‘மறைமலையடிகள் பிள்ளைத்தமிழ்’–காப்புப் பருவம் : தொடர்ச்சி
பாடல் எண்: 4 சங்கப் புலவர்கள், இளங்கோவடிகள், மணிவாசகர்
நாவேந்தி இறையன்கள வியலுரையி னோடுபல
நல்லிலக் கியங்க ளெல்லாம்
நற்றனிச் செந்தமிழில் நல்கியிசை மலைநின்ற
நல்லிசைப் புலவர் கோவும்,
மூவேந்த ரோடு,முந் நகர்பாடிக் கோவலனின்
மூத்தபெருங் காவியத்தை
முன்னுகுடி மகளாய கண்ணகியின் மேற்சொன்ன
மூவிளங் கோவடிகளும்,
வாவேந்து மந்திபுரை வன்னெஞ்ச மும்உருக
வண்டமிழ்ப் பொருளை இப்பார்
வரவேற்க வைத்தபுகழ் வாதவூர் அடிகளும்
வந்துகாத்(து) அருள்புரிகவே!
சாவேந்து நிலையிலருங் காவேந்தி நம்தமிழைக்
காத்தமறை மலையடிகளின்
தேடக் கிடைக்காத தேட்டத் தனைய,தமிழ்
தேரும்அறிவார் நெஞ்சையே!
--------------------------------------------------------------------------
மறைமலையடிகள் பிள்ளைத் தமிழ் - காப்புப் பருவம்: தொடர்ச்சி
பாடல் எண்: 5 சுந்தரனார், நாராயணசாமியார், திருவரங்கனார்
தன்னோடு செந்தமிழும் மண்ணோடு போகாமல்
தன்பின்னும் நின்றெண்ணவே
தண்டமிழி யக்கமதை மண்டிலம தில்தோற்றத்
தந்தையென வந்தடிகளை
மண்ணூடு மொழிகளில் மற்றபோ லழியாது
மன்னுமிள மைத்தமிழென
மார்தட்டி தமிழ்ச்செடியின் தூர்கட்டி வரும் மனோண்
மணியம் சுந்தரம் பிள்ளையும்
முன்னோடி நூல்தந்து, பண்ணோடி யல்கூறி,
மூத்ததமிழ் ஆசிரியனாய்
முகிழ்நாரா யணசாமிப் பிள்ளையெனும் செம்மலும்,
முன்வந்து சேருமுன்னே,
எண்ணூறா யினபோதும் எண்ணாமலே உதவி
இறுதியில் மருகராயும்
ஏய்ந்த திரு வரங்கமாம் வள்ளலும் நாடிவந்(து)
இன்றுகாத் தருள்புரிகவே!
----------------------------------------------------------------------------
மறைமலையடிகள் பிள்ளைத் தமிழ் - காப்புப் பருவம் தொடர்ச்சி
பாடல் எண்: 6 உ.வே.சா., பா.வே.மா., பரிதிமாற்கலைஞர்
எண்ணிலா ஆண்டுகளில் மண்ணோடு புனலுண்ண
எஞ்சியன சிதலுண்ணு முன்,
ஏடுகளைப் பாடுபட்(டு) எடுத்துப் பதிப்பித்த
உ.வே.சா. தாத்தாவுடன்,
உண்ணிலா ஒலியணுவொ(டு) ஒவ்வாத தமிழ்ஒலியில்
உயரய்தம் அயலோட்டுமென்(று)
ஊரார்க்(கு) உரைத்த ஒலியியல் மேதையாம்
பா.வே.மாணிக்க னாரும்,
பண்ணிலாக் கூகையுடன் பாவிசைக்கும் குயிலைப்
பார்த்துமணம் சேர்ப்போரிடை
பைந்தமிழ்த் தேன்சுவையை முந்துறக் கண்டகோ
பரிதிமாற் கலைஞர் தாமும்,
தெண்ணிலா எனமாந்தர்த் தேற்றற் கெழுந்து மடந்
தீர்க்குமறை மலையடிகளின்,
தேடக் கிடைக்காத தேட்டத் தனையதமிழ்த்;
தேன்பெருக அருள்புரிகவே!
-------------------------------------------------------------------------------
பா.வே.மா: ‘தமிழ் நெடுங்கணக்கில் உள்ள முப்பது எழுத்துகளும் ஒலிகளுமே
மக்களுக்கு இயற்கையாகத் தோன்றக் கூடியவை என்றும் முப்பது தமிழ்ஒலிகளைக் கொண்டே உலகின் அனைத்து மொழிகளின் ஒலிகளையும் ஒலிக்கலாம் என்றும் பா.வே.மாணிக்க நாயக்கர் அவர்கள் நுட்பமாக ஆய்வு செய்து விளக்கியுள்ளார்’ என --மறைமலையார் கூறுகிறார் (உரைமணிக்கோவை-பக்:67-‘தனித்தமிழும் கலப்புத் தமிழும்’)
பரிதிமாற்கலைஞர்: ‘வடமொழியின் தாக்குதலிலிருந்து, தமிழைக் காக்கும் பணியில் மறைமலையடிகளுக்கு முன்னோடி பரிதிமாற்கலைஞர். சாதி உணர்வுக்கு ஆட்படாத எவரும் இந்தச் சரித்திர உண்மையை மறைக்கவோ மறுக்கவோ இயலாது’ என்பவர் ம.பொ.சி. (நூல்: ‘தமிழும் கலப்படமும்’-இன்பநிலையம் வெளியீடு – பக்:23)
-----------------------------------------------------------------------------
நண்பர்களே,
பதிலளிநீக்குதமிழ் அன்பர்களே!
சுமார் 35ஆண்டுகளுக்கு முன்னர் - எனது 19ஆம் வயதில்-
எழுதப்பட்ட பாக்கள் இவை.
இவற்றில்
இன்றைய முத்துநிலவனைத் தேடாதீர்கள்…
இதனை எனது வரலாற்று ஆவணமாகக் கருதியே அப்படியே வெளியிடுகிறேன்…
பொறுத்தருள்க…
அன்புடன் நா.மு.
19-06-2011
அன்றைக்குக் கைவந்த கவிதைக் கலையும் கவியில் விளையாடும் சந்த நடையும் என்றைக்கும் இனிக்கும் தோழா.. தோழமையுடன் பாவலர் பொன்.க புதுக்கோட்டை.
பதிலளிநீக்கு