நூறாண்டு கண்ட ஐக்கூ கவிதைச் சிந்தனைகள் ((நன்றி- கணையாழி-டிச.2020))

கவிஞர் மு.முருகேஷ் எழுதிய 

மலர்க ஐக்கூ 

மும்மொழி நூலை முன்வைத்து,

--நா.முத்துநிலவன்--

      தொன்மையவாம் எனும்எவையும் நன்றாகா, இன்று தோன்றியநூல் எனும்எவையும் தீதாகாஎன்று உமாபதி சிவனார் இலக்கியம் படைத்த தமிழில், “பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல என்று நன்னூலார் தனது இலக்கணத்தை முடித்த தமிழில், இன்றும்,ஐக்கூவா? இதுகவிதையா? என்ன வகை?” என்று கேட்கும் பண்டிதர் உண்டு!

சுமார் ஆயிரம் ஆண்டுக்காலம், அந்தப்புர ஆலாபனைகளிலும், ஆலயத் தல புராணங்களிலும், அரசியல் அதிகாரமிழந்து ஊற்றுக் கண் புதைந்து கிடந்த நம் உயர்தமிழில்,, “அத்தனை எழுத்து களையும் ஆயுத எழுத்துகளாக்கி எழுந்து வந்த பாரதி. மரபுக்கவிதையை இலகு வாக்கியதோடு, வசனகவிதை, ஐக்கூ அறிமுகம் என்று கவிதை வடிவங்களின் அடுத்தடுத்த பரிணாமங்களையும் தொட்டு மகிழ்ந்தான், எனினும் புதுக் கவிதைப் பக்கமே வரவில்லையே! கண்முன்னே வளர்ந்து நின்ற அய்க்கூப் பிள்ளையை பாரதிதாசன் ஆதரிக்க வில்லையேஎனும் வருத்தம் எனக்குமுண்டு. புலவர் குழுவின் அழுத்தம் காரணமோ?

1977-இல் திருச்சியில் கூடிய தமிழகப் புலவர்குழு, புதுக்கவிஞர் சிலர்கூடி, இலக்கணக் கட்டுக் கோப்பை உடைத்தெறி என்கிறார்கள், இந்தப் போக்கு நீடித்து மரபு கெட்டு, ஒரு தாறுமாறான நிலை ஏற்படும், இதனைத் தடுப்பது நம்பொறுப்புஎன,  தீர்மானம் நிறைவேற்றியது! இதைத் தாண்டியும், உள்ளடக்கத்தால் வெற்றிபெற்றிருந்த வானம்பாடிகவிஞர்களாலும், உருவத்தால் கவனம்பெற்ற சி.சு.செ.வின்எழுத்துமற்றும் கசடதபறகுழுவினராலும் புதுக் கவிதை வெற்றிக் கொடி நாட்ட, எளிய பதம், எளிய சொற்களுடன், ஓரிண்டு வருட நூல் பழக்கமுள்ள சாதாரண மக்கள்பலரும் புதுக்கவிதை எழுதவந்ததனர். எனினும், புதுக்கவிதையின் அடுத்த பரிமாணத்தை அந்தப் புதுக்கவிஞர்களே ஏற்கவில்லை என்பதுதான் வியப்பு!தமிழ்க்கவிதா யுகத்தின் ஜனநாயக பம்பர்விளைச்சல்என்றுபுதுக்கவிதை ஒரு புதுப்பார்வைஎழுதிய கவிஞர் பாலாவும், புதுக்கவிதையில் பெருவெற்றிபெற்ற கவிஞர் மேத்தாவும் கூட ஐக்கூ எழுத முன்வரவில்லை என்பது வியப்பல்லவா?  

இன்னொரு பக்கம், “புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்எனும் நூலிற்காக சாகித்திய அகாதெமி விருதுபெற்ற வல்லிக்கண்ணன் நூற்றாண்டான 2020இல் -தமிழ் அய்க்கூ நூற்றாண்டைக் கடந்த நான்காம் ஆண்டில்- மும்மொழி ஐக்கூநூல் வந்திருப்பது மகிழ்ச்சிதரும் தொடர்ச்சி.

இருபத்தோராம் நூற்றாண்டில் கவிதை என்றாலே புதுக்கவிதை என்று ஆகிவிட்டதை, “மரபுக் கவிதைஎனும் முன்னொட்டுத் தொடரே புரியவைத்து விடுகிறது! இது, புதுக்கவிதைக்கான அங்கீகாரம் என மகிழலாமெனில், மு.முருகேஷ் எழுதிய மும்மொழி நூல் வந்திருப்பது அதன் நுனிமுனைக் கொழுந்து என உச்சிமோந்து பாராட்டலாம்!

1916இல்ஜப்பானிய கொக்கூ கவிதைஎன்று பாரதியால் அறிமுகம் பெற்ற ஐக்கூ, அதன் சுருக்கமான உருவோடும், அழுத்தமான கருவோடும் இப்போது தமிழ்க்கவிதை உலகில், நிலைத்த புகழைப் பெற்றுவிட்டது.  

அப்துல் ரகுமான் சிந்தர் என்றார், “துளிப்பாஎன்பாரும் உண்டுகரந்தடிஎன்னும் பெயரில் புதுவை சீனு தமிழ்மணி இதழே நடத்தினார். பெயர்கள் பல இருந்தாலும் ஐக்கூ தமிழுலகின் செல்லப்பிள்ளையாகி விட்டது

தமிழில் அறிமுகமான முதல் ஐம்பது ஆண்டுகளில் ஒரு சலனமும் இல்லாத தமிழ் ஐக்கூ உலகில், அடுத்த ஐம்பது ஆண்டுகள்தான் கிடுகிடு வளர்ச்சி என்பதைத் தனியாகவே ஆய்வு செய்யலாம்! “பொண்டாட்டியே இன்னும் கிடைக்கலயாம், குழந்தைக்கு என்ன பேரு வைக்கலாம்னு யோசிச்சானாம்!” என்பதுபோல, புதுக்கவிதையே அங்கீகாரத்துக்கு அல்லல் பட்டபோது, அதன் அடுத்த கட்ட மாற்றம் எப்படி நிகழ முடியும்? இந்த (1916 -1966) ஐக்கூ நிலை ஆய்வுக்குரியது அல்லவா? இதில்தான், தனி ஓர் ஆளுமையின் சமூக வரலாற்றை மாற்றும் வலிமை புரியவரும்!

1966இல் கணையாழி, 1968இல் நடை இதழ்களில் ஐக்கூ கவிதைகளை சுஜாதா, சி.மணி, சந்திரலேகா முதலியோர் தமிழில் அறிமுகம் செய்தனர்.

1970களின் தொடக்கத்தில் அப்துல்ரகுமான்தான் --“சிந்தர்எனும் பெயரில்-- நேரடியான அய்க்கூ கவிதைகளைத் தமிழில் தரத் தொடங்கினார். இது 1974 இல் வெளிவந்த ரகுமானின்பால்வீதிதொகுப்பில் இடம்பெற்றது.

1984- அமுதபாரதியின்புள்ளிப் பூக்கள்”, அறிவுமதியின்புல்லின் நுனியில் பனித்துளிஎனத் தொடங்கி, அடுத்த ஆண்டே கழனியூரனின்நிரந்தர மின்னல்கள்”, தமிழன்பனின்சூரியப் பிறைகள்என, ஐக்கூ நூல்கள் தொடர்ந்து வரத்தொடங்கின. 1987ஆம் ஆண்டு, புதுவை சீனு தமிழ் மணியின்கரந்தடிஇதழ் தமிழின் முதல் ஐக்கூத் திங்களிதழாக வந்தது!

இப்போது ஆயிரக்கணக்கான கவிஞர்கள் ஐக்கூ கவிதை எழுதுவதும், தொகுப்புகள் தொடர்வதும், இயக்கமாக நடத்துவதும், ஊடகம், பாட நூல்களில் இடம்பெறுவதும் இலக்கிய வரலாறுகளில் தனியிடம் தரப்படுவதுமாகத் தனக்கான இடத்தைப் பிடித்துவிட்டது ஐக்கூ!

மரபார்ந்த தமிழ்ப் பேராசிரியராக இருந்தும், 1980ஆம் ஆண்டில்  தன்னிடம் முனைவர் பட்ட ஆய்வு செய்ய வந்த கவிஞர் நிர்மலா சுரேஷ், “ஐக்கூ பற்றி ஆய்வு செய்ய விரும்புகிறேன்என்று சொன்ன போது, முனைவர் சி.பாலசுப்பிரமணியன் உடன் ஒப்புக் கொண்டதுபுலவர் குழுவின் மனநிலைக்கு மாறாகதமிழுக்கு நல்வரவாக அமைந்தது. 1997இல் வெளிவந்த நிர்மலா சுரேஷின் முனைவர் பட்ட ஐக்கூக் கவிதைகள் ஆய்வு நூல்பின்வந்த பல கவிஞர்களுக்கு நல்லதொரு ஆவணமாகத் திகழ்ந்தது. “தோற்றத்தில் புதுக்கவிதைக்கும் முந்தியது ஐக்கூஎன்னும் நிர்மலா சுரேஷ், “தமிழ் ஐக்கூ, ஜப்பானியக் கவிதைப் பாரம்பரியத்தைப் பின்பற்றவில்லை என்றும் பட்டியலிடுகிறார்.

1994இல் -22வயதில்- தனது முதல் ஐக்கூ நூலைத் தந்த மு.முருகேஷ், -இந்த 25ஆண்டுகளில் மிகப்பெரிய வளர்ச்சி கண்டு, இப்போது தான் எழுதிய சுமார் ஆயிரம் கவிதையிலிருந்து 100ஐக்கூக்களை மட்டும் தேர்ந்தெடுத்து தமிழ், ஆங்கிலம், இந்தி எனமும்மொழி ஐக்கூ நூலாக, மலர்க ஐக்கூ நூலைத் தந்திருக்கிறார். திறமான புலமைஎன, பிறமொழியினரும் பாராட்டும் வகையில் வந்திருக்கும் இந்நூலை, “தமிழ்க் கவிதை உலகின் முக்கியமான மைல்கல்என்று,தோளில் கரம்பதித்துப் பாராட்டி மகிழ்கிறேன்.

புதுக்கவிதையும்ஐக்கூவும்  தமிழ்க்கவிதை உலகின் காந்தாரக் கலைகள்!                  

தமிழகத்தின் நரசிம்மவர்ம பல்லவன், சாளுக்கிய புலிகேசியை வென்று,  எடுத்துக் கொண்டு வந்த வாதாபிகணபதி, ஏற்கெனவே இங்கே இருந்த முருகனுக்கு அண்ணனானது போல, புதுக் கவிதையும் ஐக்கூவும் தமிழின் வெளியிலிருந்து வந்த - காந்தாரக் கலைகள்தான்! 

 ‘புத்தம் புதிய கலைகள்’ தமிழில் வளர்வதைபுதிய கண்டுபிடிப்புகள் வழி தமிழ் வளர்வதை விரும்புகிறவர்கள்,  ஐக்கூ வளர்ச்சியை நிச்சயம் விரும்புவார்கள், மு.முருகேஷ் விரும்புகிறார், நானும் விரும்புகிறேன்!

புதுக்கவிதை நூல்கள் 8, அய்க்கூ நூல்கள் 10,  இவ்வகைகளின் தொகுப்பு நூல்களாக 8 இவற்றோடு, சிறுகதை, சிறார் இலக்கியம், கட்டுரை என்று இந்த ஐம்பது வயதில் அறுபதுக்கும் மேற்பட்ட நூல்ளைத் தந்திருக்கும் மு.முருகேஷின் பெரும்பாலான பொழுதுகளை இலக்கியத்தோடு, அதிலும் கவிதைகளோடுதான் கழித்திருக்கிறார் என்பதே வியப்பூட்டுகிறது

அய்க்கூவுக்கான விருது மற்றும் பட்டங்கள் பெற்றிருப்பதோடு, சாகித்திய அகாதெமி, கேரள அரசு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும் சென்று ஐக்கூக் கருத்தரங்குகளில் பங்கேற்றதோடு, உலகளாவிய ஐக்கூ கவிஞர் மாநாட்டு விருது என ஐக்கூவுக்கான இவரது பங்களிப்பு அபாரம்! எனவே, கல்லூரிகளில் பாடமாக உள்ள இவரது ஐக்கூ நூல்களை பத்துக்கும் மேற்பட்ட ஆய்வு மாணவர்கள், முனைவர், இளமுனைவர் பட்டங்களுக்காக ஆய்வு செய்திருப்பதில் ஒன்றும் வியப்பில்லைதானே?

ஐந்து ஏழு ஐந்து அசைகள் என மரபு சார்ந்த ஜப்பானிய அய்க்கூ, தமிழில் ஏற்கெனவே இருந்த அசைக் கட்டுப்பாட்டுக்குள் அடங்காமல், மூன்றடி என்னும் மரபை மட்டுமே எடுத்துக் கொண்டது! அதிலும் ஜப்பானிய ஐக்கூ ஆரம்பத்தில் சமூக (புற) உணர்வுகளைக் காட்டாமல் குறியீட்டுப் பாங்கிலான உள்ளுணர்வுகளையே பாடியது. தமிழில் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாகவெளியுலகம்பற்றிப் பாடப்பாடத்தான் அது தமிழிலும் வெளியுலகிலும் கவனம்பெற்றது என்றே சொல்ல வேண்டும்.

பட்டுப்போன மரக்கிளை / அமர்ந்து ஓய்வெடுக்கும் காகம் / இலையுதிர்கால மாலை” (பாஷோ) என்பதாக இருந்த ஜப்பானிய ஐக்கூ பெறாத கவனிப்பை,  ஆகாயமும் அழகு / பூமியும் அழகு, ஆம் / என்கையில் ரொட்டித் துண்டு’ (தமிழன்பன்) என்ற போது தமிழகத்தில் அதிக கவனம் பெற்ற காரணத்தைச் சொல்ல வேண்டியதில்லையே!

தொடர்ந்து, “அடிபட அடிபட / அதிரும் பறை / தலைமுறைக் கோபம்” (மித்ரா) எனும் தமிழுக்கே உரிய சாதியக் கட்டு மானங்களை அதிரும் பறை கொண்டு தமிழ் ஐக்கூ அதிர வைத்ததும் நடந்தது.

கூண்டுக் கிளிக்குப் பிறந்த / குஞ்சுக் கிளிக்கு / எப்படி, ஏன் வளர்ந்தன சிறகுகள்(கல்யாண்ஜி) என்பது அசைஅளவு கடந்த தமிழ் ஐக்கூ எனலாம்.

      சுமார் ஆயிரம் ஐக்கூக்களை எழுதியிருக்கும் மு.முருகேஷ், அதில் சரியாக 100ஐக்கூக்களை மட்டும் தேர்ந்தெடுத்து மொழியாக்கம் இணைத்து மும்மொழித் தொகுப்பாகத் தந்திருப்பது கவிதையில் நல்ல முயற்சி என்று நினைக்கிறேன். ஐக்கூவில் இது சிறப்பான முயற்சி என்பது உறுதி.

இனி நூலுக்குள் நுழைந்து வருவோம் -

நேற்றே செத்துப்போனான் / தோட்டக்காரன் / செடியில் இன்று புதிதாய்ப் பூ எனும் முதல் கவிதையே இழுத்துப் பிடித்துவைத்து, பலவகைச் சிந்தனை அலைகளை நமக்குள் எழுப்புகிறது. “விதைத்துக் கொண்டே இருப்போம், முளைத்தால் மரம், இல்லையேல் உரம்என்ற நம்மாழ்வார், இருக்கும்போது சொன்னதைப் பெரிதுபடுத்தாத தமிழ் உலகம், அவர் மறைவுக்குப் பிறகு அவர் காட்டியஇயற்கை வேளாண் முறை, மற்றும் இயற்கை உணவுஉணர்வுபெறுவதை நினைவூட்டுகிறது. “ஒரு கருத்து மக்களைக் கவ்விப் பிடித்துவிட்டால் அது இயற்பியல் சக்தி பெற்றுத் தொடர்ந்து மாற்றங்களை நிகழ்த்தும்என்ற மார்க்சின் கருத்தும் இதுவே!

காயம் படவே இல்லை / முள்காட்டிற்குள் / விறகுவெட்டியின் பாட்டு இது, ஜப்பானிய ஐக்கூ ஒன்றை நினைவூட்டினாலும், அதன் அழகியல் அழுத்தத்தைக் கடந்து மீதூறி அடிக்கும் அரசியல் சமூக அலையோசை!

தாகமாய் ஒலிக்கிறது / வெள்ளரி விற்கும் / சிறுமியின் குரல்தான் விற்கும் வெள்ளரிக்காயே தாகம் தீர்க்கக்  கூடியதுதான் என்றறிந்தும் அதைத் தின்ன அவளது குடும்ப வறுமை அனுமதிக்காத கொடுமையை என்ன சொல்ல? இளநீர் விற்கும் ஒருவன் வேகமாய் ஓடி, கலங்கிய நீரை அள்ளிக் குடித்த கந்தர்வனின்தனித்தனியாய் தாகம்கதை நினைவிற்கு வந்தால் தவறில்லை, மார்க்சின்மண்பாண்டம் செய்யும் தொழிலாளி வீட்டில் நல்ல சட்டி பானை வைத்திருக்க முடியாதுஎனும் புகழ்பெற்ற பழமொழியும் இதன் ஆழத்தைப் புரியவைக்கும்!

கிழிந்த கூரையின் / மானம் காக்குமா? / படரும் சுரைக்கொடி -இதை முன்னுரையில் பாராட்டியுள்ள தமிழன்பனைவிட நான் விளக்க முடியாது!

பசியோடு காத்திருக்கும் / குருவிக் குஞ்சுகள் / வலையில் தாய்க்குருவி ஆக்காட்டிப் பாடலின் மொத்த சோகத்தையும்வலையில் தாய்க்குருவிஎனும் ஒற்றை வரியில் தந்துவிட்டபின் நான் பாராட்ட என்ன இருக்கிறது?

கெட்டிமேளச் சத்தம் / சன்னலை அறைந்து சாத்தும் / இறுகிய அக்கா      -யுகயுகமாக நுகத்தடிகளைச் சுமந்து நடக்கும் மாட்டுபெண்களின் சோகத்தை அறைந்து சொல்லும் கவிதையிது. திருமணமாகாத அக்காவின் சோகமும் என்பதை உள்ளடக்கிய ஆழமும் உள்ளது! மேலாண்மையின் ஒரு கதையில், வயிற்றுப் பாட்டுக்காக சிறுமி ஒருத்தி புடவை கட்டிக்கொண்டு பட்டாசுத் தொழிற்சாலைக்குப் போனதை மட்டுமல்ல, கல்யாணச் சந்தை விலையேறிக் கிடக்க, மணமாகாத பெண்ணொருத்திஇராமர்களுக்கு ரத்தமில்லை, ராவணா..நீயாவது..” என நெஞ்சில் கத்தியைப் பாய்ச்சும் வைரமுத்து கவிதையை நினைவூட்டுகிறது இந்தக் கவிதை சொற்களின் இறுக்கத்தாலும் சொக்க வைக்கிறது. மங்கள ஓசையைசத்தம்என்பதும், சாத்தும் சன்னலை அறைந்து சாத்துவதன் அர்த்தமும் மட்டுமின்றி, இறுகிய அக்கா எனும் முன்னொட்டு தரும் கோபம் தனிக்கோபமாகத் தெரிந்தாலும் அதன் சமூகப் பின்னணி வாசகரிடம் எழுப்பும் சமூகக் கோபம் அர்த்தம் நிறைந்த ஆழமுள்ளது. இதே பொருளுள்ள வேறொரு கவிதையும் வேறு சொற்களில் வந்துள்ளது- கல்யாணக் கூட்டம் / முதிர்கன்னியின் தலையிலும் / சில அட்சதைகள்ஒரு பொருள் நுதலிய பலகவிதைவேண்டாம் என்று ஒதுக்கி விட்ட இவரது கறுத்த பெண் புகுந்தகம் வந்தாள் கலர் டீ.வி.யோடு எனும் கவிதையை நானும் பல அரங்குகளில் சொல்லியிருக்கிறேன்!

வீடுகட்டும் கடன் / எல்ஐசி கட்டடத்தில் / கூடுகட்டும் குருவி போல, சொல்லழகும் கிண்டலும் கலந்து வந்த கவிதையும் நெஞ்சில் நிற்கிறது

அரசியல்வாதிகளால் கொச்சைப் பட்டுக் கிடக்கும் தாய்க்குலம், உண்மையில் எப்படிப் பல்வேறு நிலையுள்ளது என்பதையும் சொல்கிறார்-“எப்படி அழைப்பது / தூங்கும் குழந்தையருகே / காதுகேளாத தாய்   மகன் எட்டி உதைக்கையில் / அனிச்சையாய்த் தாயின் கைவருடும் / வயிற்றுத் தையலை என்பன இருவேறு கோணத்தின் இயல்பான வரிகள்

காகிதத்தைக் கிழிக்கும்போது / எங்கிருந்தோ கேட்கிறது / வெட்டப்படும் மரத்தின் ஓசை என்பதில் மரம்நடும் விழாக்களில் இருக்கும் அரசியல், சூழலியல், தமிழர்களின் திணைவாழ்வு எல்லாம் மேலெழுந்து வருகிறது!

சரி, திரைப்பட விமர்சகர் சிலர், மொத்தக் கதையையும் சொல்வது போலன்றி, கவர்ந்த சில கவிதைகளை மட்டும் சில சிந்தனைகளோடும் நினைவிற்கு வந்த தமிழ் ஐக்கூ வரலாற்றுக் குறிப்புகளோடும் பகிர்ந்து கொள்ளத் தூண்டிய நல்லநூல் என்பதில் பெருமகிழ்ச்சிதரும் நூல் இது!

எனக்கு இந்தி தெரியாது எனவே இந்தி மொழியாக்கம் பற்றி எழுதமுடிய வில்லை, ஆயினும் நல்ல தமிழ்க்கவிஞர் நாணற்காடன் மீது நம்பிக்கை உள்ளது. ஆங்கிலத்தில் தந்த அமரனின் வரிகள் தமிழைவிடவும் சுருக்கம் என்பது வியப்பாகவும் மகிழ்வாகவும் உள்ளது. மும்மொழியில் வந்துள்ள நூல் என்பதை தமிழுலகம் உச்சிமேல் வைத்து வரவேற்க வேண்டும்

ஒற்றைத் தொகுப்பில் வறண்டு, தூர்ந்துவிடும் தமிழ்ச் சூழலிலும், காரமான உலகிலும் ஈரம் காயாமல் எழுதிவரும், மு.முருகேஷ் தனது இலக்கியப் பயணத்தைத் தொடர, இதயம் ததும்ப வாழ்த்துகிறேன்.

---------------------------------------------------------------------------

நூல்- மலர்க ஐக்கூ LET HAIKU BLOSSOM,

(மும்மொழியில் 100 ஐக்கூ கவிதைகளின் தொகுப்பு)

அகநி வெளியீடு, அம்மையப் பட்டு, வந்தவாசி - 604408,

தொகுத்தவர் – திருச்சி சையது,

தமிழ்மூலம் மு.முருகேஷ்

ஆங்கிலம்-அமரன், இந்தி-நாணற்காடன்

பக்கம்-80, விலை ரூ.80 செல்பேசி- 9842637637

------------------------------------------------------------------------------ 

கட்டுரையை வெளியிட்டமைக்கு நன்றி-

“கணையாழி”

(டிசம்பர்-2020)

(மலர்-55, இதழ்-09)

---------------------------------------- 

கவிஞர் மு.முருகேஷ்

பக்கம்-57

பக்கம்-58

பக்கம்-59

பக்கம்-60

 
பக்கம்-61

கவிதை ஆர்வலர்கள்  படிக்க விரும்பினால்,       இதே நமது வலைப்பக்கத்தில் ,  கவிஞர் மு.முருகேஷ் அவர்களின் முதல் ஐக்கூ நூலான “விரல் நுனியில் வானம்” தொகுப்பிற்கு நான் தந்த முன்னுரை இணைப்பு-  

https://valarumkavithai.blogspot.com/2

013/09/blog-post_29.html  

12 கருத்துகள்:


  1. மூன்றடி அய்க்கூ
    மும்மொழி மலர்ந்தது அருமை, வாழ்த்துகள் கவிஞர் முருகேஷ் அவர்களுக்கு.

    அய்க்கூ அப்போவே தமிழில் வந்துவிட்டதா எனும் படி பல தகவல் அறிந்து கொண்டேன் அண்ணா. நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதே நமது வலைப்பக்கத்தில் மு.மு.வின், முதல் ஐக்கூ தொகுப்பான “விரல் நுனியில் வானம்” நூலுக்கு நான் எழுதிய முன்னுரையும் உள்ளது கிரேஸ். நேரமிருக்கும் போது படித்துப் பார்க்க வேண்டுகிறேன். உன்போல் ஆர்வலர்களுக்காக அதை இந்தப் பதிவிலேயே இணைத்து விடுகிறேன். நன்றிம்மா.

      நீக்கு
  2. எனது மும்மொழி ஹைக்கூ நூலினை முன்வைத்து, நூற்றாண்டு கண்ட தமிழ் ஹைக்கூ வரலாற்றை ஆழ்ந்த அக்கறையோடும் அறிந்துகொள்ள வேண்டிய விவரக் குறிப்புகளோடும் தந்திருக்கிறது தங்களின் கட்டுரை. ‘விரல் நுனியில் வானம்’ என உங்களின் கரம் பற்றி எனது முதல் ஹைக்கூ கவிதை நூலினைத் தந்த எனது 10 ஹைக்கூ நூல் தங்களது விமர்சனப் பார்வையில் பதிவானதில் பெருமையும் பேரானந்தமும் அடைந்தேன். தங்களுக்கும் ‘கணையாழி’ இதழுக்கும் என் அன்பும் நன்றியும்... தோழர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விரல் நுனியில் வானம் தொகுப்பிற்கு நான் தந்த முன்னுரையை, மதுரை பல்கலலைக்கழக தமிழ் ஆய்வியல் துறைத்தலைவர் அய்யா இரா.மோகன் அவர்கள் பாராட்டி ஒரு கட்டுரையாக எழுதியிருந்தது நினைவிலிருக்கிறது மு.மு.! பிறகு கவிஞர் புதியமாதவி அவர்களின் “ஹே ராம்!”தொகுப்பிற்கு நான் தந்த முன்னுரையையும், கவிஞர் இளம்பிறை அவர்களுக்கு தோழர் இன்குலாப் எழுதிய முன்னுரையையும் ஒப்பிட்டு, கணையாழி இதழில் கவிஞர் பழமலய் எழுதிய கட்டுரையும் வந்தது! சில நேரங்களில் சில நல்லவையும் தமிழில் நடப்பதுண்டு. உங்கள் உற்சாக எழுத்துகள் யாரையும்ய வசியப் படுத்திவிடும் தோழா! தொடர்ந்து எழுதுங்கள்.

      நீக்கு
    2. நன்றி மு.மு. உங்கள் இருவரின் காதல் கடிதங்களையே தொகுத்து - உங்கள் திருமணத்தின் போது - நூலாக வெளியிட்ட நாகரிகம் நினைவிற்கு வருகிறது. உங்கள் முகநூலில் எனது கட்டுரை தொடர்பாக நீங்கள் எழுதியதைப் பார்த்து, வியந்து போனேன். இந்தப் பின்னூட்டத்தில் அந்த இணைப்பை இட முடியுமானால் மகிழ்வேன். (எனக்கு அந்தத் தொழில் நுட்பம் தெரியவில்லை, முகநூலில் அதிகம் புழங்காதவன் நான்..) மீண்டும் நன்றியும் அன்பும்.

      நீக்கு
  3. ஒவ்வொரு வரியும் பல சிந்தனைகளை சிந்திக்க வைத்தது... அருமை ஐயா...

    திருமிகு கவிஞர் மு.முருகேஷ் அவர்களுக்கும் வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  4. கிட்டத்தட்ட இத்துறை தொடர்பான ஒரு பறவைப்பார்வையைத் தந்துள்ள பதிவு. திரு முருகேஷ் அவர்களுக்கு வாழ்த்துகள். உங்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் பாராட்டுக்கு நன்றி அய்யா. நீண்ட நாள் கழித்து, நல்ல இலக்கியக் கட்டுரை ஒன்றை எழுதக் கிடைத்த வாய்ப்பிற்கு நானும் மகிழ்ச்சியடைகிறேன்.

      நீக்கு
  5. ஆகா!... ஆகா!!... ஆகா!!!... என்ன ஒரு திறனாய்வு ஐயா!! கவிஞரவர்கள் இதை அப்படியே அடுத்த பதிப்புக்கு அணிந்துரையாகச் சூட்டிக் கொள்ளலாம். நூல் திறனாய்வு எனும் சாக்கில் தமிழ் ஐக்கூத்துறையின் வரலாற்றையே வரைந்து காட்டி விட்டீர்கள். பாரதி காலத்தில் அறிமுகமானது தொடங்கி இன்றைய நன்னிலை வரை விரிவாக எழுதியது மட்டுமின்றி அதை நீங்கள் எழுதிய விதமும் சொற்கோவையும் இனிமை! ஒரு காலத்தில் புதுக்கவிதை எனும் வடிவத்தையே ஏற்கக்கூடாது என்று எதிர்ப்பு எழுந்த மண்ணில் இன்று கவிதை என்றாலே புதுக்கவிதைதான் என ஆகிவிட்டதை மரபுக்கவிதை எனும் முன்னொட்டு சுட்டுகிறது என்று சொன்னதும் அப்படிப் புதுக்கவிதை வளர்ந்ததால்தான் ஐக்கூ அதன் நுனிமுனைக் கொழுந்தாக இன்று திகழ முடிகிறது என்றதும் சுவை! முருகேஷ் அவர்களே தன் ஆயிரம் படைப்புகளில் நூற்றைத்தான் தேர்ந்தெடுத்துக் கொடுத்திருக்கிறார், நீங்கள் அதிலும் ஆழத் தேர்ந்து பன்னிரு கவிதைகளைப் பரிந்துரைத்திருக்கிறீர்கள்! இவற்றைப் படிக்கும் ஐக்கூ விசிறிகள் கட்டாயம் நூலை வாங்குவார்கள். இப்படி ஒரு சிறப்பான கட்டுரைக்காக நன்றி ஐயா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அறிமுகத்தைத் திறனாய்வு செய்த தங்கள் அன்பிற்கு எனது நன்றி நண்பரே! இந்த நூலை எல்லாரும் வாங்கி இப்படி ஒரு புதிய முயற்சியைப் பாராட்ட வேண்டும் என்பதே எனது ஆவல். நன்றியும் வணக்கமும்

      நீக்கு
  6. மகிழ்வும் ... நன்றியும் அய்யா ...❤🙏

    பதிலளிநீக்கு