மொழித் திணிப்பு - எந்த வகையிலும் நல்லதல்ல!
--நா.முத்துநிலவன்—
இந்தியா விடுதலை பெற்றவுடன்,
மொழிவழி
மாநிலக்
கோரிக்கைகள்
எழுந்தன. ஆட்சிக்கு
வந்திருந்த காங்கிரஸ் கட்சி,
இந்தி ஆதரவாளர்களால் நிரம்பி இருந்ததால், இதை ஏற்கவில்லை.
ஒரிய
மொழி பேசும் மக்கள், தனி மாநிலக் கோரிக்கையை ஆங்கிலேயரிடம் எழுப்ப, முதல் மொழிவழி மாநிலமாக 1935ஆம் ஆண்டே ஒரிசா
பிறந்துவிட்டது. ஆங்கிலேயர்
புரிந்து கொண்டதை இந்தியத் தலைவர்கள் புரிந்து கொள்ளவில்லை
ஆங்கிலேயர் காலத்திய மதராஸ், பம்பாய், டெல்லி, வங்கம் உள்ளிட்ட பல மாநிலங்களை நிர்வாக எளிமைக்காக மட்டுமின்றி, மாநிலம்
கடந்தும் இந்தியைத் திணிக்கும் நோக்கத்திலேயே திட்டமிட்டனர். ஆங்கிலேயர் காலத்திலேயே மொழிவழி “பிரதேசக் காங்கிரஸ் கமிட்டி” வைத்து மக்களைத் திரட்டிய கட்சி, ஆட்சிக்கு வந்ததும்
இதை ஏற்காமல் இந்தித் திணிப்பில் இறங்கியது.
பிரிந்த மாநிலங்கள் - நேரு
அமைத்த
‘தார்’ கமிஷனும், ‘ஜே.வி.பி.’ கமிஷனும் மொழிவழி மாநிலப் பிரிவுகளை எதிர்த்து அறிக்கை
தந்தன. (ஜவகர்லால் நேரு, வல்லபாய் படேல், பட்டாபி சீதாராமையா ஆகியோரின் முதல் எழுத்துகளே ஜே.வி.பி.) இதனிடையே இந்திய அரசமைப்புச் சட்டம் 1950ஆம் ஆண்டில், உருவாக்கப்பட்டு
விட்டது.
அதன்படி, தமிழ், தெலுங்கு,
மலையாளம், கன்னடம் என நான்கு மொழி பேசுவோரை “தட்சிணப் பிரதேசம்” என ஒரே மாநிலத்தில்
அடக்க நினைத்ததை நான்கு மொழியினரும் எதிர்த்தனர்.
ஆந்திர மாநிலக் கோரிக்கையை முன்வைத்து உண்ணாவிரதமிருந்து உயிர் தந்து ஸ்ரீராமுலு அவர்கள் பற்ற வைத்த நெருப்பு, தென்னகமெங்கும் பரவியது. தன் விருப்பத்தை விடவும் மக்களின் குரலுக்கு மதிப்பளித்த அன்றைய பிரதமர் நேரு, 1953இல் ஆந்திராவைத்
தனிமாநிலமாக அறிவித்தார்.
தெலுங்கு மொழிக்குத் தனி
மாநிலம்
கிடைத்ததைத்
தொடர்ந்து, மொழிவழி மாநிலக் கோரிக்கைகள் வலுத்தன. காங்கிரஸ் அல்லாத கட்சிகளே இதை முன்னெடுத்தன. பெரும் போராட்டங்களுக்குப் பிறகு, 1956 நவம்பர் 1ஆம் தேதி, இன்றைய தமிழ்நாடு, கர்நாடகா, கேரள மாநிலங்கள் உருவாயின.
தொடர்ந்து, 1957இல் அஸ்ஸாமிலிருந்து நாகாலாந்தும், 1960இல் பம்பாயிலிருந்து மராட்டிய, குஜராத் மாநிலங்களும், 1966இல் அரியானாவிலிருந்து பஞ்சாபும் தனித்தனி
மொழிவழி மாநிலங்களாகப் பிரிந்தன.
1965இல் தமிழ்நாட்டில் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் விளைவாக, 1967இல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தோற்று, திமுக ஆட்சிக்கு வந்தது. விடுதலைக்குப் போராடிய ஒரு கட்சி, இருபதே ஆண்டுகளில் ஒன்பது மாநிலங்களில் தோற்றதும், தமிழகத்தில் அதன்பின் ஆட்சிக்கு வரவே முடியாத நிலையும் இந்தித் திணிப்பால்தான் என்பதை “திணிப்போர்” மறந்துவிடக் கூடாது!
இதன்
பின்னரும்
அந்தந்த
மொழி-பண்பாட்டு உணர்வின் அடிப்படையில், மதராஸ்-சென்னை ஆனது, திருவேந்த்ரம்-திருவனந்தபுரம் ஆனது, மைசூர்- மைசூரு ஆனது, பெங்களுர்-பெங்களுரு ஆனது, பம்பாய்-மும்பை ஆனது, கல்கத்தா-கொல்கத்தா ஆனது, பாண்டிச்சேரி- புதுச்சேரி ஆனது, இந்தத் திருத்தங்களும் தாய்மொழி உணர்வின்
வெளிப்பாடே என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
தாய்மொழியின் முக்கியத்துவம் - தாய்மொழியை அடிப்படையாக வைத்துப்
பிரிக்கப்பட்ட மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, மராட்டி, குஜராத், வங்கம், பஞ்சாப் முதலான மாநிலங்களே இந்திய முன்னேற்றத்தில் பெரும்பங்கு வகிக்கின்றன.
சரி. மூன்றாவது மொழியாகவோ, பயிற்று
மொழியாகவோ இந்தியை ஏற்றுக் கொண்டால் என்ன? எனும் முக்கியமான கேள்விக்கு
வருவோம்.
இந்தியை ஏற்ற வட இந்திய மாநிலங்களின் இன்றைய நிலை என்ன?
“இந்திப் பாடத்தில் பத்துலட்சம் மாணவர்கள் தோல்வி”
– இது 2019ஆம் ஆண்டு
உத்தரப்பிரதேச மாநில மாணவர் நிலை! இதே
நிலைதான் பீகாரிலும்!! இந்தியை ஏற்றுக் கொண்ட பல மாநிலங்களிலும்
இது நடக்கிறது. ஏன் தெரியுமா? அந்த மாநில
மாணவர்களின் -பூர்வீக- தாய்மொழிகள் வேறு! வேறு மொழி பேசிய தாய்-தந்தையின் பிள்ளை இந்தியில் படிக்கும்போது
இந்த நிலை வராதா? குண்டுப் பையனுக்கு இடம் கொடுத்தவன், தன் சொந்த
இடத்தையும் இழந்து விடுவானே?
மராட்டி, குஜராத்தி, வங்கம்,
பஞ்சாபி, ராஜஸ்தானி என, பெரிய மாநில மொழிகளே புறந்தள்ளப்
படும்போது, மைதிலி, போஜ்புரி, -புத்தர் பேசிய- பாலி, மகதி, இன்றைய
குடியரசுத் தலைவரின் சந்தாளி போலும் ‘சிறு’ மொழிகள் என்னாகும்?
உலகிலேயே அழிந்துவரும் நூற்றுக்கு மேற்பட்ட மொழிகளைக் கொண்ட நாடு இந்தியாதான்
என ஐ.நா. குறிப்பிடும் காரணம் புரிகிறதா?
“ரெண்டுவீட்டு
விருந்தாளி கெண்டை வீங்கிச் செத்தானாம்” என்பது, தமிழ்ச் சொலவடை! சொந்த மொழியிலும் படிக்க முடியாமல், வந்த மொழியையும் புரிந்து கொள்ள முடியாமல் கல்வி, வாழ்வை
இழந்த பரிதாபம், இன்று லட்சக் கணக்கான வட இந்தியரை, ”ஏதாவது வேலை கிடைக்கும்” என, தமிழ்நாட்டை
நம்பி ஓடி வரச் செய்கிறது!
இருமொழிக் கொள்கை - மொழிவழிச் சிந்தனையில் முன்னின்ற அண்ணாவின்
“இருமொழிக் கொள்கை”தான் இந்திய மாநிலங்கள் அனைத்துக்கும்
ஏற்றது என்பதுதான், ஒன்றியத் தலைவர்களுக்கு வரலாறு கற்றுத்தரும்
பாடம்!
நவீன சிங்கப்பூரின் தந்தை எனப்படும் லீ குவான் யூ, இருமொழிக்
கொள்கையே ஏற்றது என்பதை உணர்ந்து செயல்படுத்தினார். 70விழுக்காட்டுக்கும் மேல் சீன மொழி பேசுவோர் இருந்த போதும், சீனம்,, மலாய், தமிழ் என, முதலில்
அவரவர் தாய்மொழியையும், இரண்டாவது மொழியாக ஆங்கிலத்தையும் படிக்கச்
செய்தார். நான்கு மொழிக்கும் சமஉரிமை தந்ததால் அனைத்துத் துறையிலும்
சிங்கப்பூர் முன்னேறியது.
ஆங்கிலத்தை எடுத்துவிட்டு அந்த இடத்தில் இந்தி எதற்கு? அதுவே
கூடுதல் சுமையாவதோடு, உலகத் தொடர்பும் கிடைக்காது. இன்றைய வடஇந்திய மாநிலங்கள் கல்வி வேலைவாய்ப்பில் பின்தங்க மும்மொழித் திட்டமே
காரணம்.
தமிழ்நாட்டில் இந்தியைத் தாய்மொழியாகக் கொண்ட மாணவர்களுக்கு, தமிழ்நாடு அரசின் பாடநூல் நிறுவனமே இந்தியில் புத்தகங்களை அச்சடித்து
வழங்குகிறது!
“மூன்றாவது மொழி” கற்கும் வட இந்திய மாநிலங்கள்
எதிலாவது தமிழ் சொல்லித் தரப்படுகிறதா? சில ஆயிரம் பேரே புழங்கும்
சமஸ்கிருதத்திற்கு அறுநூறு கோடியாம், உலகெங்கும் எட்டுக் கோடிப்பேர்
பேசும் தமிழுக்கு வெறும் இருபது கோடியாம்! ஒருகண்ணில் பஞ்சு, மறுகண்ணில் நஞ்சா?
நிற்க.
மொழிவழி நாட்டு முன்னேற்றம் பற்றி ஒரு சிறு
ஒப்பீடு பார்ப்போம்-
(1) நிதி ஆணைய (NITI-Ayog’s Multy Dimentional Poverty Index MPI)அறிக்கைப் படி இந்தியாவிலேயே பீகார் மாநிலத்தில்தான் வறுமை அதிகமாக உள்ளது (59.91%)
(2)கல்வி நிலையிலும் பீகார் மாநிலமே கடைசி நிலயில் உள்ளது
(3) பெருவாரி மக்கள் பேசிய உருது மொழிக்கு மாற்றாக,
1881ஆம் ஆண்டே இந்தி மொழியை ஆட்சிமொழியாக்கிய முதல் மாநிலமும் பீகார்
தான்.
மாறாக, இன்றுவரை இந்தியை ஏற்காமல், இருமொழிக்
கொள்கையில் உறுதியோடு இருக்கும் தமிழ்நாடுதான்
உயர்கல்விக்குச் செல்லும் மாணவர் விகிதத்தில் இந்தியாவிலேயே முதலிடத்தில் உள்ளது.
வறுமையற்ற மாநிலங்களின் பட்டியலிலும் தமிழ்நாட்டுக்கு இரண்டாவது இடம்!
பண்பாட்டில் மட்டுமின்றி, கல்வி-
வேலைவாய்ப்பு- வேளாண்மை, தொழில் வளர்ச்சி- சமூகநலத் திட்டங்களைச் செயல்படுத்தவும்,
தவிர்க்க முடியாததாகத் தாய்மொழிக் கல்வியே உள்ளது. தாய்மொழியுடன் ஆங்கிலம் எனும்
இருமொழித் திட்டமே முன்னேறிய உலக நாடுகளில் உள்ளது. இதைத்தான் தமிழ்நாடும் சொல்கிறது, செய்கிறது.
இதைப் புரிந்து கொள்ள மறுத்தால், இந்தித் திணிப்பு,
வடஇந்தியாவை முன்னேற விடாது என்பதே கசப்பான உண்மை. இதுவே மொழிவழி
மாநிலங்கள் உருவான நாளில் முன்னிற்கும் சிந்தனையாகும்.
“இமய மலை போலுயர்ந்த ஒரு நாடும்,
தன்மொழியில் தாழ்ந்தால் வீழும்” – பாரதிதாசன்.
------------------------------------------------
(செய்தித் தாளின் பக்க அளவு கருதி,
சிறிதளவு சுருக்கியிருந்தாலும்,
கட்டுரையின் சாரமும் காரமும் குறையாமல்
2022, நவ.1ஆம் தேதியிலேயே வெளியிட்ட
இந்து-தமிழ் நாளிதழ் நடுப்பக்கக் கட்டுரை
ஆசிரியர்
குழுவிற்கு எனது நன்றியும் வணக்கமும்)
----------------------------------
இந்து-தமிழ் நாளிதழில் 01-11-2022 அன்று வந்த
இந்தக் கட்டுரையை அடுத்தநாளே (02-11-2022)
மறுபதிப்புச் செய்து வெளியிட்ட
முரசொலி நாளிதழுக்கு எனது நன்றி
--------------------------------