“இலக்கணம் இனிது” நூல் பற்றி,
எழுத்தாளர்களின் கருத்துகள்
(1) முனைவர்
சங்கர சரவணன், சென்னை
(2) பதிவர்
இ.பு.ஞானப்பிரகாசம், சென்னை
(3) நாவலாசிரியர் சந்திரகாந்தன், சிவகங்கை
(4) எழுத்தாளர்
அண்டனூர் சுரா, கந்தர்வகோட்டை
(5) கவிஞர் மு.கீதா, புதுக்கோட்டை
இவர்களின் சில கருத்துகளில் எனக்கு உடன்பாடில்லை எனினும் “நான்சொல்வதே சரி” என்னும் பிடிவாதக்காரனல்லன் நான்.
எனவே இவர்களின் கருத்துகளை உள்வாங்கி, சரியெனில் ஏற்கச் சித்தமாகவே இருக்கிறேன் என்பதை மட்டும் இப்போது சொல்லி மனமார நன்றியும் சொல்லி இவர்களின் கருத்துகளை அவரவர் சொன்னவாறே இங்குத் தருகிறேன்
நன்றி நன்றி நன்றி
-------------------------------------------------
(1)
தமிழறிஞர் முனைவர் சங்கர சரவணன் அவர்கள்-
பேராசிரியர் தமிழண்ணல், பரந்தாமனார் போன்றோர் எழுதிய அதே இலக்கண விளக்கங்களை அந்த அறிஞர்களின் பெயர்களை நீக்கிவிட்டு, தன் சொந்த இலக்கண கண்டுபிடிப்புகள் போல, கவிஞர் 'ஒருவர்' எழுத, அவற்றையும் சிறந்த இலக்கண நூல்கள் என்று சிலர் கொண்டாடியதைக் கண்டு எரிச்சல் அடைந்த எனக்கு, புலமை, புரிதல், சுயதரிசனம் மற்றும் நடைமுறை உதாரணங்களோடு எளிமையாக எழுதப்பட்ட தங்கள் நூல் மகிழ்ச்சியைத் தந்தது.
தமிழண்ணல் எழுதிய உங்கள் தமிழைத் தெரிந்து கொள்ளுங்கள், பரந்தாமனார் எழுதிய நல்ல தமிழ் எழுத வேண்டுமா? போன்ற நூல் வரிசையில் வைத்துப் போற்றிக் கற்கப்படவேண்டிய நூல் நண்பர் முத்து நிலவன் அவர்கள் எழுதியுள்ள இலக்கணம் இனிது நூல்
-------------------------------------------------------------
(2)
வலைப்பதிவர்
இ.பு.ஞானப்பிரகாசம் அவர்கள் எழுதிய
நெடுங்கடித வடிவிலான விமர்சனம்
பேரன்பிற்கும் பெருமதிப்பிற்கும் உரிய முத்துநிலவன் ஐயா அவர்களுக்கு நேச வணக்கம்!
தங்கள் ‘இலக்கணம் இனிது’
நூலை அச்சுக்கு அனுப்பும்
முன்பே எனக்கு அனுப்பி, நூலைப் படித்துப்
பார்த்துக் கருத்துரைக்குமாறு கேட்டிருந்தீர்கள். உங்கள் படைப்பைப் பற்றிக் கருத்துரைக்கும்
அளவு நான் பெரியவன் இல்லை. எனக்கு அந்த அளவுக்கு இலக்கணமும் தெரியாது.
இருப்பினும் உங்கள் அன்புக்கு இணங்கி இதோ என் சிற்றறிவுக்கு எட்டிய வரையில்
கருத்துக்களை முன்வைக்கிறேன்.
நூலைப் பற்றி முதலில் நான் சொல்ல விரும்புவது இப்படி ஒரு படைப்பை வழங்கியமைக்காக நன்றி
என்பதைத்தான்!
நான் பார்த்த வரையில், இலக்கணம் பற்றி எழுதுபவர்கள் பெரும்பாலும் இலக்கணத்தை இம்மி பிசகாமல் கடைப்பிடிக்க வேண்டும் என வலியுறுத்துபவர்களாகவும் “இங்கே இது தவறு!... அங்கே அது தவறு!...” எனப் பிழை சுட்டுபவர்களாகவுமே எப்பொழுதும் இருந்து வருகிறார்கள். இவர்களுக்கு மாறாக, காலத்துக்கேற்ப மாற்றங்களை ஏற்றுக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தும் இன்னொரு தரப்பினரும் இருக்கிறார்கள். ஆனால் முற்றிலும் எதிரெதிரான இந்த இருவேறு கருத்துக்களுக்கும் மத்தியில் இருந்து ஒரு நடுநிலையான கருத்தை எடுத்துரைப்பவராக நீங்கள்தாம் என் கண்ணுக்குத் தென்படுகிறீர்கள்!
இந்த நூலில் தொடக்கம் முதல் முடிவு வரை நான் பார்த்து வியந்தது அதுதான்! அதாவது -
ஒரேயடியாக இலக்கண மரபுகளைக் கைவிட்டு விடவும் கூடாது, அதே நேரம் கொஞ்சமாவது நெறிகளைத் தளர்த்திக் கொள்ளவும் முன்வர வேண்டும் எனும் கருத்தோட்டத்தை நூலின் முதல் பக்கத்திலிருந்து கடைசிப் பக்கம் வரை பார்க்க முடிந்தது.
உண்மையான தாய்மொழிப் பற்றுக் கொண்ட ஒரு நெஞ்சத்தின் அக்கறையும், பதற்றமும் நூல் நெடுகிலும் இழையோடுவதை உணர முடிந்தது. இப்படி அக்கறை மிகுந்த ஒரு படைப்புக்காக முதலில் நன்றி!
அடுத்து நூலிலுள்ள ஒவ்வொரு பகுதியைப் பற்றியும் நான் சில கருத்துக்களைச் சொல்ல விழைகிறேன்!
அதில் முதலாவதாக ‘என்னுரை’ எனும் தலைப்பிலான நூல் பற்றிய உங்கள் அறிமுக
உரை.
அங்கேயே நீங்கள் என்னைக் கவர்ந்து விட்டீர்கள்! நன்னூலின் புகழ் பெற்ற கருத்தை மேற்கோள் காட்டிய
நீங்கள் “இதில் பழையன
கழித்தலும், புதியன
புகுத்தலும் என்று சொல்லாமல், கழிதலும்
புகுதலும் என்ற நுட்பம் கவனிக்கத் தக்கது” என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள்.
இந்த ஒரு வரியே, இது வழமையான
இலக்கண நூல் இல்லை என்பதைப் படிப்போருக்கு உணர்த்தி விடுகிறது.
அடுத்தது, நூலின் முதல்
கட்டுரையாக இடம்பிடித்திருக்கும் ‘மூனு சுழி ண, ரெண்டு சுழி ன - என்ன வேறுபாடு?’
எனும் கட்டுரை. “இலக்கணம் இனிது”
எனும் நூலின் தலைப்புக்கு
ஏற்றவாறு இனிமையான ஒரு படைப்பு இது. இதை முழுக்கவும் நீங்கள் பேச்சுத்தமிழில்
எழுதியிருக்கிறீர்கள். பேச்சுத்தமிழை நான் ஒருபொழுதும் எழுதப்
பயன்படுத்துவதும் இல்லை; பிறர் அப்படி
எழுதுவதை ஊக்குவிப்பதும்
இல்லை. ஆனால் இலக்கணம் என்றாலே கடினமானது, கசப்பானது எனும் பொதுக்கருத்தைக் கொண்ட ஒரு
சமுகத்தில் இலக்கணம் பற்றிய ஒரு நூலின் முதல் கட்டுரை இப்படி வெகுமக்களைக்
கவரும் வகையில் எளிய தமிழில் இனிமையாக அமைந்திருப்பதைச் சுவைக்காமல்
இருக்க முடியவில்லை.
நூலில் பின்வரக்கூடிய கட்டுரைகள் ஆழமாகவும் பொருட்செறிவு நிரம்பியவையாகவும் இருக்கையில்
முதல் கட்டுரை இப்படி மிக எளிமையான ஓர் இலக்கண நெறியைப் பேசுவது படிப்பவர்கள்
நூலைக் கீழே வைக்காமல் தொடர்ந்து படிக்க ஊக்குவிப்பதாக உள்ளது.
மூன்று சுழி ண, இரண்டு சுழி ன
எனச் சொல்லக்கூடாது எனவும் டண்ணகர ண, றன்னகர ன எனத்தான் சொல்ல
வேண்டும் எனவும் இக்கட்டுரையில் கூறியிருக்கும் நீங்கள், அப்படியே நாம் தவறாகக்
குறிப்பிட்டாலும் “இரண்டு சுழி,
மூன்று சுழி எனும் இந்தச்
சொற்களில் கூட, பிரியாத காதலர்கள் மாதிரிச் சேந்து வர்ரதப் பாருங்களேன்” என்று குறிப்பிட்டிருந்தது...
அடடா! இலக்கண நூலைக் கூட இப்படிச் சுவையாக எழுத முடியும் என்று
காட்டிவிட்டீர்கள்!
அடுத்து இதே கட்டுரையில் நம் தமிழ் நெடுங்கணக்கின் வரிசை பற்றி நீங்கள்
சொல்லியிருந்த தகவல் குறிப்பிடத்தக்கது.
பதினெட்டு மெய்யெழுத்துகளும் சும்மா அடுத்தடுத்து வைக்கப்பட்டு விடவில்லை;
இந்த வரிசை முறைக்கு
ஒரு காரணம் உண்டு என்று நீங்கள் கூறியிருந்த விளக்கம் மிகவும் முக்கியமானது.
தமிழ் மக்கள் அனைவரும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு பெருமைக்குரிய
தகவல் இது!
இதையடுத்து “இந்தியில் 4 க, தமிழில் ஒரே ஒரு க இருப்பது ஏன்?” எனும் கட்டுரைப் பகுதி கண்டு வியந்தேன்.
ஏனெனில் அண்மையில்தான் இதைப் பற்றி நானும் ஒரு கட்டுரையை எழுதியிருந்தேன்.
அதே பொருள் தொடர்பாக உங்கள் நூலிலும் பார்க்க நேர்ந்தது எதிர்பாராச் சுவை!
தமிழைக் குறை கூறுபவர்களின் மிகப் பழமையான, செல்லரித்துப் போன சொத்தை வாதமே தமிழில்
வல்லெழுத்து வகைகள் (நான்கு க, நான்கு ச முதலானவை) இல்லை என்பது. உண்மையில் அது
தமிழின் குறை இல்லை, சிறப்பு! அதைத்
தமிழ் மக்கள் தெரிந்து கொள்ள வேண்டியது இன்றைய அரசியல் – மொழி – உலகமயமாக்கல்
சூழலில் இன்றியமையாதது. அதற்கு உதவும் இந்தக் கட்டுரைப் பகுதி மிக முக்கியமானது!
இரண்டாவது கட்டுரையாக வரும் ‘அறிவியல் வாழ்வும், தமிழ் இலக்கணமும்’
கட்டுரை தமிழில் உள்ள அறிவியல் –
வாழ்வியல் கூறுகளைப்
பட்டியலிடும் நல்ல முயற்சி! புறநானூறு, தொல்காப்பியம்,
குறுந்தொகை, திருக்குறள் எனத் தமிழ்ச் செவ்விலக்கியங்கள் பலவற்றிலிருந்தும்
வாழ்வியல் கோட்பாடுகளையும் அறிவியல் கருத்துக்களையும் பேசும் இக்கட்டுரையின்
ஓரிடத்தில் திருக்குறளின் அதிகாரப் பிரிப்பு எண்ணிக்கை கூட ஒரு வாழ்வியல்
வழிகாட்டுதல்தான் என்று நீங்கள் விளக்கிய இடம் அசத்தல்! எப்படித்தான் இப்படியெல்லாம்
சிந்திக்கிறீர் களோ! இதற்கு முன் இப்படி ஒரு கருத்தை நான்
கேள்விப்பட்டதே இல்லை.
சில கருத்துக்களைச் சொல்லிப் புரிய வைக்கலாம், சில கருத்துக்களைச் சொல்லாமல் தவிர்ப்பதன்
மூலமே புரிய வைக்கலாம் என்பார்கள். திருவள்ளுவர் வீடுபேறு பற்றிப் பாடாமல் விட்டதும்
அப்படித்தான் என்பது என் பணிவான கருத்து. ஏனெனில், வீடுபேறு என்பது தமிழர்களின்
கருத்தியல் இல்லை.
“கல்லே பரவின் அல்லது நெல்உகுத்துப் பரவும்
கடவுளும் இலவே” என்று தமிழர் இறைக் கோட்பாட்டை
அழுத்தம் திருத்தமாக வரையறுத்துள்ளது பண்டைத் தமிழ் இலக்கியமான
புறநானூறு. அதாவது பிறருக்காகவோ தான் வாழும் சமுகத்துக்காகவோ உயிர் நீத்தவர்களின்
நினைவாக நாட்டப்படும் நடுகல்லை வணங்குவதே தமிழர் மரபு என்றும் சோறு படைத்து வணங்கும்
கடவுள் வழிபாட்டு முறை இங்கு இல்லை என்றும் தெள்ளத் தெளிவாக அது கூறுகிறது.
ஆக, வீடுபேறு என்பது
நம் கருத்தியலே கிடையாது. அப்படியிருக்க, தமிழர் வாழ்வியல் வழிகாட்டியான
திருக்குறளில் தமிழர் மரபுக்குப் புறம்பான வீடுபேறு எப்படி இடம்பெற முடியும் என்பது
தமிழ் மக்கள் மட்டுமில்லை துறைசார் பெருமக்களும் ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய கேள்வி!
இதை நீங்கள் “‘மண்ணில் தெரியுது
வானம்’ அன்றி வேறு
சொர்க்கம் நரகம் இல்லை என்பதே வள்ளுவரின் வாழ்க்கை பற்றிய வழிகாட்டுதல்”
என்று விளக்கியிருந்தது
இன்றைய காலக்கட்டத்துக்கு இன்றியமையாத பதிவு!
இதையடுத்து, தொல்காப்பியத்தின்
அக இலக்கணத்துக் குரிய ‘இடமும் பொழுதும்’
எனும் பிரிவுகள் அறிவியலின்
சார்பியல் கோட்பாட்டோடு பொருந்துவது குறித்து நீங்கள் எழுதியிருப்பது
இக்கட்டுரையின் உச்சக்கட்டம்!
எல்லாரும் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் ஆகிய திணைகளை வெறும் இடங்களாகத்தாம் பார்ப்பார்கள்.
ஆனால் நீங்கள் அவற்றை மனிதப் படிமலர்ச்சியின் வரிசைப்பாட்டோடு ஒப்பிட்டு
எழுதியிருப்பது நீங்கள் வெறும் ஆசிரியரோ, பேச்சாளரோ, எழுத்தாளரோ மட்டு மில்லை சிந்தனையாளர் என்பதை ஓங்கிச் சொல்கிறது!
இதைத் தொடர்ந்து பாலைக்கெனத் தனியே இலக்கணம் இல்லாததால் “உலகின் பிற பகுதிகளில் உள்ள
வறண்ட நிலப்பகுதி கண்டு, அதற்கும் பேரிட்டனர்
தமிழர் என்று புரிந்து கொள்ளலாம்” என்று
எழுதியுள்ளீர்கள். ஆனால் அதன் அடுத்த வரியிலேயே பாலை என்றால் என்ன என்பதைச்
சிலப்பதிகாரத்திலிருந்துதான் நாம் அறிய முடிகிறது என்றும் சிலம்பில் குறிப்பிட்டுள்ள
அந்தப் பாலை நிலம் இன்றும் புதுக்கோட்டையில் இருப்பதாகவும் நீங்கள் பதிவு
செய்துள்ளீர்கள். இந்த இரண்டு கருத்துக்களும் ஒன்றுக்கொன்று முரண்படுகின்றன. அல்லது நான்
தவறாகப் புரிந்து கொள்கிறேனோ என்னவோ!
அடுத்து வருவது, ‘மக்கள் தமிழ்,
கொச்சைத் தமிழா?’ எனும் நெற்றியடிக் கட்டுரை. பேச்சுத்தமிழைக்
கொச்சைத் தமிழ் என்பதில் எனக்கும் உடன்பாடு இல்லை. கொச்சை என்பது கீழ்மையான
பொருளைத் தருவது. மக்கள் தமிழை அந்தச் சொல்லால் குறிப்பிடுவது மிகவும் தவறு! அதற்கு
நீங்கள் வலுவான கண்டனத்தை இதில் பதிவு செய்துள்ளீர்கள். வேறு யாரும் இப்படிச்
செய்ததாக எனக்குத் தெரியவில்லை.
‘சென்னைத் தமிழ் அன்னைத் தமிழ் இல்லையா?’ எனும் என்னுடைய பழைய கட்டுரை ஒன்றில் நான் “சென்னைத் தமிழும் ஒரு வகையான வட்டார வழக்குதான்; பேச்சுத்தமிழின் ஒரு வடிவம்தான்! அதைக் கொச்சை எனக் குறிப்பிடுவது தவறு” என்று எழுதியுள்ளேன். ஆனால் உங்களைப் போல் இவ்வளவு துல்லியமாக நான் அதை எழுதவில்லை. நீங்கள் அதை மிகப் பொருத்தமாக, அழகாகப் பதிவு செய்திருக்கிறீர்கள்.
குறிப்பாக, “சென்னை
செங்கற்பட்டு விழுப்புரத்தின் சென்னைத் தமிழ் மிகச் சாதாரணமான உழைக்கும்
மக்களின் அவசரத் தமிழாக இருக்கும். இதில் கொச்சை எங்கிருந்து வந்தது?” எனவும் நீங்கள்
கேள்வி எழுப்பியிருக்கிறீர்கள். அதற்காகச் சென்னைத் தமிழன் எனும் முறையில் இங்கே
நான் உங்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்!
தொடர்ந்து, “எந்த
நாட்டிலிருந்தாலும் ஒரே மாதிரியாகப் பேசும் ‘பிராமணத் தமிழ்’ கொச்சைத் தமிழ்ப் பிரிவில்
வருமா?” எனவும் நீங்கள்
கேட்டிருப்பது உச்சந்தலையடி! செம்மையான கேள்வி! இப்படி நாகரிகம்
எனும் பெயரால் மொழிப் பயன்பாட்டில் காலங்காலமாகக் கடைப்பிடிக்கப் பட்டு
வரும் பாகுபாடுகள் அனைத்தையும் சட்டையைப் பிடித்திழுத்துக் கேள்வி எழுப்புவதாக
இக்கட்டுரை முழுவதும் பல புரட்சிச் சிந்தனைகள் விரவியுள்ளன.
நூலில், ஒரேயடியாக இலக்கண
மரபுகளைக் கைவிடவும் செய்யாமல் அதே நேரம் கொஞ்சமாவது
நெறிகளைத் தளர்த்திக் கொள்ளவும் முன்வர வேண்டும் எனும் கருத்தோட்டத்தை
எப்படித் தொடக்கம் முதல் முடிவு வரை பார்க்க முடிகிறதோ அதே போலச் சமுக அக்கறை
மிக்க ஓர் அரசியலாளரின் குரலையும் நூல் நெடுகிலும் கேட்க முடிகிறது.
அப்படி அந்தக் குரல் உரக்க ஒலிக்கும் இடமே நூலின் இந்த மூன்றாவது கட்டுரை. இதற்குப் பின்
வரும் “பொதுவான சில
சந்தேகங்கள்” எனும் கட்டுரை
மற்றவற்றைப் போலவே பயனுள்ளதாக இருப்பினும் கொஞ்சம் ஏமாற்றத்தையும் அளிக்கவே செய்தது ஐயா!
தமிழில் நாம் அடிக்கடி செய்யும் சில பிழைகளைப் பற்றிப் பேசும் இக்கட்டுரையை
நீங்கள் தொடங்கிய விதமும் அதில் கூறியிருந்த செறிவான கருத்துக்களும் கண்டு அப்படியே தொடர்ந்து
அனைத்து வகையான பிழைகளையும் அவற்றைத் தவிர்க்கும் முறைகளையும் பற்றி விலாவாரியாக
எழுதுவீர்கள் என்று எதிர்பார்த்தேன். ஆனால் மொத்தக் கட்டுரையும் ஒன்றரைப்
பக்கத்திலேயே முடிந்து விட்டது ஏமாற்றமே!
எனினும் அதன் முடிவில் நீங்கள் அளித்திருந்த பிழைச் சொற்களும் அவற்றுக்கான திருத்தச் சொற்களும் என்கிற பட்டியல் மிகவும் பயனுள்ளதே! அதையொட்டிப் பிறமொழிச் சொற்களுக்கான தமிழ்ச் சொற்கள், வடமொழிச் சொற்களுக்கான தமிழ்ச் சொற்கள் போன்றவற்றையும் பட்டியலிட்டுள்ளீர்கள். ஊடகங்கள் கோலோச்சும் இக்காலத்தில் எல்லாருமே ஓரளவாவது எழுதத் தொடங்கி விட்டதால் பிழையின்றி எழுத விரும்பும் அனைவருக்குமே இப்பட்டியல்கள் மிகவும் பயன்படும். நானும் இதுவரை சரி எனக் கருதி வந்த பல சொற்பயன்பாடுகளை இதன் மூலம் பிழை என்று அறிந்து கொண்டேன். மிக்க நன்றி!
அதே சமயத்தில் இப்பட்டியல்களில் உள்ள சில சொற்கள் குறித்து எனக்குச் சில மாற்றுக்கருத்துக்களும் உண்டு. அவற்றையும் உங்களிடம் தெரிவிக்க விழைகிறேன்.
முதலாவதாக உள்ள ‘தவறாக எழுதப்படும் சொற்களுக்கான திருத்தங்கள்’ எனும் தலைப்பில் எழுத்துகள், வாழ்த்துகள் என எழுதுவதே இலக்கணப்படி சரி எனக் குறிப்பிட்டிருக்கிறீர்கள். ஆனால் எழுத்து‘க்’கள், வாழ்த்து‘க்’கள் என எழுதுவதும் சரிதான் ஐயா! இது குறித்துக் ‘கள்ளுண்ட தமிழ்’ எனும் தலைப்பில் தமிழறிஞர் கண்ணபிரான் இரவிசங்கர் அவர்கள் ஒரு கட்டுரை படைத்துள்ளார். இப்படிக் குறிப்பிட்ட சில சொற்களில் ‘கள்’ விகுதிக்கு முன் ‘க்’ சேர்த்து எழுதுவது சரியே என்பதைத் தொல்காப்பியம் முதற்கொண்டு பல மறுக்க முடியாத சான்றுகளுடன் ஆணித்தரமாக அவர் அதில் எழுதியுள்ளார். நேரம் கிடைத்தால் அந்தக் கட்டுரை யையும் நீங்கள் பார்க்க வேண்டுகிறேன்! நீங்கள் பரந்த மனம் படைத்தவர் என்பதால் இப்படி நான் சொல்வதைத் தவறாக நினைத்துக் கொள்ள மாட்டீர்கள் எனும் நம்பிக்கை எனக்குண்டு.
இதற்கு அடுத்து, வடமொழிச் சொற்களுக்கான தமிழ்ச் சொற்கள் எனும் பட்டியலில் ‘சிரஞ்சீவி’ எனும் வடமொழிச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொற்கள் ‘திருவளர் செல்வன், செல்வி’ எனக் கொடுத்திருக்கிறீர்கள். இதைப் பலர் தவறாகப் புரிந்து கொள்ள வாய்ப்புண்டு. ‘திருவளர் செல்வன் / திருவளர் செல்வி’ என முழுமையாகக் குறிப்பிட்டால் பிழையான புரிதலைத் தவிர்க்கலாம் என நினைக்கிறேன். இதே போல், சமுக ஊடக ஆங்கிலச் சொற்களுக்கான தமிழ்ச் சொற்கள் குறித்தும் எனக்கொரு பெரிய மாற்றுக்கருத்து வெகுநாட்களாக உண்டு. அதையும் இங்கே உங்களிடம் தெரிவிக்க விருப்பம். அதாவது பேசுபுக்கு, இன்சுடாகிராம், துவிட்டர் போன்ற சொற்களுக்கும் நீங்கள் தமிழ்ச் சொற்களைக் கொடுத்திருக்கிறீர்கள் இல்லையா? இப்படிப்பட்ட சொற்களை மொழிபெயர்க்கக்கூடாது என்பது என் பணிவன்பான கருத்து. ஏனெனில், பொதுப் பெயர்ச் சொற்களை (common noun) மொழிபெயர்க்கலாம்; சிறப்புப் பெயர்ச் சொற்களை (common noun) மொழிபெயர்க் கக்கூடாது என்பது மொழியியல் மரபு இல்லையா ஐயா?
அதாவது “தமிழ் நம்
தாய்மொழி” – இதில் தமிழ்
என்பதும் பெயர்ச்சொல்தான், தாய்மொழி என்பதும்
பெயர்ச்சொல் தான். ஆனால் தமிழ் என்பது அந்த ஒரே ஒரு மொழியை மட்டுமே குறிக்கப்
பயன்படும் சிறப்புப் பெயர்ச்சொல். ஆனால் தாய்மொழி எனும் சொல்லால் உலகில்உள்ள
எல்லாருடைய தாய்மொழியையுமே குறிப்பிடலாம். ஆகவே அது பொதுப் பெயர்ச்சொல்.
எனவே இதை வேறு மொழியில் பெயர்த்தால் ‘நம்’, ‘தாய்மொழி’ ஆகிய சொற்கள்
பெயர்க்கப்படும் மொழிக்கேற்ப மாறும். ஆனால் ‘தமிழ்’ எனும் சொல் மட்டும் மாறாது. இதுதான்
உலக வழக்கம் இல்லையா ஐயா?
ஆனால் தமிழர்கள் நாம் மட்டும் பேசுபுக்கு, இன்சுடா கிராம், துவிட்டர், உயூடியூபு என எல்லாச் சிறப்புப் பெயர்ச் சொற்களையும் மொழிபெயர்க்கிறோமே! இது சரியா என்பது என் பலநாள் கேள்வி! இது குறித்து நான் ஏற்கெனவே ‘English ஆங்கிலம்தான். ஆனால் Facebook முகநூல் இல்லை!’ என்று ஒரு கட்டுரையை தினச்செய்தி நாளிதழில் எழுதியிருந்தேன். இதன் மூலம் அக்கருத்தை உங்களுடைய மேலான பார்வைக்கும் கொண்டு வர விரும்புகிறேன்!
பட்டியல்களுக்குப்
பின் வருவது ‘ச, ர, ல, முதலில் வாராதா? / மரபு மாறாதா?’ – ஒரு முக்கியமான
கட்டுரை.
மரபு என்பது மாறக்கூடாததில்லை என்பதற்கு நல்ல விளக்கங்களை ஆதாரங்களுடன்
நீங்கள் இக்கட்டுரையின் தொடக்கத்தில் வழங்கியிருக்கிறீர்கள். அதுதான் என் கருத்தும்!
மொழியின் மீது முதல் உரிமை எப்பொழுதும் மக்களுக்கே என்பதுதான் என் எண்ணம். ஏனெனில் மொழி பிறந்ததே மக்கள்
வாயிலிருந்துதானே?
இன்று நாம் எவ்வளவுதான் இலக்கணம் எழுதினாலும், சொற்பயன்பாடு – அவற்றுக்கான காரண ஏரணங்கள்
பற்றியெல்லாம் விளக்கமளித்தாலும் அடிப்படையில் ஒரு மொழியின் சொற்கள் என்பவை
வெறும் ஒலிக்குறிப்புகள்தாமே?
ஆதித் தமிழர் விதவிதமாய் ஒலிகள் எழுப்பி, ஒவ்வோர் ஒலிக்கும் இனி இன்னின்ன பொருள் வைத்துக்
கொள்ளலாம் என்று தங்களுக்குள் செய்து கொண்ட உடன்படிக்கையில் உருவானவைதாமே
சொற்கள்! இவற்றின் தொகுப்பைத்தானே பின்னர் மொழியென்று நாம் வரையறுத்தோம்!
ஆகவே மொழியின் மீதான உரிமை என்றும் மக்களுக்கே அன்றோ?
அதே நேரத்தில், அந்த உடன்படிக்கையிலும் ஒரு நிலைத்தன்மை வேண்டும் என்பதை நாம் மறுக்க முடியாது. மக்கள் தங்கள் உரிமையின் பேரால் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் மொழியில் மனம் போன போக்கில் மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டே இருந்தால் ஒரு செந்தரமே இல்லாமல் போய் மொழி அழியும் கெடுவாய்ப்பும் உள்ளது. அதனால்தான் சில அடிப்படைக் கூறுகள் என்றும் மாறாதிருக்கும் பொருட்டு இலக்கணம் என்பது எழுந்தது. இருப்பினும் அந்த இலக்கணம் மக்களின் அடிப்படை உரிமையை மறுதலிப்பதாக இருக்கக்கூடாது என்பதைத் தாங்கள் இதில் வலியுறுத்தியுள்ளீர்கள். எனக்கும் இஃது உவப்பானதே!
ஆனால் ஐயா, ரகரமும் லகரமும் சொல்லின் தொடக்கத்தில் வருவதற்கு அறிவுலகம் ஏற்பிசைவளிக்க நீங்கள் கோருவது சரிதான். அதே வேளையில் சகரம் சொல்லின் தொடக்கத்தில் வரும் வழக்கம் பண்டைக் காலத்திலிருந்தே இருப்பதுதானே? இம்முறை சங்கக் காலத்தில் இல்லாமலிருந்து தொல்காப்பியருக்குப் பிறகான காலத்திலிருந்து வழக்கிலிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். மேலும் சங்கம் என்பது சகரத்தில் தொடங்கும் சொல்லாக இருப்பினும் முச்சங்கம் என்பதே கற்பனைதான் எனக் கூறுபவர்களும் உண்டு எனவும் பதிவு செய்துள்ளீர்கள். முதல் இரு சங்கங்கள் வேண்டு மானால் கற்பனையாக இருக்கலாம். ஆனால் கடைச் சங்கம் உண்டுதானே? அந்த அடிப்படையில்தானே தமிழர் வரலாற்றையே நாம் எழுதியுள்ளோம்? அதனால்தானே குறிப்பிட்ட நூல்களைச் சங்க இலக்கியம் என்கிறோம்? எனவே கடைச்சங்கம் இருந்திருக்க வேண்டும்தானே?
நான் ஒருமுறை துவிட்டரில் சிவனைத் தமிழ்க் கடவுள் என்று குறிப்பிட்டுப் போக,
தமிழறிஞர் கண்ணபிரான்
இரவிசங்கர் அவர்கள் என்னை மிகவும் கண்டித்தார். சிவன் தமிழ்க் கடவுள் இல்லை என்பதற்கு
அவர் முன்வைக்கும் அழுத்தமான ஆதாரம் என்னவெனில், தொல்காப்பியத்தில்
சிவன் இல்லை என்பது. “சிவனைத் தமிழ்க்
கடவுளாக நாம் முன்னிறுத்த முனைந்தால் தொல்காப்பியம் அதற்கு ஒரு பெரும் தடையாக இருந்தே தீரும்” என்பது அவர் வாதம்.
தொல்காப்பியத்தில் பேசப்படும் ஐந்திணை நிலங்களின் தெய்வங்கள் பட்டியலில் சிவன் இல்லை
என்பதால் அவர் அப்படிச் சொல்கிறார். தமிழ்க் கடவுளான முருகன் செந்நிறத் தெய்வம்.
அந்தச் சிவப்புத் தெய்வத்தை மாற்றீடு செய்யப் பார்ப்பனர்களால்
இங்கே புகுத்தப்பட்டதுதான் இன்னொரு சிவப்புக் கடவுளான உருத்திரன்.
அதுதான் பின்னர் சிவனாக, சிவ வழிபாடாக மாறியது எனவும் அவர் கூறுகிறார். இவற்றையெல்லாம்
நான் ஒரு தகவலுக்காக இங்கே சொல்கிறேனே ஒழிய உங்களை மறுத்துப் பேச
வேண்டும் என்பதற்காக இல்லை ஐயா!
கட்டுரையின் முடிவில் “சாமி, சாதி, சமூகம் போலும் சொற்களை, பண்பாட்டு மாற்றமின்றி மாற்றவும் இயலாது” என நீங்கள் குறிப்பிட்டிருப்பது அலாதி!!
வெறுமே கருத்தைச் சார்ந்தோ கோட்பாட்டைச்
சார்ந்தோ மட்டுமல்லாமல் ஒவ்வொரு சொல்லும் சார்ந்து எந்தளவுக்கு நீங்கள் ஆழச்
சிந்தித்திருக்கிறீர்கள் என்பதை இதிலிருந்து உணர முடிகிறது. கூடவே மொழி அரசியல் எந்த அளவுக்கு
வேரோடி விரவியிருக்கிறது என்பதையும் இரண்டே வரிகளில் நீங்கள் நச்சென உணர்த்தி
விட்டீர்கள்! மலைக்கிறேன் ஐயா!
மொத்தத்தில் ச, ர, ல ஆகியவை மொழி முதலில் வருவதை ஏற்றுக் கொள்ளலாம் என்பதே என் கருத்தும். எந்தெந்த எழுத்துக்கள் சொல்லின் தொடக்கத்தில் இடம்பெறலாம் என்று யாரோ ஒரு காலத்தில் வைத்து விட்டுப் போன வரையறையில் மேலும் மூன்றே மூன்று எழுத்துக்களைக் கூட்டிக் கொள்வதில் தவறொன்றும் இல்லையே! இஃதொன்றும் மாற்றக்கூடாத அளவுக்குப் பெரிய இலக்கணக் கட்டுப்பாடு இல்லையே!
அதே வேளையில், “கணினி ஒருங்குறி
எழுத்துருவில் ஜ, ஹ, ஷ, க்ஷ எழுத்துகள் சேர்ந்துவிட்டன.
இவற்றை இனி தவிர்க்க முயற்சி செய்யத்தான் முடியுமே தவிர இவற்றை உடைய பெயர்கள்
தமிழல்ல என்று முடிவெடுக்க முடியாத நிலையை...” என நீங்கள் எழுதிச் செல்லும்
கருத்தில் முடிவு ஏதும் சொல்லாமல் இது குறித்து நாம் முடிவெடுத்தாக வேண்டிய கட்டாயத்தில்
இருப்பதை மட்டும் சுட்டிக்காட்டியிருக்கிறீர்கள். அந்த வரிகளில் எவ்வளவு கவலையுடனும்
ஆழ்ந்த அக்கறையுடனும் நீங்கள் சொற்களை ஆண்டிருக்கிறீர்கள் என்பதை உணர முடிகிறது.
என்னைக் கேட்டால், கிரந்த எழுத்துக்களை நாம் பயன்பாட்டிலிருந்து அப்புறப்படுத்தித்தான் ஆக வேண்டும் என்பதுதான் என் திட்டவட்டமான கருத்து ஐயா! பொதுவாக, கிரந்த எழுத்துக்கள் நமக்கு முக்கியமாகத் தேவைப்படுவது பெயர்ச் சொற்களை எழுத. வெளிநாட்டவர்களின் பெயராக இருந்தாலாவது நாம் தமிழ் ஒலிபெயர்ப்பு இலக்கணத்துக்கேற்ப கிரந்த எழுத்து பயன்படுத்தாமல் எழுதி விடலாம். ஆனால் நம் ஆட்களே நாகரிகம் என்று நினைத்துக் கொண்டு அயல்மொழியில் பெயர் வைக்கும்பொழுதுதான் சிக்கல் தீவிரமாகிறது. ஆனாலும் அண்மைக்காலமாக மக்களிடையே இது விதயத்தில் பெரிய மாறுதல் ஏற்பட்டு வருவதையும் நீங்கள் அறிவீர்கள். இப்பொழுது தூய தமிழில் பிள்ளைகளுக்குப் பெயர் வைக்கும் ஆர்வம் ஓர் அலையாகவே (trend) பரவி வருகிறது. இது தொடர்ந்தால் எப்படியும் இன்னும் சில தலைமுறைகளில் தமிழ் இனத்தில் கிரந்த எழுத்துக்களே இல்லாத (அல்லது வெகுவாகக் குறைந்த) பெயரையே அனைவரும் சூடியிருக்கும் சூழல் ஏற்பட வாய்ப்பு உண்டு.
அப்படியே நடந்தாலும் தமிழ் எழுத்து நடையிலிருந்து கிரந்தத்தை அப்புறப்படுத்த
முடியுமா என்றால் மெத்தவும் கடினமே! இருந்தாலும் நாம் அதை எப்படியாவது சாதித்துதான் ஆக வேண்டும் ஐயா!
இல்லாவிட்டால், இன்றைய அரசியல்
போகிற போக்கைப் பார்த்தால் கிரந்த எழுத்துக்களைத் தமிழ் நெடுங்கணக்கிலேயே சேர்க்க
எந்நேரம் வேண்டுமானாலும் முயற்சி மேற்கொள்ளப் படலாம் எனத் தோன்றுகிறது. அப்படி
ஒருவேளை நடந்தால் அதை நாம் வெறும் போராட்டங்கள் மூலமாகவோ எதிர்ப்புகள் மூலமாகவோ மட்டும் வெகு
காலத்துக்குத் தடுத்து விட முடியாது. இதைத் தவிர்க்க ஒரே வழி மொழிப் பயன்பாட்டிலிருந்தே
இவற்றை அப்புறப்படுத்துவது மட்டுமாகத்தான் இருக்க முடியும்.
முதன் முதலில் ஒலிபெயர்ப்பு இலக்கணத்தை வரையறுத்த உலகின் முன்னோடி மொழிகளுள் ஒன்று தமிழ்
என்பது நீங்கள் அறியாததில்லை!
“வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ
எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே”
என்று 2500 ஆண்டுகளுக்கு
முன்பே எழுதி வைத்திருக்கிறார் தொல்காப்பியர். ஆனால் அப்பேர்ப்பட்ட
மொழியையே இன்று அதற்கு முற்றிலும் நேர்மாறாகச் செயல்படுத்திச் சிதைத்துச்
சின்னபின்னப்படுத்திக் கொண்டிருக்கிறோம்.
எனக்குத் தெரிந்த வரை, உலகில் எந்த ஓர்
இனத்தவரும் பிறமொழிச் சொற்களை ஒலிப்பு மாறாமல் எழுத
வேண்டும் என்பதற்காகத் தங்கள் மொழியில் கூடுதல் எழுத்துக்களைச் சேர்த்துக்
கொள்வதாகத் தெரியவில்லை ஐயா! கிரந்த எழுத்துக்களைச் சேர்த்துக் கொள்வதன் மூலம் தமிழர்கள்
மட்டும்தாம் இதைச் செய்து வருகிறோம்.
ஆக, இது மொழிச்சிதைவு
மட்டுமில்லை, தமிழிலக்கணத்துக்கு
மாறானது மட்டுமில்லை உலக மொழியியல் மரபுகளுக்கே முரணானது! எனவே கிரந்த எழுத்துப் பயன்பாட்டை ஒழித்தே ஆக வேண்டும் ஐயா!
ஆனால் இது நடக்கிற கதையா? நடக்கும் ஐயா! உங்களைப் போல் துறைசார் பெருமக்களான கல்வியாளர்கள், அறிஞர்கள் போன்றோர்தாம் மொழியை அதன் இலக்கணம் அறிந்து பயன்படுத்துகிறீர்கள். ஆனால் என்னைப் போல் சராசரிகளான பெரும்பான்மை மக்களின் மொழிப் பயன்பாடு என்பது முற்றிலும் இதழ்களையும் ஊடகங்களையும் சார்ந்தது. எனவே ஊடகங்களைச் சட்டத்தின் மூலம் கட்டுப்பட்டுத்தி அதில் கிரந்த எழுத்துப் பயன்பாடு தவிர்த்த சொல்லாட்சியை, எழுத்து நடையை அமல்படுத்தினாலே அதைப் பார்த்துத் தமிழ் பயன்படுத்தும் பெரும்பான்மை மக்களும் மாறுவர். அண்மையில் நம்மை விட்டுப் பிரிந்த இரசியத் தமிழறிஞர் அலெக்சாந்தர் துபியான்சுகி அவர்கள் மறைவு பற்றிய செய்தி இதற்கு ஒரு நல்ல சான்று. நம் மக்களுக்கும் ஊடகங்களுக்கும் இதற்கு முன் அவர் பெயர் அறிமுகமாகவில்லை. அவர் மறைந்தவுடன் தமிழறிஞர்களும் அரசியல் தலைவர்களும் இரங்கல் செய்தி வெளியிடவே அஃது ஊடகங்களில் வெளிவந்தது.
அந்தச் செய்தி அறிக்கைகளை நீங்கள் எடுத்துப் பார்த்தீர்களானால்
பல ஊடகங்களில் அவர் பெயரின் பின்பாதி ‘துபியான்சுகி’ என நல்ல தமிழ் ஒலிபெயர்ப்பில்
இருப்பதைக் காணலாம். இதற்குக் காரணம் அவர் மறைவு பற்றிய செய்தி நம் ஊடகங்களுக்கு
வழக்கமான முறையில் வராமல் தூயதமிழ்ப் பற்றுக் கொண்ட தமிழறிஞர்கள், தலைவர்கள்
வாயிலாக வந்ததுதான். இதனால் அவர்கள் பயன்படுத்திய கிரந்தம் தவிர்த்த எழுத்துக்கூட்டலே
பரவி விட்டது. இனி நம் மக்களுக்கு அவர் பெயர் என்றும் துபியான்சுகிதான்.
இதுவே வழக்கமான முறையில் இந்தச் செய்தி இங்கு வந்திருந்தால் அவர் பெயர் ‘டுப்யான்ஸ்கை’ என்றுதான் அறியப்பட்டிருக்கும்.
மக்களிடம் மொழியைக் கொண்டு சேர்க்கும் ஊடகங்களை ஒழுங்குபடுத்தினாலே கிரந்தப் பயன்பாட்டை ஒழித்துக் கட்டி விடலாம் என்பதற்கு இது நமக்கு நம்பிக்கையூட்டும் நிகழ்வாக உள்ளது.
இதற்கு
மட்டுமில்லை, இந்த நூலில்
நீங்கள் வலியுறுத்துகிற ‘மரபை முற்றிலும் கைவிடாமல்
இலக்கணத் தளர்வுகள் ஏற்படுத்துதல்’ எனும் கருத்துப்படி அப்படி நீங்கள் கொண்டு வர
விரும்பும் எல்லா மாற்றங்களையுமே ஊடகங்களை முறைப்படுத்துவதன் மூலம் சாதிக்க இயலும் என்பது
என் பணிவன்பான பரிந்துரை.
இதற்குப் பின் வருவது ‘இலக்கணக்
குறிப்புகள்’. இரட்டைக் கிளவி,
அடுக்குத்தொடர், அளபெடை, ஆகுபெயர் எனப் பல இலக்கணக் கூறுகளைப் பட்டியலிட்டு
அவற்றைப் பற்றி அறிமுகம் கொடுத்திருக்கிறீர்கள். இலக்கண நூல் ஒன்றுக்கு இஃது இன்றியமையாத
பகுதியே! ஆனால் ஐயா, எல்லாமே
சுருக்கமான அறிமுகத்தோடு நின்று விடுவதால் அவ்வளவாகப் பிடிபடவில்லை
என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
சிறிய இலக்கண விதயங்களான இரட்டைக் கிளவி, அடுக்குத்தொடர் போன்றவற்றுக்கு ஓரிரு வரியிலான விளக்கங்கள் போதுமானவையே. ஆனால் ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம், அன்மொழித்தொகை போன்றவற்றுக்கு அது போதவில்லை.
ஆனால் இதில் வேற்றுமை உருபு குறித்த உங்கள்
விளக்கம் இருக்கிறதே... அப்பப்பா!! எப்படித்தான் உங்களுக்கு இப்படியெல்லாம்
சிந்திக்கத் தோன்றுமோ!!! வேற்றுமை உருபு பற்றி விளக்கும் எல்லாருமே எட்டு வகையான வேறுபாடுகள் என்றுதான் அவற்றைக்
குறிப்பிடுவார்கள். ஆனால் நீங்களோ ‘பிறப்பால் அன்றி மனிதன் தன் செயல்களால் வேறுபாடு காட்டும் எட்டு வகை
வேறுபாடுகள்’ என அவற்றை வருணித்திருக்கும்
விதத்தை... இதை நான் என்ன சொல்ல... வாய்மையாகச் சொல்கிறேன் ஐயா, சமுக அக்கறை என்பது எப்பொழுதுமே ஓர் உள்
உறுத்தலாக இடையறாது இருந்து கொண்டிருக்கும் உள்ளத்தைப் பெற்றவரால்தான் இந்த இடத்தில் கூட இப்படி எழுத
முடியும்! உங்களுடைய அந்தப் பண்புக்கு என் தலைவணக்கம்!
இதன் பிறகு மரபுக்கவிதை எழுதிப் பழகப் படிக்க வேண்டிய நூல்களின் பட்டியலைக் கொடுத்திருக்கிறீர்கள்.
மிக்க நன்றி!
அடுத்தது நூலின் இன்னொரு உடுக்குறிக் கட்டுரையான ‘தொல்காப்பியருக்கு ஏன் நோபல் பரிசு தரவில்லை?’.
கவர்ந்திழுக்கும்
தலைப்பைக் கொண்ட இக்கட்டுரையை முழுமையாகப் படித்தால்
தெரிகிறது, நீங்கள்
கவர்ச்சிக் காக இப்படி ஒரு தலைப்பைச் சூட்டவில்லை என்பது. தொல்காப்பியரின் ‘ஒன்றறிவு அதுவே உற்றறிவு அதுவே’ எனும் பாடலை இதில் ஆராயும் நீங்கள், செடி கொடிகளுக்கு உயிரும் அறிவும் உண்டு எனும்
அறிவியல் கருத்தை 2500 ஆண்டுகள் முன்பே வெளியிட்ட தொல்காப்பியருக்கு ஏன் நோபல் பரிசு தரக்கூடாது எனக் கேட்டிருக்கிறீர்கள்.
உலகையே திரும்பிப் பார்க்க வைக்கும் கேள்வி இது! வெறுமே கேள்வி எழுப்பியதோடு
நில்லாமல் வெளிநாடு வாழ் தமிழர்கள் இதற்கு முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்றும்
நீங்கள் வலியுறுத்தியிருப்பது இதன் தீவிரத்தை உணர்த்துகிறது.
அடுத்து இடம்பிடித்திருப்பது தமிழ்நாடு அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்ல
வேண்டிய அளவுக்கு முக்கியமானதாக விளங்கும் ‘ர, ழ எழுத்துகளைக் காப்பாற்றுங்கள்!’. ழகரத்தைத்
தமிழர்கள் யாரும் சரியாகப் பலுக்குவதில்லை என இதில் நீங்கள் தெரிவித்துள்ள கவலை சரியானதே!
தமிழ்ப் பற்றுள்ள அனைவருக்கும் பரவலாக இருக்கிற கவலையே!
ஆனால் இதே கட்டுரையில் ரகத்துக்கு ஏற்பட்டுள்ள பேரிடர் பற்றி நீங்கள் குறிப்பிட்டிருக்கும் தகவல் இதுவரை துளியும் கேள்விப்படாதது. தமிழில் இப்படி ஒரு புதுச் சிக்கல் முளைத்திருப்பது தமிழுலகில் எத்தனை பேருக்குத் தெரியும்! பள்ளி ஆசிரியர் களுக்கு, பள்ளி மாணவர்களோடு பழகுகிற வர்களுக்குத் தெரிந்திருக்கலாம். வேறு யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை. கணினியில் பயன்படுத்தப் படும் சில எழுத்துருக்கள் செய்த குழப்பத்தால் ரகத்துக்கு மாறாகத் துணைக்காலின் மேல் புள்ளி வைத்து அதை ரகரமாகப் பயிலும் போக்கு பள்ளி மாணவர்களிடையே ஏற்பட்டிருப்பதாகக் கூறுகிறீர்கள். இது மிகவும் கவலைக்குரியது!
கண்டிப்பாக இதை அரசின் கவனத்துக்குக் கொண்டு சென்று உடனே இப்படிப்பட்ட தமிழ் எழுத்துருக்களைத்
தடை செய்ய வேண்டும் ஐயா! இப்படி ஒரு தீவிரமான சிக்கலை வெளியுலகின்
கவனத்துக்குக் கொண்டு வந்ததற்காக மிக மிக நன்றி!
இதற்குப் பின்னால் வருவது வேடிக்கையான தலைப்பில் பெரும் சர்ச்சைக்குரிய ஒரு
கருத்தைப் பேசும் ‘பாட்டெழுதிப்
பெயர் வாங்கும் புலவர்களும், குற்றம் கண்டுபிடித்தே பெயர் வாங்கும் புலவர்களும்!’
என்கிற கட்டுரை. எல்லா
இடங்களிலும் சந்தி இலக்கணம் கடைப்பிடிக்க வேண்டியதில்லை. பொருள் வேறுபடக்கூடிய
இடங்களில் மட்டும் கடைப்பிடித்து மற்ற இடங்களில் இந்த நெறிகளைத் தளர்த்திக்
கொள்ளலாம் எனும் மிகப் பெரிய மாற்றத்தை நீங்கள் இதில் தமிழ் கூறும் நல்லுலகுக்குப்
பரிந்துரைத்திருக்கிறீர்கள்.
நீங்கள் இந்த நூலைப் பற்றி என்னிடம் சொன்னபொழுது இந்தக் கட்டுரையைப் பற்றி முக்கியமாகக்
குறிப்பிட் டிருந்தீர்கள். ஆனால் அப்பொழுது எனக்கு இதன் தீவிரம் உறைக்கவில்லை.
கட்டுரையைப் படித்த பிற்பாடுதான் உங்கள் கவலை எவ்வளவு சரியானது என்பது
புரிந்தது. பள்ளி மாணவர்கள் முதல் புதிதாகத் தமிழில் எழுத முனையும் எழுத்தாளர்கள் வரை அனைவருக்கும்
ஓர் இலக்கண நெறி அச்சுறுத்தலாக இருக்கிறது என்றால் கண்டிப்பாக அது மறு
ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டியதே என்பதில் மாற்றுக் கருத்து இல்லை ஐயா!
ஆயினும் எனக்கு இதில் இரண்டு கேள்விகள் உள்ளன. ஒன்று – பொருள் வேறுபடும் இடங்களில் மட்டும் சந்தி
இலக்கணத்தைக் கடைப்பிடிப்பது என்றால் எந்தெந்த இடத்தில் பொருள் வேறுபாடு ஏற்படுகிறது என்பதை எப்படிக் கண்டுபிடிப்பது?
நன்கு தமிழறிந்த ஒருவர்
ஒவ்வொரு வரியையும் ஒன்றுக்குப் பலமுறை படித்துப்
பார்த்துத்தானே கண்டுபிடிக்க முடியும்! இது சந்தி இலக்கணம் கற்பதை விடக் கடினமாயிற்றே!
நடைமுறையில், அன்றாட மொழிப்
பயன்பாட்டில் எளிய மனிதர்களுக்கு இது இயலுமா!
இரண்டாவது – இந்தச் சந்தி
இலக்கண நெறிமுறைகள் எந்தக் காரணத்துக்காக, எத்தகைய மொழிப் பயன்பாட்டுக்
குழப்பங்களைத் தவிர்ப்பதற்காக வகுக்கப்பட்டனவோ அவற்றைச் சரி செய்யாமல் இந்த
நெறிகளைத் தளர்த்தினால் சிக்கல் நேராதா அல்லது அந்தக் காரணங்கள் இன்றைக்கு
இல்லையா?
அதாவது அந்தக் காலத்தில் தமிழில் உரைநடை என்பதே கிடையாது. எல்லாமே பா வடிவம்தான்.
நிறுத்தற்குறிகளும் அன்று இல்லை. எனவே அன்றைய தேவைக்காக உருவாக்கிய
இந்தச் சந்தி இலக்கண நெறிகள் இன்றைய மொழி வடிவத்துக்குத் தேவைப்படாமல் கூட
இருக்கலாம். ஆகவே எந்தெந்தச் சந்தி இலக்கண நெறி எந்தெந்தக் காரணத்துக்காக
உருவாக்கப்பட்டது என்பதை ஆய்ந்து இன்றைய மொழியின் வடிவத்துக்குத் தேவைப்படாதவற்றைக்
கூட நீங்கள் கூறுவது போல் தவிர்த்துக் கொள்ளலாம் என நினைக்கிறேன்.
ஆக மொத்தம் இது பெரிய விவாதத்துக்கு உரியது ஐயா! என்னைக் கேட்டால், பொருள் வேறுபாடு அடையாத
எல்லா இடங்களிலும் தவிர்த்து விடவும் செய்யாமல், அப்படியே இந்த இலக்கணத்தை
முற்று முழுதாகக் கடைப்பிடிக்கவும் செய்யாமல் காலத்துக்கு ஒவ்வாத நெறிகளை
மட்டுமாவது தளர்த்திக் கொள்ளலாம் என்பேன்.
நீங்கள் இதைப் பற்றி இந்த ஒரு கட்டுரையோடு நிறுத்தாமல், விரிவாகவும் எல்லாக் கோணங்களி லிருந்தும்
ஆராய்ந்து இற்றைத் தமிழுக்கு ஏற்ற முழுமை யான சந்தி இலக்கணம் ஒன்றை
வரையறுத்தால் அது தமிழுக்கு செய்யக்கூடிய பெரும் தொண்டாக அமையும்.
இதை நீங்கள் மட்டும்தாம் செய்யவும் முடியும். காரணம், நீங்கள்தாம் சந்தி இலக்கணத்தால் ஏற்படும் மொழி
வளர்ச்சித் தடை பற்றி இந்த அளவுக்குக் களம் சார்ந்த புரிதல் கொண்டவராகத்
திகழ்கிறீர்கள். ஆகையால் இது குறித்து முழுமையான ஆய்வையும் நீங்கள்தாம்
மேற்கொள்ள வேண்டும் ஐயா!
இது முடிந்ததும் தமிழர் வழக்கிலுள்ள இரட்டைச் சொற்களைப் பட்டியலிட்டு
அவற்றுக்கான பொருள்களைக் கொடுத்திருக்கிறீர்கள். மிகவும் அருமையாக இருக்கிறது! அக்கம்
பக்கம், ஏட்டிக்குப் போட்டி, குண்டக்க மண்டக்க
என நிறைய சொற்களைப் பொருளோடு வழங்கியிருக்கிறீர்கள். சுவையான தகவல்!
அது முடிந்ததும் பழந்தமிழரின் நீர் மேலாண்மை உணர்த்தும் சொற்களைப் பட்டியலிட்டிருக்கிறீர்கள்.
அப்பப்பா! எத்தனை எத்தனை நீர்நிலைகள்!! படிக்கவே மலைப்பாக இருக்கிறது!
தமிழர் நீர் மேலாண்திறனை மட்டுமில்லாமல் தமிழ் மண் எவ்வளவு நீர் வளம் நிரம்பியது
என்பதையும் இஃது உணர்த்துவதாக உள்ளது.
இதன் பிறகு வருவது தமிழர்கள் தம் கருத்தை உணர்த்த மேற்கொள்ளும் முயற்சிகளின் பெயர் வகைகள்! அடேங்கப்பா! எத்தனை வகை! சொல்லுதல், பேசுதல், உரைத்தல், புகலுதல் என இப்படி மொத்தம் 40+ சொற்கள் உண்டு எனக் கேள்விப்பட்டிருக்கிறேன். நீங்கள் அவை அனைத்தையுமே இங்கு பட்டியலிட்டு விட்டீர்கள் என நினைக்கிறேன். மிகச் சிறப்பு இது!
முடிவில் தமிழைப் பிழையில்லாமல் பேசவும் எழுதவும் படிக்க வேண்டிய நூல்களையும் பார்க்க வேண்டிய இணைப்புகளையும் பட்டியலிட்டு வழங்கியிருக்கிறீர்கள். பெரிதும் பயனுள்ளதுஇது!
பிழையின்றித் தமிழ் பேச, எழுத அக்கறையுள்ளவர்களை எப்பொழுதும் அலைக்கழிக்கும் தேடல் இது. யார் யாரோ எந்தெந்த நூலையோ பரிந்துரைப்பார்கள். ஆனால் இந்த அளவுக்குத் தமிழ் இலக்கணத்தில் நுண்மாண் நுழைபுலம் மிக்கவராகத் திகழும் நீங்கள் இப்படி ஒரு இலக்கண நூலை எழுதி அதன் முடிவில் கொடுத்திருக்கும் பட்டியல் உண்மையிலேயே மிகவும் நம்பகத்தன்மை வாய்ந்தது!
மிக்க நன்றி ஐயா!
மொத்தத்தில் இந்த நூல் தமிழில் ஒரு முக்கியமான வரவு ஐயா! இதை ஒரு கையேடாகவே தமிழ் மக்கள் எப்பொழுதும் தங்களுடன் வைத்துக் கொள்ளலாம். காரணம் இதில் பிழையின்றித் தமிழ் பேச - எழுத உதவும் வழிகாட்டுதல்கள், தமிழ் குறித்த ஐயங்களுக்கான விளக்கங்கள், தமிழ் மீது வைக்கப்படும் தவறான குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வதற்கான கருத்துக்கள், தமிழின் பெருமைகளை ஆதாரங்களுடன் முன்வைக்கும் ஆக்கங்கள் என எல்லாமே இருக்கின்றன.
தலைப்பைப் பார்ப்பவர்கள் இதை இலக்கணம் கற்பிக்கும் நூல் என்றுதான் நினைப்பார்கள். ஆனால் இஃது இலக்கணத் தைக் கற்பிப்பது மட்டுமின்றி காலத்துக்கேற்ப இலக்கணத் தில் கொண்டு வர வேண்டிய மாற்றங்களைப் பரிந்துரைக்கும் மொழிப்புரட்சி நூலும் கூட!
இப்படி ஒரு படைப்புக்காகவும் இப்பேர்ப்பட்ட படைப்பைக் குறித்துக் கருத்துரைக்க
இந்தச் சிறுவனுக்கும் வாய்ப்பளித்தமைக்காகவும் நெஞ்சார்ந்த நன்றி ஐயா!
என்றும் நேசத்துடன் உங்கள்
(ஒப்பம்)
(இ.பு.ஞானப்பிரகாசன்)
நாள்: 15.03.2021
வலைப்பக்கம் - https://agasivapputhamizh.blogspot.com/
-----------------------------------------------------------------
(3)
எழுத்தாளர் சந்திரகாந்தன் அவர்கள்
எழுதிய கருத்துரை (முகநூல் பதிவு)
பொருள் - சொல் - எழுத்து என்பதே
வரலாற்று முறைமையும் வாழ்க்கை முறைமையும் ஆகும்.
காலம் கடந்தும் வெளி தாண்டியும் தன் கருத்தை அல்லது செய்தியைச்
சொல்லவேண்டிய அவசியம் வந்தபோது மனிதன் எழுத்தை கண்டுபிடிக்கிறான். சொல்பவனின்
முகக்குறி, கை - கால் -
ஆட்டம் ஆகியவற்றை வைத்து சொல்லின் பொருளைச் சரியாக உணர்ந்து கொள்ளும் வாய்ப்பு
எழுத்துக்கு இல்லாததால் இலக்கணம் அவசியமாயிற்று.
தமிழில் தோன்றிய இலக்கணம் எழுத்துக்களை உயிர், மெய் என்று பாகுபடுத்தியதும் மெய் எழுத்துக்களை வல்லினம், இடையினம், மெல்லினம் என பாகுபடுத்தியதும் ஒலிகள் உடம்பில் தோன்றும் இடங்களை வைத்து எழுத்துக்களை வரிசைப்படுத் தியதும் அறிவியல் பூர்வமானவை; இன்றைக்கு ஆச்சரியம் ஏற்படுத்துபவை. இந்த அடிப்படையில் தோழர் முத்துநிலவன் அவர்கள் மூன்று சுழி ண இரண்டு சுழி ன, சிறிய ர, பெரிய ற எனச் செல்லமாகச் சொல்லப்படும் எழுத்துக்களை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதையும் எப்படி ஒலிக்க வேண்டும் என்பதையும் அவருக்கே உரிய நகைச்சுவையோடு சொல்லிச் செல்கிறார். செல்லப் பெயர்களாக அவற்றை ஏற்றுக் கொண்டால் என்ன என நான் தோழர் முத்துநிலவனைக் கேட்க விரும்புகிறேன்.
ஏனெனில், இலக்கணப் படியேதான் தமிழ் எழுதப்பட வேண்டும் எனப் பண்டித வீம்பு அவரிடம் இல்லை. கால மாற்றங்களைக் கருத்தில் கொள்ள வேண்டும் என்று வாதிக்கும் அவர் நன்னூலின் 'கழிதலும் புகுதலும்' என்பதின் நுட்பத்தைத் துணைக்கு அழைத்துக் கொள்கிறார்.
ச, ர, ல முதலில் வந்தால் தவறில்லை என மரபு மாற வேண்டும் என்றும் நவீனத் தமிழுக்கு இலக்கணம் வகுக்கப்பட வேண்டும் என்றும் அவர் சொல்வதை யார் ஏற்காதிருப்பர்?
எழுத்துப் பிழையைக் காட்டிலும் கருத்துப் பிழை தான் கண்டித்தற்குரியது எனக் கருதும் அவர் அத் தர்க்கத்தின் நீட்சியாக எழுத்துப் பிழையே கருத்துப் பிழைக்கு இடம் கொடுத்து விடுமே என்ற முடிவுக்கு வந்து சந்திப்பிழை குறித்து வாதித்து இறுதியில் இறுக்கம் தேவையில்லை என்று தீர்மானிப்பது ஏற்கத்தக்கதே. (வேலை கொடு - வேலைக் கொடு இங்கு பொருட் தெளிவிற்கு க் அவசியமாகிறது. எனக்கு தெரியாது- எனக்குத் தெரியாது த் இல்லை என்றாலும் பொருள் மாற்றமடையாது)
திருக்குறளின் மூன்று அதிகாரங்களில் அடக்கப்படும் குறள்களின் எண்ணிக்கையை வைத்து அவர் திருவள்ளுவரின் வாழ்க்கைக் கண்ணோட்டத்தை விளக்குவது சிறப்பு.
அதேபோல் தொல்காப்பியரின் திணைப்பாகுபாட்டை மார்க்சிய மானுட வரலாற்றோடு பொருத்திக் காட்டுவதும் சிறப்பு.
அறம், பொருள், காமம் என்பது நூல் வரிசையாயினும் காமம், பொருள், அறம் என்பதே வரலாற்று வரிசையாகும். இந்த அறத்தை வலியுறுத்தவே அறத்தின் பயன் வீடுபேறு என நான்காவது ஒன்று தோன்றியது என்பதும் அறத்தின் அடிப்படையில் ஏன் ஒழுக வேண்டும் என்ற கேள்விக்குச் சொல்லப்பட்ட விடைக்குச் சங்கப் புலவர்கள் சிலர் ஆற்றிய எதிர்வினைகளும் (அறவிலை வணிகன்), அற வழி நடந்தால் சிறப்போடு செல்வமும் கிடைக்கும் என்று வள்ளுவரின் 'செல்வமும் ஈனும்' என்பதற்குப் பொருள் கொண்டால் 'பொருட் செல்வம் பூரியர் கண்ணுமுள'; 'நினைக்கப்படும்'; 'இருவேறு உலகத்து இயற்கை' என்றெல்லாம் அவர் பேசுவதை எப்படிப் புரிந்து கொள்வது என்ற கேள்வியுமாக …தோழர் நீண்ட வரலாற்றுத் தேடலுக்கு வழி திறக்கிறார்
ஓரறிவு உடைய உயிர்கள் முதலாகப் பேசிய தொல்காப்பியருக்கு ஏன் நோபல் பரிசு வழங்கப்படவில்லை என்ற அவரது கேள்வி தொல்காப்பியச் சிந்தனைக்கான பாராட்டே.
இலக்கணம் இனிது என்கிறார் அவர். இலக்கணம் மட்டுமல்ல எந்தப் பாடமும் இனிதே. மாணவர்களை வகுப்பில் கட்டிப் போடும் உத்திகளை அறிந்து உயிர்ப்போடு வகுப்பு நடத்தும் ஆசிரியர்கள் அமைந்தால். அப்படியான ஓர் ஆசிரியர் தோழர் முத்துநிலவன் என்பதற்கு இந்நூல் சாட்சியம் பகர்கிறது.
இலக்கணம் இனிது
நா. முத்துநிலவன்
பாரதி புத்தகாலயம், சென்னை
விலை ரூ.90|-
---------------------------------------------------------------------------------
(4)
எழுத்தாளர் அண்டனூர் சுரா
(இதனை வெளியிட்ட அக்கினிக்குஞ்சு இணைய இதழுக்கும் நன்றி)
இணைய இணைப்பு-
https://akkinikkunchu.com/?p=151190&fbclid=IwAR3q6Z5EP9LOYGkQaAA2AbmFTzkN1B_AiQrFK8PF4ZdXlD0aYvEWa6kjNKE
----------------------------------------------------------------
(5) கவிஞர் மு.கீதா அவர்களின் கருத்து
ஒரு மொழியைப் பிழையின்றி பேசவும் எழுதவும் இலக்கணம் அவசியம்
தேவை. தமிழ்மொழியின் செழுமைக்கும் புதுமைக்கும் காரணமாக இருப்பது அதன் இலக்கண
நூல்களின் வளமையே
தற்போது பேசத் தெரியும் ஆனால் எழுதத் தெரியாது என கூறும் வருங்காலச் சந்ததிகளை
உருவாக்கி வரும் தமிழினம்...
பெரியோர்களே தமிழைப்பிழையாக எழுதும்
நிலை...பல விளம்பரங்களில் தமிழைப் பிழையாக எழுதினாலும் கண்டு கொள்ளாமல் வாழும்
நமக்கு தமிழ் மொழியைச் சிறப்பாகப் பயில ஆற்றுப்படுத்தும் நூல் 'இலக்கணம் இனிது'.
உடும்புப் பிடியாக இல்லாமல் காலத்திற்கு ஏற்ப தன்னைத்
தகவமைத்துக் கொள்ளலாம் என்பதன் மூலம் நம்மை, நமது மொழி குறித்த அச்சத்தை
ஆற்றுப்படுத்தி தமிழின் எளிமையை நமக்கு அறிமுகம் செய்கின்றார்.
மூனு சுழி ண, ரெண்டு சுழி ன
-வேறுபாடுகளை விளக்கும் முதல் கட்டுரையில் தமிழ் எழுத்துவரிசை காரணமுடன்
வைக்கப்பட்டுள்ளதைத் தெளிவாக விளக்குகின்றார்.
.டண்ணகர' ண' றன்னகர 'ன' என்றழைக்கும் முறையைக் கூறுவதுடன் அவற்றை
காதலர்களாக கூறுவது இக்காலத் தலைமுறைக்கு பிடித்தமானது. வல்லினத்தை அடுத்து
மெல்லினமே வரும் என்பதை இயல்பாக விளக்குவது மாணவர்களுக்கும் எளிதாக புரியும்
வகையில் உள்ளது.
'அறிவியல் வாழ்வும் தமிழ் இலக்கணமும்'என்ற கட்டுரை புறநானூற்று
வரிகள் மூலம் வாழ்வியல் நெறிகளைக் கூறுவதன் மூலம்
சங்க இலக்கியத்தை நமக்கு அணுக்கமாக்குகின்றார். வாழ்க்கைக்கு இலக்கணம்
படைத்த ஒரே மொழி தமிழ் மொழியே என அறுதியிட்டு உரைக்கின்றார்.
திருக்குறளின் சிறப்பு கூறும் கட்டுரை நினைக்கும் தோறும் பெருமிதம் கொள்ள வைக்கிறது".வாழ்வதற்குப்
பொருள் வேண்டும், வாழ்வதிலும்
பொருள் வேண்டும்"என்பதற்காக அறம் பொருள் இன்பம் என்று வகைப்படுத்தியதைக்
கூறுவது அருமை.வாழ்க்கை இலக்கணத்தை, இலக்கியமாய்ச் செய்த பாடம் தான் திருக்குறள் என்றுரைப்பது சிறப்பு.
டார்வினின் மனிதகுல வரலாற்றின் பரிணாம வளர்ச்சி
தொல்காப்பியரின் அகத்திணையில் பொருந்தும் தன்மை.
மக்கள் தமிழ்,கொச்சைத்தமிழா?என்ற கட்டுரையில் மக்கள் மொழியை கொச்சைத்தமிழ் என்பதை கல்வியாளர்கள் சிந்தித்து மாற்ற வேண்டும் என கண்டனம் தெரிவிக்கின்றார்.வழக்குச்சொல்லை வட்டாரச் சொல் அல்லது பண்பாட்டுச் சொல் என்று கூற வேண்டும் என்று தீர்வும் சொல்கிறார்.
மங்கலச் சொல் குறித்த விளக்கம் அருமை.
பொதுவான சில சந்தேகங்கள் என்ற கட்டுரையில்
தமிழில் பொதுவாக வரக்கூடிய பிழைகளை அடையாளம் காட்டி சரியான சொற்களைக்
கூறுவது பயன்தரும் கட்டுரை.
ச,ர,ல முதலில் வாராதா?/மரபு
மாறாதா?
மாற்றுக்கருத்து உடையவராக இருந்தாலும் கம்பரின் மொழியாக்க அழகு பலராலும்
கவனிக்கப் படவில்லை என்பது அவரது பக்குவத்தைக் காட்டுகிறது. பத்திரப் பதிவில்
தொடரும் வடமொழிக் கலப்பு இன்னும் தமிழ் வளர்ச்சித் துறையின் பார்வையில் ஏன்
படவில்லை? என்று கேட்பது
நியாயமான கேள்வி.
எந்தெந்த எழுத்துகளை மரபு சார்ந்து ஏற்கலாம்,மரபை மீறி வருவனவற்றில்
எவற்றை நீக்கலாம் என்று முடிவெடுக்க அரசியல் பலம் தமிழ் மக்களிடம் வளர
வேண்டும் என்கிறார்.
இலக்கணக் குறிப்புகள் கட்டுரை கருத்துப்பிழை நேராமல் எழுத உதவும்.
தொல்காப்பியருக்கு ஏன் நோபல் பரிசு தரவில்லை?என்ற கேள்வியில் உள்ள நியாயத்தை உணர
முடிகின்றது.
ர,ழ எழுத்துகளைக்
காப்பாற்றுங்கள் என்று கட்டுரை படிக்கும் போது பாடநூல் எழுதும் பணியில் இருந்த
போது இயக்குநர் முனைவர் உதயச்சந்திரன் அய்யாவிடம்' ர்' என்ற எழுத்துரு முறையாக எழுதப்படாத நிலையைச்
சுட்டிக் காட்டி பாடநூல்களில் சரியாக
இருக்க எடுத்த எனது முயற்சியை நினைவூட்டியது.
அறியாமை அல்லது அலட்சியம் காரணமாக செய்யும் தவறுகளே தமிழ் மொழிக்குக் கேடு என
அறிவுறுத்துகிறார்.எழுத்துகளை முறையாக உச்சரிக்கக் கற்றுக்கொடுக்க வேண்டும் என்ற
ஆதங்கம் உண்மையானது.
புதிதாக எழுத வருபவர்களைக்குற்றம் கண்டுபிடித்து தடுக்காமல் அவர்களைத் தட்டிக் கொடுத்து
தொடர்ந்து எழுத ஊக்கப்படுத்த வேண்டும் என்பது ஏற்க வேண்டிய கூற்று.
இணைப்புகளாக தந்துள்ள கருத்துகள் தமிழின் இனிமையைச் சிறப்பை உணர்த்துகின்றது.
நீர் மேலாண்மையை உணர்த்தும் சொற்கள் வியக்க வைக்கின்றது.
நல்லாசிரியராக , தமிழ் மீது
பற்றுள்ள தமிழாசிரியராக,கவிஞராக, சிறந்த பேச்சாளராக , கணினி தமிழ்ச் சங்கத்தின் மூலம் தமிழை வளர்க்க
சிறந்த பயிற்சி அளிப்பவராக,அறிவியல் இயக்கம்
அறிவொளி இயக்கச் செயல்பாடுகளில் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட மனித நேயமிக்கவராக,
புதுக்கோட்டையின்
அடையாளங்களில் ஒருவராக வாழும் கவிஞர் முத்துநிலவன் அவர்களின் இந்நூல் காலத்தின்
தேவை.
நாம் படிக்க வேண்டிய நூல்களை, இணையத்தளங்களை கூறியுள்ளது நல்லாசிரியரின் பண்பைக்காட்டுகிறது
அனைத்து பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், தமிழைப்
பிழையின்றி எழுத நினைப்பவர்கள் வாங்கி படிக்க வேண்டிய நூலாக 'இலக்கணம் இனிது'என்ற நூல் உள்ளது...
தனது மகளின் திருமணவிழாவில் புத்தகத்தை வெளியிட்டு தமிழுக்குத் தொண்டாற்றிய நூலாசிரியர் எங்களுக்கெல்லாம் வழிகாட்டியாக இருந்து எங்களை வழிநடத்தி வருகின்றார்.
அவருக்கு மனம் நிறைந்த
வாழ்த்துகள்.
விலை :ரூ 90
பதிப்பகம் : பாரதி புத்தகாலயம்
வெளியீடு சனவரி 2021
---------------------------------------------
தோழர்ளுக்கு எனது இதய நன்றியும் வணக்கமும்.
மேற்கண்ட கருத்துகளின் முக்கியமான பகுதிகளை எடுத்து நூலின் அடுத்த பதிப்பில் சேர்க்க விரும்புகிறேன். நண்பர்கள் அனுமதி தருவார்கள் என்றும் நம்புகிறேன்.
இப்போதே 2000 பிரதிகள் தீர்ந்து, அடுத்த பதிப்பு வெளியிட வேண்டியுள்ளது.
எனது “முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே” நூல், ஐந்தாண்டுகளில் ஐந்து பதிப்புக் கண்டது. இந்த நூல் அதைவிடவும் அதிகப் பதிப்பையும் பாதிப்பையும் காணும் என்று நம்புகிறேன்.
நூலைப்
படித்த நண்பர்கள் தமது கருத்தை எனது புலனத்திற்கோ, மின்னஞ்சலுக்கோ அனுப்பி வைத்து,
தகவல் சொன்னால் பெரிதும் மகிழ்வேன்.
அன்புடன்.
நா.மு.
23-03-2021
மின்னஞ்சல்
–muthunilavanpdk@gmail.com
செல்பேசி / புலன எண் - 94431 93293
--- நூல் பெற ---
-------------------------------------------------------------------------------
மிக அருமையாக மதிப்பீடு செய்துள்ளார்கள். மகிழ்ச்சி. இக்காலகட்டத்திற்குத் தேவையான அருமையான நூலை வழங்கியமைக்கு நன்றி.
பதிலளிநீக்குஅனைவரும் அருமையாக சொல்லி உள்ளார்கள்... வாழ்த்துகள் ஐயா...
பதிலளிநீக்குஇருப்பவர்களிலேயே மிகவும் வளவளவென எழுதியிருப்பவன் நான்தான் போலும். ஆனால் அதையும் அப்படியே முழுமையாக வெளியிட்டிருப்பதோடு முக்கியமான இடங்களையெல்லாம் நீங்களே வண்ணமிட்டும் காட்டியிருக்கிறீர்களே! உங்கள் அன்பை என்னென்பேன்! மிக்க நன்றி ஐயா!
பதிலளிநீக்கு