முதல்பெண் மருத்துவர் அன்னை முத்துலட்சுமி!

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரிக்கு “அன்னை முத்துலட்சுமியின் பெயரைச் சூட்டவேண்டும்”  தமிழக அரசுக்கு  நா.முத்துநிலவன் வேண்டுகோள்!

புதுக்கோட்டை, செப்-20 புதுக்கோட்டையின் புகழை உலகெங்கும் பரப்பிய இந்தியாவின் முதல்பெண் மருத்துவர் அன்னை முத்துலட்சுமியின் பெயரை, புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரிக்குச் சூட்ட வேண்டும் என கவிஞர் நா.முத்துநிலவன், முத்துலட்சுமி படத்திறப்புவிழாவில் தமிழக அரசைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

கலைஞர் தமிழ்ச்சங்கத்தின் சார்பில் 18-9-2017 திங்கள் மாலையில் விராலி மலையில் நடந்த “அன்னை முத்துலட்சுமி பிறந்தநாள் விழா மற்றும் படத்திறப்பு விழாவிற்கு, புதுக்கோட்டை சிவபிருந்தாதேவி மடாதிபரும், “மாதருள் மாணிக்கம்” எனும் அன்னை முத்துலட்சுமி வாழ்க்கைவரலாற்று நூலாசிரியருமான தயானந்த சந்திரசேகரன் தலைமையேற்றார். கலைஞர் தமிழ்ச்சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் விராலிமலை த.சந்திரசேகரன் தொடக்கவுரையாற்றினார்.

விழாவில், “ஞானாலயா”ஆய்வு நூலக நிறுவுனர் பா.கிருஷ்ணமூர்த்தி கவிஞர் சௌமா, அ.இளங்குமரன், சந்தானமூர்த்தி, ராசாத்தி உள்ளிட்டோர் பேசினர்.

விராலிமலையைச் சேர்ந்த பெண்மருத்துவர்கள் தியாக.உமாமகேஸ்வரி, சீனி.தங்கமணி, வள்ளிப்பிரியா, அலமேலு ஆகியோர் பாராட்டப்பட்டனர்  

விழா மங்கள இசையை மலேசியா மு.கருப்பையா குழுவினர் வழங்கினார்கள். 

விழாவில்சிறப்புவிருந்தினராகக் கலந்துகொண்ட கவிஞர் நா.முத்துநிலவன் பேசியதாவது - (படம்)
“அன்னை முத்துலட்சுமியின் பெருமை, அவர் முதல்மருத்துவர் என்பதில் மட்டும் இல்லை! அவர் தனது மருத்துவப்பணிகளைத் தாண்டி, ஆற்றிய சமூக-சமத்துவத்துக்கான மற்றும் பெண்கல்விக்கான பணிகளே இன்றும் நினைவுகூர வைக்கின்றன! யாரொருவர் தனதுசம்பளம் மற்றும் தன்வாழ்க்கைக்கான வருமானத்துக்கான பணிகளையும் தாண்டி இந்தச் சமூகத்திற்கான பணிகளை ஆற்றுகிறார்களோ, அவர்களே இந்தச் சமூகத்தினார் என்றென்றும் நினைக்கப்படுகிறார்கள்!
1886இல் பிறந்த முத்துலட்சுமி 1914இல் --அதாவது தனது 28ஆவது வயதில்தான்-- திருமணம் செய்துகொண்டார்! அந்த ஆண்டுகளில் ஐந்துவயதிற்குள் திருமணம் செய்வது பெரும்பான்மையாக இருந்தது! அந்த நாளிலேயே அன்றைய முதல்வரின் அக்கா மகன் சுந்தரரெட்டி தன்னைப் பெண்கேட்டு வந்தபோதும், தன் திருமணத்திற்கு  சில (codition) கட்டுப்பாடுகளை விதித்தவர் முத்துலட்சுமி!
இப்போதெல்லாம், எனக்கு இந்தக் கார் வேண்டும், இத்தனை பவுன் வேண்டும், இவ்வளவு ரொக்கம் வேண்டும் என்று கேட்டுவாங்கும் மாப்பிள்ளைகள் பெருகி விட்டார்கள், ஆனால் இன்றைக்கு சுமார 100ஆண்டுக்கு முன்பே என்னை மணக்க இந்திந்தக் கட்டுப்பாடுகளுக்கு மாப்பிள்ளை ஒப்புக்கொள்ள வேண்டும், என்று கேட்டு அதை அந்த மாப்பிள்ளையும் ஏற்றுக்கொண்ட பின்னரே திருமணத்திற்கு ஒப்புக்கொண்டவர் அன்னை முத்துலட்சுமி! இந்த “தில்” எப்படி வந்தது எனில், கல்வியால் வந்த தில் இது! கல்விதந்த சமூக கௌரவத்தால் வந்த தில் இது! இதைத்தான் இன்றைய இளம்பெண்கள் கவனிக்க வேண்டும்!

அன்றும் இன்றும் என்றுமே அரசியலால் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகக் கூடிய பெண்ணினம் இன்றுவரை அரசியல் ஈடுபாட்டில் ஆர்வம் காட்டுவதில்லை! ஆனால் அன்னை முத்துலட்சுமி “அரசியலில் பெண்கள் ஈடுபட வேண்டும்” என்று சொன்னது மட்டுமன்றி, தானே அதைச் செயலிலும் செய்துகாட்டிச் சாதித்தார்!
அவர் வெறும் மருத்துவராக அன்றி, சமூகமருத்துவராக மாறிப் பெண்களை அன்று ஆட்டிப்படைத்துவந்த “தேவதாசி ஒழிப்புச் சட்ட” மசோதாவைச் சென்னை மாகாணச் சட்டசபையில் முன்மொழிந்தார்! அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தவர் அன்னை முத்துலட்சுமியின் –புதுக்கோட்டை மாமன்னர் கல்லூரிச் சகமாணவராக இருந்த- தலைவர்களுக்கெல்லாம் தலைவரான தீரர் சத்தியமூர்த்தி ஆவார்!

காங்கிரஸ் கட்சியின் அகில இந்தியத் தலைவராகத் திகழ்ந்த காமராசரின் அரசியல் குருவும், பெரும் பேச்சாளருமான தீரர் சத்தியமூர்த்தி, “தேவதாசி ஒழிப்பு சட்டம் வந்தால் சமூக அமைதி கெட்டுவிடும் தேவரடியார்கள் இன்றும் தேவை” என்று சட்டமன்றத்தில் பேசியபோது அன்னை முத்துலட்சுமி, சற்றும் தயங்காமல், “அப்படியானால்,  இதுவரையிலும் ஒடுக்கப்பட்ட பெண்கள் பார்த்த அப்பணியை இனி கனம்அங்கத்தினர் சார்ந்த குடும்பத்தின் உயர்சாதிப் பெண்கள் பார்க்கட்டுமே” என்று பேச பெரும்பேச்சாளர் சத்தியமூர்த்தியே வாயடைத்து மௌனமாகிவிட்டார்

இப்படி, நேருக்கு நேராகப் பேசக்கூடிய துணிச்சலை அவரது கல்வியறிவு தந்தது!  இப்படி அவர் பேசிய பேச்சுகளும், “குழந்தை மண எதிர்ப்பு”, “விதவைத் திருமண ஆதரிப்பு” “பெண்களுக்கான சொத்துரிமைப் பாதுகாப்பு” சட்டங்களெல்லாம் இன்று நடைமுறையாகியிருப்பதற்கு அன்னை முத்துலட்சுமி முன்னோடியாக உள்ளார்!
மருத்துவத்துறையையும் தாண்டி, இந்தி எதிர்ப்பு, இந்திய மாதர்சங்கத் தலைவர், பத்திரிகை ஆசிரியர், பெண்கல்விக்காகவும், புற்றுநோய் எதிர்ப்புக்காகவும் பல நற்பணிகளைத் தன்கணவரோடும் இருமகன்களோடும் தொடர்ந்தவர் அவரே!

இன்று, ஏழைகளுக்கு மருத்துவக்கல்வியில்லை என்று நீட் தேர்வு சொல்வதன் பொருள், நாளை ஏழைகளுக்கு மருத்துவமே இல்லை என்பதுதான்! ஆனால், 100ஆண்டுகளுக்கு முன்னரே, ஏழைகளுக்கான மருத்துவம் மற்றும் கல்விக்காக சென்னை அடையாறில் “அவ்வை இல்லம்” தோற்றுவித்து, புற்றுநோய் மருத்து மனை வைத்து, அன்றைய பிரதமர் நேருஅவர்களைக்கொண்டு திறந்து வைத்தவர் அன்னை முத்துலட்சுமி! எனவே, நீட்தேர்வை எதிர்த்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடந்துவரும் இந்த நேரத்தில் அன்னை முத்துலட்சுமியின் படத்திறப்புவிழா நடப்பது மிகவும் பொருத்தமானதே ஆகும்.

அவரை வழிகாட்டியாகக் கொண்டு, இன்றைய இளைய தலைமுறையினர் குறிப்பாகப் பெண்கள், அதிலும் மருத்துவர்கள் இன்றைய சமூக அரசியல் மருத்துவம் மற்றும் கல்விப் பிரச்சினைகளில் வெறும் பார்வையாளர்களாக இருந்துவிடாமல் பங்கேற்பாளர்களாக வந்து நின்று போராடவேண்டும். இதுவே அன்னை முத்துலட்சுமி நமக்கு விட்டுச் சென்றிருக்கும் பாடமாகும்”என்று முத்துநிலவன் உரையாற்றினார்.

பத்மபூஷன் விருதுபெற்ற அன்னை முத்துலட்சுமிக்குப் புதுக்கோட்்டையில் நினைவு மண்டபம் அமைக்க வேண்டும், அன்னை முத்துலட்சுமிக்கு, இந்தியாவின் உச்ச விருதான பாரதரத்னா விருது வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் இந்நிகழ்வில் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக கே.பி அய்யப்பன் வரவேற்க, பூபாலன் நன்றியுரையாற்றினார்.
 ------------------------------------------------------------------- 


நன்றி – “புதுக்கோட்டை வரலாறு” நாளிதழ்-20-9-2017, தினமணி நாளிதழ், இந்து-தமிழ் நாளிதழ்கள்-21-9-2017  படங்கள் –டீலக்ஸ் ஞானசேகர், புதுக்கோட்டை

4 கருத்துகள்:

 1. அருமை அண்ணா... உங்கள் கருத்துக்களை நானும் வழி மொழிகிறேன்.

  பதிலளிநீக்கு
 2. அருமை அண்ணா. அன்னை முத்துலட்சுமி யின் சேவை போன்ற தேவைகள் இன்னும் தமிழுலகுக்கு தேவையாக இருக்கிறது என்பதையும் அவர்களின் செம்மாந்த பண்பையும் மிக அற்புதமாக எடுத்துரைத்தமைக்கு நன்றி

  பதிலளிநீக்கு
 3. தம்பி உங்கள் பேச்சு அருமை !வாழ்க முத்துலட்சிமி புகழ்
  தம 1

  பதிலளிநீக்கு