நா.முத்துநிலவன் நேர்காணல்



“தமிழ்நெஞ்சம்”

ஃபிரான்சில் வெளிவரும் அச்சு மற்றும் இணைய இதழ்.
இதில் எனது நேர்காணலை எடுத்து வெளியிட்ட
இதழின் இணையாசரியரும், புதுச்சேரியின் புகழ்மிகு பெண்ணியச் செயற்பாட்டாளருமான முனைவர் செல்வக்குமாரி அவர்களுக்கும்,
இதழாசிரியர் திருமிகு தமிழ்நெஞ்சன் அவர்களுக்கும்
எனது நெஞ்சார்ந்த நன்றிகள்



“தமிழ்நெஞ்சம்”

ஃபிரான்சில் வெளிவரும் அச்சு மற்றும் இணைய இதழ்.
இதில் எனது நேர்காணலை எடுத்து வெளியிட்ட
இதழின் இணையாசரியரும், புதுச்சேரியின் புகழ்மிகு பெண்ணியச் செயற்பாட்டாளருமான முனைவர் செல்வக்குமாரி அவர்களுக்கும்,
இதழாசிரியர் திருமிகு தமிழ்நெஞ்சன் அவர்களுக்கும்
எனது நெஞ்சார்ந்த நன்றிகள்
  ---------------------------------------------------------------------------------

(உலகறிந்த பேச்சாளர், தமிழ்ச் சமூக ஆய்வாளர், கவிஞர், ஆசிரியர், பாடகர், இயக்கவாதி எனும் பன்முகச் செயற்பாட்டாளர்)
நீங்கள் எங்கிருந்து சமூகப் பயணத்தைத் தொடங்கினீர்கள்?
கல்லூரிக் காலத்திலிருந்தே பொதுவாழ்விற்கு வந்துவிட்டேன் என்றே நினைக்கிறேன்! 1976! இந்திய அவசர நிலைக்காலம்!  மாணவர் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தேர்தல் செல்லாது என்று, நான் வெற்றி பெற்றபின் அறிவிக்கிறார் அன்றைய திருவையாறு அரசர் கல்லூரி முதல்வர் பாரதிப்பித்தன்! உடனே மாணவ நண்பர்கள்தேர்தல் செல்லாதா…? மாணவர் தலைவர் வேண்டுமே? அதற்கென்ன செய்ய?” என்று கேட்க. “வேறுவழி? கடந்தஆண்டு இறுதித் தேர்வில் யார் முதல் மதிப்பெண்ணோ அவர்தான் மாணவர் தலைவராக முடியும்!” என்கிறார். உடனே ஆரவாரத்துடன் மீண்டும் என்னை மாணவர்கள் தூக்குகின்றனர்.
கடுப்பான முதல்வர், “அதுதான் தேர்தல் செல்லாதுன்னு சொல்றேன்ல?” அவனை ஏன்டா தூக்குறீங்க?” என்று கேட்க, மாணவர்கள்இவன்தானே சார் முதல்மதிப்பெண்என்று கூச்சலிடுகின்றனர்! அன்று முதலே, நான் பொதுவாழ்விற்கு வந்துவிட்டதாகக் கருதுகிறேன்! பயணம் தொடர்கிறது!

உங்கள் வாழ்வில் மறக்க முடியாதவர்களாக நீங்கள் கருதுபவர்கள்-புதுக்கோட்டையில் கல்வியியல் கல்லூரிப் பேராசிரியர்களாக வாய்த்த அன்புத் தெய்வங்கள் செந்தூர்ப்பாண்டியன் அய்யாவும், சின்மயானந்தன் அய்யாவும், வறுமையில் செத்துப்போய்விடாமல் காப்பாற்றினார்கள்!

நகரில் இலக்கியவாதியாகத் திரிந்து கொண்டிருந்த என்னை, மாவட்ட முழுவதும் திரியவைத்த எங்கள் மாவட்ட அறிவொளி ஆட்சியர் ஷீலா ராணி சுங்கத் அவர்கள். எனதுசைக்கிள்பாட்டை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து இந்தி, மலையாளம், தெலுகு, கன்னடம், வங்கம் என இந்திய மொழிகள் பலவற்றிலும் அறியச் செய்தவரும் அவரே!

முன்பின் தெரியாமலே எனது கவிதைத் தொகுப்பை வெளியிட்டுத்தந்த அண்ணன் மீரா, அவரது மகன் கதிர்மீரா. இதை 1993இல் மதுரை காமராசர் பல்கலை. முதுகலை வகுப்புப் பாடநூலாக்கியபின், என்னை யாரென்று தேடிக் கண்டுபிடித்து வியப்பூட்டிய முனைவர் இரா.மோகன் அவர்கள்.

தமுஎச பேச்சாளராக இருந்த என்னை, தொலைக்காட்சிகளுக்கும் உலக நாடுகள் பலவற்றுக்கும் அழைத்துச் சென்று  20ஆண்டுகள் தன் பட்டிமன்ற அணித்தலைவராகவே பேச வைத்த  திண்டுக்கல் .லியோனி அவர்கள்.

எனது 34ஆண்டுத் தமிழாசிரியப் பணி நிறைவில், புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராயிருந்த தமிழறிஞர்            முனைவர் நா.அருள்முருகன் அய்யா அவர்கள்.



புதுகை கணினித் தமிழ்ச்சங்கம் சார்பில்உலகத் தமிழ் வலைப்பதிவர் திருவிழாநடத்தி, இன்றும் என் சுற்றமாகத் திகழும் அன்பின் நண்பர்கள்

உங்களை வடிவமைத்தவர்களாக யாரைக் கூறுவீர்கள்?                        
 உலக அளவில் கார்ல் மார்க்சு, இந்திய அளவில் அம்பேத்கார், தமிழகச் சூழலில் தந்தை பெரியார். இவர்கள்தான் எனது சிந்தனையை மட்டுமின்றி எனது செயல்பாடுகளையும் இன்றுவரை செதுக்கிவரும் சிற்பிகள்
 
கல்லூரியில் பழந்தமிழ் கற்க தி.வே.கோபாலய்யரும், புதிய தமிழ் கற்க பாரதிப்பித்தனும் முதல்வர்களாகப் பெற்றது எனது பெறுபேறு! செந்தலை .கவுதம அண்ணன் எனது முன்னோடியாகவும், மன்னை விசயரங்கன், சி.அறிவுறுவோன், வைகறை முதலானோர் எனது தோழர்களாகவும் கிடைக்கப்பெற்றதே எனது வாழ்க்கையை வடிவமைத்தது என்பேன்.

புதுக்கோட்டையில் முற்போக்கு இலக்கியம் இப்படித்தான் இருக்கணும் என்று கவிஞர் கந்தர்வனிடமும், புதுமை வெளிப்பாடு இப்படி இருக்கலாம் என்று கவிஞர் பாலாவிடமும் கிடைக்கப் பெற்றதும் எனது பாக்கியம்

இயக்கப் பணிகளில் உங்களுக்கு ஏற்பட்ட வலிமிகு,  ஒளிமிகு தருணங்கள்?  
வலி
1975-தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம்,  மதுரை நகரில் தொடங்கிய ஆண்டே, நான் திருவையாறு கிளையைத் தொடங்கினேன். பின்னர் 1978இல் புதுக்கோட்டை வந்து முதல் கிளையைத் தொடங்கி, கிளைச் செயலர், மாவட்டச் செயலர், மாநில நிர்வாகிகளில் ஒருவன் என எனது இலக்கிய இயக்கப்பயணம் தொடர்கிறது. பொறுப்புகளில் எதையும் என்றும் எங்கும் கேட்டுப் பெற்றதில்லை என்றாலும், எனது நண்பர் தங்கம் மூர்த்தியின் கவிதைதான் நினைவிலாடுகிறது. “எதிரிகளைப் பற்றி எனக்குக் கவலை இல்லை, அவர்களை நான் சமாளித்துவிடுவேன், எனது நண்பர்களை நினைத்தால்தான்..!” அதைப் பொதுவெளியில் சொல்வது நாகரிகமில்லை! “நம்மை மறந்தாரை நாம் மறக்க மாட்டேமால்
ஒளிமிகு தருணங்கள்- 1990-91இல் புதுக்கோட்டை மாவட்ட அறிவொளி ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவனாகப் பணியாற்றிய பொழுதுகள் என்னைப் புரட்டிப்போட்டன! மக்களுக்கு எழுத்தறிவு கற்றுக்கொடுக்கப் போய், அவர்களிடம் வாழ்க்கையைக் கற்றுக்கொண்ட மறக்கமுடியாத தருணங்கள்! ஆட்சியர் திருமதி ஷீலாராணி என்றும் என் நினைவில் இருப்பார்!

இன்றைய சூழலில்உங்களைக் குறிப்பாக தமிழகத்தில் கவர்ந்த தலைவர், படைப்பாளி, மனிதர்களாயார் யாரைக் குறிப்பிடுவீர்கள்?
அர்ப்பணிப்பில்- ஆர்.நல்லக்கண்ணு
அனுபவத்தில்- சங்கரய்யா
எளிமையில் ஜி.ராமகிருஷ்ணன்
அடிபட்டெழும் ஆவேசத்தில் தொல்.திருமாவளவன்,  
பார்வையில்- அருணன், படிப்பில்- .தமிழ்ச் செல்வன்
எழுத்தில்- பிரபஞ்சன், பேச்சில்- மதுக்கூர் இராமலிங்கம்,  
துணையாக என்மனைவி மல்லிகா, இணையாக புதுகைத் தோழர்கள் எனப்பலரும் இன்றும் என்னில் இயங்கி இயக்குகிறார்கள்!

தமிழகத்தைக் கூர்ந்து நோக்குபவர்களின் முக்கிய இடத்திலிருப்பவர் நீங்கள்.. தமிழக அரசியல் எதை நோக்கிச் செல்வதாக நினைக்கிறீர்கள்
 என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்?” அடிமைகளைக் கொண்டே வேலைவாங்க நினைப்போர் சர்வாதிகாரியாகி காணாமல்போவது உலக சரித்திரத்தில் பலமுறை நடந்திருக்கிறது. மக்கள் ஜனநாயகமே வெல்லும்

இன்றைய முகநூல் கவிஞர்கள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? முகம்தெரியாமலே ஆற்றலால் முக்கியத்துவம் பெறுவோர் சிலர்.  
அற்ப ஆசையால் முகத்தோடு வாழ்வையும் தொலைப்பவர் பலர்.

பிடித்தபொன்மொழி?                                                                     மரம் ஓய்வெடுக்க நினைத்தாலும் காற்று விடுவதில்லை” -மாஓ

பிடித்த கவிதை?                                                                        வேடிக்கை மனிதரைப்போலே - நான் 
 வீழ்வேன் என நினைத்தாயோ?” பாரதி
 
பல்வேறு விருதுகளைப் பெற்ற எட்டுநூல்களை எழுதியிருக்கும் நீங்கள் இப்பொழுது என்ன எழுதிவருகிறீர்கள்?
எனது வலைப்பக்கத்தில் சுமார் 750படைப்புகளை எழுதியிருக்கிறேன். இவை விருதுபெற்ற நூல்களாகியிருந்த போதிலும், வாசகர்களால் விரும்பிப் படிக்கப்பெறுவதையே பெரிய விருதாக நினைக்கிறேன். சுமார் 6,50,000பக்கங்கள் படிக்கப்பட்டு உலகம் முழுவதும் தமிழ் இணைய நண்பர்களைப் பெற்றதே விருதுகளை விடவும் மகிழ்ச்சி தருகிறது!

இப்போது, கடந்த 20ஆண்டு முயற்சியாக கவிதையின் கதைஎனும் ஒரு பெருநூலை எழுதிவருகிறேன். இன்னும் ஓராண்டில் வெளிவரவுள்ளது தமிழ்க்கவிதையின் உருவ உள்ளடக்க மாற்றத்தைக் கவனித்தால் ஆசிரியப்பா, மனித இனத்தின் ஆரம்ப நிலையான இனக்குழு நிலை! தொடர்ந்து வரும் வெண்பா விருத்தம், 40வரிப் புறநானூறு பத்தாயிரம் பாடல்கொண்ட ராமாயணமாக வளர்ந்ததில் தமிழ்ச்சமூக வளர்-சிதை மாற்றமே எனக்குத் தெரிகிறது. சமூகம் மாறமாறக் கவிதை மாறுகிறது!

அதாவது தமிழ்ச்சமூகம் மாற மாற, ஆதிக்கலை வடிவமான கவிதையும் மாற்றம் பெற்று இன்று புதுக்கவிதை, அய்க்கூ என வந்திருக்கிறது என்பது தான் இந்நூலின் சுருக்கம்! ஆதிச் சங்க காலத்திலிருந்து, இன்றைய சாதிச் சங்கம் வரையிலான கவிதையின் கதை! ஓராண்டில் வெளிவரும்! முப்பெரும் பிரிவாக மரபுக்கவிதை, புதுக்கவிதை, அய்க்கூ என வருகிறது. தொல்காப்பியம் முதல் இன்று வரையான கவிதையின் கதை!

இளைஞர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?                   தொழில்நுட்பமும் கற்பனையும் இணையும் எதுவும் தோற்பதில்லை! உன்னிடம் இருக்கும் தனிஆற்றல் என்ன என்பதைக் கண்டு கொள்ள இன்றைய கல்வி உதவாது! நீ தான் கண்டுபிடிக்க வேண்டும். அமைத்துக் கொள்ளும் நண்பர்களே வாழ்க்கையை வடிவமைப்பார்கள். எனவே, நல்ல நண்பர்களே சிறந்த சொத்து! நல்ல நட்பைக் கண்டுபிடி! “ஆள் கெட்டுப் போகுமுன் பேர் கெட்டுப்போகாமல் பார்த்துக் கொள்எனும் ஜெயகாந்தனின் தொடர் உண்மையானது! எச்சரிக்கையோடு முன்னேறு!
------------------------------------------------------------------ 




இந்த எனது நேர்காணலை, நேர்த்தியாகச் செய்த
அன்புச் சகோதரி, புதுச்சேரிக் கவிஞர்
பெண்ணியம் செல்வக்குமாரி அவர்களுக்கும்
வெளியிட்டுப் பெருமைசெய்த
இதழாசிரியர் கவிஞர் தமிழ்நெஞ்சம் அவர்களுக்கும்,
மறுபதிப்புச் செய்த
தீக்கதிர் – வண்ணக்கதிர் (11-03-2018)
தோழர்களுக்கும்
எனது நெஞ்சார்ந்த நன்றியும் வணக்கமும்.
--------------------------------------

11 கருத்துகள்:

  1. வாழ்த்துக்கள் ஐயா.... தொடரட்டும் தங்கள் இலக்கியப் பயணம்....உங்களோடு சில நிகழ்வுகளில் கலந்துகொண்டது பெருமையாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  2. பல்வேறு சூழல்களுக்கும் இடையில் நீங்கள் ஆற்றிய ஆசிரியர் பணி, மற்றும், அன்றும் இன்றும் தொடரும் உங்களுடைய சமுதாய, இலக்கியப் பணிகளைப் பாராட்ட வார்த்தைகள் இல்லை அய்யா. வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  3. இதயம் நிறைந்த வாழ்த்துகள் தோழர்."நல்ல நட்பைக் கண்டுபிடி" இளைய சமுதாயத்திற்கு அருமையான அறிவுரை. தொய்வின்றித் தொடரும் உங்கள் பயணம் இன்னும் பல வெற்றிகளையும் புகழையும் தங்களுக்கு உறுதியாகத் தரும்."இன்றைய சூழலில்உங்களைக் குறிப்பாக தமிழகத்தில் கவர்ந்த தலைவர், படைப்பாளி, மனிதர்களாக யார் யாரைக் குறிப்பிடுவீர்கள்?" பலரைக் குறிப்பிட்டுவிட்டு குறிப்பாக உங்கள் வாழ்க்கை இணையர் மல்லிகாவையும் குறிப்பிட்டிருக்கின்றீர்கள். அருமை.வாழ்த்துகள் இருவருக்கும்.....

    பதிலளிநீக்கு
  4. வாழ்த்துகள் என்றென்றும்... தொடரட்டும் தமிழ்ப்பணி...

    பதிலளிநீக்கு
  5. மகிழ்ந்தேன் ஐயா
    தங்களின் பணி போற்றுதலுக்கு உரியது
    தொடரட்டும் தங்களின் அயராப் பணி

    பதிலளிநீக்கு
  6. முழுமையாக நிதானமாக வாசித்தேன். நீங்கள் எதிர்கொண்ட நிகழ்வுகளைப் பகிர்ந்த விதம் அருமை. நண்பர்களை நினைத்தால்தான்...என்ற சொல்லில் எவ்வளவு பொருள். அப்பப்பா. உழைப்புக்கும், மன உறுதிக்கும் நான் போற்றும் பெருமக்களில் நீங்கள் முக்கியமானவர். தங்களின் பணி சிறக்க மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  7. உங்களுடைய இந்த பேட்டியினை விக்கிபீடியாவில் இணைத்துள்ளேன் என்பதைத் தெரிவிப்பதில் மகிழ்கிறேன்.

    பதிலளிநீக்கு
  8. நிறைவான பேட்டி. தங்கள் ஆற்றிவரும் பணி மிகுந்த பாராட்டுக்குரியது. நன்றி.

    பதிலளிநீக்கு