கவிஞர் ஜெயபாஸ்கரன் கவிதைகள் - பெருந்தொகுப்பு - அவரது வேண்டுகோளும், எனது அணிந்துரையும்

 
வணக்கம் நண்பர்களே!  ஒரு முதன்மையான செய்தியையும், அச்செய்தி தொடர்பாக உங்களுக்கு ஒரு கோரிக்கையையும் இப்பதிவின் வாயிலாக உங்களுக்கு முன் வைக்க விரும்புகிறேன்.

 முப்பத்தைந்து ஆண்டுகளுக்கும் மேற்பட்ட இடையறாத எனது கலை இலக்கிய, ஊடகப் பயணத்தில் இதுவரை மொத்தம் பன்னிரண்டு நூல்களை எழுதியிருக்கிறேன்.

 கவிதை நூல்கள் நான்கு, கட்டுரை நூல்கள் நான்கு, சமூகம், இலக்கியம் சார்ந்த ஆய்வு நூல்கள் இரண்டு, பிற வகை படைப்புகள் இரண்டு என்னும் கணக்கில் எனது அந்நூல்கள் மலர்ந்துள்ளன.

 'தினமணி' உள்ளிட்ட பல இதழ்களில் பேரார்வத்தோடு கட்டுரைகளை இடையறாது நான் எழுதி வந்தாலும் கூட, 'கவிஞர்' என்பதே என் தனித்த  அடையாளமாகி அவ்வகையிலேயே ஒரளவு நான் அறியப்பட்டிருக்கிறேன்.

 பட்டி மன்றங்கள், கருத்தரங்குகள் எனப் பல்வேறு வகையில் என் கவிதைகள் பரவலாக மக்களிடம் சென்றடைந்திருப்பதே அதற்குக் காரணம்.

 இதுவரையில் என்னுடைய நூல்கள் அனைத்தையும் எனது பதிப்பகத்தின் வாயிலாக (வழுதி வெளியீட்டகம்) நானே வெளியிட்டு வருகிறேன். அவ்வகையில் தான் இதுவரையில் எனது நான்கு கவிதைநூல்கள் வெளிவந்து, நிறைவான வரவேற்பைப் பெற்றன!

 சமூக ஊடகங்களின் பயன்பாடுகள் தீவிரமாக நடைமுறைக்கு வந்த கடந்த நான்கு ஆண்டுகளில், மேலும் கூடுதலாக எனது கவிதைகளுக்குக் கொஞ்சம்  வெளிச்சம் கிடைத்து வருகிறது.

 அதன் விளைவாகபல்வேறு நண்பர்களும்  இலக்கிய ஆர்வலர்களும் என் கவிதை நூல்கள் கிடைக்குமிடம் குறித்து என்னிடம் தொடர்ந்து விசாரிக்கத் தொடங்கியுள்ளனர்.

 எனவே, கடந்த கரோனா காலத்தில் எனக்கும் கிடைத்த தனிப்பெரும் தனிமையைப் பயன்படுத்தி எனது  நான்கு கவிதை நூல்களையும் ஒரு பெருந்தொகுப்பாகத் தொகுத்துத் தயாரிக்க முனைந்தேன். மேலும் அந்தக் கரோனா காலக் கட்டத்தில், எனது கவிதைகளை முன் வைத்து முன்னொரு காலத்தில் பல்வேறு இலக்கிய  ஆளுமைகளால் எழுதப்பட்ட நூற்றுக் கணக்கான திறனாய்வுக் கடிதங்களையும் பல ஆண்டுகளுக்குப் பிறகு நிதானமாகப் படித்துப்பார்க்கின்ற நல்லதொரு வாய்ப்பும் எனக்குக் கிடைத்தது,

அந்த வாய்ப்பு என் இலக்கியங்களின் மீதான எனது நம்பிக்கையை உறுதி செய்யும் வகையிலும் அமைந்தது.

 எனவே அத்தகைய கடிதங்களில் இருந்தும், பல்வேறு இதழ்களின் திறனாய்வுகளில் இருந்தும் சிறு சிறு பகுதிகளை இந்நூலின் பின் இணைப்பாகச் சேர்த்திருக்கிறேன்.

86- புதுக் கவிதைகள்,

16-நெடுங்கவிதைகள்,

7- தலைப்புகளில் 72 குறுங்கவிதைகள்,

20- பாடல்கள்

திருப்பூர் கிருஷ்ணன், காசி ஆனந்தன், தமிழருவி மணியன், ஆரூர் தமிழ்நாடன், நா. முத்துநிலவன் ஆகிய  முதன்மையான சான்றோர்களின்  அணிந்துரைகள்,

5-என்னுரைகள்,

52 -கலை இலக்கிய வாணர்களின் திறனாய்வுக் கடிதங்கள் மற்றும் எனது  வாழ்க்கைக் குறிப்பு என்று,  608- பக்கங்களில் இத்தொகுப்பு நேர்த்தியான முறையில் கெட்டி அட்டை மற்றும் மேலுறையுடன் தரமான தாளில் மிகச் சிறப்பாகத் தயாரிக்கப் பட்டிருக்கிறது.

 எனது கால் நூற்றாண்டுக் கவிதைகளின் களஞ்சியமாகவும், எனது ஒரு தனிப் பெருங்கனவாகவும் வடிவம் கொண்டிருக்கின்ற இத் தொகுப்பானது,

 'ஜெயபாஸ்கரன் கவிதைகள்' (2002)

 'மனைவியானேன் மகளே!' (2010)

 'சொல்லாயணம்' (2014)

 'வரவேண்டாம் என் மகனே!' (2019)

 ஆகிய எனது நான்கு கவிதை நூல்களின் ஒற்றைப் பெருவடிவமாகும்!

 எனதன்புத்  தோழரும், கவிதை ஆய்வாளருமான புதுக்கோட்டை நா. முத்துநிலவன் அவர்கள்  இத்தொகுப்புக்கு தமிழ்க் கவிதையின் வரலாறு முழுவதையும் செறிவாக முன்வைத்து தனது அணிந்துயையை ஒரு மிகச் சிறந்த ஆய்வுரையாக இந்நூலுக்கு வழங்கி எனக்குப் பெருமை சேர்த்திருக்கிறார்.

 எனது அன்புத் தம்பியும், மிச் சிறந்த ஓவியரும், திரைப்பட இயக்குனருமான என் பாசத்துக்குரிய 'மகா கலைஞன்சந்தோஷ் ஈஸ்வரமூர்த்தி அவர்கள் , பென்சில் ஓவியத்தில் நூலின் முகப்பை வரைந்தளித்திருக்கிறார். 

 என் கவிதைகளின் உள்ளடக்கங்களாக எவையெவை இருக்கின்றன என்பதை, இந்நூலுக்கான தோழர் முத்து நிலவன் அவர்களின் அணிந்துரையில் நான் தெரிந்து கொண்டது போலவே, என் முகத்தில் எத்தனைச் சுருக்கங்கள் இருக்கின்றன என்பதை, இந்நூலின் முகப்பு அட்டைக்கான தம்பி சந்தோஷ் ஈஸ்வர மூர்த்தியின் பென்சில் ஓவியத்தில் நான் தெரிந்து கொண்டேன். 

 அந்த ஓவியத்தின் வாயிலாக, காலம் என் முகத்தில் வரைந்த சுருக்கங்களை ஏற்றுக் கொள்ளவும் அவற்றை ரசிக்கவும்  நான் கற்றுக் கொண்டேன்.

 இத்தொகுப்பு, எழுத்தறம் மாறாத,எழுத்தறத்தை மீறாத என் எழுத்துப் பயணத்திற்கான உறுதியான சான்று என்பதை மீண்டும் ஒருமுறை எனக்கு மெய்ப்பித்திருக்கிறது!

 என் எழுத்துகள் மேம்போக்கானதல்லசமூக மேம்பாட்டிற்கானது என்பதில்  எப்போதும் நான் உறுதியாக இருக்கிறேன்.

 கல்வி நிறுவனங்களின் ஆய்வு மாணவர்களுக்கும், எழுத முனைகிற இளம் கவிஞர்களுக்குமான ஒரு பாடநூலாக இருக்கட்டும் என்னும் கோணத்திலும் இந்நூலை நான் தயாரித்திருக்கிறேன்.

 நான் தான் இப்படியொரு நூலைத் தயாரித்திருக்கிறேனா என்கிற வியப்பும் இன்னமும் எனக்குள் இருக்கிறது. ஆனால் உண்மை! நான் தான் இந்த நூலைத் தயாரித்திருக்கிறேன். தேவைதானே கண்டுபிடிப்புகளின் தாய்  என்கிற சமூகவியலின் அடிப்படையிலேயே‌ இச்செயல் நிகழ்ந்திருப்பதாகக் கருதுகிறேன். 

 ஒரு கவிஞன் என்னும் வகையில் கவிதைகளை எழுதுவது மட்டுமல்ல, அப்படி எழுதியவற்றைக் கேட்போருக்குத் தர வேண்டிய கடமையும் எனக்கிருக்கிறது. 

 அதுவும் என் கவிதைகளின் வெளியீட்டாளனாகவும் நானாகவே இருக்கும் போது, இப்பணியை நான் தான் செய்ய வேண்டும். இதோ அதைச் செய்திருக்கிறேன்!

 இந்நூலின் ஒவ்வொரு எழுத்திலும் தனது ஈடுபாட்டினைக் காட்டி மாதக் கணக்கில் உழைத்து இந்நூலினைச் சிறப்பாக வடிவமைத் திருப்பவர், 'அர்ஜுன்  செல்லம் வரைகலைதம்பி சுபாஷ் அவர்கள்!

 இந்நூலைத் தயாரிப்பதில் அவர்காட்டிய காட்டிய ஈடுபாடும், இந்நூலுக்குக் கிடைக்கப்போகிற விற்பனை வரவேற்பு குறித்த அவரது சாதகமான சொற்களுமே, இப்பணியை நான் பாதியில் கைவிட்டு விடாமல் கரையேற்றின என்றால் அது மிகையில்லை.

 2017-ஆம் ஆண்டு நான் வெளியிட்ட, தினமணி நடுப்பக்கக் கட்டுரைகளான, 'வாய்மொழியல்ல வாழ்க்கை மொழி' நூலுக்கு பாரத ஸ்டேட் வங்கி வேண்டிய அளவுக்குக் கடன் கொடுத்தது. அப்போதைய அவ்வங்கியின் திருவான்மியூர் கிளை மேலாளர் திரு.சிவநேசன் அவர்கள் அதற்கு வழி காட்டினார். அந்தக் கடன் முழுவதையும் உரிய தவணைகளில் கட்டி முடித்து வங்கியிடம் சான்று வாங்கிவிட்டேன்.

 இந்நூலுக்கு அது போன்ற முயற்சிகளை நான் மேற்கொள்வதாக இல்லை.  'நெடுந்தவணை நம்பிக்கை நடவடிக்கைகள்' வேண்டாம் என நினைக்கிறேன். 

நட்பு நிதியிலும், விற்பனையிலும் நடக்கிற வரை நடக்கட்டும் என்பதே இந்நூலினைக் குறித்த எனது முடிவாகும்.

 இந்த நூலின் விலை, ரூ:900/ என்று தீர்மானிக்கப்பட்டிருக்கிறது.

நீங்கள் சுவைத்துப் படிக்கவும், பெருமித உணர்வோடு வாங்கி மற்ற நண்பர்களுக்குப் பரிசளிக்கவும்மேற்கோள் காட்டிப் பேசவும், எழுதவும், சிந்திக்கவும் ஏதுவானதாக  விளங்குகிறது என்பதுதான், இந்நூல் எனக்கு வழங்கியிருக்கின்ற முதற்கட்டப் பெருமகிழ்ச்சியாகும்!

 எனவே  நண்பர்களே...  

எனது இந்த முயற்சிக்கு வலிமை சேருங்கள், உங்களில் யாருக்கு இந்நூலின் எத்தனைப் படிகள் தேவைப்பட்டாலும் உடனடியாக என்னை, 9444956924 -என்கிற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள்.

 தொகையை இதே அலைபேசி எண்ணுக்கு, 'Google pay' வழியில், அல்லது என்னிடம் நீங்கள் பெறுகிற எனது வங்கிக் கணக்கின் வழியில் எனக்கு அனுப்பி வைக்கலாம்.

 நூலினைப் பாதுகாப்பான முறையில் நான் உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன். அனுப்பும் செலவு என்னுடையது. அதற்கும் சேர்த்தே விலை நிர்ணயம் செய்திருக்கிறோம்.

 இப்படியெல்லாம் கோரிக்கை எழுதுவது  எனக்கு ஏதோ ஒரு மாதிரியாகத்தான் இருக்கிறது!

 என்றாலும், மகாகவி பாரதிகூட தனது கவிதை நூலை அச்சிட்டு வெளியிடுவதற்காக இப்படித்தானே எழுதிக் கதறினான் என்று நினைத்து ஆறுதல் பெறுகிறேன்.

 நன்றி நண்பர்களே!

உங்கள் அனைவருக்கும் என் நெஞ்சம் கனிந்த, இனிய,  'இலக்கிய' நல் வாழ்த்துகள்!

*****

 --முகநூலில்--

கவிஞர் ஜெய பாஸ்கரன்

செல்பேசி – 9444956924

-----------------------------------------------------------------------------------------  

பின் அட்டை 

----------------------------------------------------------------------- 

 இப் பெருந்தொகுப்பிற்கான எனது அணிந்துரை  --

அணிந்துரை - நா.முத்துநிலவன்

போர்க்குணம் மிகுந்த அழகியல் கவிதைகள்

பாஞ்சாலி சபதம் எழுதிய பாரதி; அதற்கு, மிகச்சிறிய ஆனால், சிறந்த ஒரு முன்னுரையை எழுதியிருப்பார். இன்றைய இலக்கியவாதிகள் எதை எழுத வேண்டும், எப்படி எழுதவேண்டும் என்பதற்கான இலக்கணம் போல, அந்த முன்னுரை அவ்வளவு அழகாக பட்டுக் கத்தரித்தது போல இருக்கும்!   

எளிய பதம், எளிய சொற்கள் பொதுமக்கள் விரும்பக் கூடிய மெட்டு, இவற்றால் ஆகிய காவியம் ஒன்றைச் செய்து தருகிறவன், தமிழன்னைக்குப் புதிய அணிகலன் சூட்டியவனாகிறான் என்பதோடு மட்டும் நின்று விடாமல், “ஓரிரண்டு வருஷத்து நூல்பழக்கம் உள்ளவர்க்கும் புரிவதோடு, காவியத்துக்கு உள்ள நயங்களும் குறைவுபடாது இருத்தல் வேண்டும்”- எனும் வரிகள் மிக முக்கியமானவை. அதனால்தானோ என்னவோ, பாரதியார் கவிதைகள்  பதிப்புப் பலவற்றில் பாஞ்சாலி சபதம் இருக்கும், இந்த முன்னுரை இருக்காது!

பேருக்கும் புகழுக்கும் எழுதவேண்டாம்

யாருக்கு எழுதுகிறீர் அதுதான் செய்தி!

விருதுக்கு எழுதுதல் வேண்டாம் வேண்டாம்,

வியர்வையை எழுதுங்கள் அது மணக்கும்! 

என்று தனது இலக்கிய நோக்கைப் பிரகடனப் படுத்தி அதன்படியே எழுதியும், வாழ்ந்தும் வரும் மிக அரிதான எழுத்தாளர் கவிஞர் ஜெயபாஸ்கரன்.

நல்ல இலக்கியவாதிகள் பெரும்பாலும் சோம்பேறிகளாக இருப்பார்கள்’ என்ற சுந்தர ராமசாமியின் கருத்தை மறுக்கும்படி, தொடர்ந்து எழுதும் நல்ல எழுத்தாளர்கள் குறைவுதான். அதில் முக்கியமானவர் ஜெயபாஸ்கரன்

“நல்ல இலக்கியவாதிகள் பெரும்பாலோர் கலகலப்பாகப் பழக மாட்டார்கள்!” என்றும் ஒரு குற்றச்சாட்டு உண்டு! இதையும் உடைத்து எல்லாரோடும் கலகலப்பாகப் பழகக் கூடிய கண்ணியமிக்க மனிதர் இவர்.

“முழுநேர இலக்கியவாதிகள் நேர்மையாகவும் கூர்மையாகவும் இருக்க முடியாது” என்றும் ஒரு கருத்து உண்டு. இதயத்தை வயிறு தின்றுவிடும் இடம் இதுதான், இதைத் தனது கடைசிக் காலத்தில் எழுதிப் புலம்பியவன் புதுமைப்பித்தன். முழுநேர எழுத்தாளராகவே இருந்தும், சுயமரியாதையை எந்த இடத்திலும் விட்டுக் கொடுக்காத, அதே நேரம் நேர்மையான எழுத்தாளராகவும் திகழும் ஜெயபாஸ்கரன்  இந்த வகையிலும் பாராட்டுக்கு  உரியவர் மட்டுமல்ல, அவ்வாறானவர்க்கு எடுத்துக் காட்டாகவும் உள்ளவர்.

“இயக்கம் சார்ந்து நிற்பவர்கள் அதைத் தாண்டிப் பார்ப்பதில்லை” என்றும் ஒரு கருத்து உண்டு. இதையும் மீறி எழுதி, எதிலும் சமரசம் செய்துகொள்ளாமல் இன்றும் வென்று நின்று தன்வழியில் சென்று கொண்டே இருப்பவர் இவர். இது இவரிடம் கற்றுக்கொள்ள வேண்டிய பண்பு

“கவிதை என்றால் எளிதாக புரிந்து விடக்கூடாது, புரிந்தால் கவித்துவம் போய்விடும்” என்றெல்லாம் அச்சமூட்டுகிறவரும் உண்டு! அதையும் தாண்டி, கிண்டல் கொப்பளிக்கவும் அதேநேரம் ஆழமாகவும் எழுதக் கூடியவர் இவர்.

கவிதை எழுதத் தொடங்கியவர்கள் பெரும்பாலோர் ஒரே கவிதைத் தொகுப்போடு முடித்துக் கொள்வதே நிகழ்கால நடப்பு! நான்கு தொகுப்பு வந்த பிறகும் வற்றாத ஊற்றாக, வளர்ந்து கொண்டே இருப்பவர் இவர்!

கவிதை எழுதவும், பாடல் எழுதவும், ஊட்டிக்கும் பெங்களூருக்கும் போய் “ரூம்“ போட்டு ஒரு வரி கூட எழுதாமல் திரும்பிய கவிஞர் பலருண்டு(!)

இருக்கும் கூட்டுக்குள் எல்லா வகையான சிக்கல்களும் எழுந்து நின்று மிரட்டிய போதும், விரட்டிய போதும் அதற்குள் இருந்து கொண்டே, அதைப் பற்றியே கவிதை வடித்துச் சிரிப்பவர் இவர்.  

புகழ்மிக்க இலக்கிய நண்பர் பலரைக் கொண்டிருந்தாலும், அவர்களிடம் எதையும் எதிர்பார்க்காமல், அதனாலேயே தன் மதிப்பை உயர்த்திக் கொண்டு பெரிய நட்பு வட்டத்துக்குச் சொந்தமான கவிஞர் ஜெயபாஸ்கரன்

  கவிஞர் ஜெயபாஸ்கரன், தான் எழுதியிருக்கும் நான்கு தொகுப்புகளிலும் உள்ள கவிதைகளை, ஒரே தொகுப்பாக்கித் தருவதன் மூலம், பெண்ணியக் கவிதைகள், சமூகக் கிண்டல் (சடையர்) கவிதைகள், நெடுங்கவிதைகள், வாழ்வியல் நுட்பக் கவிதைகள், தமிழிய-சூழலியக் கவிதைகள் மற்றும் பாடல்கள் என்று பிரித்து, முனைவர் பட்ட ஆய்வு செய்வோர்க்கு நல்வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. தரமும், நுட்பமும், சொற்பொருள் ஆழமும் ஆய்வுக்கான தனித்தன்மையுமான கவிதைகள் இத்தொகுப்பில் ஏராளம் உள்ளன.

விஞர் ஜெயபாஸ்கரன் தனது மொத்தக் கவிதைகளின் தொகுப்புக்கு என்னிடம் முன்னுரை கேட்டபோது வியந்துதான் போனேன். என்னிலும் பிரபலகவிஞர், எழுத்தாளர் பலரும் ஜெயபாஸ்கரன் மீது அன்புகொண்ட நண்பராக இருப்பதை நானறிவேன். அப்படி இருந்தும் என்மீது வைத்த நம்பிக்கையே இவரது வித்தியாசப் போக்கை அழுத்தமாக உணர்த்தியது. அதற்கு நான் நன்றிசொல்லப் போவதில்லை. உண்மை சொல்லப் போகிறேன்.

தமிழ்க் கவிதை வரலாற்றை எழுதிக் கொண்டிருக்கும் நான், இவரது கவிதை உருவ-உள்ளடக்கப் போக்குகளை அறிய மொத்தமாக வந்த வாய்ப்பாகவே எண்ணி அதற்காக நன்றி சொல்வதில் மகிழ்கிறேன்.

      ங்கச் செய்யுள் தொடங்கி, இருபதாம் நூற்றாண்டுத் தொடக்கம் வரை மரபு நடையிலேயே இருந்த தமிழ்க்கவிதை, ஆங்கிலத் தாக்கத்தில் பாரதி தொடங்கிவைத்த  பிறகே வசன-கவிதையாக (தீ இனிது வழி) அறிமுகமானது. பிறகும் நாற்பதாண்டுகள் கழித்தே மக்களிடம் சென்று சேர்ந்தது. இடைப்பட்ட  ஆண்டுகளில் க.நா.சுப்பிரமணியம், சுந்தரராமசாமி., கு..ராஜகோபாலன், புதுமைப்பித்தன் முதலானோர் பிரபலமானவர்கள்- எழுதிய போதிலும், “புதிய கவிதை வடிவம்” என்று, முயற்சியளவிலேயே நின்றது. புதுக்கவிதையை மக்கள் கவிதை யாக்கிய பெருமைக்குரியோர் வானம் பாடிகளும், தனிநபர் இயக்கமாக எழுதி வந்த சி.சு.செல்லப்பாவின் எழுத்துஇதழுமே!

குழுவாகவும் சிறுபத்திரிகை முயற்சியாகவும் தவழ்ந்து கொண்டிருந்த புதுக்கவிதை, எழுபதுகளில்தான் ராஜநடை போட்டு வீதிகளுக்கு வந்தது. விடுதலைக்குப் பிறகு 1962இல் நடந்த சீன இந்தியப் போரும், அது காரணமாக 1964வரை வலுவாக இருந்த பொதுவுடைமை இயக்கம் பிளவுபட்டதும், விடுதலைக்குப் பாடுபட்ட காங்கிரஸ் கட்சிபத்தே ஆண்டுகளில் --1967 தேர்தலில்-- ஒன்பது மாநிலங்களில் தோல்வியுற்றதும், தமிழ்நாட்டில் 1965இல் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டமும், 1967இல் திமுக ஆட்சியில் அமர்ந்ததும், டிசம்பர்-25, 1968-இல்,  வெண்மணியில் பட்டியல் இனத்து உழைப்பாளிகள் 44பேர் உயிரோடு எரிக்கப் பட்டதும் - எல்லாம் சேர்ந்து தமிழ்ச் சமூகம் கொதிப்பானபரபரப்பான- ஒரு சூழலில் இருந்தது.

“இத்தகைய சூழலில்தான் புதுக்கவிதையில் நிகழ்காலச் சமூக அவலங்களை ஒருவிதமான கற்பனாவாத மொழியில் வானம்பாடிக் கவிஞர்கள் வெளிப்படுத்தினர்என்கிறார் அறிஞர் க.பஞ்சாங்கம். (கவிக்கோ கவிதைகள் மொத்தத் தொகுப்பு நூலுக்கான இவரது முன்னுரை, ரகுமான் கவிதைகள் போலவே அற்புதமானது, இளங்கவிஞர்கள் படிக்க வேண்டியது)

உள்ளடக்க மாற்றத்தில் வானம்பாடிகள், உருவ மாற்றத்தில் சி.சு. செல்லப்பாவின்எழுத்துஇதழ் எனும் இருபெரும் பங்களிப்பால் புதுக்கவிதை பிரபலமானது. வானம்பாடிகள்அதுவரை எழுதி வெளியிட்டு வந்த- வானம்பாடி இதழ்க் கவிதைகளைத் தொகுத்தவெளிச்சங்கள்தொகுப்பும் சி.சு.செல்லப்பாவின் எழுத்து இதழில் எழுதியோரின் கவிதைகளைத் தொகுத்தபுதுக்குரல்கள்தொகுப்பும் ஒரே ஆண்டில் (1972) வெளிவந்தன. இவைதான் தமிழின் முதல் புதுக்கவிதை இயக்கப் புறப்பாடு! இவை இரண்டும் இரண்டு தத்துவப் பின்னணி கொண்டவை என்பது தனீ ஆய்வுக்குரியது.

      1970களுக்குப் பிறகு  நிறைய எழுதப்பட்ட புதுக்கவிதையில்,பம்பர் விளைச்சலில் சாவி அதிகமாகிவிட்டதுஎன்றார் கவிஞர் பாலா.

      இதன் பிறகு எழுந்த அய்க்கூ எனும் (மூன்றடி சப்பானிய) குறுங் கவிதை தமிழில் பெருகி, இன்று அது தனி இலக்கிய வகையாகவே வளர்ந்து, மு.முருகேஷின்மும்மொழி ஐக்கூகவிதைகள்வரை வெற்றி நடையிடுகிறது.

ஆனால்,

பாரதி, பாரதிதாசன், பட்டுக்கோட்டை எனும் முப்பெரும் கவிஞர்களில் பாரதி மட்டுமே மரபுக் கவிதை, புதுக்கவிதை, அய்க்கூ () குறுங்கவிதை ஆகிய வடிவங்களோடு தொடர்புடையவன் என்பதும் நம் கவனத்திற்குரியது.

புதுக்கவிதை எழுதிய சிலர் அய்க்கூ கவிதையை ஏற்பதில்லை! புதுக்கவிதையை வெற்றிபெற வைத்த வானம்பாடிகளில் ஒருவரான பாலா, தனது கவிதைத் தொகுப்பில் ஒரு அய்க்கூ கூட இல்லை என்பதை மிகவும் மகிழ்ச்சியாக அறிவித்தது வியப்பிற்கு மட்டுமல்ல, ஆய்வுக்கும் உரியது!

மரபுக்கவிஞர் பலரும் புதுக்கவிதையை ஏற்பதில்லை! (திருச்சியில் 70களில், தமிழாசிரியர் கழக மாநாட்டில் கண்டனத் தீர்மனமே போட்டார்கள்!)

அய்க்கூ கவிதை எழுதும் பலர், மற்ற வடிவங்களை ஏற்பதில்லை!

ஆனால் இன்று கவிதை என்றால், புதுக்கவிதையே எனும் இடத்தைப் பிடித்துவிட்டது. சான்று - மரபுக் கவிதை எனும் முன்-ஒட்டே போதுமானது.

கவிதையின் வெற்றி, வடிவத்திலில்லை! தமிழ்க் கவிஞர்களின் இந்தப் போக்கை கவிதைப் பேரரசி நின்று ரசித்துச் சிரிப்பதாகவே எனக்குப் படுகிறது!

மக்கள் எழுத்தாளர்கள், இலக்கிய வடிவத்தைத் தீர்மானித்துக் கொண்டு, எழுத அமர்வதில்லை! யாருக்காக எழுதுகிறோம் எனும் நோக்கமே அது சிறுகதையா, நாவலா, கட்டுரையா, மரபா, புதுக்கவிதையா, பாடலா எனும் வடிவத்தைத் தீர்மானிக்கிறது! நாம் எந்த ஆயுதம் எடுக்க வேண்டும் என்பதை எதிரி தீர்மானிக்கிறான் எனும் மார்க்சியம் போல,  எந்த வடிவத்தில் எழுத வேண்டும் என்பதை, உள்ளடக்கமும், இலக்கிய நோக்குமே தீர்மானிக்கும்.

எந்த வடிவத்தையும் சிறப்பாக எடுத்தாளும் திறன் மிக அரிது!

மரபுக்கவிதை, புதுக்கவிதை, பாடல், உரைநடை எனப் பல அவதாரம் எடுக்கும் இலக்கிய வடிவங்களை ஆட்சி செய்யும் ஆற்றல் வாய்ந்தவர்கள் மிகவும் குறைவான தமிழிலக்கியச் சூழலில், இவை அனைத்தையும் எடுத்து அனாயாசமாக வெற்றிபெறும் ஆற்றல் கொண்டவர் கவிஞர் ஜெயபாஸ்கரன். இவரது நோக்கம் மிகத் தெளிவாக இருப்பதுதான் இதற்குக் காரணம்.

தன் மேதைமையைக் காட்டுவதாக எண்ணி, வாசகரைக் குழப்பும் வரி ஒன்று கூட இந்தத் தொகுப்பில் இல்லை என்பதை உறுதியாகச் சொல்வேன். எளிமையாகப் புரிந்தபின்னும் அது தரும் சிந்தனைத் தாக்கத்திலிருந்து வெளிவரச் சிறிது நேரமாகும் எனும் எச்சரிக்கையை யும் முன்னரே தந்துவிடுகிறேன்

“இது என்ஓவியம் ஆனால் உங்கள்கண்காட்சி” என்பார் கல்யாண்ஜி.

“கவியரங்கம் என்னை மாற்றியது, கவியரங்கத்தை நான் மாற்றினேன். கவியரங்கங்களே என்னை மக்களுக்கு அறிமுகப்படுத்தினமக்களுக்கு நான் நல்ல கவிதையை அறிமுகப்படுத்தினேன்” என்பார் கவிக்கோ அப்துல் ரகுமான். ஆனால் அவருக்குப் பின் கவியரங்க வயலில் நல்ல விளைச்சல் வெகு குறைச்சல்தான் என்பதும் நாம் அறிந்ததே!

கவிதை பாட / மேடைக்கு வந்தவர்,

எனத் தொடங்கிய / ஒலி கேட்டதுமே,

புதுக்கவிதை என்று / புரிந்து கொண்டேன்- செந்தலை ந.கவுதமன்!

வெறும் சொல்ஜாலங்களே கவியரங்கமாகச் செய்வோர் மத்தியில் கவிதையைக் கவிதைக்காகவே ரசித்து, சமூகத்திற்காக எழுதி இயங்கியவர் கவிஞர் ஜெயபாஸ்கரன். அதனால்தான் வடஅமெரிக்கத் தமிழ்ச் சங்கம் (FETNA) முதலான தமிழ் வளர்க்கும் வெளிநாட்டு அமைப்புகளும் தமிழ்நாட்டின் புகழ்பெற்ற கல்லூரிகள் பலவும், தொலைக்காட்சி நிலையங்கள் பலவும் இவரது கவியரங்கத் தலைமையை விரும்பி அழைத்து தமது விழாவை அலங்கரிக்கச் செய்தன. பாடல்கள் எழுத வேண்டிப் பலரும் அழைக்கின்றனர். 

ருவரின் சமூக அக்கறை பற்றித் தெரிந்துகொள்ள, பெண்களைப் பற்றிய அவரது பார்வை எப்படி இருக்கிறது என்று பார்த்தாலே போதும்!

சங்க இலக்கியம் மேன்மையான தகுதியைப் பெற என்ன காரணம்?, சங்கக் கவிதைகளில் அதிகமாக உள்ளவை அகப்பாடல்கள், பெண்கள் வாழ்வியலே பெரும்பாலான சங்கக் கவிதைகளின் உள்ளடக்கம் என்பனவே

பெண்களைப் பற்றிய பலப்பல கவிதைகளில் ஜெயபாஸ்கரனின் அறச்சீற்றம், கிண்டல், வாழ்வியல் பிரச்சினைகளின் மீது நுட்பமான கவனம், போலிச் சடங்குகளைப் போட்டுடைத்தல், பெண்கள் தம்மைத்தாமே இழிவுபடுத்திக் கொண்டு அடிமைத்தனத்தில் அமிழ்ந்து கிடப்பது கண்டு எழும் ஆற்றாமை என அனைத்தும் வெளிப்படுகிறது. பெண்களை உரிமைக்காப் போராட எழுப்பி உசுப்பி விடும் கிளர்ச்சி வேலையை செய்யத் தவறவில்லை!

சொற்செட்டாலும், உள்ளடக்கத்தின் அடர்த்தியாலும், கிண்டல் கலந்த அழகிய வெளிப்பாடும் சேர்ந்து இவரிடம் புகழ்பெற்ற கவிதையாகிறது -

நீ எனக்கிருப்பதைப் பிறர் கேட்டாலொழிய

சொல்லிக் கொள்வதில்லை நான்,

நான் உனக்கிருப்பதை ஆதாரங்கள் அணிந்து

பறைசாற்றியாக வேண்டும் நீ

எனக்குப் பிறகு என் நினைவுகளோடு 

வாழ வைக்கிறார்கள் உன்னை,

உனக்குப் பிறகு உன் தங்கையோடு 

வாழ வைக்கிறார்கள் என்னை  

எனும் வரிகள் பெரும்புகழ் பெறப்போவது உறுதி!

“மனைவியை இழந்தவன் கிழவனே ஆனாலும்                                         

மறுமணம் பண்ணிக்கிட உரிமை உண்டுஇள  

மங்கையை மணப்பதுண்டு மண்டை வறண்டு!

கணவனை இழந்தவள் கட்டழகி ஆனாலும்                                       

கடைசியில் சாக மட்டும் உரிமையுண்டுஇதில் 

கதைகளும் கட்டிவிடும் ஊர் திரண்டுஎனும் பாடல் வரிகளை எழுதியவர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் என்றாலும் கூட அவரது மற்ற பாடல்கள் அளவுக்கு இந்த வரிகள் புகழ்பெறாததற்குக் காரணம் இச் சமூகம் ஆணாதிக்கச்  சேற்றில் இன்றும் கூட அமிழ்ந்து கிடப்பதன்றி வேறென்ன?

அந்தச் சேற்றை வழித்தெறியும் வேலையைத் தொடர்கிறார் கவிஞர்   

நஞ்சருந்த முனைவான் ஒருவன்

ஆசிட் வீசுவேன் என்று அறிவிப்பான் ஒருவன்

திடுக்கிட்டுத் தலை உயர்த்தி / பெற்றவளைப் பார்த்துக் கலங்கி

பிறந்தவள் கேட்டாள் / "இப்படியெல்லாம் எனக்கு நேர்வது

உனக்கு எப்படித் தெரியும் தாயே?" 

அமைதியாக அம்மா சொன்னாள்:

"இவன்களது அப்பன்களைக் கடந்தே

உன் அப்பனுக்கு மனைவியானேன் மகளே!"

ஆண்களின் மங்கள வாத்தியமே, 

பெண்களுக்குச் சோக கீதமாவது எப்படி?

மனைவியான நான் / எழுது கோலை வீசிவிட்டு

உன் கரண்டியைப் பற்றினேன் 

என் தூரிகையை போட்டுவிட்டு உன்

துடைப்பத்தை பிடித்தேன் / என்னை நிமிர்த்தும் என்று

நான் கற்ற கல்வி / 

நம் பிள்ளைகளின் கல்விக்கு

அடியுரமாய் மாறியது”  -எனும் வரிகள் கண்ணதாசனின்வளர்ந்த கலை மறந்துவிட்டாள் ஏனடா கண்ணாபாடலை நினைவூட்டுகின்றன. இதை தியாகம் என, பெண்களும் நம்பும்படிச் செய்தது ஆணாதிக்க உலகின் வெற்றி!                                                                             

இதனால்தான் பெண் முன்னேற்றத்திற்கு என்ன செய்ய வேண்டும் என்ற கேள்விக்குபெண்கள் கையிலிருக்கும் கரண்டியைப் பிடுங்கிவிட்டு புத்தகத்தைக் கொடுங்கள்என்று எளிமையாகச் சொன்னார் பெரியார்! அந்த அவசியத்தை அடுத்தடுத்துச் சொல்லிச் செல்கிறார் கவிஞர் ஜெயபாஸ்கரன்.

இதையே கிண்டலாகவும் வாழ்வியலோடு சொல்லத் தெரிகிறது இவருக்கு -

“சமையலறையில் என் கண்களை கட்டி விட்டாலும்

எந்தப் பொருளிலும் விரல் படாமல்

கேட்ட பொருளை கேட்ட மாத்திரத்தில்

எடுத்துத் தருவேன்” என்று

சவால் விடவும் செய்கிறாள் அங்கிருந்து!

அவளிடம் சொல்லிக் கொள்வதில்லை நான் -

நீ மூவாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக

அங்கே இருக்கிறாய் என்று!

--இந்தக் கடைசி இரு வரியில் 

பெண் அடிமை வரலாற்றையே தந்துவிடுகிறார்

இதுதான், சொல்லுக்குள் வாக்கியத்தைச் சுருக்கி வைக்கும் சூட்சுமம்!

இருமனம் ஒன்றிணையும் திருமணம் என்று சொல்லிக்கொள்கிறோம். ஆனால் பல திருமணங்கள் அப்படித்தானா நடக்கின்றன என்னும் கவிஞரின் கேள்வி எழுப்பும் வேள்வியில் போலிச் சடங்குகள் பொசுங்கும் நறுமணம் நம் நாசிகளில் வந்து வீசுகிறது. -

மேன்ஷனில் தங்கி ஓட்டலில் சாப்பிட்டு

வயிற்றுவலி கண்டவனுக்கு நிவாரணமாய்

கழுத்தில் இறுகியது கமலாவின் தாலி!

சேவைக்கென்று, தொடர்பில்லாத ஒருத்தி சிக்க வைக்கப் படுகிறாள்!

இத்தகைய இழிவுகள் எது ஒன்றும் நேராமல்

வெறிச்சோடிக் கிடக்கிறது வெண்சங்குக் கழுத்து -

செவ்வாய் தோஷமாம்!  

எனும் போது, அந்த இழிவையும் கடந்த பேரிழிவைக் காட்டிவிடுகிறார்.

பெண்ணை அடிமைத் தனத்தில் சிக்கவைக்கச் செய்த சூழ்ச்சிகளில் இன்றும் புழக்கத்தில் உள்ளபொன்மொழிகளைப் புட்டுப் புட்டு வைக்கிறார்-

சகோதரியே

உழைப்பதை போலவே / உறங்குவதும் உன் உரிமை

உன்னுடைய உரிமைகள் அனைத்தையும்

ஒவ்வொன்றாகப் பறித்து விட்ட நாங்கள்

உறங்கும் உரிமையை மட்டும் / வேறு மாதிரியாக

வரையறை செய்திருக்கிறோம்

அதாவது “பின் தூங்கி முன் எழுவாள் பத்தினி என..

புன்னகையோடு சொன்னவர், அறச்சீற்றத்தோடு அடுத்து எழுதுகிறார்-

குடல்புரட்டி வாந்தி வரும் / காமவெறிக் குப்பைகளை

இன்னும் எத்தனை காலம் / கேட்டுக் கொண்டிருப்பீர்கள்!

இதை வேறு மாதிரி தணிகைச் செல்வன் கவிதையாக்குகிறார்-

முத்தங்களை எழுதி முடித்தீர்கள் பஞ்சணையின்

சத்தங்களை எழுதிச் சலித்தீர்கள் ...

பித்த நடம்புரிந்த பேனாக்கள் இனி ஏழை

ரத்தக்கண்ணீர் நிரப்பி நடக்கட்டும் சிவப்பாக!

போலி அலங்காரம் கூட அவளை அடிமைப் படுத்தும் என்பதைச் சொல்லி, அதை மீறி அவர்கள் எழும்போது ஆணாதிக்கம் அலறுவது சிரிப்புத்தானே?

புருவத்தை வில்என்றும் / பார்வையை அம்பென்றும்

பாட்டுப் பாடியே பெண்களை / பாழ்படுத்திப் பார்த்தவர்கள் இன்று

கைகளில் வில்லேந்தி / கண்களால் குறி பார்த்து

அம்பெய்தும் பெண்களை / அரண்டு போய் பார்க்கிறார்கள்!

அன்னை, சகோதரி, மனைவி, தாதியாய் பார்க்கப்படும் பெண்கள் கடைசி வரையும் மனுஷியாகவே பார்க்கப்படுவதில்லை அல்லவா? அப்படிப் பார்த்தால், அடிமைத்தனம்  இல்லாத அன்புலகம் எப்படி இருக்கும் என்று அதையும் காட்டி நம் ஆவலைத் தூண்டும் கவிதையும் இவரிடம் உண்டு-

அன்பும் அக்கறையும் ஆறுதலும் தோழமையும்

ஒருவருக்கொருவர் நாம் உள்ளவரை பகிர்ந்து கொள்வோம்

ஊரார் உறவா நட்பா உன்னைப்பார்த்து எனைக் காட்டி

யார் இது எனக் கேட்டால் என் மகன் என்று சொல்க

யாரேனும் உன்னைக் காட்டி யார் இது எனக் கேட்டால்

அம்மா என்று அழுவேன் நான் அழ வேண்டாம் என்பாய் நீ

இப்படியான பெண்ணியக் கருத்துகள்,  பெண்களுக்கான கருத்துகள்  அல்ல! உண்மையில் ஆண்கள் உணரத் தூண்டும் சமத்துவ நோக்கம் கொண்டவை!

“சீறுவோர்ச் சீறு”, ரௌத்திரம் பழகு” - பாரதியைப் படித்த பெண்கள் கூட திருமணச் சடங்கில் தாலிகட்டப் பட்டதும் கட்டுக்குள் வந்துவிட வேண்டியே தாலி கட்டுகிறார்களோ? (கட்டுக்கழுத்தி என்பதும் அதுதானே?)

ஒருமுறை / மந்தைவெளியில் / ஒருவன்

என்னையே / முறைத்துப் பார்த்தான் / அவனைப் பற்றி

காவல் நிலையத்தில் / புகார் கொடுத்தேன்  

மாப்பிள்ளை வீட்டார் / தரப்பு என்று / பல்வேறு குழுவினர்

பலமுறை என்னை / அவ்வாறே பார்த்தார்கள்

அவர்களுக்கு / காபி கொடுத்தேன் (பார்வைகள்) –

இதே சூழலைச் சொல்லும் இன்னொரு கவிதையில்-

அமர்ந்த நிலையிலேயே / அப்பா அதிர அதிர

சன்னமான குரலில் / நிதானமாக அரங்கேறிய

வரதட்சணை பேரத்தின் / வலிதாங்க முடியாமல்

கதவை சாத்திக்கொண்டு / காற்றொலியோடு கட்டுப்படுத்தி

குலுங்கி அழுகிறேன்-

சில்லரைக் காசுகளே எஞ்சியிருந்த / என் கைப்பையை

பறித்து கொண்டு ஓடிய / எவனோ ஒருவனை துரத்தி

விடாதே பிடி பிடி என்று / வீதியே திரும்பிப்பார்க்க

குரல் எழுப்பிய நான்  (எழு குரலும் அழுகுரலும்)

இரண்டு கவிதைகளிலும் வரும் இருவேறு நிகழ்வுகளையும் ஒன்றோடு ஒன்றை ஒப்பிட்டிருக்கும் படிமம்  படிப்பவரை உலுக்கி எடுப்பது உறுதி!

இப்படியான வரதட்சணை உள்ளிட்ட ஆணாதிக்கக் கொள்(ளை)கையைத்தான்,

மாமனார் வீட்டில் இன்று

முப்பது பவுன் நகை கொள்ளை போனது,

அப்படியெனில் இது மூன்றாவது கொள்ளை” எனும் கந்தர்வன், கொள்ளைச் சமூகமே பெண்ணடிமையின் ஊற்றுக்கண், வரதட்சணை என்பது அதில் ஒன்று என்று கூறுவதன் பின்னணியை இங்கு ஒப்பிடத் தோன்றுகிறது. 

இணையரில் ஒருவரின் பிழையால், வீட்டில் சண்டை இயல்பானதுதான். அதற்குள் இருக்கும் நெருக்கடியைக் கூட, கவிதையாக்குவதுதான் அபூர்வம்!

ஒரு நகை மீது காட்டப்படும்  / அலட்சியம் குறித்து

கண்டிக்கலாம் தானே என / கேட்கக்கூடும் நீங்கள்

கண்டிப்பாக இல்லை நான் / ஏனெனில்

உங்களுக்கு தெரியாமல் / அதனுள் உறைந்திருக்கிறது

அடகில் இருக்கும் / தங்கச்சங்கிலிக்கான  

ஒன்று  (சொல்லாத சொல்)

அந்தவகை ஆண்களின் மீது சொடுக்கும் சாட்டையடி பலமாகவே விழுகிறது-

பிரிவதற்கு முன்பாக  

அவளுக்கும் / ஒரு தொகை

தரகர் சொன்னதைத் / தாண்டியே கைமாறியது.

அவளின் பொருட்டு / அள்ளி அள்ளிக் கொடுத்த அவனுக்கு

அவள் கொடுத்துவிட்டதாக பேசிக்கொள்கிறார்கள்.

அதையும் அவன்தான் கொடுத்துவிட்டு வந்திருக்கிறான்

என்பதை அறியாமல்! (சாபத்தை வரம் என்றும் சொல்லலாம்!)

இப்படியான கவிதைகள் பெண்களுக்காகப் பேசும்போது அது நமக்கான கவிதையாகவே ஆண்களுகம் கருதுவார்களானால் அவர்கள் சமத்துவர்கள்!

கவனத்துக்குரிய வாழ்வியல் வண்ணங்கள்,

எவ்வளவு சிறப்பான கவிதையாக இருந்தாலும் அன்றாட வாழ்வியல் பற்றிய சிந்தனை இல்லாத கற்பனையால் பயன் என்ன விளைந்துவிடப் போகிறது? வானத்தையும் விண்மீன்களையும் பாடும் “சௌந்தர்ய உபாசகர்கள்” நம் வீடு, வீதி,  நாடு, மக்கள்  பிரச்சினைகளைப் பாடாமல் தப்பித்துக் கொள்ளவே எழுதுகிறார்கள்(Escapism)! ஆனால், இந்தச் சிறு சந்தேகமும் எழாவண்ணம் அன்றாட நிகழ்ச்சிகள் அனேகமுண்டு கவிஞரிடம்! அதுவும் அழகும், கிண்டலும், சொல்நேர்த்தியும், சமூக உணர்வும் சமவிகிதத்தில்!

நாராசமாக ஒலிக்கிறது

நகரப் பேருந்துகளில் நடமாட்டம்

நரகமாக இருக்கிறது / அவற்றில்

எனக்கு நேரும் பயண அனுபவங்கள்....

பாய்ந்து உட்புகுந்து அதிகாரம் பேசுகிற

பரிசோதகர்களிடம் கொடுத்து விடுகிறேன்

பயணச்சீட்டை,

யாரிடம் கொடுப்பது பயண வேதனைகளை!?

நகரவாசிகள் எல்லாரும் முந்திய கிராமவாசிகளே என்பதைப் போகிற போக்கில் சொல்லும்போது நமக்கும் சுருக்கென்று தைக்கிறது!

எப்படி புரிய வைப்பது இவர்களுக்கு

பட்டணத்தில் இருந்து வந்து இறங்கும் எவரும்

கிராமத்தில் இருந்து தான்

பட்டணத்துக்கு போனார்கள் என்பதை? அவர்கள் போகாவிட்டாலும், அவர்களின் தந்தை, தந்தைக்குத் தந்தை நிச்சயம் போயிருப்பார்கள் தானே?

வைகைப் புயல் வடிவேலு எப்படி இந்த அளவுக்குத் தமிழர்களிடையே பேசவும் புகழவும் படுகிறார் என்று நான் சிலநேரம் யோசித்ததுண்டு. தமிழர் பலரின்இரட்டை முகஅழகை, அவரளவுக்கு நடிப்பில் கொண்டுவந்தவர் வேறு யார்? அதை நையாண்டி கலந்த கவிதையாக ஜெயபாஸ்கரன் எழுத, “அடடே! இதை நாமும் பார்த்திருக்கிறோமே?” என்று நாமும் நினைத்துக் கொள்கிறோம்! பாருங்களேன் இந்தக் கவிதையை -

மரணமடையும் / நமது நண்பர்களின்

இறுதிச் சடங்குகளில் / எப்போதுமே தென்படாத நீ

எங்கிருந்தோ வந்து / மேடை ஏறி

அழவும் செய்கிறாய் / இரங்கல் கூட்டங்களில்! (துயரம்)

இந்த வாழ்வியல் கிண்டல்தான், ஜெயபாஸ்கரனின் பாணியாகத் தெரிகிறது! பொன்னாடை, மேடை முழக்கம், பட்டம், பேரம், பூக்காரி, நண்பனாக இல்லாத நண்பர்கள், இரவுத் திருடர்கள் என இவ்வாறான பட்டியல் நீள்கிறது.

உரிய பட்டங்களோடு / முக்கிய பிரமுகர்களின்

முகவரி எழுதிய கையோடு / என் வீட்டிற்கான

மளிகை சாமான் பட்டியல் / எழுத நேரும் சமயங்களில்

என்னால் தவிர்க்கவே முடியவில்லை

வீரச் சீரகம், விவேக வெந்தயம் / என்று

பட்டியல் முழுவதையும் / பட்டங்களோடு எழுதுவதை!

என்கிறபோது, “சிங்கமென சீறி வா! புலியெனப் புறப்பட்டு வா! அலைகடலென ஆர்ப்பரித்து வா! மனுசனா மட்டும் வந்திராத!”-என்று நான் பற்பல மேடைகளில் பேசியது நினைவுக்கு வந்து, எனக்கும் ஜெயபாஸ்கரனுக்கும் உள்ள அலைவரிசை ஒத்திசைவை நினைத்துப் பெருமிதம் கொள்கிறேன்.

குடித்துவிட்டுக் குப்புறக் கிடக்கும் குடிமகனின் “செல்பேசி அழைப்பு” கவிதை, மாப்பசான் பாணியில் முடிவில் எதிர்பார்க்கப்படும் திருப்பம் போல ஜெயபாஸ்கரன் கவிதையின் இறுதிவரிகளில் ஒரு சொடக்கெடுக்கும் வரி இருக்கும் என்னும் வாசகரின் எதிர்பார்ப்பை அவர் ஏமாற்றவில்லை!-

அவனை அழைத்தது

அவனது குழந்தையாக இருக்காது என்று நமக்கு ஆறுதல் சொல்லி முடிக்கும் கவிதை படிப்போர்க்கும் சொல்லமுடியாத நிம்மதியைத் தருகிறது. 

ஜெயபாஸ்கரனின் சிறந்த கவிதைகள் பலவற்றை வெளியிட்ட விகடன் இப்போதும் அதைத் தொடர்வது மகிழ்ச்சிக் குரியதுதான். ஆனால், இவரது நல்ல கவிதைகள் பலவற்றை வெளியிட்ட தினமணிக் கதிரில் இப்போது கவிதைகளே வருவதில்லை என்பது அந்த நிர்வாகத்தின் கவனத்திற்குரியது!

உன்னிடம் அறவே இல்லாத அன்பை

கடன் முறித்து விடும் என்று

கடையில் எழுதி வைத்து இருக்கிறாய் நீ! என்பது அதில் ஒன்று!

சொல்லாயணம் எனும் கவிதைத் தலைப்பே அழகுதான்! தொடர்ந்து, “காத்துக் கொண்டு கிடக்கும்என்பதில் கா….வுக்கு நாலைந்து துணைக்கால் குறும்பு (சேலைக்காரியின் சீற்றம்), நீண்ண்ண்ண்டு கொண்டிருக்கும் தொலைக் காட்சித் தொடர் (அப்படியெனில் நீங்கள்), சாகவரம் பெற்றவர்களும் சாகா வரம் பெற்ற சம்பிரதாயங்களும் (ஓர் அன்னையின் சமாதானம்), போல்வன சொல்லழகு காட்டும் பொருளழகுக் கவிதைகளின் பொன் வரிகள்! 

கூச்சமுள்ளவர்களும், கூச்சமில்லாதவர்களும்கவிதையேஎற்றிற் குரியர் கயவர்எனும் குறளை நினைவுபடுத்துவதும், “மல்லிகை” “நாரைகவிதைகளில் வரும் சொல்லாத சொல்லின் வலிமையும் வேறு தரம்!

நறுமணச் சேறுகேள்விப் பட்டிருக்கிறீர்களா? குடலைப் புரட்டும் நாற்ற மானதுதான் சேறு! அதுவே, நமக்குச் சோறு படைக்கும் சேறு எனில் அதுதான் நறுமணம் எனும் பொருளில் வரும் சொல்லாட்சி அர்த்த மணம் பரப்புகிறது!

இதுபோலும் முரண்சுவையில் வரும் ஒரு கவிதை, நமது காலத்தின் மிகப் பெரிய சோகத்தை முன்வைக்கிறது, பாருங்களேன்-

ஒருபகலில் / நல்ல விலைக்கு (வயலை)

விற்றுவிட்டு வந்து / விழுந்து புரண்டு அழும்

என்னைப் பார்த்துக் / கண்கலங்கிப்

புன்னகை செய்கிறான்

ஒரு கொடிய இரவில் / எல்லாவற்றையும்

விட்டுவிட்டுக் / கட்டுமரம் ஏறிவந்து

கரையேறி நின்று /கைகளைத் தூக்கியவன்.இதில் வரும்கண்கலங்கி புன்னகை செய்கிறான்என்பதன் பொருள் மனச்சாட்சி உள்ளவர்க்கே புரியும்.

இந்தக் கவிதை மட்டுமல்ல, கவிஞரின் பரம்பரை மண்ணை - வயலை இழந்த சோகம் கவிதைகளில் தொடர்வதும் நம்தலைமுறைச் சோகம்தான்.

மகாத்மா என்று சொல்லப்பட்ட காந்தியை, மிஸ்டர் காந்தி என்றே அழைத்தார் அம்பேத்கர். தலைக்குப் பின்னே ஒளிவட்டம் சுழற்றிய ஸ்ரீலஸ்ரீகள், நீதி மன்ற விசாரணையில் இருளடித்துப் பதறி எழுந்துநின்ற காட்சியை நம் தலைமுறை பார்த்து விட்டது! அப்படியும் கூட்டம் குறையவில்லை அந்தக் கைலாசாவில்! முதற்குடிமகன் கூட, நாலாந்தரக் குடிமகனாகும் இடங்களின் புனிதத்தை உடைத்து  பெரியாரின் கைத்தடியாகிச் சுழல்கிறது கவிதை-

நான் வெறுந்திரு / நீ தவத்திரு

நான் கை அசைத்தால் அது வாழ்த்து,

நீ கையசைத்தால் அது அருளாசி!

என்னுடையது வருகை / உன்னுடையது விஜயம்!

எல்லாம் ஒரே மாதிரி தான் உனக்கும் எனக்கும்,

செத்துப் போய் விட்டதாகச் சொல்கிறார்கள் என்னை

முக்தி அடைந்து விட்டதாகச் சொல்கிறார்கள் உன்னை!  

இந்தக் கவிதையைத் தந்தை பெரியார் பார்த்திருந்தால் தமிழ்நாட்டின் பட்டி தொட்டியெங்கும் மேடையில் எடுத்துச் சொல்லி மேற்கோள் காட்டியிருப்பார்!  

அவரவருக்கும் அவரவர் பிரச்சினைகள். பிரச்சினைகளை எப்படிப்  பார்க்கிறோம் என்பதில்தானே வாழ்க்கையும், இலக்கியமும் இயங்குகிறது?

குஷன் மெத்தையில் இருந்து குதித்தெழுந்து

கோரைப் பாயில் உறங்கும் என்னை

தட்டி எழுப்பி சொல்கிறாய்

தூக்கம் வரவில்லை என்று! (நிறைவு) எனும் கவிதை இந்த முரண்பட்ட சமூகத்தின் முகத்தில் உமிழும்போது சிரித்துக் கொண்டே அழுகிறோம் நாம்!

இங்கே / ஆர்டர் கொடுத்து விட்டு

போனை வைப்பதற்குள் / வாசலில் இருக்கிறது பீசா

அங்கே / மனு மேல் மனு கொடுத்தும்

கேட்பாரின்றி கிடக்கிறது என் கேழ்வரகு (இங்கேயும் அங்கேயும்)

இங்கே / அரும்பாடுபட்டு நான்

அரை கிரவுண்டு வாங்கியிருப்பதாக

பெருமிதத்தோடு கடிதம் எழுதினாள்

என் மனைவி தன் மாமனாருக்கு,

அங்கே / என் ஊரோடு சேர்த்து

16 ஊர்களை ஒருவனே வாங்கிவிட்டதாக

கண்ணீரோடு கடுதாசி எழுதினார்

என் அப்பா / தன் மருமகளுக்கு!

--இந்தக் கவிதையில் என் எனும் சொல்லைக் கவனியுங்கள் இந்த ஒற்றைச் சொல் மாறி மாறித் தரும் உறுத்தல்தான் நமது சமூகத்தின் மனச்சாட்சி.  

கதைக் கதைகள்இயல்பாக வருகிறது ஜெயபாஸ்கரனுக்கு!

வீட்டு மனை வியாபாரிக்கு / விற்று முடித்தோம்

எங்கள் வரப்பின் வழியே / ஏரிக்குச் செல்வதை

வழக்கமாக கொண்டிருந்த 

எங்களின் எதிரி வீட்டு எருமை மாடுகள்

புதிதாய் மறித்து நிற்கும் / கம்பி வேலியின் முன்

வழியறியாது / திகைத்து நின்றதைப் பார்த்து

திடீரென வெடித்து / கதறி அழுதார்

இவ்வளவு காலமாக அவற்றை 

அவ்வழியில் நடக்க விடாமல்

விரட்டி அடித்து கொண்டு இருந்த / என் அப்பா

ஒரு கவிதைக்குள் தான் எத்தனை எத்தனை வரலாற்றுக் கதைகள்! சிறு பெரு முரண்பாடுகள் மோதும்போது சின்னது காணாமல் போய்விடுகிறதுதானே?

இயற்கைக் காதலர் ஜெயபாஸ்கரன்!

இயற்கையை ஒட்டியே வாழ்ந்த தமிழர்களின் இலக்கிய இலக்கணம் மட்டுமின்றி தமிழர் வாழ்க்கை முழுவதும் பூவோடும் பிற இயற்கைத் தாவரங்களோடும் இணைந்தே கிடப்பதைத் தனியாக ஆய்வு செய்யலாம்! இதுதான் பழந்தமிழர் வாழ்வையேதிணை வாழ்க்கைஎன்று சொல்ல வைக்கிறது! அகத்திணை ஏழில் ஐந்தும், புறத்திணை பன்னிரண்டில் ஒன்பதும், பூக்களால் பெயர் பெற்றிருப்பதில் வியப்பேதும் இல்லை! தமிழ்நாட்டுப் பெண்கள், பூக்களின் பெயர்களையே சூடியிருப்பது மட்டுமின்றி கூந்தலில் ஏதாவது பூக்களையும் சூடியே திரிகிறார்கள்! இன்றும் சொல்மாறி, பொருள்மாறாமல் உள்ளசென்னைத் தமிழ்” கூட திணை தாங்கி நிற்கிறது!முல்லைஎன்றால் ஒழுக்கம். முல்லை மாறியவன்? ஒழுக்கம் கெட்டவன்! இதே பொருள்தான்முல்லைமாறிஎனும் சொல், “மொல்லமாறிஎன்றானது!

இன்றும் தமிழ்நாட்டின் பல்லாயிரம் ஊர்கள், மரம்(இலுப்பூர்), குளம் (பெரியகுளம்), ஏரி(பொன்னேரி), மலை, குன்றம், காடு என இயற்கை தழுவிய பெயர்கள் என்பது தமிழரின் இயற்கை தழுவிய வாழ்வின் அடையாளம்தான். மூவேந்தரின் அடையாளப் பூவும் வேம்பு, ஆத்தி, பனம்பூ என்பதும் இங்கு கவனிக்கத் தக்கது. (ஆத்திமரங்கள் நிறைந்த காடுதான் ஆர்க்காடு என்றானது. இதை ஆங்கிலேய உச்சரிப்பால் ஆற்காடு என்று சொல்லி, அதற்கு ஆலங்காடு எனத் தவறான பொருளும் பழகிவிட்டது) இந்த இயற்கைக் காதலும்முல்லைக்குத் தேர்கொடுத்த பாரி”, “மயிலுக்குப் போர்வை தந்த பேகன்என்று இனக்குழுத் தலைவர்களோடு போய்விட்டது! ஆனாலும் மேலை நாடுகளின் இயற்கை ஆர்வலர்களால் இன்று இத்துறையேசுற்றுச் சூழல் துறைஎன்று பரிணமித்திருப்பது பாராட்டக் கூடியதுதான். ஸ்வீடன் பள்ளிச் சிறுமி கிரீட்டா தன்பெர்க், உலகத் தலைவர்களைப் பார்த்து, “என்ன துணிச்சல் உங்களுக்கு? (HOW DARE YOU?) என்ற ஒற்றை வரியில், உலகமே  பொறி கலங்கிப் போனதே? ( https://www.instagram.com/gretathunberg/?hl=en )

ஆனால், கவிஞர் ஜெயபாஸ்கரன், பழந்தமிழர் இயற்கைக் காதலின் இன்றைய தொடர்ச்சியாகவே இயற்கையைப் பலவாறாகப் பாடுகிறார்!

நால்வகை நிலங்கள் நிமிர்ந்த நம் வாழ்க்கையிலே

நிரந்தரப் பாலையெனும் நிலப்பரப்பு கிடையாது

செடிகளில் பூக்கள் எல்லாம் சின்ன சின்ன தேன் குடங்கள்

மரங்களின் கிளைகள் எல்லாம் பெரிய பெரிய தேன் அடைகள்

என, தொகுப்பு முழுவதும் இயற்கையின் மீதான காதல்கவிதைகள் ஏராளம்!

இந்த உலகம் மனிதர்களுக்கானதல்ல, மனிதர் தோன்றி வளர்வதற்குப் பலகோடி ஆண்டுகளுக்கு முன் பூமியில் தோன்றிய தாவரங்கள், பூச்சிகள், விலங்குகள் என, கோடிகோடி உயிரினங்களுக்கானவை என்பது மனிதர்க்கு உறைக்கவில்லை! பணத்திற்காக இந்தப் பூமியைக் கொள்ளை யடித்துவரும் லாபவெறியைக் கண்டித்து, பூமியைக் காப்பாற்றும் உணர்வு மிக அரியது. அந்த அரிய உணர்வு இயல்பாகவே ஜெயபாஸ்கரனுக்கு அமைந்திருப்பதை, தொகுப்பின் சூழலியல் கவிதைகள் பலவற்றில் பார்க்க முடிகிறது

விதம் விதமான பறவைகள் / கூடுகட்டி வாழ்வதால்

இம்மரத்திற்கு / கூட்டு வசதி வாரியம் என்று

பெயர் வைத்தால் / குறைந்தா போய்விடுவீர்கள்?எனும் இடத்தில் ரீட்டா தன்பர்க்குடன் கவிஞர் மீராவும் இணைந்து தெரிகிறார்!

ஆண் பெண் நட்பு -கவிதைகளில் பாவலர் அறிவுமதியின் நட்புக் காலம் தனிப் புகழ்பெற்றது. அந்த வகையில், சிறந்து நிற்கும் இந்தக் கவிதை சிறப்பானது-

உன் பொருட்டு நானும் / என் பொருட்டு நீயும்

அலங்கரித்து கொள்வதை / நிறுத்திக்கொண்ட நிமிடத்தில்

தொடங்கியது / நம் இருவரின் நட்பு.

சொற்சிலம்பம்

எருமையின் மடிக் காம்பு போலிருக்கும் நீலவண்ண நெய்தல் பூ! என்னும் உவமை, “செம்புலப் பெயல்நீர்எனும் குறுந்தொகை போலவும், “பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன பவளக் கூர்வாய்ச் செங்கால் நாராய்”-எனும் சத்திமுத்தப் புலவர் பாடல் போலவும் அப்படிப் பொருந்துகிறது!

இங்கே-

சகல சகதிகளோடும் இருக்கும் வாடகை வீடுஎனும் வரியை முதலில் எழுத்துப் பிழையோ என்று எண்ணினேன், பிறகுதான் அது கருத்துப் பிழை பற்றிய கவிதை என்பது கவனத்திற்கு வந்து வியப்பும் மகிழ்ச்சியும் தந்தது!

“அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா” என்ற திரைக்கலைஞர் கவுண்டமணியின் அசட்டுச் சிரிப்பைப் போல நம்முடனே பலரும் இருப்பதைப் பார்த்திருக்கிறோம் அல்லவா? எந்நாளும்  அழியாத மகா கவிதைத் திருமக்களாய்த் திரியும் அவர்களைக் கிழித்துஎடுக்கிறார் கவிஞர்-

*அவருக்கு எதிர்ப்படக் கூசி

ஆங்காங்கே ஒதுங்குவோர் உண்டு

வலியப் புன்னகைத்து- 

அவரை வணங்குவோரும் உண்டு (தூய்மைத்திரு ………. அவர்கள்)

மகளிர் கல்லூரி வாசல்களில்

பளபளப்பாய் தெரிந்து - உன்னைப்

படாதபாடு படுத்தும்

ஒவ்வொரு பூவும்

ஏதேனும் ஒரு துயரம் தொனிக்கும்

பின்புலத்தில் பூத்தவையே (பூக்களின் பின்புலம்) என்பது, தான்பெறாத பிள்ளைகளாய்ப் பெண்பிள்ளைகளைக் கருதும் தந்தையின் கவலைவரிகள்!

தமிழ்த் திரைப்படங்களில் கல்லூரியை காட்டினாலே அதில் காதல் பாட்டு ஒன்றாவது உண்டு என்னும் இலக்கணத்திற்கு வைக்கப்பட்ட குட்டு  இது

எங்களால் காப்பாற்ற முடியாத

இந்திய விவசாயிகளை

வால்மார்ட் வகையறாக்களே

வாழவைக்கப் போகின்றன.  (ஓர் அரசின் அறிவிப்பு)

சடங்குச் சனியன்களில் ஒளிந்து கிடக்கும் சாதிப் பிசாசுகளை, மதபூதங்களை நாம் எப்போது தவிர்க்கப் போகிறோம்? என நியாயமான கேள்விகளை நமக்குள் விதைக்கிறார் கவிஞர்.

செதுக்கப்பட்ட கவிதை எப்படி இருக்கும் இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாய் உள்ள கவிதைகள் பல உண்டு இத் தொகுப்பில் உதாரணமாக :

குனிந்து தேநீர் தருகையில்

என்

கூந்தலில் இருந்து

உதிர்ந்த மல்லிகையொன்றை

யாருமறியாமல்

எடுத்து பத்திரப்படுத்திய

மாப்பிள்ளைக்கு தெரியாது

அது

கலங்கி விழாமல் இருந்த

என் கண்ணீரின் சார்பாக

விழுந்தது என்று   (மல்லிகை)

இதில் முதலில் வரும் என் எனும் சொல் தனியாகவும் கடைசியில் வரும் என் எனும் சொல் சேர்ந்தும் வருவதைக் கவனித்தால் அதற்குப் பொருளுண்டு என்பது புரியும். புதுக்கவிதையில் வார்த்தை மடக்கும் அர்த்தம் தரும், ஒவ்வொரு மடக்குச் சொல்லும் சொடக்கெடுக்க வேண்டும் என்பதற்கு இதில் வரும் அது, மற்றும் என் எனும் தனிச் சொற்களை நிதானமாக நிறுத்தி வாசித்தால் தான் அழகும் அர்த்தமும் சரியாகப் புரியும்.

பனை வணக்கம்

ஆயிரம் கொடைகளின் ஓர் உருவாய் நீ

அழிக்கப்பட்டாலும் பயன் தருவாய்.

கருப்பு என்பதாலேயே ஒதுக்கப்பட்ட தமிழர் மரபுச் சொத்து இரண்டில் ஒன்று பனைமரம் மற்றொன்று எருமை மாடு

“ஏழைகளாக பிறந்தது தவறா ஐயா சொல்லுங்கள்?” என்னும் கவிதை நெஞ்சைச் சுடுகின்றது. “இன்பம் என்று சொல்லக் கேட்டதுண்டு அது எங்க வீட்டுப் பக்கம் வந்ததுண்டா?” என்ற பட்டுக்கோட்டையை மட்டுமல்லாமல்,

தமுஎகச கலைஇரவுகளில் கரிசல் கிருஷ்ணசாமியின் இசையிலும் குரலிலும் புகழ்பெற்ற, நவகவி எழுதியஇலைகள் அழுத ஒரு மழை இரவுஎனும் பாடல் நினைவுக்கு வந்து நெஞ்சைப் பிசைந்து நினைவை ஈரப்படுத்துகிறது. 

கல்வி மறுப்பது வன்முறைதான் - நம்

கனவை மறுப்பதும் வன்முறைதான் எனும் வரிகளை அமைதியாகச் சிந்தித்துப் பார்த்தால் இதிலுள்ள ஆழமான அரசியல் புரியும்.

முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து

பாலை என்பதோர் படிவம் பெறுவது போல்

தமிழும் ஆங்கிலமும் பிறமொழிக் கூட்டமும்

முட்டாள்தனமான முறைமையில் திரிந்து

தமிழ் மொழியினிலே பாலை வளர்ந்தது  

-இன்றைய பாலையிலிருந்து மருதநிலத் தமிழராய் மலர நினைப்போர் இதைப் புரிந்துகொண்டல் நல்லது.

அடுத்துவரும் வரிகளில் தமிழர் வழிபாட்டில், உணர்வில், தொழிலில், கல்வி என அனைத்துத் துறைகளிலும் இந்தப் பாலை வளர்ந்த விதத்தைப் பட்டியல் போட்டுச் சொல்வது, “வேதம் புதிதுபடத்தில் அந்த சின்னச்சங்கரன், பாலுத் தேவர் கன்னத்தில் அறையும் ராட்சசக் கை போல் நம் முகத்தில் விழுகிறது-

கருவறை புகுந்த கடவுளின் கைத்தடி

வடமொழி தொடங்கி வணங்கச் சொன்னதால்

தமிழ் வழிபாடு பாறையாய் போனது

தமிழின் தாய்ப்பால் பருகிய பிள்ளைகள்

புட்டிப்பால் ஆங்கிலம் சூப்பிக் கிடப்பதால்

தமிழ் வழிக்கல்வியில் வளர்ந்தது பாலை

இளநீரும் பதநீரும் இல்லாமல் மறைந்து

கோக்கும் பெப்சியும் கூடி கலக்க - என்று அடிகள் தோறும் பல இடிகள்!

காலத்திற்கேற்ற வளர்ச்சியில் தமிழை வளர்க்காத குற்றவாளிகளை இப்படிக் கைகாட்டி அடி வெளுத்து வாங்குகிறார் ஜெயபாஸ்கரன்--

ஜெர்மனிக்கும் சென்னைக்கும் சிறகடிக்கும் விமானத்தில்

செந்தமிழில் அறிவிப்பு செவிகளில் ஏங்குகிறது

மதுரைக்கும் சென்னைக்கும் மாரடிக்கும் காக்கைகளும்

மண்ணின் மொழி ஒதுக்கி மறுமொழியில் அழுகிறது

வத்தலகுண்டு, ஜோலார்பேட்டை, குடியாத்தம், நீடாமங்கலம், மயிலாப்பூர், அடையார், ஒகேனக்கல், காளகஸ்தி, எனும் ஊர்ப் பெயர்களின் தமிழ் வரலாற்றை தனித்தனியே சொல்லிச் செல்கிறார்)

நெடுங்கவிதைகள்

நெடுங்கவிதைகள் என்றதும் நினைவுக்கு வருபவர் கவிஞர் சிற்பி அவர்கள்! வானம்பாடிகள் காலத்தில் தொடங்கிய, அவரதுகதைக் கவிதைகள்இன்று வரை நீள்கின்றன. இந்த வகையிலும் ஜெயபாஸ்கரன் நெடுங்கவிதைகள் பலவற்றை எழுதியிருக்கிறார். இந்த மொத்தத் தொகுப்பில் 15 நெடுங்கவிதைகள், ஒவ்வொன்றும் தனித்தனி சிறுகதைக் கவிதைகள்!

கவிதையும் அய்க்கூவாகச் சுருங்கி, கதையும் ஒருபக்கக் கதை, அஞ்சலட்டை கதை என்று சுருங்கி வரும் இந்தக் காலத்தில், நெடுங்கவிதைகளுக்கென்று உள்ள ஈர்ப்பு குறையவில்லை என்பதும் முக்கியமான கவனத்திற்குரியது. இவை பெரும்பாலும் மரபு ஓசையில் இருப்பது காவியத் தன்மை பெறுகிறது!

ஆலமரம் பற்றிய நெடுங்கவிதை, தமிழின் முதல்சிறுகதையானகுளத்தங் கரை அரசமரம்சொன்ன கதைகளை அசைபோட வைக்கிறது-

உன்னதம் நிறைந்த ஆலமரம் –அது 

உழைக்கும் மக்களின் போதிமரம், அதன்

நிழலில் நின்று விடுகிற மூச்சு 

ஒவ்வொன்றும் ஒரு கோடி பெறும்

கூடு கலைக்கும் கொள்கை உடையோர் 

கற்களை வீசி எறிவார்கள்,

குருவிக் குஞ்சுகள் கதறி விழுகையில்

கொடுங்கோலரைப்போல் சிரிப்பார்கள்.

என்னும் வரிகளில் ஓசையும் உள்ளடக்கமும் கைகோத்து, வரிகளைத் தவற விடாமல் நிதானமாகப் படித்து ரசிக்கவும் பெருமூச்சு விடவும் வைக்கிறது!

தனித்து நிற்கும் ஒவ்வொரு மரமும் 

தன்னளவில் ஒரு பெருநகரம் அதன்

இலைகள் கிளைகள் எல்லாவற்றிலும் 

லட்சக்கணக்கில் உயிர் வளரும்

ஆலமரத்தின் பறவைகள் கட்டிய 

கூடுகள் கீழே கிடக்கிறது -அதன்

அருகில் இருக்கிற மரங்களில் அமர்ந்து 

ஆயிரம் பறவைகள் அழுகிறது

என்னும் வரிகள் நெஞ்சைப் பிழியும் நிதர்சனத்தின் பிரதிபலிப்புகள்!

கடல்

படிக்கப் படிக்க பக்கம் புரட்டும் 

புத்தக மன்றோ பெருங்கடல்கள்!

படிப்பதற்கென்றே தானே புரளும் 

பக்கங்கள் அன்றோ பேரலைகள்!

நிலக்கோளம் என நாம் அழைத்தாலும்

நீர்க்கோளமே உலகாகும்!

கசப்பு நீர் மிகு கைப்புத் தீவே 

கச்சத்தீவாய் மருவியது,

கச்சத்தீவும் கை மாறிப்போய் 

கண்ணீர்த் தீவாய் மாறியது

என வரும் வரி ஒவ்வொன்றும் கடல்போல ஆழமும் அர்த்தமும் உள்ளவை.

இதுபோல் 15நெடுங்கதைகளும் சிறப்பாக அமைந்து ரசிக்க வைக்கின்றன.

குழந்தைகள்

குறும்புகள் செய்யும் குழந்தைகள் மீது 

கோபம் கொள்ளத் தேவையில்லை!

விளையாட்டுப் பொருள்கள்அடுக்கிஇருக்கும்

வீடுகள் அழகாய் தெரிவதில்லை!

என்னும் வரிகளைப் பெற்றோர் மட்டுமின்றி ஆசிரியரும் கற்றுத் தேரலாம்.

கவிஞர் வைரமுத்துவின்ஒரு தீக்குச்சிக்குத் தின்னக் கொடுப்போம்எனும் கவிதையை நினைவூட்டும் திரைஊடகம் பற்றிய கவிதை அருமை!

குழுவாய்ச் சேர்ந்து குமரிகள் ஆடும் 

குத்துப்பாட்டுக் குதி நடனம் - உன்

ஒற்றை நாயகன் ஒன்பது குண்டரை 

உதைக்கிற இழிவை நீ விடணும்.

என்று சொன்னவர், தோழமையோடு அடுத்த கவிதையில் இப்படி முடிக்கிறார்!

என்ன சொல்லப் போகிறாய் என் மனித ஜீவனே நீ

எந்த வகையில் சேர்வாய் என் அன்புத் தோழனே

தமிழ்இலக்கணத்துடன், மொழியைக் கலந்து தரும் விதம் அழகு-

சாதி ஒழிக்க முடியுமா என்று சமத்துவ உணர்வுடையோர்க்கும் சந்தேகம் தீரவில்லை. ஆனால் சாதியை முற்றிலும் ஒழிக்க முடியும் --

உறவு கூட்டத்தாரை உதறி வெளியே வந்தால்

உலகமே உனதாகும் உன்னதங்கள் உறவாகும் எனும் வரிகளைச் சும்மா மேம்போக்காகப் பார்த்தால் போதாது! “சுயசாதி மறுப்புஎனும் சாதிஒழிப்புக் கருத்தை வைத்த அம்பேத்கார் ஒளியில் பார்த்தால் புதிய ஒளி தோன்றும்!

அதே நேரம் நட்பு முரண் பேசித் தீர்க்க வேண்டியது, பகைமுரண் பேசியல்ல, -“கொடிறுடைக்கும் கூர்ங்கையர் அல்லார்க்கு ஈர்ங்கை விதிரார் கயவர்என, மோதித்தான் தீர்க்க முடியும் என்னும் தெளிவுள்ள கவிதை தீர்க்கமானது-

என் இனத்தை தமிழ் இனத்தை எதிரிகள் சூழும் போது

எதிர்த்து மோது என்று என் கவிதை முழக்கமிடும்!

இட ஒதுக்கீட்டினை ஏற்க மாட்டான் தன்

இலக்கியத்தில் அதுபற்றி எழுத மாட்டான்

பிரச்சினையை முன் வந்து பேச மாட்டான் நீ

பேசினால் அதையும் அவன் பொறுக்க மாட்டான் -- இந்த இடத்தில்,

ஓம் சக்தி ஓம் சக்தி என்றேன்

உயர்ந்த கவிவார்த்தை என்றார்

ஒங்குக புரட்சியெனச் சொன்னேன்

உளறல் வெறும்கோஷம் என்றார்  நவகவி 

  இதுபோல,

உணர்ச்சி வரிகள் நெடுங்கவிதையில் அதிகம்!

பாரதி மட்டுமல்ல ஜெயபாஸ்கரனும் தீர்க்கதரிசி தான்:

தொற்றுக் கிருமி பெருகும் - அதனால்

தொற்று நோயும் பெருகும்

தூய்மை இல்லா வாழ்க்கை - பெரும்

துயரம் ஆகிப்போகும் குடும்பம்

எனும் வரிகளில் கரோனாவைப் பற்றிச் சொல்லாமல் சொல்கிறாரே!

ஆழமும் அழகும் கொண்ட கவிதைகளைப் பெரிய தத்துவம் போலச் சொல்லி பயமுறுத்தாமல், எளிய மக்களுக்கான வரிகளில் அழுத்தமாகச் சொல்லும் ஜெயபாஸ்கரனின் கவிதைகள் வெற்றி பெறும், பெறவேண்டும்.

இன்னும் நிறைய எழுதலாம். “தோட்டத்தில் பாதி கிணறுகதையாகி விடக் கூடாது எனும் எச்சரிக்கையில் இத்துடன் நிறைவு செய்கிறேன்.

      சிறந்த இந்தக் கவிதைகளை மேற்கோள் காட்டும் தமிழ்ப்பெரியோர்கள் கவிதையோடு இவர் பெயரையும் சொல்லிப் பாராட்டுவதுதான் உண்மையான பாராட்டாக இருக்கும். ஆய்வாளர்கள் ஆய்வு செய்யட்டும், தமிழார்வலர்கள் எடுத்தெடுத்துப் பேசட்டும், கவிஞர்கள் பாடநூல்போலப் படித்துப்பார்க்கட்டும். விமர்சகர்கள் விலைகொடுத்து வாங்கி இதழ்களிலும் அமைப்புகளிலும் விமர்சனம் செய்யட்டும். நிச்சயமாக அதில் பாராட்டே அதிகம் இருக்கும் எனும் நம்பிக்கையில், அடுத்து வரவிருக்கும் இவரது கட்டுரைத் தொகுப்புக்காக நான் காத்திருக்கிறேன்.

இப்பெரும் தொகுப்பில் உள்ள (1) ஜெயபாஸ்கரன் கவிதைகள்(2002,2019), (2) மனைவியானேன் மகளே(2010), (3) சொல்லாயணம்(2014), வரவேண்டாம் என் மகனே(2019) ஆகிய 4கவிதைத் தொகுப்புகளுக்கு சிறந்த அணிந்துரைகளை வழங்கியிருக்கும் தமிழ்கூறு நல்லுலகின் சான்றோர்களான கலைமகள் ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணன் அவர்கள், எழுச்சிக்கவிஞர் காசிஆனந்தன் அவர்கள், நற்றமிழ் நாவலர் தமிழருவி மணியன் அவர்கள், கவிஞர் ஆரூர் தமிழ்நாடன் அவர்கள் ஆகிய பெரியோர்க்கும், படிக்கக் காத்திருக்கும் வாசகப் பெருமக்களுக்கும் என் பணிவான வணக்கம். கவிஞரின் இலக்கிய முயற்சிகளுக்குத் தோள்கொடுக்கும் இனியவர் அனைவர்க்கும் எனது நன்றி. 

கவிஞரின் தோள் தழுவி 

வாழ்த்துகளுடன்,

--நா.முத்துநிலவன்,

.மு...., கணினித் தமிழ்ச்சங்கம்,

புதுக்கோட்டை - 622004

செல்பேசி - 94431 93293

-------------------------------------------------------------------------------  

 ஒரு முக்கியமான 

பின் குறிப்பு-

ஒரு கவிஞனுக்கான

மிகச்சிறந்த  பாராட்டு என்பது,

அவனைப் புகழ்வதல்ல,

அவனது நூலை

விலைகொடுத்து  வாங்குவதும், 

வாங்கச் செல்வதும்தான்.