முத்துநிலவன் பேச்சு


ஆசிரியருக்கும், பெற்றோருக்குமான கடமை எழுத்தாளருக்கும் உண்டு

புதுக்கோட்டை, ஆக. 16: ஆசிரியர், பெற்றோர் ஆகிய இருவர்களுக்குமான கடமை எழுத்தாளருக்கும் உண்டு என்றார் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்க மாநில துணைத் தலைவர் நா. முத்துநிலவன்.
புதுக்கோட்டையில் அந்தச் சங்கம் சார்பில் அண்மையில் நடைபெற்ற 10-வது மாவட்ட மாநாட்டைத் தொடக்கிவைத்து அவர் பேசியது:
மாணவர்களின் எதிர்காலத்தை மதிப்பெண்களே தீர்மானிப்பதாக கல்வி நிறுவனங்கள் கருதுவதால்தான், பாடப் புத்தகத்தையே கதியாகக் கொண்டுள்ள அவர்களிடம் கலை, கலாசாரப் பண்புகள் காணாமல்போய்விட்டன. இதனால், சமூகத்தின் அன்றாட நிகழ்வுகளைக்கூட மாணவர்களால் அறிந்து கொள்ள முடியாமல், சமுதாயத்திலிருந்து விலகிவிடுகின்றனர்.
கலை, இலக்கியமற்ற கல்வி உருத்தேறாது. ஆகையால், பொதுப் பாடத் திட்டத்தைக் கொண்டுள்ள சமச்சீர் கல்வி இதைத் தடுத்து நிறுத்தும்.
உயர் கல்வியை அரசு அனைவருக்கும் இலவசமாக அளிக்க வேண்டும்.
கலையில்கூட மக்கள் இழிவான பார்வை கொள்கிறார்கள். ஆனால், அதையும் கடந்து அனைவரது திறமைகளையும் தமுஎகச அங்கீகரிக்கிறது என்றார் முத்துநிலவன். மாநாட்டுக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் கா. பிரகதீஸ்வரன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் ரமா. ராமநாதன் முன்னிலை வகித்தார். மாவட்டப் பொருளாளர் சு. மதியழகன் அறிக்கை வாசித்தார். மாநிலத் துணைச் செயலர் மதுக்கூர் ராமலிங்கம் தொடக்கவுரையாற்றினார்.
கவிஞர்கள் எல். வடிவேல், ஆர். வெள்ளைச்சாமி, பொன். கருப்பையா, களக்கமங்கலம் சக்திவேல், சரவணன், சுதாகர் ஆகியோர் பாடினர்.
விழாவில் பல்வேறு பரிசுகளைப் பெற்ற கவிஞர்கள் ஜீவி, தங்கம்மூர்த்தி, அ. செல்வராசு, சு.மதியழகன், சு. பீர்முகம்மது, ராசி. பன்னீர்செல்வம், ஆர். நீலா ஆகியோர் பாராட்டப்பட்டனர்.
கவிஞர்கள் இளையமனோகரன், ஸ்டாலின், எஸ்.எ. கருப்பையா, சிவக்குமார், பூபாளம் செந்தில்குமார், தனிக்கொடி, எஸ். இளங்கோ உள்ளிட்டோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர். நாகஸ்சுர நளாயினியுடன் திண்டுக்கல் மாரிமுத்துவின் கட்டைக்கால் தவில் இசைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

First Published : 17 Aug 2011 08:00:58 PM IST – DINAMANI-Trichy Edition  

முத்துநிலவன் பேச்சு!



தொழில்நுட்ப அறிவில் மனித நேயம் தேவை!
தொழில்நுட்ப மாநிலக் கருத்தரங்கில் கவிஞர் முத்துநிலவன் பேச்சு!
புதுக்கோட்டை-ஆகஸ்ட்-06
         புதுக்கோட்டை அருகில் உள்ள கல்லூரியில் நடந்த ‘மாநிலம் தழுவிய தொழில்நுட்பக் கருத்தரங்கில்’ சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசிய தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மாநிலத் துணைத்தலைவர் கவிஞர் நா.முத்து நிலவன், ‘தொழில் நுட்ப அறிவோடு மனித நேயம் கலந்து வரும்போதுதான் சமுதாய முன்னேற்றம் சாத்தியமாகும்’ என்று குறிப்பிட்டார்.
           மாநிலத் தொழில் நுட்பக் கருத்தரங்கு:
         புதுக்கோட்டை அருகில் உள்ள கைக்குறிச்சி; வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரியில் தமிழ்நாடு முழுவதும்உள்ள தொழில்நுட்பக்கல்லூரிகள் பங்கேற்ற ‘மாநிலத்தொழில்நுட்பக் கருத்தாய்வு-2011’ எனும் கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கிற்கு கல்லூரித் தாளாளர் ஆர்.எம்.வீ.கதிரேசன் தலைமை தாங்கினார். தாளாளர்கள் பி.கருப்பையா, ஆர்.ஏ.குமாரசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
           விழா மலர் வெளியீடு: கருத்தரங்கில், கோவை, மதுரை, திருச்சி, சேலம், மேல்மருவத்தூர், ராஜபாளையம், விருதுநகர், சிவகாசி, கும்பகோணம், திருச்செங்கோடு, பட்டுக்கோட்டை, பெருந்துறை, குடியாத்தம், காரைக்குடி, உள்ளிட்ட 44 தொழில்நுட்பக் கல்லூரிகளிலிருந்து தலா இரண்டிரண்டு மாணவர்களின் தேர்வு செய்யப்பட்ட  ஆய்வுக் கட்டுரைகள் அடங்கிய விழா மலர் வெளியிடப்பட்டது.
          விழா மலரை புதுக்கோட்டை பஞ்சாப் நேஷனல் வங்கியின் முதுநிலை மேலாளர் கே.கிருஷ்ணக் குமார் வெளியிட கவிஞர் நா.முத்து நிலவன் முதல் மலரைப் பெற்றுக்கொண்டு மேலும் பேசியதாவது:
          ‘அறிவியல் தொழில் நுட்பம் வளர வளரத்தான் மனித சமுதாயம் மென்மேலும் முன்னேறும். கடந்த தலைமுறையை விடவும் இந்தத் தலைமுறை இளைஞர்கள் தொழில் நுட்ப அறிவில் மிகவும் ஆர்வம் காட்டிவருவதால் உலகம் முழுவதும் செல்லக்கூடிய வாய்ப்பையும் பெற்றிருக்கிறார்கள். ஒருகாலத்தில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்று ஐந்து நிலத்தில் கிடந்த தமிழர்கள் இப்போது உலகின் ஐந்து கண்டங்களுக்கும் செல்வது தொழில் நுட்ப அறிவினால்தான். உலகின் முதல்தரப் பணக்காரராகப் பத்தாண்டுகளுக்குமேல் இருந்த பில்கேட்ஸின் முந்நூறுக்கும் மேற்பட்ட நாடுகளின் தொழிலகங்களில் முக்கியப் பொறுப்பில் இருப்பது இந்திய இளைஞர்கள்- அதிலும் குறிப்பாகத் தமிழ் இளைஞர்கள்- என்று எழுத்தாளர் சுஜாதா எழுதியது உண்மை!
            ஆனால், உலகப் புகழ்பெற்ற சார்லி சாப்ளின் அவர்களின் சிறந்த மௌனப் படமான ‘மாடர்ன் டைம்ஸ்’ படத்தில், வருவதுபோல மனிதன் ‘எந்திரங்களோடு பழகிப் பழகி, மனிதத் தன்மையை இழந்து தானும் ஒரு எந்திரமாகி வருவது’ சாப்ளின் காலத்தை விடவும் இப்போது அதிகரித்துவிட்டது.
            நூறாண்டுகளுக்கும் முன்னர், புகை வண்டி கண்டுபிடிக்கப்பட்டு இங்கிலாந்தில் முதன் முதலாகப் பயணத்திற்கு விடப்பட்ட சிறிது நாளில் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் ஓர் உறுப்பினர் தீர்மானம் ஒன்றைக் கொண்டுவந்தார். அதாவது, ‘‘புதிதாக வந்திருக்கும் புகைவண்டி எனும் போக்குவரத்து எந்திரமானது பயங்கரமான ஓசை, மற்றும் புகையுடன் ஒரு பிசாசைப்போல ஓடிவருவதைப் பார்க்கும் ஆடு-மாடுகள் அஞ்சி நடுங்குகின்றன. மனிதர்களும் கூட அதிர்ச்சி அடைகிறார்கள். எனவே நமது பார்லிமெண்டானது புகைவண்டியின் வேகத்தை மணிக்கு 10கி.மீ வேகம் என்பதை 8கி.மீ. ஆகக் குறைக்க வேண்டும்!’’ பாருங்கள்! மணிக்குப் பத்து கி.மீ. வேகத்திற்கே அதிர்ச்சி அடைந்த காலம் போய் இப்போது மின்னல்வேக விமானங்களும் மணிக்கு ஆயிரக்கணக்கான கி.மீ. பாயும் ஏவுகணைகளும் வந்தது எப்படி? தொழில்நுட்ப வளர்ச்சிதான்! பாய்ச்சல் வேகத்தில் வளர்கிறோம் நாம்!
              ஆனால், ‘அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர் மக்கட் பண்பில்லா தவர்’ எனும் குறளுக்கு ஏற்ப தொழில் நுட்ப அறிவோடு மனிதநேயப் பண்பையும் வளர்க்காவிட்டால் அறிவியல் அழிவிற்கே நம்மை இட்டுச் செல்லும் ஆபத்தைத் தவிர்க்க முடியாது.
              கணினி விசைப்பலகை, கணிப்பான், மற்றும் கைபேசி, தொலைபேசி அனைத்தும் அறிவியல் கண்டுபிடிப்பே என்றாலும் இவை அனைத்திலும் 5 எனும் எழுத்தருகில் அல்லது இவ்வெழுத்துகளின் நடு மையத்தில் உள்ள விசைப் பொத்தானில் இரண்டு பக்கமும் இரண்டு புள்ளி அல்லது கோடு இருப்பதைப் பார்த்திருக்கலாம். அது கண்தெரியாதவர்களும் இந்தக் கருவிகளைப் பயன்படுத்தும் ஓர் உயரிய நல்ல நோக்கத்துடன் உலகம் முழுவதும் இவ்வாறே இக்கருவிகளின் புழக்கம் உள்ளது!
இதுபோலத்தான், அறிவியல் தொழில் நுட்பம் உலகப் பார்வையோடு, மனிதகுலம் முழுவதும் பயன்படுத்தும்படியானதாக உயர வேண்டும். அதுதான் மனித நேய வளர்ச்சிக்கு இட்டுச் செல்லும்”
             மேற்கண்டவாறு கவிஞர் நா.முத்து நிலவன் பேசினார். கருத்தரங்கில் புதுக்கோட்டையைச் சுற்றிலும் உள்ள தொழில் நுட்பக் கல்லூரிகள் பலவற்றின் முதல்வர், பேராசிரியர்களுடன் 200க்கும் மேற்பட்ட மாணவ-மாணவியரும் கலந்து கொண்டனர்.  முன்னதாகக் கல்லூரி முதல்வர் ஏ.வெங்கடேஷ் வரவேற்புரையாற்ற, துணை முதல்வர் எஸ்.கலியபெருமாள் நன்றி கூறினார்.
                             -----------------------------------------------
சற்றே சிலபல வரிகள் மாற்றங்களுடனும், சிலவற்றைச் சுருக்கியும் வெளியிட்டிருந்த நாளிதழ்களுக்கு நன்றி: தினமணி, தினமலர் தீக்கதிர் -06-8-2011
                             ---------------------------------------------