ரெண்டு புதுசு! ரெண்டு பழசு! - கவிதைகள் - நா.முத்து நிலவன்

இரண்டு புதுக்கவிதைகள் -

  பேடிக்கல்வி

 காலத்தால் அழியாத
 கவியாக்கும் அவசரத்தில்
 காளியம்மா வந்து
 சூலத்தால் எழுதியதில்-
 நாக்கு துண்டாகி,
 பேச்சும் போச்சு!
----------------------------------------------------------------
    சுதந்திரம்

  சட்டைத் துணி கேட்டு
 சண்டையிட்டோம்,
 ஒட்டுத்துணி கிடைத்தது-
 மூன்று வர்ணத்தில்.
 அதுவும் இப்போது
 நால்வர்ணத்திடையே
 நசுங்கி...
---------------------------------------------------------------------
இரண்டு மரபுக் கவிதைகள் -
                       
காப்பித்தூள் கடைமாற்றி வாங்க, வழியில்
            
காய்கறிக்கா ரன்பார்க்க, கடையை மாற்ற,
 '
சாப்பாடு இல்லை,கேஸ் இல்லை, மதியம்
           
சமாளியுங்கள்' எனமனைவி முகத்தைப் பார்க்க
 '
மோப்பெட்'டில் 'ரிசர்வு'வர, பிள்ளைமுணு முணுக்க,
           '
மூன்றாம்மாதம்' 'கேபிள்' காரன் திட்ட,
 
நாய்ப்பாடு பட்டுவரும் நடுத்தர வர்க்கம்
           
நாளொருபொழு தாகிவரும் நடுத்தெரு வர்க்கம்!


இமயத் தலைமுடி நரைத்தஎன் தாயே
      எத்தனை புகழ்வளர்த் தாயே, -உன்
குமரிக் கால்களில் கொஞ்சும் அலைகளில்
      நெஞ்சினைக் கொள்ளைகொண் டாயே! –முன்
அமைதியும் அழகும் எங்கு தொலைத்தனை
      ஐயகோ இன்றைய நிலவரம் –மனச்
சுமையினை எங்குபோய்ச் சொல்லுவேன் –அடடா
      சூழ்ந்ததே இனமதக் கலவரம்!

புத்தரும் காந்தியும் போலப் பெரும்புகழ்ப்
      புத்திரர்   உனக்கென்ன குறையா? – மத
யுத்தமும் சாதியால் ரத்தக் களரியாய்
      இன்றிங்கு நலிவதும் முறையா? -இவை
இத்தனைக் குள்ளுமோர் சுயநலப் பேய்பிடித்(து)
      ஆடுதல் இனியும் காண்கிலையா?

விடுதலை பெற்றநள் ளிரவிலே மௌனமாய்
      விரதம் இருந்ததேன் காந்தி? –மதப்
படுகொலை தொடர்வதும் பாரதர் கெடுவதும்
      பார்த்துத் தொலைந்ததோ சாந்தி- இனி
அடுதலும் கெடுதலும் அண்ணனே தம்பியை
      அடிப்பதோ இடிப்பதோ தாயே!- ஒரு
முடிவிலையா? உன் மோனம் கலைந்தெறி
      மூர்க்கமாய் விழி! எழு! தாயே!

குறிப்பு-1
1993இல் கவிஞர் மீரா அவர்களின் “அன்னம் பதிப்பகம்” வெளியீடாக வந்த எனது முதல் கவிதைத் தொகுப்பான “புதிய மரபுகள்” நூலில் இடம்பெற்ற கவிதைகள். இந்நூல் அந்த ஆண்டே “தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் -1993ஆம் ஆண்டுக்கான சிறந்தகவிதை நூலுக்கான விருதைப் பெற்றதோடு, 1995முதல் 2010வரை மதுரை காமராசர் பல்கலையின் முதுகலை தமிழ் வகுப்புக்குப் பாடநூலாகவும் இருந்தது.

குறிப்பு-2
முன்பின் தெரியாமலே இந்த நூலைப் பாடநூலாக்கி விட்டு என்னைத் தேடிய முனைவர் இரா.மோகன் ஐயா அவர்களின் பெருந்தன்மை எனக்கு மகிழ்வும் நம்பிக்கையும் ஊட்டியது!

3 கருத்துகள்:

 1. எண்சீர் விருத்தம்
  "'ஆவீன மழை பொழிய இல்லம் வீழ
  அகத்தடியாள் மெய் நோவ.... "' என்னும் பழம்பாடலை நினைவுப் படுத்துகிறது.
  அருமை.

  பதிலளிநீக்கு
 2. மூன்றும் அருமை ஐயா..உங்கள் பதிவுகளை முதலில் இருந்து சற்றுக் கிளறலாம் என்று முடிவு.. பொக்கிஷம் கிடைக்கும் என்று..:) சரிதானே ஐயா?

  பதிலளிநீக்கு
 3. நன்றி சகோதரி, நானே -மனச்சோர்வு வரும்நேரங்களில் இப்படிக் கிளறுவது என் “பழைய பனைஓலை“களைத்தான்...

  பதிலளிநீக்கு