--நா.முத்துநிலவன்
--
நாடு முழுவதும் இப்போது ஒரு பெரும் விவாதம் நடந்து வருகிறது. இது தமிழ்நாட்டு அரசியலைப் பற்றியும் பேசுவதால் நாமும் தமிழ் மரபோடு
இந்த விவாதத்தை இணைத்து பார்த்துப் பேச வேண்டி உள்ளது.
இலவசங்கள் வழங்கப்படும் என வாக்குறுதிகள் அளிக்கும்
கட்சிகளுக்கு எதிராக பா.ஜ.க.வின்
அஸ்வினி உபாத்யாய் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் பல்வேறு கருத்துகளை தெரிவித்து
வருகிறது.
“இலவசங்கள் என்பது மிகவும் முக்கியமான பிரச்சினை. நாட்டின் நலன் கருதி, இலவசங்கள் தொடர்பான விவாதங்கள்
தேவை” என்று உச்ச நீதிமன்றத் தலைமை நீதியரசர் என்.வி.ரமணா கூறியுள்ளார்.
இந்த வழக்கில் ஆம் ஆத்மி ஏற்கனவே இணைந்து கொண்டுள்ளது. தமிழகத்தில் ஆளும் திமுக தரப்பும் இடையூட்டு மனுவைத்
தாக்கல் செய்து எழுத்துப் பூவர்மான தனது வாதத்தை முன்வைத்து “எங்களின் திட்டங்கள் இலவசங்கள் அல்ல. . மாறாக அவை சமூக, பொருளாதார சமத்துவத்தைக் கொண்டு வருவதற்கான கருவி. . தமிழக அரசு சமூக நீதியை நிலைநாட்டுவதில், சமூக நலத் திட்டங்களை அறிமுகப் படுத்துவதில்
முன்னோடியாக இருக்கிறது” என்று வாதிட்டுள்ளது.
நீதிமன்றத்தில் இருக்கும் பிரச்சினை குறித்து பொதுவெளியில் விவாதிக்கக் கூடாது
என்பது உண்மைதான். ஆனால், “நாட்டின் நலன் கருதி இலவசங்கள் தொடர்பான விவாதங்கள் தேவை” என்று நமது நீதியரசரே சொல்லியிருப்பதால் தமிழ்நாட்டின் மக்கள் நலம் சார்ந்த
மரபு பற்றிய சில குறிப்புகளை இங்கே வைப்பது சரியாக இருக்கும்
தமிழ்நாட்டில் கடந்த 100ஆண்டாக இலவசத் திட்டங்கள்
செயல் பாட்டில் உள்ளன. அது உச்சக்கட்டத்தை அடைந்திருக்கும் கடந்த
50ஆண்டு “தேர்தல் கால இலவச அறிவிப்புகள்”
பற்றிய விவாதங்களே இப்போது பேசப்படுகின்றன என்றாலும், இதற்கொரு தமிழ்மரபு
உள்ளது என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
தமிழ்மரபு “இலவச சமூக நலத் திட்டங்கள்“
பற்றி என்ன சொல்கிறது?
உலகம் முழுவதும் பசி பற்றியும் அதைப் போக்க வேண்டிய சமூகக் கடமைகள் பற்றியும் கருத்துகள்
உள்ளன. ஆனால், பசியின்
கொடுமையை இலக்கியமாகவும் எதார்த்தமான முறையிலும் “பசி என்னும்
தீப்பிணி” என்கிறது திருக்குறள்! இந்நோய்
தீர்ப்பவர் யாராயினும் அவரைப் “பசிப்பிணி மருத்துவர்”
என்று கொண்டாடச் சொல்கிறது புறநானூறு(173)
“ஒருவன் பிச்சையெடுத்துத்தான்
வாழ வேண்டும் எனும் நிலைமை வந்தால் ஆண்டவனோ, ஆள்பவனோ, அவன் அழிந்து
போகட்டும்” எனும் குறளின் குரலும்(1062), “உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே”
எனும் மணிமேகலையின் குரலும், பசிக்கு எதிரான சமூக
அறைகூவல் அல்லோ! இது பற்றிய பெரும் இலக்கியச் சான்றுகள் தமிழில் ஏராளமுள்ளன.
இது ஏதோ இரண்டாயிரம்
ஆண்டுப் பழங்கதை என்பீராகில், கடந்த நூற்றாண்டில் வாழ்ந்த பாரதியும்
இதன் தொடர்ச்சியாக “தனி ஒருவனுக்கு உணவிலை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்”
என்று கொந்தளிக்கிறார்!
ஏறத்தாழ பாரதி இந்தப்
பாடலை எழுதிய ஆண்டிலேயே (1920இல்) மதராஸ்
மாகாணத்தில் ஆட்சிக்கு வந்த நீதிக் கட்சி அரசு, சென்னை மாநகராட்சிப்
பள்ளியில் இலவச மதியஉணவுத் திட்டம் கொண்டு வந்தது! (“தெற்கிலிருந்து
ஒரு சூரியன்” – இந்து தமிழ் திசை வெளியீடு –பக்கம்-11).
இதே வழியிலேயே பின்னர் முதல்வராக வந்த காமராசர், மதிய உணவுத் திட்டத்தை (1955இல்) மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு விரிவு படுத்தியபோது, முதன் முதலாக பாரதி பிறந்த எட்டயபுரத்தில் போய்த் தொடங்கி வைத்தது
தமிழ் மரபின் தொடர்ச்சிதானே?!
மதிய உணவுத் திட்டத்தைத் தொடங்கி வைத்த காமராசர், “அன்ன தானம் நமக்குப் புதிதல்ல, இதுவரை வீட்டுக்கு
வந்தவர்களுக்கு உணவு அளித்தோம். இப்போது பள்ளிக் கூடத்தைத் தேடிச்
சென்று சோறு போடும் திட்டத்தைக் கொண்டு வந்திருக்கிறோம். இதன்
மூலம் உயிர் காத்த புண்ணியம், படிப்பு கொடுத்த புண்ணியம் இரண்டும்
சேரும். எல்லோருக்கும் கல்விக் கண்ணைத் திறப்பதை விட எனக்கு முக்கியமான வேலை வேறு இல்லை! எனவே, மற்ற எல்லா வேலைகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு,
ஊர்வலமாக வந்து பகல்உணவு திட்டத்திற்குப் பிச்சை எடுக்கச் சித்தமாக இருக்கிறேன்”
என்று பேசினார்! இதுவும் “கற்கை நன்றே, கற்கை நன்றே, பிச்சை புகினும் கற்கை நன்றே” என்ற தமிழ் மரபின் தொடர்ச்சிதானே?
1920இல் மாநகராட்சிப் பள்ளியில், 1955இல் மாநிலம் முழுதுமுள்ள பள்ளிகளில், என்று தொடர்ந்த இலவச மதிய உணவுத்திட்டம், எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்களின் காலத்தில் “இலவச சத்துணவுத் திட்டம்” என்றானது. அடுத்து ஆட்சிக்கு வந்த கலைஞர் மு.கருணாநிதி சத்துணவில் முட்டை சேர்த்தார், ஜெயலலிதா அம்மையார் பயிறு, பருப்பு என சத்துப் பொருள்களைச் சேர்த்து வழங்கினார்கள்.
காமராசர் மதிய உணவு தொடங்கிய இரண்டே ஆண்டுகளில் பள்ளி செல்லும் பிள்ளைகளின் எண்ணிக்கை ஐந்து லட்சத்திலிருந்து பத்து லட்சமாக – இரு மடங்காக – உயர்ந்தது ஒன்றும் சாதாரண விஷயமல்ல!
அவருக்குப் பிறகும் பள்ளிப் பிள்ளைகளுக்கான இலவசங்கள் தொடர்ந்து இப்போது பாடநூல்கள் மட்டுமின்றி, மாணவர் சீருடை, எழுதுபொருள், புத்தகப் பை, மடிக்கணினி, மிதிவண்டி இலவசப் பேருந்துப் பயணம் என 14விதப் பொருளாகத் தொடர்வதால் என்ன லாபம் தெரியுமா?
தேசிய கல்விக் கொள்கையை அறிமுகப் படுத்தும் ஒன்றிய அரசின் நோக்கம் “பள்ளிப் படிப்பைத் முடிப்போர் சதவீதத்தை இன்னும் பத்தாண்டுகளில் 50ஆக உயர்த்துவது” என்கிறது. அதை இப்போதே எட்டிவிட்டது தமிழ்நாடு! இதுதான் தமிழ்ச் சமுதாயம் பெற்ற லாபம்!
கலைஞர் மு.கருணாநிதி தமிழக முதல்வரான பிறகு, 1972இல் பொது விநியோக கழகம் (சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன்) தொடங்கப்பட்டது. 1975இல் அனைத்துக் குடும்பங்களுக்கும் குடும்ப அட்டைகள் வழங்கப் பட்டன. அரசின் நலத் திட்டங்கள் இந்த
அட்டையின் மூலம் செயல்படுத்தப் படுகின்றன . மேலும் வருவாய்த்துறையின் அனைத்து சான்றுகளும் இந்த குடும்ப அடையாள அட்டையைக் கொண்டே பெற
முடிகிறது. அரசு மானியத்தால் குறைந்த
விலையில் ஏழை மக்கள் பயனடையும் விதத்தில் அரிசி எண்ணெய் உள்ளிட்ட உணவுப் பொருள்களை வழங்குவதும் ஒருவகையில் இலவசம் சார்ந்த
மக்கள் நலத்திட்டமன்றி வேறென்ன?
இந்த இடத்தில், நோபல் பரிசு பெற்ற பொருளியல்
அறிஞர் அமர்த்தியா சென் குறிப்பிடுவதை ஒப்பிடலாம் – “தமிழ்நாடு
துணிச்சலான சமூக நலத்திட்டங்களை முன்னெடுத்தது. தொடக்கப்பள்ளிகளில்
மதிய உணவு, சுகாதார மையங்கள், சாலைவசதிகள்,
பொதுப் போக்குவரத்து, குடிநீர் வழங்கல்,
மின் இணைப்பு வழங்கல் என்று இன்னும் நிறைய திட்டங்களைக் குறிப்பிடலாம்.
இவற்றில் பலவற்றையும் பெரும்பாலான பொருளாதார மேதைகள் விரும்பவில்லை!
ஆனால், அவர்களின் எதிர் பார்ப்புக்கு மாறாக,
தமிழகம் இந்தத் திட்டங்களில் பெருவெற்றி பெற்றது. என்றவர், தொடர்ந்து- “பெரும்பாலான இந்திய மாநிலங்களை விட தமிழ்நாட்டில் தனிநபர் வருமானமும்
அதிகம், வறுமை நிலையும் ஒப்பீட்டளவில் குறைவு. இந்தப் பொருளாதார வளர்ச்சியானது சமூகநலத் திட்டங்களைச் சாத்தியப் படுத்தி உள்ளது”
என்கிறார்! இது ஒரு பாராட்டுச் சான்றிதழ் அல்ல! தமிழ்நாட்டின் சமூகநல
மரபை, பிற மாநிலங்கள் எடுத்துப் பின்பற்றிக் கொள்வதற்கான வேண்டுகோள்!
“மானியங்களாக வழங்கப்படும் இலவசங்கள், பெரும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவை அத்தகைய மானியங்கள், உற்பத்தியைப் பாதித்து, மறைமுக செலவை அதிகரிக்கின்றன” என்று இந்திய ரிசர்வ் வங்கியின் நிதிக்குழு உறுப்பனர் அசிமா கோயல் பேசியிருக்கிறார் (21-08-2022 செய்தி)
இவர், ஒரு நிமிடம், இந்தியாவின்
ஆகப்பெரும் பணக்காரர்களுக்கு சில ஆண்டுகளில் தள்ளுபடி செய்து உதவிய பெரும் தொகையை விட
இந்த மக்கள் நலத்திட்டங்களுக்கான தொகை குறைவுதான் என்பதை ஒப்பிட்டுப் பார்த்தால் நல்லது.
இதற்குப் பெரும் விளக்கம் தேவையில்லை
இலவச சத்துணவுத் திட்டத்தால் அடுத்த தலைமுறையினரின் கல்வியை எடுத்துச் செல்வது போலவே, இலவச வேட்டி,சேலை அடிப்படையானதும் உணவுக்கடுத்து அவசியமானதுமாகும் இதையும் தமிழ்மரபு சொல்கிறது-
ஒன்றன் கூறாடை உடுப்பவரே ஆயினும்
ஒன்றினார் வாழ்க்கையே வாழ்க்கை (கலித்தொகை-18)
உண்பது நாழி, உடுப்பவை
இரண்டே (புறநானூறு-189)
இதேபோல, யுகம்யுகமாக அடுப்பங்கரையில் கிடக்கும் சரிபாதி மனித இனமான பெண்களை முன்னேற்ற,
இங்கிலாந்துக்கும் முன்பாகவே வாக்குரிமை வழங்கியது(1921)அன்றைய மதராஸ் மாகாணம்தான். அதன் நீட்சியாகவே இன்றைய
அரசின் “பெண்களுக்கு இலவசப பேருந்துப் பயண சலுகை. இதனை 1990-91இல் புதுக்கோட்டையில் நடந்த அறிவொளி இயக்கத்தில்
–வேறெந்த மாவட்டத்திலும் சேர்க்காத நிலையிலும்- சேர்த்த “பெண்கள் மிதிவண்டி ஓட்டக் கற்றுக் கொள்வ”தோடு இணைத்துப் பார்க்க வேண்டும். அப்போது நான் எழுதிய
“சைக்கிள் ஓட்டக் கத்துக்கணும் தங்கச்சி” எனும்
பாடல் வெறும் சைக்கிள் ஓட்டுவதோடு முடிவதில்லை, அது பெண்களின்
சுயமாக இயங்கி சமூகத் தொடர்போடு முன்னேறுவது என்று புரிந்துதான் இயங்கினோம்.
அது தான் பேருந்துப் பயண நீட்சி! 8ஆம் வகுப்பு
முடித்தால் திருமண உதவித் திட்டம், அரசுப் பள்ளியில் படித்து
கல்லூரி வந்தால் மாதம் ஆயிரம் என்பதும் இதுதானே? “பெண்கள் அறிவை
வளர்த்தால் வையம் பேதைமை அற்றிடும் காணீர்” என்ற நமது பாரதியின்
தமிழ்க்கனவு நிறைவேற இது உதவும் தானே?
இந்தியாவிலேயே முன்னோடியாக விவசாயிகளுக்கு இலவச மின் சாரம் என்பதன் கூட்டுப் பலனை
இந்த ஆண்டு – எந்த ஆண்டையும் விட-
அதிக விளைச்சல் எனும் செய்தியில் பார்க்கிறோமே? மற்ற மாநிலங்கள் நீர்,இடுபொருள்,மின்வசதி அற்ற நிலையில் விவசாயிகள் வெளியேற்றம் என்பதோடு இதை ஒப்பிட்டுப் பார்க்க
வேண்டும். இப்படி தமிழ்நாட்டு மக்கள் நலத்திட்டங்களின் பின்புலத்தை
விளக்கிக் கொண்டே போகலாம்.
ஒவ்வொன்றும் தமிழ்மரபின் நீட்சி என்பதும் வளமான மாநிலத்தில் மகாராட்டிரத்திற்கு
அடுத்த நிலையில் தமிழ்நாடு இருந்தாலும் அங்குள்ள பணக்காரர் ஏழை இடைவெளியை விடவும் தமிழ்நாட்டில்
குறைவு என்பதையும் சேர்த்துப் பார்த்தால் இதன் சமூக வளர்ச்சி புரியும்.
“வறியார்க்கு ஒன்று ஈவதே
ஈகை” என்னும் திருக்குறளைப் புரிந்து கொண்டால், இட ஒதுக்கீடும் புரியும்! மக்கள் நலத்திட்டங்களும் புரியும்!
இந்தத் தமிழ்மரபுதான் தமிழ்நாட்டை உயர்த்தி வருகிறது என்பதும் புரியும்.
தமிழ் மரபு சொல்வதைத்தான் தந்தை பெரியாரும், அம்பேத்காரும்,
கார்ல் மார்க்சும் சொல்லியிருக்கிறார்கள் எனும் சமத்துவ சமூக நீதியும்
புரியும்.
-------------------------------------------------------------
கட்டுரை ஆசிரியர், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலத்
துணைத் தலைவர்.
------------------------------------------------------------------
வெளியீட்டுக்கு நன்றி - இந்து தமிழ் நாளிதழ் -08-09-2022
செய்தி இதழில் கட்டுரைக்கான இடம் குறித்து, எனது அனுமதி பெற்று சுருக்கப்பட்ட கட்டுரையின் நீட்சி இது.
-----------------------------------------------------------------