ஆகஸ்டு -2025 'இனிய உதயம்" இதழில் வந்த எனது கட்டுரை - வள்ளுவரோடு விளையாடும் கவர்னர்!

 வள்ளுவரோடு விளையாடும் கவர்னர்!

--நா.முத்துநிலவன்--

2016-17இல் -- கூடுதல் பொறுப்போடு - தமிழ்நாட்டு ஆளுநராக ஓர் ஆண்டு மட்டுமே இருந்த திரு சி.வித்யாசாகர் ராவ் அவர்கள், தமிழ்நாடு அரசு ஏற்பளித்திருக்கும் திருவள்ளுவர் உருவச் சிலையை ஆளுநர் மாளிகையில் 18-6-2017 அன்று திறந்து வைத்தார். ஆனால், இன்றைய ஆளுநர் திரு ஆர்.என்.ரவி, அந்தத் திருவள்ளுவர் சிலைக்கு அப்படியே மரியாதை செய்தால் அது தனது சனாதன தர்மத்திற்குப் அபகீர்த்தி ஆகி விடும் என்று நினைத்தோ என்னவோ, அந்தச் சிலையின் முன்னால் காவி உடையும், நெற்றியில் திருநீற்றுப் பட்டையும், கழுத்தில் ருத்ராட்சக் கொட்டையும் அணிந்த ஒரு திருவள்ளுவர் தயார்செய்து வைத்து, வணங்கும் காட்சி தினசரிகளில் வந்தபோதே தமிழக மக்கள் அதிர்ந்து போனார்கள்.

புதிய கல்விக்கொள்கை உருவாக்கக் காரணமாக திருவள்ளுவர் தான் இருந்துள்ளார் என்று ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார்! இதன் மூலமாக, புதிய கல்விக் கொள்கையை வகுத்து தொகுத்து எழுதியவரில் தமிழ் தெரிந்தவர் யார்? என்று அடுத்த இ.ஆ.ப.தேர்வுக்கு ஒரு கேள்வியே வைக்கலாம் என்று எடுத்துக் கொடுத்திருக்கிறார்! அதன் பிறகும் சனாதன தர்மத்தைத்தான் திருக்குறள் சொல்கிறது என்று ஒரு போடு போட்டு வள்ளுவரையே மிரட்டி விட்டார்! பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற குறள் மனுதர்மத்துடன் எப்படிப் பொருந்திப் போகிறது என்னும் ஆய்வுக்கும் வழிவகுத்துத் தந்தவர் நம் ஆளுநர்! அடுத்து, ‘பிரதமர் மோடி அவர்கள் திருக்குறளின் தீவிர பக்தர் என்றும் சொல்லி - வடிவேலு மாதிரி நா எங்கய்யா அப்படிச் சொன்னேன் என்று - மோடியையே திகைக்க வைத்தார்! சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள திருவள்ளுவர் திருநாட் கழத்தில் மட்டுமல்ல போகுமிடமெல்லாம் இந்தப் பேச்சுத்தான்

இப்போது -

இல்லாத திருக்குறள் ஒன்றைப் போட்டு அதை எழுதியவர் திருவள்ளுவர் என்றும் திருக்குறள் எண் -944 என்றும் அச்சிட்டு, தமிழ்நாடு அரசு சின்னத்தோடு மருத்துவர் தின சிறப்புப் பரிசாக மருத்துவர்களை அழைத்து பரிசளித்திருக்கிறார் நமது ஆளுநர்.

அவர்கள் பதித்துத் தந்த குறள் இதுதான்

செருக்கறிந்து சீர்மை பயக்கும் மருப்பொடு                      

மன்னுஞ்சொல் மேல்வையப் பட்டு குறள் -944 (!)

ஆனால்,

மருந்து என்ற அதிகாரத்தில்,  

944 எண் இட்டு, திருக்குறளில் உள்ள குறள் இதுதான் :

‘‘அற்றதுஅறிந்துகடைப்பிடித்துமாறல்ல                                                             துய்க்க துவரப் பசித்து.’’ (குறள் 944) என்பதுதான் திருக்குறளில் உள்ளது. ஆளுநர் தந்த குறளல்ல! சரி எண் எதுவும் மாறியிருக்குமோ என்று பார்த்தால் எந்த எண்ணிலும் இந்தக் குறள் இல்லை. 

எனவே இது ஆளுநரின் அபத்தக் குரல்தான் என்பது தெளிவு!

இப்போது உள்ள குறள் எண்களை அமைத்துத் தந்தவர் பரிமேலழகர் என்பது பலரும் அறியாத உண்மை! திருக்குறள் உரைக்கொத்து எனும் பெயரில் 10பேரின் பழைய உரையுடன் ஆங்கில மொழிபெயர்ப்பையும் சேர்த்து வெளியிட்டிருக்கும் சில பதிப்புகளைப்  பார்த்தால் உண்மை புரியும். பத்து உரையாசிரியர்களும் ஆளுக்கு ஒரு வரிசை தந்திருப்பார்கள்.  ஆக இன்று நிலைபெற்று விட்ட பரிமேலழகர் தந்த - குறள் எண்கள் எதிலும் இப்படி ஒரு குறள் இல்லை, எனவே இது ஆளுநரின் அபத்தக் குரல்தான் என்பது உறுதியாகிறது

அது பற்றித் தமிழ்நாட்டின் அரசியல் தலைவர்கள், தமிழறிஞர்கள் பற்பலரும் கண்டித்துக் கருத்துத் தெரிவித்து வருகிறார்கள்

அவருக்குத் தமிழே தெரியாது, ஏதோ ஆர்வத்தில் நல்லதாக ஒரு குறளை மேற்கோளிட்டு நினைவுப்பரிசு தர நினைத்திருக்கலாம்,  தவறான குறளை யாரோ ஏ.ஐ.இடம் கேட்டுப் போட்டிருக்கலாம், வேண்டுமென்றே யாராவது தவறான திருக்குறளைப் போடுவார்களா? தமிழ் தெரியாத அவருக்கு எப்படி இது தவறு என்று தெரியும்? இதற்கு அவரையே குற்றஞ்சுமத்தலாமா?’ என்று கேட்பவரும் உண்டு. திருக்குறள் போட வேண்டும் என்று நினைத்தவர் அது திருக்குறள்தானா? என்று கவனித்துப் போட வேண்டும் என்னும் அக்கறை இல்லாதவரின் முந்திய பாவங்கள் இப்படித்தான் முடியும்!

வள்ளுவரின் தாய் தந்தையர் ஆதி  பகவன் என்னும் கருத்தும், வாசுகி - வள்ளுவர் என்னும் பெயர்களும் மட்டுமல்ல, அவரது  உருவப் படமும் கூட கற்பனைதான்! அது நல்ல நோக்கத்தோடு உருவாக்கப் பட்ட ஓவியம். கதைகள் அப்படியல்ல!

அதே போல இந்தக் கற்பனையும் நல்ல நோக்கத்தில் வந்ததாகத் தெரியவில்லை என, ஆளுநரின் கடந்தகாலச் செயல்பாடுகளே நம்மை சந்தேப்பட வைக்கின்றன.

133அதிகாரக் குறளை மாற்ற யாருக்கும் அதிகாரமில்லை! தவறாக வந்துவிட்டது என்று ஆளுநரே வருத்தம் தெரிவித்திருக்க வேண்டும். அதிகாரி வருத்தம் தெரிவிப்பது, குறளுக்கு மீண்டும் செய்யும் அவ மரியாதை அல்லவா?

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும், அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு                                    – இதுவும் திருக்குறள்தான் (எண்-423) 




இனிய உதயம் இதழை

வாங்கிப் படித்து, இதுபற்றிய உங்கள் கருத்துகளை

இனிய உதயம் இதழுக்கும், இந்த வலைப்பக்கத்தின்

 பின்னூட்டத்திலும் எழுத வேண்டுகிறேன்.

 நன்றி - 

இனிய உதயம் 

இலக்கியத் திங்களிதழ் - ஆகஸ்டு - 2025

ஆசிரியர் - நக்கீரன் கோபால் அவர்கள்

இணை ஆசிரியர் - 

கவிஞர் ஆரூர் தமிழ்நாடன் அவர்கள்,

இனிய தோழர்

கவிஞர் மு.முருகேஷ் அவர்கள்

------------------------------------------------ 

கவிஞர் சிற்பி-90, நூறாண்டு வாழ்க! இந்து தமிழ் நாளிதழுக்கு நன்றி!

கவிஞர் சிற்பி - 90, நூறாண்டு வாழ்க!

--நா.முத்துநிலவன்--

தமிழில் 60ஆண்டாகப் படைப்புலகில் இருப்போர் ஓரிருவரே!

இரண்டு சாகித்திய விருதுகள் பெற்றோர் ஓரிருவரே!

படைப்புகளுக்காக பத்மஸ்ரீ விருது பெற்றோர் ஓரிருவரே!

அகாதெமி ஒருங்கிணைப்பாளரான தமிழாசிரியர் ஓரிருவரே!

புதிய சிந்தனைகளைப் படைக்கும் தமிழாசிரியர் வெகுசிலரே!

இதழ்ஆசிரியர் குழுவில் உள்ள படைப்பாளிகள் வெகுசிலரே!

தொண்ணூறு வயதிலும் தொடர்ந்து எழுதுவோர் வெகுசிலரே!

மரபுக் கவிதையோடு, புதுக்கவிதையும் எழுதுவோர் வெகுசிலரே!

கவிஉலகைப் புரட்டிப் போட்ட, ‘வாழும்  வானம்பாடி ஓரிருவரே!

----இவை அனைத்திலும் உள்ள 

பெருமைக்குரியவர் நம் சிற்பி ஒருவரே!

இலக்கிய அமைப்புகளோடு நட்பு பாராட்டி, அமைப்புக் கடந்த படைப்பாளிகளையும் ஊக்குவித்து வருவதே சிற்பி அவர்களின் சிறப்பு!  

1960கள் வரை, பழந்தமிழைப் பற்றியே எழுதி, வந்த தமிழ்க் கவிதை உலகில், உலகப் பார்வையோடு உள்ளூர் நடப்புகளையும், பாரதி சொல்வது போல, ‘எளிய பதம் எளிய சொற்களில் எழுதி, புதுமை வானில் சிறகடித்து வந்த வானம்பாடிகள் எனும் கவிஞர் குழு, புதிய சிந்தனை, புதிய வடிவில் தமிழுக்குப் புதிய ரத்தம் பாய்ச்சியது. அதில் முதன்மையானவர் சிற்பி! 1960களின் இறுதியில் வானம்பாடி - சிற்றிதழ்களைப் படித்த இளைஞர்கள் புதிதாய்ப் பிறந்தனர்!

கற்பனைக்குள்ளும் காமத்தினுள்ளும், பிற்போக்குத் தனத்தி னுள்ளும் புதைந்து புழுக்களாக நெளிகின்ற நிலையில், வானம்பாடிகள் தமது சமூக நோக்கில் பாரதி, பாரதிதாசனின் தற்கால வாரிசுகள் என்று வானம்பாடிகள் குழுவின் தொகுப்பாக வந்த வெளிச்சங்கள்’ (1973) நூலின் முன்னுரையில் காலஞ்சென்ற கவிஞர் ஞானி சரியாக மதிப்பிட்டு எழுதினார். இந்த நூலில், ‘நாங்கள்  எனும் வானம் பாடிகளுக்கான அறிமுகக் கவிதையை இப்படி எழுதினார் சிற்பி 

வானம் பாடிகள் நாங்கள்..

வசந்த மின்னல்கள் நாங்கள்!..

அந்த பாரதம் கௌரவர்களை எதிர்த்த

பஞ்ச பாண்டவர் கதை!

நாங்களோ, கௌரவங்களை எதிர்க்கும்

வர்க்கப் பாடகர்!

அன்னம்விடுதூது,  வள்ளுவம்,  கவிக்கோ,  கணையாழி,  சக்தி,        இதழ்களின் ஆசிரியர் குழுக்களில் இருந்து,  புதிய படைப்பாளிகளை எழுதவைத்தார். 

ஞானி, புவியரசு, தமிழ்நாடன், ஈரோடு தமிழன்பன், மீரா, தமிழவன், இன்குலாப், பாலா பொலும் 'வானம்பாடிகள்' இயக்கக் கவிஞர்களோடும், புதியவர்களோடும் இணைந்து செயல்பட்டார்!

2023-இல் எனது தமிழ் இனிது” தொடர், இந்து தமிழ் நாளிதழில் தொடங்கிய  வாரத்தில், என்னைப் பாராட்டி, ஊக்கப் படுத்திய தமிழ்கூறும் நல்லுலகின், முதல் அலைபேசிக் குரல் கவிஞர் சிற்பி உடையது!

90களை நெருங்கிய வயதிலும், அந்த மாமனிதர், 15நாளில், இந்து தமிழ் நாளிதழில் செவ்வாய் தோறும் ஒரு கட்டுரை என வெளிவந்த 50கட்டுரைகளையும் வரிவிடாமல் படித்து, மிகச் சிறந்த ஆறுபக்க முன்னுரை எழுதி அனுப்பிய அவரது பண்பில் ஒரு பாடமும் நான் கற்றுக் கொண்டேன். அது,  ஒரு முன்னுரை மட்டுமல்ல, பெரும் படைப்பாளி,  தனது அடுத்த தலைமுறைப் படைப்பாளிக்குக் கற்றுத் தரும் பாடம்.

காலை மணி 7. அந்த நேரத்தில் அவருக்கு அது தொந்தரவாக இருக்குமோ?’ என்ற தயக்கத்துடன் நான் போனால், குளித்து முடித்து, தனக்கே உரிய சந்தன வண்ண மேல்சட்டை, தும்பைப் பூவெனும் வெள்ளை வேட்டியில் நேர்த்தியான வடிவோடு இந்த 69ஐ வரவேற்றது அந்த 89!  

நான் மரபின் பிள்ளைபுதுமையின் தோழன்என்களம் - என்மண்என் பாத்திரங்கள் - என் மனிதர்கள் என் பின்புலம் - தமிழ்இலக்கியம்மற்றவையும் மற்றவர்களும் எனக்கு விருந்தினர் மட்டுமே! (1996-’இறகு’) என்று பிரகடனமாகச் சொன்ன சிற்பிஇன்று வரை அந்தத் தடத்திலேயே பயணம் செய்கிறார்

சிற்பிமண்ணில் நின்று நிலவைப் பாடும் மரபுக் கவிஞராகவும் நிலவில் ஏறி நின்று மண்ணைப் பாடும் புதுக்கவிஞராகவும் இருக்கிறார் என்பது மிகச் சரியான மதிப்பீடு. என் போல, கவிச்சிற்பிகளைச் செதுக்கிய தலைமைச்சிற்பி அவர்!

சிற்பியின் ‘சர்ப்பயாகம்’ நூலில் உள்ள  ‘சிகரங்கள் பொடியாகும்’ கவிதைசாதிக் கொடுமைக்கு எதிராகக் கிளர்ந்தெழும் ஒடுக்கப்பட்ட மக்களின் போர்முரசு!    

இது,    ஏற்கெனவே  வானம்பாடிகள் இதழில் வந்து,   வெளிச்சங்கள் தொகுப்பில் இடம் பெற்றதுதான். 

அது முதலில் வெளிவந்தபோது, புதுக்கவிதை வடிவில் வந்த முதல் தலித்தியக் கவிதையாகப் பேசப்பட்டது. ஒடுக்கப்பட்ட மக்களுக்கான -புதுக்கவிதையின் முதல் போர்க்குரலாய் ஒலித்த வானம்பாடிகளின் சிகரக் கவிதைகளில் ஒன்று சிற்பி அவர்களின் சிகரங்கள் பொடியாகும்

என்னதான் பண்ணையார் குடும்பத்தில் பிறந்து,  வசதியில்  புரண்டு வளர்ந்திருந்தாலும்மேல்தட்டு வாழ்வியலில் திளைத்திருந்தாலும்என்குரல் மனிதக் கட்டுகளை உடைத்து, ‘குரலற்றவனின் குரலாய் ஒலிக்க வேண்டும் என்று நினைத்தேன்” என்று சிற்பி அவர்களே (விகடன்-03ஜனவரி2021)   சொல்வது, ஒரு வகையில் அம்பேத்கர் அவர்களின் மூக் நாயக் தானே?

தமிழ் இலக்கிய வரலாற்றில் சிற்பியின் ‘மெளன மயக்கங்கள்’ புதுக்கவிதை வடிவில் வெளிவந்த முதல் (1982) கதைக் கவிதை (Fiction Poetry) என்ற சிறப்பைப் பெறுகிறது.

கவிஞர் சிற்பியின் முதல் கவிதைத் தொகுப்பு, ‘நிலவுப்பூ’ 1963-இல் வெளிவந்ததுஏறத்தாழ ஐம்பது ஆண்டுக்கும் மேலாக, ஒரு சிறிதும் இடைவெளி விடாமல் கவிதை’ என்கிற ‘பிசாசோடு’ கூடிக் குலாவி வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பதே மிகப்பெரிய சாதனைதான்”- என்கிறார் இலக்கிய விமர்சகர் புதுச்சேரி க.பஞ்சாங்கம் அவர்கள். தற்போது இந்த ஆண்டுக் கணக்கு, அறுபத்திரண்டைத் தாண்டுவது ஒரு பெரும் சாதனை தானே?!

கால முட்டையின்

ஓடு பிளக்கிறேன்,

குஞ்சாய் நானே

குதித்து வருகிறேன்  எனும் அருமையான கற்பனையும் அழகான சொற்புனைவுமே சிற்பி கவிதைகளின் அடையாளம்.

மரபும் புதுமையும் கலந்த உரையாடல் தன்மையுடன் கூடிய மொழிநடையாக, தமது முத்திரையாக அடையாளம் கண்ட சிற்பி”- என்று கலைவிமர்சகர் இந்திரன் சொல்வதை நாம் அப்படியே ஏற்கலாம்!

கவிதை, கதை, நாடகம், சிறார் இலக்கியம், கட்டுரைகள், வாழ்க்கை வரலாற்று நூல்கள், மொழிபெயர்ப்புகள், நல்ல நூல்கள் பதிப்புகள், என இவர் இயங்கிய தளங்கள் தமிழுக்கு வளம் சேர்த்தன. இவரது தமிழ் இலக்கிய வரலாறு (2010) நூல் இலக்கிய ஆர்வலர்களுக்கு மட்டுமின்றி தேர்வாணையத் தேர்வுகளை எழுதுவோர்க்கும் வழிகாட்டி நூலாக அமைந்தது.

90வயதுக்குள் படைப்பும் தொகுப்புமாக இவர் தந்த படைப்புகள் ஏறத்தாழ 90என்பது வியப்பானது மட்டுமல்லஇளைய படைப்பாளிகளுக்கு எடுத்துக்காட்டும் தான்!

வையகம் காப்பவ ரேனும்  சிறு  

     வாழைப் பழக்கடை வைப்பவ ரேனும் என்று மலை  மடு இரண்டு எடுத்துக்காட்டுகளையும் அடுத்தடுத்து அடுக்குவான் பாரதி.     

இது பாரதியின் இயல்பே என்பதை வேறுசில பாக்களிலும் காண முடியும். சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம் என, அவன்கால அறிவியலின் உச்சம் தொட்டுப் பாடி, அடுத்தவரியில், அடிப்படைத் தேவையான சந்தி தெருப்பெருக்கும் சாத்திரம் கற்போம் என்பான்!  

இதுதான் பாரதி! சிற்பி பாரதி வழிவந்தவரல்லவா? நான் பாரதியன், எனக்கு அவனே குரு, அவன் எழுத்தே வேதம்,  வார்த்தை சட்டம், கவிதையே சத்தியம், அந்தப் பரவச அன்பின் வெளிப்பாடு இந்நூல்” என்று பாரதி கைதி எண்-253”- தனிக் கவிதைத் தொகுப்பே எழுதிவிட்டார் சிற்பி! மலையாள மகாகவி வள்ளத்தோளுடன் தமிழ் மகாகவி பாரதியை ஒப்பிட்டு ஆராய்ச்சி செய்து முனைவர் (பிஎச்.டி) பட்டம் பெற்றார்.

இதே போலத்தான் மகாத்மா”(2006) என ஒரு கவிதைத் தொகுப்பே எழுதிய சிற்பி, சாதாரண சித்தாள் பற்றியும் ஒரு கவிதை எழுதியிருக்கிறார் என்பது, அவரது கவிமனம் எங்கே நிலைத்து நிற்கிறது என்பதைக் காட்டும்.

கவிதை முழுவதும், மிக எளிய சிந்து வகையில்! இதோ அதில் சில கண்ணிகள்-  

இழுத்துக் கட்டிய முக்காட்டின் மேல்
     
தெருப் புழுதியின் பூச்சு - கொஞ்சம்
இங்கும் அங்கும் பார்த்து நின்றால்
     
கொத்த னாரின் ஏச்சு !
 
துணுக்குத் தங்கத்தை இணுக்கி வைத்த
     
தோட்டில் வறுமை சிரிக்கும் - அவள்
முணுமுணுத்திடும் தெம்மாங்கு இசைக்கு
     
முத்தமிழ் முந்தி விரிக்கும்

இழைத்த கறுப்பில் குழைத்த மேனி
     
லெட்சுமி சிற்றாள் கூலி - அவள்
உழைக்கும் கரத்தைப் பற்றிடும் காளை
     
உண்மையில் புண்ணிய சாலி  

---------(சிரித்த முத்துகள் - சிற்பி)                         

இந்தக் கவிதை மனம்தான் சிற்பி அவர்களின் சிறப்பு!

      கவிதைத் தொகுப்புகளை ஏராளமாக வெளியிட்டோர் தமிழில் பலருண்டு! ஆனால், “யாருக்காக எழுதுகிறோம்? அதை எந்த வடிவில் எழுதுவது?” எனும் தீர்க்கமான பார்வையோடு சிற்பி அவர்கள் எழுதுவதை, இளைய கவிஞர்கள் கவனித்துக் கற்றுக் கொள்ள வேண்டும்!

      தமிழால் பாரதி தகுதி பெற்றதும்,

       தமிழ்பாரதியால் தகுதி பெற்றதும்  

இவை - பாரதி பற்றிய பாரதிதாசனின் வரிகள்,  

அப்படியே சிற்பிக்கும் பொருந்தும்.              

சிற்பி அவர்களின் 90ஆவது பிறந்தநாள் இன்று!

நூறாண்டு கடந்தும் அவர்கள் வாழ வேண்டும்.

தமிழுக்கு இன்னும் நூறு படைப்புகளை அவர்கள் தருவதோடு, இன்னும் ஆயிரம் சிற்பக் கவிஞர்களை அவர்கள் செதுக்கித் தரவும் சிறப்பாக வாழ வேண்டும் என வாழ்த்துவோம்.

----------------------------------

(இன்று -29-7-2025-கவிஞர் சிற்பியின் 90ஆவது பிறந்தநாள்)

---------------------------------- 

இந்தக் கட்டுரையை இடம் கருதிச் சுருக்கி, --27-7-2025 நேற்றுமுன்தினமே-- வெளியிட்டு, சிற்பி அவர்களுக்கு உரிய பெருமையைத் தந்த இந்து தமிழ் நாளிதழின் ஆசிரியர் குழுவுக்கு எனது நன்றியும் வணக்கமும்.

(நன்றி - இந்து தமிழ் நாளிதழ் - 27-7-2025 )

------------------------------------