கல்வி 'புகட்டுவது' சரியா?


'ஏடு தூக்கிப் பள்ளியில் இன்று பயிலும் சிறுவரே, நாடு காக்கும் தலைவராய் நாளை திகழப் போகிறார்' என்று பெற்றோரும் சமு தாயமும் பெரிதாய் எதிர்பார்த்திருக்க, அவர் களில் பலர் பாதியிலேயே படிப்பை விட்டுவிட்டு ஓடுவதும், சிலர்வாழ்க்கையைத் தொடங்குவ தற்கு முன்பே தோற்றுவிட்டதாய் நினைத்து, தற்கொலையைத் தேடுவதும் ஏன்?
                சென்னையில் ஒரு பள்ளிமாணவர் தற்கொலை’, ‘புதுவையில் ஒரு மாணவிக்குத் தண்டனை தந்த ஆசிரியர் கைதுபோன்ற செய்திகள் தரும் பாடம் என்ன?
சுவையாக இருக்கவேண்டிய கல்வி, சுமையாகிப் போவது ஏன்? 
'நாளை பள்ளிக்கூடம் விடுமுறை' எனும் செய்திவந்தால், மாணவர்தம் மகிழ்ச்சிக்கூச் சலில் அந்தப் பிரதேசமே கிடுகிடுத்துப்போவது உண்மையா இல்லையா? உண்மைதான் எனில், பள்ளிக் கூடங்களைச் சிறைக்கூடங்களாக மாணவர் கருதும் நிலை ஏன் உருவாகிறது?
சுவைக்கும் கற்கண்டு போல இருக்கவேண்டிய கல்வி, சுமக்கும் கல்போல் மாறக் காரணம், பள்ளிச்சூழலா? பாடத்திட்டமா? ஆசிரியர்களா? இல்லை, அரசாங்கமா? என்று சிந்தித்துப் பார்த்தால், ‘ஏன் பெற்றோர்க்கு இதில் பொறுப்பில்லையா?’என்னும் கேள்வியும் எழுவதைத் தவிர்க்க முடியாது! அவர்களுக்கும் பொறுப்பு உண்டு. அனைவரும் முடிந்தவரை அலட்சியப்படுத்தியதன் விளைவுதான் தற்போதைய கல்வி நிலை!
ஆங்கிலப் பிரபுக்களுக்குத் தேவையா யிருந்தது, தொண்டூழியம் செய்யச் சில'கேள்வி கேட்கத் தெரியாத' கிளிப்பிள்ளைகள்தான்!அதற்கேற்ற பாடத்திட்டம் அவர்களுக்குச் சரி! சிந்தித்து, நாட்டு முன்னேற்றத்தில் பங்கேற்கும் செயல்வீரர்களை உருவாக்குவதற்கேற்ப, பாடத்திட்டம்  மாற வேண்டும்! அண்மையில் அண்ணாபல்கலைக்கழக விழாவொன்றில் பேசிய தமிழக முதல்வர் அவர்கள்,"சுய சிந்தனைக்கும், புதிய கண்டுபிடிப்புக்கும் ஊக்கமளிக்கும் வகையில் பாடத்திட்டத்தையும் கற்பிக்கும் முறைக ளையும் மாற்றியமைக்க வேண்டும்" என்று பேசியிருக்கிறார்கள்! வரவேற்கத் தக்க கல்விக் கருத்து! அதற்கேற்ப செயல்திட்டம் வகுத்து, நடைமுறைப் படுத்தினால், மாணவர்கள் இன்றைய கல்வியைச் சுமையாகக் கருதும் நிலையில் மாற்றம் வருவதோடு, சுவையாகக் கற்கவும் தொடங்குவர். அத்தகைய அறிவார்ந்த குழந்தைகளால்தான் நாளைய சமூகம் நல்ல சமூகமாகும் என்பதில் சந்தேகமென்ன?
நமது அறிவியல் அறிஞரும், குடியரசுத் தலைவருமான மேதகு அப்துல் கலாம் அவர்களின், 'அறிவியல் தொழில்நுட்பம்' பற்றிய கட்டுரையை, பத்தாம்வகுப்புத் தமிழ்ப் பாடத்தில் முதல்பாடமாக வைத்திருப்பது, பயிலும் மாணவர்க்கு மட்டுமல்ல பயிற்றுவிக்கும் ஆசிரியர்க்கும்கூட மகிழ்ச்சி தரும் அனுபவமாகும்.  ஆயினும், மனப்பாடத்தேர்வு முறையும் அதையே கவனப்படுத்தும் மதிப்பீட்டுமுறையும் மாற்றப்படாதவரை பாடநூல் மாறுவதால் மட்டும் எந்தப்பலனும் இராது என்பதே கல்வியாளர் கருத்து.
                பெரும்பாலான தனியார் மெட்ரிக் பள்ளிகளிலும், சிலஅரசுப்பள்ளிகளிலும் கூட 9,11ஆம் வகுப்புகளை நடத்தும் வழக்கமே இல்லை! அந்தமாணவர்க்கு, முறையே10, 12ஆம் வகுப்புப் பாடங்களே இரண்டுவருடங்களும் நடத்தப்படுவது ஊரறிந்த ரகசியமாக உள்ளது! இரண்டு வருடமும் ஒரே புத்தகத்தை உருப்போட்டமாணவர்கள், தொழிற்கல்வி நுழைவுத் தேர்வுகளில் உருப்படாதமதிப்பெண் எடுக்கும் ரகசியமும் இதுதான்! அந்தந்த வயதிற்கும், உளவியல்- சொல்லாற்றல்-பொது கவனிப்புத் தன்மைக்கும் ஏற்றவாறு பாடங்கள் தயாரிக்கப்படுவது உண்மை யெனில், இந்தப்பள்ளிகள் இந்த வகுப்புகளையே புறக்கணித்துவிட்டு-ஒரே தாண்டாகத் தாண்டி-அடுத்த வகுப்புக்கு மாணவர்களைக் கடத்திகொண்டு போவது எப்படி அனுமதிக்கப் படுகிறது?
இப்படியான பள்ளிகளில், மாணவர்கள் மனப்பாட எந்திரமாக மாற்றப்படுவதன்றி வேறுவழி யென்ன? பாடமும் புரியாமல்,மனப்பாடமும் செய்ய முடியாமல் மாணவர்கள் படும் அவதியும், 'முடியாத' மாணவர்கள் கடுமையான தண்டனைக்கு ஆளாவதும் பள்ளிக் கூடத்தையே வெறுப்பதும், வாழ்க்கையே வெறுத்துப்போவதுமான நிலைமை தொடர்கதையாகிறது! எப்படியாவது மதிப்பெண் வாங்கவைக்கும் எந்திரம்தானா ஆசிரியர்கள்?
9மற்றும் 11 ஆம் வகுப்பு பாடங்களை நடத்தாத பள்ளிகளை, பள்ளிக் கல்வித்துறை கண்டறிந்து, அந்தப்பள்ளிகள் பாடப்புத்தகங்களை முழுவதும் நடத்தி, ஆண்டுத் தேர்வுக்குப் பிறகே அடுத்த வகுப்புப் பாடங்களைத் தொடங்க வேண்டும் என்பதை அறிவுறுத்த வேண்டும்.
தேர்வு முறையில் நிச்சயமாகச் சில மாற்றங்களைக் கொண்டுவரலாம். நூறுவகை வினாத்தாள்களைத் தயாரித்து வைத்துக்கொண்டு, ஒரேவகுப்பு மாணவர் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகை வினாத்தாள் வீதம் கொடுப்பது எனும் 'வினாவங்கி'-முறையில் தேர்வை நடத்தினால், 'பிட்' அடிப்பது, 'காப்பி' அடிப்பது, 'பின்தொடர்வது' (paper chasing) போன்ற தேர்வு முறைகேடுகளைக் களையமுடியும். அதோடு, திருத்தப்பட்ட தாள்கள் அனைத்தையுமே மாணவர்க்குக் கொடுத்துவிடுவது எனில், முறைகேடுகள் முற்றிலும் ஒழிந்துபோகும். ஆசிரியர் 'மூடு'க்கு ஏற்ப மதிப்பெண் வழங்கவும் இயலாது. மாணவர்- பெற்றோர்  மனஅமைதியும் குலையாது. ஆண்டுமுழுவதும் இதேமுறை கடை பிடிக்கப் படுமானால்,ஆண்டுத்தேர்வு பற்றிய அச்சமும் எழாது.
மருத்துவம், பொறியியல், போன்ற தொழிற்கல்வி வகுப்புகளுக்கான சேர்க்கைகளை முதலில் துவங்கிவிடத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டால், தற்போது தேவையில்லாமல் 'தொழிற் கல்வி' இடம் கிடைக்குமோ இல்லையோ எதற்கும் கலைக்கல்லூரியிலும் ஓர்இடம் பிடித்துவைப்போம்' எனும் வீண் செலவும் தவிர்க்கப்படும். கலைக் கல்லூரிகளில் அனாவசியமாக நடந்துவரும் மாணவர் 'பாட மாறுதல்-இடமாறுதல் பிரச்சினை' சீராகும்.மாணவர்க்குக் காலமும், பெற்றோர்க்குக் காசும் மிஞ்சும்!
ஆரம்ப வகுப்புகளிலிருந்தே சுமாராக எழுதத்துவங்கும் மாணவர் சுவடிகளில், அவ்வப்போது 'நன்று', Good! என்று, எழுதுவதும், குறிப்பாக அவர்கள் எழுதும்போது அருகில்செசூழ், மற்ற மாணவர்கள் நடுவில் வைத்துப் பாராட்டுவதும் நல்ல பலனைத் தரும். குறிப்பாகச் சிறுவர்களைத் தொட்டு ஆதரவாகப்பேசினால், தவறு செய்த மாணவர் நெகிழ்ந்துவிடுவது உறுதி. 'கடிதோச்சி மெல்லஎறிக' என்பதே சிறந்தவழி என்பதை ஆசிரியர்களும் புரிந்துகொள்ள வேண்டும்!
கல்வி புகட்டப்படுவதல்ல! பூக்கவைப்பது! 'கல்வி' எனும் சொல்லே, 'உள்ளிருக்கும் திறனை வெளியே கொண்டுவருவதுஎனும் ஆழ்ந்த இனிய பொருளைக் கொண்டதுதானே? மாட்டுக்கு மருந்து புகட்டுவதும், மாணவர்க்குக் கல்வி புகட்டுவதும் ஒன்றல்லவே?
              கல்விநிறுவனங்களில் ஒழுக்கத்தையும், கட்டுப்பாடுகளையும் வளர்க்க உண்மையிலேயே நினைத்தால், பள்ளி-கல்லூரிகளில் நடப்பதாகக் காட்டும் ஆபாசக் கூத்துகளை சின்ன-பெரிய திரைகளில் மட்டும் அனுமதிப்பது எப்படி?
கல்வி நிறுவனங்களைக் காட்டிலும் வலிமையாக மாணவர்களைப் பாதிக்கவல்ல திரை ஊடகங்களை அரசுகளே கட்டுப்படுத்த முடியாதபோது, கல்வி நிறுவங்கள் மட்டும் என்ன அந்தரத்தில் நின்று மந்திரம்போட்டா மாணவர்களைக் கட்டுப்படுத்த முடியும்?
பாட நோட்டுகளில் கூட திரைப்பட நடிகர்-நடிகைகளை அட்டையில் போட்டுப் பிஞ்சுகளை நஞ்சாக்கியும் காசுபண்ணும் நிறுவனங்களை அரசாங்கமல்லவா தடைசெய்ய வேண்டும்?
பகலில் பெரும்பாலான நேரம் பள்ளியில்தான் மாணவர்கள் இருக்கிறார்கள் என்பது உண்மைதான் என்றாலும், வீட்டு-நாட்டுச்சூழலின் பாதிப்பை முற்றிலுமாக மாற்றிவிடும் நிலைமையிலா நமது பள்ளிகளும் கல்லூரிகளும் இருக்கின்றன?
வாழ்க்கையைக் கொடுக்கும் பாடங்களை மருந்துபோலத் தருகிறோம்! கல்வி சுமையாகிறது! வாழ்க்கையைக் கெடுக்கும் படங்களை விருந்துபோலத் தருகிறோம்! வாழ்க்கையே சுமையாகிறது!
                திரைப்படங்களை மட்டுமல்ல, தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் விளம்பரங்களைக் கூட மாணவர்களும் பெற்றோரும் பார்க்கப் பயிற்சி தேவை. அதோடு, பத்திரிகை இதழ்களில் வரக்கூடிய அறிவு சார்ந்த செய்திகளையும் பாடத்திட்டத்தில் சேர்த்துப் பயில்வது தொடர்பாகவும் யோசிக்கவேண்டும்.
அறிவியல் கண்டுபிடிப்பின் உச்சமாக உள்ள கணினியை இன்றைய மாணவர்கள் சரியாகப் பயன்படுத்த வழிகாட்டுவது மிகவும் அவசியம். கணினி வலைதளங்களில் ஏராளமான அறிவுத் தகவல்கள் கொட்டிக்கிடந்தாலும், இளமைக்கே உரிய பலவீனத்தைப் பயன்படுத்தி, ஆபாசங்களையே காட்டிக் காசுபறிக்கும் கணினிமையங்களைக் கட்டுப்படுத்த சட்டமேதும் இல்லை! சரி, புதிய சட்டங்களை உருவாக்குவதுபற்றியோ, தடைசெய்யப்பட்ட வலைதளங்கள் ('A' Websites) மீண்டும் 'தமிழ்' பெயருடனே வருவதைத் தடுக்கவோ எந்த நடவடிக்கையும் எடுத்திருப்பதாகத் தெரியவில்லையே?
மாணவப் பருவத்துக்கே உரிய புதியன காணும்ஆர்வத்தைப் புரிந்து, கல்வி உண்மையிலேயே புதுமையானதாக இருந்து, கற்றல் அனுபவமும் இனிமையானதாக இருந்தால், எந்த மாணவரும் நன்கு கற்றுக்கொள்ள முடியும். வாழ்க்கையின் அர்த்தத்தை உணர்த்த மொழிப்பாடங்கள் உதவுகின்றன, வாழ்க்கைச் சிக்கல்களைப் புரிந்துகொள்ளும் வாழ்வியல் அறிவைத்தர அறிவியல், கணித, சமூகப் பாடங்கள்உதவுகின்றன. இதை மாணவர் உணருமாறு அந்தந்த வகுப்புப் பாடங்கள் அந்தந்த வயதுக்கேற்ப இருப்பதும், பயிற்றுமுறை இனிமையானதாக இருப்பதும் மிக அவசியம்.
இந்தப் படிப்புத்தான் எனக்கு கவுரவமான வாழ்க்கையைத் தரும்என்று மாணவரை நம்ப வைப்பதும் முக்கியம். இதில்தான் சமூகச்சிக்கல் குறுக்கிடுகிறது. படிப்பு குறைந்தாலும் பணம் இருந்தால் உயர்கல்வி உண்டு எனும் உணர்வில்தான் பணக்கார மாணவர்கள் தாமும் படிக்காமல், படிக்க நினைப்பவரையும் விடாமல் ஜாலியாக இருக்குமிடமாகப் பள்ளியை நினைப்பது, படிக்க நினைக்கும் மாணவரையும் விடாமல் பள்ளிச்சூழல் கெடக் காரணமாகிவிடுகிறது.
கல்வியை, அடுத்த தலைமுறையை உருவாக்கும் கருவியாக நினைக்கும் நல்ல கல்வி நிறுவனமும், உண்மையும் திறமையும் மிகுந்த ஆசிரியர்களின் உழைப்பும் மதிக்கப்பட வேண்டும். நல்லாசிரியர் விருதுகளும், ஆசிரியர்தின விழாக்களும் எந்திர கதியாக இருப்பதைக் கைவிட்டு, உணர்வு பூர்வமாக ஆக்கபூர்வமாக நிகழ அலுவலர்கள் கூடுதல் உணர்வுடன் பணியாற்றுவது நல்லபலனைத்தரும். 

-- நா. முத்து நிலவன்-2003

பாழைய கல்வி முறை பழையபடி வேண்டாங்க - (முதல்வர் அம்மாவுக்கு ஒரு கவிதைக் கடிதம்)

பள்ளிக்கூடம் திறக்கிறத தள்ளிப்போட வேணாங்க - (முதல்வர் அம்மாவுக்கு ஒரு கவிதைக் கடிதம்) எனும் தலைப்பில் முதலில் எழுதப்பட்ட இந்தக் கவிதையைச் சில தினசரி இதழ்களுக்கு அனுப்பி வைத்தேன். வெளியிட  வில்லை. பள்ளிக்கூடங்கள் ஜூன் 15-ஆம்தேதி திறப்பதும் உறுதியாகிவிட்டது... அதற்காக நாம் சும்மா இருக்க முடியுமா? பாடலின் உள்ளேயிருந்து வேறு இரண்டு வரிகளை எடுத்துத் தலைப்பாகப் போட்டு (பாழைய கல்வி முறை பழையபடி வேண்டாங்க) ஜனசக்தி நாளிதழுக்கு அனுப்பினேன். அவர்கள் இரண்டே நாளில் -ஜூன் 5 ஆம் தேதி அழகான வடிவமைப்புடன் வெளியிட்டுவிட்டார்கள்... அந்த அளவில் சமச்சீர்க்கல்விக்கான எனது பங்களிப்பும் தொடர்கிறது...
 - நன்றி : 'ஜன சக்தி' நாளிதழ் ஜூன் 5-2011. 

மூணாம் முறையாக
முடிசூடி வந்திருக்கும்
அம்மா முதல்வருக்கு
அன்பான வணக்கமுங்க.

அரசியலில் நேர்எதிராய்
அணிமாற்றம் சகஜமுங்க
பதவியில் இருப்பவர்க்கும்
பணிமாற்றம் சகஜமுங்க

எல்லாமே மாறிவரும்
என்பதுதான் நிஜமுங்க
நல்லதைத் தொடருங்க
அல்லதை விட்டுருங்க

கல்வி ஒண்ணுதான்
கடைத்தேறும் வழியின்னு
உலகமே உணர்ந்திருக்கு
நான்சொல்ல வேணாங்க

வேறெங்கும் இல்லாத
விசித்திரமாய்த் தமிழ்நாட்டில்
ஐந்துவகைக் கல்விமுறை
அநியாயம் நடந்துச்சுங்க

‘சமச்சீர்க் கல்விமுறை
சரியான முறை’யின்னு
மக்களில் பெரும்பாலோர்
மனசார நம்புறோம்’ங்க

கல்வி முதலாளிங்க
கொள்ளை அடிச்சதெல்லாம்
குடிமுழுகிப் போச்சுன்னு
குமுறித் தீத்தாங்க

சமச்சீர்க் கல்விமுறை
சமுதாய மாற்றுமுறை
தெரிஞ்சோ தெரியாமலோ
திட்டமிட்டுத் தந்தாங்க!

பலகோடிப் புத்தகங்கள்
பள்ளிக்கூடம் வந்தாச்சுங்க
வேண்டாத பக்கங்கள
விட்டுவிடச் சொல்லிடுங்க

நினைச்சத நினைச்சபடி 
துணிச்சலாய்ச் செய்வீங்க 
பழைய கல்விமுறை
பழையபடி வேணாம்’ங்க!

களைகளைக் களைஞ்சிடுங்க
செடிகளைக் காத்திடுங்க!
பத்தாம்’ப்பு வாத்தியாரின்
பணிவான வேண்டுகோள்’ங்க!
--22-05-2011