நினைவா? நனவா?! - தமிழ் இந்து -தொடர் கட்டுரை-15


நன்றி - தமிழ் இந்து -12-9-2023 
--------------------------------------------------- 
”உங்கள் சொந்த வீடு கட்டும் கனவு, இந்த ஆண்டு நினைவாகும்” என்று சோதிடம் சொல்கிறார்கள்! சொல்லாலும் தவறான விளம்பரம் இது! நிறைவேறாத கனவு தானே நினைவாக இருக்கும்? தமிழறிஞர் பெருமாள் முருகன், 02-01-2023 நாளிட் தனது வலைப்பதிவில்,கற்பனையானது  கனவு; உண்மை நனவு”  என்கிறார். கனவு நனவாக வேண்டும் என்பதே சரி.

ஓட்டுநர், நடத்துநர் - “போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநர், நடத்துநர்  பணியிடங்களை நிரப்ப முடிவு” என்ற அறிவிப்பை ஊடகங்கள் சரியாகவே வெளியிட்டிருந்தாலும், மாலைச் செய்தித்தாள் ஒன்று, ‘ஓட்டுனர்’ ‘நடத்துனர்’ என்றே வெளியிட்டிருந்தது.  இந்தக் குழப்பம் பலருக்கும் இருக்கிறது.   

‘பொருநர் ஆற்றுப்படை’ சங்க நூல்களில் ஒன்று. செருநர்-குறள்-759. தொழிற்பெயர் (நடத்துதல்), பெயர்ச்சொல் (நடத்தும் ஒருவர்) ஆகி, கட்டளை (நடத்து) ஏற்கும் போது,  நடத்துநர் என வரும். அனுப்புதல்-அனுப்புநர், ஆளுதல்-ஆளுநர் என்பன சரி. வந்தனர், போயினரில் வரும் அர் விகுதி வேறு.  ஓட்டுனர், ஆளுனரில் வரும் அர்/னர் விகுதி பொருத்தமற்றது. பொருத்தம், மரபு அற்றவற்றைத் தொடர்வது மொழியைச் சிதைத்து விடும். அனுப்புநர், பெறுநர், இயக்குநர், ஆளுநர், நடத்துநர், ஓட்டுநர்  என்பன சரியான சொற்கள்

கோர்வை, கோவை பள்ளி ஆண்டுவிழாக்களில் “ஊசி நூல் கோர்த்தல் போட்டி” அறிவிக்கிறார்கள். கோர்த்தல் என்பது தவறு. கோத்தல் என்பதே சரியானது. ஜலதோஷம்- நீர்க்கோவை என்பது அழகான நெல்லை வழக்கு! பேச்சு வழக்கில் விடுபட்ட ர், எழுத்திலும் விடுபட்டது! (நல்ல வேளை, ‘கோர்வை’ என்று எழுதாத, ‘கோவை’ நண்பர்கள் மகிழ்ச்சி தருகிறார்கள்!)

கழட்டி – கழற்றி - “என்ன சாதிச்சுட்டே?” எனும் பொருளில் “என்ன கழட்டிட்டே?” என்கிறார்கள். அது தவறு.  கழற்று  என்பதே சரி. தன் சக மனிதனை அழைத்து, “செருப்பைக் கழட்டுடா” என்பது இரட்டைத் தவறு!  சானட்-சானற் என, ட் வல்லினத்தை, ற் என்றே ஈழத்தமிழ் சொல்வதை ஆய்வு செய்தல் நன்று.        

பட்டினமும் பட்டணமும் – கடற்கரையில் அமைந்துள்ள ஊர்கள் ‘பட்டினம்’   எனும் பின்ஒட்டுப் பெற்று வரும். அதிராம் பட்டினம், நாகப் பட்டினம், விசாகப் பட்டினம் போல. ‘பட்டினப் பாலை’ நமது  சங்க இலக்கியங்களில் ஒன்று.

நகரத்தைப் பட்டணம் என்பார்கள். “கெட்டும் பட்டணம் போ” என்பது பழமொழி! “பட்டணம் தான் போகலாமடி பொம்பள பணம் காசு தேடலாமடி”  என்பது உடுமலை நாராயண கவியாரின் திரைப்பாட்டு. “டவுனுப் பக்கம் போகாதீங்க மாப்பிளே டவுனாகிப் போயிடுவீங்க” என்று, அதிலேயே பட்டணம் என்றால் நகரம் (டவுன்) என்பதையும் சொல்வார்! சென்னை, பட்டணம், பட்டினம் - இரண்டு வகையிலும் வழங்கும் பெருமைக்குரிய பேரூர்!

பிண்ணிட்டான் – சரியா? –“போலீசு அடி பிண்ணிருச்சு” என்கிறார்கள். கூடை ‘பிண்ண’ இணையத்தில் சொல்லித் தருகிறார்களாம்! பிண்ணு என்பது தவறு! சடை பின்னுதல், கூடை பின்னுதல் என்பன போல, “அடி பின்னிருச்சு“ என்பதே சரி. ஆனால், ‘என்ன பண்ணுச்சு தெரியுமா? அடி பிண்ணிருச்சு” என்பது போல இரண்டு சொற்களையும் குழப்பிக் கொள்வது தவறானது. சடை, சண்டை எதுவாயினும் ஒன்றன் பின் ஒன்றாக -பின் பின்னாக- பின்னுதல்தான் சரி,

---------------------------------------------------  7 கருத்துகள்:

 1. தங்களின் மூலம், தங்களின் கட்டுரை மூலம் உண்மையான கருத்துக்களை தெரிந்து கொண்டேன்,மிக்க நன்றி ஐயா

  பதிலளிநீக்கு
 2. ஐயா!>
  அன்றாட வழக்கில் படித்தவர்களாலேயே கண்டுகொள்ளாமல் செய்யும் சொற்பயன்பாட்டுப் பிழைகளை விளக்கியது சிறப்பு. இனியாவது இப் பிழைகளைப் படிப்போர் தவிர்க்க வேண்டும்

  பதிலளிநீக்கு
 3. சிறப்பு ஐயா! பொதுவாக ‘நர்’ விகுதி பற்றிய விளக்கங்களில் எல்லாரும் ஒரு பக்க விளக்கம் மட்டுமே தருவார்கள். ஆனால் அதையே பிடித்துக் கொண்டு மக்கள் போயிநர், வந்தநர் எனத் தவறாக எழுதி விடுவார்களோ என்று எண்ணி அது வேறு, இது வேறு என்று நீங்கள் தெளிவுபடுத்தியிருந்தது எல்லாக் கோணங்களிலுமான உங்கள் முழுமையான சிந்தனைக்கு மீண்டும் ஓர் எடுத்துக்காட்டாய் அமைந்திருக்கிறது.

  நீர்க்கோவை என்பது வட்டார வழக்குச் சொல் என இப்பொழுதுதான் அறிகிறேன். எனில் அதை நாம் பயன்பாட்டில் கொண்டு வருவதன் மூலம் அயல்மொழிச் சொல் புழக்கத்தை ஒழிப்பதோடு வட்டார வழக்குச் சொல் ஒன்றைப் பொதுவெளிக்குக் கொண்டு வந்ததாகவும் இரட்டை நன்மை பயக்கும். முயல்வோம்!

  ஒரு மனிதனை அழைத்துச் "செருப்பைக் கழட்டுடா" என்பது இரட்டைத் தவறு என்ற வரி, மிகவும் சுவைத்தேன். புரிந்தவன் பிசுத்தா எனும் இணைய வழக்கு இதற்கும் பொருந்தும்!

  பட்டினம், பட்டணம் விளக்கம் பார்த்தேன். இதையே இன்னும் நுட்பமாகப் பாவாணர் சொல்கிறார், படகு வசதியுள்ள நெய்தல் நிலத்து ஊரே பட்டணம் என்று. பட்டம் என ஒரு படகு வகை உண்டாம். அதிலிருந்து பிறந்ததே பட்டணம் என்கிறார். ஆனால் பட்டினம் எனும் சொல்லுக்கு அவர் விளக்கமளிக்கும்பொழுது பட்டணம் எனும் சொல்லிலிருந்தே பட்டினம் பிறந்தது என்று குறிப்பிட்டிருப்பதை என்னால் நம்ப முடியவில்லை.

  பதிலளிநீக்கு
 4. இனி சி.கனகமுத்து மருந்தாளுநர் என மாற்றிக் கொள்கிறேன் நன்றி ஐயா

  பதிலளிநீக்கு