எனது வலைப் பக்கத்தின் 1000ஆவது பதிவு!

எனது புதிய நூல்களின் வெளியீட்டு விழா அழைப்பு!

எனது வலைப்பக்க வாசகர்களுக்கு வணக்கம்.

உங்களால் இது நடக்கிறது, 

உங்களுக்கு என் முதல் வணக்கம்

    தமிழறிஞராகவும், அப்போதைய எங்கள் மாவட்டத்தின் முதன்மைக் கல்வி அலுவலராகவும் பணியாற்றிய எங்கள் அய்யா முனைவர் நா.அருள்முருகன் அவர்களின் தூண்டுதலில், கடந்த 2011இல்,  20,30பேர்  இணையத்தில் எழுதும் ஆர்வத்தில் வலைப்பக்கம் தொடங்கினோம். இப்போது பலரும் – பலரும் என்ன, அனேகமாக எல்லாருமே – இதைத் தொடராத போதும் நான் மட்டும் வலைப்பக்கத்தில் எதையாவது எழுதிக் கொண்டே – அல்லது இதழ்களில் வெளிவரும் எனது படைப்புகளை எடுத்துப் பதிவிட்டுக் கொண்டே இருந்தேன்...!

      பிறகு பார்த்தால் ... இதில் எழுதியவற்றையே நூலாக வெளியிடலாம் என்று நண்பர்கள் அவ்வப்போது தூண்டியதுண்டு.

அடுத்து 2014இல் நான் பணிஓய்வு பெற்றபோது, பணிஓய்வு விழாவை விரும்பாத நான், அதையும் எனது வலைப்பக்கத்தில் எழுத, அதுதான் இன்று வரையும் எனது வலைப்பக்கத்திலேயே அதிகம் பேர் பார்த்த பதிவாக –சுமார் 3லட்சம்+பேர்- பார்த்ததாக இப்போதும் உள்ளது எனக்கே வியப்பாகத்தான் இருக்கிறது. 2015இல் அதுவரை எழுதியதைத் திரட்டி 3நூல்கள் கொண்டு வந்தேன். அதை வெளியிட்டதும் அண்ணன் கவிஞர் மீரா அவர்களின் மகன், நண்பர் கதிர்.மீரா அவர்கள்தான்

நன்றி, எனது வலைப்பக்கமே!

இந்த வலைப்பக்கம் இல்லாவிட்டால் இவ்வளவு நூல்கள் எழுதியிருப்பேனா என்று தெரியவில்லை. தோன்றாத் தூண்டலாக இது திகழ்ந்து வருகிறது என்பது உண்மைதான்.

வாசகர்கள் அதிகரித்திருப்பதால் இதில் விளம்பரம் போடலாம் என்றும் சொன்னார்கள். நான் அதை விரும்பவில்லை.

1993இல் புதிய மரபுகள்” எனும் எனது முதல் கவிதைத் தொகுப்பை அண்ணன் மீரா அவர்கள் தனது அன்னம் வெளியீடாக வெளியிட்டார்கள். அதுமுதலே 15ஆண்டுக்கும் மேலாக அந்த நூல் மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தின் முதுகலை தமிழ் வகுப்புக்குப் பாடமாக இருந்தது. என்னை முன்பின் அறியாத பேரா.முனைவர் இரா.மோகன்தான் இப்படிச் செய்திருக்கிறார் என்பது பின்னால் புரிந்தது.

புதிய மரபுகள் கவிதைத் தொகுப்பிற்குப் பிறகு நான் வெளியிட்ட படைப்புகள் எல்லாம், எனது இந்த வலைப்பக்கத்திலிருந்து எடுத்த தொகுப்புகள் தான்!

இந்த வலைப்பக்கத்தின் 1000ஆவது பதிவு இது! 

இந்த வலைப்பக்கத்தில் எழுதி, அல்லது வேறுசில இதழ் வெளியீட்டுக்காக எழுதி, பிறகு இந்த வலைப்பக்கத்தில் இட்ட பதிவுகள்! இப்போது புதிய நூலாகி அதன் வெளியீட்டு விழா அழைப்பிதழ்தான் எனது 1000ஆவது பதிவு என்பதால் இந்த எனது  வலைப்பக்கம் என் நன்றிக்குரியது தானே?

இதோ நமது அன்பு நண்பர்களின் விருப்பத்திற்கேற்ப (எனது 70ஆவது பிறந்த நாளையொட்டி - பிறந்த நாளை அந்த அழைப்பிதழிலேயே கொண்டு வராமல்)   நூல்வெளியீடு மற்றும் எனது படைப்புகள் பற்றிய ஆய்வரங்கமாகவே அழைப்பிதழ் வந்திருப்பது எனக்கு நிறைவைத் தருகிறது. 

இதோ அந்த அழைப்பிதழ்!

அருகில், வரக்கூடிய தூரமும் - நேரமும் உள்ள நமது நண்பர்கள் வந்தால் அதைவிட மகிழ்ச்சி வேறென்ன? எனது அன்பான அழைப்புடன் அந்த அழைப்பிதழையே 1000ஆவது பதிவாக இடுவதில் இரட்டை மகிழ்ச்சி அடைகிறேன்.



விழாவில் வெளியிட உள்ள நூல்கள் :

(முன்னுரை - கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்கள்)
--------------------------------------------------------------------------------

(முன்னுரை - முனைவர் வீ.அரசு அவர்கள்)
------------------------------------------------------------------------- 
நூல் வெளியீடுகளில் பங்கேற்க வருகை தரும் பெருமக்கள்-

அமைச்சர் எஸ்.ரகுபதி அவர்கள்
---------------------------------------------------------------- 
அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் அவர்கள்
---------------------------------------------------------------- 

நாடாளுமன்ற உறுப்பினர் 

திருமிகு எம்.எம். அப்துல்லா அவர்கள்


அண்ணன் செந்தலை ந.கவுதமன் அவர்கள்,


கவிஞர் மதுக்கூர் இராமலிங்கம் அவர்கள்


புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர்
மருத்துவர் திருமிகு வை.முத்துராஜா அவர்கள்

கந்தர்வ கோட்டை சட்ட மன்ற உறுப்பினர் 
தோழர் மா.சின்னதுரை அவர்கள்

மேனாள் சட்டமன்ற உறுப்பினர்
கவிச்சுடர் இரா.சு.கவிதைப் பித்தன் அவர்கள்

என்றும் எனதன்பிற்குரிய
தோழர் 'பூபாளம்'  பிரகதீஸ்வரன் அவர்கள்
மற்றும்
மார்க்சியப் பொதுவுடமைக் கட்சியின்

மேனாள் மாவட்டச் செயலர் கவிஞர் கவிவர்மன் அவர்கள்

இந்நாள் மாவட்டச் செயலர் தோழர் அ.சங்கர் அவர்கள்

புதுக்கோட்டை மாநகராட்சி உறுப்பினர்களும்

என் அன்பு மகள்களுமான

செந்தாமரை பாலு அவர்கள், 

அன்புமேரி முத்தால் அவர்கள்

மற்றும்

தோழமைச் சங்கங்களின் அன்புத்தலைவர்கள்

உள்ளிட்ட 

சான்றோர் பெருமக்கள் அனைவரையும்

வணங்கி வரவேற்கக் காத்திருப்பது

'வீதி' கலைஇலக்கியக் களம்,

புதுக்கோட்டை தமிழ்ச்சங்கம்,

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கம்.

-----------------------------------------------------------------------

இதிலும் தன்வீட்டு வேலை போல இதை எடுத்துச் செய்துகொண்டிருக்கும் 

புதுக்கோட்டை தமிழ்ச் சங்கத் தலைவர்

கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்கள்

வீதி கலை-இலக்கியக் களம் ஒருங்கிணைப்பாளர்

கவிஞர்  மு.கீதா அவர்கள்

தமுஎகச மாவட்டத் தலைவர்

கவிஞர் ராசி.பன்னீர்செல்வம் அவர்கள்

தமுஎகச மாவட்டச் செயலர்

கவிஞர் ஸ்டாலின் சரவணன் அவர்கள்

இவர்களோடு இயங்கி என்னையும் இயக்கிவரும்

இந்த அமைப்புகளின் உற்சாகத் தோழர்கள்

இவர்களால் இந்த விழா ஏற்பாடு களைகட்டி வருகிறது!

இவர்களோடு

என்னைத் தங்கள் குடும்பத்தில் ஒருவனாகவே 

உறவு பாராட்டும் தங்கைள், மகள்கள், தம்பிகள்

 இவர்களால் நான்  இருக்கிறேன்!

நம் தோழர்கள், நண்பர்கள்

எனது அன்பான குடும்பத்தினர் என

வருகை தரும் அனைவரையும்

அன்பால் நெகிழ்ந்து வரவேற்கிறேன்.

வாழும் காலத்தில் 

உள்ளுரில் விழா நடப்பது போல

ஒரு படைப்பாளிக்கு

வேறென்ன வேண்டும்? 

வருக! வணக்கம்

------------------------------------------------------- 

ஒரு முக்கியமான பின்குறிப்பு.-

அப்பாடா! 

'ஆயிரம் பதிவாச்சே ஆயிரம் பதிவாச்சே!

சொக்கா!'  என்றும்,

''ஆயிரம் பதிவு கண்ட அபூர்வ சிகாமணி'' 

என்றும் யாராவது 

பதிவு போட்டீங்க..? 

போட மாட்டிங்க 

என்பதற்கும்

இப்போதே நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

--------------------------------------- 

புலவர் நா.ரா. என்னும் எனது ஆசான்

                

நண்பர்களுக்கு வணக்கம்

------------- இது எனது 999ஆவது பதிவு -------------

(பக்கவாட்டில் இருக்கும் பதிவுகள் எண்கள் பார்க்க)

------------- அடுத்த பதிவு 1000ஆவது பதிவு -------------

அதை இன்னும் சில நாள்களில் பதிவிடுவேன்.

அதற்கு முன்னோட்டமாக எனது ஆசானுக்கு

நன்றிசெலுத்தும் விதமாக இந்தப் பதிவு

---------------------------------------------------------------

இன்றைய என்னைஉருவாக்கியவர்களில் முக்கியமானவர் புலவர் நா.ரா. அவர்கள். அவர்களது மகனும் எனது இனிய நண்பருமான தோழர் ஜீவா மகள் திருமணத்தில் வெளியிட்ட மலரில் வந்த                             எனது கட்டுரை இது

நன்றி – தோழர்கள் இராமதிலகம், நாகலட்சுமி.

எழுத்தாளர் அண்டனூர் சுரா

---------------------------------------------------- 

எனது மேடைப் பேச்சுக்கு, ஆசான் புலவர் நா.ரா அவர்கள்!

---நா.முத்துநிலவன்--

ப்போது, -2024இல்- அமெரிக்கா உட்படப் பல்வேறு நாடுகளுக்கும் அழைக்கப்பட்டு, சென்று, பேசிவரும் எனக்கு, 45ஆண்டுகளுக்கு முன்னால் (1979இல்) முதன் முதலாகப் பட்டிமன்ற மேடையேற்றிப் பேசப் பயிற்சி தந்த, எனது மேடைப்பேச்சு ஆசான் புலவர் நா.இராமச்சந்திரன் () என்.ஆர். () புலவர் நா.ரா அவர்கள்தான் என்பதை நன்றியோடு எங்கும் சொல்வேன்

உண்மை வெறும் புகழ்ச்சி இல்லை!

வாருங்கள் விவரம் சொல்வேன்-

பெயர் சொல்லியோ பெயரின் முன்னெழுத்துகளுடன் தோழர் எனும் களங்கமற்ற நட்பின் சொல்லைச் சொல்லியோ அழைப்பது இடதுசாரித் தோழர்களின் இயல்புதானே? ‘என்ன தோழர் என்.எஸ்?” என்று மூத்த தலைவர் என்.சங்கரய்யாவை நான் அழைத்ததுண்டு. இப்போதும் சி.பி.எம்.-அரசியல் தலைமைக் குழுத் தோழர் ஜி.ராமகிருஷ்ணன் அவர்களிடம் பேசத் தொடங்கும் போதுசொல்லுங்கள் ஜி.ஆர்.என்று பேசுவதுண்டு!

அதுபோலவே, 2010இல் ஒருநாள் காலை 6-மணியிருக்கும், எனது செல்பேசி சிணுங்கியது. தூக்கக் கலக்கத்தில் எடுத்த நான், ‘வணக்கம், யாருங்க?” என்று என் இயல்பில் கேட்டுவிட்டேன்.நான் நல்லக்கண்ணு பேசுறேன்என்று பதில் வர, தூக்கக் கலக்கத்தில் இருந்த நான், ‘எந்த நல்லக்கண்ணு?” என்று கேட்டுக் கொண்டே எழுந்து உட்கார, ’தோழர், நான் ஆர்.என்.கே. பேசுறேன்என்று உரிமையான அதட்டலுடன் பதில் வர, எனக்கு சுருட்டி வாரிப்போட, உடனே சுதாரித்துக் கொண்ட நான்.மன்னிக்கணும் தோழர்..என்று இழுக்க, ‘எனது தூக்க மயக்கத்தைபுரிந்து கொண்ட அவர், ‘இன்றைய ஜனசக்தியில்செம்மொழி மாநாடும் கம்பனும்என்ற உங்க கட்டுரையப் படிச்சேன்.. காரைக்குடி கம்பன் விழாவில் தோழர் ஜீவா பேசியதைக் குறிப்பிட்டு எழுதி, அன்றைய நினைவில் என்னை ஆழ்த்திவிட்டீர்கள்..என்று தோழர் ஆர்.என்.கே. பேசப் பேச நான் நெகிழ்ந்து போனேன்.. (அத்தகைய அவர்கள், கடந்த 03-01-2025 அன்று, சென்னையில் காமராசர் அரங்கில் நடந்த, உ.சகாயம் இஆப., அவர்களின்கடைசித் தறியில் கண்டாங்கிச் சேலைநூல் வெளியீட்டு விழாவிற்குத் தலைமை யேற்க வந்தபோது, அவ்விழாவில் பேச அழைக்கப்பட்டிருந்த நான், மேடையிலேயே என்னை அறிமுகப் படுத்திக் கொண்டும் அவருக்கு என்னை நினைவில்லை! நூறாண்டு தாண்டியும் தகைசால் தமிழராக தோழர் ஆர்.என்.கே வாழ்கிறார், நிகழ்ச்சிக்கு வருகிறார் என்பதே பெரும் பேறுதானே?) அப்படி, தோழர் என்ற சொல்லிலேயே  அவ்வளவு பாசம்!

இடதுசாரிகளின் வழக்கப்படியே, மற்றவர்கள் புலவர் இராமச்சந்திரன் அவர்களை, என்.ஆர்.’ என்றே அழைக்க, நான் மட்டும் தோழர் நா.ரா.’ என்றே அழைத்தேன்.  கல்லூரிக் காலத்தில் (1974-78) திருவையாறில் உள்ள நான்காண்டுப் படிப்புக்கான அரசர் கல்லூரியில் எனக்கு மூத்த தமிழியக்கத் தோழர்கள புலவர் செந்தலை ந.கவுதமன், முனைவர் மு.இளமுருகன் ஆகியோர் தந்த பயிற்சியில்-- முன்னெழுத்தை (இனிஷியல்) தமிழிலேயே நான் இட்டுக் கொண்டதுடன் பிறரையும் அவ்வாறே இடச் சொல்வது வழக்கம். அப்படித்தான் என்.முத்து பாஸ்கரனாக இருந்த நான், நா.முத்துநிலவன் ஆனேன்.  இந்தப் பெயரை எனக்கு இட்டவர் அண்ணன் புலவர் செந்தலை ந.கவுதமன்தான். இப்போது வரை, என்னை யாராவது என்.முத்துநிலவன் என்று சொன்னால் அவ்வளவு கோவம் வரும்! (நான் என்ன அவுங்களோட முத்துநிலவனா, மக்களின் தோழன் அல்லவா? என்பது போல!) அரசுப் பள்ளி வருகைப் பதிவேட்டில்தான் நா(ன்).முத்துபாஸ்கரன்! அந்த வகையில் மற்றவர்க்குஎன்.ஆர்.என்றாலும் எனக்கு, என்றும் தோழர் நா.ரா.தான்!   

1979-80-இல், புதுக்கோட்டை அரசு ஆசிரியப் பயிற்சிக் கல்லூரியில் தமிழாசிரியப் பயிற்சி படித்துக் கொண்டிருந்தேன். அது ஆறுமாதப் பயிற்சி தான். புலவர் படிப்பை முடித்தவர்கள் தமிழாசிரியராகப் பணியேற்க அந்த ஆறுமாதப் படிப்பே அப்போது போதுமானது. அந்த ஆண்டே இரண்டு தாள் மட்டும் எழுதி புலவர் பட்டம் பெற்றவர்கள் எழுத வேண்டிய பி.லிட். தேர்வை எழுதி- தேர்ச்சி பெற்றேன். பிறகு முதுகலைத் தமிழ்த் தேர்விலும் தேர்ச்சி பெற்றேன். 1980இல் ஆவுடையார்கோவிலை அடுத்துள்ள அமரடக்கி அரசு உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியேற்றேன். ஆயினும் சிறந்த தமிழாசிரியராக இன்னும் என்னைத் தகுதிப் படுத்திக் கொள்ள விரும்பி, புதுக்கோட்டை மாவட்டத்தில் சிறந்த தமிழாசிரியர்களைப் பற்றிப் பலரிடமும் விசாரித்துத் தெரிந்து, தெளிந்து, புலவர் நா.ரா அவர்களைப் பற்றி அறிந்து, தேடிப் போய்ச் சந்தித்தேன்.

புலவர் நா.ரா. அவர்களை அஞ்சல்வழியாகவே எனக்கு அறிமுகப் படுத்தி வைத்தவர், நான் படித்த திருவையாறு அரசர் கல்லூரியில் பிந்திய இரண்டாண்டு முதல்வராக இருந்த பேராசிரியர் சொ.சண்முகானந்தம் (எ) பாரதிப்பித்தன் அவர்கள்! அப்போது தொலைபேசி பரவலாக இல்லை  என்பதால், நான் உரிமையோடு பேசக் கூடிய என் முதல்வருக்குக் கடித வழியே தொடர்பு கொண்டு கேட்டேன். அவர் சில நூல்களை எழுதிய எழுத்தாளராகவும், தமிழ்நாடு கலை-இலக்கியப் பெருமன்றத்தின் தஞ்சை மாவட்டப் பொறுப்பாளராகவும் இருந்தவர், தோழர் நா.ரா பற்றி எனக்குச் சொல்லி அவரைப் போய்ப் பார்த்து அறிமுகப்படுத்திக் கொள்! எனது மாணவன் என்று சொல்என்றும் தெளிவாக அறிவுறுத்தியிருந்தார்.

ஆலங்குடியில்1983இல் (அப்போது என்வயது-27) நடந்த புலவர் நா.ரா. அவர்களின் அண்ணன் மகள் திருமணத்திற்கு வந்த எங்கள் முதல்வர் பாரதிப் பித்தன் அவர்கள், புதுக்கோட்டையில் என் வீட்டு முகவரியைக் கேட்டு வந்து சேர்ந்தார்! கல்லூரிப் படிப்பை முடித்து வந்து 5ஆண்டுகள் ஆனாலும் தொடர்பு விட்டுப் போகவில்லை! நானும் விட விரும்பவில்லை! சாப்பிட்டு ஓய்வெடுத்து, என்னையும் அழைத்துக் கொண்டே ஆலங்குடி வந்து என்னை நா.ரா.அவர்களிடம் நேரடியாகவும் அறிமுகம் செய்தார்.  

      அதற்கு முன்பே நாங்கள் அறிமுகமாகிப் பட்டிமன்றங்களில் பேசிக் கொண்டிருந்தோம். என்றாலும்இவனப் பாத்துக்கங்க என்.ஆர்.! நெறயப் படிப்பான், புலவர் படிப்பில் இரண்டாம் ஆண்டில் மாநில முதல் இடமும், நான்காம் ஆண்டு இறுதித் தேர்வில் இரண்டாமிடமும் பெற்றவன். கலை-இலக்கியப் பெருமன்றத்திற்கு வருவான்னு பார்த்தேன், இவன் என்னடான்னா, முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் இருக்கிறான்என்று சலித்துக் கொண்ட தொனியில் சொன்னார். நான் கல்லூரியில் படித்த போதே தோழர் அறிவுறுவோன், மன்னை மறவன் (எ) மன்னார்குடி விஜயரங்கன் வழியாக மதுரையில் தமுஎச தொடங்கப்பட்டது அறிந்து, திருவையாறில் கிளை தொடங்கி அதன் முதல் செயலாளராகி, தஞ்சை மாவட்ட முதல் மாநாடு நாகையில் நடந்தபோது பிரதிநிதிகளோடு நான் சென்று கலந்து கொண்டது எங்கள் முதல்வருக்குத் தெரியும்! பிறகு புதுக்கோட்டைக்கு வந்த நான், 1978இல் த.மு.எ.ச.வின் புதுக்கோட்டை நகரத்தின் முதல் கிளைச் செயலராக, பிறகு பல இடங்களில் கிளைகள் அமைத்தபின் மாவட்டச் செயலராக இருந்து வந்தேன் என்பதை தோழர் நா.ரா.வும் அறிவார். எனவே தன் இயல்பில் வெடித்துச் சிரித்துக் கொண்டேஅதனால என்ன? இரண்டுமே இரட்டைக் குழல் துப்பாக்கி தானே?’ என்று என் முதுகில் தட்டிக் கொடுத்தார். அது எனக்குப் பலப்பல விருதுகள் பெற்றது போலிருந்தது! அந்தச் சிரிப்பில் ஜீவா தெரிந்தார்!   

ஒரு பேச்சு எப்படி இருக்க வேண்டும்?” என்றால், புலவர் நா.ரா. அவர்கள் பேச்சைக் கேட்பவர்கள் புரிந்து மயங்கிப் போவார்கள். இடதுசாரி மேடைப் பேச்சாளர்கள் பலருக்கு இன்றும் வழிகாட்டியாகத் திகழும் ஜீவா அவர்களின் பேச்சை நான் கேட்டதில்லை. மேடையை வசப்படுத்தி, சுற்றிச் சுழன்று, ஆளுமையுடன் அழுத்தமாகப் பேசுவார் என்று கேள்விப் பட்டிருக்கிறேன். மேடையில் தோழர் நா.ரா. அவர்கள் பாரதியின்தேடிச் சோறு நிதம் தின்று பாடலைப் பாடும்போது, கடைசி வரியாக நான் வீழ்வேன் என நினைத்தாயோ?” எனும் வரிகளை மட்டும் இரண்டு மூன்று முறை, சற்றே ஏறிய குரலில் சொல்லும் போது அந்த பாரதியே வந்து பாடுவது போல இருக்கும். அதில் மயங்காதார் யார் இருக்க முடியும்?

அவர் உயிருடன் இருக்கும்போதே கலைஇலக்கியப் பெருமன்றத் தோழர்களிடம் இதைச் சொல்லியிருக்கிறேன். ஆசிரியர் டி.ராஜாக்கண்ணு தமிழாசிரியர்களும் நல்ல கவிஞர்களுமான சுந்தரபாரதி, துரை.மாணிக்கம், கொத்தமங்கலம் காசிலிங்கம், ஆசிரியர் சொக்கலிங்கம் என அப்போதே ஒரு குழுவாகப் பட்டிமன்றங்களில் பேச மாவட்டம் தாண்டியும் பலப்பல ஊர்களுக்கு எங்களை அழைத்துப் போனார் தோழர் புலவர் நா.ரா.அவர்கள்.

தோழர் நா.ரா., சொல்லித்தான், இன்றும் தமிழகத்தின் மேடைகளில் அதிரடியான பாடலாகப் புகழ்பெற்ற ‘’காருபோட்டு ஓடிவந்து கையெடுத்து சலாம் போட்டு... ஓட்டுக் கேட்டு வந்தாய்ங்களே சின்னாத்தா இப்ப ஒருத்தனையும் காணலயே என்னாத்தாபாடல் உள்ளிட்ட பல அற்புதமான பாடல்களைக் கொண்ட தோழர் சுந்தரபாரதியின் பாடல் தொகுப்பு, புதுக்கோட்டை சர்மா அச்சகத்தில் அச்சிட்டு வெளிவர நான் உதவி செய்தேன். தோழர்களின் மீதான அவரது அன்புக்கு எல்லையே கிடையாது!

மேடையில் அவர் பேசும்போது, உரத்தகுரலில் பாரதி பாடல்கள் பலவற்றுக்குப் புதிய கோணத்தில் விளக்கம் சொல்லி -தன் பாணியில் சிறு ராகமும் போட்டு- ரசித்து ரசித்துப் பேசி, கேட்போரை மயக்கி விடும் வசீகரப் பேச்சாளர் அவர்! அதுவும் பாரதி, ஜீவா பற்றிப் பேசத் தொடங்கினால்... அவ்வளவுதான் உணர்ச்சிப் பிழம்புதான்! இதனாலேயே அவர் உடல் பாதிக்கப்படும் என்றறிந்து மற்றவர் சொல்லத் தயங்கினாலும் மேடையில் பேசும் அவருக்குப் பின்னாலிருந்து, நான் உரிமையோடு மெதுவாகச் சொல்வேன்..சரிங்க தோழர்...அவருக்கு மட்டுமே கேட்டாலும் என்னைப் பார்த்து வெற்றிலைக்கறை படிந்த பற்கள் தெரிய ஒரு சிரிப்புச் சிரிப்பாரே தவிர அந்தச் சிங்க முழக்கத்தைத் தடுக்க யாரால் முடியும்?

உடல் நலம் நலிவுற்ற போதும் தன் உடல்நலத்தைவிட மக்களுக்குச் சொல்ல வேண்டும் என்று நினைத்த தன்னலம் கருதாத மக்கள் தொண்டர் அவர்! இப்போதும் பல ஆயிர ரூபாய் பேசி, உறுதிப் படுத்திக் கொண்டு இலக்கியம் பேசும் பேச்சாளர்களை நினைக்க, தோழர் நா.ரா. என் மனதில் கோபுரமாக உயர்ந்து நிற்கிறார்!   

இப்போதும் நான் மேடையில் பேசும் போது, ஏதாவது பொருத்தமான ஒரு பாடலுடன் தொடங்குவதற்கும், மெதுவான குரலில் பேசத் தொடங்கி, இடையில் கொஞ்சம் கொஞ்சமாக குரல் உயர்த்தி, முடிக்கப் போகும் போது உரத்த குரலில் பேசி முடிப்பதற்கும் அவருடன் பேசிய நிகழ்ச்சிகள் தந்த அவரது பாணி தான் காரணம் என்பதை நான் என்றும் மறவேன்.

பிறகு அவரது மகன் ஜீவாவின் திருமணம் புதுக்கோட்டையில் அய்யா மண்டபத்தில் நடந்த போதும், பொன்னீலன் அண்ணாச்சியைப் பார்க்கும் போதும் மிகுந்த தோழமையோடு சேர்ந்து பேசி மகிழ்வோம். புதுக்கோட்டையில் திருவள்ளுவர் மன்றத் தலைவர் கவிஞர் கண்ணதாசன் மகன் (என் மாணவர்) திருமணத்தை என் தலைமையில், பொன்னீலன் அண்ணாச்சி நடத்தி வைக்க வந்திருந்த போது, ரயில் ஏற்றிவிட முன்னாலேயே போய், ரயிலடியில் பேசியதில் பாதி, நா.ரா.பற்றித்தான்!  

1993இல் வெளிவந்தசிவகங்கை அண்ணன்- மீராவின் அன்னம் வெளியீடாக வந்த- எனதுபுதிய மரபுகள்நூலுக்கு அந்த ஆண்டின் சிறந்த கவிதை நூலுக்கான பரிசைத் தமிழ்நாடு கலை-இலக்கியப் பெருமன்றம் எட்டயபுரத்தில் எனக்கு வழங்கிய போதும், அந்த நூலை மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் எம்.ஏ., தமிழ் வகுப்பிற்குப் பாடநூலாக வைத்த போதும் புதுக்கோட்டையில் கலை-இலக்கியப் பெருமன்றக் கிளை சார்பில் எனக்குபாராட்டு நிகழ்ச்சி நடத்தினார். இளைஞர்களை ஊக்குவிப்பதிலும் அவர் எப்போதுமே ஜீவா தான் என்றறிந்த எனக்கு, இந்தப் பாராட்டு நிகழ்ச்சி சிறிய அளவினதாயினும் மிகப் பெருமையாக இருந்தது

அவர் கலைஇலக்கியப் பெருமன்றத்தின் வேர்களில் ஒருவர் என்பது எனக்கு அப்போதே தெரியும். நான் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தைப் புதுக்கோட்டையில் அமைத்து வளர்த்து வருபவன் என்பது அவருக்கும் நன்றாகத் தெரியும். ஆயினும் என்னிடம் எந்த வேறுபாடும் காட்டாமல் என்னை வளர்த்தார்! இந்தப் பண்புதான் இன்றும் என்னை இந்த வேறுபாடுகளைக் கருதாமல் யாராயினும் இளந்தோழர்களை வளர்க்கத் தூண்டுகிறது என்பதைப் புதுக்கோட்டைத் தோழர்கள் நன்கு அறிவார்கள்!

எது தோழமை இயக்கம்? எது எதிரிகளின் இயக்கம்? என்பதில் உள்ள வித்தியாசத்தை அவரது தோழமை மிகுந்த செயல்பாடுதான் எனக்குக் கற்றுத் தந்தது! ‘’நட்புமுரண், பகைமுரண்’’ என்னும் இந்த வித்தியாசத்தைத் தனது அனுபவச் செயல்பாடுகளால் எனக்குக் கற்பித்தவர் அவர்தான்!

அதனால்தான் இன்றும் -- நான் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவராக எனது பணியைத் தொடர்ந்த போதிலும் -- இன்றைய கலைஇலக்கியப் பெருமன்றத்தின் புதுக்கோட்டை மாவட்டத் தலைவர் தோழர் அண்டனூர் சுரா, மாவட்டச் செயலர் தோழர் பாலச்சந்திரன், மாவட்டப் பொருளர் தோழர் சோலச்சி ஆகியோரை, எனது சகாக்களாக எண்ணி என்னால் மகிழ்வோடு நெருக்கமாகப் பேசிப் பழக முடிகிறது! இணைந்து செயல்பட வைக்கிறது! அதனால்தான் என்னோடு 40ஆண்டுத் தோழமையுடன் கலை-இலக்கியப் பெருமன்றத் தலைவர்களில் ஒருவராக வாழ்ந்து மறைந்த எழுத்தாளர் செம்பை மணவாளன் நினைவஞ்சலியில் என்னால் பேச முடிந்தது!

ஆக, இந்த முத்துநிலவனின் ஆளுமையில்ஏதும் இருந்தால்- அதன் வேர்களில் ஒன்றாக இருந்து என்னைத் தோன்றாத் துணையாகத் தூண்டுபவராகத் திகழ்பவர் அருமைத் தோழர் நா.ரா. என்பதை எப்போதும் சொல்வேன். அவருக்கு எனது நன்றியை அவர்வழியில் பணியாற்றி நிறைவேற்றிக் காட்டுவேன் என்பதே அவருக்கான எனது நினைவஞ்சலி!

-------------------------------------------------------------------------------------------

அடுத்து எனது 1000ஆவது பதிவு... விரைவில்

--------------------------------------------------------------------------------------------

 

             

 

“கரிசல்குயில்” கிருஷ்ணசாமி மகள் திருமணத்திற்குச் சென்று வந்தேன்


தமுஎகச விருதுநகர் மாநில மாநாட்டில், வெள்ளைச் சட்டையோடு கண்ணாடி போட்டு மைக் எதிரில் நின்று பாடும் கரிசல் கிருஷ்ணசாமி தலைமையில் எழுச்சிகீதம் இசைக்கும் கலைஞர்கள்
(பின்னால் கை உயர்த்தி பூபாளம் பிரகதீஷ்,  கரிசல் அருகில் கருணாநிதி,  கருப்புச் சட்டையில் சோழ.நாகராஜன், அந்தப் பக்கம் ஓவியர் வெண்புறா,   மேடைமுனையில் எழுத்தாளர் சங்க மாநிலத்தலைவர் ச.தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட தலைவர்கள்)
”தோழர்களே! தோழர்களே தூக்கம் நமக்கிலை வாருங்கள்!
தோளை நிமிர்த்தி வாளைச் சுழற்றி தொய்வில்லா நடை போடுங்கள்”
-------------------------------------------------------------- 
இது
12ஆண்டுக்கு முன் கரிசல் கிருஷ்ண சாமியின்
மகள் திருமணத்திற்குச் சென்று வந்த போது எழுதியது
இப்போது இன்று அவன்
தனது குயிலிசையை நிறுத்திக் கொண்டான்
அது பற்றி எழுத இப்போது என்னால் இயலாது.
தோழர்கள் மன்னிக்கவும்
-----------------------------------------------------------------------------------
இரண்டு மூன்று மாதம் முன்பே கிருஷ்ணசாமியிடமிருந்து உரிமையுடன் கூடிய அழைப்பு -
“ஏய்... நிலவு. நமம வீட்டுல பொண்ணு கல்யாணம்லே... இப்பவே சொல்லிட்டேன்.. நா அங்க போனேன் இங்க போனேன் வரமுடியலங்கிற பேச்சே இருக்கக் கூடாதுங்கறதுக்காகத்தான் இப்பவே சொல்லுதேன்... நீயும் மதுக்கூரும் கலந்துக்கிற பட்டிமன்றம், நடுவர் நம்ம நந்தன் (நந்தலாலவை அப்படித்தான் நெருங்கிய நண்பர்கள் கூப்பிடுவோம்) அவிங்ககிட்டயும் சொலலிட்டேன்பா.. நீயும் குறிச்சி வச்சிக்க.. வந்துறணும்யா சொல்லிட்டேன்..” எனும் குரலை மறுக்க முடியுமா என்ன?
அந்த தினம் பார்த்து, எங்கள் மூவருக்கும் ஐந்தாறு நிகழ்ச்சி அழைப்பு (திண்டுக்கல் திரு.லியோனி உட்பட) எல்லாவற்றையும் அன்போடு மறுத்து “கரிசல் மகள் கல்யாணத்துக்குப் போறேன்“ என்று கூறிவிட்டு எங்கள் வீட்டுக் கல்யாணத்தில் இருந்தது போல நடந்த நிக்ழ்வு மகிழ்வும் நெகிழ்வும் கலந்து நெடுநாள்களுக்கு மறக்க முடியாததாய் அமைந்துவிட்டது.

தமிழ்நாட்டின் நிஜநாடகத்தின் நிஜமான முகமாகத் திகழும் பிரளயன், கூத்துக் கலையின் அடையாளமாகத் திகழும் பாவல் ஓம் முத்துமாரி, பட்டிமன்றம் பேச எங்கள் மூவரோடு எழுத்தாளர் சாத்தூர் லட்சுமணப் பெருமாள், திரைமுயற்சியில் ஜெயிக்கும் முயற்சியில் இருக்கும் கவிஞர் தனிக்கொடி, முதல் நாள் கலைநிகழ்ச்சிகளுக்குத் தலைமையேற்கத் தேனி வசந்தன்,, பாடல்கள்  பாட கரிசல் -வாரிசுகள்- கருணாநிதி, திருவுடையான், உடுமலை துரையரசன், ரேவதி, 
கவிதை பாட நவகவி, வையம்பட்டி முத்துச்சாமி திரைத்தமிழில் முத்திரை பதித்துவரும் “பூ“ராமு, எழுத்தாளர்கள் கே.வேலாயுதம், உதய சங்கர், ஷாஜகான்,அப்பணசாமி (குடும்பத்துடன்) வெண்புறா(தமிழ்நாட்டின் முக்கியமான கலைஇரவு மேடைகள் எல்லாம் உயிர்பெற்று நிற்கக் காரணமான கைகள் கரிசல் மகளின் திருமணத்திற்கும் மேடை அலங்காரம் செய்ய, துணைவியார் கரிசல் மகளுக்கு அலங்காரம் செய்தார்), எழுத்தாளர்கள் வேல.ராமமூர்த்தி, மணிமாறன், சாந்தாராம், உணர்ச்சிக் கவிஞன் லட்சுமிகாந்தன் என கலைஇலக்கியப் பெரும் படையை மேடையில் மட்டுமல்ல போய் இறங்கிய உடனே எதிர்நின்று வரவேற்றார் -கரிசல் குயிலின் அண்ணன் சு.துர்க்கையப்பன்.. கசங்கிய சட்டை வேட்டியோடும் செருப்பில்லாத வெறும் கால்களோடும் தனக்கே உரிய உயிர்ச்சிரிப்புடனும்,  கரிசல் வந்து கட்டிப்பிடித்து வரவேற்றதில் எங்கள் பயணக் களைப்பு பறந்தே போனது! 

அழைப்பிதழில் தன்பெயரையும் படத்தையுமே பெரிதாகப் போட்டுக்கொள்ளும் உலகில் “அண்ணன் அண்ணி இருவரின் நல்லாசிகளுடன்“ என்று மட்டும் போட்டிருக்கும் கரிசலின் பண்பை என்னவென்று சொல்ல? அந்த அண்ணனும் சாதாரணப்பட்டவரல்ல... பி.ஈஆனர்ஸ், படித்து, இத்தாலி நாட்டி்ல் பெரியஅளவில் பணியாற்றிவந்தும் அவ்வளவு அடக்கமாக, எல்லாரையும் ஓடிஓடி உபசரித்துக்கொண்டிருந்தார்.  இன்னொரு அண்ணன்-அண்ணி முன்னிலை வகித்தார்கள்! 
அபூர்வ சகோதரர்கள்தான் என்று அதுவும் பார்க்க மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

அடுத்தநாள் நிகழ்வில் செம்மலர் ஆசிரியர் எஸ்.ஏ.பி., தமுஎகச தலைவர் ச.தமிழ்ச்செல்வன் வந்திருந்தனர். (அழைப்பிதழில் பெயர்போட்டிருந்ததில், பொதுச்செயலர் சு.வெங்கடேசன், பேச்சாளர் பாரதி கிருஷணகுமார் இருவரும் வரவில்லை) நரிக்குளம் என்னும் ராஜபாளையத்திலிருந்து 15கி.மீ.உள்ளே கிடக்கும் அந்த ஊருக்குத் தமிழ்நாட்டின் முக்கியமான கலைஇலக்கிய ஆளுமைகள் வந்திருந்தது அந்த மக்களுக்கும் நமது மகததான் கலைஞன் கரிசல் கிருஷ்ணசாமிக்கும் செய்த மரியாதையாகவே பட்டது.

மணமகள்- கி.துர்கா பிஈ, 
பெற்றோர்- சு.கிருஷ்ணசாமி, கி.முத்துலட்சுமி. 
மணமகன் -ந.சுகுமாறன் பிஎஸ்ஸி பிஜிடி. 
பெற்றோர் கி.நவநீதன்,ந.பாக்கியலட்சுமி  
மணநிகழிடம் - நரிக்குளம், ராபாளையம் அருகில் 
மணநாள் - 12-05-2013 
நாங்கள் போயிருந்தது முந்தின நாள் மாலை  
கலை-இலக்கிய நிகழ்வுகள் இரவு 1மணிவரை.

இது கரிசல்குயில் வீட்டில் நடந்த தமுஎகச திருவிழா என்றுதான் சொல்ல வேண்டும்.

தற்போது ஆலமரமாய் வேர்பிடித்து தழைத்து கிளைத்து வளர்நது விழுதுவிட்டும் நிற்கும் தமுஎச (தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம்) எனும் தமிழகத்தின் மிகப்பெரும் கலைஇலக்கிய அமைப்பின் வளர்ச்சிக்குத் தன் வியர்வையையே நீராகப் பாய்ச்சிய ஒரு சில மகத்தான கலைஞர்களில், நமது “கரிசல் குயில்கிருஷ்ண சாமிக்கு மிகப்பெரும் பங்கு உண்டு.

தனது எழுச்சியூட்டும் குரலால், நமது காதுகளைத் தொட்டு, நெஞ்சுக்குள் ஊடுருவிச் செல்லும் அந்தக் குயிலின் குரலால் மயங்காதவர் யாருண்டு?

இலைகள் அழுத ஒரு மழைஇரவு
எலும்பும் உறைந்துவிடும் குளிர்பொழுது

கண்டேன் ஒரு காட்சி கண்டெனது
கண்ணில் இறங்கிவரும் நீர்விழுது” 
எனும் அனாதைக் குழந்தைகள் பற்றிய நமது கவி நவகவியின் உயிர்த்துடிப்பான வரிகளை தானே இசையமைத்துப் பாடும் அவனது வசீகரக் குரலில், அடுத்தடுத்த வரிகளில் ஆழ்ந்து கிடந்த நாள்கள் பல

. அதில் வரும்-
கூட்டுக் குருவிகளின் சூட்டுக் கதகதப்பில்
குஞ்சுக் குழந்தைகளும் தூங்கும் – இந்த
நாட்டுப் பாதைகளில வாட்டும் வாடைகளில்
அனாதைக் குழந்தைகள் ஏங்கும்.

சாலை மைல்கல் சாயம் மங்கியதும்
வர்ணம் தீட்டுவார் இங்கே – இந்த
ஏழைப் பூக்களை மையிட்டுப பொட்டிட்டு
சிங்காரம் செய்பவர்தான் எங்கே? 
சிங்காரம் செய்பவர்தான் எங்கே? - இதோ அந்தக் காந்தக் குரல்


       எனும் வரிகளைக் கேட்கும் போது தொடங்கும் அழுகையை பாட்டுக் கேட்டு வெகுநேரம் வரை நிறுத்தவே முடியாது என்பது எனது அனுபவம். 

அதற்குக் காரணம் நவகவியின் வரிகளில் உள்ள உயிர் என்பது பாதி என்றால், அதற்குப் பொருத்தமான இசையில் தன் குரலை வேண்டிய இடஙகளில் குழைத்தும், கூர்மைப் படுத்தியும் நம் நெஞ்சுக்குள் ஊடுருவும் கிருஷ்ணசாமியின் குரல் பாதி எனபதை யார் மறுக்க முடியும். – 
அதிலும் “வர்ணம் தீட்டுவார் இங்கேஏஏஏஏ” என்று கிருஷ்ணசாமி நம் உயிரையே சுண்டி இழுக்கும் குரலில் கேட்கும்போது, நம் ஈரக்குலை யெல்லாம் நடுநடுங்கி உடம்பெல்லாம் புல்லரித்துப் போகும். இப்போதும் -எப்போது அந்தப் பாடலைக் கரிசல் குரலில் கேட்டாலும்- இதை நான் உணர்கிறேன்.


              “தனி ஒருவனுக்கு உணவிலை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்“- என பாரதி கேட்ட கேள்வியை வேறொரு கோணத்தில் நமது மகத்தான கவிஞன் நவகவி கேட்டிருக்கிறான் எனில் அதற்கு உயிர்கொடுத்து, நம்மை எழுச்சியுடன் சிந்திக்கவும் –அனாதைக் குழந்தைகள் மேல் நம் அன்பைத் திருப்பவும் செய்துவிட்டான் நம் மகத்தான கலைஞன் கிருஷ்ணசாமி என்று நான் பலநேரம் நினைத்துக்கொள்வதுண்டு.

எனவேதான் --
வேறு வேறு தருணங்களில் இந்த இருவரும் -மகா கவிஞனும் மகா கலைஞனும் ஆகிய நவகவியும், கிருஷ்ணசாமியும்- ஏதோ சில காரணங்களாலும் த்த்தம் உடல் நலக்குறைவாலும் வீட்டுக்குள் முடங்கிக் கிடந்தபோது, இந்தப் பாடலைத்தான் உதாரணமாகச் சொல்லி இருவருக்குமே நான் கடிதம்  எழுதியிருந்தேன்.

இந்தப்பாடல் இடதுசாரி மக்கள் இசைக்கு இந்த இருவரின் மகத்தான கொடை.
கண்ணதாசனின் “அச்சம் என்பது மடமையடா“ பாடலின் முக்கியத்துவத்தை அண்ணா உணர்ந்தது போல நம் தலைவர்கள் இந்தப் பாடலின் உயிர்ப்பான தேவையை உணர்ந்திருந்தால் மக்களுக்கான பணியில் இன்னும் பயன் கூடியிருக்கும் என்பது எனது தாழ்மையான கருத்து..

இந்தப் பாடலைத் தந்தவர்கள் எந்தக் காரணம் கொண்டும் முடங்கிக் கிடக்கக் கூடாது. சாதாரண மனிதர்களே தத்தம் தனிப்பட்ட பிரச்சினைகளை நீந்திக் கடந்து வாழ்ந்துவரும்போது, இத்தகைய மகத்தான கலைஞர்கள் முடங்கிக் கிடக்க அனுமதியில்லை. எழுதோழா. உன் வரிகளில் தெறிக்கும் சத்திய ஆவேசம் நம் மண்ணைப் பற்றிப் படர வேண்டும் என்று இருவருக்கும் –சுமார் 15ஆண்டுகளுக்கும் முன்பே- எழுதியது நினைவிருக்கிறது. அதன் பின் அந்த இருவருமே என் கடிதம் சரியான தருணத்தில் மனப்புண்ணுக்கு மருந்தாக இருந்ததாகத் தெரிவித்ததும் எனது கடிதத்தைப் பத்திரமாக வைத்திருப்பதாகவும் தெரிவித்ததும் நன்றாக நினைவிருக்கிறது.

அந்த எதார்த்தம் இன்னும் –இத்தனை ஆண்டுகள் கழிந்தும் – மாறிவிடவில்லை என்பதைக் கிருஷ்ணசாமியின் மகள் திருமணத்திற்கு முந்திய நாள் நடந்த இனிய நிகழ்வில் நடந்த பேச்சு உண்மையாக்கியது.

தன் உயிர்கலந்த பாடல்கள் பலவற்றுக்கு உடலான வரிகளைக் கொடுத்த கவிஞர்கள் நவகவியையும், வையம் பட்டி முத்துச்சாமியையும், பரிணாமனையும் கௌரவிக்கும் நோக்கத்தில் மேடைக்கு அழைத்தான் கிருஷ்ணசாமி. பரிணாமன் உடலநலக் குறைவால் வரவில்லை. மேடையேறிய கவிகள் இருவரும் தானும் இயல்பு மாறாத இடதுசாரி மக்கள் தொண்டர்கள் தான் எனும் நினைப்பு மாறாதவர்களாய். “ எங்கள் பாடல் வரிகளைத் தமிழ்நாடு முழுவதும் கொண்டுசென்று, எங்களை மக்களுக்கு அறிமுகப் படுத்திய மகத்தான கலைஞன் கரிசல் கிருஷ்ணசாமிக்குப் பெரிதும் கடமைப் பட்டிருக்கிறோம்என்ற அடக்கமான சொற்கள் அவர்கள் உண்மையான கலைஞர்கள் என்பதை உறுதிப்படுத்தியது. “பணியுமாம் என்றும் பெருமை, சிறுமை அணியுமாம் தன்னை வியந்து”  என்ற வள்ளுவனின் வார்த்தைகளில்தான் எவ்வளவு உண்மையிருக்கிறது என்பதை அந்த்த் தருணங்களில் நான் உணர்ந்தேன்.

அதுவும் கிருஷ்ணசாமி, தன் மகளின் திருமண அழைப்பிலேயே, “என் அண்ணன் மற்றும் அண்ணியாரின் ஆசிகளுடன்எனும் வார்த்தைகளோடு, அவர்கள் படத்தை மட்டுமே அச்சிட்டு, தன்னை முன்னிறுத்திக் கொள்ளாத அடக்கம் என்போன்ற பலரை வெட்கப்படவும் இப்படியல்லவா உயர்ந்த உள்ளங்கள் இருக்கின்றன என்று சிந்திக்கவும் வைத்த உண்மையை வெட்கப்படாமல் ஒப்புக்கொள்ளும் போதுதான் நானும் மனிதனாவதாக உணர்கிறேன்.

“ஒன்றுமே செய்யாமல் நாம் நம்மைப் பற்றிய பிம்பத்தை எப்படிப் மிகப்பெரிதாக நமக்குள் வளர்த்துக் கொண்டிருக்கிறோம்! இவர்களல்லவா மக்கள் தொண்டர்கள், இவர்களல்லவா உண்மையான மக்கள் கலைஞர்கள்” என்று நான் நெஞ்சுக்குள் நெகிழ்நது போனேன். ஒருவரை ஒருவர் மிஞ்சும் அடக்கம், அடுத்தவருக்குத் தெரியாமல் போட்டிபோட்டுத் தன்பணியை உணர்ந்து தொடரும் கடமை, நமக்கு எழுதி, பாடி மட்டுமல்ல சிலவற்றைச் சொல்லாமலே செய்தும் காட்டுகிறார்கள் இந்த மக்கள் கலைஞர்கள் என்பதுமட்டும் எனக்கு உறைத்த்து.

திடீரென்று இரவு 10மணிக்கு மேல், என் அலைபேசி ஒலிக்கும். எடுத்தால், “என்ன நிலவு தூங்கிட்டியா?” என்று கிருஷ்ணசாமி குரல் கேட்கும்.  புதுசாக் கிடைச்ச ஒரு நல்ல பாட்டுக்கு ட்யூன் போட்டிருக்கேன் கேக்குறியா? என்பான். “உன் குரலைக் கேட்கத் தமிழ்நாடே காத்துக்கிடக்கு, எனக்காகப் பாடுறேன்கிறே?... கேக்கக் கசக்குமா பாடப்பா” என்று நான் சொல்வேன்.. அடுத்த அரைமணிநேரம்... அவன் காசு வீணாகிறதே என்று, “இரு நெட் கிடைக்கல நான் கூப்புடுறேன்“ என்று பொய்சொல்லிவிட்டு நான் அழைப்பேன். மீண்டும் ஒரு அரைமணிநேரம் நான் இசை மழையில் நனைவேன்.
இப்படித்தான் ஒருநாள் இரவு, “நிலவூ...உங்க புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடிப் புலவர் சுந்தரபாரதியின் பாடல் தொகுப்பு ஒன்னு கிடைச்சுது அதுல என்ன அருமையான பாட்டுகளய்யா! நீ தான் அதுக்கு முன்னுரை எழுதியிருக்க... இது போல தாராபாரதி பாட்டுகள்ளாம் ரொம்ப நல்லா இருக்குன்னு சொல்லுதாக! அவரு பாடல் தொகுப்பு எனக்கு வேணுமே!” என்றான். என்னிடமிருந்த அந்தத் தொகுப்பை அடுத்த நாளே அனுப்பி வைத்தேன்... இதுபோலும் சம்பவங்கள் நிறைய...

1970களின் இறுதியில், புதுக்கோட்டையில் நான் தமுஎசவைத் தொடங்கியபோது, என் உழைப்பால் மட்டுமல்ல, தோழர்களின் ஈடுபாட்டால் மட்டுமல்ல, வீட்டில் நடந்த மாதக்கூட்டங்கள் பலவற்றிலும் அப்போதிருந்த வறுமைக்கும் அஞ்சாமல் அக்கம்பக்கத்தில் கடன் வாங்கியாவது, சலைக்காமல், டீ போட்டுக்கொடுத்து, சூடாக வடையும் தந்த என் மனைவி அபிராமியின் அன்பு கலந்து வார்த்தையிலும்தான் புதுக்கோட்டை நகரத் தமுஎச கொஞ்சம் கொஞ்சமாக மாவட்டம் முழுவதும் 16 கிளைகளாகப் பரவியது.

1982இல், பாரதி நூற்றாண்டு விழாவை – எனது சக்தியை மீறிய பெரிய விழாவாக புதுக்கோட்டை நகரத்தில் நடத்த திட்டமிட்டேன். மாவட்டக் கிளை அப்போது கிடையாது. ஆனாலும், அன்றைய தலைவர் கே.முத்தையா, அ.மார்க்ஸ், எனது கல்லூரி முதல்வரும் தநாகஇபெம தஞ்சை மாவட்ட நிர்வாகிகளில் ஒருவருமான பாரதிப்பித்தன், ஆகியோரை அழைத்து, சிறப்பாக நடத்தினேன். பின்னர் அந்த விழா தந்த உற்சாகத்திலும், 1984இல் புதுக்கோட்டை வந்து சேர்ந்த கந்தர்வன் தந்த உற்சாகத்திலும் மாவட்டம் முழுவதும் 15க்கும் மேற்பட்ட கிளை செயல்படத் துவங்கியது. அதற்கு, இப்போது பாரதி கிருஷண் குமார் எனப்படும் அப்போதைய எழுச்சிப் பேச்சாளர் பா.கிருஷ்ண குமாரின் உரைவீச்சு ஒருபுறமும், இப்போது தமிழ்வளர்ச்சித் துறையின் இயக்குநராக இருந்த கே.ஏ.குணசேகரனின் எழுச்சிப் பாடல்கள் ஒருபுறமும், இப்போதைய செம்மலர் ஆசிரியர் எஸ்.ஏ.பெருமாளின் மனிதகுல வரலாறு வகுப்பும், இப்போது தமுஎகசவில் இல்லாத அஸ்வகோஷின் சிறுகதை பற்றிய வகுப்புகளும், நெல்லை தமுஎசவின் “சிருஷ்டிகலைக்குழுவின் நாடகங்களும், எவ்வளவு உதவினவோ அவ்வளவுக்குப் பேருதவியாக இருந்தது அப்போதுதான் அமைக்கப்பட்ட கரிசல் கிருஷ்ணசாமி-மற்றும் அப்போது வங்கியில் பணியாற்றிக்கொண்டே கிருஷ்ணசாமியோடு இணைந்து பாடிவந்த தோழர் சந்திரசேகரனின் பாடல் வழி வந்து பற்றிப் பரவிய நெருப்பு இன்றும் -30ஆண்டுக்கும் மேலாக- தொடர்ந்து எரிந்து வருகிறது. சிருஷ்டி கலைக்குழுவில் அப்போது நடித்து வந்த உதயசங்கர், அப்பணசாமி இப்போது பெரிய எழுத்தாளர்களாகி விட்டார்கள்... பலரும் தன் இருப்பில் சிறந்த ஆளுமைகளாக வளர்ந்திருக்கிறார்கள்...

”தோழர்களே தோழர்களே தூக்கம் நமக்கிலை வாருங்கள்,
தோளை நிமிர்த்தி வாளைச் சுழற்றி தொய்வில்லா நடைபோடுங்கள்

பச்சைக் குழந்தை பாலின்றி பாதையில் விழுவது அகிம்சையாஃ

பசிக்கு ரத்தம் குடிக்கும் பேய்களை போருக்கு இழுப்பது அதர்மமா,
அச்சமிலலாத நெஞ்சங்கள் ஆடிப்புனலுக்கு அஞ்சிடுமா?
துச்சம் உயிரெனும் கொள்கையிலே தூக்கிய கரங்கள் கீழ்வருமா?” 
-என்று-
மதுரையில் ஒரு தமுஎச பயிற்சி முகாமின் இறுதியில் கரிசல் பாடிய பாடல் வரிகளின் நெருப்பு இன்னும் பல்லாயிரம் தோழர்களின் நெஞ்சில் பற்றி எரிந்துகொண்டுதானே இருக்கிறது! அந்த ஆவேசம் பலப்பல ஆண்டுகள் கழிந்தும் கடந்த விருதுநகர் மாநாட்டின் போதும் மாநாட்டின் நிறைவுக்குப்பின் கிருஷ்ணசாமி பாடிய பாடலில் தெறிப்பதை மேலுள்ள படத்தைப் பார்ப்பவர்கள இப்போதும் புரிந்துகொள்ள முடியும். அந்தக் குரல் தந்த ஆவேசம் இன்னும் எத்தனை தோழர்களை உசுப்பிவிட்டுக்கொண்டு இருக்கிறது! அந்தக் குரல் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் ஒலிக்க வேண்டும். ஒலிக்கும் அதன் எதிரொலியும் ஆங்காங்கே கிடைக்கும். அதுதானே கலையின் வெற்றி! 

இதுபோல ஒவ்வொரு மாவட்டத்திலும் தமுஎச வளர்ந்த வராற்றை எழுதினால், அதில் கரிசல் குயில் கிருஷ்ணசாமி எனும் சுயஎதிர்ப்பார்ப்புகள் ஏதும் இல்லாத மாமனிதனின், கணீர்க்குரலின் பங்களிப்பின தொகு்ப்பை எழுதலாம். .... 
திருமணவிழாப் படங்கள்  பிற நிகழ்வுகள் பற்றிய தகவல்கள் வந்தபிறகு இந்தப் பக்கத்தில் மேலும் எழுதலாம்... 
அதுவரை உங்கள் கருத்தறிய ஆவல்... 
தோழர்களே தோழர்களே தூக்கம் நமக்கிலை வாருங்கள்,
-------------------------------------------------------------------------------------------------- 
அவன் போய்விட்டான்.
இரண்டு நாள் முன்னதாக என்னிடம் பேசியவன் 'நிலவு அடுத்த வாரம் ஜெர்மன் போறனப்பா.. உனக்குத்தான் உலகமெல்லாம் நண்பர்கள் தமிழ்ச்சங்கத்துல இருப்பாங்களே! ஜெர்மனில இருக்கிறவங்களை எனக்கு அறிமுகப்படுத்தி வையி. அவங்க நம்பர் தந்தியின்னா நா பேசிக்கிடுதேன்... என்றவன், அப்படித் தந்த -சுபாஷினி, உதயசூர்யா, கௌரி ஆகிய மூவரின் எண்களில் பேசாமலே போயிட்டானே?
என்னால் இதற்கு மேல் எழுத முடியல..
என் இளைய மகள் லட்சியா சின்னக் குழந்தையா இருக்கும்போது என் வீட்டுக்கு வந்தனவன், அவளைத் தூக்கி மடியில் வைத்துக்கொண்டு, மல்லிகாவைப் பார்த்து, 'மதினி இன்னிக்கு என்ன சாப்பாடு?" என்று இயல்பாகப் பேசிக்கொண்டிருந்த அவன் பிறகு தனது இசையில் பாடிய என் பாட்டை என் மகளுக்குப் பாடிக்காட்டி, 'இந்தப் பாட்டை யாரு போட்டது தெரியுமா? உங்க அப்பன்தான்.." என்றபடி 'பண்டைப் புகழும் பாரம்பரியப் பண்புகள் மிக்கதும் இந்நாடே.." என்று என் மகளுக்கு என் பாட்டைப் பாடிக்காட்டிச் சின்னக் குழந்தையைப் போல சிரித்தானே?
அவன் போய்விட்டானா? 

அன்புடன் - நா.முத்துநிலவன்.
அலைபேசி - 94431 93293
------------------------------------------------