கல்வியில் ஜனநாயகம் தேவை! – நா.முத்து நிலவன்



                  தேர்வு எழுதிய மாணவர்க்கு திருத்தப்பட்ட விடைத்தாளின் நகல் தரப்படும் என முடிவெடுத்த மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலை ஆசிரியர்களும் ஆட்சிக்குழு உறுப்பினர்களும் துணைவேந்தரும் பாராட்டுக்கு உரியவர்கள் கல்வியில்-நாட்டு முன்னேற்றத்தில்-ஜனநாயகத்தில் அக்கறையுள்ள யாரும் பாராட்ட வேண்டிய முடிவு இது.
உயிரைக் கொடுத்துப் படிக்கும் மாணவர்க்கு தமது விடைத்தாள்கள் எவ்வாறு திருத்தப்பட்டுள்ளன என அறிந்து கொள்ள முழு உரிமையும் உண்டு.
மதிப்பெண்ணிலேயே தமது குழந்தைகளின் எதிர்காலம் உள்ளதாக நம்பும் பெற்றோர்க்கு இதன்மூலம் மன உளைச்சல் குறையும் மிகச்சிறந்த அத்திட்டத்தைச் செயல்படுத்துவதில் மிகுந்த நிதானம் அவசியம். திருத்தும் ஆசிரியர்க்கும் அரசுக்கும் பொறுப்பு கூடுதலாகும். இந்த  இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் குற்றஞ்சுமத்தாத அளவில் ‘பழிவாங்கப்படுவார்கள்’ எனும் நியாயமான சந்தேகத்தைத் தனது செயல்பாடுகளின் மூலம் அரசு போக்க முன்வர வேண்டும்.
மூன்று மணி நேரத்தில் எழுப்படும் தேர்வுத்தாளை திருத்த குறைந்தது பதினைந்து நிமிஷமாவது தேவைப்படும். திருத்தும் ஆசிரியர் அதே பாடத்தைப் பல ஆண்டுகள் நடத்திய அனுபவசாலியாக இருப்பின் 3 மணி நேரத்தில் 12 தாள் திருத்தினால் மதிப்பீடு முறையாக இருக்கும். ஆனால் கசப்பான உண்மை என்னவெனில் திருத்துவோர் அவ்வளவு நேரம் எடுத்துப் பெரும்பாலும் திருத்துவதில்லை ‘ஆள் போதவில்லை’ என்று 50 தாள்களை ஒரே நாளில் தருவதை அரசும் நிறுத்துவதில்லை!  இதனால் இருவகைப் பாதிப்புகள் உண்டு. அரசு இதில் சிக்கனம் பார்ப்பதோ ஆசிரியர்கள் மெத்தனம் காட்டுவதோ சரியல்ல என்பதை உணர வேண்டும்.
மாணவர்கள் மற்றும் எதிர்காலத் தமிழகத்தின் நலன் கருதி திட்டமிட்டு மதிப்பீடு நடத்தப்படுமானால் தமிழகம்  இந்தியாவுக்கே வழிகாட்டியாக முடியும். மகத்தான வழியில் கல்வித்துறை உயர் அதிகாரிகளும் கல்வி அமைச்சரும். தமிழக முதல்வரும் மனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும். இதனால் மாணவர்-பெற்றோர் கவலை தீரவும் ஆசிரியர் பெருமை உயரவும் தமிழகமே தலைநிமிரவும் வழி பிறக்கும்.

வெளயிட்டமைக்கு நன்றி : ‘தினமணி’ நாளிதழ் நாள்: 07.06.1997
---------------------------------------------------------------
மதிப்பீட்டு முறை பற்றியே மறுமதிப்பிடு தேவை! – நா.முத்து நிலவன்
கல்விமுறை கெடுத்தது பாதி தேர்வுமுறை கெடுத்தது மீதி! மெக்காலே கல்வி முறையால் சிந்தனையை மழுங்கடித்து ‘கிளிப்பிள்ளை கிளார்க்கு’களையே இதுவரை உருவாக்கி வந்தோம். அதிலும் ‘தப்பித்து’ வந்த சிலரை மதிப்பீட்டு முறையால் மடக்கியிருக்கிறோம்! இரண்டு தலைமுறைகளின் இழப்புக்கு எப்படி ஈடுசெய்யப்போகிறோம்?
துணைவேந்தர் ப.க.பொன்னுசாமி கட்டுரைகளைப் படித்தபிறகு ‘மைய மதிப்பீட்டு முறையா? இல்ல மதிப்பீட்டு முறையா? என்பது பற்றி இனிமேலும் விவாதிக்க வேண்டியதில்லை என்றே தோன்றுகிறது. மதிப்பீட்டு முறையின் சமூக விளைவுகளைச் சரியாக மதிப்பிட்டு தேவையான மாற்றங்களைச் செய்வதே உடனடித் தேவையாகும்.
அதோடு இந்த மதிப்பீட்டுக் குறைபாடுகள் கல்லூரிக் கல்விக்கு மட்டுமல்ல நூறு சதவிதம் பள்ளிக்கல்வி புண் புரையோடி விட்டது இனியும் புனுகு ப+சுவதில் அர்த்தமில்லை. (10,12-ஆம் வகுப்புக்கும் பொருந்தக் கூடியதே! கடந்த  கல்வி ஆண்டில் 12ஆம் வகுப்பு மாணவர்கள் பல ஆயிரம் பேர் மறுகூட்டல் கேட்டார்களே! இங்கு மறுமதிப்பீட்டுக்கும் வழியில் லையாமே! இதை என்ன செய்வது?) மறுமதிப்பீடு மறுகூட்டல் கேட்டு அலையும் மாணவர்களின் எண்ணிக்கை நூறு சதவீதத்தை எட்டுவதற்குள் மதிப்பீட்டு முறையை மாற்றி அமைக்க வேண்டும். அதுவும் கூட முதற்கட்டம்தான். இறுதிக்கட்டம் செல்லரித்துப்போன நமது கல்வி முறையையே மாற்றியமைப்பதில் முடிய வேண்டும்.
கல்வி முறையில் கை வைக்காமல் சமூக மாற்றம் சாத்தியமேயில்லை. இந்த வகையில் ப+னைக்கு மணி கட்டும் வேலையைச் செய்திருக்கும் துணைவேந்தரை மனமாரப் பாராட்டுகிறேன்.
கல்வியாளர்களே கைகோத்து வாருங்கள. மூன்றாவது கண்ணைத் திறக்கும் அவசரத்தில் இருக்கும் கண்களையே குருடாக்கும் கல்வி முறை தேர்வு மதிப்பீட்டு முறைகளை மறுமதிப்பீடு செய்வோம்! புதிய தோர் உலகம் செய்வோம்!

வெளியிட்டமைக்கு நன்றி: ‘தினமணி’ நாளிதழ் 22.07.1997
--------------------------------------------------------------------------

ஆசிரியர் உமாவைக் கொலை செய்தது யார்?


chennai_teacher_uma
அருச்சுனன் விட்ட அம்புமழையில் கர்ணன் குற்றுயிரும் குலைஉயிரும் ஆகிவிட்டான். ஆனால்,சாகவில்லை. அவனால், சாக முடியவில்லை. தரும தேவதை அவன் சாவைத் தடுத்து அருச்சுனன் விடும் அம்புகளை யெல்லாம் மலர்மாலையாக மாற்றி அவன் கழுத்தில் விழுமாறு செய்கிறாள் 

 அருச்சுனன் திகைக்கிறான்! கண்ணனோ சிரிக்கிறான். அப்போது அங்கே ஓடோடி வந்த தன் தாய் குந்திதேவி, "அய்யோ மகனே!என்று கர்ணனைப் பார்த்துக் கதறித் துடிப்பதைப் பார்த்து, மேலும் அருச்சுனன் குழம்ப, கண்ணன், கர்ணன்தான் குந்திதேவியின் மூத்தமகன் எனும் கதையைச் சொல்ல, சிறிது நேரம் கழித்துக் கர்ணன் உயிர்விடுகிறான். 
 இப்போது அருச்சுனனும் கதறியவாறு கர்ணன் அருகில் ஓடிச் சென்று "அய்யோ அண்ணா! நானே உன்னைக் கொன்று விட்டேனே! நானே உன்னைக் கொன்று விட்டேனே" என்று சொல்லி அழுதபோது, கண்ணன் அவனைக் கிண்டலாகப் பார்த்துச் சொன்னானாம்
 "நான் கொன்றேன் நான் கொன்றேன் என்கிறாயே! அருச்சுனா! நீ மட்டுமா கர்ணனைக் கொன்றாய்? அவனது குருநாதர் "சரியான நேரத்தில் உன் அம்புக்குறி தவறட்டும்" என்று கொடுத்த சாபம்தான் முதலில் அவனைக் கொன்றது. பின்னர், மாறு வேடத்தில் சென்ற இந்திரன், கவச குண்டலங்களைத் தானம்கேட்டு வாங்கிக்கொண்ட போது கர்ணன் மீண்டும் கொல்லப்பட்டு விட்டான். பிறகு உங்களின் தாய் குந்தி, "போரின்போது இரண்டாவது முறையாக நாகபாணத்தை அருச்சுனன் மீது ஏவுவதில்லை" எனும் வரத்தைக் கேட்டு அவனை இறுதியாகவும் கொன்று முடித்தாள். பிறகுதான் இந்த பாரதப் போரே தொடங்கியது. போதாத குறைக்கு இதோ நானும் இப்போது அவனது புண்ணியத்தையெல்லாம் தானமாகக் கேட்டு வாங்கிய பிறகே அவனது உயிரைத் தரும தேவதை விட்டுத்தந்தாள். இப்படி ஏற்கெனவே மாதா-பிதா-குரு-தெய்வம் ஆகிய நான்குபேருமே அவனைக் கொன்று முடித்த பிறகுதான் உன் அம்பு அவனைத் துளைத்தது. என்னவோ நீயே உன் வீரத்தால் அவனைக் கொன்றுவிட்டதாக நினைத்துக் கொண்டு, "நான் கொன்றேன் நான் கொன்றேன்" என்று பிதற்றுகிறாய்! செத்தபாம்பை அடித்த உன்னாலா அவன் கொல்லப்பட்டான்?" என்று சொன்னதாக ஒரு பாரதக் கதை உண்டு.

இப்போது சொல்லுங்கள்
 ஆசிரியர் உமாமகேஸ்வரியை வகுப்பறையிலேயே குத்திக் கொன்றது யார்?
 இர்பான் வெறும் அருச்சுனன் மாதிரி செத்த பாம்பை அடித்தவன் தான்!
  அந்தச் சகோதரியின் உடலில் கத்திக் குத்து மீண்டும் மீண்டும் விழ விழக் கத்திக் கதறிய கதறலில், பொங்கிப் பெருகிய ரத்தத்துளியின் கறைபட்டு யார் யாரெல்லாம் குற்றவாளி களாகி நிற்கிறார்கள் தெரியுமா? நாம் எல்லாரும்தான்! இது, உண்மை வெறும் இகழ்ச்சி இல்லை!

 இந்தக் கட்டுரையை எழுதுகிற நானும், இதை வெளியிடும் இதழாசிரியரும், படிக்கும் நீங்களும் என இந்தச் சமூகத்தில் வாழும் நாமெல்லாருமே ஆளுக்கு ஒரு வகையில் குற்றவாளிகள் தாம்"யு டூ புரூட்டஸ்?"  என ஒருவரை ஒருவர் கேட்டுக்கொள்ளத்தான வேண்டும். ஏனெனில் -
அனைத்து ஆசிரியர்களும் அரசு ஊழியர்களும், அதிர்ந்து கூடப் பேசத் தெரியாத புதுக்கோட்டை ஆசிரியர் சாரதாவை முதல் களப்பலியாக்கி, தமிழகம் முழுவதும் 36 ஆசிரியர்களை இழந்து பல லட்சம் ஆசிரியர்- அரசு ஊழியர் அதிகபட்சமாக 56 நாள் வரை சிறையிருந்து, --1986இல் "ஜேக்டீஎன்றும் 1989இல் "ஜேக்சாட்டோ" என்றும்-- கத்திக் கதறிப் பெற்றதுதான் இன்று கைநிறைய வாங்கும் மத்திய அரசுக்கு நிகரான சம்பளம் என்று, இன்று வேலைக்கு வரும் எத்தனை பேருக்குச் சொல்லியிருக்கின்றன நம்ஆசிரியர்-அரசுஊழியர் இயக்கங்கள்
 வரலாற்றை மறந்தவர் அதில் திரும்பவும் வாழ சபிக்கப்படுவர் என்பது உண்மைதானே? நாம் சபிக்கப்பட்டு விட்டோம்! இப்போது சம்பளம் கிடைக்கிறது! மரியாதை போய்விட்டது!

 போராடக் கற்றுத்தந்த சங்கம், பாடம் நடத்தவும் பள்ளிக்கு வரும் பிள்ளைகளை நம் சொந்தப் பிள்ளைகளாகப் பார்த்துக் கொள்ளவும், அலுவலகத்திற்கு வரும் பாமரனை மரியாதையாக நடத்தி அவனது நியாயமான கோரிக்கைகளைப் பரிவோடு பரிசீலிக்கவும் கற்றுத் தந்திருந்தால் இன்றைய ஆசிரியர்கள் மதிப்பிழந்து, வெண்ணிறஆடை மூர்த்தி, லூசுமோகன்களாக நமது ஊடகங்களால் கிண்டலாகவும் கேலியாகவும் சித்திரிக்கப்படும் நிலைக்கு ஆளாகி யிருப்பார்களா என்ன? "பணிப் பண்பு" (work culture) பற்றிய கவலை எந்த ஆசிரியர்-அரசு ஊழியர் அமைப்புகளுக்கு இருக்கிறது

 பதவி உயர்வின்போதும், புதிய புத்தகம் வரும்போதும், பணியிடைப் பயிற்சியை அரசு மேற்கொள்வதை விட, அந்தந்தச் சங்கங்களே மேற்கொள்வது தானே சரி? இதை ஏன் எந்த ஆசிரியர் சங்கமும் செய்வதில்லை? புதிய புதிய விஷயங்களில் அது பாடப்பகுதியாக இருந்தாலும் சரி, மாணவர் உளவியல் சார்ந்ததாக இருந்தாலும் சரி- ஆசிரியர் களுக்குச் சந்தேகம் வந்தால் கேட்டு, பொறுப்பான பதில்பெறும் இடம் என்று ஏதாவது உண்டா? உமாவுக்கு இரங்கல் ஊர்வலம் நடத்தினால் மட்டும் போதாது, இனி உமாக்கள் கொல்லப்படாமல் தவிர்க்கவும் யோசிக்க வேண்டும்.

 அதிகாரிகளைக் கால்கை பிடித்தால் போதும், பாடங்களைப் பள்ளிக்கூடத்தில் நடத்துவதை விட ஏழை மாணவர்களானாலும் தன் வீட்டில் நடத்தும் தனிப்பயிற்சிக்கு எப்படியாவது இழுத்து மாணவனின் தன்மானத்தை சிதைத்து, எதையும் செய்து கொள்ளலாம் எனும் துணிச்சலை வளர்த்ததும் சங்கங்கள் தானே?

 கடமை பற்றிப் பாடம் நடத்தும் ஆசிரியர், தன் கண்ணெதிரில் நடந்து கொள்வதைப் பார்த்துத் தானே மாணவர் கற்றுக் கொள்வர்? மனச்சாட்சிக்கு மட்டுமே பயந்து பணியாற்ற வேண்டிய ஆசிரியர்களுக்குள் சாதி-மத-குழுபேதம், பணிமூப்பு-பதவிபேதம், பள்ளிக்கு வந்தும் சொந்தவேலை பார்ப்பது, வகுப்பு நேரத்தில் கதைபேசுவது, பெரிய இடத்துப் பழக்கம் தரும் துணிவில் பொறுப்பின்றி நடந்துகொள்வது, புதிதாக வந்திருக்கும் கல்வி முறை தொடர்பான செய்திகளைப் பேசும் "பிழைக்கத் தெரியாத" ஆசிரியரை அணிசேர்ந்து கொண்டு கிண்டல்செய்வது இவ்வளவையும் மாணவர் முன்பே அரங்கேற்றுவது என எத்தனை எத்தனை அசிங்கம்! இவற்றைக் களைவதில் ஆசிரியர் அமைப்புகளுக்குப் பொறுப்பில்லையா?

 இவ்வளவு ஏன், ஏதாவது ஒரு செய்தித் தாளையாவது காசு கொடுத்து வாங்கிப் படிக்கும் ஆசிரியர் எத்தனை பேர்? என்று புள்ளிவிவரம் எடுத்தால் கதை கந்தல்தான்! இதில் நல்ல மனசோடும், ஈடுபாட்டோடும் தன் கைக்காசு போட்டுப் பணியாற்றும் ஆசிரியர்களை நீண்ட நாளாகவே அரசுகள் கண்டு கொள்வதில்லை. ஆசிரியர் அமைப்புகளோ தவறு செய்பவரைக் காப்பாற்ற மட்டுமே இருப்பதாகத் தோன்றுகிறது!

 நூறு விழுக்காடு தேர்ச்சிக்காகப் பல தனியார் பள்ளிகளும் சில அரசுப்பள்ளிகளும் கூட எடுக்கும் நடவடிக்கைகளை மனச்சாட்சியுள்ள ஆசிரியர் எவரேனும் தட்டிக் கேட்டால் கல்வித்துறை பேரைச் சொல்லியே அவர்களை ஓரங்கட்டி விட்டு மாணவர்களைப் படுத்தும்பாடு கொஞ்சமா நஞ்சமா? காலை 4மணிக்கே எழுப்பி விட்டு வீட்டுப்பாடம், பிறகு தனிப்பயிற்சிக்கு ஓடி, பிறகு வந்து பள்ளிக்கூடம் ஓடி, பிறகு மாலை பள்ளியிலிருந்து வந்ததும் எதையோ வாயில் கொட்டிக் கொண்டே உடைமாற்றிக் கொண்டு, மீண்டும் தனிப் பயிற்சிக்கு ஓடி, இரவு 8மணிக்கு மேல் வீட்டுக்கு வந்து மீண்டும் மாடுபோல அன்று நடந்த, முந்திய நாள்களில் படிக்க விட்டுப்போன பகுதிகளை அசைபோட்டு- இரவு படுக்க 11மணி யாகிவிடும் குழந்தைக்கு வயது 15! "ஓடி விளையாடு பாப்பா" என்ற பாரதி பாட்டைப் படித்து ஒப்பிக்காமல் விளையாடப்போன குழந்தைக்கு கடுமையான தண்டனை தரும் நமது பள்ளிக் கூடங்களால் மனஅழுத்தம் வராதா என்ன? அந்த அழுத்தம் கட்டாயப் படுத்தி சிரித்துக்கூடப் பேசாத ஆசிரியரால்- அதிகமாகாதா என்ன?

 இதில் பெற்றோர் வந்து பார்க்கக் கூட அனுமதி கேட்டு அரை மணிநேரம் நின்றபின் அனுமதி மறுக்கப்படும் "ஸ்ட்ரிக்ட்"ஆன பள்ளிக்கூடம்தான் சிறப்பான பள்ளிக்கூடம் என்று பெற்றோரே பீற்றிக்கொள்ளும் மனநிலையை எங்குபோய்ச் சொல்வது? கவிஞர் நந்தலாலா சொல்வதுபோல- "மாணவர்களிடம் வெளியே விட்டுவிட்டு வரச்சொல்லும் தின்பண்டத்தையும் தண்ணீர் பாட்டிலையும் எப்போது உள்ளே மாணவரோடு வைத்துக்கொள்ளச் சொல்லிவிட்டு, உள்ளே அவர்கள் சுமக்கும் புத்தகக் கட்டைத் தூக்கி வெளியே வீசுகிறார்களோ அப்போது தான் மாணவர்கள் சுதந்திரமாய் உணர்வார்கள்" என்பது நூறு விழுக்காடு உண்மை அல்லவா?

 நான் ஒருமுறை மாணவரிடம் பேசும்போது, "புத்தகம் நோட்டே இல்லாத, வீட்டுப் பாடம் இல்லாத, பரிட்சை இல்லாத பள்ளி வகுப்பறை எப்படி இருக்கும்?" என்று கேட்க, அவர்கள் ஓவென்ற சத்தத்துடன் "ரொம்ப நல்லா இருக்கும் சார், ஆசிரியரும் இல்லை என்றால் ரொம்ப ரொம்ப நல்லா இருக்கும் சார்என்றது இன்னும் காதில் ஒலிக்கிறது! பள்ளி விடுமுறை என்றால் மாணவர் எழுப்பும் மகிழ்ச்சிக் கூச்சல் கூட ஒருவகையில் கல்விமுறை மீதான மாணவர் விமர்சனம்தானே?

 பாடத்திட்டத்தில் மதிப்பெண்ணை மட்டுமே விரட்டும் போட்டியில், மாணவரின் மற்ற பல திறமைகள் கண்டுகொள்ளப் படாததில் விரக்தி அடைவது இயல்பு அல்லவா? "மாணவர் முன்னேற்ற அறிக்கை" (Progress Card) இல் அவனது பாடும் திறமை, பேசும் திறமை, ஓவியத் திறமை, விளையாட்டு, சேர்ந்து செயலாற்றுவது, முக்கியமாக அடுத்தவருடன் அன்பாக இருப்பது என, இதர பல பண்பு-திறமைகளையும் பாராட்டி அவற்றுக்கும் மதிப்புப் போட்டு, பெற்றோர்க்கு அறிக்கை தருவதாக இருந்தால், "இதில் நான் இல்லை, இதோ இதில் நான் இருக்கிறேன்" என்னும் நிறைவு மாணவர்க்குக் கிடைக்கும். இப்போது மதிப்பெண்ணை மட்டும் காட்டும் முறையை நிச்சயமாக மாற்றியாக வேண்டும். அங்கீகாரம் தரப்படும் ஒவ்வொரு திறமையும்-பண்பும் மற்ற திறமைகளையும் வளர்க்கும் என்பதைக் கல்வித்துறை நிச்சயமாகப் பரிசீலிக்க வேண்டும்!

 நமது தேர்வுமுறை தோல்வியடைவதை மையமாகக் கொண்டிருப்பதாகவே எனக்குப் படுகிறது. தாள் திருத்தும் மையங்களில் தரப்படும் மாதிரி விடைத்தாள் (key)களைக் கட்டிக்கொண்டு அழாமல், சிந்தித்து எழுதும் மாணவர்க்கே சிறந்த மதிப்பெண் கொடுக்கும்படி ஆசிரியர்களுக்கும் பயிற்சிதர வேண்டும். மாணவர் எழதியதை தரப்பட்ட விடைக்குறிப்போடு ஒப்பிட்டு "சரியாக இருக்கிறது" என்று எந்தவித சிந்தனையும் இல்லாமலே திருத்தப்படும் தேர்வுக்குத்தான் நோட்ஸ் தேவைப்படும். சிந்தித்து எழுதப்படும் விடைக்கு நல்ல மதிப்பெண் கிடைக்கும் என்றால் ஆசிரியர்களையே அசர அடிக்கும் விடைகளை மாணவர் தருவார் என்பதில் நம்பிக்கை வேண்டும்.

 தேர்வு முறை மட்டுமல்லாமல், திருத்தும் முறையும் மாறவேண்டும். அல்லது, ஒவ்வொரு மாணவருக்கும் கணினியில் சேமிக்கப்பட்டிருக்கும் நூற்றுக்கணக்கான வினாத்தாள்களில் ஒன்றைத் தந்து, அவரே விடையை இட்டு, கணினியால் உடனுக்குடன் திருத்தப்படும் விடைத்தாள் மதிப்பெண் படியை அவரே எடுத்துக்கொண்டு செல்லும் தேர்வு முறையை அறிமுகப் படுத்தலாம். இப்போது நடக்கும் தேர்வுகளால் மனித உழைப்பு விரயம் மட்டுமல்ல, மனஅழுத்தம், தேர்வு அறைக் கண்காணிப்பாளர்-மாணவர் மோதல் களையும் தவிர்க்கலாம். இதில் தனியார் பள்ளி நிர்வாகங்களின் நேரடிப் பங்களிப்பும் உண்டு! சொல்லும்விதம் நடந்துகொண்டால் தனிக்கவனிப்பும், நேர்மையுடன் நடந்து கொண்டால் அவரது வாகனம் சேதப்பட்டுக் கிடக்கும் பரிதாபத்தையும் தவிர்க்கலாம்.

தாய்-தந்தை இருவரில் ஒருவராவது தன் குழந்தையின் மீது அன்பு செலுத்த நேரம் ஒதுக்கி அதை வெளிப்படையாகக் காட்டவும் வேண்டும். இரண்டுபேரும் கண்டிப்பாக இருக்கும் இடம் குழந்தையின் கல்வி குறித்தே என்பதை மாற்றியாக வேண்டும். மருத்துவராகவும், பொறியாளராகவும், வழக்குரைஞராகவும் வரவேண்டும் எனும் கனவில் அவன் மனிதனாகவும் இருக்க வேண்டும் என்பதை மறந்து விடுகிறார்களே! பணம் கறக்கும் படிப்பாகப் பிள்ளை படிக்கவேண்டும் என்ற ஆசையில் 9ஆம் வகுப்பிலிருந்தே அந்தக் குழந்தையின் தலையில் தன் பேராசையை ஏற்றிவிட்டு, பாடாய்ப் படுத்தும் பெற்றோர், என்ன சம்பாதித்தாலும் அவன் வாழும் முறையைக் கற்றுக்கொள்ளாமல் எப்படி வாழ்வான் என்பதை எப்போதுதான் யோசிப்பார்கள்?

 குழந்தை பள்ளிக்கு வருவது நல்ல மதிப்பெண் வாங்குவதற்காக மட்டுமல்ல. இதை வீட்டிலிருந்து தனிப்பயிற்சி வழியாகவும் கற்றுக்கொள்ள முடியும். பலருடன் பழகி இந்த உலகத்தோடு ஒட்டி வாழக் கற்பதுதான் உண்மையான கல்வி! ஆசிரியர்கள்- பள்ளியில் இருக்கும் பெற்றோராகவும், பெற்றோர்- வீட்டிலிருக்கும் ஆசிரியராகவும் நடந்து கொள்வதுதான் ஒரு குழந்தையை அறிவோடும் பண்போடும் வளர்க்கும் ஒரே வழி!

கண்டிப்பும் கனிவும் சரிவிகித்த்தில் காட்டவேண்டிய பெற்றோர் இரண்டில் ஒன்றை மட்டுமே காட்டுவதில் குழந்தையின் மன அழுத்தம் நிச்சயமாகப் பாதிக்கப்படும். இது வெளிப்படும் இடமாக வகுப்பறை இருக்கும்போது, மனப்பிறழ்ச்சி அதிகமாகி தோல்விகளைத் தாங்காத மனநிலை இயல்பாகச் சிந்திக்க விடுமா?
அரசுகளின் முதல்பார்வை படவேண்டிய கல்விக்கு ஓரப்பார்வையே கிடைக்கிறது! ஒவ்வோராண்டும் கல்விக்கு ஒதுக்கப்படும் நிதி விழுக்காடு குறைந்துகொண்டே வருவதை கல்வியாளர் மட்டுமல்ல, நாட்டு வளர்ச்சியில் அக்கறை கொண்ட யாரும் ஒத்துக்கொள்ள மாட்டார்கள். வளர்ந்துவரும் தொழில்நுட்பத்தின் பலனை முதலில் கல்வித்துறைக்கல்லவா வழங்க வேண்டும்? அதுதானே உடனடித் தேவை! ஆனால், நமது நாட்டில் தலைகீழாக அல்லவா நடக்கிறது?

சுவையாக இனிக்க வேண்டிய பாடம் கசப்பதும், வெறுக்கத் தகுந்த சீரழிவு ஊடகங்கள் பலவண்ணத்திலும்-பலமடங்கு முன்னேறிய வாய்ப்பு-வசதிகளோடும் பல்லை இளிப்பதில் பலியாவது நம் சந்ததிகள் தானே என அரசுகள் கவலைப்பட வேண்டாமா?
மக்களுக்கு இலவசமாகத் தரப்படவேண்டிய கல்வியும் மருத்துவமும்தானே நம்நாட்டில் ஏழைக்கு எட்டாக் கனியாக இருக்கிறது?! மற்ற இலவசங்களையெல்லாம் நிறுத்திவிட்டு அனைவருக்கும் உயர்கல்வி வரை இலவசம், அனைத்து மருத்துவமும் இலவசம் என்று கொண்டுவரட்டும், கல்விவள்ளல்கள் கடையை மூடி-ஓடிவிட மாட்டார்களா? மற்றவற்றை இலவசமாகக் கொடுக்க முன்வரும் அரசுகள், ஏழைக்கு எட்டாக் கனியாகிவிட்ட கல்வி-மருத்துவம் இரண்டையும் எப்படியாவது வாங்கிவிடும் போட்டியில்தான் இளைய தலைமுறை பலியாகிறது என்பதை உணர வேண்டாமா?

திரைப்படங்களிலும் தொலைக்காட்சித் தொடரிலும் வரும் குழந்தைகள் "பிஞ்சிலே பழுத்தது"போலப் பேசும்பேச்சுகளைப் பார்த்தால், வியப்புக்குப்பதிலாக நமக்கு வேதனை தான் மிஞ்சுகிறது. அதிலும் சில காட்சிகளில் நகைச்சுவை எனும் பெயரில் குழந்தைகள் பேசும் சிலவசனங்கள் எரிச்சலையும் ஆற்றாமையையும் அல்லவா எழுப்புகின்றன?

"தமிழகத்தின் தங்கக் குரல்” "செல்லக்குரல்" "குட்டிக்குரல் தேடல்" என்று ஒவ்வொரு தொலைக்காட்சியும ஒவ்வொரு பெயர் வைத்துக்கொண்டாலும் போட்டிக்கு வரும் குழந்தைகள் பாடும் பாடல் குழந்தைள் பாடக் கூடியதாக இருக்கிறதா என்று எந்த நடுவராவது கவலைப் படுகிறாரா? 5வயதுக் குழந்தை முக்கி முணகிப் பாடும் காமரசப் பாடல்களைப் பாடும் குழந்தையின் வயதுக்கு இது சரிதானா என்று யோசிக்க வேண்டாமா? இவர்களின் வணிக நோக்கத்திற்கு, பாடிக்கொண்டிருக்கும் சில நூறு குழந்தைகள் மட்டுமல்லாமல், பார்த்துக் கொண்டிருக்கும் பல கோடிக் குழந்தைகளும் பலியாகி ஒரு தலைமுறையே "குழந்தைமை"யை இழந்து பிஞ்சிலே பழுத்து உதிரவேண்டியதுதான் விதியா?பேச்சு பாட்டு நடிப்பு மூன்றையும்தான் கேட்கிறேன்.
 தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில், "வாடா மாப்பிள வாழப்பழத் தோப்புல வாலிபால் ஆடலாமா?” என்பன போலும் பாடல்களை ஏராளமான முகபாவங்களுடனும் தாராளமான இடுப்பாட்டத்தோடும் ஐந்து வயதுக் குழந்தை அனுபவித்துப் பாடுவதைப் பார்வையாளர்கள் பார்த்து பரவசப்படுவதும், நடுவர்கள் பார்த்துப் பாராட்டுவதும் சரியானதுதானா? இர்பான் கூட இப்படி ஒரு இந்தி திரைப்படம் பார்த்த்தாகச் சொன்னானே?
 ஒரு சிலர் மிகச் சரியான விமரிசனங்களோடு அந்த 'மீத்திற'க் குழந்தைகளின் அபாரத் திறமையை மனம்விட்டுப் பாராட்டும்போது நமக்கும் ஏற்படும் மகிழ்ச்சி, இதுபோன்ற வயதை மீறிய விஷயங்களோடு வரும்போது அதற்குப் பயிற்சி கொடுக்கும் பெற்றோரிடம் "இப்படிச் செய்வது தவறு, இது குழந்தைகளுக்கும் நல்லதல்லஎன்று எடுத்துக் கூறித் திருத்துவதல்லவா கலைத் தாய்மையின் கடமையாக இருக்கும்? அவர்களே இதைப் பாராட்டிவிட்டால் பிறகு பெற்றோர்களின் குழந்தைப் பயணம் அந்தத் திசையில் தானே அதிவேகமாக இருக்கும்!
இப்போது சொல்லுங்கள்
 ஆசிரியர் உமாமகேஸ்வரியை வகுப்பறையிலேயே குத்திக் கொன்றது யார்?
கல்விமுறை, ஆசிரியர்கள், பெற்றோர்கள், ஊடகங்கள், அரசுகள் ஆகிய நாம் எல்லாரும்தானே?

செத்துப் போன உமாவை உலகம் தெரிந்து கொண்டது.

குற்றுயிரும் குலை உயிருமாகத் திரியும் ஆயிரக்கணக்கான உமாக்களும் இர்பான்களும் சாகுமுன், நாமெல்லாரும் ஏதாவது செய்தாக வேண்டும். அதுதான் உமாவின் ரத்தம் நமக்குச் சொல்லியிருக்கும் செய்தி.
----------------------------------------------------------------- 
நன்றி,  கீற்று இணைய இதழ்  
http://www.keetru.com/ ஞாயிறு, 11 மார்ச் 2012
--------------------------------------------------------------- 
இக்கட்டுரையை விரும்பி எடுத்து வெளியிட்ட அறந்தாங்கி மண்வாசம்சிறப்பு மலர்க்குழு -சிபிஐ(எம்) தோழர்கள்  குறிப்பாக அதன் தலைவர்-கவிஞர் கவிவர்மன் அவர்களுக்கு எனது நன்றி. இதே நிகழ்வு  தொடர்பான  எனது கவிதையைப் படிக்க -http://valarumkavithai.blogspot.com/2012/02/blog-post_7985.html

----------------------------------------------------------------------------------------------------------------------------------------- 

குழந்தையின் அரசியல் கேள்வி!

திருச்சியைச் சேர்ந்த என் நண்பரும் பத்திரிகையாளருமான 
வில்வம் தனது அய்ந்து வயது மகள் கியூபாவுடன், 
திருச்சி பகுதியில் இரு சக்கர வாகனத்தில்
போய்க் கொண்டிருந்த போது கியூபா கேட்டாராம் -
 " ஏம்ப்பா, நிறைய சுவரில் "அம்மா அம்மா"னு எழுதி இருக்காங்க?”

இதுபோல குழந்தைகள் அப்பா-அம்மாவைக் கேட்கும்போது பெரும்பாலான பெற்றோர்கள் ஒன்று அவசரத்திற்கு தப்பும் தவறுமாக குழந்தைதானே என்று எதையாவது சொல்லும் வழக்கத்தை மீறி, இவர் தடுமாறி இருக்கிறார்.

மீண்டும் கியூபா  " ஆடு, இலை,   இதெல்லாம்
எப்பப்பா எழுதுவாங்க ?", எனக்  கேட்டாராம்! 

அப்போதும் பதில் சொல்லவில்லை. 

அய்ந்து வயது குழந்தையின் அரசியல் நகைச்சுவையோ...?

என்று நம்மைக் கேட்கிறார்.

குழந்தைதான் மனிதரின் தந்தை என ஒரு மேலைப் பழமொழி உண்டே வில்வம்?

தமிழாசிரியர்களுக்கான ஐந்துநாள் பயிற்சிமுகாம்


புதுக்கோட்டை ஆர்.எம்.எஸ்.ஏ. நடத்தியது – தமிழாசிரியர்கள் புத்துணர்வு!

                 புதுக்கோட்டை அருகில் உள்ள கைக்குறிச்சி சுபபாரதி ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் -மாவட்டம் முழுவதிலும் இருந்து, 9,10ஆம் வகுப்புத் தமிழாசிரியர்கள் 210 பேர் கலந்துகொண்ட ஐந்துநாள் பயிற்சிமுகாம் நடந்தது. நேற்று-சனிக்கிழமையுடன் நிறைவடைந்த பயிற்சிமுகாமில் கலந்துகொண்ட தமிழாசிரியர்கள் பலரும் இந்தப் பயிற்சிமுகாம் தமக்குப் புத்துணர்வளித்ததாக மகிழ்ச்சி தெரிவித்தனர்.

ஆர்.எம்.எஸ்.ஏ திட்டத்தில் ஐந்து நாள் தமிழாசிரியர் பயிற்சி முகாம்

                          ஆர்.எம்.எஸ்.ஏ. எனப்படும் ‘அனைவருக்கும் இடைநிலைக் கல்வித்திட்டம்’ என்பது மத்திய மாநில அரசுகளின் நிதிஉதவியோடு நாடுமுழுவதும் செயல்படுத்தப் பட்டு வருகிறது. இத்திட்டத்தின் படி 9,10ஆம் வகுப்புகளை நடத்தும் ஆசிரியர்களுக்கான ஐந்துநாள் புத்துணர்வுப் பயிற்சிமுகாம் தற்போது மாநிலம் முழுவதும் நடத்தப் பட்டு வருகிறது.
                          இதன் ஒருபகுதியாக கடந்த28ஆம்தேதி தொடங்கிய புதுக்கோட்டை மாவட்டத் தமிழாசிரியர் பயிற்சி முகாம் நேற்று நிறைவடைந்தது. பயிற்சிமுகாமில் கலந்து கொண்டு தொடங்கிவைத்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சுகுமார் தேவதாஸ், “பள்ளிகளில் பாடம்நடத்தும் ஆசிரியர்கள் தங்கள்திறiமைகளை வளர்த்துக்கொள்வதோடு மாணவர்களின்; பலவகைத் திறமைகளையும் கண்டறிந்து வளர்க்கவே இதுபோன்ற முகாம்களை அரசு தம்செலவில் நடத்துகிறது” என்று தெரிவித்தார். முகாமை ஏற்பாடு செய்திருந்த ஆர்எம்எஸ்ஏ பொறுப்பாளர் முனைவர் ரெ.கனகசபாபதி பேசும்போது, “மற்றப் பாட ஆசிரியர்களை விடவும் தமிழ்ப்பாடம் நடத்தும் ஆசிரியர்களின் பணி கூடுதல் சிறப்பு வாய்ந்தது, அதனால்தான் மற்ற ஆசிரியர்களை சார், டீச்சர் என்று அழைக்கும் பள்ளிக் குழந்தைகள் தமிழாசிரியர்களை மட்டும்தான் அம்மா என்றும் அய்யா என்றும் அழைக்கிறார்கள் இந்த வகையான மாணவர்களின் உளவியல் நுட்பத்தைத் தமிழாசிரியர்கள் புரிந்து கொள்ளவேண்டும் என்றார். 
                              பயிற்சி நிகழ்ந்த ஐந்துநாட்களுக்கும், வகுப்பறைகள் மற்றும் கூட்ட அரங்கங்கள் மற்றும் ஒலி-ஒளி வசதிகளை நன்கொடையாக வழங்கிய சுப-பாரதி கல்விநிறுவனங்களின் தலைவர் குரு.தனசேகரன், செயலர் வீ.வைத்தியநாதன் ஆகியோர் பயிற்சிமுகாமில் கலந்து கொண்டு ஆசிரியர்களை வாழ்த்திப் பேசினர்.

குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், சோலை!
                                 இம்முகாமின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் கருத்தாளர்களாக புதுக்கோட்டை அரசு முன்மாதிரி மேல்நிலைப் பள்ளித் தமிழாசிரியரும் துணைமுதல்வருமான நா.முத்து பாஸ்கரன், கொப்பனாப் பட்டி மு.நா.செ. உயர்நிலைப் பள்ளித் தமிழாசிரியர் கு.ம.திருப்பதி, பெருங்குடி அரசு உயர் நிலைப் பள்ளித் தமிழாசிரியர் மகா.சுந்தர், காரையு|ர் மொ.அ.கா.மேல்நிலைப்பள்ளித் தமிழாசிரியர் சுப.கோபிநாத், ஆகிய நால்வரும் திறம்படப் பணியாற்றி பின்வருமாறு பயிற்சித் தலைப்புகளையும் பயிற்சிதரும் பேராசிரியரகள் மற்றும், தமிழறிஞர்களையும் ஒருங்கிணைத்திருந்தனர். மாவட்டம் முழுவதும் இருந்து வந்திருந்த 160க்கும் மேற்பட்ட பெண்ஆசிரியர்கள் உள்ளிட்ட 210 தமிழாசிரியர் களையும் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், மற்றும் சோலை என ஐந்து குழுக்களாகப் பிரித்து பெரும்பாலும் தனித்தனி வகுப்பாகவும், அவ்வப்போது இரண்டிரண்டு குழுக்களை மட்டும் இணைத்தும் பயிற்சி தரப்பட்டது.

பயிற்சிக் கையேடு, குறிப்பேடு எழுதுபொருட்கள் வழங்கப்பட்டன.
                           இம்முகாமில் கலந்துகொண்ட அனைத்துத்த தமிழாசிரியர்களுக்கும் மாநில அனைவர்க்கும் இடைநிலைக் கல்வித்திட்ட இயக்குநர் வெளியிட்டுள்ள ‘தமிழாசிரியர்களுக்கான பணியிடைப் பயிற்சிக் கையேடு’ எனும் நூலும், குறிப்பேடுகளுடன் எழுதுபொருளும் இலவசமாக வழங்கப்பட்டது. இதனை திட்டப் பொறுப்பாளர் முனைவர் ரெ.கனக சபாபதி அனைவருக்கும் வழங்கினார்.

பயிற்சித் தலைப்புகளும் பயிற்சிதந்த தமிழறிஞர்களும்
                            ‘தமிழாசிரியர் தகுதிகள்’, ‘வகுப்பறையும் தமிழாசிரியரும்’, ‘மாணவர்கள் நம் குழந்தைகள்’, ‘ஆசிரியர்-மாணவர் உறவு’, ‘செய்யுள் கற்பித்தல்’ ‘உரைநடை கற்பித்தல்’ ‘இனிக்கும் இலக்கணம்’ ‘மொழியாக்கமும் மொழிபெயர்ப்பும்’, ‘வாழ்வியல் திறன்கள்’, ‘கணினித்தமிழ் கற்போம்’ ‘இசையால்தமிழ்வளர்ப்போம்’,‘சங்க இலக்கியம்’, ‘காப்பிய இலக்கியம்’, ‘நீதி இலக்கியம்’, ‘பக்தி இலக்கியம்’, ‘சிற்றிலக்கியம்’, ‘நாட்டுப்புற இலக்கியம்’, ‘இலக்கண மாற்றங்கள்’ ‘காலந்தோறும்கல்வி’, ‘கதைகளும்கதைஆக்கமும்’, ‘மரபுக்கவிதையும் ஆக்கமும்’ ‘புதுக் கவிதையும் ஆக்கமும்’, ‘அய்க்கூவும் உருவாக்கமும்’, ‘பாநயம் மற்றும் பாவகைகள்’ ‘தமிழ்வளர்ச்சியில் சிற்;;றிதழ்கள்’, ‘பெரியாரின் கல்விச் சிந்தனைகள்’, ‘நாட்டுப் பற்றை வளர்க்கும் நற்கதைகள்’, ‘நன்னெறிக் கல்வி’ , ‘ஊடகத் தமிழ்’, ‘தமிழரும் தமிழும்’, ‘எழுத்துப் பிழை களைதல்’ ‘உச்சரிப்பில் குறைபாடு களைதல்’  ஆகிய 30க்கும்; மேற்பட்ட தலைப்புகளில், அந்தந்தத் துறை சார்ந்த கல்லூரி-பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், வல்லுநர்கள் மற்றும் தமிழறிஞர்களைக் கொண்டு ஐந்துநாள்களும் சிறப்பாகப் பயிற்சியளிக்கப் பட்டது. 
                             அரசு ஆசிரியர்பயிற்சிக் கல்லூரி முதல்வர் முனைவர் ம.அன்புச் செழியன் , ‘ஞானாலயா’ பா.கிரு~;ண மூர்த்தி, மதுரைக் கவிஞர் மதுக்கூர் இராமலிங்கம், சாகித்திய அகாதெமி ஆலோசனைக்குழு உறுப்பினர் கவிஞர் தங்கம் மூர்த்தி;, தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகப் பேராசிரியர் முனைவர் வெற்றிச் செல்வன், புதுக்கோட்டை மாமன்னர் கல்லூரிப் பேராசிரியர்கள் முனைவர் மு.பழனியப்பன், முனைவர் அ.செல்வராசு, முனைவர் ச.மாதவன், முனைவர் இரா.கலைச் செல்வி, மகளி;ர் கல்லூரிப் பேராசிரியர் முனைவர் திராவிடராணி, ஜெ.ஜெ.கல்லூரிப் பேராசிரியர் முனைவர் அ.விமலா, மதுரை சூரியன் பண்பலை நிகழ்ச்சித் தயாரிப்பாளர் ஸ்டீபன், பெரியாரியல் அறிஞரும் பணிஓய்வுப் பேராசிரியருமான நெடுஞ்செழியன், புலவர் மு.பாலசுப்பிரமணியன் (சுபபாரதி கல்லூரி) கவிஞர் வி.கே.கஸ்தூரி நாதன் (வி.எஸ்.கே.ஆசிரியப்பயிற்சி நிறுவனம்), புலவர் மா.நாகூர் (உலகத் திருக்குறள் பேரவை) தமுஎகசவைச் சேர்ந்த படைப்பாளர்கள் ஜீவி, ஆர்,நீலா, ரமா ராமநாதன், ராசி.பன்னீர்;;ச்செல்வன்(அறிவியல் இயக்கம்)  பாவலர் பொன்.கருப்பையா (நல்லாசிரியர்) ச.குமார் (மு.க.ஆசிரியர்) சுதர்சன் கல்லூரிப் பேராசிரியர் அ.கருப்பையா விஜயலட்சுமி (மாவட்ட அரசு ஆசிரியப் .பயிற்சி நிறுவனம்), கவிஞர் இரா.தனிக்கொடி (திரைப்படப்பாடலாசிரியர்) முதலியோருடன் ஒருங்கிணைப்பாளர்களும் அவ்வப்போது  கலந்து கொண்டு வகுப்புகளை ஆழமாகவும் கலகலப்பாகவும் நடத்தியதாக பயிற்சி பெற்ற தமிழாசிரியர்கள் தெரிவித்தனர். 

மாவட்டக் கல்வி அலுவலர் கலந்துகொண்ட நிறைவு விழா நிகழ்ச்சிகள்:
                               சனிக்கிழமை மாலை நடைபெற்ற நிறைவு விழாவில் அறந்தாங்கி மாவட்டக் கல்வி அலுவலர் வெ.தமிழரசு, மாவட்ட உதவித்திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் ரெ.கனகசபாபதியுடன், சுபபாரதி கல்விநிறுவனங்களின் தலைவர் குரு.தனசேகரன் மற்றும் செயலர் பேரா.வீ.வைத்தியநாதன் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.
                               பயிற்சி முகாம் மற்றும் விழா ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர்களுடன் இணைந்து, திட்ட அலுவலர்கள் ராஜேந்திரன் மற்றும் ரெத்தினகுமார் ஆகியோர் செய்திருந்தனர். முன்னதாக கு.ம.திருப்பதி வரவேற்புரையாற்ற, நன்றியுரையை மகா.சுந்தர் நிகழ்த்த, நா.முத்துபாஸ்கரன் மற்றும் சுப.கோபிநாத் இருவரும் தொகுத்துவழங்கினர். 

                                பயிற்சி முகாமில் கலந்து கொண்ட தமிழாசிரியர்கள் இப்பயிற்சி தமக்குப் பெரிதும் புத்துணர்ச்சி ஊட்டியதாகக் கூறியதோடு கணினித்தமிழ் உள்ளிட்ட பல புதிய கற்பித்தல் முறைகளை மேலும் தெரிந்துகொள்ள ஆர்வமாக இருப்பதாகத் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
------------------------------------------------------------------------------------

(இந்தச் செய்தியில் “பயிற்சித் தலைப்புகள்“ எனும் ஒரு பத்தியைத் தவிர, சற்றேறக்குறைய இந்தச் செய்தியை முழுவதுமாக -05-03-2012- வெளியிட்டிருந்த “தினமணி“, “தீக்கதிர்“  நாளிதழ்களின் புதுக்கோட்டைச் செய்தியாளர்கள் திரு.மோகன்ராம், திரு சு.மதியழகன் ஆகியோர்க்கும் இந்த நாளிதழ்களின் நிருவாகிகளுக்கும் நன்றி)