2025ஆம் ஆண்டுக்குரிய தமுஎகச விருதுகளுக்கான படைப்புகளை, ஏப்ரல்-30, 2026 வரை அனுப்பலாம்.
நமது வலைப் பக்கத்தில் வந்ததன் கால நீட்டிப்புத்தான் இது.
எனினும் அந்த விவரத்தை, இப் பதிவில்
இரண்டாவதாகத் தந்திருக்கிறேன்.
-----------------------------------------------------------
முதலில்
நமது ‘தமிழ் இனிது’ நூல் பற்றிய அறிமுகத்தைத்
தனது தளத்தில் எழுதிய, நமது மதிப்பிற்குரிய எழுத்தாளரும்
பேராசிரியருமான திருமிகு பெருமாள் முருகன் அவர்களுக்கு
எனது நன்றியும் வணக்கமும்,
கூடவே ‘ஒரு’
சிறு விளக்கமும்!
அவர்கள்
தளத்தில் நமது நூலறிமுகம் பார்க்க
https://perumalmurugan.in/tamil-inithu/
------------------------------------------------------------------------------
இனி அவர்களின் சொற்களிலேயே –
“.... இவ்வகையில் சமீபத்தில் வெளியாகியுள்ள நூல் ‘தமிழ் இனிது.’ தமிழாசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற நா.முத்துநிலவன் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் 51 வாரம் எழுதிய தொடர் நூலாகியிருக்கிறது. முத்துநிலவன் தமிழாசிரியர் மட்டுமல்ல; பேச்சாளர். மார்க்சிய ஈடுபாடு கொண்டவர். ஆகவே மொழியை இயங்கியல் நோக்கில் அணுகும் பார்வை கொண்டு இந்நூல் கட்டுரைகளை எழுதியிருக்கிறார். நாளிதழ் வழங்கிய சிற்றிடத்திற்குள் எல்லைக்குட்பட்டு எழுதிய கட்டுரைகள்.
இன்று எல்லோருமே எழுதுபவர்கள்தான். முகநூல் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் அவ்வப்போது சில வரிகளையாவது எழுதுகிறார்கள். புலனக் குழுக்களில் தினமும் ஒருவரியாவது எழுதாத இளையோர் இல்லை. அனைவருக்கும் பயன்படும் வகையில் சிறுசிறு குறிப்புகளாகவும் சுவையாகவும் முத்துநிலவன் இக்கட்டுரைகளை எழுதியுள்ளார். பழமையை முழுதும் போற்றாமல் புதியது அனைத்தையும் அப்படியே ஏற்றுக்கொள்ளாமல் சமநிலை பேணியுள்ளார். ஆகவே எவருக்கும் வாசிக்கப் பிடிக்கும்.
நூலுக்குள்ளிருந்து எதையாவது சொல்ல வேண்டும் அல்லவா? ‘கோயிலா?கோவிலா?’ (ப.42) எனக் கேட்டு இலக்கணப்படி ‘கோவில்’ என்பதே சரி என்கிறார் சங்க இலக்கியத்தில் பல இடங்களில் ‘கோயில்’ வருகிறது. சிலப்பதிகாரத்தில் ‘வாயில் வந்து கோயில் காட்ட’ என்று கண்ணகிக்கு அரண்மனையை வாயிற்காப்போன் காட்டிய செய்தியை இளங்கோவடிகள் எழுதுகிறார். கோவில் என்று அவர் எழுதவில்லை. இளங்கோவடிகள் தவறாக எழுதிவிட்டாரா? இல்லை. கோவில்,கோயில் ஆகிய இரண்டையும் உறழ்ச்சி என்று ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். மக்களிடம் ‘கோயில்’ என்றுதான் வழங்குகிறது. எங்கள் பகுதியில் ‘கோயிலுக்குப் போறன்’ என்பார்கள். இகரம் அகரமாகிக் ‘கோயலுக்குப் போறன்’ என்போரும் உண்டு. கோவில் வழங்குவதில்லை. இப்படிப்பட்ட சொற்களில் குழப்பம் ஏற்பட்டால் மக்கள் வழக்கை நாடிச் செல்வது என் வழக்கம். ‘கோயில்’ என்றுதான் எழுதி வருகிறேன்.
‘துவக்கப்பள்ளியா? தொடக்கப்பள்ளியா?’ என்பதற்கு தொடு – தொடங்கு – தொடர் என மூலச் சொற்களைக் கொடுத்துத் தொடக்கப்பள்ளியே சரி என்கிறார். வினைகளாகத் துவங்கு, துவக்கு ஆகியவையும் தொழிற்பெயராகத்‘துவக்கம்’ என்பதும் வழக்கிற்கு வந்து பல காலம் ஆகிவிட்டன. ஆகவே துவக்கத்தைத் தவறென்றோ பயன்படுத்தக் கூடாது என்றோ சொல்ல வேண்டியதில்லை. இரண்டையும் ஏற்கலாம். சீர்மை பேணுவதற்காக எல்லாப் பள்ளிகளையும் ‘தொடக்கப்பள்ளி’ என்றே சொல்லலாம். ‘துவக்கப் பள்ளி’ என்று எழுதினால் தவறென வேண்டாம்.
இதுமாதிரி சில இடங்களில் தமிழாசிரியர் தலைதூக்குவதைத் தவிர்க்க முடியவில்லை போல. ஆனால் ‘ஒரு, ஓர்’ பற்றி எழுதும் போது ‘புதிய மரபாக ஒரு, ஓர் இரண்டையும் ஒன்றே போலப் பயன்படுத்தும் பழக்கம் தொடர்ந்து வழக்கமாகிவிட்டது. எனினும் இப்படி ஒரு மரபு தமிழில் உள்ளது என்பதையாவது கவனத்தில் கொள்வது நல்லது” (ப.45) என்று சமாதானம் காண்கிறார். அதே இடத்தில் ‘அடுத்து வரும் சொல் உயிர் எழுத்தில் வந்தால் ஓர் எனும் எண்ணுப்பெயர் வரும். மற்ற எழுத்து வந்தால் ஒரு வரும் என்பது இலக்கணம்’ (ப.44) என்கிறார். இந்தக் கருத்துக்கு இலக்கண நூல் எதையும் மேற்கோளாகத் தரவில்லை. இப்படி ஒரு இலக்கணம் எந்த நூலில் இருக்கிறது என்று சொன்னால் அறிந்துகொள்ள ஆவலாக உள்ளேன்.
இப்படிச் சில இடங்களில் எனக்குச் சொல்லக் கருத்துக்கள் உள்ளன. மற்றபடி இவர் எழுதியிருப்பவை எனக்கும் ஏற்புடையவையே. பொதுத்தளத்தில் தமிழ் மாணவர்கள், வாசகர்கள், எழுத்தாளர்கள் எல்லோருக்கும் பயன்படும் நூல்தான் இது.
(நா.முத்துநிலவன், தமிழ் இனிது, 2024, தமிழ் திசை, சென்னை. பக்கங்கள்: 160, விலை : ரூ.160/-)
(எழுத்தும் சொற்களும் அய்யாவுடையவை. சிவப்பு மையும் அடிக்கோடும் அவற்றின் முக்கியம் கருதி நான் இட்டவை – நா.மு)
------------------------------------------------
நான் பெரிதும் மதிக்கும் எழுத்தாளரும், தமிழறிஞருமான
திருமிகு பெருமாள் முருகன் அய்யா அவர்கள்
எனது நூலை எடுத்து எழுதியதற்கும், பாராட்டிற்கும்
எனது நெஞ்சார்ந்த நன்றியும்
வணக்கமும்.
அவர்கள் “அறிவினா” போலக் கேட்டிருக்கும்
‘ஒரு’ ‘ஓர்’ இலக்கணத்தை மட்டும் இங்குத் தந்துவிடுகிறேன் :
“ஒரு ஓர் இலக்கணம் எந்த நூலில் இருக்கிறது என்று
சொன்னால்
அறிந்துகொள்ள ஆவலாக உள்ளேன்”
இதற்கு எனது பதில் :
தொல்காப்பியம் – எழுத்ததிகாரம் – குற்றியலுகரப் புணரியல்
நூற்பா எண் - 455
“முதல்ஈர் எண்ணின்முன் உயிர்வரு காலை,
தவல்என மொழிப உகரக் கிளவி
முதல்நிலை
நீடல் ஆவயின் ஆன”
இதற்கான விளக்கம்:
“ஒரு இரு என்னும் சொற்களின் முன் உயிரெழுத்து வந்தால், உகரம்
கெட்டு, முதலில் நின்ற எழுத்து நீளும். ஒரு
ஓர் ஆகும், இரு ஈர் ஆகும்”
(நூல் : தொல்காப்பியம் தெளிவுரை – அறிஞர் ச.வே.சுப்பிரமணியன்,
மணிவாசகர் பதிப்பகம் – மார்ச்-2016 – பக்கம்-172,173)
------------------------------------------------------------
இனி, இது தொடர்பாக
எனது வேறொரு கருத்து:
எழுத்துகளின் உச்சரிப்பு, ஓசை பற்றிய இந்த இலக்கணம்
- அவரே சொல்வதுபோல முன்னோர் வழியாக - தொல்காப்பியர் வகுத்தளித்தது,
ஆனால் இதை, ஆங்கிலர், ஆங்கிலத் தொடர்களில் உயிர் எழுத்து (Vowels) ஓசை வந்தால் An An Apple,
An Ubrella என்றும், மெய்யெழுத்து (Consonants) ஓசை வந்தால் A Country, A Nation
என்றும் சொல்வதை இலக்கணமாக்கியது காண்க. (கவனிக்க எழுத்து
அல்ல, ஓசை)
ஆனால், தமிழர் பலரும் இவற்றை ஆங்கிலத்தில்
இருந்தே தமிழுக்கு வந்ததாக எண்ணுகின்றனர் என்பதையும் கவனத்திற் கொள்க.
------------------------------------------------------------------
இதோ
இன்று 27-03-2026 மாலை வெளியிடப்பட்ட
தமுஎகச விருதுகளுக்கான கால நீட்டிப்பு அறிவிப்பு
தமுஎகச கலை இலக்கிய விருதுகள் 2025*
2025ஆம் ஆண்டுக்குரிய “தமுஎகச கலை இலக்கிய விருது” களுக்கான நூல்கள், ஆவணப்படங்கள் / குறும்படங்கள் வரவேற்கப்படுகின்றன.
2025ஆம் ஆண்டில் வெளியானவை மட்டுமே பரிசீலனைக்குரியவை.
*நூலின் மூன்று பிரதிகள் 2026 ஏப்ரல் 30ஆம் தேதிக்குள் அஞ்சல் / தூதஞ்சல் (கூரியர்) மூலம் அனுப்பப்பட வேண்டும்.
பரிசீலனைக்கு வரும் நூல்களைத் திருப்பி அனுப்ப இயலாது.
நூல்களை அனுப்ப வேண்டிய முகவரி:
பொதுச்செயலாளர்,
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்,
11,
மேலப்பெருமாள் மேஸ்திரி வீதி,
(தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க அலுவலகம்)
மதுரை- 625001
தொடர்பு எண் : 93618 02798
படைப்புகள் வந்து சேர வேண்டிய இறுதி நாள்
30-04-2026
குறும்படங்கள் மற்றும் ஆவணப்படங்களின்
தனிநபர் இணைய இணைப்புகளை
73730 73573 என்ற புலன எண்ணுக்கு அனுப்பிவைக்கவும்.
*தேர்வாகும் நூல் / படம் ஒவ்வொன்றுக்கும்
விருதுத்தொகை ரூ.10,000/, சான்றிதழ் ஆகியவை
தமுஎகச நடத்தும் விழாவில் வழங்கப்படும்.*
தமுஎகச *விருதுகள்* 2025
1. கே.முத்தையா நினைவு விருது -
*தொன்மைசார் நூல்*
2. கே.பி.பாலச்சந்தர் நினைவு விருது –
*நாவல்*
3. சு.சமுத்திரம் நினைவு விருது -
*விளிம்புநிலை மக்கள்குறித்த படைப்பு*
4. இரா.நாகசுந்தரம் நினைவு விருது –
*அல்புனைவு நூல் (நான் ஃபிக்ஷன்)*
5. வெம்பாக்கம் ஏ.பச்சையப்பன் – செல்லம்மாள்
(ப.ஜெகந்நாதன்)
நினைவு விருது - *கவிதைத் தொகுப்பு*
6. அகிலா சேதுராமன் நினைவு விருது –
*சிறுகதைத் தொகுப்பு*
7. வ.சுப.மாணிக்கனார் நினைவு விருது –
*மொழிபெயர்ப்பு நூல்*
8. இராஜபாளையம் மணிமேகலை மன்றம் (கொ.மா. கோதண்டம்)
விருது* சிறார் இலக்கியநூல் (சிறார் பாடல் உட்பட)*
9. கு.சின்னப்பபாரதி அறக்கட்டளை விருது -
மொழிவளர்ச்சிக்கு
உதவும் நூல்
10. ஜனநேசன் நினைவு விருது –
*எழுத்தாளரின் முதல் நூல்*
11. மருத்துவர் சிவக்கண்ணு நினைவு விருது
*அறிவியல் மனப்பாங்கை உருவாக்கும் நூல்*
12. பா.இராமச்சந்திரன் நினைவு விருது –
*குறும்படம்*
13. என்.பி.நல்லசிவம் - ரத்தினம் நினைவு விருது –
*ஆவணப்படம்*
*கீழ்காணும் விருதுகளுக்குப் பொருத்தமான பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன*
14. மு.சி.கருப்பையா பாரதி-ஆனந்த சரஸ்வதி
*நாட்டுப்புற
கலைச்சுடர் விருது*
15. மக்கள் பாடகர் திருவுடையான் நினைவு
*இசைச்சுடர்
விருது*
16. த.பரசுராமன் நினைவு
நாடகச்சுடர்
விருது
17. மேலாண்மை பொன்னுச்சாமி நினைவு –
*பெண் படைப்பாளுமை
விருது*
18. கருப்பு கருணா நினைவு
*நுண்கலைச்சுடர் விருது*
நன்றி,
*மதுக்கூர்
இராமலிங்கம்* *களப்பிரன்*
மாநிலத்
தலைவர் பொதுச்செயலாளர்,
-----------------------------------------------------------------------------------------------


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக