வட இந்தியாவில் இந்தியைச் சரியாகச் சொல்லிக் கொடுங்கள் மிஸ்டர் மோடி!


தமிழ்நாட்டில் அப்புறம் சொல்லித் தரலாம்!
--நா.முத்துநிலவன்--  
14-6-2019-தேதியிட்ட இந்து-தமிழ்நாளிதழில்  எழுத்தாளர், ஆசிரியர் .வெண்ணிலா ஒரு  முக்கியமான  கேள்வியை  முன்வைத் திருக்கிறார். “தமிழ்நாடு முழுவதிலுமுள்ள தனியார் பள்ளிகளும்,  மத்திய அரசுப் பள்ளிகளும் இந்தி மொழியைக் கற்றுத் தரும்போது,  அரசுப் பள்ளிகளில் இந்திகற்றுத்தரக்  கூடாதா?” என்று கேட்டுஇங்கிருக்கும் இருமொழி ஆதரவுத் தலைவர்களைப் பார்த்து, “இது என்ன இரட்டை வேஷம்?” என்றும் காட்டமாகவே கேட்டிருக்கிறார்!
இதுதான் பிரச்சினையே! இருமொழியோ, மும்மொழியோ இந்தி வேண்டுமா? வேண்டாமா, எனும் கேள்விக்குச் சரியான பதிலை உணர்ந்து தெளிந்தாக வேண்டும்.
மத்தியஅரசு இந்தி படிக்கச் சொல்வதில் அரசியல் நோக்க முள்ளது. அதை மறுப்பதும்,  நோக்கம் புரிந்த அரசியல் நோக்கம்தான்! 
 நேரு, இந்திரா போன்ற காங்கிரஸ் தலைவர்களாக இருந்தாலும், வாஜ்பாயி, மோடி என பா... தலைவர்களாக இருந்தாலும் இந்தியை இந்திய மாநிலங்கள் முழுவதும் பரப்புவதில் முன்னின்றவர்கள்தான், நிற்பவர்கள்தான். அதன் வழி இந்தியா முழுவதும் ஆதிக்கம் செலுத்தலாம். மொழிவழி ஆதிக்கம்,  இனவழி- அரசியல் ஆதிக்கத்திற்கு அடிப்படையாக இருக்கும் என்ற அரசியல்தான். மறுப்பதும் இனவழி மொழிவழி ஆதிக்கதை மறுக்கும் அரசியல்தான்! என்ன வேறுபாடெனில் முன்னது ஆதிக்க   உணர்வு அரசியல், பின்னது ஜனநாயக  உணர்விலான அரசியல்! இதை உணராமல் கல்வித் திட்டங் களைப் புரிந்துகொள்ள முடியாது!
காந்தி கூட இந்தியைப் பரவலாக்க வேண்டும் என்றாரே தவிர, தாய் மொழிவழிக் கல்வியை மறுக்கவில்லை! எனக்கு ஒரு சர்வாதிகாரியின் அதிகாரம் இருக்குமானால், நம் சிறுவர்கள் அன்னிய மொழி மூலம் கல்வி கற்பதை, இன்றே நிறுத்தி விடுவேன், தாய்மொழி மூலம் கற்பிக்கும்படிக் கட்டளை இடுவேன், எதிர்ப்பவர்களை வேலையிலிருந்து நீக்கிவிடுவேன்என்று தெளிவாக எழுதுகிறார் (அரிஜன் இதழ் – 22-6-1947) ஆனால் காந்திஜி வழியில் ஆள்வதாகச் சொல்லிக் கொண்டே இந்தியை அனைத்து மாநில மொழிகளையும் பின்தள்ளி ஆதிக்கம் செலுத்தவே இவர்கள் நினைக்கிறார்கள்.
சரி, “இந்தித் திணிப்பை எதிர்ப்பது சரி, தமிழர்கள் மூன்றாவது மொழியாக இந்தியைப் படிப்பதால் என்ன குடி முழுகிவிடும்?” என்னும் கேள்வியை நடுநிலையாகவைப்போர்க்கான விடையைப் பார்ப்போம்.
ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும்! தமிழர்கள் இந்தி மொழியை என்றும் எதிர்த்தவர்கள் அல்லர்! இன்றும் தன் விருப்பாக இந்தியைப் படிப்போர் லட்சக்கணக்கில் தமிழ்நாட்டில் இருக்கத்தான் செய்கிறார்கள்! எதற்காகப் படிக்க வேண்டுமா?”எனும் வாதத்திற் குத்தான் அவர்களிடம் நியாயமான பதில் இல்லை! இந்தி தேசிய மொழிஎன்பது செயற்கையாக இவர்களாக அரசியல் சட்டத்திற்கு மாறாக-  செய்வதுதான் பிரச்சினையே! மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் எல்லாவற்றிலும் இந்தியைப் புகுத்தியது அரசியல் சாசனத்திற்கு எதிரானதுதான் என்பதை இவர்களுக்கு யார் சொல்வது?
சத்தீஸ்கர்தத்ராநகர் ஹவேலிடெல்லிகுஜராத்அரியானாஇமாச்சலப் பிரதேசம்ஜார்கண்ட்ஜம்மு-காஷ்மீர்,  மத்தியப்  பிரதேசம்மிசோரம்,  ராஜஸ்தான், உத்திரப் பிரதேசம்உத்தரகண்ட் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய 14 மாநிலங்களில் இந்தி மொழி பேசப் படுவதாக மத்திய அரசு சொல்வதைச் சற்றும்மாற்றாமல்  விக்கிப்பீடியாவும் சொல்கிறது. https://en.wikipedia.org/wiki/Languages_with_official_status_in_India   
ஆனால், இந்த மாநிலங்களில் வாழும் மக்கள் அனைவருமே இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டவர் அல்லர் என்பது முக்கியமான மற்றும்சொல்லப்படாத செய்தி! இரண்டாவது, மூன்றாவது மொழியாக வந்த இந்தி, கல்விமொழி, மாநில ஆட்சிமொழியாக இம்மாநிலங்களில் தொடர்ந்த பிறகு,தாய்மொழியை ஓரங்கட்டியதுதான் அண்மை ஆதிக்க  வரலாறு! இதுதான்   இந்தித்  திணிப்பின் நோக்கம்!
காஷ்மீர், மகாராட்டிரம், குஜராத், பஞ்சாப், பீகார், வங்கம், ஒரியா, சதீஸ்கர், கோவா, மணிப்பூர், மிசோரம், திரிபுரா, ஆந்திரா, கர்நாடகம், கேரளா,தெலுங்கானா, மற்றும் தமிழ்நாடு உள்ளிட்ட சுமார் இருபதுக்கும் மேற்பட்ட இந்திய மாநில மக்களுக்கு அந்தந்த மாநில மொழிகளின்  பெயரிலேயேபெரும்பாலான மாநிலப் பெயர்களும் அமைந்துள்ளதைக் கவனித்தால் ஒரு செய்தி புரியும். அது இவர்களுக்கு இந்தி தாய்மொழி அல்ல என்பதுதான்!  எனில், மத்திய அரசு இப்போது வெளியிட்டிருக்கும் தேசிய கல்விக் கொள்கை-2019, வரைவு அறிக்கை  சொல்வது போல இந்தியைத் தாய்மொழியாக் கொண்டோர் எண்ணிக்கை  54 சதவீதம் என்பது தவறல்லவா? இது 43 விழுக்காட்டைத் தாண்டாதே? எனில், 43   விழுக்காட்டினர் பேசும் ஒரு மொழியை  மீதமுள்ள 57 விழுக்காட்டு மக்களும் ஏற்றுக் கொள்வதால் என்ன பயன் விளையுமாம்? இந்தி மொழி வளர்ந்துவிடுமா? அல்லது இந்தியால் கல்வி தான் வளருமா? எனில், புள்ளி விவரம் அதையும் இல்லையென்று அல்லவா சொல்கிறது? இதுபற்றிய விவரம் இதோ -
இந்தியா விடுதலை பெற்றபின், மொழிவாரியாகப் பிரிக்கப்பட்ட மகாராட்டிரம், தமிழ்நாடு, கர்நாடகம், கேரளம், ஆந்திரம் முதலான மாநிலங்கள்,இடவாரியாகப் பிரிக்கப்பட்ட ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், உத்தரப்பிரதேசம், உத்தர்காண்ட் மாநிலங்களை விட  முன்னேறி யிருப்பதை, ஒப்பிட்டுப் பார்த்தாலே புரிந்துகொள்ள முடியும்.
இந்த மாநிலங்களின் கல்வி நிலைகளை ஒப்பிட்டுப் பார்ப்போமா?
இந்த ஆண்டு, உத்திரப் பிரதேசப் பள்ளிக்கூடங்களில் 10,12 வகுப்பு களில், இந்திமொழித் தேர்வில் 10லட்சம் பேர் தோல்வியடைந்துள்ளனர். (https://patrikai.com/nearly-10-lakh-students-fail-hindi-board-exams-in-uttar-pradesh/)   இந்தி பாடமொழியாகவும், பயிற்று மொழியாகவும் கொண்டுள்ள சில   வடஇந்திய மாநிலங்களிலும் இந்தித் தோல்வி செய்திகளும் உண்டு!


இந்தி மொழி பேசும் மகாராட்டிர மாநிலத்தில் இரண்டு லட்சத்து அறுபதாயிரம் பேர் பத்தாம் வகுப்பு அரசுத் தேர்வில் இந்தியில் தோல்வி! ((சூன்,10இந்துஸ்தான் டைம்ஸ்),   அரியானாவில் ஐம்பதாயிரம் மாணவர்க்கு மேல் இந்தியில் தோல்வி(மே,17 அதே)!  கடந்த பத்தாண்டுக்கும் மேலாகவே இந்த நிலைமைதான்!  அதோடு  இந்திப்  பாடத்தில்  50%க்கும் அதிகமான மதிப் பெண்களை  பாதிக்கும் குறைவான மாணவர்களே  பெறுகின்றனர்  என்றும்  ஒருகூடுதல்   செய்தி  எப்படி?
இதற்கான காரணம் முக்கியமானது! உத்தரபிரதேசம் மற்றும் பீகார் மாநிலங்களில் வாழ்வோரில், பலகோடிப்பேரின் தாய்மொழி போஜ்புரிமற்றும்மைதிலி மொழிகளாகும்போஜ்புரியைத் தாய்மொழியாகக் கொண்டவர் எண்ணிக்கை மட்டுமே சுமார் ஐந்து கோடிக்கும் அதிகம்! சாகித்ய அகாதெமிஅங்கீகாரம் பெற்ற கலை-இலக்கிய  வளம்  மிக்க மொழிகள்  போஜ்புரி யும் மைதிலியும். ஆனால், சுதந்திரத்திற்குமுன்பு வங்கமொழி   போன்ற  எழுத்துருக் கொண்ட போஜ்புரி நாளைடைவில் அழிந்துஇன்று பேச்சு வழக்கில் மட்டுமே உள்ளது.  இன்றளவும் உபிபீகாரில் அதிக அளவில் பேசப்படும்மொழி போஜ்பூரி ஆகும். (http://www.viduthalai.in/page-1/150317.html )  ஆனாலும்  ஆட்சி,  கல்வியில் தொடர்ந்த இந்தி மொழித்  திணிப்பு  காரணமாக, வீட்டில் தாய்மொழி பேசும் இன்றைய  தலைமுறை  இந்திப்  பாடத்தில்  தோல்வியடைகிறது! இப்போது புரிகிறதா மொழிச்சுமை!?!?!?
     ஆக, மும்மொழித் திட்டமாகவோ, இருமொழித் திட்டமாகவோ, இந்தி நுழைந்தால், சொந்தத் தாய்மொழியும் அழியும், வந்த இந்தியும் சிந்திச் சிதறும், கல்விநிலையும் நொந்து நூடுல்சாகும் என்பதையே .பி. முதலான இந்தித் தேர்வு முடிவுகள் முகத்தில் அறைந்து சொல்கின்றன!
      இந்தியை உண்மையிலேயே வளர்க்க வேண்டுமானால், மிஸ்டர் மோடி, முதலில் இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டோர் கல்வி வளர்ச்சியைத்தாய்மொழிவழித் திட்டமிட வேண்டுமே அன்றி, இந்தியை விடவும் பல ஆயிரம் ஆண்டுக்கு முன்னே வளர்ந்து நிற்கும் தமிழை அழிக்க நினைக்கவேண்டாம் என்பதுதான் தமிழ்நாட்டு எதார்த்தம். 
இதற்கு மாறாக, இருமொழி பேசும் தமிழ்நாட்டின் பல்துறை வளர்ச்சி மற்றும் கல்வி, சுகாதார, பொருளாதார, சமூகச் சமத்துவ வளர்ச்சி இந்தியசராசரியைக் காட்டிலும் அதிகமாகவே உள்ளதையும் ஒப்பிட்டுக் காண்க :
ஒன்றாம் வகுப்பில் 100 மாணவர்கள் சேர்ந்தால், 50பேர்தான்  பள்ளி  இறுதிக்கு வருகிறார்கள் என்பது இந்தியச் சராசரி. இது உத்தரப்பிரதேசம், பீகார்,ராஜஸ்தான் உள்ளிட்ட பல மாநிலங்களில் இன்னும் குறைவு!  ஆனால் தமிழ்நாட்டில் இது 79 அதாவது இந்தியச் சராசரிக்கும் அதிகம்! அதாவது மும்மொழிபேசுவோரை விடவும் () இந்தியை ஒருபாடமாகப் படிப்போரை விடவும் இருமொழிபேசுவோரின் பள்ளிக் கல்விநிலை உயர்ந்துள்ளது!
இதை விட முக்கியம், ஏற்கெனவே பள்ளியிறுதி (12ஆம் வகுப்பு) முடித்து, கல்லூரி உயர்கல்விக்குப் படிக்கப் போகின்ற இந்தியச் சராசரி-20.4% ஆக இருக்கும்    நிலையில்,   இந்தி பேசும்   மாநிலங்களில்  இதைவிடக்   குறைவாகவே உயர்கல்விக்குச் செல்வோர் நிலை உள்ளது! குஜராத்-17.4%,  .பி.-17.6%, .பி.,16.8%,  ராஜஸ்தான்-18%  ஆனால்  தமிழகமோ  இந்தியச்  சராசரியை விடவும் கிட்டத்தட்ட இரண்டு மடங்காக (38.2%) உள்ளது   தமிழகத்திலும் மும்மொழித் திட்டம் அமலானால், மாணவர் கல்விச்  சுமை அதிகமாகி,அந்தக் காரணத்தாலேயே பள்ளியில் இடைநிற்றல்அதிகரிக்கவும், அதனாலேயே உயர்கல்விக்குச் செல்வோர் எண்ணிக்கை குறையவும் வாய்ப்பு உண்டு! இப்போது சொல்லுங்கள், இருமொழியோ மும்மொழியோ இந்தி தமிழ்நாட்டுக்குச் சுமையாகுமா? சுவையாகுமா?
தமிழ்நாட்டுக் கல்வித்திட்டம் மாணவர் சுமையைக் குறைப்பதாக இருக்கவேண்டுமா? மாணவரைப் பள்ளியிலிருந்து விரட்டுமளவுக்குச் சுமையை ஏற்றுவதாக இருக்கவேண்டுமா என யோசித்தாலே --கல்வி வளர்ச்சி நோக்கில் பார்த்தாலே-- இந்தியின் தேவையின்மை புரிந்துவிடும்.
இமயச் சாரலில் ஒருவன் இருமினால்
குமரி வாழ்வோன் மருந்து கொண்டோடுவான் என்று
ஒருமைப்பாடு பாடிய பாரதிதாசனை, அவரைப் புரட்சிக் கவிஞராக ஏற்றுக்கொண்ட தமிழரை, பிரிவினை வாதிகளாகப் பார்ப்பது என்ன நியாயம்? தமிழ்நாடு இந்திய விடுதலைக்கும், அதன் பின் இந்திய வளர்ச்சிக்கும் ஆற்றியுள்ள பணிகளைப் பட்டியல் போடவேண்டுமா என்ன? தொடர்ந்து  (1937முதலாக)  எண்பது ஆண்டாக இந்தி ஆதிக்கத் தோடு போராடிக் கொண்டு தான்  தமிழர்கள் இந்தியச் சராசரிக்கும் கூடுதலாக வளர்ந்திருக்கிறோம் என்பதையாவது யோசிக்க வேண்டாமா?
      நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் அனைவரையும் பங்கெடுக்கச் செய்யும் ஆர்வம் உண்மையிலேயே மத்திய அரசின் தலைவர்களுக்கு இருக்குமானால், சிங்கப்பூர், ஜப்பான் அரசுகளின் இருமொழிக் கொள்கை யை அல்லவா இங்கும் பின்பற்றியிருக்க வேண்டும்? இதுபற்றி இந்து தமிழ் நாளிதழில் திரு சமஸ் அவர்கள் (11-6-2019 அன்று) எழுதியிருந்த கட்டுரையை ஆழ்ந்து படித்துணர்ந்து செயல்படுத்த முன்வரவேண்டும்.
இந்தி மொழி இந்திய ஒன்றியத்தின் தேசிய மொழியல்ல ஒன்றியத்தின் அலுவல் மொழி மட்டுமே” என்ற தீர்ப்பை 2010இல்  தந்தது குஜராத்நீதிமன்றம். பின்னரும் திணிக்க முயல்வது ஆபத்தல்லவா?
இதனால்தான், தமிழ்நாட்டிலிருந்து மட்டுமின்றி, கர்நாடகம், ஆந்திரா மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து இந்தியைத் திணிக்காதே(#StopHindiImpositionவாசகம் உலகளவில் முகநூலில் முதலில் வந்தது!
ஏற்கெனவே, புயல்சேதம், அணுஉலை, மீத்தேன்-ஈத்தேன், ஐட்ரோ கார்பன், ஸ்டெர்லைட், சேலம் எட்டுவழிச் சாலை, விவசாய அழிவு, மாநில அரசின் செயலற்ற தன்மை போன்றவற்றைக் கண்டுகொள்ளாமல், மத்திய அரசு தேவையில்லாத ஆணிகளைத் தமிழ்நாட்டில் அடிக்கிறது என்ற உணர்வுதான் தேர்தலில் வென்றது!
இப்போது, எரியும் இந்த நெருப்பில், தேசிய கல்விக்கொள்கை எனும் பெயரில், இந்தித்திணிப்பு எனும்  எண்ணெயும் ஊற்றப் படுவதுதான், நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி அவர்கள் பதவியேற்ற அதே நாளில் நேசமணிமருத்துவ மனையில் சேர்ந்ததாக வந்த பகடி வாசகங்கள்  என்பதை மத்தியில் மீண்டும் ஆளவந்தோர்  புரிந்துகொண்டால் இந்தியாவுக்கு நல்லது.
      தீர்ப்புகளே திருத்தப் படும்போது, தேசிய கல்விக்கொள்கை வரைவறிக்கையைத் திரும்பப் பெற்று, திருத்த முடியாதா என்ன?
       மாறும் என்னும் விதியைத் தவிர அனைத்தும் மாறும் 
----------------------------------------------------------------------------------
நா.முத்துநிலவன், அரசுப்பள்ளி பணிநிறைவுசெய்த தமிழாசிரியர், எழுத்தாளர், மின்னஞ்சல்- muthunilavanpdk@gmail.com
----------------------------------------------------------------------------------
------- நன்றி நன்றி நன்றி -------
இக்கட்டுரையை -சற்றே திருத்தங்களுடன்- வெளியிட்ட
தீக்கதிர்  (30-6-2019) நாளிதழ் 
ஆசிரியர் குழுவினர்க்கு
எனது நெஞ்சார்ந்த நன்றி
----------------------------------------------------------------------- 

4 கருத்துகள்:

  1. இந்தித்தேர்வில் தோல்வி...நீங்கள் கூறியதுபோல முதலில் அங்கு சரியாக சொல்லிக் கொடுக்கட்டும்.

    பதிலளிநீக்கு
  2. நமது முன்னோர்கள் தவறு செய்து விட்டார்கள். சுதந்திர இந்தியாவின் அலுவல் மொழியாக தமிழை ஆக்கியிருக்க வேண்டும். அது முடியாத பட்சத்தில், இந்திக்குப் பதிலாக, ஆங்கிலத்தை அலுவல் மொழியாக ஆக்கியிருக்க வேண்டும். இனியும் இந்தியாவின் அலுவல் மொழியாக ஆங்கிலத்தை மட்டும் ஆக்க வாய்ப்பு உள்ளதா?

    பதிலளிநீக்கு
  3. மாற வேண்டியது முதலில் அவர்கள் தான்...

    பதிலளிநீக்கு