பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணியிடைப் பயிற்சி



--படம் : திரு ராஜ்குமார், புதுக்கோட்டை
--செய்தி: தீக்கதிர் செய்தியாளர் திரு சு.மதியழகன் 
-------------------------------------------------------------------------------------------
      தமிழ்நாடு அரசின் ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (DIET)  புதுக்கோட்டை   சார்பாக,  வரும்  2013-14 கல்வியாண்டில்  ஒன்பதாம் வகுப்பிற்குப் பாடம்கற்பிக்கும் பட்டதாரி   ஆசிரியர்களுக்கு மாவட்ட அளவிலான தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு (CCE) பயிற்சி வகுப்புகள் புதுக்கோட்டை தூயமரியன்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில்  29>30-05-2013 தேதிகளில் நடைபெற்றன.
  தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூகஅறிவியல் ஆகிய பாடங்களைக்கற்பிக்கும் பட்டதாரி ஆசிரியர்கள் சுமார்  300 பேர் மாவட்டம் முழுவதிலும் இருந்து கலந்துகொண்டனர். 
       இதில் தமிழாசிரியர்க்கான பயிற்சியை புதுக்கோட்டை           அரசு   முன்மாதிரி மேல்நிலைப்பள்ளித் துணைமுதல்வரும் தமிழாசிரியருமான   நா.முத்துபாஸ்கரன்,   கொப்பனாப்பட்டி முநாசெ உயர்நிலைப்பள்ளித் தமிழாசிரியர் கும.திருப்பதிமருதாந்தலை அரசு மேல்நிலைப்பள்ளித் தமிழாசிரியர் மகா.சுந்தர்,  திருமயம் அரசுமேல் நிலைப்பள்ளி முதுகலைத் தமிழாசிரியர் வள்ளியப்பன், காவேரிநகர் அரசு மேல்நிலைப் பள்ளித் தமிழாசிரியர் முனைவர் சு.துரைக்குமரன், ஏ.மாத்தூர் மேல்நிலைப்பள்ளித் தமிழாசிரியர் குருநாதசுந்தரம்,  சந்தைப்பேட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளித் தமிழாசிரியர் கிருஷ்ணவேணிஆகியோருடன் மாஆக பயிற்சி நிறுவனத் தமிழ் விரிவுரையாளர் திருமுருகன் ஆகியோர் நடத்தினர்.
----------------------------------------------------------------------------------- 
செய்தி வெளியீட்டுக்கு நன்றி - 
தினமணி,தினகரன்-திருச்சிப்பதிப்பு நாளிதழ்கள்-31-05-2013.
----------------------------------------------------------------------------------------------------------  

பார்த்தாச்சா, சிரிச்சுட்டுப் போயிடணும்... அரசியல் பண்ணக் கூடாது...“இதுதான் அம்மா மெஸ்”

நான் இணையத்தில் நுழைந்த போது, நிறைய நண்பர்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றார்கள், ஏனெனில் பெரும்பாலும் அக்கப்போரே நிகழும் இணையத்தில் பாலைவனச் சோலை போல சிலபல இலக்கியவாதிகளும் உண்டு. அதிலும் “புரியும் தமிழில்“ பெரிய பெரிய விஷயங்களை எழுதும் வல்லமை கொண்டவர்கள் மிகமிகவும் குறைவு. இதைச் சொல்லி என்னை மகிழ்ச்சியுடன் வரவேற்ற -வெகுசில- நண்பர்கள் சொன்னது உண்மைதான் என்பதை விரைவிலேயே நானும் புரிந்து கொண்டேன்.
அதனால்தான் முகநூல், கூகுள் ப்ளஸ், மற்றும் ட்விட்டரிலும் இருக்கும் நான், அவற்றை வெகுவாகப் பயன்படுத்துவதில்லை. எனது வலையில் எழுதுவதை மட்டும் அவ்வப்போது அதில் போடுவதைத் தவிர...
ஆனாலும் அந்த ஒரு சில நண்பர்கள் ரசித்தவற்றை நானும் ரசித்தபோது இதை ஏன் நமது வலையிலும் மறுபதிப்புச் செய்யக் கூடாது என்று தோன்றியது. இதோ நான் ரசித்த சில படங்கள், செய்திகள்,
இதைப் பார்ப்பவர்கள் பாரத்தது, ரசித்து, சிரித்துவிட்டுப் போயிடணும் அவ்வளவுதான் 
இதற்குமேல் இதை ஆராய்ச்சி செய்து அரசியலாக்கிவிட வேண்டாம் என்று மட்டும் கேட்டுக்கொண்டு இங்கு 3 படைப்புகளை மட்டும் மறுபதிப்பாக இடுகிறேன்.
இவற்றை உருவாக்கியவர் யாரென்று தெரியவில்லை எனவே, இணையத்திற்கே இவற்றை சமர்ப்பணம் செய்கிறேன், நண்பர்களுக்கு நன்றியை மட்டும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இதுதான் “அம்மா மெஸ்”!


ஊட்டி - குன்னூர் பிராவிடன்ஸ் மகளிர் கல்லூரியில் முத்துநிலவன் பேச்சு


தினமலரில் வெளிவந்த முத்துநிலவன் பேச்சு


அறிவுக்கும் மதிப்பெண்ணுக்கும் தொடர்பு இல்லை என்று கவிஞர் முத்துநிலவன் தன்னம்பிக்கை அளித்தார்.

குன்னூர் பிராவிடன்ஸ் மகளிர் கல்லூரி முத்தமிழ் பேரவை சார்பில மனஅழுத்தம் குறித்த கருத்தரங்கு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட முத்துநிலவன் பேசியதாவது


அறிவுக்கும் மதிப்பெண்ணுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. குறைவான மதிப்பெண் பெற்று, தோல்வியடையும் மாணவ, மாணவிகள் புத்திசாலி இல்லை என்ற முடிவுக்கு வந்துவிடக்கூடாது. அவர்களுக்குள் புதைந்துள்ள மற்ற திறமைகளை வெளிக் கொணர வேண்டும். பள்ளித் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெறுவது நுண்ணறிவு என்றுதான் சொல்ல வேண்டும்

ஆண்களைவிட, பெண்கள் கல்வியில் சிறந்து விளங்குகின்றனர். சமுதாயத்தில் மாணவர்கள் சாதனைகளைப் புரிந்து நிலையான பெயர் பெற வேண்டும். அடுத்தவர்களின் திறமையை மதிக்க வேண்டும். தகுதியைப் புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு முத்துநிலவன் பேசினார். 


செய்து முடிக்க முடியாத காரியத்தில் தலையிட்டு, அது கைகூடாத போது, நாம் விரும்பாத காரியத்தை பிறர் செய்யும்போது நினைத்த காரியத்தை செயல்படுத்த முடியாத போது என மன அழுத்தம் ஏற்பட பல காரணங்கள் உள்ளன. அதை எதிர்கொள்ளும் ஆற்றலை மாணவ, மாணவியர் பெற வேண்டும். எதை செய்து முடிக்க முடியுமோ அந்த காரியங்களை முனைப்புடன் செய்து முடிக்க வேண்டும். சுயநலம் இல்லாதவர்களால் மட்டுமே மற்றவர்களின் மன அழுத்தத்தைக் குறைக்க முடியும். மனிதர்களை நம்புவதை விட ஆன்மிக ஆற்றலை அதிகப்படுத்திக் கொள்வது மன அழுத்தத்தில் இருந்து விடுபட பெரிதும் உதவும் என்று குன்னூர் டி.எஸ்.பி., தர்மராஜ் தெரிவித்தார். 

கல்லூரி துணை முதல்வர் ஷீலா தலைமை வகித்தார். பேராசிரியை சுதா நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார். தமிழ்த்துறை பேராசிரியை சுஜாதா நன்றி கூறினார்.

இணைப்பு - http://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?cat=1&id=4183 

“கரிசல்குயில்” கிருஷ்ணசாமியின் மகள் திருமணத்திற்குச் சென்று வந்தேன்...


தமுஎகச விருதுநகர் மாநில மாநாட்டில், வெள்ளைச் சட்டையோடு கண்ணாடி போட்டு மைக் எதிரில் நின்று பாடும் கரிசல் கிருஷ்ணசாமி தலைமையில் எழுச்சிகீதம் இசைக்கும் கலைஞர்கள்
(பின்னால் கை உயர்த்தி பூபாளம் பிரகதீஷ்,  கரிசல் அருகில் கருணாநிதி,  கருப்புச் சட்டையில் சோழ.நாகராஜன், அந்தப் பக்கம் ஓவியர் வெண்புறா,   மேடைமுனையில் எழுத்தாளர் சங்க மாநிலத்தலைவர் ச.தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட தலைவர்கள்)
”தோழர்களே! தோழர்களே தூக்கம் நமக்கிலை வாருங்கள்!
தோளை நிமிர்த்தி வாளைச் சுழற்றி தொய்வில்லா நடை போடுங்கள்”
-------------------------------------------------------------- 
இரண்டு மூன்று மாதம் முன்பே கிருஷ்ணசாமியிடமிருந்து உரிமையுடன் கூடிய அழைப்பு -
“ஏய்... நிலவு. நமம வீட்டுல பொண்ணு கல்யாணம்லே... இப்பவே சொல்லிட்டேன்.. நா அங்க போனேன் இங்க போனேன் வரமுடியலங்கிற பேச்சே இருக்கக் கூடாதுங்கறதுக்காகத்தான் இப்பவே சொல்லுதேன்... நீயும் மதுக்கூரும் கலந்துக்கிற பட்டிமன்றம், நடுவர் நம்ம நந்தன் (நந்தலாலவை அப்படித்தான் நெருங்கிய நண்பர்கள் கூப்பிடுவோம்) அவிங்ககிட்டயும் சொலலிட்டேன்பா.. நீயும் குறிச்சி வச்சிக்க.. வந்துறணும்யா சொல்லிட்டேன்..” எனும் குரலை மறுக்க முடியுமா என்ன?
அந்த தினம் பார்த்து, எங்கள் மூவருக்கும் ஐந்தாறு நிகழ்ச்சி அழைப்பு (திண்டுக்கல் திரு.லியோனி உட்பட) எல்லாவற்றையும் அன்போடு மறுத்து “கரிசல் மகள் கல்யாணத்துக்குப் போறேன்“ என்று கூறிவிட்டு எங்கள் வீட்டுக் கல்யாணத்தில் இருந்தது போல நடந்த நிக்ழ்வு மகிழ்வும் நெகிழ்வும் கலந்து நெடுநாள்களுக்கு மறக்க முடியாததாய் அமைந்துவிட்டது.

தமிழ்நாட்டின் நிஜநாடகத்தின் நிஜமான முகமாகத் திகழும் பிரளயன், கூத்துக் கலையின் அடையாளமாகத் திகழும் பாவல் ஓம் முத்துமாரி, பட்டிமன்றம் பேச எங்கள் மூவரோடு எழுத்தாளர் சாத்தூர் லட்சுமணப் பெருமாள், திரைமுயற்சியில் ஜெயிக்கும் முயற்சியில் இருக்கும் கவிஞர் தனிக்கொடி, முதல் நாள் கலைநிகழ்ச்சிகளுக்குத் தலைமையேற்கத் தேனி வசந்தன்,, பாடல்கள்  பாட கரிசல் -வாரிசுகள்- கருணாநிதி, திருவுடையான், உடுமலை துரையரசன், ரேவதி, 
கவிதை பாட நவகவி, வையம்பட்டி முத்துச்சாமி திரைத்தமிழில் முத்திரை பதித்துவரும் “பூ“ராமு, எழுத்தாளர்கள் கே.வேலாயுதம், உதய சங்கர், ஷாஜகான்,அப்பணசாமி (குடும்பத்துடன்) வெண்புறா(தமிழ்நாட்டின் முக்கியமான கலைஇரவு மேடைகள் எல்லாம் உயிர்பெற்று நிற்கக் காரணமான கைகள் கரிசல் மகளின் திருமணத்திற்கும் மேடை அலங்காரம் செய்ய, துணைவியார் கரிசல் மகளுக்கு அலங்காரம் செய்தார்), எழுத்தாளர்கள் வேல.ராமமூர்த்தி, மணிமாறன், சாந்தாராம், உணர்ச்சிக் கவிஞன் லட்சுமிகாந்தன் என கலைஇலக்கியப் பெரும் படையை மேடையில் மட்டுமல்ல போய் இறங்கிய உடனே எதிர்நின்று வரவேற்றார் -கரிசல் குயிலின் அண்ணன் சு.துர்க்கையப்பன்.. கசங்கிய சட்டை வேட்டியோடும் செருப்பில்லாத வெறும் கால்களோடும் தனக்கே உரிய உயிர்ச்சிரிப்புடனும்,  கரிசல் வந்து கட்டிப்பிடித்து வரவேற்றதில் எங்கள் பயணக் களைப்பு பறந்தே போனது! 

அழைப்பிதழில் தன்பெயரையும் படத்தையுமே பெரிதாகப் போட்டுக்கொள்ளும் உலகில் “அண்ணன் அண்ணி இருவரின் நல்லாசிகளுடன்“ என்று மட்டும் போட்டிருக்கும் கரிசலின் பண்பை என்னவென்று சொல்ல? அந்த அண்ணனும் சாதாரணப்பட்டவரல்ல... பி.ஈஆனர்ஸ், படித்து, இத்தாலி நாட்டி்ல் பெரியஅளவில் பணியாற்றிவந்தும் அவ்வளவு அடக்கமாக, எல்லாரையும் ஓடிஓடி உபசரித்துக்கொண்டிருந்தார்.  இன்னொரு அண்ணன்-அண்ணி முன்னிலை வகித்தார்கள்! 
அபூர்வ சகோதரர்கள்தான் என்று அதுவும் பார்க்க மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

அடுத்தநாள் நிகழ்வில் செம்மலர் ஆசிரியர் எஸ்.ஏ.பி., தமுஎகச தலைவர் ச.தமிழ்ச்செல்வன் வந்திருந்தனர். (அழைப்பிதழில் பெயர்போட்டிருந்ததில், பொதுச்செயலர் சு.வெங்கடேசன், பேச்சாளர் பாரதி கிருஷணகுமார் இருவரும் வரவில்லை) நரிக்குளம் என்னும் ராஜபாளையத்திலிருந்து 15கி.மீ.உள்ளே கிடக்கும் அந்த ஊருக்குத் தமிழ்நாட்டின் முக்கியமான கலைஇலக்கிய ஆளுமைகள் வந்திருந்தது அந்த மக்களுக்கும் நமது மகததான் கலைஞன் கரிசல் கிருஷ்ணசாமிக்கும் செய்த மரியாதையாகவே பட்டது.

மணமகள்- கி.துர்கா பிஈ, 
பெற்றோர்- சு.கிருஷ்ணசாமி, கி.முத்துலட்சுமி. 
மணமகன் -ந.சுகுமாறன் பிஎஸ்ஸி பிஜிடி. 
பெற்றோர் கி.நவநீதன்,ந.பாக்கியலட்சுமி  
மணநிகழிடம் - நரிக்குளம், ராபாளையம் அருகில் 
மணநாள் - 12-05-2013 
நாங்கள் போயிருந்தது முந்தின நாள் மாலை  
கலை-இலக்கிய நிகழ்வுகள் இரவு 1மணிவரை.

இது கரிசல்குயில் வீட்டில் நடந்த தமுஎகச திருவிழா என்றுதான் சொல்ல வேண்டும்.

தற்போது ஆலமரமாய் வேர்பிடித்து தழைத்து கிளைத்து வளர்நது விழுதுவிட்டும் நிற்கும் தமுஎச (தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம்) எனும் தமிழகத்தின் மிகப்பெரும் கலைஇலக்கிய அமைப்பின் வளர்ச்சிக்குத் தன் வியர்வையையே நீராகப் பாய்ச்சிய ஒரு சில மகத்தான கலைஞர்களில், நமது “கரிசல் குயில்கிருஷ்ண சாமிக்கு மிகப்பெரும் பங்கு உண்டு.

தனது எழுச்சியூட்டும் குரலால், நமது காதுகளைத் தொட்டு, நெஞ்சுக்குள் ஊடுருவிச் செல்லும் அந்தக் குயிலின் குரலால் மயங்காதவர் யாருண்டு?

இலைகள் அழுத ஒரு மழைஇரவு
எலும்பும் உறைந்துவிடும் குளிர்பொழுது

கண்டேன் ஒரு காட்சி கண்டெனது
கண்ணில் இறங்கிவரும் நீர்விழுது” 
எனும் அனாதைக் குழந்தைகள் பற்றிய நமது கவி நவகவியின் உயிர்த்துடிப்பான வரிகளை தானே இசையமைத்துப் பாடும் அவனது வசீகரக் குரலில், அடுத்தடுத்த வரிகளில் ஆழ்ந்து கிடந்த நாள்கள் பல

. அதில் வரும்-
கூட்டுக் குருவிகளின் சூட்டுக் கதகதப்பில்
குஞ்சுக் குழந்தைகளும் தூங்கும் – இந்த
நாட்டுப் பாதைகளில வாட்டும் வாடைகளில்
அனாதைக் குழந்தைகள் ஏங்கும்.

சாலை மைல்கல் சாயம் மங்கியதும்
வர்ணம் தீட்டுவார் இங்கே – இந்த
ஏழைப் பூக்களை மையிட்டுப பொட்டிட்டு
சிங்காரம் செய்பவர்தான் எங்கே? 
சிங்காரம் செய்பவர்தான் எங்கே?
       எனும வரிகளைக் கேட்கும் போது தொடங்கும் அழுகையை பாட்டுக் கேட்டு வெகுநேரம் வரை நிறுத்தவே முடியாது என்பது எனது அனுபவம். 

அதற்குக் காரணம் நவகவியின் வரிகளில் உள்ள உயிர் என்பது பாதி என்றால், அதற்குப் பொருத்தமான இசையில் தன் குரலை வேண்டிய இடஙகளில் குழைத்தும், கூர்மைப் படுத்தியும் நம் நெஞ்சுக்குள் ஊடுருவும் கிருஷ்ணசாமியின் குரல் பாதி எனபதை யார் மறுக்க முடியும். – 
அதிலும் “வர்ணம் தீட்டுவார் இங்கேஏஏஏஏ” என்று கிருஷ்ணசாமி நம் உயிரையே சுண்டி இழுக்கும் குரலில் கேட்கும்போது, நம் ஈரக்குலை யெல்லாம் நடுநடுங்கி உடம்பெல்லாம் புல்லரித்துப் போகும். இப்போதும் -எப்போது அந்தப் பாடலைக் கரிசல் குரலில் கேட்டாலும்- இதை நான் உணர்கிறேன்.


              “தனி ஒருவனுக்கு உணவிலை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்“- என பாரதி கேட்ட கேள்வியை வேறொரு கோணத்தில் நமது மகத்தான கவிஞன் நவகவி கேட்டிருக்கிறான் எனில் அதற்கு உயிர்கொடுத்து, நம்மை எழுச்சியுடன் சிந்திக்கவும் –அனாதைக் குழந்தைகள் மேல் நம் அன்பைத் திருப்பவும் செய்துவிட்டான் நம் மகத்தான கலைஞன் கிருஷ்ணசாமி என்று நான் பலநேரம் நினைத்துக்கொள்வதுண்டு.

எனவேதான் --
வேறு வேறு தருணங்களில் இந்த இருவரும் -மகா கவிஞனும் மகா கலைஞனும் ஆகிய நவகவியும், கிருஷ்ணசாமியும்- ஏதோ சில காரணங்களாலும் த்த்தம் உடல் நலக்குறைவாலும் வீட்டுக்குள் முடங்கிக் கிடந்தபோது, இந்தப் பாடலைத்தான் உதாரணமாகச் சொல்லி இருவருக்குமே நான் கடிதம்  எழுதியிருந்தேன்.

இந்தப்பாடல் இடதுசாரி மக்கள் இசைக்கு இந்த இருவரின் மகத்தான கொடை.
கண்ணதாசனின் “அச்சம் என்பது மடமையடா“ பாடலின் முக்கியத்துவத்தை அண்ணா உணர்ந்தது போல நம் தலைவர்கள் இந்தப் பாடலின் உயிர்ப்பான தேவையை உணர்ந்திருந்தால் மக்களுக்கான பணியில் இன்னும் பயன் கூடியிருக்கும் என்பது எனது தாழ்மையான கருத்து..

இந்தப் பாடலைத் தந்தவர்கள் எந்தக் காரணம் கொண்டும் முடங்கிக் கிடக்கக் கூடாது. சாதாரண மனிதர்களே தத்தம் தனிப்பட்ட பிரச்சினைகளை நீந்திக் கடந்து வாழ்ந்துவரும்போது, இத்தகைய மகத்தான கலைஞர்கள் முடங்கிக் கிடக்க அனுமதியில்லை. எழுதோழா. உன் வரிகளில் தெறிக்கும் சத்திய ஆவேசம் நம் மண்ணைப் பற்றிப் படர வேண்டும் என்று இருவருக்கும் –சுமார் 15ஆண்டுகளுக்கும் முன்பே- எழுதியது நினைவிருக்கிறது. அதன் பின் அந்த இருவருமே என் கடிதம் சரியான தருணத்தில் மனப்புண்ணுக்கு மருந்தாக இருந்ததாகத் தெரிவித்ததும் எனது கடிதத்தைப் பத்திரமாக வைத்திருப்பதாகவும் தெரிவித்ததும் நன்றாக நினைவிருக்கிறது.

அந்த எதார்த்தம் இன்னும் –இத்தனை ஆண்டுகள் கழிந்தும் – மாறிவிடவில்லை என்பதைக் கிருஷ்ணசாமியின் மகள் திருமணத்திற்கு முந்திய நாள் நடந்த இனிய நிகழ்வில் நடந்த பேச்சு உண்மையாக்கியது.

தன் உயிர்கலந்த பாடல்கள் பலவற்றுக்கு உடலான வரிகளைக் கொடுத்த கவிஞர்கள் நவகவியையும், வையம் பட்டி முத்துச்சாமியையும், பரிணாமனையும் கௌரவிக்கும் நோக்கத்தில் மேடைக்கு அழைத்தான் கிருஷ்ணசாமி. பரிணாமன் உடலநலக் குறைவால் வரவில்லை. மேடையேறிய கவிகள் இருவரும் தானும் இயல்பு மாறாத இடதுசாரி மக்கள் தொண்டர்கள் தான் எனும் நினைப்பு மாறாதவர்களாய். “ எங்கள் பாடல் வரிகளைத் தமிழ்நாடு முழுவதும் கொண்டுசென்று, எங்களை மக்களுக்கு அறிமுகப் படுத்திய மகத்தான கலைஞன் கரிசல் கிருஷ்ணசாமிக்குப் பெரிதும் கடமைப் பட்டிருக்கிறோம்என்ற அடக்கமான சொற்கள் அவர்கள் உண்மையான கலைஞர்கள் என்பதை உறுதிப்படுத்தியது. “பணியுமாம் என்றும் பெருமை, சிறுமை அணியுமாம் தன்னை வியந்து”  என்ற வள்ளுவனின் வார்த்தைகளில்தான் எவ்வளவு உண்மையிருக்கிறது என்பதை அந்த்த் தருணங்களில் நான் உணர்ந்தேன்.

அதுவும் கிருஷ்ணசாமி, தன் மகளின் திருமண அழைப்பிலேயே, “என் அண்ணன் மற்றும் அண்ணியாரின் ஆசிகளுடன்எனும் வார்த்தைகளோடு, அவர்கள் படத்தை மட்டுமே அச்சிட்டு, தன்னை முன்னிறுத்திக் கொள்ளாத அடக்கம் என்போன்ற பலரை வெட்கப்படவும் இப்படியல்லவா உயர்ந்த உள்ளங்கள் இருக்கின்றன என்று சிந்திக்கவும் வைத்த உண்மையை வெட்கப்படாமல் ஒப்புக்கொள்ளும் போதுதான் நானும் மனிதனாவதாக உணர்கிறேன்.

“ஒன்றுமே செய்யாமல் நாம் நம்மைப் பற்றிய பிம்பத்தை எப்படிப் மிகப்பெரிதாக நமக்குள் வளர்த்துக் கொண்டிருக்கிறோம்! இவர்களல்லவா மக்கள் தொண்டர்கள், இவர்களல்லவா உண்மையான மக்கள் கலைஞர்கள்” என்று நான் நெஞ்சுக்குள் நெகிழ்நது போனேன். ஒருவரை ஒருவர் மிஞ்சும் அடக்கம், அடுத்தவருக்குத் தெரியாமல் போட்டிபோட்டுத் தன்பணியை உணர்ந்து தொடரும் கடமை, நமக்கு எழுதி, பாடி மட்டுமல்ல சிலவற்றைச் சொல்லாமலே செய்தும் காட்டுகிறார்கள் இந்த மக்கள் கலைஞர்கள் என்பதுமட்டும் எனக்கு உறைத்த்து.

திடீரென்று இரவு 10மணிக்கு மேல், என் அலைபேசி ஒலிக்கும். எடுத்தால், “என்ன நிலவு தூங்கிட்டியா?” என்று கிருஷ்ணசாமி குரல் கேட்கும்.  புதுசாக் கிடைச்ச ஒரு நல்ல பாட்டுக்கு ட்யூன் போட்டிருக்கேன் கேக்குறியா? என்பான். “உன் குரலைக் கேட்கத் தமிழ்நாடே காத்துக்கிடக்கு, எனக்காகப் பாடுறேன்கிறே?... கேக்கக் கசக்குமா பாடப்பா” என்று நான் சொல்வேன்.. அடுத்த அரைமணிநேரம்... அவன் காசு வீணாகிறதே என்று, “இரு நெட் கிடைக்கல நான் கூப்புடுறேன்“ என்று பொய்சொல்லிவிட்டு நான் அழைப்பேன். மீண்டும் ஒரு அரைமணிநேரம் நான் இசை மழையில் நனைவேன்.
இப்படித்தான் ஒருநாள் இரவு,“நிலவூ...உங்க புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடிப் புலவர் சுந்தரபாரதியின் பாடல் தொகுப்பு ஒன்னு கிடைச்சுது அதுல என்ன அருமையான பாட்டுகளய்யா! நீ தான் அதுக்கு முன்னுரை எழுதியிருக்க... இது போல தாராபாரதி பாட்டுகள்ளாம் ரொம்ப நல்லா இருக்குன்னு சொல்லுதாக! அவரு பாடல் தொகுப்பு எனக்கு வேணுமே! என்றான். என்னிடமிருந்த அந்தத் தொகுப்பை அடுத்த நாளே அனுப்பி வைத்தேன்... இதுபோலும் சம்பவங்கள் நிறைய...

1970களின் இறுதியில், புதுக்கோட்டையில் நான் தமுஎசவைத் தொடங்கியபோது, என் உழைப்பால் மட்டுமல்ல, தோழர்களின் ஈடுபாட்டால் மட்டுமல்ல, வீட்டில் நடந்த மாதக்கூட்டங்கள் பலவற்றிலும் அப்போதிருந்த வறுமைக்கும் அஞ்சாமல் அக்கம்பக்கத்தில் கடன் வாங்கியாவது, சலைக்காமல், டீ போட்டுக்கொடுத்து, சூடாக வடையும் தந்த என் மனைவி அபிராமியின் அன்பு கலந்து வார்த்தையிலும்தான் புதுக்கோட்டை நகரத் தமுஎச கொஞ்சம் கொஞ்சமாக மாவட்டம் முழுவதும் 16 கிளைகளாகப் பரவியது.

1982இல், பாரதி நூற்றாண்டு விழாவை – எனது சக்தியை மீறிய பெரிய விழாவாக புதுக்கோட்டை நகரத்தில் நடத்த திட்டமிட்டேன். மாவட்டக் கிளை அப்போது கிடையாது. ஆனாலும், அன்றைய தலைவர் கே.முத்தையா, அ.மார்க்ஸ், எனது கல்லூரி முதல்வரும் தநாகஇபெம தஞ்சை மாவட்ட நிர்வாகிகளில் ஒருவருமான பாரதிப்பித்தன், ஆகியோரை அழைத்து, சிறப்பாக நடத்தினேன். பின்னர் அந்த விழா தந்த உற்சாகத்திலும், 1984இல் புதுக்கோட்டை வந்து சேர்ந்த கந்தர்வன் தந்த உற்சாகத்திலும் மாவட்டம் முழுவதும் 15க்கும் மேற்பட்ட கிளை செயல்படத் துவங்கியது. அதற்கு, இப்போது பாரதி கிருஷண் குமார் எனப்படும் அப்போதைய எழுச்சிப் பேச்சாளர் பா.கிருஷ்ண குமாரின் உரைவீச்சு ஒருபுறமும், இப்போது தமிழ்வளர்ச்சித் துறையின் இயக்குநராக இருந்த கே.ஏ.குணசேகரனின் எழுச்சிப் பாடல்கள் ஒருபுறமும், இப்போதைய செம்மலர் ஆசிரியர் எஸ்.ஏ.பெருமாளின் மனிதகுல வரலாறு வகுப்பும், இப்போது தமுஎகசவில் இல்லாத அஸ்வகோஷின் சிறுகதை பற்றிய வகுப்புகளும், நெல்லை தமுஎசவின் “சிருஷ்டிகலைக்குழுவின் நாடகங்களும், எவ்வளவு உதவினவோ அவ்வளவுக்குப் பேருதவியாக இருந்தது அப்போதுதான் அமைக்கப்பட்ட கரிசல் கிருஷ்ணசாமி-மற்றும் அப்போது வங்கியில் பணியாற்றிக்கொண்டே கிருஷ்ணசாமியோடு இணைந்து பாடிவந்த தோழர் சந்திரசேகரனின் பாடல் வழி வந்து பற்றிப் பரவிய நெருப்பு இன்றும் -30ஆண்டுக்கும் மேலாக- தொடர்ந்து எரிந்து வருகிறது. சிருஷ்டி கலைக்குழுவில் அப்போது நடித்து வந்த உதயசங்கர், அப்பணசாமி இப்போது பெரிய எழுத்தாளர்களாகி விட்டார்கள்... பலரும் தன் இருப்பில் சிறந்த ஆளுமைகளாக வளர்ந்திருக்கிறார்கள்...

”தோழர்களே தோழர்களே தூக்கம் நமக்கிலை வாருங்கள்,
தோளை நிமிர்த்தி வாளைச் சுழற்றி தொய்வில்லா நடைபோடுங்கள்

பச்சைக் குழந்தை பாலின்றி பாதையில் விழுவது அகிம்சையாஃ

பசிக்கு ரத்தம் குடிக்கும் பேய்களை போருக்கு இழுப்பது அதர்மமா,
அச்சமிலலாத நெஞ்சங்கள் ஆடிப்புனலுக்கு அஞ்சிடுமா?
துச்சம் உயிரெனும் கொள்கையிலே தூக்கிய கரங்கள் கீழ்வருமா?” 
-என்று-
மதுரையில் ஒரு தமுஎச பயிற்சி முகாமின் இறுதியில் கரிசல் பாடிய பாடல் வரிகளின் நெருப்பு இன்னும் பல்லாயிரம் தோழர்களின் நெஞ்சில் பற்றி எரிந்துகொண்டுதானே இருக்கிறது! அந்த ஆவேசம் பலப்பல ஆண்டுகள் கழிந்தும் கடந்த விருதுநகர் மாநாட்டின் போதும் மாநாட்டின் நிறைவுக்குப்பின் கிருஷ்ணசாமி பாடிய பாடலில் தெறிப்பதை மேலுள்ள படத்தைப் பார்ப்பவர்கள இப்போதும் புரிந்துகொள்ள முடியும். அந்தக் குரல் தந்த ஆவேசம் இன்னும் எத்தனை தோழர்களை உசுப்பிவிட்டுக்கொண்டு இருக்கிறது! அந்தக் குரல் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் ஒலிக்க வேண்டும். ஒலிக்கும் அதன் எதிரொலியும் ஆங்காங்கே கிடைக்கும். அதுதானே கலையின் வெற்றி! 

இதுபோல ஒவ்வொரு மாவட்டத்திலும் தமுஎச வளர்ந்த வராற்றை எழுதினால், அதில் கரிசல் குயில் கிருஷ்ணசாமி எனும் சுயஎதிர்ப்பார்ப்புகள் ஏதும் இல்லாத மாமனிதனின், கணீர்க்குரலின் பங்களிப்பின தொகு்ப்பை எழுதலாம். .... 
திருமணவிழாப் படங்கள்  பிற நிகழ்வுகள் பற்றிய தகவல்கள் வந்தபிறகு இந்தப் பக்கத்தில் மேலும் எழுதலாம்... 
அதுவரை உங்கள் கருத்தறிய ஆவல்... 
தோழர்களே தோழர்களே தூக்கம் நமக்கிலை வாருங்கள்,
அன்புடன் - நா.முத்துநிலவன்.
அலைபேசி - 94431 93293
------------------------------------------------ 

தேர்வில் தோல்வி - மாணவ-மாணவி தற்கொலை என்ற செய்தி தந்த வலியில் வந்த பாடல்


                       

               பல்லவி
முட்டாள் மாணவர் யாருமில்ல - எதுவும் 
முடியாத பிள்ளைகள் எவருமில்ல 

                                      அனுபல்லவி :
தெரிஞ்சிக்கணும் இத புரிஞ்சிக்கணும் - நம்ம 
பிள்ளைகளின் படிப்ப பகிர்ந்துக்கணும் 
                                
                                      சரணம் :  
ஆசிரியர் என்பவுங்க  யாரு? - அவுங்க 
பள்ளியில் இருக்குற பெற்றோரு 
பெற்றோரு என்பவுங்க யாரு? அவுங்க 
வீட்டுல இருக்குற வாத்தியாரு              (தெரிஞ்சிக்கணும்

'படிச்சுப் பாத்தேன் புரியலையே - பள்ளிப் 
பாடம் மனசுல பதியலையே!
மதிப்பெண் எடுக்கத் தெரியலையே' - என 
மண்ட குழம்புது நம்ம புள்ளையே!            (தெரிஞ்சிக்கணும்

மதிப்பெண் எடுப்பது அவசியம்தான் - ஆனா
மதிப்பெண் மட்டுமே வாழ்க்கையில்லே!
இருக்குற திறமைய புரிஞ்சிக்கணும் - அத 
எப்படியும் வளர்க்க தெரிஞ்சிக்கணும் -       (தெரிஞ்சிக்கணும்

ஏ.ஆர்.ரகுமான் பத்தாவது போகல - அந்த 
பில்கேட்ஸ் கூட பி.யூ சி.தாண்டல 
டெண்டுல்கர் கூட டெண்த்த தாண்டல - ஆனா
வாழ்க்கையில் சரித்திரம் படைக்க மறக்கல   (தெரிஞ்சிக்கணும்

(ஓங்கிய குரலில்...)
தெரிஞ்சிக்கணும் இத புரிஞ்சிக்கணும் - நம்ம 
பிள்ளைகளின் படிப்ப பகிர்ந்துக்கணும் 
முட்டாள் மாணவர் யாருமில்ல- எதுவும்
முடியாத பிள்ளைகள் எவருமில்ல...
------------------------------------------------

(தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் அனைவருக்கும் ஆரம்பக் கல்வி இயக்கமும் இணைந்து புதிய கல்வி பயிற்றுவித்தல் முறைகளை பொதுமக்களும் கிராமக் கல்விக்குழு உறுப்பினர்களும் -ஆசிரியர்களும் கூட - புரிந்துகொள்வது அவசியம் எனும் கருத்தினை பிரச்சாரம் செய்ய நான் எழுதித் தந்த பாடல். கடந்த 2011இல் 150க்கு மேற்பட்ட அறிவியல் இயக்க TAMIL NADU SCIENCE FORUM -TNSF- கலைக்குழுக்கள் இதுபோன்ற பாடல்களுடன் நாடகங்களையும் தமிழ்நாடு முழுவதும் நடத்தின.
--------------------------------------- 
இப்போது, தேர்வு முடிவுகள் வந்த கையோடு மாணவ-மாணவியர் சிலரின் தற்கொலைச் செய்திகளும் வந்த-தந்த வலியில் இதைத் தேடிப்பிடித்துப் பாடிப்பார்த்தேன். நீங்களும் படியுங்களேன்.
ஆனால் கணியில் வலையில்....என்
குரலை ஏற்றத் தெரியலையே -இந்தக்
குறைதான் இன்னும் மாறலையே-அந்த
முறைதான் இன்னும் புரியலையே!
 – நா.முத்துநிலவன்

09-05-2013)
------------------------------------------------------------------- 
இணைந்த செய்திகள் - 

வியாழக்கிழமை, 9, மே 2013 (12:32 IST) -  நன்றி - http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=98932

மதிப்பெண் குறைந்ததால் கோவையில் மாணவி தற்கொலை 
கோவை மாவட்டத்தில், எதிர்பார்த்த மதிப்பெண் வரவில்லை என்ற காரணத்தால் ஒரு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தமிழகம் முழுவதும் இன்று பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில், கோவை மாவட்டம் நரசிம்மன் நாயக்கன் பாளையத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் 990 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். ஆனால், அவர் எதிர்பார்த்த மதிப்பெண் வரவில்லை என்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
மதிப்பெண் குறைந்ததற்கும், தேர்வில் தோல்வி பெற்றதற்கும் தற்கொலை மட்டுமே தீர்வாகாது. தேர்வில் தோல்வி அடைந்தவர்கள் உடடினயாக இந்த ஆண்டே மறுதேர்வெழுதி, உயர்கல்வியைத் தொடர வாய்ப் பிருக்கும் போது, தேவையற்ற முடிவுகளை மாணவர்கள் எடுக்கக் கூடாது.
------------------------------------------ 
பதிவு செய்த நாள் : May 09 | 11:19 pm - நன்றி - http://www.dailythanthi.com/node/276041
சென்னை - பிளஸ்–2 தேர்வில் தோல்வி அடைந்த சென்னை மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். குறைந்த மதிப்பெண் பெற்ற மற்றொரு மாணவி தற்கொலைக்கு முயன்று ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
பிளஸ்–2 தேர்வில் தோல்வி சென்னை கொடுங்கையூர் ராகவேந்திரா நகரை சேர்ந்தவர் மேத்யூவ்(வயது45). கொத்தனார். இவரது மனைவி மார்த்தா(36). இவர்களுக்கு டெய்சி(17) என்ற மகளும், காளிப்(13) என்ற மகனும் உள்ளனர். இதில் டெய்சி பெரம்பூரில் உள்ள மாநகராட்சி பள்ளியில் பிளஸ்–2 படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று வெளியான பிளஸ்–2 தேர்வு முடிவை அவர் பார்த்தார். அப்போது மாணவி டெய்சி தேர்வில் 621 மதிப்பெண்கள் பெற்று வரலாறு பாடத்தில் பெயில் ஆனது தெரியவந்தது.
தூக்குப்போட்டு தற்கொலை இதில் மனவேதனையுடன் வீட்டிற்கு வந்த அவர் தேர்வு முடிவு குறித்து தனது தந்தைக்கு செல்போனில் தெரிவித்தார். இதைக்கேட்ட அவர் மகளுக்கு ஆறுதல் கூறினார். பின்னர் அங்கு வேலைபார்த்த தனது மனைவி மார்த்தாவை வீட்டுக்கு அனுப்பி வைத்தார். இந்த நிலையில் தனது சகோதரனுடன் வீட்டில் இருந்த டெய்சி பக்கத்து அறைக்கு சென்று யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்தார். இதுபற்றி தகவல் கிடைத்ததும் அங்கு வந்த மாணவியின் பெற்றோர்கள் கதறி அழுதனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது.
குறைந்த மதிப்பெண் பெற்றார்  இதேபோன்று ராயபுரம் தம்பிலேன் பகுதியை சேர்ந்த செல்லதுரை மகள் வினோதினி(17). இவர் பிளஸ்–2 தேர்வு எழுதி இருந்தார். தேர்வில் தான் அதிக மார்க் வாங்குவேன் என்ற நம்பிக்கையில் இருந்தார். ஆனால் அவர் 988 மதிப்பெண்கள் பெற்றார். தான் எதிர்பார்த்த மதிப்பெண் வரவில்லை என தனது தோழிகளிடமும், வீட்டில் இருந்தவர்களிடமும் கூறி வேதனை அடைந்தார்.
தூக்கில் தொங்கினார் இந்த நிலையில்  மாலை 4 மணி அளவில் வீட்டில் யாரும் இல்லாத நிலையில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். இதை பார்த்த அவரது தாயார் அலறினார். இதைக்கேட்டு அங்கு வந்த அக்கம்பக்கத்தினர் மாணவியை மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர் அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------  

கார்ல் மார்க்ஸ் பிறந்தநாள் விழாக் கருத்தரங்கம்


புதுக்கோட்டை கந்தர்வன் நூலகத்தில் நடந்தது

 நூல்களை வழங்குகிறார் நல்லாசிரியர் பாவலர் பொன்.கருப்பையா.
அருகில் -இடமிருந்து- கந்தர்வன் நூலக நிர்வாகி கவிவர்மன், இந்தியக் கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் மா.சின்னத்துரை, உணவக உரிமையாளர் சங்கத் தலைவரும், கந்தர்வன் நூலக வளர்ச்சிக்குழுத் தலைவருமான சண்முக.பழனியப்பன்(நூல்கள் பெறுபவர்), உள்பக்கமாக அறிவியல் இயக்க மாவட்டத் தலைவர் லெ.பிரபாகரன், தமுஎகச மாவட்டச் செயலர் கவிஞர் ரமா.ராமநாதன், நா.முத்துநிலவன் ஆகியோர் உள்ளனர். புகைப்படம்-“தினகரன்“அழகிரி.
-----------------------------------
புதுக்கோட்டை-மே.6 புதுக்கோட்டை அய்யனார்புரத்தில் உள்ள ‘கந்தர்வன் நூலகத்தில் நடந்த உலகத்தை மாற்றியமைத்த மாமேதை கார்ல் மார்க்ஸின் 196ஆவது பிறந்தநாள் விழா சிறப்புக் கருத்தரங்கில் பேசிய மார்க்சிஸ்ட் கம்ய+னிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் மா.சின்னத்துரை, இளைஞர்களும் மாணவர்களும் வாசிப்பை நேசிக்க வேண்டும் என்றார்
மார்க்ஸ்-பிறந்தநாள் சிறப்புக் கருத்தரங்கத்திற்கு, நூலக வளர்ச்சிக்குழுத் தலைவரும், மாவட்ட உணவக உரிமையாளர் சங்கத்தின் தலைவருமான சண்முக.பழனியப்பன் தலைமை தாங்கினார்.  அவர் பேசும்போது, ஆசிரியராக வேண்டும் என்ற தன் கனவு நிறைவேறாவிட்டாலும், தடம்பதித்த தத்துவ ஆசிரியர் பலரின் நூல்கள் தனது வாழ்க்கைத் தடத்தை மாற்றியமைத்த குறிப்புகளைப் பகிர்ந்து கொண்டார்.
பாவலர் பொன்.கருப்பையா, களக்கமங்கலம் சக்திவேல், காசாவயல் கண்ணன், எஸ்.ஏ.கருப்பையா, சிவ. காவிரிச்செல்வன், சபரிநாதன், பேச்சாளர் மகா.சுந்தரின் மகள் மாணவி சுபாஷிணி ஆகியோர் சமூக உணர்வுமிக்க இசைப்பாடல்களைப் பாடினர்.

எனக்குப் பிடித்த புத்தகம் எனும் பொதுத் தலைப்பிலான கருத்தரங்கில்
வெ.சாமிநாத சர்மா எழுதிய காரல்மார்க்ஸ் வாழ்க்கை வரலாறு நூல்பற்றி
அறிவியல் இயக்க மாவட்டத்தலைவர் லெ.பிரபாகரனும்
தனுஷ்கோடி ராமசாமி எழுதிய தோழர் நாவல்பற்றி
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க மாவட்டச்செயலர் ரமா.ராமநாதனும்
இரா.ஜவகர் எழுதிய கம்ய+னிசம் நேற்று-இன்று-நாளை நூல்பற்றி
மாநிலத் துணைத்தலைவர் ஆர்.நீலாவும்
nஉறலன் கெல்லரின் என் கதை நூல்பற்றிக்
கவிஞர் கவிவர்மனும், கருத்துரையாற்றியதோடு,
தான் வாசித்த புத்தகங்களை கந்தர்வன் நூலகத்திற்கே வழங்கி
நூல்களைப் படிக்காத அனைவரையும் படிக்குமாறு கேட்டுக்கொண்டார்கள்.

கந்தர்வனை (சு) வாசிப்போம் எனச் சிறப்புரையாற்றிய கவிஞரும் பாரதிதாசன் பல்கலைக்கழக ஆட்சிமன்றக் குழு உறுப்பினருமான கவிஞர் தங்கம் மூர்த்தி மிகச்சிறந்த சிறுகதை எழுத்தாளராகவும், எழுச்சிக்கவிஞராகவும் மட்டுமின்றி, அரசு ஊழியர்களின் போராட்டத்தலைவராகவும் புதுக்கோட்டையில் வாழ்ந்து மறைந்த கந்தர்வனின் வாழ்க்கை மற்றும் படைப்புச் சிறப்புகளை இளைய படைப்பாளிகள் பின்பற்றி எழுதவும் அவர்போல வாழவும் உறுதியேற்க வேண்டும் என்று புகழாரம் சூட்டினார்.

வாசிப்பை நேசிப்போம் எனும் தலைப்பில் நிறைவாகப் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் மா.சின்னத்துரை, இளைஞர்களுக்கும் மாணவர்களுக்கும் பயன்படும்படியான போட்டித் தேர்வு நூல்களோடு, அவர்களின் சிந்தனையோட்டம் சமூக உணர்வு மிக்கதாக வளரும் வகையிலும் நூல்களைச் சேகரித்து இளைஞர்-மாணவர்களின் வாசிப்பை நேசிக்கும்படியான பயிற்சிக் களமாகக் கந்தர்வன் நூலகம் திகழவேண்டும் என்பதே தமது ஆசை என்றும் தெரிவித்தார்.

தொகுப்புரையாற்றிய கவிஞர் முத்துநிலவன், இந்தஆண்டு, ஆட்சிப்பணித்தேர்வில் இந்திய அளவில் தேர்வு செய்யப்பட்ட தொள்ளாயிரம் பேரில் சுமார் நூறுபேர் தமிழகத்திலிருந்து தேர்வு பெற்றிருப்பதையும், கடந்த பத்து ஆண்டுகளில், இந்தியாவில் கல்வியறிவு சதவீதம் உயர்ந்திருப்பதையும் அதிலும் குறிப்பாகப் பெண்கல்வி, ஆண்களைவிடப் பத்து சதவீதம் அளவிற்கு உயர்ந்திருப்பதையும் பெருமையுடன் குறிப்பிட்டார். 

விழாவில் பேசிய பலரும் கவிஞர் கந்தர்வன் நூலகம், ஆய்வாளர்களுக்காக மட்டுமின்றி, வேலைதேடும் ஐ.ஏ.எஸ், மற்றும் அரசுப் பணியாளர் தேர்வுகளுக்குத் தயாராகும் ஏழை மாணவர்-இளைஞர்களுக்கும் பயன்பட வேண்டும். அதற்கான விலைமதிப்பு மிகுந்த புத்தகங்களை வாங்கி, இயன்றவரை பயிற்சி வகுப்புகளையும் இலவசமாகச் செய்ய வேண்டும். பெரும்படிப்புப் படித்தாலும் அவர்களின் சமூக உணர்வே மக்களுக்குப் பயன்படும்.அதுவே காரல்மார்க்ஸ், கந்தர்வன்  போன்ற நமது முன்னோடிகளுக்குச் செய்யும் உண்மையான அஞ்சலி எனக்கூறி அதற்கு உதவுவதாகவும் தெரிவித்தனர்.
--------------------------------------------------

தலைமை ஆசிரியர் கழக மாநிலப் பொதுச்செயலர் சாமி.சத்தியமூர்ததி  

 நூல்கள் வழங்குகிறார்-   புகைப்படம்-திரு.ராஜ்குமார், புதுக்கோட்டை.
-----------------------------------------------
பாரதிதாசன்  பல்கலைக்கழ ஆட்சிக்குழு உறுப்பினர் கவிஞர் தங்கம் மூர்த்தி, தலைமை ஆசிரியர்கழகப் பொதுச்செயலர் சாமி.சத்தியமூர்த்தி, “நல்லாசிரியர்பாவலர் பொன்.கருப்பையாகவிஞர் கீதா,முதலானோர் நூலகத்திற்குப் புத்தகங்கள் வழங்கினர்.

விழாவில், ஓய்வுபெற்ற மாவட்ட வருவாய் அலுவலர்கள் அ.முத்துகிருஷ்ணன், மு.முத்தையா, திருச்சி ஊடக எழுத்தாளர் வில்வம், எழுத்தாளர் அவுரங்கசீப், த.நா.ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணித் தலைவர் கருப்பையா, சிஐடியூ தலைவர் ஜியாவுதீன், புதுகை பிலிம்சொசைட்டி கவிஞர் இளங்கோ, பி.எஸ்.என்.எல்.உழைக்கும்பெண்கள் ஒருங்கிணைப்பாளர் மல்லிகா, தமிழாசிரியர் கழகத்தலைவர்கள் கும.திருப்பதி குருநாதசுந்தரம் மகா.சுந்தர்,  ஆசிரியர் தமிழ்ச்செல்வி, கவிஞர்கள் ஸ்டாலின் சரவணன்ராசி.பன்னீர்ச்செல்வன்,   கவிபாலாபீர்முகமது, புதுகைப் புதல்வன்சிவக்குமார் உள்ளிட்ட திரளானோர் கருத்தரங்கில் கலந்துகொண்டனர்.

முன்னதாக, எல்ஐசி ஊழியர் சங்கத் தலைவர் கண்ணம்மா வரவேற்றார்
ஓய்வு பெற்ற ஆசிரியரும் ஓய்வறியா மக்கள் தொண்டருமான தோழர் அ.பாலசுப்பிரமணியன் நன்றி கூறினார்.
-----------------------------------------------------
இணைப்பிற்கு - http://dinamani.com/edition_trichy/pudukottai/2013/05/06/ 
செய்தி - திரு மோகன் ராம்,  தினமணி நாளிதழ், புதுக்கோட்டை
                  தோழர் சு.மதியழகன், தீக்கதிர் நாளிதழ், புதுக்கோட்டை
புகைப்படங்கள் - திரு அழகிரி, தினகரன் நாளிதழ், புதுக்கோட்டை
                                    திரு.ராஜ்குமார், புதுக்கோட்டை.

வெளியிட்டமைக்கு நன்றி - தினமணி, தினகரன் நாளிதழ்கள் - 06-05-2013,
                                                          மற்றும் தீக்கதிர் நாளிதழ் -07-05-2013
---------------------------------------------------------