பண்டைப்
புகழும் பாரம்பரியப்
பண்புகள் மிக்கதும் இந்நாடே – அற்பச்
சண்டையில் எங்கள் அண்டை வீட்டவர்
மண்டை உடைவதும் இந்நாடே! (1
பண்புகள் மிக்கதும் இந்நாடே – அற்பச்
சண்டையில் எங்கள் அண்டை வீட்டவர்
மண்டை உடைவதும் இந்நாடே! (1
எல்லா வகையிலும் வல்லோர் எங்களை
ஏளனம் செய்வதும் இந்நாடே! – வெறும்
செல்லாக் காசென மனிதப் பண்புகள்
சிரிப்பாய்ச் சிரிப்பதும் இந்நாடே! (2
வற்றா நதிகளும் வண்டல் பூமியும்
வளம் கொழிப்பதும் இந்நாடே! – தினம்
பற்றாக் குறைகளும் பட்டினிச் சாவும்
பரம்பரை யாவதும் இந்நாடே! (3
வேலைப் பளுவால் மாதச் சம்பளர்
வெந்து கிடப்பதும் இந்நாடே! – சிலர்
வேலை கிடைத்ததும் ஏழை எளியவரை
விரட்டிப் பிடுங்குவதும் இந்நாடே! (4
அங்கே வெள்ளமும் இங்கே வறட்சியும்
அவதிப் படுவதும் இந்நாடே! – தினம்
கங்கா காவிரித் திட்டம் பற்றிய
காலட்சேபமும் இந்நாடே! (5
விடுதலைப் போரில் வேற்றுமைக் கெதிராய்
வீரம் தெறித்ததும் இந்நாடே! - இன்று
அடுதலும் கெடுதலும் ‘ஆண்டவ’ராலே
ஆல்போல் தழைப்பதும் இந்நாடே! (6
புத்தன் ஏசு காந்திய வழியார்
போதனை செய்வதும் இந்நாடே! – மத
ரத்தக் களறியும் சாதிக் கொடுமையும்
நித்தம் நடப்பதும் இந்நாடே! (7
இகம்பர சுகம்பெற எண்ணற்ற முனிவர்
எழுந்தருள் செய்ததும் இந்நாடே! – தினம்
திகம்பர முனிபோல் எங்கள் குழந்தைகள்
தெருவில் அலைவதும் இந்நாடே! (8
சீற்றம் கொண்டவர் அவசரமாகச்
சிதறிப் போவதும் இந்நாடே! – ஒருகை
சோற்றுக் காகவே ஓட்டும் போடுகிற
சுதந்திர நாடும் இந்நாடே! (9
சுதந்திரம் வந்ததும் சொர்க்கம் வருமென
சொல்லித் திரிந்ததும் இந்நாடே! –அட்டத்
தரித்திரம் எங்கள் சரித்திர வாழ்வில்
நரித்தனம் செய்வதும் இந்நாடே! (10
தலைவர்கள் எளிமையைக் கட்டிக் காக்கவே
செலவுகள் செய்ததும் இந்நாடே - இந்த
நிலைமை உணர்ந்தே கூணர் நிமிர்ந்தே
நெருப்பு விழிப்பதும் இந்நாடே! (11
எந்தையும் தாயும் வறுமையில் வாடி
இறந்து கிடந்ததும் இந்நாடே! – அவர்
சந்ததி இன்று சங்கம் அமைத்தொரு
சமர் தொடங்குவதும் இந்நாடே!
சமர் தொடங்கியதும் இந்நாடே! (பண்டைப்..(12
( ‘செம்மலர்’-இலக்கியஇதழில் வெளியான எனதுபாடலுக்கு இசையமைத்து, கம்பீரக்குரலில் பாடி, தனது பாடல் குறுவட்டிலும் வெளியிட்ட மக்கள்கலைஞன் நெல்லை ‘கரிசல்குயில்’ கிருஷ்ணசாமிக்கு என் நன்றி
Thanks For Photo – Thiru. ashroffshihabdeen)
வணக்கம்
பதிலளிநீக்குஐயா.
ஒரு எழுச்சி மிக்க பாடல்.. நன்றாக உள்ளது...வாழ்த்துக்கள் ஐயா
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நன்றி ரூபன்.
நீக்குஎத்தனை முறை கரிசல் கிருஷ்ண சாமியில் வெண்கலக்குரலில் கேட்டு ரசித்திருப்பேன் இந்தப்பாடலை... நானும் பாடித்திரிந்திருப்பேன். 1990 ஜூலை பாண்டி பூஸ்டெர் ஜாதாவிலிருந்து...இன்று வரை மறக்க முடியாதபாடல்...
பதிலளிநீக்குஆகா... கர்நாடகாவிலிருந்து கலை-இரவு, கரிசல் கானப் பிரியரா? நல்லா இருக்கீங்களா அய்யா? வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி தோழரே.
நீக்கு
பதிலளிநீக்குவணக்கம்!
நாட்டைச் சுரண்டும் நாிகளை எண்ணியே
தீட்டிய பாட்டினிமை! - உடல்
கூட்டைச் சுமந்து கொதிக்கும் மனத்துள்
குவித்திடும் பாட்டினிமை! - தன்
வீட்டை மறந்து விடுதலை நாடிய
மாவீரன் பாரதிபோல் - கவி
மூட்டை சுமந்திடும் முத்து நிலவனை
ஏத்தி வணங்குகிறேன்!
கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு
அய்யா தங்களின் தடையில்லாத் தமிழுக்கு என் தலைதாழ்ந்த வணக்கமும் நன்றியும் அய்யா.
நீக்குபுத்தன் ஏசு காந்திய வழியார்
பதிலளிநீக்குபோதனை செய்வதும் இந்நாடே! – மத
ரத்தக் களறியும் சாதிக் கொடுமையும்
நித்தம் நடப்பதும் இந்நாடே!
அதுக்கு என்னாங்கிறீங்க இப்ப? ஓ! வழிமொழியிறீங்களா? நன்றி.
நீக்குபாரதி இருந்திருந்தால் அவர்கூட இப்படித்தான் பாடிக் கொண்டிருப்பார்.
பதிலளிநீக்குஉணர்வு வரிகள் ஐயா நன்றி
அய்யா... பெரிய வார்த்தைகள்...
பதிலளிநீக்குதங்கள் அன்பிற்கு நன்றி அய்யா
செல்லாக் காசென மனிதப் பண்புகள்
பதிலளிநீக்குசிரிப்பாய்ச் சிரிப்பதும் இந்நாடே! ,,..//உண்மைதான்
அனுபவம் அய்யா அனுபவம்... தங்கள் கருத்திற்கு நன்றி. விரைவில் உங்களுடன் விரிவாகப்பேசுவேன்.
நீக்குமிக்க கருத்தாழம் கொண்ட கவி வரிகள். வாழ்த்துக்கள் ஐயா.
பதிலளிநீக்குநன்றி ராஜ் தொடரட்டும் தோழமை.
நீக்குஇன்றைய சமூகநிலையை அழகாகச் சொன்னீர்கள் நண்பரே.
பதிலளிநீக்குதங்களின் நாளுக்கேற்ற நல்ல செய்திகள் மிகவும் அருமை அய்யா. தொடர்ந்து பார்த்து வருகிறேன். நன்று நன்றி.
நீக்குஒவ்வொரு வரியும் அருமை முதல் வரியில் நாட்டின் பெருமை அடுத்த வரியில் சிறுமை இரண்டையும் இணைத்து உண்மை நிலையை சொன்ன விதம் மிக மிக அருமை
பதிலளிநீக்குஅடடே.. அருமை-பெருமை-சிறுமை அழகான பின்னூட்டம் அய்யா நன்றி. (ஒளிந்திருக்கும் கவிதை எப்படியும் வெளிவந்துவிடுகிறதே)
நீக்குஅருமை.
பதிலளிநீக்குநன்றி நண்பரே.
நீக்குபாடலை கேட்க வழிசெய்திருந்தால் நன்றாக இருக்கும்...
பதிலளிநீக்குநல்ல
பாடல்
youtube முகவரி அவசியம் தருக ..
நன்றி
வேணும்னா நேர்ல பாடிக்காட்டுறேன் மதூ.(நா சுமாராப் பாடுவேன்)
நீக்குஎனக்குத்தான் யூட்யுபுல ஏற்றத் தெரியாதில்ல............?
(நீங்களும் சொல்லித்தர்ர மாதிரித் தெரியல)
எடுத்துக்காட்டிற்காக ஓரிரு அடிகளைத் தேடினேன்
பதிலளிநீக்குஎடுத்துக்கொள்ள ஓரிரு அடிகளும் கிட்டவில்லையே!
தொடுத்துக்கொண்ட சொல்கள், அடிகள் எல்லாம்
சிறந்த பாவுறுப்புகளாய் மின்னுவதைக் காண்கிறேன்!
கல்+கினறு+ஏன்=கற்கின்றேன்,
நீக்குசெல்+கின்று+ஏன்=செல்கின்றேன்
இது ஏன் (உங்களுக்குத்தான் இந்த மாதிரி ஆய்வுகள் பிடிக்குமே?)
அப்புறம்... சொற்களை ஏன் சொல்கள் என்கிறீர்கள்?
கல்+கண்டு=கற்கண்டு என வரவேண்டியதை, பல்லாண்டுகளாக எழுத்தாளர் தமிழ்வாணன் 'கல்கண்டு 'என்றே எழுதிக்கொண்டிருந்தார். குமுதம் குழும இதழாக இன்றும் அது வந்துகொண்டிருக்கிறது.இதற்கு ஏதாவது காரணம் உண்டெனில் தெரிவிக்க வேண்டுகிறேன்.
வணக்கம் சகோதரரே ! நாட்டின் நிலைமையை கன கச்சிதமாக எடுத்தியம்பியுள்ளீர்கள் ஒவ்வொரு வரிகளும் சிறப்பே எனக்கு மிகவும் பிடித்தது மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டுகிறது இக்கவிதை. நன்றி சகோதரரே வாழ்த்துக்கள் ...!
பதிலளிநீக்குவணக்கம் சகோதரி. தங்கள் பாராட்டுக்கும் கருத்திற்கும் நன்றி. பல்லாயிரம் மைல்களுக்கும் அப்பால் இருந்து தமிழைப் பரிமாறிக் கொள்ள உதவும் தொழில்நுட்பம்தான் எனக்கு மிகவும் வியப்பாகவும் மகிழ்வாகவும் இருக்கிறது சகோதரி.
நீக்குஅன்பின் முத்து நிலவன் - கவிதை அருமை
பதிலளிநீக்கு//
புத்தன் ஏசு காந்திய வழியார்
போதனை செய்வதும் இந்நாடே! – மத
ரத்தக் களறியும் சாதிக் கொடுமையும்
நித்தம் நடப்பதும் இந்நாடே!
//
அருமையான சிந்தனையில் விளைந்த அற்புதக் கவிதை.
செம்மலர் இலக்கிய இதழில் தங்கள் கவிதை வெளி வந்தமைக்குப் பாராட்டுகள் - நல்வாழ்த்துகள்.
தங்கள் பாடலுக்கு இசையமைத்து, கம்பீரக்குரலில் பாடி, தனது பாடலை குறுவட்டிலும் வெளியிட்ட மக்கள்கலைஞன் நெல்லை ‘கரிசல்குயில்’ கிருஷ்ணசாமிக்கு நன்றி கலந்த நல்வாழ்த்துகளும் பாராட்டுகளும்.
நட்புடன் சீனா
நன்றி சீனா தங்கள் கருத்துக்கும் பின்தொடர்தலுக்கும்
நீக்குபின் தொடர்வதற்காக்
பதிலளிநீக்குநல்ல கவிதை.
பதிலளிநீக்கு