‘வாராது போல்வந்த மாமணியைத் தோற்போமோ?’
-- நா.முத்து நிலவன் --
தமிழ்நாட்டுப் பள்ளிகளில் சற்றேறக்குறைய ஒன்றரைக் கோடி மாணவர்கள் படிக்கிறார்கள். ஒன்று முதல் பன்னிரண்டாம் வகுப்புவரை படிக்கக்கூடிய மாணவ-மாணவியரும் அவர்தம் பெற்றோரும் என ஏறக்குறைய தமிழ்நாடே குழப்பத்தின் உச்சத்தில் இப்போது தவிக்கிறது…
புதிய அரசு கொண்டுவந்த ‘சமச்சீர்க் கல்வித் திருத்தச் சட்ட’த்திற்குச் சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடைவிதித்தது. தமிழகஅரசு இதைஎதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. முந்தியஅரசு அச்சிட்டு அனுப்பிய புத்தகங்கள் தேக்கி வைக்கப்பட்டு, புதிய–அதாவது கடந்த ஆண்டு இருந்த பாடத்திட்டப்படியான-- நூல்கள் அச்சிடப்பட்டு வருகின்றன. மெட்ரிக் பள்ளிகளோ, ‘அவர்களுக்கான நூல’களை அவர்களே வாங்கிக் கொடுக்கும் வேலையை -‘இந்த ஆண்டு இல்லை’ என்றிருந்த கொள்ளையை- பெரும்பாலும் செய்துமுடித்து விட்டார்கள்.. இவ்வளவுக்கும் காரணம், ‘சமச்சீர்க்கல்வித்திட்டத்தில் தயாரிக்கப்பட்ட புத்தகங்கள் தரமாக இல்லை’ என்பதாக இன்றைய முதல்வர் கூறுகிறார், ‘அரசியல் காழ்ப்பு’என்று முன்னாள் முதல்வர் கூறுகிறார்.
பாடநூல்கள், கட்சிஅரசியலுக்கு அப்பாற்பட்டு இருக்கவேண்டும்என்று எல்லாரும் விரும்புகிறோம். ஆனால், இதுவரையான தமிழ்நாட்டுப் பாடப்புத்தகங்களில் அப்படி எந்தஆண்டும் இருந்ததில்லை என்னும் எதார்த்தத்தையும் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். இதைப் பாடநூல்களை எழுதும் - மேற்பார்வை செய்து ஒப்புதல் வழங்கும் அந்தந்தப் பாடநூல்களின் ஆசிரியர்கள் அல்லவா முதலில் உணரவேண்டும்?!
ஒரு புனிதமான பணியில் ஈடுபடுகிறோம் என்னும் பெருமிதமோ அதற்கான அக-புறத் தகுதியோ இல்லாதவர்கள் பாடநூல் எழுத வரும்போது அதற்கான ‘பிரதிபலிப்பும்’ பாடநூலில் வெளிப்படத்தானே செய்யும்? வச்சிக்கிட்டா வஞ்சகம் பண்றாங்க? ‘சட்டியில இருக்கிறது தானே அகப்பையில வரும்? பெரும்பாலும் பள்ளிக்கல்விக்கு நேரடித்தொடர்பில்லாத கல்லூரிப் பேராசிரியர்கள், மற்றும் ஆசிரியப் பயிற்சிநிறுவனப் பேராசிரியர்களே இதுவரை பாடநூல்களை எழுதி வந்துள்ளனர். இப்போதும் --‘சமச்சீர்க் கல்வி’ பாடநூல்களிலும்-- இதுதானே நடந்தது? எவ்வளவுதான் ‘மேதை’களாக இருந்தாலும் -தொடர்புடைய வகுப்பு மாணவர்களுக்குப் பாடம் நடத்திய நேரடிஅனுபவம் இல்லாதவர்கள்- புள்ளிவிவரங்களை வைத்துக்கொண்டு எழுதும் பாடநூல் எப்படிச்சரியாக இருக்கும்?
பாடம் நடத்தும் ஆசிரியர்களைப் பாடநூலாசிரியர்களாகத் தேர்வுசெய்ய நினைத்த முந்திய அரசின் பள்ளிக்கல்வித்துறை, அவர்களை விண்ணப்பிக்கச் சொல்லி விளம்பரம் செய்தது. பிறகு பாடநூல் ஆசிரியர்களைத் தேர்ந்தெடுக்கத் தேர்வும் நடத்தியதுதான் பெரும் வேடிக்கை!
‘ஆமாம்சாமிகள் மட்டும்’ அடுத்தஆண்டும்; --அதாவது 7,8,9,10 வகுப்புகளுக்கான ‘சமச்சீர்க்கல்வி’ பாடநூல் ஆசிரியர்குழுவில்-- தொடர்ந்து இடம்பிடித்தனர். கருத்துகளை பொருத்தமாகச் சொன்ன ஆசிரியரோடு நல்ல புதிய கருத்துகளை தமிழ் மாணவர்க்குத் தரவேண்டும் என்று துடிப்போடு 6ஆம் வகுப்புத் தமிழ்ப்பாட நூல் ஆசிரியர்குழுவில் இருந்த இரண்டு இளைஞர்களும் அடுத்த ஆண்டு அழைக்கப்படவில்லை! இளஞ்சிறுவரிடையே பெருந்தன்மைப் பண்பை வளர்க்க வேண்டிய ஆசிரியர்குழு, பணியை மட்டுமல்ல பெயரையும் இருட்டடிப்புச் செய்யும் அளவிற்குப் ‘பெருந்தன்மை’யோடு இருந்ததுதான் சமச்சீர்க்கல்விப் பாடநூலாசிரியர் குழுவின் இலட்சணம்!
இதுபோலும் சில்லறைத் தவறுகளுக்காகவோ, ‘தற்காலிக இழப்புகளுக்காகவோ வருந்தவில்லை! மாறாக “சமச்சீர்க்கல்வி எனும் ‘வாராதுபோல்வந்த மாமணியைத்தோற்போமோ?’ என்றுதான் அஞ்சுகிறேன்.
முந்திய அரசும் பெரும்ஈடுபாட்டோடு சமச்சீர்க் கல்வியைக் கொண்டுவரவில்லை. கல்வியாளர்கள், சமூக-ஜனநாயக இயக்கங்களின் தொடர்ந்த போராட்டங்கள், தேர்தல் அறிக்கையில் உறுதிமொழியை நிறைவேற்ற வேண்டிய அரசியல்என…கலைஞர் கையில் எடுத்தாரே தவிர ‘மெட்ரிக் பள்ளி முதலாளி’ களின் ‘உள்ளடி’வேலைகளை அவரால் எதிர்கொள்ள இயலவில்லை.
‘சமச்சீர்க்கல்வி ஒழியவேண்டும்’ என்று நினைப்பவர்களின் முதல் எதிரி தமிழ்வழிக்கல்விதான். கல்வியாளர் மட்டுமல்ல தேசநலனில் அக்கறைகொண்ட பலரும் சொல்லிச் சொல்லி மாய்ந்துபோ யிருக்கிறார்கள்… காந்தியடிகள் சொன்னார்: ‘எனக்கு ஒரு சர்வாதிகாரியின் அதிகாரம் இருக்குமானால், நான் இன்றே நம் சிறுவர்கள் அந்நிய மொழிமூலம் கற்பதை நிறுத்திவிடுவேன். தாய்மொழி மூலம் கற்பிக்கும்படிக் கட்டளையிடுவேன். இம்மாற்றத்தை எதிர்ப்பவர்களை வேலையிலிருந்து நீக்கிவிடுவேன்’ (ஹரிஜன் இதழ் நாள்:22-06-1947) அந்த அகிம்சாவாதியின் கடுமையைப் பார்த்தீர்களா? இதையே நமது பாரதி –‘தமிழருக்கு’ கட்டுரையில், ‘தமிழா பயப்படாதே! ஊர்தோறும் தமிழ்ப்பள்ளிக் கூடங்கள் போட்டு ஐரோப்பிய சாஸ்திரங்களை எல்லாம் தமிழில் கற்றுக்கொடுக்க ஏற்பாடு செய்’ என்றதை யார்கேட்டார்கள்? ஆங்கிலப் பள்ளிகளின் ‘கொள்ளை’ ஒருபக்கம் அதிகரிக்கும் போதே அவர்களின் அதிகார அட்டகாசமும் அதிகரிக்க ஆரம்பித்தது. அங்குபடிக்கும் தமிழ்ப்பிள்ளைகள் வகுப்பு நேரம் அல்லாத நேரங்களில்கூட இயல்பாகத் தமிழில் பேச முடியாதபடி அவர்களின் ‘அடிமை மோகம்’ தலைவிரித்தாடியது!
தமிழகப் பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வி நிலையங்கள் யாருடைய பிடியில் இன்றும் இருக்கிறதென்பது ஊரறிந்த ரகசியம் தானே? இல்லாவிட்டால் பத்தாம்வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்புத் தேர்ச்சியில் மாநில அளவில் தொடர்ந்து 26 ஆண்டுகளாக முதலிடத்தில் இருக்கும் விருது நகரைவிடவும் ஈரோட்டிலும் திருச்செங்கோட்டிலும் ராசிபுரத்திலும் நாமக்கல்லிலும் மட்டும் இத்தனை ‘பணக்கார’ மெட்ரிக் பள்ளிகளும், சிபிஎஸ்சி பள்ளிகளும் முளைத்துக் கிளைபரப்பியிருக்குமா? அல்லது ‘டீம்டு யுனிவர்சிடி’கள் தான் இத்தனை இருக்குமா? ஒரு மெட்ரிக் பள்ளியைத் தொடங்கி அடுத்த ஆண்டே ‘ஆசிரியர்பயிற்சிப் பள்ளி’ அடுத்த ஆண்டு ‘ஆசிரியர்கல்லூரி’ அதற்கடுத்த ஆண்டு ‘பொறியியற்கல்லூரி’ தொடரும் ஆண்டுகளில் ஏனைய கல்லூரிகள் இறுதியாக ‘டீம்டு யூனிவர்சிடி’ என வளர்ந்திருக்கும் இவர்களிடம் நாட்டு நலனை உள்ளடக்கிய தாய்மொழிவழிக் கல்வியையோ அல்லது சமச்சீர்க் கல்வியையோ எதிர்பார்க்க முடியுமா? மக்கள் நமது அரசிடம் தானே இதை எதிர்பார்க்க முடியும்?
‘படைப்பாக்கக் கல்விமுறை’ மற்றும் ‘செயல்வழிக் கற்றல் முறை’ நான் பார்த்த வரை குழந்தைகளுக்கான மிகச்சிறந்த கல்விமுறை என்பதில் சந்தேகமில்லை. சமச்சீர்க்கல்வியின் மிகச்சிறந்த முதல் மூன்று வகுப்புகளுக்குப் பாடநூலுக்குப் பதிலாக அட்டைகள் வழி அவர்களே கற்கும் - ஆசிரியர் ஒரு நண்பரைப்போல ‘அருகில் அமர்ந்து’ வழிகாட்டும் - அருமையான கல்விமுறை.. இதுவும் சமச்சீர்க் கல்விமுறையின் ஓர் அங்கம்தான். இதை ஒப்புக்கொள்ளாத ஆசிரியர்களுக்கும் பெற்றோருக்கும் விளக்கி நடைமுறைப்படுத்த வேண்டிய அரசு இதில் முழுமூச்சாக ஈடுபாடு காட்டாதது ஏன்?
சமச்சீர்க் கல்வி அறிமுகப்படுத்தும் முன்னதாகச் செய்ய வேண்டிய பணிகளில் முக்கியமான ‘ஒரே மதிப்பெண் பட்டியல்’ 2009-10ஆம் கல்விஆண்டுமுதல் தரப்பட்டது. அதாவது 1100 மதிப்பெண்ணுக்குத் தேர்வு எழுதிய மெட்ரிக் மாணவர்க்கும். 600 மதிப்பெண்ணுக்குத் தேர்வு எழுதிய அரபி மற்றும் சமஸ்கிருத மாணவர்க்கும், 500மதிப்பெண்ணுக்கே –வகுத்துக் கணக்கிட்டு- ஒரே மாதிரியான மதி;ப்பெண் பட்டியல் வந்தது. இந்த 2011-12ஆம் கல்வி ஆண்டில், தேர்வுகளும் 500 மதிப்பெண்ணுக்கே என மாற்றக்கூடிய சமச்சீர்க் கல்விப் பாடநூல்கள் வந்திருக்க வேண்டும். இனி வரும் ‘சமச்சீர்க் கல்வி ஆலோசனைக் குழு’ இதுபற்றியும் முடிவெடுக்க வேண்டும்.
திரு. முத்துக்குமரன் குழு நூற்றுக்கும் மேற்பட்ட ஆலோசனைகளை முந்திய அரசுக்குத் தந்தது. அதில் ஒரு சில ஆலோசனைகளையே அரசு நடைமுறைப்படுத்தியது. அதில் சொல்லப்படாத நல்லபல கருத்துகளும் உள்ளன. சமச்சீர்க் கல்விப் பாடநூல்கள் மற்றும் தேர்வுகளை நடைமுறைப்படுத்திக் கொண்டே பிறவற்றைத் தொடர்ந்து செய்யவேண்டும். அதில் பொதுப்பள்ளி மிகமுக்கியமானது. பீகாரில் திரு.நிதீஷ்குமார் இதனை -இந்தியாவிலேயே முதன்முறையாக அறிமுகப்படுத்திய மாநிலம்-- எனும் சிறப்போடு நடைமுறைப்படுத்தி வருவதாகச் செய்திகள் சொல்கின்றன.
யுனெஸ்கோ அறிக்கையின்படி, இன்றைய நிலையில் ‘அனைவருக்கும் கல்வி’ எனும் இலக்கை 2015ஆம் ஆண்டில்கூட எட்டமுடியாத 40நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக இருந்துவிடக் கூடாது எனும் முனைப்போடு நமது மத்தியஅரசுடன், கல்வியாளர்களும், சமூகஆர்வலர்களும், சில முயற்சிகளை மேற்கொண்டனர். இந்தியாவில் ஆறிவொளி இயக்கங்களை நடத்திய அனுபவத்தோடு அனைவருக்கும் ஆரம்பக்கல்வி எனும் சில நல்ல திட்டங்களை முன்வைத்து அரசுக்கு உதவிவரும் அறிவியல் இயக்கம் போலும் சமூக இயக்கங்களை உரியவகையில் பயன்படுத்த அரசு தயங்கக் கூடாது.
மதுரைப் பகுதிப் பள்ளிகளில் பன்னிரண்டாம் வகுப்புத் தமிழ்ப் பாடத்தில் தோல்விகள் அதிகம்! ஏனென்று விசாரித்தால் பெரும்பாலான மேல்நிலை வகுப்புகளுக்குத் தமிழாசிரியர்கள் இல்லையாம்! உயர் நிலைப்பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாக உயர்த்தப்படும்போது தமிழாசிரியர் பணியிடங்களை முந்திய அரசு நான்கு ஆண்டுகளாகவே தரவில்லை எனும் குற்றச்சாட்டும் உள்ளது. இதுபோலும் குறைகளைக் களைந்து, ஆசிரியர் மாணவர் விகிதாச்சாரத்தை முன்னேறிய நாடுகள் பலவற்றில் இருப்பது போல 1:20 என இல்லாவிட்டாலும் முத்துக்குமரன் குழுவில் பரிந்துரைத்திருப்பதுபோல 1:30என்றாவது இட்டு, புதிய ஆசிரியர் பணியிடங்களை உருவாக்கித் தரவேண்டும்.
இன்னொரு வகையில் பார்த்தால், சமச்சீர்க் கல்வி என்பது கல்வி தொடர்பானது என்பதை விடவும் அது சமுதாயம் தொடர்பானது என்பதே சரியான பார்வை! இன்றைய வகுப்பறையே நாளைய சமுதாயம்! சமூக சமத்துவம் வந்துவிடக்கூடாது என்பதில் எச்சரிக்கையாக இருப்பவர்கள்தாம் - எல்லாவற்றிலும் தனியார் மயம் வரவேண்டும் என்று ஏங்கிக்கிடப்பவர்கள்தாம் - இடஒதுக்கீடே கூடாது என்பவர்கள்தாம் - தகுதி, திறமை எனும் பெயரில் ஏமாற்றி வருபவர்கள்தாம் சமச்சீர்க் கல்வியையும் கூடாது என்கிறார்கள்! நாம் கல்விமுறை மாற்றம் எனும் பெயரில் இவற்றை வரவேற்க வேண்டும் என்பதற்காகவே சமச்சீர்க் கல்வி வேண்டும் என்போம். உச்சநீதி மன்றத் தீர்ப்பை எதிர்பார்ப்போம். தீர்ப்பு எப்படி இருந்தாலும் நல்ல சமுதாயத்திற்கான நமது பணியில் கல்வியின் வழியான நமது பணி தொடர்ந்து நடக்கும் நடக்கவேண்டும்.
------------------------------ ------------------------------ -----------------------------------------------------
இந்தக் கட்டுரை தமிழக அரசின் சமச்சீர்க்கல்வித் திருத்தச் சட்டத்திற்குச் சென்னை உயர்நீதிமன்றம் தடைவிதித்தவுடன், தமழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதாகக் கிடைத்த செய்தி அறிந்து -கடந்த 13-06-2011 அன்று-- எழுதி நமது வலையில் வெளியிடப்பட்டது.
நம் நண்பர்கள் பலரும் நல்ல ஆலோசனைகளைப் பின்னூட்டமாக இட்டிருந்தார்கள்.மும்பைக் கவிஞர் புதிய மாதவி சொன்ன விமரிசனத்தை நான் ஏற்றுக்கொள்கிறேன். கவிஞர் மு.முருகேஷ் சொன்னதைப் போல மறுநாள் ஜனசக்தி நாளிதழுக்கு அனுப்பி வைத்தேன். கடந்த 24-06-2011 அன்று ஜனசக்தியின் துணையாசிரியரும் கவிஞருமான தோழர் ஜீவபாரதி பேசினார். கட்டுரை நீளமாக இருப்பதால் எடிட்செய்து வெளியிடலாமா என்று கேட்டார். அதன் படி அடுத்த நாள் ஜனசக்தியில் வெளிவந்த கட்டுரை சரியாகவே எடிட் செய்யப் பட்டிருப்பதாக நான் உணர்ந்ததன் அடையாளமாக அப்படியே ஜனசக்தியில் வெளிவந்தவாறே- திருத்தி மீண்டும் நமது வலையில் வெளியிடுகிறேன்.
சரியாக கருத்துகளைச் சொன்ன கவிஞர் புதியமாதவிக்கும் கவிஞர் முருகேஷ_க்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி. வெளியிட்டமைக்கு நன்றி: ஜனசக்தி நாளிதழ் -25-06-2011.
puthiyamaadhavi@hotmail.com
பதிலளிநீக்குதேதி 15 ஜூன், 2011 11:59 am
dear naa.mu sir,
nice article. if u are interested to put in ur blog pls break into three parts.
change the title of this article.
the last quote is marx or mao
i have read somewhere that
Mao said this. ( i know ur ref will be correct, but its my duty to inform)
have a good day,
anbudan,
Pm
Mumbai
Murugesh Mu haiku.mumu@gmail.com
பதிலளிநீக்குதேதி 15 ஜூன், 2011 12:23 pm
அன்புத் தோழருக்கு...
வணக்கம்.
சமச்சீர்க் கல்வி குறித்த
வரலாற்று பதிவுகளுடன் கூடிய
நல்ல கட்டுரை.
இப்போதுள்ள சூழலில்
தினமணி இதைப் போடாது.
தீக்கதிர், ஜனசக்தி நாளிதழ்
ஏதேனும் ஓர் இதழில் வந்தால்
மிக்க விழிப்புணர்வைத் தரும்.
-மு.மு
Karuppiah Ponnaiah pavalarponka@yahoo.com
பதிலளிநீக்குதேதி 15 ஜூன், 2011 8:04 am
தோழமைமிகு நிலவன் அவர்களுக்கு. வணக்கம். ”வாராது வந்த மாமணி”யைத் தோற்கடித்துத் தொலைக்கக் கங்கணம் கட்டிக்கொண்டு அலையும் அரைவேக்காட்டு அரசியலாருக்கு உச்ச நீதி மன்றமும் ஓரவஞ்சனையாக தீர்ப்பில் சொதப்பி இருப்பதைப் பார்க்கும் போது, தமிழகத்தில் சம நீதிக்கு சமாதி கட்டுவதில் கல்வி விற்றுப் பிழைக்கும் கனவான்களின் கயமைத் தலையீடு தெளிவாகத் தெரிகிறது..
இதில் மாறிமாறி வரும் அரசியல் வாதிகளின் சமூகமேம்பாட்டுச் சிந்தனையற்ற சுயநலமும் வறட்டுப் பிடிவாதமும் எந்த அளவுக்கு எதிர்கால மாணவச் சமுதாயத்தை அயல்நாட்டு மோகத்துள் அழுத்தி, சொந்தக்காலில் நிற்க முடியாமல் சார்பு வாழ்க்கைக் குழிக்குள் தள்ளப்படப் போகிறார்கள் என்பதை த் தங்கள் கட்டுரை தெளிவாக விளக்குகிறது. அரசியலாரின் இந்த ஆடு புலி ஆட்டத்தால் வெட்டப் படுபவர்கள் நாளையத் தலைவர்களாய் வர இருக்கும் மாணவர் என்பதை பொதுமக்கள் உணராமையே இத்தகு ஓரவஞ்சனைக்கு உரமாக உள்ளது. “புலியைப் பார்த்துச் சூடு போட்டுக் கொள்ளும் புனை“களாய் இருக்கும் கிராமப்புற மக்கள் இதை உணர வேண்டும். உப்புக்கல்லை வைரமென்று ஒப்புக்கொள்ளும் சாமான்ய மக்களிடம் சமநீதிக்கான சமச்சீர்கல்விபற்றிய விழிப்புணர்வை நம் போன்ற கலைஇலக்கிய வாதிகள் அறிவாயுதம் ஏந்திக் களமிறங்க வேண்டிய தருணம் இது. தானாய் எல்லாம் மாறும் என்பது பழையபொய். தனியுடமைக் கொடுமைகள் தீரத் தொண்டுசெய். வெப்பத்திற்கு உருகும் மெழுகு வர்த்திகளால் தான் ஒளி தர முடியும். வெப்பமுடன் தொண்டு செய்வோம் .சமச்சீர் கல்வி மூலம் சமூகத்தில் சமநீதி நாட்டுவோம்.
பாவலர் பொன்.க. புதுக்கோட்டை.
அருமையான கட்டுரை.. இதை விட மிகவும் சிறப்பாக எடுத்துக்காட்டுகளுடன் சமச்சீர் கல்வியின் தொய்வை எடுத்துச் சொல்ல முடியாது
பதிலளிநீக்கு