அய்யா காமராசர் முதல்வராக இருந்தபோது, மருத்துவக் கல்லூரியில்
சேரவிரும்பிய சுமார் 100 மாணவர்களின் விண்ணப்பங்கள், முதல்வரின் தனிச்
சிபாரிசுக்கு வந்ததாம். 10சீட்டுகள், முதல்வரால் தேர்வு செய்யப்படும் சிறப்பு
அனுமதி இடமாகக் கருதி ஏழை மாணவர்க்கு வழங்கப்படுவது வழக்கம்.
பல்வேறு
வேலைகளுக்கிடையில் பத்தே நிமிடத்தில் அந்த 10சீட்டுக்குரிய விண்ணப்பங்களைத்
தேர்வுசெய்தாராம் காமராசர். இதுகண்ட ஊழியர்கள் “எப்படி இவ்வளவு வேகமாத் தேர்வு
செய்தீர்கள்?” என வியந்தார்களாம்.
“விண்ணப்பத்துல, அப்பா கையெழுத்துப் போடுற இடத்துல கைநாட்டு
வச்சிருந்த விண்ணப்பங்களாத் தேடி எடுக்கப் பத்துநிமிசம் போதும்ல ன்னேன்?!” என்று
காமராசர் பதில் சொன்னதாகச் சொல்வார்கள்!
அதாவது, “படிக்காத
பெற்றோர்களுடைய பிள்ளைகளின் படிப்புக்கே முன்னுரிமை தரவேண்டும்” என்று காமராசர்
நினைத்திருக்கிறார்!
இது
அப்போ!!!!
ஆனால்
இப்போ...?
தானடித்த மூப்பாக
மத்திய அரசில் நடப்பதென்ன?
“யாருடைய தந்தை,
லட்சம்-கோடிகளைக் கொட்டிக்கொடுக்கத் தயாராக இருக்கிறார்களோ அவர்கள் மட்டும்
விண்ணப்பித்தால் போதும்” என அறிவிக்கவில்லையே தவிர, மாநிலங்களின் கருத்தையும்
இதுபற்றிக் கேட்காமல், அப்படித்தான் சட்டம் பேசுகிறது மத்திய மோடி அரசு !
“நீட்” தேர்வு என்றால் என்ன?
நீட் (National Eligibility cum Entrance Test-NEET) தேர்வு என்பது, பொது மருத்துவம், பல்மருத்துவம், மற்றும் ஓமியோபதி மருத்துவப் படிப்பில் சேர்வதற்கு அகிலஇந்திய அளவில் நடைபெறும்மருத்துவக்கல்விக்கான நுழைவுத்தேர்வாகும். மத்திய இடைநிலைக் கல்வி வாரியம்நடத்தும் இத்தேர்வு இந்திய மருத்துவ நுழைவுத் தேர்விற்கு (All India Pre. Medical Test (AIPMT)) மாற்றாக அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. இந்த நுழைவுத் தேர்வானது அனைத்து அரசுக்கல்லூரி களுக்கும் தனியார் கல்லூரிகளுக்கும் பொருந்தும் என்று சொல்கிறார்கள்!
நீட் (National Eligibility cum Entrance Test-NEET) தேர்வு என்பது, பொது மருத்துவம், பல்மருத்துவம், மற்றும் ஓமியோபதி மருத்துவப் படிப்பில் சேர்வதற்கு அகிலஇந்திய அளவில் நடைபெறும்மருத்துவக்கல்விக்கான நுழைவுத்தேர்வாகும். மத்திய இடைநிலைக் கல்வி வாரியம்நடத்தும் இத்தேர்வு இந்திய மருத்துவ நுழைவுத் தேர்விற்கு (All India Pre. Medical Test (AIPMT)) மாற்றாக அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. இந்த நுழைவுத் தேர்வானது அனைத்து அரசுக்கல்லூரி களுக்கும் தனியார் கல்லூரிகளுக்கும் பொருந்தும் என்று சொல்கிறார்கள்!
ஜெயலலிதா முதல்வராக இருந்த போது நீட் தேர்விற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமருக்கு கடிதம் எழுதினார். இதுகுறித்து உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடுக்கப்பட்டது. ஜெயலலிதா
மறைந்த பின்னர், தமிழ்நாட்டுச் சட்டம ன்றத்தில்
01-02-2017அன்று அனைத்துக் கட்சிகளின் ஆதரவோடு, நீட் தேர்வி லிருந்து தமிழக
மாணவர்க்கு விலக்களிக்க வேண்டி ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மத்திய
அரசு ஒப்புதல் வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டது. இப்போது 95 நாட்களான
பிறகும் இதற்குரிய முடிவை மத்திய அரசோ பிரதமரோ இன்றுவரை பதிலேதும்
தரவில்லை. வரும் மே-7, இந்த அகில இந்திய நுழைவுத் தேர்வு நடக்க உள்ள சூழலில்
இந்தக் குழப்பத்திற்கு மத்திய அரசே முழுப்பொறுப்பேற்க வேண்டும்.
இதனால் இந்த
ஆண்டு மருத்துவக் கனவில் இருக்கும் தமிழ்நாட்டு மாணவர், மத்தியஅரசின் முடிவுப்படி
நீட் தேர்வு நடக்குமா அல்லது மாநில அரசு முடிவின்படி நுழைவுத் தேர்வு இல்லாமலே +2
மதிப்பெண் அடிப்படையில் மருத்துவப்படிப்பு கிடைக்குமா எனும் பெரும் குழப்பத்தில்
கிடக்கின்றனர்.
இதற்கிடையில்
இந்தி உள்ளிட்ட பத்து இந்திய மொழிகளில் தேர்வு நடக்கும் என மத்திய அரசு
அறிவித்ததால் விண்ணப்பித்த தமிழ்நாட்டு மாணவர்
பல்லாயிரவர், +2 தேர்வு முடிவை விட இந்த முடிவை எதிர்பார்த்துள்ளனர்.
நீதிமன்றம் நுழைவுத் தேர்வு வேண்டாம் என்றது ஏன்?
பொதுவாக, பன்னிரண்டாம் வகுப்பு அரசுத் தேர்வில் பெற்ற
மதிப்பெண் அடிப்படையில் உயர்கல்வி, தொழிற்கல்விக்கான வாய்ப்புத் தரப்படவேண்டும்.
இல்லையேல் அது அரசுத்தேர்வையே அலட்சியப் படுத்தியதாகிவிடும். மற்றும் நுழைவுத்
தேர்வை எழுதத் தனியாகப் பயிற்சிமையம் செல்ல, கிராமத்து மாணவர்க்கு வாய்ப்போ வசதியோ
இருக்காது. இது நகர்ப்புற வசதிபடைத்த மாணவர்க்கே வசதியாகும் என்பதுதான் சமூக
ஆர்வலர்களின் கருத்தாகும்.
கிராமங்களின் ஏழை மாணவர்களுக்கும், கிராமம் மற்றும்
நகரங்களில் உள்ள பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, மலைவாழ் மாணவர் மற்றும் சிறுபான்மையோர்க்கும் உயர் கல்வி தருவதுதானே
நல்ல அரசாக இருக்க முடியும்? இவர்களைப் புறக்கணித்துவிட்டு நகரில்
வசதியானவர் மட்டும் வளர்வது சமத்துவமற்ற சமுதாய வளர்ச்சியாக அல்லவா இருக்கும்?
2004-2005இல்
+2 தேர்வெழுதியவர்கள் சுமார் 5லட்சம் மாணவர். இவர்களில் கிராமப்புற மாணவர்கள்
சுமார் 2லட்சம்பேர். அந்த ஆண்டிற்குரிய மருத்துவ இடம் 1125. இதில்
–நுழைவுத்தேர்வில் தேர்வு பெற்ற கிராமப்புற மாணவர்கள் வெறும் 227பேர்கள் மட்டுமே.
அதாவது சுமார் 5% கிராமப்புற மாணவர்க்கே மருத்துவப் படிப்பு கிடைத்தது. இது
சமத்துவ சமுதாயத்திற்கு இழைக்கப்பட்ட பெரும் அநீதி. முக்கியமான இந்தக் கருத்தை
முன்வைத்து, அன்றைய திமுக தலைமையிலான தமிழக அரசு வாதிட, நீதிமன்றமும் இதனை ஏற்று
“இனி மருத்துவப் படிப்புக்கு நுழைவுத் தேர்வு கூடாது” என்று நல்ல தீர்ப்பளித்தது.
இப்போது நுழைவுத் தேர்வு மீண்டும் நுழைந்தது எப்படி?
அன்றைய மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் கபில்சிபலின்
கருத்தை ஏற்று, “நாடு முழுவதற்கும் ஒரே நுழைவுத் தேர்வு நடத்தலாம்” என்று எம்சிஐ
(MEDICAL COUNCIL OF INDIA) எனும் இந்திய மருத்துவக் குழு பரிந்துரைத்தது. இதன்படி
2010இல் இருந்த மத்திய காங்கிரஸ் அரசும் பொது நுழைவுத்தேர்வு நடத்தத்
திட்டமிட்டது. இதனை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில்115மனுக்குள் வந்தன.
மூன்றுநீதிபதிகள் கொண்ட அமர்வில் இருவர் நுழைவுத் தேர்வுக்கு எதிராக 18-07-2013இல்
தீர்ப்பளித்ததால் நுழைவுத் தேர்வு தொலைந்தது மூன்றாவது நீதிபதியான ஏ.ஆர்.தவே
மட்டும் நுழைவுத்தேர்வை ஆதரித்தார். எனினும் பெரும்பான்மை கருதி வழக்குத் தீர்ப்பு
நுழைவுத்தேர்வுக்கு எதிராகவந்தது.
(இதனால் 2014, 2015ஆம்ஆண்டுகளும் நுழைவுத் தேர்வு இல்லாமல்
போனது. தமிழகத்தின் 85%இடங்களுக்கு +2மதிப்பெண் அடிப்படையில் இடம்கிடைத்தது இதில் ஆயிரத்திற்கும்
மேற்பட்ட அருந்ததியர் இன, தாழ்த்தப்பட்ட மற்றும் மலைவாழ் ஏழை மாணவர்கள் மருத்துவக்
கல்வி படித்து வருகின்றனர்! இந்த நிலை இனி தொடராது என்றுதான் நீட் நுழைவுத் தேர்வு
வந்திருக்கிறது!)
மத்தியில் பாஜக அரசு அமைந்தவுடன், அது நுழைவுத் தேர்வுக்கு ஆதரவு நிலையெடுத்தது. நுழைவுத் தேர்வு
வேண்டாமென்ற தீர்ப்புக்கு மறுசீராய்வு மனுப்போட்டது. ஏற்கெனவே நுழைவுத் தேர்வுக்கு
ஆதரவாக இருந்த நீதிபதி ஏ.ஆர்.தவே தலைமையிலான நீதிபதிகள் குழு நுழைவுத்
தேர்வுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கியது. இதனைத் தொடர்ந்து “தேசிய நுழைவுத் தேர்வுச்
சட்டம்-2016 ஆகஸ்டு,2016இல் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. வந்தது வினை!
உலகம் முழுவதும் ஒரு மாதிரி, இந்தியா மட்டும் வேறுமாதிரியா?!
இவர்கள்
எடுத்ததற்கெல்லாம் உதாரணம் காட்டுகிற அமெரிக்காவில்கூட, நாடு முழுவதற்குமான
மருத்துவக் கல்வி கிடையாது! கலிஃபோர்னியா, டெக்ஸஸ், நியுயார்க், வாஷிங்டன் என்று
ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொரு கல்வி முறைதான் இருக்கிறது. இப்படி உலகம்
முழுவதும் அந்தந்த மாநில மொழி, அரசு முடிவுக்கேற்பவே மருத்துவக்கல்வி இருக்க,
இங்கு மட்டும் ஒரேதேர்வு என்பது இவர்கள் நோக்கம் “ஒற்றை இந்தியா” என்பதைத் தவிர
வேறென்ன?
அமெரிக்காவின்
பெயர் “அமெரிக்க ஐக்கிய நாடுகள்” என்பது உண்மையெனில், இந்திய அரசியல்சட்டம்
“இந்தியாவில் உள்ள பல்வேறு தேசிய இனங்களின் கூட்டாட்சி” என்பதும் உண்மை எனில்,
நாடு முழுவதற்கும் ஒரே தேர்வு என்பது எப்படிச் சரியாகும்? இதுஅரசியல் சட்டத்திற்கே
முரண்பாடல்லவா?
மாநிலப் பட்டியலில்
இருந்த கல்வி, மருத்துவம் இரண்டும் அவசரநிலைக் காலத்தில் சத்தமில்லாமல் பொதுப்
பட்டியலுக்கு மாற்றப்பட்டன. இப்போது மத்தியிலேயே வைத்துக் கொள்வது
சர்வாதிகாரமல்லவா?
அண்ணல்
அம்பேத்கர் வகுத்தளித்த அரசியல் சட்டம், இந்தியா முழுவதிலும் உள்ள வேறுபட்ட மொழி
பேசுவோர் ஒவ்வொருவருக்குமான உரிமைகளைச் சமஅளவில் வழங்குகிறது. இதைத்தான்
“வேற்றுமையில் ஒற்றுமை” என்று உலக நாடுகளெல்லாம் வியந்து போற்றுகின்றன.
“கூட்டாட்சித் தத்துவம் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கூறுகளில்
ஒன்று” என்பது உண்மையெனில், அனைத்து மாநிலங்களுக்குமான ஒரே முறையான தேர்வு என்பது
சரியல்லவே! அதிலும் கல்வி, மருத்துவம் இரண்டையும் மாநிலப் பட்டியலில் வைத்து
நிர்வகிப்பதே கடைக்கோடி ஏழைக்குமான உரிமையாகும்
சிபிஎஸ்சி மாணவர்களுக்கும் நீட் தேர்வால் அநீதியே!
மாநில
அரசுப் பள்ளிகளில் படிப்போர்க்கு மட்டும் இது அநீதியான தேர்வு என நினைக்காதீர்கள்!
சிபிஎஸ்சி மாணவர்க்கும் இது அநீதியான தேர்வேதான்! எப்படி எனில், மத்தியஅரசு
நடத்தும் சிபிஎஸ்சி படிப்புத்தான் உயர்ந்த படிப்பு என்று சொல்லிவிட்டு, அதற்குப்
பிறகும் எதற்கு இந்த நுழைவுத் தேர்வு? அந்த மதிப்பெண்ணை அப்படியே எடுத்துக் கொண்டு
மருத்துவக் கல்விக்குரிய இடங்களை வழங்கவேண்டியதுதானே? ஆக அவர்களுக்கும் இது
அநீதிதான்!
மாநில
அரசின் +2தேர்வு மதிப்பெண்களை அடிப்படையாக வைத்தாலே போதும் என்பது போல, சிபிஎஸ்சி
தேர்வாவது போதும் எனச் சொல்லலாமே? அந்தத் தரத்திற்கு மாநிலக் கல்விமுறையை
“உயர்த்த” அவகாசம் தரலாமே? அதுவும் இல்லை, இதுவும் இல்லை யென்று இந்தக் குறுக்குச்
சால் எதற்கு?
எப்படியோ
இந்தியப் பள்ளிகளில் படிக்கும் பலலட்சம் மாணவ-மாணவியரை மீண்டும் மீண்டும்
தேர்வெழுத வைத்துச் சோர்வடைய வைப்பது யாருக்காக? தனியார் பயிற்சி மையம், மற்றும்
மருத்துவக் கல்வியில் நுழையப்போகும் பன்னாட்டுக் குழும
–கார்ப்பரேட்-முதலாளிகளுக்கான முன்தயாரிப்புத் தானே? இதைத்தானே உலக நிதி நிறுவனம்
(WTO) ஏற்கெனவே சொல்லியிருக்கிறது?
“செலவு தந்தைக்கோர் ஆயிரம் சென்றது,
“செலவு தந்தைக்கோர் ஆயிரம் சென்றது,
தீது எனக்குப் பல்லாயிரம்
சேர்ந்தது
நலமோர் எள்துணையும்
கண்டிலேன் - இதை
நாற்பதினாயிரம்
கோவிலில் சொல்லுவேன்” என்று பாரதி ஆங்கிலக் கல்வியை
மட்டும் நினைத்துப் பாடியிருந்தாலும் இதுபோலும் வெற்றுத் தேர்வையும் நினைத்துத்தான் பாடியிருப்பானோ?
இப்போது,
ஐஐடி எனும் உயர்தொழிற்கல்வி வாய்ப்பைப் பெற்றுத் தருகிறோம் என்று சொல்லி, பல
மெட்ரிக் மற்றும் சிபிஎஸ்சி பள்ளிகளில் 8ஆம் வகுப்பிலே இருந்தே பணம் கறந்துகொண்டு
தனிப்பயிற்சி தருகிறார்களே அதுபோல, இந்த “அகில இந்திய மருத்துவ நுழைவுத்
தேர்வுக்கு நாங்களே பயிற்சி தரப் போகிறோம்” என்று, இனி சிபிஎஸ்சி பள்ளி
மாணவர்களின் பெற்றோர்களிடம் பணம் கறக்கும் அமுதசுரபியாக நுழைவுத் தேர்வும் ஆகப்
போவது நிச்சயம்! ஆக சிபிஎஸ்சி பள்ளி மாணவர்க்கும் இந்த நுழைவுத் தேர்வால்
அநீதிதானே?
நீட் தேர்வு நேர்மையாக நடக்கும் என்பதாவது உண்மையா?
“மாநிலக்
கல்வித்துறையால் நடத்தப்படும் தேர்வுகள் தரமாக இல்லை, நேர்மையாக இல்லை, நாங்கள்
தரமாகவும் நேர்மையாகவும் தேர்வு நடத்தி அதிலிருந்தே தரமான மருத்துவ மாணவரைத்
தேர்வு செய்யப் போகிறோம்” என்று சொல்லும் நுழைவுத் தேர்வு நேர்மையாளர்களுக்குச்
சில கேள்விகள் –
(1) மாநிலத் தேர்வுகள் அதிகபட்சமாக –அதுவும்
தமிழ்நாட்டில்- மிகச்சிறந்த கட்டுப்பாடுகளுடன் நடந்துவருவதை நாடே அறியும். இதற்கு
நேர்மாறாக மார்ச்-2007இல் நடந்த மருத்துவ முதுநிலைப் பட்டப்படிப்பிற்கான நுழைவுத்
தேர்வில் முறைகேடு நடந்ததே! 45மருத்துவர்கள் உட்பட 52பேர் மீது சிபிஐ வழக்கு
தொடர்ந்ததே இது எப்படி? (தினமணி-21-03-2007)
(2) மத்தியப் பிரதேச இதே பாஜக அரசின் “வியாபம்”
என்று “செல்லமாக” அழைக்கப்படும் அரசுப் பணியாளர் தேர்வில் –குறிப்பாக மருத்துவ
நுழைவுத் தேர்வில்- ஆள்மாற்றி அடித்த கூத்து நாடுமுழுவதும் சிரித்ததே பத்தாம்
வகுப்புக் கூடப் படிக்காத பல ஆயிரம்பேர் நாடுமுழுவதும் இப்போதும் மருத்துவராக
இருப்பதாக வரும் தகவலுக்குப் பதிலென்ன? பலகோடி புரண்ட இந்த நுழைவுத் தேர்வு
லட்சணத்தில் இந்த “அகில இந்திய நுழைவுத் தேர்வு“ நடக்காது என்பதற்கு உத்தரவாதம்
உண்டா?
(3) அண்மையில் மத்தியஅரசு நடத்திய அஞ்சல்துறைத்
தேர்வில் தமிழே தெரியாத பீகார் மாணவர்கள் இலக்கண மதிப்பெண்களை அள்ளிக் குவித்த
கதைகள் ஊடகங்களில் வந்தனவே! இந்தப் பின்னணி என்ன?
(4) நுழைவுத் தேர்வுக்குப் பரிந்துரை செய்த இந்திய
மருத்துவக் கவுன்சிலின் தலைவரே ஊழல் வழக்கில் மாற்றப்பட்டது உண்மையெனில், இவர்கள்
நடத்தும் தேர்வு நாடுமுழுவதும் இந்த லட்சணத்தில்தானே நடக்கும்?
கல்விக்கட்டணம் குறையுமா?
“குறையும்
என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை” என்று வாதிடுகிறார்கள் கல்வியாளர் பிரின்சு
கஜேந்திர பாபுவும் மருத்துவர் எழிலனும். அவர்களின் வாதம் சரியாகவே இருக்கிறது.
இப்போது தனியார் மருத்துவக் கல்லூரியில் ரசீது ஏதுமில்லாமல் சுமார் 1கோடி வரை ஒரு
சீட்டு விலை போகிறதெனில், இனி இது அரசு அனுமதியுடனே நடக்கப் போகிறது! அவ்வளவுதான்!
கல்விக்கட்டணத்தை
வரையறுக்க இந்தத் தேர்வு எந்த வகையிலும் உதவப்போவதில்லை. சட்டரீதியான நடவடிக்கை எடுப்பதற்கு
முடியாமல், வெறும் தேர்வு முறை மாற்றம் இந்தக் கட்டணக் கொள்ளையைத் தடுக்கும்
என்பதை எப்படி நம்புவது? மாறாக தனிப்பயிற்சி மையங்கள் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் எனும்
பெயரில் “கல்வி வள்ளல்”களின் தொந்தி பெருக்கவே இந்த மருத்துவ நுழைவுத்தேர்வு ஊட்டச்சத்தாக
மாறப்போகிறது!
மாநில உரிமை பறிப்பால் என்ன ஆகும்?
“கல்வி,
மருத்துவம் இரண்டையும் மாநிலப் பட்டியலிலேயே இடம்பெற வேண்டும்”என்று அரசியல்
சட்டம் வகுத்தளித்த அண்ணல் அம்பேத்கர் மிகவும் சிந்தித்தே இவற்றுக்கான வரையறைகளை
வகுத்தளித்தார். ஆனால், இன்று பத்தாம் வகுப்புப் படிப்புக்கே இரண்டு வினாத்தாளாம்!
அதில் மொழித்தாளை மாநிலஅரசு எடுக்கும், அறிவியல், கணிதத்திற்கான மற்றொரு
வினாத்தாளை மத்திய அரசே எடுத்துத் தரும் என அத்துமீறும் எதேச்சாதிகார மத்திய
அரசின் “புதிய தேசிய கல்விக் கொள்கை”யின் முன்னோட்டமே இந்த நீட் தேர்வு!
மாநில கல்வியைப்
பறிப்பது மாநில மக்களின் உரிமைப் பறிப்பல்லவா?!
“மாட்டுக்கறி
சாப்பிடாதே” என்பதற்கும், “மருத்துவ மாணவர் தேர்வில் மாநில அரசு தலையிடாதே”
என்பதற்கும் வேறுபாடுள்ளதா என்ன? இந்தியா முழுதும் இருந்து மாணவர்களை இவர்கள்
தேர்வு செய்து தருவார்களாம்! அவர்களுக்கு மாநில அரசு மாநில மக்களின்
வரிப்பணத்தில் கல்வி வழங்கவேண்டுமாம்! “நீ அரிசி கொண்டுவா! நா உமி கொண்டு வர்ரேன்.
ரெண்டுபேரும் எங்கவீட்டுத் திண்ணையில உக்காந்துஊதிஊதித்தின்போம்”என்பதுபுரியாதாஎன்ன?
பட்ட மேற்படிப்புக்கும் “நீட்” தேர்வால் வருகிறது ஆபத்து!
MD,
MS போலும் மருத்துவப் பட்ட மேற்படிப்பு இடங்களுக்கும் இந்த நீட் தேர்வு இந்த
ஆண்டுமுதல் நடக்கவிருக்கிறதாம்! இதன் விளைவு என்ன தெரியுமா? அகில இந்திய அளவில் முன்னணியில் உள்ள தமிழ்நாட்டில்
1250இடங்களில் கடந்த 4ஆண்டாக மாநில இடங்கள் 50% அகிலஇந்திய இடங்கள் 50% எனவும்
சேர்க்கை நடைபெற்று படித்துவருகிறார்கள். இந்த ஆண்டு முதல் அனைத்து இடங்களுக்கும்
பட்ட மேற்படிப்பு நீட் தேர்வு நடைபெறுமாம்! இதன் விளைவு?
கிராமப்புற
மருத்துவ மனைகளில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு மாநில அரசு 50% இடங்களை
ஒதுக்கீடு செய்து வந்தது. இதனால், கிராமப்புறங்களில் பணியாற்ற மருத்துவர்கள்
உற்சாகமாக முன்வந்தனர். கிராமப்புற ஏழைகளும் இதனால் அரசின் தரமான மருத்துவத்தைப்
பெற்று வந்தனர். இனி என்னாகும்?
இதோடு,
தமிழகத்தில் பட்ட மேற்படிப்புப் படிக்கும் மருத்துவர்கள் குறிப்பிட்ட ஆண்டுகள்
அரசுப்பணியாற்ற வேண்டும் என்ற உறுதி பெறப்பட்டிருந்தது. ஆனால் இனி அந்த உறுதி
இல்லாததால்,மக்கள் பணத்தில் படித்துவிட்டு, தனியார் மருத்துவ மனை வைப்பதோ,
வெளிநாடுகளுக்குப் பறப்பதோ இனி எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் நடக்கும். எய்ம்ஸ்
எனும் உயர் மருத்துவம் பெறும் மாணவர்களில் பாதிப்பேருக்குமேல் (56%)வெளிநாடு
பறந்துவிடுகிறார் என்பது இனி தமிழ் நாட்டிலும் நடக்கும். மக்கள் பணம் தனியாருக்கு
லாபம்! இந்த ஆபத்தை உணர்ந்துதான், தற்போது தமிழக
மருத்துவர்கள் “பிஜி-நீட்” தேர்வை எதிர்த்துப் போராடுகின்றனர் என்பதைப்
புரிந்துகொள்ள வேண்டும்.
“டெல்லி
எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரி, சண்டிகரில்
உள்ள பிஜிஐ மற்றும் இராணுவக் கல்லூரிகளுக்கு இந்த நீட் நுழைவுத் தேர்வு பொருந்தாது
எனில், நீட் என்பதே தகுதி குறைந்த தேர்வா?” எனும் தி.க.தலைவர் கி.வீரமணி அவர்களின்
கேள்விக்குப் பதில்என்ன?
பள்ளிக்கல்வி நோக்கத்தையே சிதைக்கும் நீட் தேர்வு!
“ஏற்கெனவே
வாய் கோணலாம், இதுல கொட்டாவி வேறயாம்” என்பது போல ஏற்கெனவே பள்ளிக்கல்வி பாடமுறை,
தேர்வுமுறைகளால் அமைதயற்ற நிலையே அனேகப் பள்ளிகளில் நிலவி வருகிறது. இனி நீட்
தேர்வால் மட்டும் மருத்துவக் கல்வி கிடைக்கும் எனில் பள்ளிகளில் மாணவர் அமைதி
எந்தக் கதிக்கு ஆளாகப் போகிறதோ? “மருத்துவக் கல்விக்குத் தேவையற்ற பள்ளிப்
பாடங்கள்” மாணவர் கவனத்தை ஈர்க்குமா என்ன? அந்த மாணவர்கள் அந்தப் பாட ஆசிரியர்களை
நம்புவார்களா? மதிப்பார்களா? என்ன ஆகப்போகிறதோ? நீட் தேர்வில் கவனம் செலுத்தினால்
போதுமெனில் இப்படித்தானே ஆகும்?
“நீட்” தேர்வால் யாருக்கு லாபம்? யாருக்கு நட்டம்?
கோடிகோடியாய் இலஞ்சம் பெற்று
தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு
அங்கீகாரத்தை வாரி வழங்கிய
இந்திய மருத்துவ கவுன்சிலின்
முன்னாள் தலைவர் கேத்தன் தேசாய்
|
“நீ சிபிஎஸ்சியில படிச்சாலும் சரி, மாநில அரசுப் பள்ளியில
படிச்சாலும் சரி எங்க பயிற்சிக்குத்தான் வரணும்” என்று சவால்விடப்போகும், தனியார்
பயிற்சி மையங்கள் எனும் பெயரில் நுழையப் போகும் கார்ப்பரேட் முதலாளி களுக்கு லாபம்.
அதோடு, இந்தியா முழுவ தற்கும் ஒரே நோட்ஸ் எனும் தனியாருக்கு லாபம்! இந்தியா
முழுவதும் பெரிய மால்களைப் போல வரப்போகும் பெரிய மருத்துவக் கல்லூரிகளையும், மருத்துவ
மனைகளையும் திறக்கப் போகும் கார்ப்பரேட் பெருமுத லாளிகளுக்கு லாபம். கமிஷன் அரசியல்
வாதிகளுக்கு!
“சிபிஎஸ்சி மாணவர்கள் இரண்டு வருடம் படிப்பதை நாங்கள்
இரண்டே மாதத்தில் மெட்ரிக் மற்றும் அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்குத்
தரப்போகிறோம்” என்று அவர்கள் அள்ளி விட்டுக் கல்லாக் கட்டுவார்கள்!
பலபாடு
பட்டுப் பெற்ற இடஒதுக்கீடு நீடிக்க எந்த உத்தரவாதமும் நீட் தேர்வில் இல்லை!
இதுதான் கார்ப்பரேட்டுகளும் காவிகளும் சேர்ந்து செய்யும் சதியோ என்னும் சந்தேகம்
சமூக ஆர்வலர்களுக்குப் பலமாக எழுந்திருக்கிறது! ஏழைகளுக்கு மருத்துவக்
கல்வியே கிடைக்க வில்லை யெனில், கிராமப்புற ஏழைக்கு இனி மருத்துவமே கிடைக்கப்
போவதில்லை என்பதே நிஜம்!
கூலிவேலை
பார்க்கும் பெற்றோரின் நிலையை மீறி, தனது கடினஉழைப்பு மற்றும் அறிவால் மேலே
வரப்பார்க்கும் அரசுப் பள்ளி மாணவ-மாணவியர் இந்தப் பயிற்சி கிடைக்காமல், மருத்துவக்
கல்வியை மறந்துவிட வேண்டும். அல்லது, இந்தக் கொள்ளையில் சிக்கி அந்தக் குடும்பமே
சீரழியவேண்டும்.
முதல்தலைமுறைப்
பட்டதாரிகள், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மற்றும் மலைவாழ் மக்கள்
சிறுபான்மையினர் என சமூகத்தின் விளிம்புநிலை மக்கள் தம் பிள்ளைகளின் இடஒதுக்கீட்டோடு
வாழ்க்கையை இழந்துவிட வேண்டும். அல்லது, தந்தை பெரியாரும், அண்ணல் அம்பேத்காரும்,
முற்போக்கு இடது சாரித் தலைவர்களும் போராடிப் பெற்றுத்தந்த இடஒதுக்கீட்டை
நிலைநாட்ட மீண்டும் ஒரு பெரும் போருக்குத் தயாராக வேண்டும். அவ்வளவுதான்.
இனி என்னதான் செய்யலாம்?
ஏற்கெனவே
தமிழ்நாட்டில் உள்ள நடைமுறைப்படியே அதாவது +2தேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே
–நுழைவுத் தேர்வு இல்லாமலே- மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும். மருத்துவப்
பட்ட மேற்படிப்புப் படிக்க ஏற்கெனவே இருந்த (50-50) எனும் நடைமுறை தொடரவேண்டும்
இதற்கான தமிழக அரசின் சட்டமன்றத் தீர்மானத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் தருவதோடு,
இந்தியக் குடியரசுத் தலைவரும் ஒப்புதல் தரவேண்டும்.
இதனை
வலியுறுத்தி, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஆசிரியர் அமைப்புகள், அறிவியல் இயக்கம்,
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், பகுத்தறிவாளர் கழகம் உள்ளிட்ட
நாற்பது அமைப்புகள் ஒன்றிணைந்து, “கல்வி உரிமை பாதுகாப்புக் கூட்டமைப்பு” ஒன்றை
ஏற்படுத்தியிருக்கிறார்கள். இதன் ஒருங்கிணைப்பாளராக ஈரோடு பேரா.நா.மணி செயல்பட்டு
வருகிறார். ஆசிரியர் அமைப்புகளின் தலைவர்களோடு, நீதியரசர் து.அரிபரந்தாமன், மரு.ஜி.ஆர்.இரவீந்திரநாத்,
பிரின்சு கஜேந்திர பாபு, ச.சீ.இராசகோபாலன், ச.தமிழ்ச்செல்வன், உள்ளிட்ட
தமிழகத்தின் புகழ்வாய்ந்த கல்வியாளர்களும் சமூகச் செயற்பாட் டாளர்களும்
இவ்வியக்கத்தில் இணைந்துள்ளனர்.
இதன்
சார்பாக கடந்த 19-04-2017அன்று மாவட்டத் தலைநகரங்களில் முழக்கப் போராட்டம்
நடத்தப்பட்டது. இப்போது 05-05-2017அன்று மாநில அளவிலான கண்டனக் கூட்டத்திற்கு சென்னையில்
ஏற்பாடாகி வருகிறது.
இவற்றில்
பங்கேற்று, மாநில நலன் காக்கவும், தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட விளிம்புநிலை
மக்களின் உரிமையைக் காக்கவும், மறைமுகமாகக் கல்வியை வியாபாரமாக்கும் போக்கை
எதிர்த்து முறியடிக்கவும், போராட வேண்டும்.
இனி முடியுமா என்னும் சந்தேகம் வேண்டியதில்லை!
இந்திய அரசியல் சட்டத்தையே இடஒதுக்கீட்டுக்காக
முதன்முதலாகத் திருத்தியது தமிழ்நாட்டுப் பெரியாரின் போராட்டம். அது பழங்கதையல்ல
என்று காட்டும்படி, அறவழிப் போராட்டத்தால் அவசரச் சட்டத்தோடு நிரந்தரச்
சட்டத்தையும் ஓரிரு நாளுக்குள் கொண்டுவரச் செய்தனர் மெரினா இளைஞர் ஓரிரு வாரத்தின்
முன்.
மனித முன்னேற்றத்தின் அடிப்படைக் காரணியான கல்வியில்
மேல்தட்டு மற்றும் மேல்சாதி ஆதிக்கத்தை முறியடிக்க வேண்டும். வரலாறு நெடுகிலும்
தொடரும் ரத்தம் சிந்திய போரில் இன்றைய ஒவ்வோரடி முன்னேற்றமும் அடுத்த
தலைமுறைக்கானதாகும் என்பதைப் புரிந்து ஒவ்வொருவரும் நடக்க வேண்டும். தமிழ்நாடு
அரசும் முழு ஒத்துழைப்புத் தர வேண்டும். அவ்வளவே!
“சுடும்வரை நெருப்பு
சுற்றும் வரை பூமி
போராடும் வரை மனிதன்
நீ மனிதன்” - வைரமுத்து
-------------------------------------------------------------------------------------
-------------------------------------------------------------------------------------
- தரவுகளுக்கு நன்றி -
வினவு இணையம் & கூகுள் தேடுபொறி
மற்றும்
TNSF பேரா.நா.மணி தொகுத்து
பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ள,
“நீட் கூட்டாட்சிக்கும் சமூக நீதிக்கும்
எதிரானது ஏன்?”(48பக்கம்)
மானமிகு கி.வீரமணி எழுதி
திராவிடர்கழகம் வெளியிட்டுள்ள,
“நீட்” தேர்வு கூடாது ஏன்?”(48பக்கம்)
- கட்டுரையை வெளியிட்டமைக்கு நன்றி -
தீக்கதிர் நாளிதழ் http://epaper.theekkathir.org/ 04-05-2017
புதுகை வரலாறு நாளிதழ் 03-5-17 & 04-5-2017
----------------------------------------------
SIR.. i have personally witnessed worst medical college students who buy their seats..NEET may be implemented with some regulations
பதிலளிநீக்குஐயா! நீட் தேர்வுமுறையை நீள அகலத்தில் அக்கு வேறு ஆணி வேறாகக் கூறு போட்டுப் பிளந்து காட்டி விட்டீர்கள்! மிக மிக அருமை! இப்படி ஒரு பதிவுக்காக முதலில் என் நன்றி!
பதிலளிநீக்குஇத்தேர்வால் ஏற்படக்கூடிய படுகேடான பின்விளைவுகள் கொஞ்சநஞ்சமில்லை என்பதைப் பிட்டுப் பிட்டு வைத்து விட்டீர்கள். எல்லா வகைகளிலும் இது தீயதே என்பதை உரைக்கச் சொல்லியிருக்கிறீர்கள். இவற்றையெல்லாம் படிக்கும்பொழுது நாம் மீண்டும் மீண்டும் குறை கூறி வரும் கருணாநிதியும் ஜெயலலிதாவும் எவ்வளவுதான் தீயவர்களாக இருப்பினும் மக்கள் வளர்ச்சி சார்ந்த விதயங்களிலும் சமத்துவமாக நாட்டை நடத்திச் செல்லும் முறை போன்றவற்றிலும் எந்த அளவுக்கு மற்ற ஆட்சியாளர்களை விட முன்னோடிகளாக இருந்திருக்கிறார்கள் என்பது புரிகிறது.
நீட் தேர்வு பற்றி நான் ஒரு பதிவு எழுதலாமா என்று நினைத்தேன். ஆனால், இப்படி ஒரு பதிவுக்குப் பின் நான் எழுதுவது வீண். அதை விட, இந்தச் சிறப்பான கட்டுரையை முடிந்த அளவு எல்லாரிடமும் கொண்டு போய்ச் சேர்ப்பதே பயனுள்ளதாக இருக்கும். கண்டிப்பாக, நான் அதைச் செய்வேன். மீண்டும் மிகுந்த நன்றி!
கிராமப்புற மக்களைப் புறந்தள்ளிவிட்டு மேல்தட்டு மக்களுக்காக மடை திறந்துவிட்டு கல்வியை தனியார்க்குத் தாரை வார்க்கும் செயலே இந்த நீட் தேர்வுமுறை. மிக விரிவான அலசல். பாராட்டுகள்
பதிலளிநீக்குநீட் தேர்வினைப் பற்றிய சரியான புரிதல் ஐயா. அரசு இவற்றையெல்லாம் கவனத்தில் கொள்வது என்பது சிரமம்தான். பாதிக்கப்படுவது இளம் தலைமுறையே. தூங்குபவர்களை எழுப்பிவிடலாம். தூங்குவது போல நடிப்பவர்களை என்ன செய்யமுடியும்?
பதிலளிநீக்குநீட் தேர்வு முறை பற்றிய விரிவான விவரங்களின் தொகுப்பு ஐயா தங்களின் கட்டுரை.
பதிலளிநீக்குதேடப்படுபவர்
http://karanthaijayakumar.blogspot.com/2017/05/blog-post_4.html
வலைப் பூவினைக் காண அன்போடு தங்களை அழைக்கின்றேன் ஐயா
அன்புள்ள ஐயா..
பதிலளிநீக்குவணக்கம். நீட் தேர்வு குறித்து அது பேசப்படும் காலத்தில் இருந்து யோசித்துக்கொண்டேயிருக்கிறேன். இதனை எப்படித் தவிர்த்து நம் மாணவர்கள் மேலேறிவரப்போகிறார்கள் என்று. உங்களின் விரிவான கட்டுரை மிகமிக அக்கறையான கட்டுரை என்னை இன்னும் யோசிக்க வைக்கிறது. இதுகுறித்து இன்னும் விரிவாக உங்களுடன் பதிந்து பேசுகிறன்.
அருமை தம்பி!இதைவிட வேறுயாரும் விளக்கமாக எழுத இயலாது! இந்தியா ஒரே நாடு என்ற எண்ணம் உள்ளவரை தீராது இக்கேடு!
பதிலளிநீக்குI'm honestly impressed by the time and effort you put into this, Keep it up!
பதிலளிநீக்குhope the playlist help in creating more content.
https://www.youtube.com/playlist?list=PL316simlc7aJZGqNDj9taOB6Tj_ke0Bwe