பன்னிரண்டாம் வகுப்பில் தமிழ் வேண்டாமா?!?!?



நா.முத்துநிலவன் - கட்டுரை
தற்போதைய தமிழக அரசிடம், பள்ளிக் கல்வித்துறையில் புதிய இரண்டு பரிந்துரைகள்  தரப்பட்டுள்ளதாகச் செய்திகள் வந்துள்ளன. இவற்றைக் கல்வி அமைச்சர் மறுத்திருப்பதாகவும் ஒரு செய்தி வந்திருக்கிறது.

10,12ஆம் வகுப்பு மொழிப்பாடத் தேர்வுமுறை மாற்றம், மற்றும் 12ஆம் வகுப்பில் தமிழ், ஆங்கில மொழிப் பாடங்கள் இரண்டில் ஒன்றை மட்டும் எடுத்துப் படிப்பது பற்றியே இந்தப் பரிந்துரைகள் உள்ளனவாம்! எனினும், இது வெறும் பள்ளிமாணவர் சார்ந்த செய்தியல்ல, அடுத்தடுத்த தலைமுறை சார்ந்த, கவனமாகக் கையாளவேண்டிய செய்தி! எனவே இதுபற்றிக் கல்வியாளர், தமிழார்வலர், சமத்துவ சமுதாயம் காணும்  முன்னேற்றத்தில் அக்கறையுள்ள அனைவருமே கவனிக்க வேண்டிய செய்தியாகவிட்டது.

இதுபற்றிய சில தகவல்களோடு பரிந்துரைகள் பற்றியும் பார்ப்போம்.
ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை, தமிழ், ஆங்கிலம், கணக்கு, அறிவியல், சமூகஅறிவியல் என ஐந்து பாடங்கள். சமச்சீர்க் கல்வியில் முப்பருவத் தேர்வுமுறை வந்தபிறகு, மாணவர்க்குத் தேர்வுச் சுமை குறைந்து விட்டது உண்மைதான். எழுத்துத் தேர்வுக்கு அறுபது மதிப்பெண்கள், பாடம் சார்ந்த திறன்களுக்கு நாற்பது மதிப்பெண்கள் என்றிருப்பது இன்னும் சிறப்பு. ஆசிரியரின் மதிப்பீடு சரியாக இருந்தால் கல்வி நோக்கம் நிறைவுறும்.

9,10-ம் வகுப்பு மாணவர்க்குத் தமிழ், ஆங்கில மொழிப் பாடங்கள் இரண்டிலும் முதல்தாள், இரண்டாம்தாள் என்று இரண்டு தேர்வுகள் நடத்தினாலும் ஒவ்வொன்றிலும் நூறுக்கே மதிப்பிட்டு, மொத்தம் ஐநூறு மதிப்பெண்ணுக்கு மதிப்பெண் பட்டியல் தருவதே வழக்கத்தில் உள்ளது.

9,10 வகுப்புகளின் மொழிப்பாடத் தேர்வுகள் -- இரண்டுதாள் என்பதை -- ஒரே தாளாக்கிவிட்டால் ஏழு தேர்வு என்பது ஐந்து தேர்வாகி தேர்வுச் சுமையைக் குறைக்கலாம் என்பது ஒரு பரிந்துரையெனில் இது சரியான பரிந்துரைதான்.

ஏழு தேர்வுகளை --எழுநூறு மதிப்பெண்களுக்கு-- எழுதிவிட்டு, ஐநூறு மதிப்பெண்களே தரப்படுவதால், மாணவர் கல்விச்சுமை சற்றும் குறையப் போவதில்லை! ஆனால் எழுதும் தேர்வே ஐந்துதான் --ஐநூறு மதிப்பெண் ணுக்குத்தான்-- எனில் தேர்வுச் சுமை குறைவது இயல்பு! இது சரிதானே?

சமச்சீர்க் கல்வி செயல்பாட்டுக்கு வரும் முன் -2009க்கு முன்- 9,10ஆம்  
வகுப்புகளில் உரைநடை, செய்யுள் சேர்ந்து ஒரு நூலாகவும், இலக்கணம் துணைப்பாடங்களுக்குத் தனித்தனி இரண்டு நூல்களாகவும் ஆக, தமிழுக்கு மட்டுமே மூன்று நூல்கள் இருந்ததன! இதைச் சமச்சீர்க் கல்வியில் ஒரே நூலாக்கியது ஒரு நல்ல முன்னேற்றம். ஆனால் நூல்தான் ஒன்றாக வந்ததே தவிர, தேர்வுகள் பழைய முறையிலேயே தொடர்ந்தன! அதாவது எழுநூறு மதிப்பெண்ணுக்குத் தேர்வு நடத்தி, மொழிப்பாடங்களில் சராசரி பார்த்து, ஐந்நூறுக்கே மதிப்பெண் பட்டியல்  கொடுத்து வந்தோம்!
சமச்சீர்க் கல்வியில் மாணவர் புத்தகச் சுமை குறைந்தும் தேர்வுச் சுமைகள் குறையவில்லை! இப்போது, புதிய சிந்தனையில் தேர்வுச் சுமையையும் குறைப்பது ஒரு நல்ல பரிந்துரை என்றுதான் தோன்றுகிறதுஅதுவும் கடந்த சில ஆண்டுகளாக, 10,11,12ஆம் வகுப்பு மாணவர் மூன்று ஆண்டுகளும் தொடர்ந்து அரசுப் பொதுத் தேர்வு எனும் நெருக்கடியில் இருப்பதால் இந்தத் தேர்வு மாற்றம் அவர்களுக்கு ஆறுதலைத் தரும் என்பதில் ஐயமில்லை! பள்ளிக் கல்வித் துறைக்கும், ஏழு தேர்வுகளை நடத்தி, அவற்றைத் திருத்த ஆசிரியர்களை விரட்டும் கெடுபிடியும் குறையும். மாநிலப் பொதுத் தேர்வில் மட்டுமின்றி, பள்ளித் தேர்வுகளிலும் இம்முறையே வந்தால், மாணவர்க்கு மட்டுமின்றி பாடம் நடத்தும் ஆசிரியர்க்கும் சுமை குறையும். எனவே இருவகையிலும் இது நல்லதே.

தேர்வுகள் மற்றும் பாடங்களைக் குறைத்தாலும் தரம் குறையாமல் பார்க்கும் பொறுப்பு பாடநூல் எழுதுவோர்க்கு அதிகரிக்கும் என்பது முக்கியம். என்ன…? பத்துப் பாடம், ஐந்து பாடமாகும்! சுருங்கச் சொல்லி விளங்க வைக்க, பாடநூல் தயாரிப்பில்தான் மிகுந்த கவனம் செலுத்த வேண்டியிருக்கும்.
இதற்கேற்ப பாடப்பகுதிகளும் சுருக்கப்பட்டுவிடும். மொழிநடை இலக்கணம், கதை, கவிதை எழுதுதல் பகுதிகள் சுவையாகவும், சுமையாகி விடாத விதத்திலும் இருக்க வேண்டியது அவசியம். இந்தப் பகுதிகள் தரமாக இல்லையெனில் இரண்டாம் தாள் இல்லாததால் மாணவர் மொழித்திறன் குறைந்து போய்விட்டதுஎனும் குற்றச்சாட்டுக்குப் பின்னர் ஆளாக நேரும் என்பதையும் அவர்கள் கவனத்தில் கொள்ளவேண்டுவது அவசியமாகிறதுஆனால், மாணவர்கள் இரண்டாம்தாள் இல்லை!” எனும் மகிழ்ச்சியோடு ஆர்வமாகக் கற்க முன்வருவர் என்பது ஒரு முக்கியமான முன்னேற்றமாகும்.

இப்போதுதமிழைவிடவும் ஆங்கிலமே மேல்என்று சில மாணவர்கள் நினைப்பதற்கு, தமிழின் இலக்கணப்பகுதி கடினமாக இருப்பதும் முக்கியக் காரணம் என்பதைக் கல்வித்துறையும் ஆசிரியர்களும் புரிந்துகொண்டு அதற்கேற்பப் பாடநூலை உருவாக்குவதும் கற்பிப்பதும் அவசியமாகும்.

தேர்வு முறை மாற்றம் குறித்து பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் திரு. ராமேஸ்வரமுருகனிடம் கேட்டபோது, பொதுத்தேர்வு முறையில் மாற்றம் கொண்டுவருவதற்கான திட்டம் இருப்பதாகவும், இறுதி வடிவம் கொடுப்பது குறித்து அரசுதான் முடிவு செய்யும் என்றும் தெரிவித்திருக்கிறார்.
           
சரி இதுபற்றி அரசு என்ன நடவடிக்கை எடுக்கிறதென்று பார்ப்போம்.

இதோடு வரும் இன்னொரு பரிந்துரைதான் ஆபத்தாகத் தெரிகிறது-   அதாவது, 10, 12ஆம் வகுப்பு மாணவர்கள் தற்போது தமிழ், ஆங்கில மொழிப் பாடங்கள் இரண்டுடன், உயர்கல்விக்குரிய முதன்மைப்பாடங்கள்நான்கும் ஆக ஆறு தேர்வுகளை எழுதிவருகிறார்கள் அல்லவா? இதில் மொழிப்பாடச்சுமையைக் குறைப்பதாக”, “தமிழ், ஆங்கிலம் எனும் மொழிப்பாடங்கள் இரண்டில் ஒன்று படித்தால் போதும்என, பரிந்துரை செய்திருப்பதாகச் செய்திகள் வருகின்றன. இதுதான் அடிமடியில் கைவைத்து, தமிழ்நாட்டுப் பள்ளிகளிலிருந்து தமிழை முற்றிலும் அகற்றிவிடக்கூடிய -- முதலுக்கே மோசம் செய்யக் கூடிய -- பரிந்துரையாகப் படுகிறது!
இந்தப் பரிந்துரையைக் கல்வியமைச்சர் திரு செங்கோட்டையன் மறுத்து விட்டார் என்றாலும், இதிலிருக்கும் ஆபத்தை முன்னுணர்ந்து இதைக் கைவிடச் செய்வது மிகமிகவும் அவசியம் மற்றும் அவசரமாகும். எனவே இதுபற்றிய புரிதலை ஏற்படுத்துவது முக்கியம் என்று நினைக்கிறேன்.

தற்போதைய மேல்நிலைப் பள்ளிக் கல்வியின் இறுதிநிலையான 12ஆம் வகுப்பில், “ஆங்கிலம் அல்லது தமிழ் இரண்டில் ஒன்றைப் படித்தால் போதும்என்பது, தமிழரின் அடுத்த தலைமுறைகளை நாசம் செய்துவிடும்உயர்கல்வியெல்லாம் ஆங்கிலத்திலேயே இருக்கின்ற காரணம் ஒன்று போதும், தமிழரே தமிழைக் கைவிட்டு ஆங்கிலத்தைப் படிக்க ஓடுவததற்கு!

வேலைவாய்ப்பு ஒன்றுக்காகவே பிள்ளைகளைத் தயாரிக்கும்பெற்றோர், பன்னாட்டு வணிகச் சூழலை மனதில் கொண்டு, அவற்றுக்கான அடிமைப் பணிகளில் சேர, ஆங்கிலம் போதும். தமிழ் எதற்கு? என்பர்! பழம் நழுவிப் பாலில் விழுந்து, அதுவும் நழுவி நேராக வயிற்றில் விழுகிறதே! இது தவமிருந்து பெறும் சாபம் என்பது இப்போது அவர்களுக்குப் புரியாதே!?

ஆக, “தமிழ்நாட்டுப் பெற்றோர் விரும்புகிறார்கள், தமிழ் வேண்டாமாம்! ஆங்கிலம் மட்டுமே தம் குழந்தைகளுக்குப் போதும் என்று பல லட்சம் பெற்றோர் சொல்லும் போது தமிழக அரசு அதை நிறைவேற்றுவதைத் தவிர வேறுவழியில்லை எனவே, இனிமேல் 12ஆம் வகுப்பில் ஆங்கிலம் மட்டுமே மொழிப்பாடமாக இருக்கும். அதற்காக அண்ணாவின் வழிவந்த இன்றைய தமிழ்நாடு அரசு, தமிழைக் கைவிட்டுவிடாது! விரும்பியவர் படிக்க எல்லா வகையான ஏற்பாடுகளையும் செய்யும்இன்றைய அரசு சொல்லி, பெற்றோர் வயிற்றில் பவுடர்பால் வார்க்கும் நாள் வெகுதொலைவில் இல்லை
குழந்தை விரும்புகிறதென்று இனிப்பை மட்டுமே ஊட்டும் தாய், அந்தக் குழந்தைக்கு நல்லது செய்கிறாள் என்றா பொருள்? அதே போலத்தான் பெற்றோர்கள் விரும்புகிறார்கள் என்பதற்காக ஆங்கிலக் கல்வியை மட்டுமே தரும் அரசு, நல்லது செய்வதாகப் பாராட்ட முடியுமா என்ன?

தன் குழந்தை எதை விரும்புகிறது என்பதை விடவும், அதன் வளர்ச்சிக்கு என்ன தரவேண்டும் என்று தீர்மானித்து, தருபவள்தான் நல்ல தாயாவாள். நல்லதை, அது விரும்பும்படித் தருபவர்தான் பொறுப்பான பெற்றோர். 

பள்ளிப் பாடத்தில் தமிழைக் கைவிடுவதால் 
என்ன ஆகும்                                       
குழந்தைகளுக்கான ஆரம்பக் கல்வி அவரவர் தாய்மொழியில் இருப்பது தான் இயல்பானது மற்றும் அறிவியல் பூர்வமாகச் சரியானதுமாகும். உலகில் முன்னேறிய நாடுகளின் கல்வி முறை இப்படித்தான் உள்ளது.
பத்து வயதிற்குமேல் தேவையான வேறு மொழிகளைக் கற்கலாம் என்றாலும், உயர்கல்விவரை பயிற்று மொழியாக அவரவர் தாய்மொழியே  தொடர்வதுதான் மனிதகுல முன்னேற்றத்திற்கு உதவும்மகாகவி பாரதி, தன் தந்தை தந்த ஆங்கிலக் கல்வியை,
நெல்லையூர் சென்று அவ்வூணர் கலைத்திறன்
          நேருமாறு எனை எந்தை போக்கினன்
 செலவு தந்தைக்கு ஓர் ஆயிரம் சென்றது,                                 
         தீது எனக்குப் பல்லாயிரம் சேர்ந்தது, 
 நலம் ஓர் எள்துணையும் கண்டிலேன், இதை
         நாற்பதினாயிரம் கோவிலில் சொல்லுவேன்”  
என்பது நமது மகாகவி பாரதி, அனுபவித்து எழுதிய உண்மை! வெறும் புகழ்ச்சியில்லை! சரி, இதை விரித்து எழுதினால் பெருகிவிடும்....

இப்போது அடுத்த அபாய கட்டத்தை அல்லவா நெருங்கிவிட்டோம்! பயிற்று மொழியாகத் தாய்மொழியை ஏற்காமல், ஆங்கிலத்தை ஏற்றுத் தொடரும் இன்றைய பாதகமான சூழலில், தமிழைப் பாடமாகக் கூட இல்லாமல், பள்ளிக் கல்வியில் இருந்தே அகற்றும் யோசனையை எப்படி ஏற்க முடியும்?

உலக நாடுகளில் கல்வியால் முன்னேறிய நாடுகள், தமது அடுத்த தலைமுறையை, தம்மினும் உயர்நிலைக்குக் கொண்டுசெல்ல தாய்மொழிக் கல்வியையே தருகின்றன. பள்ளிக் கல்வியில் படிக்கும் மற்ற பாடங்கள் வாழ்க்கைக்குத் தேவையான அறிவைத் தரும். அதாவது வீட்டு, நாட்டு வரவுசெலவு பார்க்கக் கணக்கு, பகுத்தறிந்து செயல்பட அறிவியல், முந்திய தமது வரலாற்றுடன் சமகாலத்துக்கும் தேவையான அரசியல் மாற்றங்களை அறிய சமூகஅறிவியல் என வாழ்வில் முன்னேற இந்தப் பாடங்கள் அவசியம்தான் என்பது உண்மைதான்.  வாழ்க்கை என்றால் என்ன என்பதைப் புரியவைப்பதுதான் தாய்மொழிப்பாடம் என்பது புரியவேண்டாமா?

வருமானத்துடன் வாழ, மற்ற பாடங்கள் உதவக்கூடும் வாழ்க்கையைக் கற்றுத்தர தாய்மொழியால்தான் முடியும்!

என்ன படிப்புப் படித்து, எந்த வேலைக்குப் போனாலும் கணவன்-மனைவி குடும்பம் மற்றும் நாடு, உலகம் மனிதகுல முன்னேற்றத்திற்கான வாழ்வு பற்றிய புரிதலை, அக-புற வாழ்க்கையை, மொழிப்பாடமே தீர்மானிக்கும். (இப்போது இந்தப் புரிதல் படித்த எல்லாருக்கும் இருக்கிறதா என்று கேட்டால், தமிழைக் கற்றுக் கொண்ட தன்மைதான், அல்லது நமது கல்வி முறையில் நாம் கற்றுக் கொடுத்த அளவில்தான் இருக்கும் என்பதே பதில்!)
எம்பிபிஎஸ் படித்தால் மருத்துவர் ஆகலாம்!
பிஈ படித்தால் பொறியாளர் ஆகலாம்!
ஐஏஎஸ் படித்தால் ஆட்சியர் ஆகலாம்!
ஆனால், என்ன படித்தால் மனிதனாகலாம்?
என்பது யாரோ எழுதி எங்கோ படித்ததுத் துடித்த வரிகள்! எழுதியவர்க்கு என் வணக்கம். தாய்மொழியில் பண்பாட்டைப் படித்தால் மனிதனாகலாம்!

எட்டாம் வகுப்புப் படித்த ஜெயகாந்தனும், பதினொன்றாம் வகுப்பே படித்த புதுமைப் பித்தனும், கந்தர்வனும்,  மூன்றாம் வகுப்புப் படித்த மேலாண்மை பொன்னுச்சாமியும், படைத்த வாழ்வியல் இலக்கியங்களைப் படித்து, பலநூறுபேர் முனைவர் பட்டம் பெறுகிறார்கள் எனில், இந்தப் படைப்பாளிகள் மனிதர்களைப் படித்தவர்கள் என்பதுதானே? இது தாய்மொழியின் கொடை!
எந்திரங்களைப் படிக்க எந்தமொழியாலும் முடியலாம்
மனிதர்களைப் படிப்பது தாய்மொழியில் மட்டும்தானே முடியும்? தாய்மொழி அறிவை வளர்ப்பது அரசுப் பள்ளிக்கூடங்களை அன்றி வேறு என்ன? அரசே பள்ளி இறுதியில் தாய்மொழி வேண்டாம் என்று முடிவுசெய்து விட்டால் தமிழ்நாடு தறிதலைகளின் கூடாரமாக மாறுவதை யாரால் தடுக்க முடியும்?

நெடுஞ்சாலை மைல்கற்களில் தமிழை அகற்ற முயற்சி நடந்தது. இப்போதும் மாநிலம் முழுவதும் உள்ள வங்கிகளில், தொலைத்தொடர்பு, தொடர்வண்டி, மற்றும் அனைத்து மத்திய அரசு நிறுவனங்களில் எதிலும் தமிழ் இல்லை! அஞ்சல் பணவிடைத்தாளில் கொஞ்சநாள் இருந்தது! அதுவும் இப்ப ஸ்டாக் இல்லையாம்! வங்கி உடனடிப் பணமெடுப்பு நிலையங்களில் (.டி.எம்.) பெயருக்குத் தமிழ் இருக்கும், பெரும்பாலும் அதில் தமிழை அழுத்தினால் இந்திதான் சிரிக்கிறது! கேட்டால் அதற்கும் சிரிப்புத்தான் பதிலாக வருகிறது!

தமிழக அரசின் வருவாய்த்துறை, சமூநலத்துறை, கல்விக்கூடம் உள்ளிட்ட பெரும்பாலான அரசு நிறுவனங்களின் விண்ணப்பங்களே தமிழில் இல்லை!

நிலைமை இப்படி இருக்க, “ஏற்கெனவே வாய் கோணலாம், இதுல கொட்டாவி விட்டா எப்படி இருக்கும்?” என்பதுபோல, ஓரளவு பண்பாட்டு நிலையில் தமிழைக் காத்துவரும் கிராமத்துப் பிள்ளைகள் கூட இனி உயர்கல்வியில் தமிழ் இல்லை என்பதால் ஆங்கிலத்தையே தேர்வு செய்வதைத் தவிர்க்க முடியாதுதானே? ஆக, உழைக்கும் வர்க்கப்பிள்ளைகள் தமிழிலேயே படித்து உயரக் கொஞ்சநஞ்ச முயற்சிக்கும் பெருந்தடையாக இந்தப் பரிந்துரை வந்து சேரும் என்பது புரிகிறதா? அப்பத்தைப் பங்கிடவந்த குரங்கு கடைசியாக முழு அப்பத்தையும் முழுங்கிய கதை நடக்கிறதா?

கல்வியில்லாமல் பலநூறு தலைமுறைகள் கழிந்தன, மெக்காலேகல்வியைக் கொடுத்து சிந்தனையற்ற எழுத்தர்களை உருவாக்கி அடுத்த தலைமுறைகள் கிழிந்தன. சுதந்திரம் வந்து, 60ஆண்டுகள் கழித்து வந்த சமச்சீர்க் கல்வி கூட சமத்துவ சமுதாயத்தைக் கொண்டுவந்து விடாமல் பார்த்துக் கொண்டார்கள், ஆங்கிலக் கல்வி வணிகர்கள்! மிக சாமர்த்தியமாகக் காய்நகர்த்தி, மாநிலக் கல்வியிலிருந்து, மெட்ரிக்குலேஷன் போய், அதனிலும் அதிகப் பணம் காய்க்கும்  மத்திய அரசின் கல்வி முறைக்கு (சிபிஎஸ்சி) மாறினார்கள். இதற்கு மாநில அரசே மறைமுக உதவி! நன்றாகப் படிக்கும் அரசுப் பள்ளி மாணவர்களை மாநில அரசே மெட்ரிக் பள்ளியில் சேர்ந்து படிக்கப் பணம் கட்டும் என்பது, ஒரே கல்லில் இரண்டு மாங்காய் தானே? நன்றாகப் படிக்கும் மாணவரை அரசுப்பள்ளியிலிருந்து விரட்டி, அவன்படிக்க மெட்ரிக் பள்ளிக்கு நிதிதருவது வேறென்ன? தாய்மொழித் தமிழ், வெளியில் நின்று அழுகிறதே!

இப்படி, தமிழக அரசின் மொழி, கல்விக் கொள்கையே வருமானத்தை மையப் படுத்தியிருப்பதால், மேல்நிலைக் கல்வியில் மொழிப்பாடமாக ஆங்கிலம் மட்டும் இருந்தால் போதும் என்று, தமிழை அகற்ற அரசு முடிவெடுத்தால் வியப்படைய வேண்டியதில்லை! அதனால் இது தமிழர்கள் கவனமெடுத்துச் செயல்பட வேண்டிய நேரம் என்பதைத்தான் வலியுறுத்தி வேண்டுகிறேன்.

ஏற்கெனவே உயர்கல்வியிலிருந்து தமிழ் அகற்றப்பட்டு விட்டது! பொறியியல் மருத்துவம் போன்ற அனைத்துத் தொழில்சார்ந்த உயர் கல்வியிலிருந்தும் தமிழ் ஏற்கெனவே விரட்டப்பட்டுவிட்டது! தமிழில் பொறியியல் படிப்பவர்கள் தஞ்சைப் பெரிய கோவிலைப் பார்ப்பது கிடையாது! அது கட்டப்பட்டு சரியாக ஆயிரம் ஆண்டு முடிந்துள்ளது. அது கட்டப்பட்டபோது நம்நாட்டில் ஆங்கிலம் என்னும் மொழியே வரவில்லை! பெரிய கோவிலை பக்தியாக மட்டுமே பார்ப்பவர்களை நான் கேட்க விரும்புவதுசுற்று வட்டாரத்தில் ஐம்பது கிலோ மீட்டர் தொலைவிற்கு மலையே இல்லாத தஞ்சையில் கட்டப்பட்ட பெரிய கோவிலில் கட்டுமானப் பொறியியல் இல்லையா? 800மீட்டருக்கும் அதிகஉயரம் கொண்ட அந்தக் கோவிலில் எந்திரப் பொறியியல் இல்லையா? கல்லணை கட்டிய தமிழ்நுட்பம் பொறியியலில் சேராதா?
கணினிப் பொறியியல் படிக்கும் தமிழ்பேசும் மாணவர்களுக்கு தமிழில் மின்னஞ்சல் இருப்பதாவது தெரியுமா? கணினித் தமிழ் வளர்ச்சிக்கும் உயர்கல்விக்கும் தொடர்பே இல்லையே ஏன்? இதுபற்றி அவர்கள் படிக்கும் பொறியியலில் ஒரு வகுப்பாவது பாடநூலாவது உண்டா? ஏன்? தமிழ்நாட்டில் கணினிப்பொறியியல் படிக்கும் தமிழ்மாணவன், மாணவி தமிழில் கணினிச் செயற்பாடு கற்றுக்கொண்டால் கணினியும் வளரும், தமிழும் தழைக்குமே?

இதுபோல மருத்துவம், மற்றும் பிற உயர்கல்விப் பிரிவுகளில் படிக்கும் தமிழ் மாணவர்களின் துறைசார் தமிழறிவு பற்றிப் பல கேள்விகள் உள்ளன. இவர் அனைவருமா வெளிநாடு போகப் போகிறார்கள்? பத்து விழுக்காட்டினர் போனாலும் எஞ்சியுள்ள 90விழுக்காட்டினர் தமிழ்நாட்டில் பணியாற்ற நினைத்தாலும் அவர்களின் தொழில்சார்ந்த தமிழ்ப் பயன்பாடே இல்லையா? ஆனால் இவர்களுக்குப் பள்ளிக்கல்வியோடு தமிழ் முடிந்து போகிறதே ஏன்? இதுவே கேள்வியென்றால், இப்போது அதற்கும் வந்ததே ஆபத்து!

மேனிலைப் பள்ளியிலிருந்து படிக்கும் மாணவர்கள் பயன்படுத்த பலலட்சம் மடிக்கணினி கொடுக்கும் தமிழக அரசு, கணினியில் தமிழ் பற்றி யோசிக்கமுடியாதா? மடிக்கணினியில் தமிழ்ப்பயன்பாடு பற்றி அறவே சொல்லாமல் அவர்களுக்குக் கணினி தருவது தமிழை ஒதுக்குவதாகாதா?

உயர்கல்வி எதிலுமே தமிழ் இல்லாமல் பார்த்துக்கொள்ளும் தமிழக அரசு இனி பள்ளியிலும் தமிழ் வேண்டியதில்லை என்று முடிவெடுக்கத்தானே செய்யும்? இதற்குதாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, மலையக மக்கள் படிக்கவே கூடாதுஎன்று வேதம் சொல்வதைக் கடை பிடிக்கும் இந்துவெறி ஆர்எஸ்எஸ்  பின்னணியில் இருந்துகொண்டு தமிழக அரசைத் தூண்டுகிறதோ என்னும் சந்தேகம் எழுவது சரிதானே?

அரசனை விஞ்சிய அரச விசுவாசம்” (மோர் லாயல் தேன் கிங்) என்கின்ற ஆங்கிலப் பழமொழிக்கு அடையாளமாகத் திகழும் இன்றைய தமிழக ஆட்சியாளர் தமிழுக்கு வரும் ஆபத்தை உணர்வார்கள் என்று நம்ப முடியாது! உணர மாட்டார்கள் என்பதை இன்றைய கல்விமுறையில் பார்த்துவிட்டோம்.

தமிழ்ப்பண்பாட்டுக்கு மாறான வேதக் கல்வியைப் பாராட்டித் தொடங்கும் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையின் முன்னுரையே வடமொழிப் பண்பாட்டை நாடுமுழுவதும் பரப்புவதை வெளிப்படையாகச் சொல்கிறது!

அதன் ஒரு பகுதியானநாடு முழுவதும் ஒரே வகையான கல்விஎன்பதுதான்நீட்தேர்வு என்பதை விளக்க வேண்டியதில்லை. நீட் தேர்வு, “காசிருந்தால் படி! இல்லையென்றால் குலத்தொழிலுக்குப் போ!” என்பதன் அடுத்த பதிப்பேதாய்மொழி வேண்டாம், ஆங்கிலம் படிஎன்பதாகும். இதை இப்படியே விட்டால், தலைமுறை தலைமுறையாக  உழைப்பவர்கள் உழைத்துக் கொண்டே அடிமைகளாக இருக்க வேண்டியதுதான்! அறிவியல் முன்னேற்றத்தைக் கைப்பற்றிக் கொண்டு, உழைக்கும் வர்க்கம் முன்னேறிவிடாமல் பார்த்துக் கொள்வோரின் கை மேலும் ஓங்கிவிடுமே!

ஒரு மொழியை ஒதுக்குவது, அவர்களது பண்பாட்டை ஒதுக்குவதுதானே? பண்பாட்டை ஒதுக்கினால், அரசியலில் வென்றுவிடலாம் என்பதுதானே அவர்களது திட்டம்? எனில், இது நமது அரசியல் பணி என்பதை உணரந்து அனைத்துத் தமிழரும், ஒன்று சேர்ந்து தமிழ்காக்க எழவேண்டிய தருணமிது!

தமிழ்ப் பெருமையைப் பேசிக்கொண்டே, தமிழை அழிக்கும்தமிழர்சிலரின் சூழ்ச்சியினை உணர்ந்து எழவேண்டிய நேரமிது! தமிழிலக்கிய வாதிகள் மட்டுமின்றி, தமிழார்வலர், சமத்துவ சமூக முன்னேற்றத்தில் அக்கறையுள்ள அனைத்துத தமிழர்களும் ஒன்றிணைந்து தமிழ்காக்க எழவேண்டிய தருணம்!

தமிழ்உயர்ந்தால் தமிழ்நாடு தானுயரும்
அறிவுயரும் அறமும் ஓங்கும்
இமயமலை போலுயர்ந்த ஒருநாடும்
தன்மொழியில் தாழ்ந்தால் வீழும்- பாரதிதாசன்
-------------------------------------------------------------------------------------------------
இதனை -- சுருக்கி -- வெளியிட்ட தீக்கதிர் நாளிதழ் (20-5-2019)   
ஆசிரியர் குழுவிற்கு எனது நன்றியும் வணக்கமும்


24 கருத்துகள்:

  1. நல்ல விரிவான கட்டுரை.பெருமளவில் விவாதிக்கப்படவேணடிய தலைப்பு.தமிழ் இருப்பதால்தானே தமிழ் நாடு,தமிழர் பண்பாடு,செம்மொழி தமிழ் என்றெல்லாம் பேசிகிறார்கள் என்றெண்ணும் சிலரின் சூழ்ச்சியைப் புரிந்துகொண்டால் உண்மை விளங்கும்....விவாதிப்போம் தோழர்,விதிகளுக்கு எடுத்து செல்வோம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாம் என்ன ஆயுதம் ஏந்த வேண்டும் என்பதை இன்றைய தேர்தல் முடிவுகள் நமக்கு உணர்த்தியிருக்கின்றன தோழரே! செய்வோம்

      நீக்கு
  2. // தாய்மொழியில் பண்பாட்டைப் படித்தால் மனிதனாகலாம்... // இது ஒன்றே தேவை...

    தீக்கதிர் நாளிதழில் வந்தமைக்கு வாழ்த்துகள் ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தீக்கதிரில் வந்தது தவிரவும் மற்றொரு பகுதியைச் சேர்த்தே வெளியிட்டிருக்கிறேன். நுட்பமாய்ப் பார்த்தால் தெரியும் நண்பரே

      நீக்கு
  3. உரிய நேரத்தில் உணர்வோட்டத்துடன் எழுந்திருக்கிற எச்சரிக்கை - உங்களுடைய கட்டுரை. நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது வெறும் படிப்பதற்கான கட்டுரையல்ல தோழரே!
      சேர்ந்து செயல்பட்டு வெல்வதற்கான முன்னுரை! கைகொடுங்கள்!

      நீக்கு
  4. இது போன்ற கருத்தாய்வுகள் தமிழை வாழவைக்கும் ஐயா ... வாழ்த்துகள்
    நீங்கள் எடுத்துள்ள இந்த பெருமுயற்சிக்கு என்றென்றும் துணை நிற்போம். வருமானத்திற்கு மற்ற பாடங்கள் வாழ்க்கைக்கே தாய்மொழிப்பாடம் என்பதை விளக்கியுள்ள விதம் அருமை.

    பதிலளிநீக்கு
  5. மிகவும் அவசியமான கட்டுரை தோழர். மெல்ல செத்து கொண்டிருக்கும் தமிழ் காக்க தமிழர் ஆர்வலர்கள் , தமிழ் அறிஞர்கள் ஒன்றாக கரம் இணைந்து செயல்பட வேண்டிய தருணம். நாம் நமக்குள் பேசி மனநொந்துக் கொள்வதை விடுத்து செயல்பட வேண்டிய காலம். இந்த கட்டுரையை தமிழர் அனைவரின் கவனத்திற்கும் எடுத்துச் செல்வோம். நன்றி தோழர்

    பதிலளிநீக்கு
  6. தமிழ்நாட்டுக் கல்வி முறை பற்றிய தங்கள் கட்டுரை சிறப்பாக இருக்கிறது.
    "அறிவினால் சிருஷ்டி செய்த அதிகார பிரயோகத்தின்
    நெறியினை உணரா மாந்தர் நிர்வாகம் செய்யும்போது
    முறிவில்லா முறை பழக்கி முன் விதி நினைந்து மக்கள்
    கறியில்லா உணவைக்கொள்ளும் கருத்தொக்க வாழ்கின்றாரே"
    வேதாத்ரி மகரிஷி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 1938 மொழிப்போரில் நாத்திகரான பெரியாரும், ஆத்திகரான மறைமலையடிகளும் இணைந்தே தமிழைக் காத்துநின்றனர்.
      80ஆண்டுகள் கழித்து வரலாறு திரும்புகிறது நண்பரே!

      நீக்கு
  7. அரசுக்கல்வியகங்களில் தமிழிலேயே கல்வி பயின்று அமெரிக்க மண்ணிலேயே கோலோச்சிக்கொண்டுள்ளோம். தமிழும் இம்மண் சிறார்க்கு புகட்டிக்கொண்டள்ளோம் தமிழ்ப்பண்பாட்டு வளர்ச்சியுடன். அயல் மண்ணில் இருந்திடுனும் அயலானுக்கு அடிமையாகாது. குடியரசு எனக்கூறி எண்ணிக்கை ஒன்றை மட்டுமே குறிப்பிட்டு கால் துாசிகளுக்கும் அடிமையாகிட துடிக்கும் தமிழ் நாட்டு்த்தமிழர்க்கு கயமை ஒன்றையே கருத்தாகக்கொண்ட அரசு துணையாகிடுமா? தமிழ்மக்கள் எழுச்சி ஒன்றுதான் வழி! தமிழைக்காக்க, தமிழரைக்காக்க

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எழுதுவது அல்ல எழுத்து, எழுப்புவதே எழுத்து என்பார் எங்கள் தோழர் பேராசிரியர் அருணன். சரிதானே?

      நீக்கு
  8. என்னவோ நம்ம பிள்ளைக எல்லாம் இங்க்கிலி பீசுல பிச்சு உதறதினால அமெரிக்கக்காரனும் ஐரோப்பியனும் வேலை கொடுக்கறதா ஒரு பொய்யான நம்பிக்கை பெற்றோர்களிடம் இருக்கிறது. ஆனால் தலை சிறந்த தொழில் நுட்பமும் கடின உழைப்பும் மட்டும்தான் காரணமாக இருக்கிறது. இதில் தொழில் நுட்பம் என்பது மொழி சார்ந்ததல்ல. எவனொருவன் தாய்மொழியில் கற்கிறானோ அவனே எந்திரத்தையும் கையாளுவதில் தனித்துவமிக்கவனாக இருக்க முடியும். இனி இதை நாம் வெளி நாட்டில் வாழும் நம் தலைமுறை குறிப்பாக கூகுளில் சுந்தர் பிச்சை போன்றவர்களைக் கொண்டு ஒரு பரப்புரை இயக்கமாக எடுத்துச் செல்ல வேண்டியது இருக்கிறது. பெரிய அமைப்பு சார்ந்து செயல்படும் உங்களைப் போன்றவர்கள் ஏன் இதை ஒரு புராஜெக்ட் லெவலுக்காவது செய்யக் கூடாது? உங்களால் முடியும் நா. மு. வாழ்த்துகளுடன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எவனொருவன் தாய்மொழியில் கற்கிறானோ அவனே எந்திரத்தையும் கையாளுவதில் தனித்துவமிக்கவனாக இருக்க முடியும். சரியான தொடர். கூகுள் சுந்தர் மின்னஞ்சல் கிடைக்குமா?

      நீக்கு
  9. தாய்மொழியின் அவசியத்தை இதைவிடத் தெளிவாக யாரால் சொல்லிட முடியும்..? இந்நிலை வராமல் தடுக்க வேண்டியது நம் அனைவரின் கடமையாகும். எல்லோரும் சேர்ந்தே எழுவோம். நம் மொழி காப்போம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கருமலையாரே! உங்கள் சுயவிவரம் ஒளிந்திருக்கிறதே! ஏனென்று பாருங்கள். தங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  10. உண்மை தான் ஆங்கிலத்தின் அவசியம் போல் தமிழ்மொழியின் அவசியமும் தமிழனுக்குத் தெரிய வேண்டும். தமிழை ஒதுக்கி விடுவது மடத்தனம் என்பதை இக் கட்டுரை புரிய வைக்கும்

    பதிலளிநீக்கு
  11. விரிவான தெளிவான கட்டுரை அண்ணா. அனைவரும் படித்து அறிய வேண்டும். இப்பொழுதே சில பள்ளிகளில், மொழிஇல்லாமல் ஐந்து பாடங்கள் தான். என் தோழியின் மகள் எதையோ மிஸ் பண்ற மாதிரி இருக்கு ஆன்ட்டி என்றாள். தமிழை, உணர்வை, வேரை தொலைக்கிறார்கள் குழந்தைகள் என்பது வேதனையாக இருக்கிறது. பெற்றோரும் கண்டு கொள்ளாமல் பிள்ளைகளின் கல்விச்சுமை குறைவதாக நினைக்கிறார்கள்..சிலர் நாமொன்றும் செய்யமுடியாது என்கிறார்கள். இவற்றையெல்லாம் கேட்கும்பொழுது எழும் மனவருத்தத்தை வார்த்தையில் சொல்லமுடியாது அண்ணா. நீங்களும் இன்னும் சிலரும் பேசியும், எழுதியும் போராடுகிறீர்கள்..எத்தனை பேருக்குச் சேர்கிறது என்று மனம் சோர்வடைவது உண்மை..இருந்தாலும் போராடுவோம்..வெற்றி காண்போம் என்ற நம்பிக்கையில். நன்றிகள் அண்ணா.
    ஆங்கிலம் மட்டுமே பார்த்து பணி கிடைப்பதில்லை..ஆங்கிலம் நன்றாக அறியாத பலர் நல்ல பணிகளில் இருக்கிறார்கள்..அது குறைவும் இல்லை, அவமானமும் இல்லை. தாய்மொழியை அறியாவிட்டால் தான் அவமானம்!

    பதிலளிநீக்கு
  12. தொழில்நுட்பம் போதும் மொழி நுட்பம் தேவையில்லை என்பாரின் மதிநுட்பத்தை என்னென்பது?

    சிந்தனையைத் தூண்டும் கட்டுரை ஐயா

    பதிலளிநீக்கு