கவிஞர் வைரமுத்து அவர்களுக்கு...



அன்பினிய
கவிஞர் வைரமுத்து அவர்களுக்கு 
வணக்கம்.

“ஜென்மம் நிறைந்தது சென்றவர் வாழ்க” 
எனும் அற்புதவரிகளைக் கொண்ட தங்களின் பாடலை, 
இன்றொரு நண்பர் 
காண்செவிக்குழுவில் 
அனுப்பியிருந்ததைக் கண்டேன்.

ஆனால், காட்சி முழுவதும் சிவன்கோவில்களின் பின்னணியில் பற்றிப் படர்ந்து வருவதாக அமைந்திருந்தது..

அற்புத வரிகள்...
சுதா ரகுநாதன்(?)அவர்களின் இனியகுரலில்... 
ஆனாலும்....
மதம் கடந்து நின்றிருக்கவேண்டிய வரிகள் 
மனம்கடந்து சென்றவிதம் வருத்தம் தருவதாய் இருந்தது...

இதனை, மதச்சார்பற்ற கொள்கைகளைக் கொண்ட கவிஞர் வைரமுத்து விரும்ப மாட்டார் என்றே நம்புகிறேன்.

எனவே தான், இதனை உங்கள் பார்வைக்கு அனுப்புகிறேன்...

தங்கள் பணிகள் தொடர்க. 
நன்றி வணக்கம். 
அன்புடன்,
நா.முத்துநிலவன்,
புதுக்கோட்டை

காணொளி இணைப்பு -
நன்றி - யூட்யூப் 
(கவிஞர் வைரமுத்து அவர்களுக்கு அனுப்பப்பட்ட கடிதம்)

பாடல் வரிகள் -

நிம்மதி சூழ்க!

ஜென்மம் நிறைந்தது சென்றவர் வாழ்க 
சிந்தை கலங்கிட வந்தவர் வாழ்க
நீரில் மிதந்திடும் கண்களும் காய்க
நிம்மதி நிம்மதி இவ்விடம் சூழ்க!

ஜனனமும் பூமியில் புதியது இல்லை 
மரணத்தைப் போல் ஒரு பழையதும் இல்லை 
இரண்டுமில்லாவிடில் இயற்கையும் இல்லை
இயற்கையின் ஆணைதான் ஞானத்தின் எல்லை

பாசம் உலாவிய கண்களும் எங்கே? 
பாய்ந்து துழாவிய கைகளும் எங்கே?
தேசம் அளாவிய கால்களும் எங்கே?
தீ உண்டதென்றது சாம்பலும் இங்கே 

கண்ணில் தெரிந்தது காற்றுடன் போக
மண்ணில் பிறந்தது மண்ணுடல் சேர்க
எலும்பு சதை கொண்ட உருவங்கள் போக
எச்சங்களால் அந்த இன்னுயிர் வாழ்க

பிறப்பு இல்லாமலே நாளொன்று இல்லை
இறப்பு இல்லாமலும் நாளொன்று இல்லை
நேசத்தினால் வரும் நினைவுகள் தொல்லை
மறதியைப் போல் ஒரு மாமருந்தில்லை.

கடல் தொடும் ஆறுகள் கலங்குவதில்லை
தரை தொடும் தாரைகள் அழுவதும் இல்லை
நதி மழை போன்றதே விதியென்று கண்டும்
மதி கொண்ட மானுடர் மயங்குவதேன்ன!

மரணத்தினால் சில கோபங்கள் தீரும்
மரணத்தினால் சில சாபங்கள் தீரும்
வேதம் சொல்லாததை மரணங்கள் கூறும் 
விதை ஒன்று வீழ்ந்திட செடிவந்து சேரும்

பூமிக்கு நாம் ஒரு யாத்திரை வந்தோம்
யாத்திரை தீரும் முன் நித்திரை கொண்டோம்
நித்திரை போவது நியதி என்றாலும்
யாத்திரை என்பது தொடர்கதையாகும்

தென்றலின் பூங்கரம் தீண்டிடும் போதும்
சூரியக் கீற்றொளி தோன்றிடும் போதும்
மழலையின் தேன்மொழி செவியுறும் போதும்
மாண்டவர் எம்முடன் வாழ்ந்திட கூடும்

மாண்டவர் சுவாசங்கள் காற்றுடன் சேர்க!
தூயவர் கண்ணொளி சூரியன் சேர்க!
பூதங்கள் ஐந்திலும் பொன்னுடல் சேர்க!
போனவர் புண்ணியம் எம்முடன் சேர்க!

கவிஞர் வைரமுத்து.

8 கருத்துகள்:

  1. எதற்காகவும் தங்களின் கொள்கை வழித் தடங்களை மாற்றிக் கொள்பவர்களைச் சு(கொ)ட்டிக்காட்டுவதே பண்புடைமை.

    பதிலளிநீக்கு
  2. நிச்சயம் விரும்பமாட்டார் அய்யா ...

    பதிலளிநீக்கு
  3. சிறந்த பதிவு
    http://ypvn.myartsonline.com/

    பதிலளிநீக்கு
  4. ஆசிரியர் அவர்களே இதற்கும் கவிஞருக்கும் தொடர்பிருக்க வாய்ப்பில்லை. யூடியூப்பில் வலையேற்றம் செய்யும் படைப்பாளிகளின் தொழில்நுட்பமாக இருக்கலாம்.இந்த பாடல் வரிகள் மட்டும் உள்ள யூடியூப் இணைப்பு இதோ. https://www.youtube.com/watch?v=MG79HQDIDzM

    பதிலளிநீக்கு
  5. ஒரு செய்தி. கோவை மாவட்டத்திலுள்ள அனைத்து நவீன சிதை எரியூட்டு மையங்களிலும் சிதைக்கு எரியூட்டிய பின் இந்தப் பாடலை ஒலி பரப்புகிறார்கள். வந்திருந்த மக்களும் நின்று இதைக்கேட்டு முடித்த பின்பே வெளியேறுகிறார்கள். இந்து முறை மயானங்களாதலால் இந்தப் பாட்டு பொருத்தமாக இருக்கிறது.

    இந்தப் பாட்டை எந்த நோக்கோடு கவிஞர் புனைந்தாரென்பது தெரியவில்லை. மயானங்களில் ஒலிப்பதற்கு மட்டும் என்றால் பாட்டின் வரிகள் பொருத்தமே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முனைவர் அவர்களே, கோவையில் மட்டுமல்ல, இங்கும் (திருச்சி) மின் மயானங்களில் இந்த பாட்டை ஒலி பரப்புகிறார்கள்.பொருத்தமான, சிந்தனை வரிகள் மிக்க தத்துவப் பாடல்.

      நீக்கு
  6. மின் மயானங்கள் உருவாக்கப்பட்ட பொழுது அங்கு ஒலிப்பதற்காக அன்றைய முதல்வர் கலைஞர் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க கவிஞர் வைரமுத்து அவர்களால் இயற்றப்பட்டதுதான் இந்தப் பாடல். மத சார்பற்று எழுதபட்ட பாடல்தான் இது.யூ டியுபில் சிவன் கோவிலுடன் வெளியிடப்பட்டுள்ளது நிச்சயமாக கவிஞருக்கு தெரிந்திருக்காது.

    பதிலளிநீக்கு