என்னிடம் பரிசுபெற்ற மாணவியை விட எனக்கு மகிழ்ச்சி!



எத்தனையோ கல்லூரிகளில், நூற்றுக்கணக்கான மாணவ- மாணவியர்க்கு, அந்தக் கல்லூரி நிர்வாகிகள் தரும் பரிசுப் புத்தகங்களை மேடையில் வழங்கியிருக்கிறேன்.

ஆனால், முதன்முறையாக நான் கேட்ட கேள்விக்குச் சரியான பதிலைச் சொன்ன ஒரு மாணவியை மேடைக்கு வரவழைத்து, என் பையிலிருந்து ரூ.100 பரிசாகத் தந்தேன்.
எனக்குப் பெருமகிழ்ச்சி! அந்த மாணவிக்கும் பெருமை!
இனி, இதை என் பேச்சுகளிடையே தொடர எண்ணம்!


ஸ்ரீபாரதி மகளிர் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்கவிழாவுக்கு சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தார்கள். போயிருந்தேன். பேசினேன் -

பேச்சினிடையே “ஜி.கே.என்பது தனியொரு பாடமல்ல, அது அன்றாடச் செய்திகளை அறியும்தொகுப்பு“ என்று கூறிவிட்டு, “இன்று-ஆகஸ்டு-5, 2016 உலக அளவில் ஒரு முக்கியமான நாள். அது என்ன?” என்று கேட்டேன்.

பல மாணவியர் “ரியோ ஒலிம்பிக் தொடங்குகின்ற நாள்”எனக் கத்தியது மகிழ்ச்சியளித்தது. “சரி, இந்தியா சார்பாக இப்போட்டியில் கலந்துகொள்ளச் சென்றிருப்பவர் எத்தனை பேர்?” என்ற கேள்விக்கு பெருத்த மௌனம்! 

ஒரே ஒரு பெண் கைதூக்கினார். அவரை முதல்வரிசைக்கு வந்து அமரச் சொன்னார், கல்லூரித் தலைவர் குரு.தனசேகரன். விழாவின் இறுதியில் அவரை மேடைக்கு அழைத்து, என் சொந்தப் பணத்திலிருந்து ரூ.100 கொடுத்துப் பாராட்டினேன். அந்த மாணவிக்கு மட்டுமல்ல எனக்கும் மகிழ்ச்சியாக இருந்தது... 

இனி அந்த விழாச் செய்தி –



தன்னம்பிக்கையே வெற்றியின் திறவுகோல்!

பாரதி பொறியியல் கல்லூரியில்  கவிஞர் நா.முத்துநிலவன் பேச்சு!
கைக்குறிச்சி ஸ்ரீபாரதி மகளிர் பொறியியல் கல்லூரியின் முதலாம் ஆண்டுத் தொடக்கவிழாவில் “திறமையும், தன்னம்பிக்கையுமே வெற்றியின் திறவுகோல்” என்று பேசி வகுப்புகளைத் தொங்கிவைத்தார்.
      வகுப்புகள் தொடக்கவிழாவுக்கு, ஸ்ரீபாரதி கல்விக்குழுமத் தலைவர் குரு.தனசேகரன் தலைமையேற்றார். கல்லூரி முதல்வர் டாக்டர் திலகவதி அனைவரையும் வரவேற்றார். கல்லூரிச் செயலர் கே.ஆர்.குணசேகரன், கல்விக்குழு அறங்காவலர்கள் கே.ரெங்கசாமி, ஏ.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் உரையாற்றினர். இதனைத் தொடர்ந்து முதலாமாண்டுப் பொறியில் வகுப்பிற்கு வந்திருந்த மாணவியர், அவர்தம் பெற்றோர்களின் முன்னிலையில் வகுப்புகளைத் தொடங்கிவைத்து நா.முத்துநிலவன் உரையாற்றியபோது மேலும் தெரிவித்ததாவது-
      “வரவர பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்புக் குறைந்து கொண்டே போவதாகச் சொல்கிறார்கள். ஆனால், உண்மை என்னவெனில் மென்பொருள் துறையிலும், தொழில்நுட்ப உயர் வேலைவாய்ப்புகளிலும் மிக அதிகமான வேலைவாய்ப்புகள் பெருகிக்கொண்டுதான் இருக்கின்றன. ஆனால், பொறியியல் பட்டம் பெற்ற பல்லாயிரம் பேர், தாம் படித்துள்ள பாடங்களிலோ, பாடத்தொடர்பான வேறுசில துறைகளிலோ, பொதுஅறிவு மற்றும் சமூகஅறிவு இல்லாமலே வேலைதேடினால் எப்படிக் கிடைக்கும்?
      படித்த பாடங்களில் நல்ல மதிப்பெண் இருந்தால் மட்டும் போதாது! அந்தந்தத் துறையில் நடைமுறை அறிவு மற்றும் தன்னம்பிக்கையோடும் இருக்க வேண்டுவது அவசியம். ஒரு நேர்காணலுக்குச் செல்லும்போது மட்டுமே ஜி.கே.புத்தகங்களைப் படிப்பது பொது அறிவாகாது. அன்றாடமும் செய்தித் தாள்களைப் படிப்பதும், தொலைக்காட்சியில் செய்தி பார்ப்பதும் முக்கியமான தகுதிவளர்ப்புக்கானது என்று புரிந்துகொள்ள வேண்டும்! பொது அறிவு ஜி.கே.புத்தகத்தால் வராது! அன்றாட உலக நடப்புகள் என்ன என்று தெரிவதுதான் பொதுஅறிவின் அடிப்படை!
      செய்திகளைத் தெரிந்து வைத்திருப்பதோடு, தன்னம்பிக்கையோடு அதை எடுத்துச் சொல்லவும், எழுதவும் தெரிந்திருப்பது மிகவும் அவசியம். இந்த “வெளிப்பாட்டுத் திறன்” (கம்யூனிகேஷன் ஸ்கில்) பாடஅறிவு மற்றும் பொது அறிவோடு வெளிப்படும்போது எங்கே இருந்தாலும் வேலை உறுதி!
தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்வதே இதற்கு அடிப்படையாகும்  மேனாள் குடியரசுத் தலைவரும், அறிவியல் அறிஞருமான அப்துல்கலாம் அவர்கள் பள்ளி கல்லூரி மாணவ-மாணவியரிடம் இந்தத் தன்னம்பிக்கை வளர்ச்சியைத்தான் தூண்டிக்கொண்டே இருந்தார். அவர் ஒருமுறை மாணவியரிடம் பேசியபோது, ஐஸ்வர்யாராயைப் பற்றிய பேச்சு வந்தது. ”அவர் எப்படி உலக அழகியானார்?” என்ற கலாம் அவர்களின் கேள்விக்கு “அழகாக இருந்ததால் அழகிப்போட்டியில் தேர்வானார்” என்றும், “தேர்வு பெற்ற அழகிகளிடம் கடைசியாகக் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு, அவர் அறிவுபூர்வமாக நல்ல பதிலைச் சொன்னார் அதனாலேயே தேர்வானார்” என்றும் மாணவியர் சொல்லிக்கொண்டே வந்தனர். கலாம் மௌனமாக இருந்தார். கடைசியில் ஒரு சிறுமி எழுந்து, “நான் அந்தப் போட்டியில் கலந்துகொள்ளாததால் ஐஸ்வர்யாராய் தேர்வாகிவிட்டார், ஒருவேளை நான் கலந்துகொண்டிருந்தால் நான்தான் வெற்றிபெற்றிருப்பேன்” என்று சொன்னார். மாணவியர் கூட்டம் சிரித்து ஆரவாரம் செய்தது. இப்போது எழுந்து நின்ற கலாம், “இதுதான் சரியான பதில், இந்த தன்னம்பிக்கை வேண்டும். தன்னைப் பற்றிய நம்பிக்கைதான் பெண்களுக்குப் பேரழகு” என்று சொன்னார். இதுதான் உண்மை!
நான் கருப்பாயிருக்கிறேன் என்றோ, என்னிடம்பணமில்லை என்றோ யாரும் வருத்தப்படவோ, கவலைப்படவோ வேண்டியதில்லை. படிக்கும் காலத்தில், பெற்றோர், ஆசிரியர்கள், சான்றோர்கள் என, பல விதமான கருத்துகளையும் பலரிடமிருந்தும் கற்றுக்கொண்டு தன்னம்பிக்கையை வளர்த்துக் கொண்டு, பல்வேறு திறன்களையும் கற்றுக்கொண்டு வரும் எவருமே வாழ்க்கையில் தோல்வியடைவதில்லை.
தொழில்நுட்பம் நாளுக்குநாள் வளர்ந்துகொண்டே வருகிறது. மிகச் சரியாக கி.பி.1010ஆம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்ட தஞ்சைப் பெரியகோவில் இன்றும் உலக அதிசயமாகப் புகழப்படுகிறது. இதில் வியப்பென்ன எனில், சுற்றுவட்டாரத்தில் சுமார் 74கி.மீ.தூரத்திற்கு மலையே இல்லாத தஞ்சாவூர் நகரத்தில், இன்றை கிரேன் போலும் நவீன எந்திரங்களோ, சிமிண்ட்டோ இல்லாத காலத்தில் 216அடி உயரத்திற்கு பல டன் எடையுள்ள கற்களைப் பயன்படுத்தி ஒரு பெரும் கோவிலைக் கட்டியதில் உள்ள கட்டுமானப் பொறியில், மின்பொறியியல் மற்றும் இன்றைய கணினிப் பொறியியல் மாணவர்கூடக் கற்றுக் கொள்ள இருக்கிறது என்பதை உணரவேண்டும். ஆங்கிலம் என்னும் ஒரு மொழியே இந்தியாவுக்கு வந்திராக காலத்தில் இந்தத் தொழில்நுட்பம் எப்படித் தமிழில் இருந்தது என்பதை அங்குள்ள கலைகளின் வழியாக ஆய்வுசெய்து காண முயல வேண்டும்.
இவ்வாறு பேசிய கவிஞர் நா.முத்துநிலவன், பேச்சினிடையே இன்றைய செய்திகளை எத்தனைபேர் தெரிந்து வைத்திருக்கிறீர்கள் என்று பார்ப்போம், என்று கூறிவிட்டு, “உலகளவில் இன்றைய முக்கியச் செய்தி ஒலிம்பிக் போட்டிகள் தொடங்குவதுதான். இந்தியாவிலிருந்து ரியோ-2016 ஒலிம்பிக் போட்டிக்குச் சென்றிருக்கும் வீர-வீராங்கனைகள் எத்தனைபேர்?” என்று கேட்க, “118” என்று பதில் சொன்ன முதலாண்டு மாணவியை அழைத்து பரிசளித்து, பாராட்டினார்.
பல்வேறு ஊர்களிலிருந்தும் வந்திருந்த முதலாமாண்டு மாணவியர் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் விழாவில் கலந்துகொண்டனர். முதலாண்டு மாணவிகளுக்குப் பொறியியல் நூல்களை நா.முத்துநிலவன், கல்லூரி தலைவர் குரு.தனசேகரன், கவிஞர்மீரா.செல்வக்குமார் ,பாவலர் பொன்.கருப்பையா  வழங்கினர். பேராசிரியர் அழகுமதி நன்றி கூறினார்.
------------------------------------------------------------------------------------------ 
(நன்றி- 
தினமணி நாளிதழ் -06-8-2016 திருச்சிப் பதிப்பு,
புதுகை வரலாறு நாளிதழ் -07-8-2016 மற்றும் 
தீக்கதிர் நாளிதழ் திருச்சிப்பதிப்பு-09-8-2016)
புகைப்படங்கள் – திரு ஜெயச்சந்திரன், ஆலங்குடி)

8 கருத்துகள்:

  1. ஆழமான பேச்சு....நீண்ட நாள்களுக்குப்பிறகு கேட்டேன்....

    பதிலளிநீக்கு
  2. நல்ல பேச்சு. இந்தக் கருத்துக்கள் இளைய தலைமுறையிடம் சென்று சேரவேண்டும்.

    பதிலளிநீக்கு
  3. அன்றாட நிகழ்வுகளைத் தெரிந்துகொள்வதில் இன்றைய சமூகம் அக்கறை காட்டுவதில்லை என்பதை நினைக்கும்போது வேதனையாக இருக்கிறது. இவ்வாறான நிலையில் நீங்கள் எடுத்துள்ள முயற்சி பாராட்டத்தக்கது.

    பதிலளிநீக்கு
  4. பொது அறிவு என்பது புத்தகங்களால் மட்டும் வருவதல்ல அன்றாட உலக நடப்புகளை அறிந்து கொள்வதும், அதனைச் செயலாக்கம் செய்யும் நம்பிக்கையினைப் பெறுவதும் என்ற புது விளக்கத்தினைத் தங்களது பேச்சின் மூலம் அறிந்து கொண்டதாக அக்கல்லூரியில் தகவல் தொடர்புப் பொறியியல் பிரிவில் சேர்ந்துள்ள எனது பெயர்த்தி சொன்னதைக் கேட்டபோது தங்களின் உரையின் பயனை உணர முடிந்தது.

    பதிலளிநீக்கு
  5. இளைய தலைமுறையினர் அறிய வேண்டிய உணர வேண்டிய பேச்சு ஐயா
    நன்றி

    பதிலளிநீக்கு
  6. மகிழ்ச்சி வாழ்த்துக்கள் ஐயா. தங்கள் உரை மாணவர்களுக்கு நல்ல வழிகாட்டியாக அமைகின்றது.

    பதிலளிநீக்கு
  7. சிறப்பான பேச்சு. பரிசு பெற்ற மாணவிக்கும் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு