இந்து தமிழ் நாளிதழில் இன்று வந்த எனது கட்டுரை

                                              சாவித்திரிபாய் பூலே: 

         இந்தியப் பெண்களின் விடிவெள்ளி!

( இந்து தமிழ் நாளிதழ் இன்று - 02-01-2026 )

ரியாக 178 ஆண்டுகளுக்கு முந்திய, இந்தியச் சமூகம்அது! ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமையென்று எண்ணியிருந்தகாலம்! அப்போது, சாதி இந்து ஆண்கள் மட்டுமே பள்ளிக்கூடம் போய்ப் படிக்க முடியும்! பெண்களின் நிலையோ, படு மோசமாக இருந்தது! சதிஎன்னும் கொடிய வழக்கமும், விதவை மறுமண மறுப்பும், பெண்கல்வி மறுப்பும் சர்வ சாதாரணமாக இருந்த காலம்! கல்வியே சமூக முன்னேற்றத்தின் அடிப்படை என்பதை அறியாத பெண்கள் வாழ்ந்து முடியாமலே வீழ்ந்து மடிந்த காலம்!


அவமதிப்பும் வைராக்கியமும்:                                              இந்தச் சூழலில்தான், 1848இல் மராட்டிய மாநிலம்,  பூனே அருகிலுள்ள பிடேவாடாவில்,  அந்த 17வயதுப் பெண், ‘பெண்கள் மட்டுமே படிக்கும் பள்ளிக்கூடம் ஒன்றை, தானும் கணவருமாக உருவாக்கி விட்டமகிழ்ச்சியில், பள்ளிக்கூடத்திற்கு விரைந்து கொண்டிருந்தார்! ஆனால், வழியில் ‘’ஒரு பெண் பள்ளிக்கூடம் போவதா? அதுவும் பாடம் நடத்துவதா? கூடாது! கூடாது!!என்று, மறிக்க முயன்றனர் சிலர்! சகதியும், சாணமும், அழுகிய முட்டைகளும், கற்களோடு வந்து விழுந்தன! அந்தப் பெண், உடலில் பட்ட காயத்தை விட,  உள்ளத்தில் பட்ட அவமானத்தை நினைத்து, ஓட்டமும் நடையுமாகப் பள்ளிக்கூடம் போய்ச் சேர்ந்தார்! தனக்கு நேர்ந்ததைக் கணவரிடம் சொல்லி அழுதார். அந்தக் கணவரோ, ‘இனி நீ போகும்போது பழைய சேலையை உடுத்திக் கொள், பள்ளியில் உடுத்திக் கொள்ள மாற்றுச் சேலையை  எடுத்துக் கொண்டு போ!என்று அமைதியாகச் சொன்னார்!

அவர்தான், இந்தியாவின் முதல் பெண்ஆசிரியர் சாவித்திரிபாய் பூலே!  அவரது இளம் கணவர், ஜோதிராவ் பூலே! இவர்களுக்குக் குழந்தை இல்லை! ஆனால், இப்போது அவர்களுக்குத்தான் எத்தனை கோடிக் குழந்தைகள்?!

ராட்டிய மாநிலம் சதாரா மாவட்டம், நைகான் கிராமத்தில் 1831, ஜனவரி-3ஆம் தேதி, பிறந்தவர் சாவித்திரிபாய்.  லட்சுமி, கண்டோஜி பாட்டீலின் மூத்த மகள், 9வயது சாவித்திரிக்கு, 13வயது ஜோதிராவ் பூலேயுடன் திருமணம் நடந்தது! ஜோதிராவ், தன்மனைவிக்குக் கல்வி தந்து, ஆசிரியப் பயிற்சியும் பெறச் செய்தார்.

சமூகப் போராட்டத்தில் ஈடுபட்டதால், உறவினர்களால் வெளியேற்றப் பட்ட பூலே இணையருக்கு, இஸ்லாமிய உறவுகள் கிடைத்தன! நண்பர் உஸ்மான் அடைக்கலம் தந்தார். அவரது சகோதரி பாத்திமா, ‘முதல் இஸ்லாமியப் பெண் ஆசிரியராக’  இவர்களோடு கல்விப் பணியில் இணைந்தார்! 

பெண் கல்விக்கான போராட்டங்கள்:   

தையல்,ஓவியம் முதலான  கைத்தொழில்களையும்  கல்வியோடு கற்பித்து பெண்களிடம் தன்னம்பிக்கையை வளர்த்தனர். 1848இல் வெறும் 9மாணவியரோடு தொடங்கிய பள்ளியில், 1854இல் 200 மாணவியர் சேர்ந்தனர்! பெண்கள் பள்ளிகள் பலவற்றை, பல பாடுபட்டுத் தொடங்கினர். நிதி உள்ளிட்ட தொல்லைகளை  எதிர்கொண்டும் தொடர்ந்து நடத்தினர்.

1852-இல் 'மகிளா சேவா மண்டல்' அமைப்பைத் நிறுவினர். 1855-இல் பிராமண விதவைகள், பெண்கள் குழந்தைகள் காப்பகம்,  விவசாயிகள் தொழிலாளர்க்கு இரவுப் பள்ளி தொடங்கினர்.  வெளியூர் மாணவிகளுக்குத் தங்கும் விடுதிகளை அமைத்தனர்.

இதனால், `இந்தியாவின் நவீன கல்வி - பெண் கல்வியின் அன்னை' என்று போற்றப்பட்டார் சாவித்திரி பாய்!  கைவிடப்பட்ட பெண்களுக்கான இல்லம்தொடங்கினர். குழந்தைக் கைம்பெண்கள்’, வாழ்க்கையோடு போராட ஒரே வழி கல்விதான் என்பதைப் புரிந்திருந்த பூலே இணையர். தம் வாழ்வைப் பெண் கல்விக்கே ஒப்படைத்தனர்.

சமூக நீதிப் போராட்டங்கள்:

கைம்பெண்களின் முடியை மழித்துவிடும் கொடிய வழக்கம் கண்டு வருந்தி, முடிவெட்டுவோரிடம் பேசி, ‘விதவைகளுக்கு மொட்டையடிக்க மாட்டோம்என்று அவர்களையே உறுதியெடுக்க வைத்தனர்! 1863- சிசுக் கொலை தடுப்பியக்கம் தொடங்கினர். 1873-ல் 'சத்ய ஜோதக் சமாஜ்' இயக்கத்தைத் தொடங்கி, புரோகிதம் இன்றி, திருமணங்கள் நடத்தப்பட்டன! இதில், ‘சமத்துவர் யாரும் உறுப்பினராகலாம்’  

1876- கொடிய பஞ்சத்தில். ஏழைகள் பலர் மாண்டது கண்டு, ஊர் ஊராக நிதி திரட்டி 52 இடங்களில் உறைவிடங்களும், உணவுக் கூடங்களும் அமைத்தனர்.

1890- பம்பாய்ப் பகுதியில் பிளேக்நோய் பரவியது. கொத்துக் கொத்தாகப் பலரும் பலியான போது, ஆங்கில அரசு ஆணையிட்டும், ‘ஒடுக்கப்பட்டவர்ளுக்கு' மருத்துவம் பார்க்க மறுத்தனர் மருத்துவர்கள்! அப்போது, தம் வளர்ப்பு மகனும் மருத்துவருமான யஸ்வந்தராவுடன் இணைந்து, மருத்துவம் பார்க்கத் தொடங்கினர் பூலே இணையர்! நோய் பாதித்த ஒரு சிறுவனத் தோளில் சுமந்து வந்து மருத்துவம் பார்த்த ஜோதிராவை, பிளேக் நோய் விழுங்கி விட்டது! இறுதிவரை இணைந்தே போராடி வாழ்ந்த தம் கணவருக்கு, சாவித்திரியே இறுதிச் சடங்குகள் செய்தார்!  'சத்ய ஜோதக் சமாஜ்' அமைப்பை, கணவர் மறைந்த பிறகும் - இறுதிவரை மனம் தளராமல் - தொடர்ந்து நடத்தினார்  சாவித்திரிபாய் பூலே!

களப்போராளியின் நினைவுகளோடு...  

    சாவித்திரிபாய் பூலே நல்ல கவிஞரும் கூட! மராட்டிய மொழியில் நவீன கவித மரபைத் தொடங்கி வைத்தவர் அவரே! காவ்யா பூலே’, ‘பவன் காஷி சுபோத் ரத்னாகர்ஆகிய கவிதை நூல்கள் பின்னாளில் வெளிவந்தன.  “புறப்படு, கற்றிடுஎன்ற கவிதை, பெண்கள் - ஒடுக்கப்பட்ட  மக்களுக்கான  கல்வியின் வலிமையை ஓங்கி ஒலித்தது.  

1852-ஆங்கில அரசு சிறந்த ஆசிரியர் விருதுதந்தது. 1998, சாவித்திரி பாய் நினைவு நூற்றாண்டில் - பெண்கல்வியைத் தொடங்கிய பொன்விழா ஆண்டில் இந்திய அரசு அஞ்சல்தலை ஒன்றை வெளியிட்டுப் பெருமை கொண்டது. 

2015-பூனே பல்கலைக்கழகம், இவரது பெயரைச் சூடி மகிழ்ந்தது.

       2017-கூகுள் நிறுவனம், ‘டூடுள்அமைத்துப் பெருமைப் படுத்தியது! 

இவ்வாறாக, பெண்கல்வி, சமூக சீர்திருத்தப் பணிகளில் இந்தியப் பெண்களின் எழுச்சி முகமாகத் திகழும் சாவித்திரி பாய் பூலே பிறந்த ஜனவரி 3ஆம் தேதியை, ‘பெண் ஆசிரியர் தினம்என்று அறிவித்துக் கொண்டாடுவதே கல்வி, பொதுவாழ்வில் பெண்களை ஈர்க்கும் அறிவிப்பாக இருக்கும். 

இப்போது, முனைவர் பட்ட -- பி.எச்.டி --  ஆய்வு செய்கின்ற பெண்களின் எண்ணிக்கையில், இந்தியாவிலேயே முதலிடம் பெற்றுத் திகழும் தமிழ்நாட்டில், இதற்கு அரசாணை வெளியிடுவது, உரிமையும் பெருமையுமான செயலாக இருக்கும். 

ஜனவரி 03, சாவித்திரிபாய் பூலே 195ஆவது பிறந்தநாள்

--------------------------------------------------

இக்கட்டுரையை  

இன்று  02-01-2026-வெள்ளிக் கிழமையே வெளியிட்ட

'இந்து தமிழ் திசை' ஆசிரியர் குழுவினர்க்கு

எனது நெஞ்சார்ந்த நன்றி, நன்றி, நன்றி.

(02-01-2026 மாலை 6மணிக்கு வலையேற்றப் பட்டது)

-------------------------------------