எனது ‘புதிய மரபுகள்’ கவிதைத் தொகுப்பில் இருந்து…


                  விழி! எழு!! தாயே!!!

இமயத் தலைமுடி நரைத்தஎன் தாயே!
எத்தனை புகழ்வளர்த் தாயே! – உன்
குமரிக் கால்களில் கொஞ்சும் அலைகளில்
நெஞ்சினைக் கொள்ளைகொண் டாயே!- மன
அமைதியும் அழகும் எங்கு தொலைத்தனை?
           அய்யகோ இன்றைய நிலவரம்! -மனச்
சுமையினை எங்குபோய்ச் சொல்லுவேன் அடடா!
சூழ்ந்ததே இனமதக் கலவரம்?

புத்தரும் சித்தரும் போலப் பெரும்புகழ்ப்
புத்திரர் உனக்கென்ன குறையா? - இனி
இத்தனைப் பெருமைகள் இருந்தும்உன் பிள்ளைகள்
இன்றிங்கு நலிவது முறையா? – மத
யுத்தமும் சாதியால் ரத்தக் களரியால்
உயிர்ப்பலி யாவதும் சரியா? - இவை
அத்தனைக் குள்ளும்ஓர் சுயநலப் பேய்பிடித்(து)
ஆடுதல் இனியும் காண்கிலையா?

ஜீவ நதியெனும் ரத்தநாளங்களால்
செழும்பயிர்க் கூச்செரிந் தாயே! – தளிர்
பூவும் பிஞ்சுமாய்க் கனியும் கிழங்குமாய்ப்
பொன்னுடல் புல்லரித் தாயே! – வளம்
மேவும் அழகெலாம் தீயவாய் தின்றதோ?
மேனியும் புண்மலிந் தாயே! - இவை
யாவும் சுயநல அரசியல் திருவிளை
யாடல் இதை மறந்தாயோ?

4 கருத்துகள்:

  1. தங்களின் கவிதை மிக அருமை.

    உண்மை விரும்பி
    மும்பை.

    பதிலளிநீக்கு
  2. அய்யா உண்மை விரும்பி அவர்களே! வணக்கம்.
    தங்கள் பாராட்டுக்கு நன்றி நண்பரே!
    தங்களின் உண்மை (பெயர் மற்றும் விவரங்களை) விரும்பி நானறியத் தர மாட்டீர்களா?
    எனக்கு மும்பை இலக்கிய வட்டாரத்தில் நண்பரகள்; சிலர் உண்டு…
    நீங்கள் மரபுக்கவிதை எழுதும் பயிற்சி உண்டெனில், எனது பிள்ளைத் தமிழையும் பார்த்து உங்கள் பாராட்டை அல்ல விமர்சனத்தை கருத்தை எழுதினால் மகிழ்வேன்
    வணக்கம்

    பதிலளிநீக்கு
  3. எத்தனைப் பெருமைகள் இருந்தென்ன?மனிதநல்
    இணக்கத்தை எங்கோ தொலைத்தாரே-கோணல்
    புத்தியால் சத்திய நெறிதனை மறந்துமதுக் கடைகளில்குடிபுகுந்தாரே.
    சித்தரும் புத்தரும் பிறர்க்கென வாழ்ந்துநல் பெற்றிகள் பல முகிழ்த்தாரே-இவர்
    நித்தமும் இலவசச் சலுகையை எதிர்நோக்கி
    இருப்பினை இழந்தழிவாரே.
    பாவலர் பொன்.க புதுக்கோட்டை

    பதிலளிநீக்கு
  4. வணக்கம். பாவலர் பொன்.க. அவர்களே! நலம்தானே?
    தேர்வுப்பணி-தேர்தல்பணி-இப்போது மதிப்பீட்டுப் பணி எனத் தொடர்ந்த தேசப் பணிகளால்(?) நான் வலைப்பக்கம் அதிகம் வர இயலவில்லை.
    இப்போதுதான் கவனித்தேன்… உங்கள் கருத்துரை அழகான எழுசீர் வண்ணப்பாவாக இருக்கிறதே! ஏன் இதன் வடிவத்தை மாற்றி அனுப்பினீர்கள்? தொழில்நுட்பச் சிக்கலா அல்லது ஈழக்கவிஞர் சிலர் தமது அருமையான மரபுக் கவிதைகளை வரி மடக்கி, புதுக்ககவிதை போல வெளியிட்ட –எனக்குப் புரியாத- கவிமனப்போக்கா?
    (ஈழ மகாகவி-‘உருத்திரமூர்த்தி’யின் “சாதாரண மனிதனது சரித்திரம”; படித்திருக்கிறீர்களா? மிக அருமையான வெண்கலிப்பாக்கள் ஆனால் புதுக்கவிதைபோல 5,6 வரிகளில் பாடல் வரிகள் மடங்கி மடங்கி வந்திருக்கும்!)
    -------
    எத்தனைப் பெருமைகள் இருந்தென்ன?மனிதநல்
    இணக்கத்தை எங்கோ தொலைத்தாரே-கோணல்
    புத்தியால் சத்திய நெறிதனை மறந்து
    மதுக் கடைகளில்குடிபுகுந்தாரே.
    சித்தரும் புத்தரும் பிறர்க்கென வாழ்ந்துநல்
    பெற்றிகள் பல முகிழ்த்தாரே-இவர்
    நித்தமும் இலவசச் சலுகையை எதிர்நோக்கி
    இருப்பினை இழந்தழிவாரே.
    பாவலர் பொன்.க புதுக்கோட்டை

    பதிலளிநீக்கு