முதல் பெண் மருத்துவர் அன்னை முத்துலட்சுமியும் இன்றைய தேசிய கல்விக் கொள்கையும்


முதல் பெண் மருத்துவர் அன்னை முத்துலட்சுமி 
பிறந்தநாள் நினைவுக்கட்டுரை..
பெண் கல்வியைப்  பின்னுக்கு இழுக்கும்     
தேசியக் கல்விக்கொள்கையை நிராகரிப்போம்!

30-7-1886அன்று புதுக்கோட்டை திருக்கோகர்ணத்தில் பிறந்து முதல் பெண் மருத்துவரானகல்வியால் உயர்ந்த - அன்னை முத்துலட்சுமியின் பிறந்தநாளில் பெண்கல்விச் சிந்தனைகள் முக்கியத்துவம் பெறுகின்றன. பற்பல போராட்டங்களால் முன்னேறி வந்திருக்கும் பெண் கல்வியை அழிக்க இப்போது வந்திருக்கும்தேசிய கல்விக்கொள்கை 2019- வரைவுஅறிக்கை திட்டமிடுவதால் அதுபற்றிப் பேசவேண்டியதும் அவசியமாகிறது.
மனிதகுல வரலாற்றின் ஆரம்ப காலம் தாய்வழிச் சமூகமாகவே இருந்தது! உணவு தேடும் சமூகத்திலும், வேட்டைச் சமூகத்திலும் பெண்ணே தலைமைப் பொறுப்பிலிருந்து வழிகாட்டியதாக சமூக வரலாறு சொல்கிறது!
அடுத்துவந்த உணவு பயிரிடும் கால நிலையில், உழவுக் கருவிகளை ஆண் கையில் எடுக்க, “வீட்டிலிருந்து குழந்தைகளைப் பார்த்துக் கொள்வது, ஆடு மாடுகளோடு அடுக்களையையும் கவனித்துக் கொள்வது, கணவன் கற்பித்த விதம் குடும்பத்தை நடத்திச் செல்வதுஎனும் கூட்டுக்குள் பெண் அடைக்கப் பட்டாள்! இதுபற்றி, “குடும்பம்-தனிச் சொத்து- அரசு ஆகியவற்றின் தோற்றம்எனும் சிறுநூலில் பெண்ணடிமை தோன்றிய விதம் பற்றி விளக்கிச் செல்வார் தோழர் ஃபிரடெரிக் ஏங்கெல்ஸ்.
இதனை, “வேட்டைக்கார முரடன் கூட பெண்ணை மதித்து நடத்தி வந்த நிலைமை மாறி, உழவுக்கு முன்னேறிய நாகரிக மனிதன்தான் பெண்ணை அடிமையாக்கி விட்டான்என்றும் சொல்வதுண்டு! இது முற்றிலும் உண்மை! அதன்பின் மனித நாகரிகம் முன்னேறிய ஒவ்வொரு நிலையிலும், பெண்கள் மேலும் மேலும் அடிமைச் சேற்றுக்குள் அழுத்தப்பட்டே வந்திருக்கிறார்கள்!
ஓதலும் தூதும் உயர்ந்தோர் மேன” (தொல்காப்பியம்-பொருளதிகாரம்-977) என்றும், “முந்நீர் வழக்கம் மகடுவோடு இல்லை” (தொல்.980) என்றும், “வினையே ஆடவர்க்கு உயிரே, மனையுறை மகளிர்க்கு ஆடவர் உயிர்” (குறுந்தொகை-135) என்றும் தொல்காப்பியம்,  உள்ளிட்ட இலக்கண, இலக்கியங்கள் பெண்ணை இரண்டாம்தரக் குடிமகளாக்கியது, அன்றைய சமூகத்தின் வெளிப்பாடுதான்!
ஆனாலும் சங்கப் புலவர்கள் 473-பேர்களில் 57பேர் பெண் புலவர்கள்  எனும் செய்தி நமது பழந்தமிழ்ச் சமூகம் பெண்களை எவ்வளவு மதித்திருக்கிறது என்பதற்கான சான்றாகவும் உள்ளது. அதிலும் அதிக(59)பாடல்களைப் பாடியிருப்பவர் அவ்வையார் என்பதோடு, அவர் பாடியதிலும் அகப்பாடல்களை விடவும் புறப்பாடல்களே அதிகம் என்பதுடன், இருபெரு வேந்தர்கள் எதிரெதிரே போருக்கு நின்றபோது, இருவருக்கும் சமாதானம் செய்யும் பணியை ஔவை எனும் பெண் புலவர் செய்தார் என்பதும் முக்கியமான செய்தியாகும். வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டி வைக்காமல் தையலை உயர்வு செய்த சமூகத்துக்கான சான்றுகளிவை. பால் வேறுபாடுகளைக் களைந்து பெண்கள் முன்னேற கல்விதான் உதவியிருக்கிறது! பால் வேறுபாட்டுக்கு நிகரான சாதிவேறுபாட்டையும் கல்விதான் தகர்த்திருக்கிறது! ஒரு சங்கப்பாடல், கல்வி பெற்றவன் சாதியைக் கடக்க முடியும் என்கிறது-
வேற்றுமை தெரிந்த நாற்பா லூள்ளும்
கீழ்ப்பால் ஒருவன் கற்பின்
மேல் பால் ஒருவனும் அவன் கண்படுமே" – புறநானூறு-183 .
நிலப்பிரபுத்துவக் காலத்திலும் பெண்ணடிமைத்தனம் தொடர்ந்தது! ஆண் உடைமைகளில் வீடு, நிலம் போல பெண்ணும்அவளுக்கு உடல் உயிர் உணர்வு எல்லாம் உண்டு என்பதை மறந்து- இருந்த நிலையே தொடர்ந்தது.
இடைக்காலத்தில் மதவாதிகள் அரசியலில் செல்வாக்குப் பெற்றபின், பெண்ணடிமைத்தனம் இன்னும் அதிகமாகி, “பெண்ணுக்கு வீடுதான் உலகம், ஆணுக்கு உலகமே வீடுஎன்றும், “ஒரு பெண் நேரடியாக சொர்க்கத்திற்குப் போகமுடியாது, ஆணாகப் பிறந்து தான் போகமுடியும்என்றும் பிறப்பையே இழிவு செய்து பெண்கல்விக்கும் தடைவிதித்தனர். இந்த வேத வைதீகக் கருத்தையே வடமொழி சுலோகம் வழிமொழிந்தது
பிதா ரக்ஷதி கவுமாரே, பர்தா ரக்ஷதி யவ்வனே
புத்ரோ ரக்ஷதி வார்தக்யே, நஸ்த்ரீ ஸ்வதந்தர்யமர்கதி” 
நான் இதைத் தமிழில் மொழிபெயர்த்து -
1990இல் அறிவொளியில் பெண்கல்விக்காகப் பின்வருமாறு பாடினோம் 
தந்தைக்கு அடிமை சிறுவயதில்,  கணவர்க்கு அடிமை இளவயதில்,
மகனுக்கு அடிமை முதுமையிலே, எந்நாளும் பெண் அடிமைதான்!”
முந்திய காலங்களுக்கு மாறாக, முதலாளித்துவம் வந்தபோது, பெண்ணுரிமை பற்றிய பேச்சு வலிமையாக  எழுந்தது உண்மை! ஏனெனில், நிலப்பிரபுத்துவம் போலன்றி, விரிந்து பரந்த பார்வைக்குக் காரணம், பெண்ணின் உழைப்பு முதலாளி வர்க்கத்தின் உபரி லாபத்திற்காகத் தேவைப்பட்டதே! நிலப்பிரபுத்துவம் பெண் வீட்டைப் பார்த்தால் போதும் என்றதற்கு மாறாக, வெளியில் வந்து ஆணும் பெண்ணும் (சமமாக?) சேர்ந்து உழைத்தால்தானே மூலதன வளர்ச்சி நடக்கும்? தனிப்பட்ட குடும்ப முன்னேற்றத்திற்கும்இருவர் சம்பளம் வந்தால்தானே பிள்ளைகளை நல்லா வளர்க்க முடியும்என்று இதற்குக் காரணம் சொல்லப் பட்டது! காரணம் எதுவாயினும் பெண்களைப் பொதுவெளியில் கொண்டுவர முதலாளித்துவமே பெண்ணுரிமையை ஆதரிக்க வேண்டிய கட்டாயம்! அதனால் பெண்கல்வியைப் பெரிதாக ஆதரித்த்து முதலாளித்துவம். ஆனால் வீடும் கூடும் மாறினாலும்பெண்ணுரிமை பேசும் அடிமைகளாகவே பெண்கள் இருக்க வேண்டும்எனும் கருத்தும் ஆழப் பதிந்துவைக்கப்பட்டது! கவிஞர் கந்தர்வன்  எழுதியவாசல் வரைக்கும் அளவெடுத்து அவளைக் கட்டிய கயிறுஒன்றுஎனும் கவிதை அவள் சுதந்திரம் பெற்றது போன்ற தோற்றத்தினைத் தோலுரித்துக் காட்டியது.
இதற்கேற்ப, நிலப்பிரபுத்துவக்காலப்பெண்ணின் பெருமைகள்என்ற இலக்கிய விளக்கங்கள் அவ்வப்போது நினைவுபடுத்தப்படுவதும் தொடர்கிறது. “அச்சமும் நாணும் மடனும் முந்துறுத்த நிச்சமும் பெண்பாற்கு உரிய என்பஎன்ற தொல்காப்பியத்துக்கு நேர் எதிர், “நாணும் அச்சமும் நாய்களுக்கு வேண்டும்என பாரதி பாடினாலும், எந்த மதமும் பெண்ணுக்குத் தலைமைப் பொறுப்புத் தர முன்வரவில்லை! இது, ஆண்களின் மதம்! ஆண்களின் உலகம் என்பதால் 33% மக்கள் பிரதிநிதித்துவ இடஒதுக்கீடு பெறப் பெண்கள் இவ்வளவு நாளாகப் பேசிக்கொண்டிருக்கும் காரணமும் இதே! கல்வி கிடைக்கும் சுதந்திரம் கிடைக்காது!
முதலாளித்துவ உலகில் அறிவியல் வழி வரும் முன்னேற்றங்கள் எல்லாம் ஆண்களுக்கே உதவுகின்றன பெண்ணுக்கு வாக்குரிமை, பெண்ணுக்கு ஜனநாய வளர்ச்சியில் பங்கு, பெண்கல்வி என்பது நாட்டு வளர்ச்சிக்கு முக்கியமானது என்பதான எல்லாம் முதலாளித்துவ உலகிலும் தவிர்க்க இயலாமல் நடந்து வருகிறது. ஆனால், பழம் பெருமை பேசும் வைதீக மதமும், அடிப்படை வாதிகள் யாரும் பெண்ணடிமைத் தனத்தை விட்டுத் தருவதே இல்லை என்பதையும் சேர்த்துக் கவனிக்க வேண்டும்.
நெடுங்காலம் கழித்து, ஆங்கிலேயர் ஆட்சியின் போதுதான் பெண்கள் படிக்கவும், வேலைக்குப் போகவும் விதவைகள் மறுமணம் செய்யவும், சட்டம் வந்ததோடு உடன்கட்டையேற்றம் முதலான கொடுமை ஒழிப்புக்கும் சட்டம் வந்தது. ஆனால், இதற்கே சனாதனிகள் பெரும் எதிர்ப்புத் தெரிவித்து வந்தனர்.  
வரலாற்றின் பெரும் பகுதியில், அனேக சமூகங்களில் பெண்கள் ஆண்களுக்கு நிகரான கல்வி பெறும் வாய்ப்பைப் பெறவில்லை 19 , 20 ஆம் நூற்றாண்டுகளில் வளர்ச்சி பெற்ற  பெண்விடுதலை இயக்கம், அனைவருக்கும் கல்வி என்ற கோட்பாடு போன்றவை பெண்களுக்கான சம கல்வி வாய்ப்புக்களை ஓரளவு ஏற்படுத்தந்தன.
பெண்கல்விக்காகப் பெருந்தொண்டு செய்தவர் சாவித்திரிபாய் பூலே. தன் இணையர் ஜோதிராவ் பூலேயுடன் இணைந்து, பெண்கல்விக்கென இந்தியாவின் முதல் பள்ளியைப் பூனேயில் 1848இல் ஏற்படுத்தி, இந்தியாவின் முதல் பெண் ஆசிரியாகவும் திகழ்ந்தார். அவரது பெயரில் இப்போதுசாவித்திரி பாய் பூலே பல்கலைக்கழகம்பூனேயில் இயங்கிவருகிறது.
1882ம் ஆண்டு படித்த பெண்களின் விழுக்காடு வெறும் 2%தான்!  இந்தியா சுதந்திரம் பெற்ற போது இந்தச் சராசரி 12%ஆக உயர்ந்த போதும் பெண்கல்வி 6%ஆகவே இருந்தது. அதிலும் பெரும்பாலானவர்கள், மேல்வர்க்கக் குடும்பத்துப் பெண்களாகவே இருந்ததில் வியப்பொன்றும் இல்லை. சுதந்திர இந்தியாதான் பெண்களைப் படிக்க வைத்தது.  அதிலும் அண்ணல் அம்பேத்கர் தந்த அரசியல் சட்டம்தான் பெண்கல்வி, பெண்ணுரிமைக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தது.
1952இல் சென்னை மாகாணக் கல்விக்குழுவின் முன்பாக, தந்தை பெரியாரும் கோவை ஜி.டி.நாயுடுவும் நேரில் சென்று பெண்கல்வியின் அவசியத்தை வலியுறுத்தி, பெண்களுக்கென தனியான பள்ளி, கல்லூரிகள் அமைக்க வேண்டியதன் அவசியத்தை வற்புறுத்தினர்.
பெண்கல்வியைப் போற்றிப் பாடிய பாரதியார் நூற்றாண்டுவிழாவை ஒட்டி 1982இல் எடுக்கப்பட்ட முடிவின்படி, கொடைக்கானலில் தமிழ்நாட்டின் பெண்களுக்கான முதல் பல்கலைக்கழகம், “அன்னை தெரசா மகளிர் பல்கலைக் கழகம்எனும் பெயரில் தமிழ்நாட்டில் கொடைக்கானலில் 1984இல் அமைக்கப்பட்டது. தற்போது இந்தியாவில் பெண்களுக்கான பல்கலைக் கழகங்கள் 15உள்ளன.
2011ஆம் ஆண்டு மக்கள் தெகைக் கணக்கெடுப்பின்படி இந்தியக் கல்விச் சராசரி 74விழுக்காடாக இருந்தபோதிலும் இதில் பெண்கல்வி விழுக்காடு 65தான்! ஆண்கள் விழுக்காடு 84. இன்னும் பெண்கல்வி எவ்வளவோ முன்னேற வேண்டியிருக்கிறது!
சமீப காலமாக -சுமார் 30ஆண்டுகளாக- தமிழ்நாட்டுப் பள்ளிக்கல்வித் தேர்வு முடிவுகள் வரும்போதெல்லாம் தேர்வுச் சராசரியை வெளியிடும் செய்தித்தாள்கள், “வழக்கம்போல இந்தஆண்டும் மாணவர்களை விட மாணவிகளின் தேர்ச்சி சதவீதம் அதிகரித்துள்ளதுஎன்னும் செய்தியை வெளியிட்டு வருவதை நாம் அனைவரும் பார்த்து மகிழ்ந்திருக்கிறோம். ஆனால் இந்த மகிழ்ச்சி நீடிக்குமா என்று சந்தேகம் தர வந்திருப்பதுதான் தேசிய கல்விக் கொள்கை-2019 வரைவுஅறிக்கை!
பெண் கல்வி எதற்காக வேண்டும் என்பதற்குப் பாரதிதாசன்,
பெண்கட்குக் கல்வி வேண்டும் 
குடித்தனம் பேணுதற்கே                                  
பெண்கட்குக் கல்வி வேண்டும் 
மக்களைப் பேணுதற்கே                                              
பெண்கட்குக் கல்வி வேண்டும் 
உலகினைப் பேணுதற்கே                                 
பெண்கட்குக் கல்வி வேண்டும் 
கல்வியைப் பேணுதற்கே!   என்கிறார்.                          
--பாரதிதாசன்,  குடும்பவிளக்கு (பகுதி2, .22)       
பெண்கள் படிப்பதும் வேலைக்குப்போவதும் தவிர்க்கமுடியாத அம்சமாக இன்று கருதப்படுகிறது.  ஆனால் வேலைக்குப் போகும் பெண்களில் பத்து விழுக்காடு பெண்கள் நடத்தை கெட்டவர்களாகிறார்கள் என்று காஞ்சி சங்கராச்சாரி சொல்லி வாங்கிக் கட்டிக்கொண்டதை நாமறிவோம் இதுதான் மதம், அதிலும் வைதீக மதம் பெண்ணடிமையில் ஊறியது என்று நாம் சொல்வதற்கான நற்சான்று!
அறிவொளி இயக்கத்தில் பெண்களின் உழைப்பைக்கண்ணுக்குத் தெரியாத நெருப்புஎன்று கவிஞர் பிரளயன் இயக்கத்தில் ஒரு நாடகம் நடத்தினோம். அதில் வரும் ஒரு காட்சி, பள்ளி ஆண்டுவிழா பேச்சுப்போட்டி முதல்பரிசு எட்டாம் வகுப்பு சி.சரஸ்வதி , இரண்டாம் பரிசு சாலமன் பாப்பையா,  கவிதைப் போட்டி முதல்பரிசு எட்டாம் வகுப்பு சி.சரஸ்வதி இரண்டாம் பரிசு வைரமுத்து, கணிதப்போட்டி முதல் பரிசு எட்டாம் வகுப்பு சி.சரஸ்வதி இரண்டாம் பரிசு இராமானுஜம்…” என்று அந்தக் காட்சி போகும். கடைசியில் எல்லாவற்றிலும் திறமையோடிருந்த அந்த சி.சரஸ்வதி படிப்பைப் பாதியில் நிறுத்தி, ஒரு குடிகாரனுக்கு வாழ்க்கைப் பட்டு, கேவலமான வாழ்க்கையில் தள்ளப்படுவாள்..  பெரும்பாலான நம் இந்திய கிராமத்து சரஸ்வதிகள்  இப்படித்தான் கல்வி மறுக்கப்பட்டு இருள்வாழ்வில் தள்ளப் படுகிறார்கள் என்பதை அச்சு அசலாக விளக்கும் அந்த நாடகம்.                                                                                                                 
அண்மையில், சந்திராயன்-2 ஏவப்பட்டதில் இரண்டு பெண்களின் பங்களிப்பு பாராட்டுக்குரியது. ரிது, வனிதா எனும் இரண்டு விஞ்ஞானிகளால்தான் இந்தச் செயற்கைக் கோளின் ஆணைகளும் நிர்வகிக்கப்படும். ரிது இந்தத் திட்டத்தின் இயக்குநர் (மிஷன் டைரக்டர்), வனிதா வடிவமைப்பாளர் என்பது நாமெல்லாம் பாராட்டத் தக்க செய்தியல்லவா? இது தொடர வேண்டாமா?
ஆனால், இப்போது வந்திருக்கும் கல்விக்கொள்கை கூறுவதென்ன?
பெண்களுக்குக் கல்வியை எளிதாகப்  பெறச்செய்வதே வறுமையை ஒழிக்க மற்றும் வன்முறையை ஒழிக்கவும் சமூக ஆரோக்கியத்தை மேம்படுத்தவும்ஈ நல்வாழ்விற்கான தடைகளை நீக்கவும் அடுத்த தலைமுறைகளை மேம்படுத்தவும் உள்ள தெளிவான பாதையாகும். எனவே இந்திய சமுதாயத்தை முன்னேற்றுவதற்கு பெண்களின் முன்னேற்றத்தில் கவனம் செலுத்துவதே முக்கிய உத்தியாகும்” (தே..கொ.வரைவு-6.2) அட அட என்ன ஒரு தீர்க்க தரிசன வார்த்தைகள் என்று நாம் மகிழ்ந்து கொள்ளலாம், சந்தேகமில்ல! ஆனால் அதற்கான திட்டம் என்ன என்பதில் தான் இடிக்கிறது கொள்கை விளக்கம்!
3,5,8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாநில அரசுகளால் பொதுத்தேர்வு நடத்தப்படும் (தே..கொ.வரைவு-4.9.4) பிறகு, 9ஆம் வகுப்புமுதல் 12ஆம் வகுப்பு வரை ஒருங்கிணைக்கப்பட்டு ஆண்டுதோறும் இரண்டு பருவத்தேர்வுகள் (மொத்தம் எட்டு, ஒவ்வொரு பருவத்தேர்விற்கும் மூன்று பாடங்கள் வீதம் 24தேர்வுகள் நடத்தப்படும் (தே..கொ.வரைவு-4.9.5)
ஆயிற்றா? ஏற்கெனவே வாய் கோணலாம்! இதுல கொட்டாயி வேறயா? என்று கிராமத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள். பரிட்சைகளைக் கண்டுபயந்துதான் நமது பிள்ளைகள் பள்ளியை விட்டுஓடுகிறார்கள் என்று இப்போதுதான் எட்டாம் வகுப்பு வரை தேர்ச்சிக்கான தேர்வு இல்லை என்று உலக நாடுகள் ஒப்புக்கொண்டுள்ளன. ஆனால் இவர்கள் 3,5,8வகுப்புகளில் மாநில அரசு (தன் பொறுப்பிலோ, தனியார் பொறுப்பிலோ) நடத்தும் தேர்வுகளால் எத்தனை லட்சம் எழுதப்படிக்க அறியாத சரஸ்வதிகள் நாட்டில் உலவப போகிறார்களோ தெரியவில்லை!
இதில் ஒரு சிறு விளக்கம் தேவைப்படுகிறது- அதாவதுதேர்வு இருந்தால்தான் பசங்க படிக்கிறார்கள்என்பதுஒரு சமாளிப்பு. தேர்வில் 35 மதிப்பெண்ணுக்கும் 34 மதிப்பெண்ணுக்குமான அறிவுவேறுபாடு என்ன வந்துவிடப் போகிறது என்பதொன்று கிராமத்தில் அறியா சனங்கள் இன்னும்புள்ள ஃபெயிலாயிருச்சு, இனிமேல எதுக்குப் படிக்க வச்சிக்கிட்டு, சீக்கிரமே கல்யாணத்தைப் பண்ணி விரட்டி விட்றப் போறேன்என்று சொல்வது,  பெண்கல்விக்கு வைக்கும் கொள்ளியே அன்றி வேறென்ன?
சரி இது ஒரு பெரும் சிக்கல் என்றால், சமாளித்து படித்து முன்னேற நினைத்து படிப்பைத் தொடரும் பெண்பிள்ளை, ஆண்பிள்ளைகளுக்குச் சொல்லித் தரப்போகும் கதைகளை நினைத்தால் கதை கந்தலாகிறது!
குழந்தைகள் பஞ்சதந்திரம், ஜாதகா, இதோபதேசம்,போன்றவற்றை இந்தியக் கலாச்சாரம் மூலம் கற்றுத்தரப்படும்” (தே..கொ.வரைவு-4.6.8.7) என்ன கதைகளாம்? அறத்தைப் போதிக்கும் திருக்குறள் கதைகளை அல்லவாம்! “வஞ்சகமாக எப்படி ஜெயிப்பது என்பதைமட்டும் பார்! அறமாவது மண்ணாங்கட்டியாவதுஎன்றேநல்லவழிகளைத் தந்திரமாகச் சொல்லித் தரும்பஞ்சதந்திரக் கதைகள்குழந்தைகளின் மனதில் குரூரத்தையே வளர்க்கும்.
அதிலும் தமிழ்நாட்டில் ஏற்கெனவே ஓரளவு சிறந்திருக்கும் மாணவர் கல்வி நிலையைப் பற்றி அறியாத நிலையில், பாடப்புத்தகங்களைக் குறைந்த விலையில் தரப்போகிறதாம் இந்தக் கல்விக்கொள்கையை வழங்கிய மத்திய அரசு! இதைக் கண்டு சிரிப்பதா அழுவதா தெரியவில்லையே? இதோ பாருங்கள் -
புதுமையான பாடப் புத்தகங்கள் பொது மற்றும் தனியார் கொள்கைகள் வழி வகுக்கப்பட்டு, ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் மிகக் குறைந்த விலையில் கிடைக்கும்” (தே..கொ.வரைவு-4.8.5)
தேர்வு தேர்வு தேர்வு என்று அச்சமூட்டும் தேர்வு முறையே போதாது என்றுஎன்ட்ரி தேர்வுமற்றும்எக்ஸிட் தேர்வுஎன்பதென்ன? அதாவது 3,5,8, மற்றும் 8முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையான அத்தனை தேர்வுகளிலும் ஒரு மாணவன் அல்லது மாணவி தேர்ச்சியடைந்து விட்டாலும், அதற்குமேல் நேரடியாக்க் கல்லூரி வகுப்பில் நுழைந்துவிட முடியாத படிமருத்துவக் கல்விக்கு நீட் போலஅனைத்துக் கல்லூரி நுழைவுக்கும் ஒரு என்டிஏ தேர்வு எழுதி அதில் தேர்ச்சி பெறவேண்டுமாம். அதிலும் தேர்ச்சி பெற்று கல்லூரிக்குப் பணத்தைக் கொட்டிச் சேர்ந்து படித்து முடித்தாலும் பிறகும் ஒருஎக்ஸிட்தேர்வு எழுதித்தான் வெளியே வரமுடியுமாம்! என்னாங்கடா இது என்கிறீர்களா? இதுதாங்க புதிய தேசிய கல்விக்கொள்கை-2019!
இப்போது, மீண்டும் அன்னைமுத்துலட்சுமியின் கல்வி மேன்மைக்கு வருவோம். ஆண்கள் மட்டுமே படித்துக் கொண்டிருந்த புதுக்கோட்டை மாமன்னர் கல்லூரியில் கூண்டு வண்டி வைத்துக் கொண்டு, முகத்தை மறைத்துக் கொண்டு, முதன்முதலாக கல்லூரிக்கு வந்து படித்த பெண் என்ற பெருமையை அவர்தான் போராடிப் பெற்றார்.
சென்னை மருத்துவக் கல்லூரியின் முதல் மாணவியாக இவ்வாறே சேர்ந்து, அவர்தான் மருத்துவக் கல்விபெற்ற முதல் மாணவி என்ற பெருமையும் பெற்றார்.
இந்தக் கல்வியால் அவருக்குக் கிடைத்த பெருமை என்ன தெரியுமா?
அன்றைய சென்னை மாகாண முதல்வரின் மகன் சுந்தர் ரெட்டியே வந்து பெண் கேட்ட போதிலும், (1)தொடர்ந்து மருத்துவராகப் பணிபுரிய வேண்டும், (2)தனது சுதந்திரமான பெண்கல்வி வளர்ச்சிப் பணிகளைத் தொடர வேண்டும். மற்றும் (3)சுயமரியாதைக்கு குறைவு வரும்படி நடக்காதிருக்க வேண்டும் என்பதான உறுதி மொழிகளைப் பெற்ற பின்னரே அவரை மணக்க முன்வந்து அவ்வாறே வாழ்ந்தார்.
அவரது பெருமைகள் சொல்லி மாளாது! இந்தியாவின் முதல் சட்டமன்ற உறுப்பினர் முதலான அவரது பெருமைகள் அனைத்துக்கும் அடிப்படை அவரதுகல்வி சட்டமன்றத்தில் சண்டமாருதம் செய்யும்அவரது புதுக்கோட்டை மன்னர் கல்லூரி சகாவானதிருமயம் சத்திய மூர்த்தியைக் கண்டு அனைவரும் அஞ்சிக் கிடக்க, இவர் கேட்ட கேள்வியில் அவரே அசந்து வாயடைத்த சம்பவமும் நடந்தது. அதுவும் அன்னை முத்துலட்சுமி கற்ற கல்வியால்தான் என்பது அந்தக் கல்விக்கே பெருமை!
இப்போது, இன்றைய முத்துலட்சுமி அம்மையாரின் பிறந்த நாளில், அம்மையார் போலப் பெண்களை நாம் படிக்க வைக்கப் போகிறோமா? அல்லது பொதுவாகவே ஏழைக் குழந்தைகள் அனைவரையும் பள்ளிகளிலிருந்து விரட்டி குலத்தொழிலுக்கு விரட்டும், குறிப்பாக கிராமத்துப் பெண்குழந்தைகளின் கல்வியைப் பறித்து, “வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டிவைக்கும்பண்டைய வேதகால இருட்டில் பெண்களைத் தள்ளப்போகிறோமா? என்பதுதான் நம் முன் நிற்கும் கேள்வி!
முத்துலட்சுமிகள் படிக்கட்டும்! எழுதப்படிக்கத் தெரியாத சரஸ்வதிகள் இங்கு மட்டுமல்ல எங்குமே இல்லாதிருக்கட்டும்! புதிய தேசிய கல்விக் கொள்கை திரும்பப் பெறப்படட்டும்! அதற்கு உழைப்பதே முத்துலட்சுமி அம்மையார்க்கு நாம் செய்யும் மரியாதையாகும், அவர் விரும்பிய பெண்கல்வி வளரட்டும்!
பெண்மை வாழ்க என்று கூத்திடுவோமடா,
பெண்மை வெல்க என்று கூத்திடுவோமடா!” – மகா கவி பாரதி.
ஜூலை-30 இந்தியாவின் முதல் பெண்மருத்துவர் 
அன்னை முத்துலட்சுமி அவர்களின் பிறந்தநாள். 
   -------------------------------------------------------------------------------
பக்க அளவு கருதி, என்னிடம் கேட்டு,
கட்டுரையைச் சற்றே சுருக்கி
வெளியிட்டமைக்கு நன்றி  
தீக்கதிர் நாளிதழ் 
30-7-2019

2 கருத்துகள்:

  1. புதிய தேசிய கல்விக் கொள்கை திரும்பப் பெற வேண்டும்... வேண்டவே வேண்டாம்...

    பதிலளிநீக்கு
  2. "பற்பல போராட்டங்களால் முன்னேறி வந்திருக்கும் பெண் கல்வியை அழிக்க இப்போது வந்திருக்கும் “தேசிய கல்விக்கொள்கை 2019- வரைவு” " மிகச்சரி அண்ணா. பெண்கல்வியை அழிக்கும், அனைத்துச் சமூகக் கல்வியை அழிக்கும் இந்த வரைவை எதிர்த்தே ஆகவேண்டும். உங்களின் விடாமுயற்சிக்கு நன்றிகள் அண்ணா.
    "முத்துலட்சுமிகள் படிக்கட்டும்! எழுதப்படிக்கத் தெரியாத சரஸ்வதிகள் இங்கு மட்டுமல்ல எங்குமே இல்லாதிருக்கட்டும்! புதிய தேசிய கல்விக் கொள்கை திரும்பப் பெறப்படட்டும்! " எட்டுத்திக்கும் இவ்வொலி கேட்கட்டும்!

    பதிலளிநீக்கு