மக்கள் தமிழ், கொச்சைத் தமிழா?

               


தமிழ்நாடுஅரசின்பள்ளியிறுதி வகுப்பு இலக்கணப் பகுதியில், “கொச்சையான சொற்களைத் திருத்தி எழுதுகஎன்றொரு கேள்வி உண்டு! இது, தவறாமல் தேர்வு களிலும் இடம்பெறும் என்பதால் இந்தப் பகுதியை மாணவர் கவனமாகப் படித்துஅனேகமாக மனப்பாடம் செய்துவைத்துக் கொள்வது வழக்கம்! “சாயந்தரம் பீச்சுக்குப் போலாமா?” என்பது போல வரும்.இதைத்திருத்தி” “மாலையில் கடற்கரைக்குப் போகலாமா? என்று எழுதிவிட்டால் இரண்டுமதிப்பெண்உண்டு!

வழக்கில் இலக்கணச் சுத்தமாகப் பேசமுடியுமா என்ன? வழக்குமொழிவேறு, எழுத்துமொழி வேறு தானே? மொழிகள் அனைத்தும் அப்படித் தானே இருக்க முடியும்? ‘Pretty Flower” என்பதை, ஆங்கில வழக்கில்  “peti fo” என்றுதானே சொல்கிறார்கள்! கொச்சை என்றால் என்ன பொருள் என்று தெரிந்துதான் இந்தக் கேள்வியைக் கேட்கிறார்களா? அல்லது, இதிலும் நமது சமூக ஏற்றத் தாழ்வின் கறை படிந்திருக்கிறதா என்று பார்க்க வேண்டும்! ஏனெனில், “புலவர் குழுதொகுத்தகழகத் தமிழ் அகராதிநூலில் (1974-பதிப்பு,பக்கம்-389)  கொச்சைச் சொல் என்பதற்கு, இழிந்த சொல், இழிந்தோர் பேச்சுஎன்று பொருள் போட்டிருக்கிறார்கள்!

பேச்சுத்தமிழ்வழக்கில்என்ன கொச்சை இருக்கிறது? வழக்குச் சொற்களை இலக்கணம் மாறாத எழுத்து வடிவில் எழுதவேண்டும் என்று சொன்னால்கூடச் சரிதான். அதைக்கொச்சை வழக்குஎன்பது எப்படிச் சரியாகும்? எழுத்து நடை வேறு, பேச்சு நடை வேறு. குமரியில் பேசுவோரும், கோவையில் பேசுவோரும் பேச்சு நடையில் வேறுபடலாம். இதைத்தான் வட்டார வழக்கு என்கிறோம். ஆனால் இருவரையும் எழுதச் சொன்னால் ஒரே நடையில்தான் எழுதுவார்கள். இந்த வேறுபாட்டை, கொச்சை என்பது வழக்குமொழியை அவமதிப்பதாகும். “பேச்சு வழக்கில் இருப்பதை, எழுத்து நடையில் மாற்றி எழுதுகஎன்று கேட்க வேண்டிய கேள்வியை, “கொச்சைத் தமிழைத் திருத்தி எழுதுகஎன்று கேட்பதால் வழக்குத் தமிழை அவமானமாகக் கருதும் நிலை உருவாகிவிடாதா, இதைக் கல்வியாளர்கள் சிந்திக்க வேண்டாமா?

உண்மையில் மக்கள் பேச்சு, இழிந்த பேச்சும் அல்ல, அதைப் பேசும் மக்களும் இழிந்தவரும் அல்லர்! படித்தவரை விடவும் சாதாரண மக்கள் நல்ல தமிழையே தம் வாழ்வில் ஒவ்வொரு நாளும் பேசி வருகிறார்கள்.

புதுக்கோட்டை மாவட்டத்தை அடுத்துள்ள காரைக்குடி, பள்ளத்தூர் பகுதிகள் செட்டிநாடு எனப்படும். அங்கு இன்றும் பேசப்படும் வழக்குச் சொற்கள் பல, வியப்பூட்டும் வகையில் அழகு தமிழ்ச் சொற்களாக இருப்பதைப் பார்க்கமுடியும். சாவி எனும் பிறமொழிச் சொல்லுக்குப் பதிலாகதொறகுச்சிஎன்றும், மாலை நேரச் சிற்றுண்டியைஇடைப்பலகாரம்என்றும், பேருந்துநிலையத்தை, “காரடிஎன்றும் பேசக் கேட்கலாம்! திருநெல்வேலியில் தேதியைபக்கல்என்பார்கள் (பகு+அல்=பக்கல், பகுக்கப்படும் அல் அதாவது இரவைப் பிரிக்கும் நாள்!) 

நகைச்சுவைத் தென்றல் திண்டு்க்கல் ஐ.லியோனி தனது பலகுரலில், ஒரு கருத்தைச் சொல்வாரல்லவா?-

குமரித் தமிழ் மலையாள மொழி உச்சரிப்புக் கலந்து வரும், நெல்லைத் தமிழ் கரிசல் மண்ணின் மணம் கலந்து கிடக்கும், மதுரைத் தமிழ் எதற்கும் அலட்டிக் கொள்ளாத பாசத் தமிழாக இருக்கும், கோவை, திருப்பூர், ஈரோட்டில் புழங்கும் கொங்குத் தமிழ் மரியாதை தருவதாக இருக்கும், சென்னை, செங்கற்பட்டு, விழுப்புரத்தின் சென்னைத் தமிழ் மிகச்சாதாரணமான உழைக்கும் மக்களின் அவசரத் தமிழாக இருக்கும்.  இதில் கொச்சை எங்கிருந்து வந்தது? எனில், எந்த நாட்டிலிருந்தாலும் ஒரே மாதிரியாகப் பேசும் பிராமணத் தமிழ் கொச்சைத் தமிழ் பிரிவில் வருமா? அவர்கள் பேசுவதும்இழிந்தோர் பேச்சுவகையில் வருமா?

மண்ணின் மக்கள்பேசுவதைக் கொச்சை என்பது ஒரு மனநோய்! ஒன்று போலப் பேச வேண்டும் என, இதைப் பொதுமைப்படுத்துவது, மக்களைபடுத்துவதுதானே அன்றி வேறல்ல! “இதைச் சாப்பிடு”, “இதை உடுத்து” “இப்படிப் பேசு” “இப்படிப் பேசாதே!”- என்பது ஆதிக்க மனநிலை. இதைப் புரிந்துகொண்டால் நமது பன்முகப் பண்பாட்டின் அழகை ரசிக்க முடியும். இந்திய ஒன்றியங்களின் ஒருமைப்பாட்டைக் காக்கவும் முடியும்.

இலக்கணம் என்பது அதிகாரம் செலுத்த அல்ல, ஆற்றுப்படுத்த மட்டுமே!. அனுபவமில்லாத குழந்தைகளுக்குப் பெற்றோர் அன்பான வழிகாட்டுதலை மட்டுமே செய்ய வேண்டும். இப்படித்தான் இருக்க வேண்டும் என்று கைகளை விடாமல் பிடித்துக்கொண்டே திரிந்தால், குழந்தைகள் வெறுத்துப் போய், சுய சிந்தனையை இழந்துவிடுவார்கள்! மொழி இலக்கணமும் அப்படித்தான்! 

மொழிபேசும் மக்கள், மொழியை விடவும் முக்கியமானவர்கள் எனும் பொதுவான புரிதல் முக்கியம்தான்.அதேநேரம்மொழியின்முக்கியத்துவத்தைக்குறைத்துமதிப்பிட்டால்பண்பாட்டுஅழிவில்கொண்டுவிடும்என்பதும்முக்கியம்

ஆங்கிலத்தில் United States of America, British Broadcasting Corporation என்பவற்றை முறையேயுனைடட் ஸ்டேட்ஸ் அஃப் அமெழிகஎன்றும்,ப்ரிடிஷ் ப்ராட்காஸ்டிங் காபழேஷன்என்றும்தானே அவர்கள்  சொல்கிறார்கள்! ஆங்கில எழுத்தில் ழகரம் இல்லையே தவிர அவர்களின் உச்சரிப்பில் ழகரம் உண்டு! உச்சரிப்பு வேறுபாடுகள் தமிழிலும் உண்டு!

இன்னும் சொல்லப் போனால், “கரிசல் வட்டார வழக்கு அகராதி  தொகுத்து, தமிழின் வட்டார மொழிகளின் போக்கை அடையாளப்படுத்திய கரிசல் எழுத்தாளர் கி.ராஜநாராயணன் அவர்களும், “கொங்கு வட்டாரச் சொல்லகராதி“(2000) தொகுத்தளித்த எழுத்தாளர் பெருமாள் முருகன் அவர்களும் வளரும் தமிழுக்குப் பெரும்பணி செய்த பெருமக்கள் அல்லவா? இவர்கள்கொச்சைஎன்று வழக்குச் சொற்களை ஒதுக்கி விடாமல், ஆய்வு செய்து அகராதிகளும் தந்தது பெருமைக்கு உரியதுதானே?!

எனவே, வழக்குச் சொல். கொச்சைச் சொல் அல்ல;வட்டாரச் சொல் அல்லது பண்பாட்டுச் சொல் என்றேசொல்லவேண்டும்.  நாட்டுப்புற இலக்கியம், நாட்டார் இலக்கியம், கிராமியக் கலைகள் என்பது போல அது உழைக்கும் மக்கள் புழங்கிவரும் சொற்களே அன்றி, ஒதுக்கப்பட்டகொச்சைச் சொற்களல்ல! இன்னும் சொல்லப் போனால், சொல்லில் கொச்சைஎன்ன? புனிதமென்ன? சொல்லும் முறைதானே முக்கியம்?

ஏனெனில், தொல் இலக்கணமான தொல்காப்பியப் பாயிரமேவழக்கும் செய்யுளும் ஆயிரு முதலின்..” என்றுதான் இலக்கணத்தை வகைப்படுத்து கிறது. இலக்கியம் கண்டதற்குத்தான் இலக்கணம் காண முடியும். இதில்இலக்கியத் தரம் இல்லைஎன்று ஒதுக்கி வைக்க நாம்யார்? சொல்லை ஒதுக்குவதில் சாதிய நோக்கம்தான் இருக்க முடியும். மற்றபடி சொல்லில் புனிதமும் இல்லை, கொச்சையும் இல்லை! சொல்லும் இடமே பொருள்தரும். “கெட்ட வார்த்தைஎன்பது பொது இடங்களில் சொல்லத் தகாத சொல் என்ற புரிதல்.“மங்கலம்எனும் இலக்கணத்தில் உள்ளது.இதையே புனிதமாக்கி, எழுத- பேசக் கூடாது என்று சொல்ல முடியாதே! தொடர்ந்து அடிவாங்கிக்கொண்டே இருப்பவன் இலக்கண சுத்தமாக அழ முடியுமா என்ன? அவன் கோவப்பட்டுச் சொல்லும் சொற்கள்அசிங்கம்என்பது அவன் வலியறியாத நம் தவறன்றி, தமிழின் தவறல்ல! அதை இலக்கியத்தமிழில். எழுத்தில் கொண்டுவரக் கூடாது என்று தடைபோடமுடியுமா?

வளர்தமிழின் தலித் இலக்கியத்தில் வரும்கெட்ட வார்த்தைகள் பலவும், படைப்புச் சூழலைப் பொறுத்து உணர்ச்சிமிகுந்த சொல்லாகவே வரும். மயிரு, குசு, பீ, முலை, யோனி போலும் சொற்களை அந்தந்தப் படைப்பின் சூழலை வைத்துப்புரிந்துகொள்ள வேண்டுமே அன்றி சும்மா கெட்ட வார்த்தை என்றுதீட்டுபார்க்கத் தேவையில்லை. இன்குலாபின்மனுசங்கடாபாடலில் வரும்எவன் மசுத்த புடுங்கப் போனீங்க?” எனும் கேள்வியும், ஆதவனின்கவிதையில்வரும்மசுரும், அடிபட்டவரின் ஆவேச எதிர்க்கேள்வியே அன்றி, ஆகாத வார்த்தையா என்ன? கொச்சைச் சொல்லாகுமா இது? பெருமாள் முருகன் அவர்களின்கெட்ட வார்த்தை பேசுவோம்”, “பீக் கதைகள்தொகுப்புகளையும் கவிஞர் குட்டி ரேவதியின்முலைகள்தொகுப்பையும், கவிஞர் ஜெயபாஸ்கரன் அவர்கள் கெட்ட வார்த்தைபயன்படுத்துவதையும்  கொச்சைஎன்றோ, கெட்ட வார்த்தை என்றோ சொல்லலாமா? வேண்டுமென்றே கவனம் பெறுவதற்காகச் செய்வது என்பதும் கூட எனக்குத் தவறாகப் படவில்லை! கவனிப்பாரற்றுக் கிடந்த இனம், கவனம் பெறட்டுமே! (இதுபற்றிஜெயபாஸ்கரன் கவிதையில் கெட்ட வார்த்தைஎனும் தலைப்பில் என் வலைப்பக்கத்தில் தனியே ஒரு கட்டுரை எழுதியிருக்கிறேன் அந்தக் கட்டுரை எனது “கம்பன் தமிழும் கணினித் தமிழும் நூலிலும் இடம்பெற்றுள்ளது)

இலக்கணக் குறிப்பில் வரும்மங்கலம்எனும் குறிப்புக் கூட இப்படித்தான் உள்ளது. மஞ்சள் மங்கலம், கருப்பு அமங்கலம், எண்களில் எட்டு ஆகாது, என்பவை இந்துத்துவ சிந்தனையன்றி அறிவியல் சிந்தனை அல்லவே! “சிவப்பா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான்என்பது போலும் மூட நம்பிக்கை, தமிழ் வழக்கில் ஊறிக் கிடக்கிறது. அவ்வப்போது வாய்க்காலைச் சுத்தம் செய்யாவிட்டால், ஆறே ஊருக்குள் வராது! அல்லதுபெருவெள்ளம்வந்துவீட்டுக்குள்புகுந்துவிடும்,  கவனம்!!! புதிதாகக் கட்டிய தாலி, நூல்பிரிகளுடன் பெரிதாக இருக்கும். அதைக் கழற்றி விட்டு, அதைவிட அளவில் சிறிதான ஆனால் தங்கம் () மஞ்சள் கயிற்றில் அளவு சுருக்கிப் போடுவதைத் “தாலிபெருக்கிப் போடுவது” என்பது வழக்கம். தாலி சுருக்கி என்பது மங்கலமல்ல, எனவே இப்படிச் சொல்வதை மங்கலம் என்று இலக்கணம் செய்து வைத்தார்கள். அதே போல, குழந்தைகள்பீ வருதுஎனப் பலர் நடுவில் சொல்வதைஆய் வருது” () ”கக்கா வருதுஎன்று சொல்வதைஇடக்கர் அடக்கல்என்பது இலக்கண வழிகாட்டுதல். இதிலென்ன தவறு என்று கேட்போர்க்காக ஒரு சிறு விளக்கம் - “கக்கன்என்பது பீ அள்ளும் தொழிலைச் செய்துவரும் தாழ்த்தப்பட்டமக்களைக்  குறிக்கும் மராட்டிமொழிச்சொல். அதை தாழ்த்தப்பட்ட மக்களுக் கான பெயராக்கிவிட்டார்கள். அமாவாசை, மண்ணாங் கட்டி என்று பெயர் சூட்டுவதுபோல.. இதை மாற்ற வேண்டும் என்று செயல்பட்டால், இந்த இலக்கணத்தைத் திருத்தத்தானே வேண்டும்?

பெயரில் என்ன இருக்கிறது என்பார்க்கு உதாரணமாக சுப்பிரமணியன் என்னும் பெயரைத் தாழ்த்தப்பட்டவர்கள் வைத்திருந்தால் அவரைச்சுப்பாஎன அழைப்பதும், உயர்சாதிக்காரர் வைத்திருந்தால் அவரைமிஸ்டர் ஸ்வாமிஎனத் தொலைக்காட்சிகளில் விளிப்பதும் தானே நம் சாதியச் சமுதாயம்? எனவே இந்த மங்கல, அமங்கல, இடக்கர் அடக்கல் இலக்கணச் சொற்களின் சாதியப் பின்னணியைப் புரிந்து கொள்ளாமல், கொச்சை, புனிதம், மங்கலம், அமங்கலம் என்பதெல்லாம் இலக்கணம் எனும் பெயரில் இனியும் தொடரக் கூடாதல்லவா? இன்னும் புரியாதவர்கள், “மஞ்சள்எனும் தோழர் ஜெயராணி எழுதிய நாடகத்தை கூகுளில் போய், தேடிப் பிடித்துப் பார்க்கும்படிப் பரிந்துரைக்கிறேன்.

எனவே, சொல்லில் புனிதமோ அசிங்கமோ கொச்சையோ இல்லை.. இடத்திற்கேற்ப அதன் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்வதே சரி.

படித்தமக்களுக்கான இலக்கியமாக இருந்தவரை எழுத்து நடை, பேச்சு நடை வேறு வேறாக இருந்திருக்கலாம்.மக்கள் இலக்கியம் படைக்கும் போது, பேச்சுத் தமிழ், எழுத்துத் தமிழில் வரத்தான் செய்யும்.

கல்கி  நினைவுச்சிறுகதைப் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்றஎனது, “குஞ்சானியின் டாட்டாஎனும் சிறுகதையைப் பார்த்த தமிழறிஞர் ஒருவர், என்னைப் பாராட்டிய கையோடு, “இப்படி எனக்கு எழுத வராது!” என்றபோது நான் ஒன்றும் வியப்படையவில்லை! அந்தச் சிறுகதையில் எளிய சிறுவன் ஒருவனின் நிலை பேச்சு வழக்கிலேயே வருவதுதானே இயல்பு? அதை மரபுத் தமிழறிஞர்கள் ஏற்றுக்கொள்ளாதது இயல்புதானே? –எதார்த்த இலக்கியம் அப்படி இருக்க முடியாதல்லவா?பேச்சு நடையில்தானே அந்த எழுத்து, இருக்க முடியும்? இதைத்தான் கரிசல் இலக்கிய மேதை, தனி இலக்கிய வகையாக வளர்த்தெடுத்தார்! இந்த இடத்தில்தான் தமிழின் மரபு தடுப்பதாகப் பழந்தமிழ்ப் புலவர் சொல்வதை என்னால் ஏற்க முடியவில்லை! பெருந்தமிழறிஞர் அய்யா தமிழண்ணல் மிகச் சிறந்த கட்டுரைகளையும் தமிழ் இலக்கணக் குறிப்பு களையும்தந்தவர். ஆனால், அவர்கூட,  தனதுஉங்கள் தமிழைத் தெரிந்துகொள்ளுங்கள்எனும் நூலில், (மீனாட்சி புத்தக நிலையம், இரண்டாம் பதிப்பு-2010, பக்கம்-27) “பேசுவது போலவே எழுதுவது, தற்கொலைக்கு ஒப்பானது, அதிலுள்ள ஒலித்திரிபுகள், கொச்சைமொழி, குறுமொழி, பிழைமொழிகளைப் பயன்படுத்து கின்றவர்களுக்குக் கடுந்தண்டனை தரவேண்டும்என்பதை என்னால் ஏற்க இயலவில்லை!

நாம் தொல்காப்பியப் பனம்பாரனாரின்வழக்கும் செய்யுளும் ஆயிரு முதலின் எழுத்தும் சொல்லும் நாடிஇலக்கணம் படைத்த கைகளைப் பிடித்துக்கொண்டு போய்க்கொண்டே இருக்க வேண்டியதுதான்!

           (எனது, “இலக்கணம் இனிது” நூலின் 3ஆவதுகட்டுரை)

(நன்றி – செம்மலர் – திங்களிதழ்- பிப்ரவரி-2021)

-------------------------0000000000000------------------------ 

முகப்புப் படத்திற்கு நன்றி-

தமிழ்ப் பல்கலைக் கழகம்,  தஞ்சை

https://youturn.in/factcheck/thanjavur-tamil-university-building.html 

5 கருத்துகள்:

 1. மிகவும் அருமையான விளக்கம் ஐயா... மனதில் இருந்த சில சந்தேகங்களுக்கு தீர்வு கிடைத்தது...

  பதிலளிநீக்கு
 2. அருமை ஐயா.....
  வாழ்த்துக்கள் ஐயா

  புகழ் மணி
  மறைமலை நகர்

  பதிலளிநீக்கு
 3. சிறப்பான பதிவு ஐயா
  அருமையான விளக்கங்கள்

  பதிலளிநீக்கு
 4. வட்டாரவழக்கையும் பேச்சுத்தமிழையும் பாமரர்க்கும் புரியும் வண்ணம் விளக்கிய பாவலர் மு.நி.க்குப் பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு