தமிழ்இனிது-37 - நன்றி - இந்து தமிழ் -05-3-2024.

 'முதற்கண்' பாவம் இல்லையா?!

தடையமா? – தடயமா?

            வரலாறு கொந்தளித்து எரிந்து அணைகிறது. தடையங்களாக இடிபாடுகளை.. விட்டுச் செல்கிறது” - குறுங்கதை ஒன்றில் வரும் தொடர்.  

தடயம்  -துப்பு / அறிகுறி எனப் பொருள்தரும் சொல். தடையம்  'தடை' என்பதிலிருந்து தோன்றும் சொல் என்கிறது ‘விக்ஷனரி’. இப்போது, அந்தத் தொடரை மீண்டும் பாருங்கள்.  ஐகாரக் குறுக்கம், புடைவை-புடவை, உடைமை-உடமை என வழக்கில் வரும். இல்லாத ஐ-யை ஏற்றி “தடையம்” என்பது தவறான சொல், தடயம் என்பதே சரி.    

ஒருவற்கு, ஒருவர்க்கு

          அனைவர்க்குமான கருத்துகளை, கற்பனையான ஒருவரை முன்னிறுத்திச் சொல்வது, உலக அளவிலான ஓர் இலக்கிய உத்தி! “உன்னிடம் சொல்கிறேன், நீ எல்லாருக்கும் சொல்லிவிடு” என்பது போல! நம் கிராமத்து மக்களிடம் இந்த உத்தி இப்போதும் புழங்குகிறது! அந்த இடத்தில் இல்லாத ஒருவரைக் கற்பனையாக முன்னிறுத்தி, “நீ வண்டியில காட்டுத் தனமாப் பறப்ப, எங்கிட்டாவது மோதி, அநியாயமாப் போய்ச் சேந்துருவ? உன் அலப்பறைக்கு உன் குடும்பம் பலியாகணுமா’டா?” என்று மகனைப் பற்றி அப்பாவிடம் பேசும் பெரியவர் உண்டு!

யாப்பருங்கலக் காரிகை” எனும்  இலக்கண நூலே இப்படி உள்ளது!  “ஒருவற்கு” என்பது, “ஒருவனுக்கு” என்னும் பொருளில் இலக்கியங்களில் வரும். குறளில்  பலப்பல இடங்களில் வந்துள்ளது-40,95,398,400,454,600. மூதுரை-01, நாலடி-73,142. இவற்றில் ‘ஒருவற்கு’, என ஒருமையில் சொன்னாலும் பால்கடந்து அனைவர்க்கும் சொல்லும் அந்த உத்திதான்.

அவர்கள், அவைகள் - 

நமது தொடரில் “திரு எனும் முன்னொட்டு, பெயருக்கு முன்னால் தான் வரும், பதவிக்குப் முன்னால் வராது“ என்றதை  ஏற்றுக்கொண்ட பலரும் கேட்ட கேள்வி, ”பெயருக்குப் பின்னால் ‘அவர்கள்’ போடுவது சரியா“, ”அது எப்படி ஒருமைப் பெயருக்குப் பன்மையைச் சேர்ப்பது?”.  ‘அவர்கள்’ என்னும் சொல், சொல்லளவில் பன்மைதான் எனினும் தொடரில் வரும்போது ஒருவரையே குறிப்பதால் ஏற்கலாம் என்பதே பதில். “அமைச்சர் அவர்கள்  வருகிறார்கள்“ என்பதை “அமைச்சர் வருகிறார்“ என்பது மரியாதைக் குறைவானது என்பது புரியாதா என்ன? புரியாதவர்க்கு, ‘நியூட்டனின் மூன்றாம் விதி’ புரிய வைக்கும்!

இதனை,“ஒருவரைக் கூறும் பன்மைக் கிளவியும் ஒன்றனைக் கூறும் பன்மைக் கிளவியும் வழக்கின் ஆகிய உயர்சொற் கிளவி”என, தொல்காப்பியம் ஏற்கிறது. (சொல்-கிளவியாக்கம்-510) எனினும் இதை, “பால்வழு அமைதி” என்னும் தலைப்பிலேயே சொல்லியிருப்பது, இது, பொதுப்படை அல்ல என்பதையும் புரிய வைக்கும் நுட்பம்!

அதற்காக, ‘அவை’ என்னும் சொல்லோடு, மேலும் ஒரு கள் விகுதி போட்டு ‘அவைகள்’ என்பது தவறு!  ஆக, ‘அவர்கள்’ சரி!  ‘அவைகள்’ தவறு ! கள் போடும் இடங்களில் கவனமாக இருக்க வேண்டுமல்லவா?!  

முதற்கண் வணக்கம்?

            பேச்சாளர் சிலர், ”…அவர்களுக்கு எனது முதற்கண் வணக்கம்“   என்று தொடங்குவதைப் பார்க்கலாம். நல்ல வேளையாக, “இரண்டாம் கண் வணக்கம் யாருக்கு?” என்று யாரும் அவரிடம் கேட்பதில்லை!  At first எனும் பொருளில் முதற் கண்ணைப் பயன்படுத்தும் போது,  “முதற்கண் எனது வணக்கம்“ என்று சொல்வதே சரியானது. ‘எனது முதல் வணக்கம்’ என்பது இன்னும் தெளிவானது.  இதில்,  தேவையில்லாமல் கண்ணை ஏன் இழுக்க வேண்டும்! பெண்பாவம் போல கண்பாவம் இல்லையா?!

------------------------------------------------

4 கருத்துகள்:

  1. அறியாதன அறிந்தோம்..பகிர்ந்தமைக்கு வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  2. தங்களின் தமிழ் பற்றும் தொண்டும் தொடர வாழ்த்துகிறேன்

    பதிலளிநீக்கு
  3. பல புதிய செய்திகள் ஐயா, இந்த வாரம்!

    இந்தத் தொடர் மூலம் சரியான தமிழ்ப் பயன்பாட்டை மட்டுமில்லை எப்படியெல்லாம் தவறாகத் தமிழ்ப் பயன்பாடு மேற்கொள்ளப்படுகிறது என்பதையும் தெரிந்து கொள்ள முடிகிறது. ‘தடையம்’ என்றெல்லாம் கூட எழுதுகிறார்கள் என்பதை இப்பொழுதுதான் அறிகிறேன்.

    அவர்க்கு, இவர்க்கு, அனைவர்க்கு என்றெல்லாம் இருப்பதால் ஒருவர்க்கு என்பதுதான் சரி என்று இத்தனை காலம் நினைத்திருந்தேன்! வெட்கப்படுகிறேன்!😔

    அவை, இவை எனும் பன்மைச்சொல்லுக்குப் பின் ‘கள்’ விகுதி சேர்க்கும் தவறான வழக்கம் பல காலமாக இருந்து வருகிறது. இந்தத் தலைமுறையில் அவ்வளவு இருப்பதாகத் தெரியவில்லை. இதைக் ‘கள் போடும்பொழுது’ கவனமாக இருக்க வேண்டும் என்று நீங்கள் குறிப்பிட்டது நகைச்சுவை!

    முதற்கண் வணக்கம் எனச் சொல்வது அவ்வளவு பொருத்தமானதாக எனக்கும் தெரியவில்லை. அதனால் எந்தக் காலத்திலும் நான் அதைப் பயன்படுத்தியதில்லை. இப்பொழுது அது தவறுதான் என்று நீங்கள் கூறியிருப்பதைக் காண மகிழ்ச்சி!!

    மிக்க நன்றி ஐயா!😍

    பதிலளிநீக்கு