இணையத் தமிழ்ப் பயிற்சி முகாம் -தொகுப்பு



கணிணியும், அதைத் தொடர்ந்து வந்த இணையதளமும், அவற்றின் பல்வேறு பயன்பாடுகளும், அலைபேசி மற்றும் அதன் பயன்பாடுகளும் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியை பாய்ச்சல் வேகத்தில் கொண்டு சென்று கொண்டிருக்கின்றன.  இணையதளம் மற்றும் அலைபேசியின் செயல்பாடுகள் துவக்கத்தில் ஆங்கில மொழியிலேயே அமைந்தன.  அவற்றின் பயன் பெருகப் பெருக அதன் செயல்பாடுகள் இதர உலக மொழிகளிலும் அமைந்தன.     வணிகத்தின் தவிர்க்க முடியாத பெருக்கம் உலக மொழிகளை கணிணி, இணையதள, அலைபேசிப் பயன்பாடுகளில் கொண்டு வந்து சேர்த்துள்ளது.

எங்கும் தமிழ்; எதிலும் தமிழ் என்று சொல்வது எளிது.  நடைமுறையில் அது எவ்வளவு கடினமானது என்பதை உணர்ந்தவர்கள் சிலரே.  தமிழ் எழுத்துரு மற்றும் தமிழில் கணிணி விசைப் பலகை வருவதற்கே சில ஆண்டுகள் பிடித்தன.  இணையதளத் தகவல்கள் தமிழில் அமைய வேண்டும் எனப் பலரும் ஆசைப்பட்டனர்.  அரசு, பல்கலைக்கழகங்கள், தமிழ் மொழி நிறுவனங்கள், பன்னாட்டு தமிழார்வலர்களின் அயராத முயற்சியினால் இன்று இணையதளம் மற்றும் அலைபேசிச் செயல்பாடுகளில் தமிழ் மொழி பெரிதும் பயன்பாட்டுக்கு வரத் துவங்கியுள்ளது.  கூகுள் தேடுதல் இயந்திரம், விக்கிபீடியா போன்ற மிக முக்கிய இணையதள பயன்பாடுகள் தமிழ் மொழியிலும் மிளிரத் துவங்கியுள்ளன.

புதுக்கோட்டையில் துவக்கப்பட்ட கணிணித் தமிழ் சங்கம் இத்தகைய முயற்சியில் பெரிதும் ஈடுபட்டு வருகிறது.  தமிழ் மொழியில் இணையதள செயல்பாடுகள் அதிகரித்திட விழிப்புணர்வு மற்றும் பயிற்சி நிகழ்வுகளை நடத்தி வருகிறது.  அக்டோபர் 12, 13 தேதிகளில் இணைய தமிழ் பயிற்சி முகாம் ஒன்றினை புதுக்கோட்டையில் நடத்தியது.  பல்வேறு மாவட்டங்களிலிருந்து வந்த நூறுக்கு மேற்பட்ட இணையதள உபயோகிப்பாளர்கள் இதில் கலந்து கொண்டனர்.
 திவ்யபாரதியின் பாடலுடன்  நிகழ்ச்சிகள் துவங்கின.  நிகழ்வின் அமைப்பாளர் கவிஞர் முத்துநிலவன் பயிற்சி முகாமின் நோக்கங்களை எடுத்துக் கூறினார்.  உலகின் 200 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்ட திருக்குறளில் எங்கேயும் தமிழ் என்ற சொல் கிடையாது.  ஆனால் அதுதான் தமிழின் புகழை உலகிற்கு பறைசாற்றிக் கொண்டிருக்கிறது.  தமிழ் வாழ்க என்று கூறிவிடுவதால் தமிழ் வாழாது.  கணிணியில், இணையத்தில், அலைபேசியில் தமிழின் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும்  அந்த நோக்கத்திலேயே இதுவரை மூன்று பயிற்சி முகாம்களை  நடத்தியுள்ளோம்  இது நான்காவது பயிற்சி முகாம்.  சிறந்த உட்கட்டமைப்பைக் கொண்ட ஜெ ஜெ கலை அறிவியல் கல்லூரியின் உதவியோடு இதனை நடத்துகின்றோம். பங்கேற்பாளர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்..”  எனக் கேட்டுக் கொண்டார்.

கணிணித் தமிழ்ச் சங்கத்தை தோற்றுவித்த 
முனைவர் நா.அருள் முருகன் தலைமையுரை ஆற்றினார். (படம்)
 தொடங்கியது நான்தான் என்றாலும் தொடர்வது நீங்கள்..”  எனப் பாராட்டிய அவர், தமிழ் விக்கிபீடியா அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.  மாற்றங்களின் காலம் இது.  தயக்கங்களை உடைத்து முன்னேற வேண்டும்.  கணிணியிலும், அலைபேசியிலும் பயன்படுத்தத்தக்க இருபது லட்சம் செயலிகள் குவிந்து கிடக்கின்றன.  இதில் தமிழ் சார்ந்த செயலிகளைக் கண்டுபிடித்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.  வங்கிச் செயல்பாடுகள், பேரூந்து, இரயில் மற்றும் விமானப் பயண முன்பதிவுகள் போன்றவை பலவித செயலிகள் மூலமே நடக்கின்றன.  ரெட் பஸ் நிறுவனத்திற்கு ஒரு பேரூந்து கூட சொந்தமாகக் கிடையாது.  ஆனால் ஒரு முன்பதிவு செயலியை  உருவாக்கி பேரூந்து முன்பதிவு வணிகத்தில் தலையாய இடம் வகிக்கின்றனர்.  இது போல ஓலா, மேக் மை ட்ரிப் போன்ற நிறுவனங்கள் தங்கள் செயலிகள் மூலமாகவே வணிகத்தை செய்கின்றனர்.  மருத்துவம், கல்வி, உணவுப் பொருள் வினியோகம் உட்பட எங்கும் செயலிகளின் ஆதிக்கம்.  "மைத்ரி" என்ற செயலி மூலம் கைவிடப்பட்ட பெற்றோர்களை, கைவிடப்பட்ட குழந்தைகளை இணைக்கும் தொண்டினைச்  செய்து வருகின்றனர்

குரல் வழிப் பதிவேற்றம் தமிழிலும் சாத்தியமாகியுள்ளது.  நேரத்தினை மிச்சப்படுத்தும் இந்தச் செயலி மூலமாக தமிழில் செய்தி அனுப்ப எல்லோரும் கற்றுக்கொள்ள வேண்டும்.  தமிழில் படித்தால் பிழைக்க முடியாது எனக்கூறுவார்கள்.  அதனை மாற்றும் விதமாக இணையம் சார்ந்த தமிழ் செயலிகளை உருவாக்குவது, யுட்யூப் போன்ற தளங்களில் இருக்கும் வணிக வாய்ப்புகளைப் பயன்படுத்தி இணையத் தொழில் முனைவோராக வளர வேண்டும்.  இணையத்தில் தமிழுக்கு உரிய இடத்தைப் பெற்றுத்தர நீங்கள் பாடுபட வேண்டும்..”  
எனக் கேட்டுக்கொண்டார்.








வாழ்த்துரை வழங்கிய கவிஞர் தங்கம் மூர்த்தி தன் கல்வி நிறுவனத்துக்கு காலண்டர் அச்சடித்துத் தர ஒருவர் வியாபாரம் பேச வந்தார்.  ஒரு வியாபாரியாக அவரிடம் நான் பேசி, வியாபாரத்தை முடித்தேன்.  பேச்சின் முடிவில், தான் ஒரு வலைப் பக்கம் (Blog) வைத்திருப்பதாகவும், அதனை நான் பார்த்துவிட்டு கருத்துக் கூற வேண்டும் என அவர் கேட்டார்.  சிவகாசி காலண்டர் வியாபாரி ஒருவர் வலைப்பக்கம் வைத்திருப்பது எனக்கு வியப்பூட்டியது. அவர் மீதான எனது மரியாதை உயர்ந்தது என்று குறிப்பிட்டார்.  

பயிற்சி முகாமினை தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணை வேந்தர் பா.ராசேந்திரன் துவக்கி வைத்து உரையாற்றினார்.  கீழடி வாழ்ந்த காலத்தின் ஆய்வு என்றால் சந்திராயன் வாழப்போகிற காலத்தின் ஆய்வு என உரையைத் துவங்கிய அவர், “தகவல் தொடர்பே மனித குலத்தை கடந்த காலத்திலிருந்து எதிர் காலத்துக்கு இணைக்கும் சங்கிலி..”  என்றார்.  இன்றைய சமூகத்தில் கையில் செல் இல்லையயன்றால் ஒருவன் அநாதையாகி விடுகிறான்.  தொடர்பு எல்லைக்கு வெளியே போய் விடுகிறான்.  தகவல் தொடர்பே இன்றைய உலகின் ஆதாரம்.  தேசத்தின் எல்லைகளை மட்டுமல்ல மதம், இனம், மொழி போன்ற எல்லைகளையும் இணையம் உடைத்து விட்டது. கடவுளைக் கூட நீங்கள் நம்பாமல் போகலாம்.  ஆனால் இணையத்தை நம்புகிற காலம் இது” .

செயலிகள் வியப்பூட்டுகிறன.  பொன்னியில் செல்வன் நாவலைப் படித்துவிட்டு அதனை அனிமே­ன் திரைப்படமாக உருவாக்கித் தரும் செயலி விரைவில் வர இருக்கிறது.  தகவல் தொழில் நுட்பம், உயிரி தொழில் நுட்பம் செயற்கை நுண்ணறிவு மூன்றும் அதிவிரைவாக வளர்ந்து வரும் துறைகள்.  ஒருவர் எல்லாவற்றையும் தெரிந்துகொள்ள தகவல்கள் வந்து குவிகின்றன.  ஆனால் தெரிதல் முக்கியமில்லை.  புரிதலே முக்கியம்  புரிதல் இல்லாத தெரிதலினால் பயனில்லை.  இந்த நூற்றாண்டின் இறுதியில் உயிரி தொழில் நுட்பம் மனிதனின் வாழ்நாளை நீட்டிக்கும் ஆராய்ச்சியில்  முக்கிய கட்டத்தை எட்டும்..”  என்று விரிவான, ஆழமான உரையை வழங்கினார்.

பின்னர் கல்லூரியின் கணிணி ஆய்வகத்தில் செயல் முறைப் பயிற்சிகள் வழங்கப்பட்டன.  80 கணிணிகள் இணையதள வசதியுடன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.  இணையத்தில் வலைப்பக்கம் உருவாக்குவது குறித்த பயிற்சியை வல்லுனர்கள் முனைவர் மு.பழனியப்பன் மற்றும் திண்டுக்கல் தனபாலன் ஆகியோர் அளித்தனர்.  குரல்வழிப் பதிவேற்றம் மற்றும் தமிழில் பிழை திருத்தி குறித்து ஸ்ரீமலையப்பன், நீச்சல்காரன்-ராசாராமன் ஆகியோர் பயிற்சி அளித்தனர்.  விக்கிபீடியா பயன்பாடு மற்றும் அதில் கட்டுரை எழுதும் பயிற்சியினை முனைவர் பா.ஜம்புலிங்கம், பிரின்சு என்னாரெசுப் பெரியார் ஆகியோர் வழங்கினர்.  க்யூஆர் கோட்(QR Code) குறித்து ரேவதி, பயிற்சி அளித்தார்.  யுட்யூபில் சேனல் உருவாக்குவது  மற்றும் அதன் வணிக வாய்ப்புகள் குறித்து எஸ்.பி. செந்தில்குமார் பயிற்சி அளித்தார்.  மின் சுவரொட்டி தயாரித்தல் குறித்து எம்.எஸ்.ரவி 
லினக்ஸ் பற்றி ஆசிரியர் கஸ்தூரி ரங்கன் பயிற்சி அளித்தனர்.

திரைப்பட சங்க செயற்பாட்டாளர் எஸ்.இளங்கோ குறும்படங்களை அறிமுகம் செய்து  நல்ல சில குறும்படங்களைத் திரையிட்டுக் காட்டினார்.  பிலிம் வடிவத்தில் துவங்கிய சினிமா டிஜிட்டல் மயமாகியுள்ளது.  இதனால் சினிமா பார்த்த்தல் என்பது எளிதாகியுள்ளது. ஏராளமான நல்ல சினிமாக்களை தாரளமாக யுட்யூபில் இலவசமாகப் பார்க்க முடியும்.   தீவிர சினிமா ரசிகனுக்கு டிஜிட்டல் சினிமா வரம்..”  எனக் குறிப்பிட்டார்.  நல்ல குறும்படங்கள் திரைப்பட ரசனையை மேம்படுத்த உதவும் என்று கூறிய புதுகை செல்வா திரையிடப்பட்ட குறும்படங்கள் குறித்த பார்வையாளர்களின் விவாதங்களை ஒருங்கிணைத்தார்.

கணிணி மற்றும் இணையதள செயற்பாட்டாளர் கார்த்திகேயன் சமூக வலைதளங்களின் செயல்பாடுகள் குறித்து விளக்கி, அதனைப் பயன்படுத்துவோர் மேற்கொள் வேண்டிய பாதுகாப்பு அம்சங்கள் குறித்து விளக்கினார்.  ஹேக்கர்ஸ் குறித்து எச்சரித்த அவர் நமது  பாஸ்வேர்ட் உள்ளிட்ட சுயவிபரங்கள் ரகசியமாக இருக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.

இரண்டு நாள் பயிற்சி நிகழ்வின் இறுதியாக தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் ஆதவன் தீட்சண்யா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு நிறைவுரையாற்றினார்.  அறிவே பலம் என்பது மாறி தகவலே பலம் என்ற காலம் பிறந்திருக்கிறது.  இணையத்தில் நாம் கடந்த காலத்தையே தேடுகிறோம். கடந்த காலத்தின் போட் மெயில் என்ற ஒரு இரயிலின் விபரத்தை தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் இணையத்தில் அது கிடைக்கிறது.  அந்த இரயில் சென்னையிலிருந்து புறப்பட்டு இராமேஸ்வரம் வழியாக தனுஷ்கோடியை சென்றடைந்தது.  தனுஷ்கோடியிலிருந்து பின்னர் படகில் தலைமன்னார் போய் பின்பு மறுபடியும் இலங்கையின் பிறபகுதிக்கு இரயிலில் செல்ல சென்னையிலேயே டிக்கட் வாங்கிக்கொள்ளும் வசதி போட் மெயிலில் இருந்தது.  கடந்த காலத்தின் மன்னர்களை, மக்களைப் பற்றி அறிந்துகொள்ள இணையத்தை தேடுகிறோம்.  அறிந்துகொள்ள இணையம் ஒரு சுரங்கம் என்பதில் ஐயமில்லை” .   இணையம் ஓர் அடிப்படை உரிமை என்று சமீபத்தில் கேரள உயர்நீதி மன்றம் ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது.

எப்போதும் தகவலைத் தேடிக்கொண்டிருக்கும் ஒருவரை, ஏன் அப்படிச் செய்கிறீர்கள்? எனக் கேட்டால் என்னை அப்டேட் செய்து கொள்கிறேன் எனப் பதிலளிப்பார்.  சரி, அப்டேட் பண்ணி என்ன பண்ணப்போகிறீர்கள்? என்பதுதான் கேள்வி.  கணிணியும், இணையமும் வந்து நமது வேலையை இலகுவாக்கி விட்டது.  ஆனால் மனிதத்தன்மை உயர்ந்திருக்கிறதாஎன்று பார்க்க வேண்டும்.  நம்மைச் சுற்றியுள்ள கருவிகள் நவீனமாக இருக்கின்றன.  ஆனால் சிந்தனைகள் நவீனமாக இருக்கின்றனவா? என்றுகேள்வி எழுப்பிய அவர் இணையத்தில் மனித மனங்களை பாழ்படுத்துகிற தகவல்களாக இராமல் பண்படுத்துகிற தகவல்கள் நிறைந்திருக்க வேண்டும்..”  என்றார்.

இரண்டு நாட்கள் பயிற்சியில் பங்கெடுத்த அனைவரும் பயிற்சி மிகப் பயனுள்ளதாக அமைந்தது என்று கருத்துக்கேட்பு அமர்வில் கூறினர்.  தமிழ்நாட்டின் எந்த நகரிலும், எந்தக் கல்வி நிறுவனத்திலும் இத்தகைய பயிற்சி நிகழ்ச்சிகளை நடத்தித் தர தயாராக இருக்கிறோம்..”  என கவிஞர் முத்துநிலவன் கூறி நிறைவு செய்ய, பயிற்சி முகாமின் ஒருங்கிணைப்பாளர் கவிஞர் மு.கீதா நன்றிகூற முகாம் இனிதே நிறைவுபெற்றது.

எழுத்தாக்கம்-
எஸ்.இளங்கோ
-----------------------------------------------------------------------------
இதனை வெளியிட்ட 
“காக்கைச் சிறகினிலே”
(அக்.19) திங்களிதழ் ஆசிரியர் குழுவிற்கு நன்றி
----------------------------------------------- 
செய்தி வெளியீட்டுக்கு நன்றி-
தினமணி, இந்து-தமிழ், தீக்கதிர், 
புதுகை வரலாறு
நாளிதழ்கள் 





---------------------------------------------- 

12 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. அய்யா வணக்கம். தங்களின் இணையத் தமிழ்ப் பயிற்சிப் பணிகளை நன்கறிந்தவன் என்பதனாலேயே உங்களை இயன்றவரை பயன்படுத்தி வருகிறேன். இப்படி நடத்துவதன் சிரமத்தைப் புரிந்துகொள்ளாமல் தாஙகள் பயன்படுத்திய சில சொற்கள் என்னை மிகவும் காயப்படுத்திவிட்டன. அதனால் நான் தங்களிடம் மீண்டும் தொடர்புகொள்ளாமலே இருந்ததைப் பொருட்படுத்தாமல், நீங்கள் முதன்முதலாக வந்து கருத்திட்ட பெருந்தன்மை என்னை நாணமடைய செய்துவிட்டது. மன்னியுங்கள். தொடர்ந்து பயணிப்போம். நன்றி

      நீக்கு
  2. சிறப்பான கட்டுரை. நிகழ்வினை நடத்திய நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள் மற்றும் பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  3. ஐயா. வணக்கம் இந்தப் பதிவைத்தான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்.எப்போதும் போல பயிற்சி முகாம் சிறப்பாக அமைந்ததில் மகிழ்ச்சி.இணையத்தமிழ் வளர்ச்சிக்காக தங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் வரலாற்றில் இடம் பிடிக்கக் கூடியது. வாழ்த்துகள் ஐயா,

    பதிலளிநீக்கு
  4. கணினி யுகத்தின் மகத்தான வரலாற்று நிகழ்வைச் சிறப்பாக நடத்தி முடித்துள்ளீர்கள். கணினித் தமிழ்ச் சங்கத்தின் இச்செயன்மை முன்னோடியானது. காலம் இதை கவனத்தில் பதிந்து வைக்கும். என் மனம் நிறைந்த அன்பையும் வாழ்த்துகளையும் உங்களுக்கும் துணைநின்றோர்க்கும் தெரிவித்துக்கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களை இம்முறை பயன்படுத்த முடியாத சூழல் (என் சூழல் மட்டும் அல்ல, உங்கள் சூழலும்தான்!) எனினும் தங்கள் வாழ்த்துக்கும் ஆலோசனைகளுக்கும் எனது நன்றி நண்பரே

      நீக்கு
  5. துறைசார் வல்லுநர்களால் நிகழ்த்தப்பட்ட இணையத் தமிழ்ப் பயிற்சி முகாம் பார்வையாளர்களுக்கு பல நுட்பங்களை நிறைவாக வழங்கியிருக்கும் என நம்புகிறேன். தொடர்ந்து இதுபோன்ற பயிற்சி முகாம்களை நடத்தி தமிழின் பெருமையை உலகறியச் செய்யவேண்டும். தங்களுக்கும் தங்களுடன் இம்முகாம் சிறப்பாக அமைய ஒத்துழைத்து அறிஞர்பெருமக்களுக்கும் வாழ்த்துகளும், வணக்கங்களும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி நண்பரே, பார்வையாளர்களை விடவும் நடத்தியவர்கள் தான் அதிகம் பாடம் கற்றுக் கொண்டோம். இவ்வளவு வகுப்புகளை வைத்து ஒரேயடியாக பேராசைப் படக்கூடாது என்பதே முதற்பாடம். என்ன செய்ய சிலபாடங்களை வாழ்நாள் முழுவதும் கற்றுக்கொண்டே இருக்க வேண்டும் போல! கல்வி கணினியிலும் கரையில!

      நீக்கு
  6. பயிற்சியின் நிகழ்வுகளை மீண்டும் ஒருமுறை கண்ணெதிரே காட்சிப்படுத்தியுள்ளது தங்களின் பதிவு.நேர்த்தியான திட்டமிடல். தங்களை அருகிலிருந்து கவனித்தமையால் கூறுகிறேன் இரவு பகல் பாராது உழைப்பைத் தந்திருக்கிறீர்கள். இந்த உழைப்பு தமிழுக்காக. நல்ல படைப்பாளர்களைக் கணினியின் பக்கம் இழுப்பதற்காக. இதுபோன்ற பயிற்சியினைத் தொடர்ந்து முன்னெடுப்போம் தோள் கொடுக்கும் வரிசையில் நானும் முன்னிற்பேன்.

    பதிலளிநீக்கு
  7. விக்கிபீடியா தொடர்பாக என் கருத்துகளைப் பகிர வாய்ப்பு தந்தமைக்கு என் நன்றி ஐயா. என்னால் முடிந்தவரை கிடைத்த கால அளவிற்குள் விக்கிபீடியாவில் பதிவுகளை எழுதுவதற்கு உள்ளே புகுவது, சொற்றொடரை அமைப்பது, மேற்கோளை இணைப்பது, இணையத்தில் தேடுவது என்ற நிலையில் பகிர்ந்துகொண்டேன். பயிற்சி நாளில் அங்கேயே ஆரம்பித்து, பின்னர் செய்திகளைத் திரட்டி மேம்படுத்திய திரு நா .அருள்முருகன் அவர்களின் பக்கம் நீக்கப்பட்டுள்ளது. அமைப்பில் தவறா, இணைப்புகளில் விடுபாடா, பத்தி பிரிப்பு சரியில்லையா என்பது புரியவில்லை. இன்னும் என்னை மேம்படுத்திக் கொள்ளவேண்டும் இதுபோன்ற நீக்கல்கள் உதவுகின்றன. அதனை மறுபடியும் எழுத முயன்று வருகிறேன். விக்கிபீடியா நண்பர்களின் ஒத்துழைப்புப்போடு தொடர்ந்து செயலாற்றுவேன். தற்போது விக்கிபீடியா அறிவித்துள்ள வேங்கைத்திட்டத்தில் கலந்துகொண்டுள்ளேன். வாய்ப்பிருப்பின் நண்பர்களை அதில் கலந்துகொள்ள அழைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  8. இந்த நிகழ்வில் பங்குகொள்ள எனக்கும் வாய்ப்பளித்த தங்களின் அன்புக்கு ஏகாந்த நன்றிகள்..!

    வெகுநாட்களாக கருத்திட்ட முடியாமல் இருந்த பிரச்னைக்கு இன்று தீர்வு கிடைத்தது. எனது வலைப்பக்கத்தில் சில plugin அப்டேட் செய்யப்படாமல் இருந்தது. அதை செய்து முடித்தவுடன் எல்லாமே சரியாகிவிட்டது. தங்கள் ஆலோசனைக்கும் நன்றி அய்யா..!

    பதிலளிநீக்கு