முனைவர் வா.நேரு எழுதிய “நெருப்பினுள் துஞ்சல்” சிறுகதைகள்


இணையத்தில் வந்த இயல்பான கதைகள்!
(முனைவர் வா.நேரு எழுதியநெருப்பினுள் துஞ்சல்சிறுகதைத் தொகுப்புப் பற்றிய நூல் விமர்சனம்நா.முத்துநிலவன்)

மதுரையை வாழ்விடமாகக் கொண்ட முனைவர் வா.நேரு எழுதிய 13 சிறுகதைகள்நெருப்பினுள் துஞ்சல்எனும் தொகுப்பாக வந்திருக்கிறது.
வாழ்வியலின் இயல்பான பல நிகழ்ச்சிகளைத் தனது பார்வையில் நல்ல சிறுகதைகளாக்குவதில் வெற்றிபெறுகிறார். இவற்றைப் பெரும்பாலும் இணையத்திலும், வலைப்பக்கத்திலும் வெளியிட்டு அவ்வப்போதே வந்த பின்னூட்டங்கள் சிலவற்றையும் நூலில் எடுத்து வெளியிட்டிருப்பது இணைய எழுத்தாளர்கள் கவனிக்கவேண்டிய முன்மாதிரி முயற்சி.


இறையன்புவின் படைப்புகளில் தன்னம்பிக்கையும் மனிதநேயமும்எனும் தலைப்பில் முனைவர் பட்டம் பெற்றிருக்கும் வா.நேரு, இறையன்புவைப் போலவே, இரைச்சலின்றி, தன் கருத்துகளை வாழ்வியலோடு இணைத்துப் படைத்த கதைகளாகவே இத்தொகுப்பும் காணப்படுவது பாராட்டத் தக்கது!

பெரியார், அம்பேத்கர், மார்க்சின் தத்துவங்களைத்        தனது தனிவாழ்வில் ஏற்று வாழும் இவர், அந்தத் தத்துவங்களை நடைமுறைப் படுத்தும் நல்ல நோக்கிலேயே சிறுகதைகளையும் படைத்திருப்பது பாராட்டுக்குரியது

நோக்கில் உயர்ந்தவர்கள், சிறந்த கலைத்தன்மையோடு படைப்பைக் கொண்டுவர இன்னும் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது. இது இவரது முதல் தொகுப்பே என்பதால், கற்றுக் கொள்வார் என்பதை ஐயமின்றிக் காட்டுவதாகவே தொகுப்பு வந்திருப்பதை முதலில் பாராட்டவேண்டும்.

இன்றைய தமிழகத்தை ஆட்டிப்படைக்கும் சாதி, ஆங்கிலக் கல்விமோகம், சுயநல அரசியல், கார்ப்பரேட்டுகளின் கல்வி-மருத்துவ வணிகச் சேவை, இளையோரைச் சரியாக நடத்தும் வழியறியாமல் பாசத்தைக் கொட்டியும் வருந்திக் கிடக்கும் பெற்றோர், இளையோர்களின் நோக்கற்ற போக்கு, சங்கத் தலைவர்களுக்கு இன்று அதிகம் தேவைப்படும் பன்முக ஆற்றல், உழைப்பாளிகளின் வேர்வை ஈரம் சொட்டும் அன்பின் ஆழம், நல்லோர் வாழ்வை வழிமறித்து நந்தியாய்க் கிடக்கும் மூட நம்பிக்கைகள், சென்னை போலும் வெள்ளத்தை மீறி நின்ற அன்புப் பெருவெள்ளம், தனிமனிதர்களின் சின்னஞ்சிறு ஆசைகளைத் தூண்டி, அதன்மூலம் அவர்களின் வாழ்க்கையை மட்டுமின்றித் தலைமுறைகளை கபளீகரம் செய்யும் கார்ப்பரேட்டுகளின் ஆசையைத் தூண்டும் சதி, அதை வெற்றிகொள்ள வேண்டிய கடும் தவமுயற்சி, இன்றைய கல்விமுறையில் தேவைப்படும் மாற்றங்கள் என இவர் படைத்திருக்கும்  கதைகளின் மையக் கரு அனைத்தும் நம்மை ஈர்த்து அணைத்துக் கொள்வதில் வியப்பில்லை, எடுத்துக்கொண்ட கதைக் கருக்களுக்காகவே ஆசிரியரை நிச்சயமாகப் பாராட்டியே ஆகவேண்டும்
வாழ்த்துகள் தோழர் நேரு!

கவர்மெண்ட் பள்ளிக்கூடம் உயிரைக் கொடுத்துப் பாடம் எடுக்கும் வாத்தியார்களும் இருக்கிறார்கள், ஒன்றாம் தேதி வந்தால் நமக்கு சம்பளம் வரப்போகிறது என்று நினைக்கும் வாத்தியார்களும் இருக்கிறார்கள்” (பக்-3), “கட்-அவுட்கள் தான் தெருவை, வீட்டை அடையாளம் கண்டுபிடிக்கும் கருவிகள் போலிருக்கிறது!” (பக்-9), “மகனுக்குத் துன்பம் தெரியக் கூடாதென்று மாரி துன்பப் பட்டு பணம் அனுப்பியது போலவே, படிக்கும் இடத்தில் தனக்கிருக்கும் துன்பம் தன் தந்தைக்குத் தெரியவேண்டாம் என்று வாசு நினைத்திருப்பான்”(பக்-20), “அடுத்தவனுக்கு உதவி செய்பவன்தான் மனிதன், இல்லறம், துறவறம் என்பதையெல்லாம் விட, தொண்டறம் முக்கியம்” (பக்-33), “என்ன படிப்புப் படித்து என்ன பண்ண? என்ன வேலைபார்த்து என்ன செய்ய? பிராக்டிகல் வாழ்க்கை தெரியலயே சார்?!” (பக்-52), “திருமணத்திற்குப் பத்துப் பொருத்தம் பார்த்த ஜோதிடருக்கு, மாப்பிள்ளை ஆண்மை உள்ளவன்தானா என்பதைக் கண்டுபிடிக்க இயலவில்லை”(பக்-79), என்பனபோலும் வரிகள் பொன்மொழிகள் போல கதைகளில் ஆங்காங்கே வந்து நம்மை அடிக்கோடிட வைக்கின்றன! அருமை தோழரே!

மாசறுபொன், வெற்றிமணி, பூவரசன், கோவலன் என இவர் எடுத்தாண்ட பாத்திரங்களின் பெயர்கள் புதுமையாக இருப்பதைப் பாராட்டினாலும், இவர்காட்டும் இவர்களின் வாழ்வியல் பொருத்தமின்மை இவற்றைப் பிரச்சாரத்திற்காகவே  எழுதப் பட்டதைக் காட்டிக் கொடுத்துவிடுகிறது. இந்த இடத்தில்தானே முற்போக்காளர்கள் விழிப்போடிருக்க வேண்டும்? அப்படி இல்லாமல், இன்றைய வாழ்வியலில் நமது பெயர்களுக்கிருக்கும் பொருத்தப் பாட்டை இன்னும் இயல்பாகவே படைத்திருக்கலாம்தானே? (உதாரணத்திற்கு சுப்பிரமணியன் என்னும் பெயர் சேரியில் இருந்தால் சுப்பா என்றும், சங்கர மடத்திலிருந்தால் சுவாமிகள் என்றும் அரசியல் தரகராக இருந்தால் மிஸ்டர் சுவாமி என்றும் சொல்லப்படுகிறதல்லவா? ஆக சுப்பிரமணி என்னும் பெயர் பெயருக்குத் தானே வைக்கப்படுகிறது?)

கதைகள் வெளிவந்த தேதி, இணைய இதழ்க் குறிப்புகளை அடுத்த பதிப்பில் சேர்த்துவிடுங்கள் தோழரே

அதோடு, பெரிய பத்திகள் சில, பக்க அளவில் வருவதையும் தவிர்க்க வேண்டும். படிப்போரின் சோர்வகற்றி எளிதாக்கத் தானே பத்தி பிரிக்கிறோம்? (இல்லைன்னா எம்ஜிஆர் நம் சட்ட மன்றத்தில் தொடர்ச்சியாக ஏழுமணிநேரம் பேசியது மாதிரி ஆயிடும்ல? அதுபோலவே, ஒருபக்கத்திற்கு 40என்னும் வரி அளவைக் குறைக்கத்தான்  வேண்டும்! அரசாங்கம் செய்யாததை எழுத்தாளராவது செய்யலாம்தானே?)

இவையெல்லாம் எனக்குத் தோன்றிய யோசனைகள் தானே அன்றி, குறைகள் என்று நினைக்காமல், கதைகளின் ஆழம் அது காட்டும் இன்றைய வாழ்வியல் நடைமுறைச் சிக்கல்களை உணரும்போது படிப்பவர் நிச்சயமாக இவற்றை மாற்றவேண்டும் என நினைப்பது உறுதி அதுதானே ஒரு படைப்பின் வெற்றி! அந்த வகையில் முதல் தொகுப்பிலேயே வெற்றிபெற்று விட்ட தோழர் முனைவர் வா.நேரு அவர்களுக்கு எனது வாழ்த்துகளும் பாராட்டுகளும்
தொடர்ந்து எழுதுங்கள் தோழரே!
----------------------------------------------------------------------------------- 
நெருப்பினுள் துஞ்சல் (சிறுகதைத் தொகுப்பு)
-முனைவர் வா.நேரு,
பக்கம் -98  விலைரூ.120
எழிலினி பதிப்பகம்,
எழும்பூர், சென்னை-9
தொலைபேசி-044-28193206

6 கருத்துகள்:

  1. நல்லதொரு நூல் அறிமுகம். நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
  2. அருமையான விமர்சனம்
    ஐயா தங்களை வலையில் கண்டு வெகு நாட்கள் ஆகிவிட்டன ஐயா
    தொடர்ந்து வாருங்கள்

    பதிலளிநீக்கு
  3. படிக்கும் ஆவலைத் தூண்டும் அருமையான விமர்சனம்...வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  4. முனைவர் வா.நேரு அவர்களின் வலைப்பூவில் சிலவற்றை மட்டும் வாசித்துள்ளேன்... நூலை விமர்சனம் அருமை ஐயா...

    பதிலளிநீக்கு
  5. மிக்க நன்றி தோழர்...விரிவான விமர்சனத்திற்கும் தொடர்ந்து எழுதுவதற்கு கொடுத்திருக்கும் ஊக்கத்திற்கும்..

    பதிலளிநீக்கு
  6. ஒரு சாகசப் பயணம்போல சென்று கலந்துகொண்ட மதுரை வலைப்பதிவர் திருவிழாவில் இவரை அறிமுகம் செய்ததை நினைவுகூர்ந்தேன் ...

    பதிலளிநீக்கு