைப்பற்றி சிந்திப்பதேயில்லை.
  இதையெல்லாம் எடுத்துக்காட்டவேண்டிய ஊடகங்களோ
  சமூகத்தை சீரழிப்பதில் போட்டி போட்டுக்கொண்டு நிற்கின்றன.
  இதில் யார் யாரைக்குறை சொல்லி என்ன பயன்.
  அடுத்த உமா கொல்லப்படும்போது
  சில நாட்கள் சிலர் பேசுவர்........அவ்வளவு தான்.

  பதிலளிநீக்கு
 5. தங்கள் கட்டுரை சிந்திக்க வைக்கிறது ....தங்கள் தொண்டுக்கு என் பாராட்டுக்கள்

  பதிலளிநீக்கு
 6. pudhugaipudhalvan@gmail.com
  பெறுநர்:
  தேதி: 12 மார்ச், 2012 9:59 am
  தலைப்பு: keetru kurithu

  sir avarkalukku vanakkam. thangalin asiriyar umavai kondrathu yar? katturai keetru seithi odaiyil indru padithen. thangalin ullakkumural unmaithan.katturai nandraka irunthathu.nanri.

  பதிலளிநீக்கு
 7. நா. முததுநிலவன் அவர்களே. உங்களின் கட்டுரையில் கல்வினை தனியார்க்கு தாரை வார்த்து விட்டு சாராயத்தை விற்கும் அரசு குறித்து வாய்த்திறக்கவில்லையே?? ஏன்? எழுத்தளவில் கூட அரசின் நடவடிக்கைகளை விமர்சனம் செய்ய உங்களின் சமூக அக்கறை என்னே என்ன..

  பதிலளிநீக்கு
 8. நண்பர்களின் கருத்துகள் அனைத்துக்கும் நன்றி.
  நண்பர் வாகை அவர்களுக்கு சில செய்திகள் - உங்களின் கடிதத்தில் நீங்கள் எழுதியிருக்கும் வரிகள் 1986 ஜேக்டீ போராட்டத்தின் போது அதிக பட்சமாகச் சிறையில் இருந்த புதுக்கோட்டை நண்பர்களோடு அந்த தீபாவளி அன்று உண்ணாவிரதத்துடன் நடந்த -சிறைக்கவியரங்கில் தலைமையேற்று - நான் எழுதிய வரிகள்தாம் -
  கல்விக்கடையைத் தனியார்க்கு விட்டு, கள்ளுக் கடையை அரசே ஏற்றதில் நட்டமான தென்னவோ நாம்தான்”
  எனும் வரிகள் பின்னர் கல்கி வார இதழின் கடைசிப்பக்கத்தில் வந்தது.

  இந்தக் கட்டுரையில் மட்டுமின்றி, இதே உள்ளடக்கம் தாங்கிய எனது முந்திய கவிதையில் உமா கொலையில் கைது செய்யப்பட வேண்டிய பட்டியலில் கடைசியாக வருவது அரசுதான்.
  இந்தக் கருத்தை எனது முந்திய பல கட்டுரைகளிலும் காணலாம்.
  பிரச்சினையை சரியாக அணுகும் முறையை என் சமூகவியல் கல்வி எனக்குத் தந்திருப்பதாகவே கருதுகிறேன்.

  நிற்க.
  தங்களின் சமுதாய ஆர்வம் தொடர்பான --அரசுக்கு எதிரான?-- செயல்பாடுகள் பற்றியும் அறிய ஆவல்.
  அன்பு கூர்ந்து தெரிவியுங்களேன்?
  நட்புடன்,
  நா.முத்துநிலவன்.

  பதிலளிநீக்கு
 9. Karuppiah Ponnaiah
  பெறுநர்: "நா.முத்து நிலவன்"
  தேதி: 13 மார்ச், 2012 8:46 pm

  மனசாட்சி மரத்துப்போன, சமூக அக்கறை சல்லடையாக்கிக் கொண்ட, மனித உருவில் நடமாடும் மாக்கள் மாறுவார்களா? தானாய் எல்லாம் மாறும் என்பது பழைய பொய்... மாற்றவேண்டும் என்பதே எதார்த்தம். மாற்றுவோம் பண்பாட்டுக் கலை வளர்த்து..
  பாவலர் பொன்.க.

  பதிலளிநீக்கு
 10. ayyya intha naadum naattu makkalum naasamai pogattum entru natikavel m.r ratha sonnathu ninaivukku varukirathu. kalviyai kandu kollatha samoogam veelum.athu namathu kan munnal natappathu vethanai irukkirathu.

  பதிலளிநீக்கு
 11. என்ன சுவாதி இவ்வளவு கோவம்?

  வீரப்பாவின் மகாதேவி வசனம்?

  சில நேரம் நமது கோவத்தை தீப்பெட்டியில் உறங்கும் தீக்குச்சிகளைப் போல சேகரிக்கவும் வேண்டும்.

  சரியான நேரத்தில் சரியான இடத்தில் பற்ற வைக்க வேண்டும்.

  உங்கள் கோவம் நியாயம் தான், ஆனால், இடம்-பொருள்-ஏவல் இருக்கிறதே! பொறுமை!
  நா.மு.

  பதிலளிநீக்கு
 12. கல்வியை வியாபாரமாக ஆக்கிய அரசுகளை மக்கள் கேள்வி கேட்கும் நிலையில் இல்லை. பெற்றோர்களுக்கோ தஙகள் பிள்ளைகள் நல்லவர்களாக இருக்க விருப்பம் இல்லை.மாறாக அவர்கள் தஙகள் பிள்ளைகள் பொறியாளர் அல்லது மருத்துவராக ஆக வேண்டும் என்றுதான் விரும்புகின்றனர். மக்களின் மனதில் மாற்றம் வந்தால் மட்டுமே பிள்ளைகளின் நல்லொழுக்கம் வளரும். AKBAR A
  2012-03-12 00:06:22 http://www.keetru.com

  பதிலளிநீக்கு
 13. சுதாகர்.வெ
  நா.முத்துநிலவன் உங்கள் சமூக அக்கறைக்கு நன்றி. ஆனால் உங்கள் கருத்து சற்றே திசை மாறி உள்ளது என்பது என் கருத்து. போராடிப் பெற்றதுதான் இன்றைய ஊதியமும், பென்ஷன் எல்லாம். அதற்காக சங்கங்களையும் அதன் போரட்டங்களையும் ஏன் அவமதிக்கிறீர்கள். சங்கங்களை ஏதோ தன் சவுகரியத்துக்காக பயன்படுத்திக்கொள்வதுபோல் சித்தரிப்பது அவ்வளவு சரியாக இல்லை.இன்றும் தனியார்மயமாக்களுக்கும், அன்னிய முதலீடு வராமல் எதிர்த்தும் நிற்பது இந்த சங்கங்கள் மட்டும்தான்.இன்று பெற்றோர்களும், ஆசிரியர்களும் பிள்ளைகளை ஒரு வியாபார பொருளாக பார்ப்பதற்கான காரணம் அவர்களா இல்லை இன்று வெள்ளை முதலாலியின் கைக்கூலியாக மாறியிருக்கும் நம் அரசாங்கத்தாலா.எல்லாவற்றையும் வாரிக்கொடுக்கும்போது வேடிக்கை பார்த்தது நம்முடைய தவறு. சமச்சீர் கல்விக்காக சாலையின் ஓரங்களில் போரடியபோது எத்தனை பேர் அதற்காக வினாடிகள் செலவழித்திருப்பார்கள்.மாணவர்களின் நேரடியான மற்றும் அவர்கள் மறைமுகமாக பாதிக்கப்படும் எல்லா நிகவுழ்களுக்கும் சங்கங்களும், இயக்கங்ளும் போராடுவது உங்களுக்கு மட்டும் ஏன் தெரியாமல் போனது.தனியார் மயமாக்களே உண்மையில் இதற்கு காரணம் அதை முழுமையாக நமக்கு ஏற்படுத்துவதே இன்று நம்மை ஆளும் முதலாளித்துவ ஆட்சியாளர்களுக்கு நோக்கம்.இதை மாற்றுவதற்கு போராட சொல்லித்தாருங்கள் அதுதான் இன்றய தேவையும்கூட. ஒவ்வொரு ஆசிரியரும் பெற்றோர்களே. அப்படிப்பார்த்தால் ஒவ்வொறு பிள்ளைகளையும் தன் பிள்ளைகளாக பார்ப்பது என்பது அவர்களுக்கு இயல்பாகவே வந்திருக்கும்.ஆனால் அது அவர்கள் மனதில் எழாமல் பார்த்துக்கொள்வதே இன்றய தனியார் பள்ளிகளின் முதல் குறிக்கோள்.பாடத்திட்டங்களில் அடிமை முறைகளை கலையாதது தொடர்ந்து நம்மை ஆழும் முதலாளித்துவ அரசாங்கங்களே.இங்கு அவர்கள் மட்டுமே குற்றவாளிகள். அந்த குற்றவாளிகளை எதிர்த்து போரடுவதே இன்றய நமது ஒவ்வொருவரின் கடமை. குழந்தைகள் பள்ளிக்கு வந்துவிட்டாளே அவர்கள் படிப்பதற்கான மன நிலை ஏற்பட்டுவிடுவதாக எண்ணுவது தவறு. எத்தனை ஆசிரியர்கள் இன்று குழந்தைகளின் குடும்ப சூழ் நிலைகளை கேட்டரிகிறார்கள். அப்படி கேட்டறியாத போது குழந்தைகளின் மன நிலை குறித்து எப்படி அறிவார்கள்.பாடத்திட்டங்கள் மாறியாக வேண்டும். அதற்கு அரசியலின் அடிப்படை மாற வேண்டும். போரட்டங்கள் மாற்றத்திற்கு வழிவகுக்கும்.
  ---சுதாகர்.வெ
  2012-03-12 02:32:56
  http://www.keetru.com

  பதிலளிநீக்கு
 14. மாணவர்கள் நல்லவற்றையும் சரி , கெட்டவற்றையும் சரி தானாகவே தெரிந்துகொள்வதில்லை , பெற்றவர்களிடமிருந்தும், ஆசிரியர்களிடமிருந்துமே அதிகளவில் முதலில் கற்றுக் கொள்கிறார்கள் , நான் படித்த பள்ளியின் தமிழாசிரியர் ஒருவர் தரமற்ற பேச்சுகளிலும் , ஒழுக்க கேடான செயல்களிலும் ஈடுபடுபவர் , ஆபாச புத்தகங்களை வகுப்பு நேரங்களிலேயே மாணவர்களின் முன்னிலையிலேயே படிப்பார் ! இப்படி இருக்கின்ற ஆசிரியர்களிடம் படிக்கின்ற மாணவர்களின் எதிர்காலம் ??????? போனவாரம் பதினோரு வயது மாணவனை இழுத்துக்கொண்டு ஓடிய கேடுகெட்ட ஆசிரியை ..... ஆசிரியை கொலைக்கு ஆர்ப்பரித்து ஆர்ப்பாட்டங்கள் நடத்திய ஆசிரியர் சங்கங்களே இதற்க்கு உங்களிடம் என்ன பதில் ?????
  -- kibs Matha
  2012-03-12 19:36:21 http://www.keetru.com

  பதிலளிநீக்கு
 15. ஆசிரியர் உலகமே 'உமா' என்கிறதாம். இது ஒரு பிதற்றலே! மலரும் பருவத்திலேயே வெம்புகிறது எனில், உமாவைப் போன்ற ஆசிரியர் என்ற போர்வையில் புதைந்துக் கிடக்கும் பணத்தாசையே! வெற்றியை நோக்கும் மாணவன் வெட்டிச் சாய்க்கிறான் எனில் சொல்லொணாத் துயரம் அவன் மனத்தில் தோன்றியதால் தானே! அதைத் தோற்றுவித்தவர் இன்று துவண்டுவிட்டார். அவ்வளவே! அறநெறியை ஊட்ட வேண்டிய ஆசிரியர் அடுத்த மொழியாம் இந்திக்குக் கொடுத்த முக்கியத்துவத்தால் இன்று முடிந்து போனார். அவ்வளவே! எள்ளளவும் வருத்தத்திற்கு இடமேயில்லை. அறியாமல் செய்த செயலுக்காக பிஞ்சு உள்ளம் பிறழ்ந்து போனதே! நினைத்தால் நெஞ்சம் குமுறுகிறது. வாழ வேண்டிய வயதின் தொடக்கத்தில் வாடி வளருகிறதே! இனியாவது தனியார் பள்ளிகள் திருந்தட்டும்.கற்றுக் கொடுக்கும் ஆசிரியர் கண் மூடிய நிலையில் கோளாறு உள்ளதே! திருத்த வேண்டிய ஆசிரியர் தீர்த்துக் கட்டப்பட்டு விட்டாரே! திருந்த வேண்டியது ஆசிரியர் உலகமெ. அப்போது தான் பள்ளிகள் கல்விக்கூடமாக இருக்கும். அல்லதெனில் கொலைக் கூடமாக மாறிவிடும்.
  -- கி.பிரபா
  2012-03-15 16:41:42
  http://www.keetru.com

  பதிலளிநீக்கு
 16. ungalin katturai sirappaga vullathu .aasiriyarkalil yethanai perukku samuga akkarai vullathu yennaium serthu than .pulambathan mudikirathu yennal .aasiriyar anaivarum yethirkala thalaimuraikku sirantha sulnilaiyai vuruvakka vendama .kurai solliye yethanai naal kadathuvathu .manavarkal nala aasiriyar sangam onedru yen amaikkakudathu .manavarkaluku valikattiyaha seiyalpadum aasiriyarkalin pechai kattayam manavarkal ketparkal yena nambukiren .manarkalai pathikka kudia visayangaluku yethiraga yen porakudathu .mudium nammal nam pinnal petrokalum vara vaippu vundu .yosiyungal .kai kodukka manavarkal nalam mattume kurikollaga vulla aasiriyarkal ullanar.

  பதிலளிநீக்கு
 17. கட்டுரைக்கு நன்றி அய்யா என்னை போன்ற இளந்தலைமுறை ஆசிரியருக்கு மிகவும் அவசியமான தகவல்கலை என்னுடன் பகிர்ந்து கொண்டதற்கு மறுபடி நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். அய்யா அறியாமல் எவரும் தவறு செய்யவில்லை செய்யவும் மாட்டார்கள் தெரிந்தே செய்யப்படும் தவறுகளே அதிகம் என்பது என்னுடைய கருத்து. பட்டுக்கோட்டயாரின் பாடலே இதற்கு பதில் திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது, அதை போலவே சமூகமும் ஆசிரியர்களும் தங்களை மாற்றிக்கொள்ள முயற்சி செய்ய வேண்டும்.. இனியாவது மாற்றி மாற்றி கொல்லாமல் இருந்தால் சரி...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. “அனாமதேயம்“ பெயரில் ஏன் எழுதுகிறீர்கள்? இதைவிடவும் எழுதாமலே இருந்துவிடலாம். அன்புகூர்ந்து தங்கள்பெயரைத் தெரிவிக்க வேண்டுகிறேன்.

   நீக்கு
 18. பா. ஸ்ரீமலையப்பன், அய்யா அனாமதேய கட்டுரைக்கு சொந்தக்காரன் நான்தான்... இத்தகைய இடையூறுகள் இனிமேல் நேர வண்ணம் பார்த்துக்கொள்கிறேன். நன்றி.

  பதிலளிநீக்கு