எனது “புதிய மரபுகள்“ கவிதைத் தொகுப்பிலிருந்து...


போர்க்குணத்துக்கு ஏது தடை?

(உருதுக்கவிஞர் ஃபெய்ஸ்-ஏ-ஃபெய்ஸ் எழுதிய கருத்துச் சுதந்திரம் பற்றிய இக்கவிதையை மத்தியப் பிரதேச முற்போக்கு எழுத்தாளர் சங்கம் அஞ்சல் அட்டையில் அச்சிட்டு வெளியிட்டு உள்ளது – 1989.)
  (இந்தியிலிருந்து ஆங்கிலத்தில்-தேபேஷ் தாகூர் (மே. வங்கம்)

சுருக்கென எழுதும் என் இரும்புப் பேனாவை அவன்
சுக்கல் சுக்கலாய் முறிக்கலாம்!- நான்
நெருப்பெனப் பற்றுவேன் ! நிச்சயம் பரவுவேன்!
நினைப்பதைத் தடுக்க முடியாது!

எழுத்தைத் தடுக்கலாம்! எண்ணத் தடைபோட
எந்தத் தடைச்சட்டம் இங்கு வரும்?- என்
கழுத்தை ஒடிக்கலாம்! கையை முறிக்கலாம்
கவிதையைத் தடுக்க முடியாது!

வாயை அடைக்கலாம்! வன்சிறை பூட்டி என்
வாழ்க்கையைக்கூட அழிக்கலாம்! - மூச்சில்
ஓயாது பீறிடும் ஓங்காரப் போர்க்குண
உணர்ச்சியைத் தடுக்க முடியாது!
-----------------------------------------------------------------------
இந்தக் கவிதையை மொழிபெயர்க்கும் போது - ஒவ்வொரு சாவிலும் தன் தனி இழப்பை மனத்தில் கொண்டு எந்தச் சாவிற்கும் ஓயாமல் ஒப்பாரி தொடரும் கிழவிகளைப் போல் - நமது பாரதியின் பாடல்களுக்கு 1928இல் அன்றைய சென்னை ராஜதானி அரசு தடை விதித்த செய்தியை நினைத்துக் கொண்டு - எழுதியது இந்தக் கவிதை. என்ன நாஞ்சொல்றது சரிதானே? --நா.மு.-15-03-2012)

3 கருத்துகள்:

 1. உண்மை முத்துநிலவன்.. கருத்துக்களை யாராவது தடுத்து நிறுத்தமுடியுமா? புரட்சி கவிகள் பலர் தமது எண்ணத்தில் உதித்த கருத்தக்களை சொன்னதால் தானே இன்று புரட்சி கவி பாரதி தாசனை நாம் போற்றுகிறோம். தங்களும் சரித்திரத்தில் இடம் பெறும் நாள் வரும் தோழர்.
  அன்புடன் நண்பர் ஜெயராம் (உ.தொக அ ஓய்வு ) சென்னை

  பதிலளிநீக்கு
 2. கவிதையைத் தடுக்க முடியாது. திமிரான நெஞ்சுரம் கொண்டு எழுதப்பட கவிதை. கவிஞர்களுக்கு திமிர் இருப்பது இயல்புதான்.

  பதிலளிநீக்கு
 3. “மன்னவனும் நீயோ வளநாடும் உன்னதோ? உன்னையறிந்தோ தமிழை ஓதினேன்?“ எனும் கம்பனின்(?)தனிப்பாடலும்,
  “நாமார்க்கும் குடியல்லோம்” எனும் அப்பரின் பக்திப் பாடலும்,
  “தாயால் பிறந்தேன், தமிழால் வளர்ந்தேன், நீ யார் என்னை நில்லென்று சொல்வதற்கு?“ எனும் பட்டுக்கோட்டைக் கவிஞனின் வரிகளும் முன்னோடிகள் அல்லவோ?
  நான் என்பதற்குள் எத்தனை நாம்கள்?
  நண்பர்கள் ஜெயராம் (பார்த்து எத்தனை ஆண்டுகள் இருக்கும் ஒரு 15?)விச்சு அவர்களுக்கும் என் நன்றி.

  பதிலளிநீக்கு