வணக்கம் தமிழ்நாடு!
----நா.முத்துநிலவன்---
மனிதர்களின் மாபெரும் கண்டுபிடிப்பு மொழி. கருத்துப் பகிர்வுக்காகவே மொழி தோன்றினாலும், அதுவே அந்தந்த மொழியைப் பேசுவோரின் பண்பாடு, தேசிய இன அடையாளமாகவும் பரிணமித்தது. மனித சமூக முன்னேற்றத்திலிருந்து மொழியைப் பிரித்துப் பார்க்க முடியாது! மொழிவழி மாநில வரலாறு இன்றும் முக்கியமாகிறது!
ஆங்கிலேயர் வருவதற்கு முந்திய, இந்தியப்பகுதியில் ஆயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்ட தாய்மொழிகளும் அவற்றின் கிளைமொழிகளும் பேசப்பட்டன!
ஆங்கிலேயரின் ஆட்சிக்கு உட்பட்ட இந்தியா வங்கம், மும்பை, மதராஸ் ஆக மூன்றே மாநிலமாகத்தான் இருந்தது. மற்ற இன்றைய மாநிலங்கள் அனைத்தும் இவற்றோடு பிணைக்கப்பட்டிருந்தன. ஐதராபாத் நிஜாம், திருவிதாங்கூர் புதுக்கோட்டை போலும் அறுநூற்று ஐம்பதுக்கும் மேற்பட்ட மன்னராட்சிப் பகுதிகள் ஆங்கிலேயர் ஆட்சியை ஏற்றுக்கொண்ட சுதந்திர நாடுகளாக இருந்தன.
ஆங்கிலேயரின் ஆட்சிக்கு உட்பட்ட இந்தியா வங்கம், மும்பை, மதராஸ் ஆக மூன்றே மாநிலமாகத்தான் இருந்தது. மற்ற இன்றைய மாநிலங்கள் அனைத்தும் இவற்றோடு பிணைக்கப்பட்டிருந்தன. ஐதராபாத் நிஜாம், திருவிதாங்கூர் புதுக்கோட்டை போலும் அறுநூற்று ஐம்பதுக்கும் மேற்பட்ட மன்னராட்சிப் பகுதிகள் ஆங்கிலேயர் ஆட்சியை ஏற்றுக்கொண்ட சுதந்திர நாடுகளாக இருந்தன.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், துளு மொழிகளைப் பேசிய மக்கள் வாழ்ந்த தென்னிந்திய நிலப்பகுதி, “மதராஸ் ராஜதானி” (மெட்ராஸ் ஸ்டேட்) என்ற ஒரே மாநிலமாக இருந்தது, இந்தியா விடுதலை பெற்ற ஒன்பது ஆண்டுகள் வரையும் இது தொடர்ந்தது. உண்மையில் இந்தநிலப் பகுதிதான் பழந்தமிழர் வாழ்ந்த –தொல்காப்பியப் பாயிரத்தில் சொல்லப்பட்ட- “வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறும் நல்லுலகு” என்பதும் நினைக்கத் தக்கது!
1920களின் “மதராஸ் ராஜதானி” சட்டசபையில் ஆங்கிலேமே அலுவல் மொழி! நான்கு மொழிப் பிரதிநிதிகள் இருந்த சபையின் செயல்பாடு ஆங்கில மொழியிலேயே நடந்தது. 1930களின் திரைப்பட நாயகன் தமிழில் பேச, நாயகி தெலுங்கில் பாடுவார்! வடமேற்கே குஜராத் மொழி பேசுவோர் மராட்டிமொழியாருடன் வாழ்ந்து வந்தனர். பல மொழி பேசுவோரைக் கொண்ட ஒரே மாநிலங்கள் இப்படிப் பல இருந்தன.
1947இல் இந்தியா விடுதலை அடைந்தததைத் தொடர்ந்து, 1950இல் குடியரசானதும், மொழிவழி
மாநிலம் அமைக்கக் கோரி போராட்டங்கள் எழுந்தன.
இந்தியா-பாகிஸ்தான் மதவழிப் பிரிந்தது போல இந்திய
மாநிலங்களும் மொழியின் பெயரால் துண்டு துண்டாகப் பிரிந்து போய் விடுமோ என்று அஞ்சினார், அன்றைய பிரதமர் நேரு. மொத்த நாட்டையும் கிழக்கு,
மேற்கு, மத்திய, உத்தர, தெட்சிணப் பிரதேசங்கள் என ஐந்தே மாநிலங்களாகப் பிரித்துவிட எண்ணிப் பலரிடமும் பேசி, ஒப்புதலும் பெற்று, தெற்கே வந்தார். அப்போதிருந்த நான்கு தென்மாநில காங்கிரஸ் தலைவர்களில் மூவரிடம் ஒப்புதலும்
பெற்றுவிட்டு, காமராசரை அழைத்தார். “காமராசரே
‘தெட்சிணப் பிரதேச’ முதல்வராக மற்ற
மூவரும் ஒப்புதல் தந்துவிட்டதை அறிந்து காமராசரும் இதை ஏற்றுக் கொள்வார்” என்று நேரு எதிர்பார்த்தார்.
ஆனால் காமராசர் ஏற்கவில்லை! மொழிவழி
மாநிலப் பிரிவுகளே தேவை என்பதில் காமராசர் உறுதியாக இருந்தார். இதனால் மாநிலங்களை நிலவழி மட்டுமே பிரிக்கும் யோசனையை நேரு கைவிட்டதாக பழ.நெடுமாறன் குறிப்பிடுகிறார் (நூல்- “பெருந்தலைவர் நிழலில்” பக்கம்-167) இது தந்தைபெரியார் காமராசரிடம் வலியுறுத்தியிருந்த கருத்து! அதுதான் வெற்றிபெற்றது!
நான்கு மொழிபேசுவோர் ஒரே மாநிலமாக இருப்பதை நான்கு
மொழியினருமே விரும்பவில்லை. தெலுங்கு
பேசும் மக்களைக் கொண்ட ஆந்திராவைத் தனியே பிரித்துத் தரக்கோரி உண்ணாவிரம் இருந்த
பொட்டி ஸ்ரீராமுலு உயிரையே தியாகம் செய்தார். தொடர்ந்து
பெரும் போராட்டம் வெடித்தது. 1953இல் ஆந்திரப் பிரதேசம் தனி
மாநிலமாகப் பிரிக்கப்பட்டது. இப்படித்தான் சுதந்திர இந்தியாவின் முதல்
மொழிவழி மாநிலமாக ஆந்திரப் பிரதேசம் உருவானது. எனினும் சென்னையே ஆந்திராவின் தலைநகராக வேண்டும் என்ற அவர்களின் கோரிக்கை வெற்றிபெறவில்லை!
தமிழ்நாடு மாநிலப் பெயர் வைக்க வேண்டி 78 நாள் உண்ணா விரதமிருந்து உயிரீந்த விருதுநகர் தியாகி சங்கரலிங்கனார் |
“மொழிவழி மாநிலப் பிரிவு வேண்டும், அப்படிப்
பிரிக்கும்போது மதராஸ் மாகாணத்திற்கு ‘தமிழ்நாடு’ என்று பெயர் சூட்டவேண்டும்” என்பன உள்ளிட்ட 12 கோரிக்கைகளைக் காங்கிரஸ்
அரசின் முன் வைத்து, 1956 சூலை 27இல் விருதுநகரில் “சாகும்வரை உண்ணா விரதம்” போராட்டத்தைத் தொடங்கினார் சங்கரலிங்கனார். தலைவர்கள் பலரும் பேசிப் பார்த்தும் பலனில்லை, அவர் உறுதியாக இருந்தார். மத்திய காங்கிரஸ் அரசும் இதைக் கண்டுகொள்ளாமலே உறுதியாக இருக்க, 13.10.1956அன்று 78ஆம் நாள் அவரது உயிர் பிரிந்தது. உலகிலேயே தன் மொழிகாக்க அதிக நாள் உண்ணாவிரதமிருந்து உயிரீந்த பெருமை அவருக்கே உரித்தானது!
தனது உடலைப் பொதுவுடமைக் கட்சியிடம் ஒப்படைக்க வேண்டும் என, சங்கர லிங்கனார் முன்னரே தெரிவித்திருந்தது இன்றுவரை பலருக்கும் வியப்பாக இருக்கலாம்!
மொழியை ஆயுதமாக்கி அரசியல்
நடத்திய திராவிட இயக்கங்கள் இருக்க, பொதுவுடைமைத் தலைவர்களிடம்
தன் உடலை ஒப்படைக்கும்படி தியாகி சங்கரலிங்கனார் சொல்லக் காரணம் உண்டு! நாடு விடுதலை பெற்ற ஒருசில ஆண்டுகளிலேயே --1951ஆம் ஆண்டே —“மொழிவழி மாநிலங்களை அமைக்க வேண்டும்” என்று அகில இந்திய மாநாட்டில் தீர்மானம் போட்டது, அன்றைய ஒருங்கிணைந்த இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சி! இதனை வலியுறுத்தி வெவ்வேறு மாநிலத் தலைவர்களும் பிரச்சாரம் செய்தனர். ஆந்திரக் கம்யூனிஸ்ட் இயக்கத் தலைவர் பி.சுந்தரய்யா “விசால ஆந்திரா” என்ற நூலையும், கேரளத் தலைவர் இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட் “நவகேரளம்” என்ற நூலையும், தமிழகத் தலைவர் ஜீவானந்தம் “ஐக்கியத் தமிழகம்” என்றும் எழுதினர். நாடு முழுவதும் ஒரே குரல் பல்வேறு மொழிகளிலும் கேட்டது! அது மொழி வழி மாநிலப்பிரிவு! எழுப்பியது கம்யூனிஸ்ட்கட்சி! இது முக்கியமானது!
1956 ஆம் ஆண்டில் மாநில மறுசீரமைப்புச் சட்டம்
நிறைவேற்றப்பட்டது. இந்தியா 14 மாநிலங்களாக
பிரிக்கப்பட்டது. நவம்பர்
1ஆம் தேதி, கேரள, கர்நாடக,
மதராஸ் (சென்னை) மாநிலங்கள்
அன்றுதான் பிறந்தன. பின்னர் இதே அடிப்படையில்
மகாராஷ்டிராவில் இருந்து குஜராத் (1960) தனிமாநிலமாகப்
பிரிக்கப்பட்டது.
இவ்வாறு, மொழிவழி பிரிக்கப்பட்ட மாநிலங்களான ஆந்திரா,
தமிழ்நாடு, கேரளா, கர்னாடகா, மகாராட்டிரா, குஜராத், மேற்குவங்க
மாநிலங்கள் கடந்த 70 ஆண்டுகளில் இந்திய வளர்ச்சியில் பெரும்
பங்கு வகித்திருக்கின்றன. ஆனால் நிலவழியே பிரிக்கப்பட்ட உத்தரப் பிரதேசம்,
மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், ஜார்கண்ட், உள்ளிட்ட பல மாநிலங்கள் இந்த அளவிற்கு
வளராத நிலைக்கு மொழியும், கல்வியும் முக்கியக் காரணம் என்பதை
மறுக்கமுடியாது அல்லவா?
காங்கிரஸ் கட்சி, நாட்டு விடுதலைப் போராட்டத்தின் போது மாநில மக்களைப் போராட்டத்தில் இணைக்க வைத்திருந்த அமைப்புகள் இயல்பாக மாநில மொழிவழி அமைப்பாகவே இருந்தன. “சென்னை ராஜதானி” என ஆங்கில அரசு சொன்ன போதும், அதற்குள் “தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி” “கர்னாடகா காங்கிரஸ் கமிட்டி” என்றே வழங்கினார்கள். என்றாலும் ஆட்சி அரசியல் என்று வருகிறபோது மட்டும் மொழிவழி மாநிலப் பிரிவினைக்கு காங்கிரஸ் எதிராகவே இருந்தது.
1952இல் மதராஸ் மாநில எதிர்க்கட்சியாக விளங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் பி.இராமமூர்த்தியும், ஜீவானந்தமும் சட்டசபையில் தமிழில் பேசினர். திமுக நுழைந்த பிறகு தமிழின் அழகு சட்டசபையை அலங்கரித்தது! தமிழ் ஆட்சிமொழி அறிவிப்பை காமராசர் அரசு வெளியிட்டது!
1952இல் மதராஸ் மாநில எதிர்க்கட்சியாக விளங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் பி.இராமமூர்த்தியும், ஜீவானந்தமும் சட்டசபையில் தமிழில் பேசினர். திமுக நுழைந்த பிறகு தமிழின் அழகு சட்டசபையை அலங்கரித்தது! தமிழ் ஆட்சிமொழி அறிவிப்பை காமராசர் அரசு வெளியிட்டது!
1967இல் தமிழ்நாடு உள்ளிட்ட ஒன்பது
மாநிலங்களில் காங்கிரஸ் தோல்வி யடைந்தது! தமிழகத்தில் ஆட்சிக்கு வந்த அண்ணா தலைமையிலான தி.மு.க. அரசு, 1968 சூலை 18 அன்று “சென்னை மாநிலம்”எனும் பெயரை, ‘தமிழ்நாடு அரசு’ எனப் மாற்றம் செய்து சட்டமியற்றியது. எனினும் மத்திய இந்திய அரசின்
சட்ட ஏற்புக்காக நாடாளுமன்றத்தில் பெரிய விவாதம் நடந்தது!
பி.இராமமூர்த்தி |
சீனப் போர் காரணமாக, சிறை வைக்கப்பட்ட பி.ராமமூர்த்தி முன்வைத்த கருத்தை ஆதரித்து பூபேஷ்குப்தா தொடர்ந்து பேசியதும் வரலாற்றுப் பதிவுகளாயிருக்கின்றன. “நான் முன்மொழிந் திருக்க வேண்டியதை கம்யூனிஸ்டுகள் முந்திக் கொண்டதில் எனக்கு வருத்தம் தான் என்று அண்ணா பேசியிருக்கிறார் (நூல்-“தமிழ்நாடு பெயர்மாற்ற மசோதா”-பூபேஷ்குப்தா - என்.சி.பி.எச்.வெளியீடு-2006) இதன் பின்னரே “தமிழ்நாடு” மாநிலப் பெயர் மாற்றத்திற்கு நாடாளுமன்ற ஒப்புதல் கிடைக்கவில்லை! பின்னர் அண்ணா முதல்வரான பிறகே இது நடைமுறையானது!
அப்போதும் சென்னை மாநிலத்தை “தமிழ்நாடு” என்று மாற்ற மட்டுமே மத்திய அரசின் ஒப்புதல் கிடைத்தது. கலைஞர் மு.கருணாநிதி நான்காவது முறை முதல்வரானபோது, “மதராஸ்”
நகரின் பெயரை “சென்னை” என
மாற்றி சட்டமியற்றினார், இவ்வாறே பம்பாய் - மும்பை எனவும், கல்கத்தா - கொல்கத்தா
எனவும், பெங்களுர்- பெங்களுரு எனவும் சற்றே முன்பின்னாக மாற்றப்பட்டதும்
மொழிவழி உரிமைக் குரலின் தொடர்ச்சியே
இதுபற்றி நாடாளுமன்ற மேலவையில் பூபேஷ்குப்தாவுக்கு நன்றி கூறிப் பேசிய அண்ணா, மதராஸ் (சென்னை) மாநிலத்தின் பெயரை, “தமிழ்நாடு”என என மாற்ற வலியுறுத்தி, இலக்கிய மேற்கோள்களைக் காட்டிப் பேசிய பேச்சு புகழ்பெற்றது. பாஜகவின் அரசியல் பிரிவான ஆர்.எஸ்.எஸ். இந்த மொழிவாரி பிரிவினைக்கு அன்றும் இன்றும் எதிரானதே என்பதை மறந்துவிடக் கூடாது! அவர்களுக்கு “ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே பண்பாடு, ஒரே ஆட்சி அதுவும் அகண்ட பாரதம்” என்பதே திட்டம் – இன்று வரையான திட்டம் - என்பதையும் மறந்துவிடவே கூடாது!
அதனால்தான் இரண்டாவது முறையாக பாஜக ஆட்சிக்கு வந்த அடுத்தநாளே செயல்படுத்தத் தயாரான “தேசிய கல்விக்கொள்கை -2019 வரைவு அறிக்கை” இந்திபேசாத மாநிலங்களிலும் இந்தியைக் கட்டாயமாக்கும் எனும் பழைய கொள்கையைப் பிரகடனப் படுத்தியது என்பதையும் மறந்துவிடக் கூடாது.
“இந்தி மொழி இந்தியாவின் தேசியமொழி அல்ல” என்று குஜராத் நீதிமன்றம் ஜனவரி-25,-2010 அன்று ஒரு முக்கியமான தீர்ப்வை வழங்கியிருக்கிறது. அது இன்றும் தொடர்கிறது. என்றாலும் இந்தியை இந்தியாவின் தேசியமொழி என்றே இந்திய ஆட்சியாளர்கள் (காங்கிரஸ் ஆட்சியினரும், பாஜக ஆட்சியினரும்) முப்போதும் சொல்லி வருகிறார்கள், (இப்போதும் இதில் மாற்றமில்லை!)
இந்த நேரத்தில் மாநில உரிமையாக, மொழி உரிமையாக, பண்பாட்டு உரிமையாக மட்டுமின்றி அந்தந்த தேசிய இன உரிமையாகவும் மொழிவழி மாநில உரிமைப் போராட்டத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். அப்போதுதான் “தேசிய இனங்களின் ஒன்றியம் இந்தியா” எனும் சரியான புரிதல் உருவாகும். அண்ணல் அம்பேத்கார் உருவாக்கிய இந்திய அரசியல் சட்டத்தின் ஆழ்ந்த புரிதல் இதுதான்!
இந்த நேரத்தில் மாநில உரிமையாக, மொழி உரிமையாக, பண்பாட்டு உரிமையாக மட்டுமின்றி அந்தந்த தேசிய இன உரிமையாகவும் மொழிவழி மாநில உரிமைப் போராட்டத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். அப்போதுதான் “தேசிய இனங்களின் ஒன்றியம் இந்தியா” எனும் சரியான புரிதல் உருவாகும். அண்ணல் அம்பேத்கார் உருவாக்கிய இந்திய அரசியல் சட்டத்தின் ஆழ்ந்த புரிதல் இதுதான்!
சரி
இந்த நாளில் நம் கவனத்திற்குரிய இன்றைய பணிகளையும் பார்ப்போம்-
மார்ஷல் நேசமணி |
ம.பொ.சிவஞானம் |
தாய்மொழி பேசிவரும்
கடைசித் தலைமுறையாக நமக்கு அடுத்த தலைமுறை இருந்துவிடக் கூடாதெனில் இப்போதே, நாம் சில நல்ல முயற்சிகளைத் திட்டமிட்டுச் செயற்படுத்த
வேண்டும்.
தமிழ் எனக்குத் தாய் என்றால், மலையாளம் என் சகாவுக்கு அம்மை! இந்திச் சகோதரனுக்கு இந்திமாதா! அவரவருக்கும் அவரவர் தாயும் மொழியும் உயர்வே! ஆனால் ஒவ்வாத எதையும் திணிக்கும் போது வாந்தி வருவது இயல்புதானே? மொழிவழி மாநிலம் பிரிந்த பிறகுதான், வளர்ச்சியில் ஒரு உத்வேகம் ஏற்பட்டது
இந்தியத் தலைநகராம் டெல்லியில் இந்தியாவின் பல்வேறு மொழியினரும் கலந்து வாழ்வது இயல்பு. ஆனால் கடந்த பல பத்தாண்டுகளாக அங்கு இந்தி தவிர்த்த மாநில மொழிகள் கொஞ்சம் கொஞ்சமாக வழக்கிழந்து வருவது இன்றைய இந்தியாவின் வரலாற்றுச் சோகம். பஞ்சாபி, அரியானி, பீகாரி, மகதி, மைதிலி, போஜ்புரி, முதலான பல்வேறு மொழிகளும் கொஞ்சம் கொஞ்சமாக அந்தந்த மாநிலத்தின் குழந்தைகள் அறியாத மொழிகளாகி வருகின்றன. இதில் டெல்லித் தமிழும் இல்லாமல் இல்லை!
டெல்லியில்தான் இப்படி என்றில்லை அந்தந்த மாநில நிலையையும் டெல்லி நிலை போல மாற்றத்தான் அமித்ஷா துடிக்கிறார்! மோடி நின்று நகைக்கிறார்! இவர்கள் இருவருக்கும் குஜராத்தியே தாய்மொழி என்பது நினைவிருக்கட்டும்! குஜராத்தியைத் தாய்மொழியாகக் கொண்ட மோ.க.காந்திக்குத் தமிழ்நாட்டில் ஆங்கிலத்தில் வாசித்து வழங்கப்பட்ட வரவேற்பின்போது, “என் தாய்மொழியிலோ உங்கள் தாய்மொழியிலோ இல்லாத இந்த வாழ்த்து யாருக்காக?” என்று கேட்டதும், அப்படியே இந்தியப் பிரதமர் மோடி ஐநாவில் இந்தியில் பேசியதும் இணைந்து நினைவுக்கு வருகிறதல்லவா!)
புத்தர் பேசிய பாலி மொழி இன்று வழக்கில் இல்லை!
இயேசு பேசிய ஈபுரு மொழி இன்று வழக்கில் இல்லை!
வேதங்கள் ஓதப்படும் சமஸ்கிருதம் என்றுமே வழக்கில் இல்லை!
தொல்காப்பியனின் “சங்கப் பலகையில் இருந்த தமிழ்,
இன்றும் பில்கேட்ஸின்
“சன்னல்(விண்டோஸ்)பலகை”
யில் கிடைக்கிறது!
குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் பாலை என
ஐந்து நிலத்தில்
கிடந்த எம் அன்னைத் தமிழ், இன்று
ஆறாம் திணையான இணையத்திலும் இயங்குகிறது
இதுதான் நம் தமிழின் உயர்வு! வெறும் பழம்பெருமையல்ல!
தொடர்ச்சி!
இணையத்தில்
அதிகம் பயன்படுத்தப்படும் இந்திய மொழிகளில் தமிழ்மொழியே முதலிடத்தில் உள்ளதாக 2017ஆம் ஆண்டின் கூகுள் கணக்கெடுப்பு கூறுகிறது!
“இந்தி கற்பதில் தென்னிந்தியாவிலேயே தமிழ்நாடுதான் முதலிடத்தில் இருக்கிறது” – என இந்திப்பிரச்சார சபா தலைவர் பெருமிதம்கொள்வது உண்மை நாம் எந்த மொழிக்கும் எதிரிகளல்லர்! திணிப்பதைத்தான் எதிர்க்கிறோம்!
அனைத்து மாநில மக்களின் வரிப்பணத்தில் தீட்டப்படும் திட்டங்களுக்கு இந்தியில் பெயர் வைப்பது மாநில மொழிகளை ஏமாற்றுவது, அந்த மக்களை ஏமாற்றி ஆதிக்கம் செலுத்துவது அன்றி வேறென்ன? இது மாற்றப்பட வேண்டுமல்லவா?
தமிழக மைல்கற்கள், பெயர்ப்பலகைகள் (மத்தியப் பல்கலைக் கழகம், திருவாரூர்) சத்தமில்லாமல் இந்தியாக மாற்றப்பட்ட “குறும்புகள்” நிறுத்தப்பட வேண்டும்.
தாய்மொழிவழிக் கல்விமட்டுமே
அறிவை வளர்க்கும் என்பதை உணரவேண்டும்
குழந்தைகளின்
பெயர்களைத் தாய்மொழியில் வைத்தல், இணையத் தமிழ் வளர்ச்சியில் கவனமெடுத்தல்
செல்பேசி, முகநூல் உள்ளிட்ட இணையத் தொடர்புகள் அனைத்தையும் தமிழில் வளர்த்தல், வங்கி,தொடர்வண்டி,
தொலைத்தொடர்பு உள்ளிட்ட அனைத்து மத்திய நிறுவனங்களிலும் தாய்மொழிப் பயன்பாடு,
என அரசியல் முடிவெடுக்க இந்த “மொழிவழி மாநில உதயநாள்”
நமக்கு வழிகாட்டும்
“தமிழ் உயர்ந்தால் தமிழ்நாடு
தான்உயரும் அறிவு உயரும் அறமும் ஓங்கும்,
இமயமலை போல் உயர்ந்த ஒருநாடும்
தன்மொழியில் தாழ்ந்தால் வீழும்”
– பாரதிதாசன் (தமிழியக்கம்)
தமிழ்நாடு, தலைநகர் பெயர் மாற்ற வரலாற்றுக் குறிப்பு - ஆண்டுவாரியாக
·
மதராஸ் பிரசிடென்சி [Madras Presidency] – ஆங்கிலேயர்
ஆட்சிக் காலம்
·
மதராஸ் மாகாணம் [Madras Province] - சுதந்திரம் அடைந்த பின் [1947-1956 ]
·
மதராஸ் மாநிலம்.[Madras State ] - [ 1956 - காமராசர்
முதல்வர்
·
தமிழ்நாடு.[ 14, ஜனவரி, 1969 - அண்ணா முதல்வர்
·
சென்னை- 1996 - மு.கருணாநிதி
முதல்வர் - (நன்றி-
கூகுள் தேடுபொறி)
----------------------------------------------------------
இக்கட்டுரையைச் சுருக்கி வெளியிட்ட
தீக்கதிர் (நவ.1,2019) நாளிதழுக்கு நன்றி
அனைவரும் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம்... அற்புதமான விளக்கமான கட்டுரை ஐயா... நன்றி...
பதிலளிநீக்குமிகவும் பயனுள்ள கட்டுரை. நிறைய தகவல்கள் கிடைக்கப் பெறுகின்றேன். மொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்கம் செலுத்துகின்றேன்.
பதிலளிநீக்குவணக்கம் அண்ணா. அறிந்திருந்த சிலவற்றுடன் அறியாத பல தகவல்களையும் அறிந்துகொண்டேன். வரலாற்றின் சில முக்கியமான விஷயங்களை அறியாமல் இருந்தது வெட்கமாக இருக்கிறது, பகிர்விற்கு நன்றி அண்ணா.
பதிலளிநீக்குஅறிந்து கொள்ள வேண்டிய ஏராளமான தகவல்கள், விரிவான கட்டுரை அருமை.
பதிலளிநீக்குசான்றாதாரங்களோடு விளக்கியது அருமை!
பதிலளிநீக்குஅறியாத பல அரியனவற்றை அறிந்தேன் ஐயா.
பதிலளிநீக்குதங்களின் உண்மையான தகவலுக்கு மிக்க நன்றி ஐயா
பதிலளிநீக்குசிறப்பான கட்டுரை... சிறப்பு வாழ்த்துகள்...
பதிலளிநீக்குமாநில உரிமையைப் பெற்றதை நினைவூட்டுதல் அருமை ஐயா. மாநிலங்களை மொழி வாரியாகப் பிரித்த நேருவின் அரசும் அதை நசுக்கும் இப்போதைய ஒன்றிய அரசின் விரோதப் போக்கும் கண்டிக்கத்தக்கது.
பதிலளிநீக்குWindows. சன்னல் பலகை பிரமாதமான மொழிபெயர்ப்பு
பதிலளிநீக்குசிறப்பு மிக்க கட்டுரை தோழர்.
பதிலளிநீக்கு🤝🚩👍🌹👌😂
பதிலளிநீக்குஅருமை ஐயா! அவ்வளவாக வெளியில் தெரியாத வரலாற்று உண்மைகள் பலவற்றை மனத்தில் பதியும் வண்ணம் எடுத்துரைத்திருக்கிறீர்கள்! கூடவே இன்றைய ஆளுங்கட்சியான பா.ச.க., அன்றிலிருந்தே மொழிவாரி உரிமைகளுக்கு எதிராக இருப்பதையும் சுட்டிக்காட்டியிருக்கிறீர்கள். பொதுவாகக் காங்கிரசு செய்த இரண்டகங்கள் பற்றி எழுதுபவர்கள், பா.ச.க., செய்யும் இரண்டகங்கள் பற்றி எழுதுவதில்லை. பா.ச.க., அடிக்கும் கொட்டங்களைப் பற்றி எழுதுபவர்கள் காங்கிரசு செய்த இரண்டகங்களைப் பற்றிக் குறிப்பிடுவதில்லை. இவ்விரண்டு கட்சிகளின் உண்மை முகத்தைப் பற்றியும் எழுதுபவர்கள் பொதுவுடைமைக் கட்சிகள் இந்த மக்கள் கோரிக்கைகள் நிறைவேறச் செய்த பங்களிப்பு பற்றிப் பதிவு செய்வதில்லை. ஆனால் நீங்கள் இந்த மூன்றைப் பற்றியுமே எழுதியிருப்பது இதை ஒரு தவிர்க்க முடியாத வரலாற்றுப் பதிவாக ஆக்கியிருக்கிறது. மிக்க நன்றி!
பதிலளிநீக்கு