நன்றி - தமிழ் இந்து நாளிதழ் - செவ்வாய் - திசை காட்டிப் பகுதி
தமிழ் இனிது கட்டுரைத் தொடர் - 10
மங்கலமும் மங்களமும்
“நிகழும் மங்களகரமான” என்று நமது அழைப்பிதழ்கள் வருவதைப் பார்க்கலாம். இசையரங்குகளில் நிகழ்ச்சி முடிந்ததை, “மங்களம் பாடியாச்சு” என்கிறார்கள். இதில் எது சரியான சொல்? மங்களம் எனும் சொல், நிறைவு எனும் பொருளில் புழங்குவதை அறியாமல், அழைப்பிதழில் போடுவது தவறு! “மங்கலம்” என்பது தான் சரியான வழக்கு! “மங்கலம் என்ப மனைமாட்சி” குறள்-எண்-60. இந்த “மங்கலம்”, இனாமாகத் தரப்பட்ட ஊர்ப் பெயர்களிலும் வருவதைப் பார்க்கலாம்.
ஆகிய, முதலிய வேறுபாடு என்ன?
ஒன்றில் தொடங்கி, தொடரும்போது, முதலிய எனும் சொல் வரும். “கல்வி முதலிய சமூகத் தேவைகளை நிறைவேற்றுவது அரசின் கடமை” சொல்ல வேண்டியவற்றை முழுவதுமாகச் சொல்லி முடிக்கும் இடத்தில் ஆகிய எனும் சொல் வரும் – “இயல் இசை நாடகம் ஆகிய முத்தமிழிலும் வல்லவர்” இவற்றை இடம் மாற்றிப் போட்டால், பொருள் மாறிப் போகும்!
துவக்கப்பள்ளியா? தொடக்கப்பள்ளியா?
இவ்விரண்டையும் –ஆசிரியர் சிலரும் கூட- பயன்படுத்துகிறார்கள்! தொடு- தொடங்கு- தொடர்- எனும் பொருளில் தொடக்கப் பள்ளி என்பதே சரி. துவக்கு என்றால் ஈழத்தமிழில் துப்பாக்கி என்று பொருள்!
முன்னால் – முன்னாள், மேனாள், முன்னை?
வரிசையில் முன்னால் இருக்கலாம். பதவியில் முன்னாள் அல்லது மேனாள் என்பதே பணிநிறைவு பெற்றவர் அல்லது அந்தப் பணியில் முன்னாள் இருந்தவர் என்று பொருள்தரும். முன்னை என்பது இலக்கிய மரபு.
ஒரு, ஓர்
எழுதும்போது, இந்த இடத்தில் “ஒரு போடுவதா? ஓர் போடுவதா? என்று பலருக்கும் சந்தேகம் வந்துவிடுகிறது. “அடுத்துவரும் சொல் உயிர்எழுத்தில் வந்தால், ஓர் எனும் எண்ணுப் பெயர் வரும். மற்ற எழுத்து வந்தால், ஒரு வரும்” என்பது இலக்கணம். ஓர் உயிர், ஒரு வாழ்க்கை என்பதுதான் சரி. ஆனால், வழக்கிலும், இலக்கியத்திலும் கூட இது மாறி வருவதுண்டு. “ஒரு ஊருல ஒரு நரியாம்” கதை நாம் கேட்டதுதான். “மேல் ஓர் நாள்” என்பது கலித்தொகை(51).
“ஒரு மனிதன் ஒரு வீடு, ஒரு உலகம்” ஜெயகாந்தன் எழுதிய புதினம். இவற்றில், ஒரு ஓர் இலக்கணம் இல்லை!
இதில் கவனம் பெறாத மற்றொன்றும் உண்டு! ஒன்று எனும் எண்ணுப் பெயரே ஒரு ஆகும். இஃது, அஃறிணைக்கு உரியது. இந்த அஃறிணை பற்றிய தெளிவில்லாமல் உயிர் எழுத்தை மட்டும் நினைத்து, “ஓர் அமைச்சர்” என்று எழுதுகிறார்கள் -என்னதான் தனிப்பட்ட பிரச்சினை இருந்தாலும்- அமைச்சரை அஃறிணையாக்குவது சரியல்லவே! அமைச்சர் ஒருவர் என்பதே சரி.
புதிய மரபாக ஒரு ஓர் இரண்டையும் ஒன்றேபோலப் பயன்படுத்தும் பழக்கம் தொடர்ந்து வழக்கமாகி விட்டது. எனினும் இப்படி ஒரு மரபு தமிழில் உள்ளது என்பதையாவது கவனத்தில் கொள்வது நல்லது!
தொடர்புடைய மற்றொன்று - அது இது எனும் சுட்டுச் சொற்களை அடுத்து வரும் சொற்களுக்கும் இதே மரபு உண்டு! –அது வந்தது, அஃது என்ன? ஆனால் தமிழில் கிட்டத்தட்ட ஆய்த எழுத்துப் பயன்பாடு அழிந்தே வருகிறது! வன்முறைக்கு எதிரானவராக இருந்தால் ஆயுதத்தை ஒழிக்கலாம், ஆய்த எழுத்தை ஒழித்து விடலாமோ?
-------------------------------------------------------
------------------------------------------------------------
நன்றி - தமிழ் இந்து நாளிதழ் - செவ்வாய் - திசை காட்டிப் பகுதி
தமிழ் இனிது கட்டுரைத் தொடர் - 09
தமிழ்இனிது-(9)
காவிரியா? காவேரியா?
சில சொற்களைப் பேசும்போது வராத குழப்பம், எழுதும்போது வரும்! “கோவிலா,
கோயிலா?” என்பது போல! ஏனெனில், பேச்சுமொழி வேறு, எழுத்துமொழி வேறு! உலகம் முழுவதும் இந்த வேறுபாடு உண்டு!
எழுதுவோர்
“நமக்கு இதுகூடத் தெரியலையே” என்று சுய ஆற்றாமை கொள்ள வேண்டியதில்லை!
“சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்” அல்லவா?
பேசப் பேச, எழுத எழுதத்தான்,
தவறு
சரியாகும்!
பள்ளி கல்லூரிப் படிப்பு முடிந்த பிறகு,
யாரும் பயிற்சி செய்வதில்லை, அதனால்தான் தமிழ்நாடு அரசு, அரசுப் பணிகளுக்குத் தமிழில் தேர்ச்சி பெறுவது அவசியம் என்று ஆணையிட்டிருக்கிறது.
இது மிகவும் நல்லது! பாடத்துக்காகவும் படிக்கலாம், வாழ்க்கைக்காகவும் தெரிந்து கொள்ளலாம்.
அங்கயற்கண்ணியும் மங்கையர்க்கரசியும்:அங்கயற்கண்ணி என்றால், அழகான கயல்(மீன்)போலும் கண்களை உடையவள் என்று பொருள். இதை அங்கயர்க் கண்ணி என்பது தவறு. அதேபோல,
மங்கையர்க்கு+அரசி எனும் பொருள் தரும்,
மங்கையர்க்கரசி என்பதே சரி, மங்கையற்கரசி என்பது தவறு.
அரசு கலை, அறிவியல் கல்லூரி என்பதே சரியானது. இதை அரசினர் கல்லூரி என்று எழுத வேண்டியதில்லை. தேனீர் எனில், தேன்+நீர் என்று தவாறகிவிடும். தேயிலை நீர் எனும் பொருளில் தேநீர் என்பதே சரி!
ஆற்காடா? ஆர்க்காடா?
ஆர் என்றால் ஆத்திமரம்,
சோழர்களின் அடையாளப் பூ
“போந்தை வேம்பே ஆர் என வரூஉம்
மாபெரும் தானையர் மலைந்த பூ” என்பது தொல்காப்பியம்
(புறத்திணை-5) ஆத்திமரங்கள் நிரம்பிய ஊர் “ஆர்க்காடு”
என்றிருக்கலாம். மாறாக,
“ஆலமரம் நிரம்பிய ஊர்” எனில் “ஆற்காடு”
என்பதும் சரிதான்!
(இதில், ஆத்திமரம் சிவனுக்குரியது,
ஆலமரம் திருமாலுக்குரியது!
ஊரை மதம் மாற்றலாமா?!)
கோயிலா? கோவிலா? – குடியிருந்த கோயில், கோவில், இதயக் கோயில், அண்ணன் ஒரு கோவில் என, இரண்டும் வரும் திரைப்படப் பெயர்கள் பல உள! ஆனால், “இ ஈ ஐ வழி, ய வரும், ஏனை உயிர்வழி, வ வரும்” எனும் “உடம்படு மெய்” (நன்னூல்-162) இலக்கணத்தின் படி, மணி+ஓசை= மணியோசை, கோ+இல்=கோவில் என்பதே சரி. உயிரும் மெய்யும் இணையுமே அன்றி உயிருடன் உயிர் இணையாது. அப்படி உயிர் எழுத்துடன் மற்றோர் உயிரெழுத்து சேரும்படி நேர்ந்தால் இவற்றை “உடன்படுத்த” வரும் எழுத்தை “உடம்படு மெய்” என்ற பழந்தமிழறிவு வியப்பளிக்கிறது!
காவிரியா? காவேரியா? காவிரி நதிநீர்ப் பங்கீட்டுப் பிரச்சினை ஒருபக்கம் இருக்க, சொற்களில் எது சரி என்றும் சிலர் பிரச்சினை செய்கிறார்கள்!
இரண்டு வழக்கும் இருப்பதாகச் சிலப்பதிகாரமே சொல்கிறது!
எடுத்த எடுப்பில் வரும் மங்கல வாழ்த்துப் பகுதி -அடி5இல்-
“காவிரி நாடன்”
என்று வரும்.
பிறகு, அதே சிலம்பின்
“கானல்வரி”யில், “நடந்தாய் வாழி காவேரி”என்று பலமுறை வரும்!
ஆக இருவழக்குகளுமே வரும், எந்தச்
சிக்கலும் இல்லை!
இதுபோலவே, பழைமை-பழமை, உடைமை-உடமை, புடைவை-புடவை என இரண்டும் (வழக்கு மொழிக்குரிய ஐகாரக்குறுக்கம் எழுத்தில் ஏறிவருவதும்) வழக்கில் வந்துவிட்டது! ஆக இலக்கணத்தை மாற்றுவதும் வழக்கில் உள்ளது. “மாறுவது மரபு, இல்லையேல் மாற்றுவது மரபு” தானே? அப்படி மாறிய சொற்களையும் அடுத்தடுத்துப் பார்க்கலாம்.
புரிந்து கொள்ள வேண்டிய அருமையான விளக்கம்
பதிலளிநீக்குஒவ்வொரு விளக்கமும் அருமை ஐயா...
பதிலளிநீக்குஆகிய பயன்படுத்தும் இடத்தில் போன்ற என்ற சொல்லை பயன்படுத்துவிதைப் பார்த்திருக்கிறேன். உதாரணமாக அவர், மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, போன்றோரின் நூல்களை வாசிக்கிறார்.
பதிலளிநீக்குஐயா வணக்கம். பயனுள்ள பதிவு. பிழைகளைச் சுட்டுவதன் நின்றுவிடாமல் அந்தச் சொற்களின் பொருளை விளக்கிய விதம் பதிவிற்கு இனிமை சேர்த்துவிடுகிறது. நன்றி.
பதிலளிநீக்குநல்ல விளக்கங்கள் ஐயா. நன்றி
பதிலளிநீக்கு