தமிழ் இனிது-13
(இந்து தமிழ்-29-8-2023)
இன்றைய தமிழில் ர, ழ எழுத்துகள் சிதைந்து வருகின்றன! ர எழுத்தின் வரி வடிவமும்,
ழ எழுத்தின் ஒலி வடிவமும் ஆபத்தில் உள்ளன!
ர எழுத்து, கணினி அச்சில் படாத பாடு படுகிறது. அரசு ஏற்பு பெற்ற “செந்தமிழ்”
உள்ளிட்ட சில எழுத்துருக்களில் ர தனது துணைக் காலின்கீழ் ஒரு கோடு எனும் சரியான வடிவத்தில் இல்லை! துணைக்காலாக மட்டுமே உள்ளது! தொலைக்காட்சிச் செய்தி எழுத்துகளை, இனி கவனித்துப் பாருங்களேன்..
கடைசி எழுத்து, துணைக்கால் போட்டு, புள்ளி வைத்திருக்கும்.
ஒருங்குறி (யுனிக்கோடு) எழுத்துருவில் இது சரியாகவே இருப்பதால் இன்னும் உயிர் இருக்கிறது. அச்சகங்களில் பெரும்பாலும் “செந்தமிழ்” எழுத்துருவே பயன்பாட்டில் இருப்பதால், கண்ணில் படும் இடங்களில் எல்லாம் ர எழுத்து, துணைக் காலாகவே தெரிகிறது. தற்போது
பாடநூல்களில் மாற்றி விட்டாலும் வினாத் தாள்களில் தொடர்கிறது! இணைப்பில் உள்ள படங்களைப் பாருங்கள் ---- சரி இதை என்னதான் செய்வது?
இதை நிலையாகச் சரி செய்ய ஓர் எளிய வழி உள்ளது -
ஒருங்குறி
எழுத்துகளை மட்டுமே பயன்படுத்த அரசாணை வெளியிட வேண்டும். ஏற்கெனவே ஒரு தலைமுறை –பாடநூல், இதழ்கள், நூல்கள், செய்தித்தாள்கள் உள்ளிட்ட - அச்சு வடிவங்களில் தவறாகப் பழகியதை மாற்ற முயல்வது, தமிழ் எழுத்து
வடிவைக் காக்கும்
பணியாகும்.
ழ எழுத்து, உச்சரிப்பில் பலபாடு படுவது ஊர்அறிந்த ரகசியம்! மிகப் பெரிய பேச்சாளர், தமிழறிஞர், எழுத்தாளர், அரசியல் தலைவர்களும் கூட இதில் கவனம் செலுத்துவதில்லை!
ஆசிரியர்களுக்குப் பயிற்சி கொடுக்க வந்தவர், “நான் தமிளை எப்படி பிளையில்லாமல் பேசுவது, எளுதுவது எனும் தலைப்பில் ஆய்வு செய்கிறேன்” என்றார். இது மிகையல்ல, நடந்த நிகழ்ச்சி! ஏற்கெனவே எனது “இலக்கணம் இனிது” நூலிலும் பதிவு செய்திருக்கிறேன்.
தமிழ் – மொழியின் சிறப்புகளில் ஒன்று, தமிழ் எனும் சொல் அமைப்பு! வல்லினம், மெல்லினம், இடையினம் என மூன்று ஒலி வடிவமும் கொண்டது. அதோடு, குறிகளற்ற எழுத்து, குறி கொண்ட எழுத்து, மெய்யெழுத்து என, வரி வடிவத்திலும் நுட்பம் காட்டி நிற்பது.
மிகச் சிலரே இந்த எழுத்தின் தனிச் சிறப்பை அறிந்து அழுத்தம் திருத்தமாக –தமிழின் உயர்வறிந்து- சரியாக உச்சரிக்கிறார்கள். இதை, பள்ளி
வகுப்பிலிருந்து, மேடைப் பேச்சு, ஒலிப்பதிவுக் கூடங்களில்
மட்டுமின்றி அச்சிலும்
கண்காணிப்பது அவசியம். இல்லாவிடில் அடுத்த தலைமுறையில் “தமிள் வலர்வதை” தவிர்க்க முடியாது!
தமிழ் வளர்ச்சித் துறை, தமிழ் அமைப்புகள் வழியாக, இவ்வாறான தமிழ் அழிக்கும் பிழைகளைச் சரி செய்யலாம். செய்தருள்க அரசே!
-----------------------------------------------------------------------------------------
(நன்றி - இந்து தமிழ் - 29-8-2023)
------------------------------------------------
தமிழ்இனிது (14)
எண்களை எழுதும் முறை சரியா?
எண்களை 1, 2 என எண்களாகவே எழுதும்போது வராத சிக்கல், ஒன்று இரண்டு என எழுத்தில் எழுதும்போது சிலருக்கு வந்துவிடுகிறது. அதிலும் 10-பத்து, 11-பதினொன்று வரை வராத குழப்பம், 12,13 எண்களை எழுத்தில் எழுதும் போது ‘பனிரெண்டா பன்னிரண்டா?’ ‘பதிமூன்றா, பதின்மூன்றா?’ என சந்தேகம் வந்து விடுகிறது! குழப்பமே இல்லாமல் தவறாக எழுதுவதை விட, குழப்பம் நல்லதுதான்.
பனிரெண்டு என்பது தவறு பத்து+இரண்டு பன்னிரண்டு என்று எழுதுவதே சரி. இதேபோல பதிமூன்று என்பதும் தவறு. பத்து+மூன்று பதின்மூன்று என்பதே சரி.
இதேபோல எண் 23, இருபத்தி மூன்று என்று எழுதுவது தவறு. இருபத்து மூன்று என்பதே சரி. இவ்வாறே இவை போன்ற 33, 44, 55, போன்ற எண்களையும் எழுதுக.
“எப்பொருள் எச்சொலின் எவ்வாறு உயர்ந்தோர்
செப்பினர் அப்படிச் செப்புதல் மரபு”
-எந்தப் பொருளை, எந்தச் சொல்லால் எவ்வாறு உயர்ந்தோர் சொன்னார்களோ அவ்வாறே நாமும் சொல்வதே மரபு” என்று இதையும் சொல்லி வைத்திருக்கிறார்கள்! (நன்னூல்-பொதுவியல்-37)
முன்னூறா முந்நூறா? முன்னூறு என்பது முன் நூறு என்றாகி, முந்திய நூறு என்று பொருள் தரும். எனவே, மூன்று நூறு எனப் பொருள் தரக்கூடிய முந்நூறு என்பதே சரி.
நான்கு +நூறு – நால் நூறு – நானூறு என்பதே சரி. நாநூறு என்பது தவறாகும்.
ஐந்து+ நூறு ஐந்நூறு என்றே வரும். ஐநூறு என்றும் எழுதுகிறார்கள். செய்ந்நன்றி என்பதை, செய்நன்றி என்றே இக்கால வழக்கில் எழுதுவது போல, பொருள் மாறாத வகையில் இதை ஏற்கலாம் என்பதே என் கருத்து. அதற்காக எட்டு நூறு எண்ணூறு என்பதை என்னூறு என்பது எழுத்துப் பிழையுடன் கருத்துப் பிழையும் சேர்ந்துவிடும்.
ஒன்பது+நூறு தொள்ளாயிரம் இதை தொல்லாயிரம் என்று எழுதுவது தவறு. (ஒன்பது+நூறு தொண்ணூறு ஒன்பது+ஆயிரம் தொள்ளாயிரம் என்றுதான் பழைய மரபு இருந்தது – அது தனிப்பெரும் ஆய்வு). இன்றைய வழக்கு தொள்ளாயிரம் என்பதே.
எண்கள் அனைத்தும் அஃறிணைப் பொருளில் வரும். எனவே 20ஆடுகள், 30மாடுகள் என்பன போல, 5பேர், 10பேர், 100பேர் என மனிதர்களைக் குறிப்பது தவறு . ஒருவர், இருவர், மூவர், நால்வர், ஐவர், அறுவர், எழுவர், எண்மர், ஒன்பதின்மர், பதின்மர், இருபதின்மர், முப்பதின்மர், நூற்றுவர், ஆயிரவர் என்னும் வழக்கே சரியானது
ஆயினும், 15,752பேரை எழுத நேரும்போது, “பதினையாயிரத்து எழுநூற்று ஐம்பத்திருவர்” என நீளும். இதனால் இயல்பாக எழுதும் வேகம் குறைவது நல்லதல்ல.
தமிழ் எண்கள் தனித்தனியே சுருக்கமாகவும் கூட்டெழுத்தாகவும் புழக்கத்தில் இருந்ததை இப்போது இழந்துவிட்டோம். அதை மீட்டல் எளிதல்ல. எனவே 50பேர் 100பேர் என்று எழுதுவதை ஏற்கலாம் என்பதே எனது கருத்து.
மூன்று சுழி என்பதைப் பேச்சு வழக்கில் மூணுசுழி என்றும், ஒன்றாம் வகுப்பு என்பதை ஒண்ணாம் வகுப்பு என்றும் எழுதப் பழகிவிட்டோம். மூன்று-மூனு, ஒன்று-ஒன்னு என்றுதான் பேச்சு வழக்கில் வரும். இந்த இரண்டு சுழிகள் எப்படியோ மூன்று சுழிகளாகிவிட்டன! “இரண்டு“ எனும் சொல்லில் மூன்றுசுழி! “மூன்று”
எனும்
சொல்லில்
இரண்டுசுழி!
–
இதுதான்
இனிய
தமிழ்
விளையாட்டு!
பேச்சு வழக்கு இப்படித்தான் இருக்க வேண்டும் என்று யாரும் சட்டம் இயற்ற முடியாது, எனினும் நமது எழுத்து மரபாவது தெரிந்திருக்க வேண்டும் என்பதே நம் எதிர்பார்ப்பு! இளைஞர்களின் மொழியில் “செம்மை, சிறப்பு” (சூப்பர்?) என்பதை “செம” என்பதும் நன்றாகத்தானே இருக்கிறது!
-----------------------------------------------------------------------------------
(நன்றி - தமிழ் இந்து - 05-9-2023)--------------------------------------------------------------------------------