பாடப்பகுதியைத் தாண்டிப் படிப்பதே பொதுஅறிவு!கவிஞர் நா.முத்துநிலவன் பேச்சு

புதுக்கோட்டை- மே,5 கைக்குறிச்சி ஸ்ரீபாரதி கல்வியியல் கல்லூரியின் 14ஆவது ஆண்டுவிழாவில் சிறப்புரையாற்றிய  கவிஞர் நா.முத்துநிலவன், “பாடப்பகுதிப் புத்தகங்களைத் தாண்டியும் படிப்பதே பொதுஅறிவு என்று பேசினார்

ஆண்டுவிழா நிகழ்ச்சிகளுக்கு, கல்லூரித் தலைவர் குரு.தனசேகரன் தலைமையேற்றார். கல்லூரிச் செயலர் கேஆர் குணசேகரன், அறங்காவலர்கள் ஏ.கிருஷ்ணமூர்த்தி, கே.ரெங்கசாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். கல்வியியல் கல்லூரி முதல்வர் முனைவர் சுப.தாரகேஸ்வரி ஆண்டறிக்கை வாசித்தார். மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன.


ஆண்டுவிழாப் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ-ஆசிரியர்களுக்கும் கலைநிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட மாணவியர்க்கும் நூல் பரிசளித்த கவிஞர் நா.முத்துநிலவன் மேலும் பேசியதாவது-

அன்றாடச் செய்தித்தாள்களைப் படிப்பவர்தான் உயிருடன் இருக்கமுடியும். அதிலும் ஆசிரியர்கள் தம் துறைசார்ந்த நூல்களையும் தாண்டி, தினசரியும் செய்தித்தாள்களைப் படிப்பதோடு, மாணவர்க்குத் தேவையான அறிவு வளர்ச்சிக்கான நூல்களையும் படிப்பது அவசியம்.

பள்ளி ஆசிரியர்களின் அடிப்படைத் தகுதி அன்புதான். அதன்பிறகே ஓர் ஆசிரியரின் அறிவு பயன்படும். ஆசிரியரைப் பிடித்துப் போனால் அந்த ஆசிரியர் நடத்தும் பாடமும் மாணவர்க்குப் பிடிக்கும், ஒருவேளை அந்த ஆசிரியரைப் பிடிக்காமல் போனால், அவர்நடத்தும் பாடமும் பிடிக்காமல் போய்விடுவதுதான் மாணவர் உளவியல். எனவே, ஆசிரியர்கள் முதலில் மாணவர்களுக்குப் பிடித்த ஆசிரியராக வெற்றிபெற வேண்டும். அதன்பின்னர் அந்த மாணவர்களுக்கான அறிவுக்கு ஆசிரியர்கள் பணியாற்றுவது எளிது.

நண்பர்களைத் தேர்வு செய்வதிலும், செல்பேசி, கணினி முதலான சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதிலுமே ஒருவரின் வாழ்க்கை மேம்படுவதும் சீரழிவதும் தீர்மானிக்ப்படுகிறது. எந்தப் பழக்கமும் அருகிலிருப்போரிடம் இருந்தே வருகிறது. அம்மா, அப்பா, ஆசிரியர் யாரும் தீய பழக்கங்களைக் கற்றுத் தருவதில்லை. நண்பர்களால் மட்டுமே தீய பழக்கங்கள் தொற்று நோய்போலத் தொட்டுத் தொடரும். 

வரம் போலும் நண்பர்களைப் பெறுவது பெரும்பேறு. ஆனால், தீய நட்பானால் அதுவே சாபமாகிவிடும்.  எனவே மாணவர் நண்பர்களைத் தேர்ந்தெடுப்பதில் மிகுந்த எச்சரிக்கை தேவை. தேவையற்ற நட்பு, பொழுதுபோக்காக அறிமுகமாகி பொள்ளாச்சியில் நரகத்தில் தள்ளியதை நாமெல்லாம் எச்சரிக்கையாக உணர்ந்தால் நல்லது

எந்தப் படிப்பானாலும், கூடுதல் தகுதியோடு இருப்பவருக்கு நிச்சயமாக  வேலை கிடைத்துவிடும். சும்மா தேர்ச்சி மட்டும் பெற்றிருந்தால் அது கானல் நீராகவே போகும். அதிலும் ஆசிரியர்கள் தமக்குத் தொடர்பில்லை என்று எந்தத் துறையையும் விட்டுவிட முடியாது. 

குறிப்பாக இக்கால மாணவர்கள் கணினி அறிவுடன் இருக்கும்போது, ஆசிரியர்களுக்குக் கணினி அறிவு இன்றியமையாதது. கணினியை எந்த வயதிலும் கற்றுக் கொள்ளலாம். அதில் ஏராளமான நூலகங்கள் கொட்டிக்கிடக்கின்றன. தமிழில் கணினியைச் செயற்படுத்தத் தெரிந்துகொண்டால் உங்கள் விரல்நுனியில் உலகம் வரும்!

தொலைக்காட்சித் தொடர்களும் சமகால உலகமும் மாணவர்க்கு உதவாது. தாய் தந்தை ஆசிரியர்கள் எவ்வளவு தான் அக்கறை யெடுத்தாலும் தான் தன்மீது வைக்கும் தன்னம்பிக்கையும், தொடர்படிப்பு முயற்சியுமே நல்ல வேலையின் வழியாக நல்ல வாழ்க்கையைக் கொண்டுவந்து தரும்.

ஒரு நல்ல ஆசிரியர் நினைத்தால் எதிர்கால இந்தியா பற்றிய அக்கறையுள்ள ஒரு பெரும் இளைய பட்டாளத்தையே உருவாக்க முடியும். அதேநேரம் மற்ற சம்பளம் வாங்கும் வேலைதான் இதுவும் என்று நினைத்தால் எதிர்கால இந்தியா இருளில் மூழ்குவதை யாராலும் தடுக்க முடியாது.

ஆசிரியர்கள் கற்பிகக் கூடாது, உணர்த்த வேண்டும். வெறும் பாடங்களைச் சொல்ல ஆசிரியர்கள் தேவையில்லை. உரைநூல்களே போதும்! உரைநூல் மதிப்பெண் பெற வைத்துவிடும், வாழ்க்கைக்குத் தேவையான அறிவைத் தர ஒரு நல்ல ஆசிரியரால் மட்டுமே முடியும். அந்த ஆசிரியர்கள் விருதுகள், பாராட்டுகளை எதிர்பார்ப்பதில்லை. தமது மாணவரின் அன்புகலந்த பார்வை ஒன்றே ஆசிரியர்க்கான பாராட்டாகும். நீங்கள் அரசுதரும் விருதுக்கோ, மற்ற அமைப்புகள் தரும் பாராட்டுக்காகவோ பணியாற்றவேண்டியதில்லை, ஆனால் மாணவர்களின் கலங்கமற்ற அன்புக்காகவே பணியாற்றவேண்டும்.
இவ்வாறு கவிஞர் நா.முத்துநிலவன் உரையாற்றினார்.

மாணவியரின் நிகழ்ச்சிகளுக்குப் பிறகு நாட்டுப்பண்ணுடன் விழா இனிதே நிறைவுற்றது.

-------------------------வெளியீட்டுக்கு நன்றி --------------------------------------

                                   தினமணி - 05-05-2019 திருச்சிப் பதிப்பு  
மற்றும் நன்றி -
தீக்கதிர் - 05-05-2019 திருச்சிப் பதிப்பு
புதுகை வரலாறு -05-05-2019 புதுக்கோட்டைப் பதிப்பு
தினசக்தி - சென்னை, புதுக்கோட்டை, திருச்சிப் பதிப்பு
புகைப்படம்- செய்தியாளர் திரு ஜெயச்சந்திரன்.
-----------------------------------------------

6 கருத்துகள்:

 1. நட்பு குறித்தான கருத்துகளை ஏற்கிறேன் ஐயா.

  பதிலளிநீக்கு
 2. நல்ல உரை! இன்றைய மாணவர்களுக்குத் தேவையான கருத்துக்கள். இன்றைய மாணவர்களின் போக்கு மிகுந்த அதிர்ச்சியை ஊட்டுவதாகவே அமைகிறது. எவ்வளவு எச்சரிக்கையாக இருந்தாலும் எப்படியாவது கெட்டுப் போகிறார்கள். என்ன செய்வது எனத் தெரியவில்லை.

  அதே நேரம், தீய பழக்கங்கள் எங்கிருந்து வேண்டுமானாலும் வரலாம் இல்லையா ஐயா? பெற்றோரும் ஆசிரியரும் தீய பழக்கங்களைக் கற்றுத் தர மாட்டார்கள்; கூடா நட்பு மட்டுமே அதைக் கற்றுத் தரும் என்பது ஏற்புடையதாயில்லையே! அப்பா வெண்சுருட்டுப் (cigarette) பிடிப்பதைப் பார்த்து வளரும் குழந்தை தன் அப்பாவைப் பார்த்தே கெட்டுப் போகலாமே!

  எனினும் இது நல்ல பேச்சு! நன்றி ஐயா!

  பதிலளிநீக்கு
 3. பாடப் பகுதியைத் தாண்டிப் படிப்பதே பொதுஅறிவு! மட்டுமல்ல பலகோடி நன்மையும் உண்டு. சிறந்த உளநல வழிகாட்டலும் மதியுரையும்.
  பாராட்டுகள் ஐயா!

  பதிலளிநீக்கு