கவிதைத்தொகுப்பு விமர்சனம்

‘பிரவாகம்’ -கவிதைத்தொகுப்பு விமர்சனம்

தடம் பதிக்கும் த.மு.எ.ச. கவியரங்குகள்!1980களில், “கவிதைத் தொகுப்பா? ம்ஹ¥ம்! ஓடாது” என்றுசொன்ன பதிப்பகத்தார் ஏராளம்! பெண்ணியக் கவிதைகள், மற்றும் தலித்தியக் கவிதைகளின் சூறாவளி போன்ற சுழல்வரவாலும், த.மு.எ.ச.போலும் பல சமூக உணர்வுள்ள இலக்கிய அமைப்புகளின் தொடர் நிகழ்வுகளாலும், 90களின் துவக்கமுதல், இன்றுவரை,  தொடர்ந்து முன்னேறி, வெற்றிகரமாக வெளிவந்திருக்கும் கவிதைத் தொகுப்புகள்தான் எத்தனை! எத்தனை!

கலைஞர் மு.கருணாநிதி முதற்கொண்டு,ந.பிச்சமூர்த்தி, இன்குலாப், தணிகைச்செல்வன், கல்யாண்ஜி, இரா.மீனாட்சி, கந்தர்வன், வைரமுத்து, வைத்தீஸ்வரன், ராஜமார்த்தாண்டன், ஞானக்கூத்தன், முருகுசுந்தரம், பொன்னீலன், பிரம்மராஜன், உமாமகேஸ்வரி, தங்கம்மூர்த்தி, வல்லம்தாஜுபால்  போலும் பிரபலமான கவிஞர் களின் மொத்தத் தொகுப்புகள் வெளிவந்தன. ரூ.100, 200, 300 -- தற்போது  2011இல் வெளிவந்துள்ள ‘வைரமுத்து திரைப்பாடல்கள் 1000’ நூல் விலை ரூ.600 --என்று விலைவைத்த போதிலும், அவற்றில் சில மறுபதிப்பும் கண்டன! உள்ளடக்கத்தில் மட்டுமல்ல, உருவ மற்றும் வெளிப்பாட்டு -(Printing Technology)- வளர்ச்சியிலும், தமிழ்க்கவிதை மிக உயரத்திற்குப் போய்க்கொண்டிருக்கிறது என்பதே வரலாறு கூறும் உண்மை!

மு.மேத்தாவின்”கண்ணீர்ப் பூக்கள்”தொகுதி, -ஆகஸ்டு2004இல்- 25ஆவதுபதிப்புக்கான வெளியீட்டுவிழாக் காண்பது ஒன்றும் சாதாரணசெய்தியல்ல! தமிழ்க்கவிதை மகுடத்தில் வரலாறு செருகும்ஒரு வண்ணச்சிறகு அது!

“தமிழ்க் கவிதை மீண்டும் தன் நல்ல காலத்தை மீட்டெடுத்துவிட்டது” என்பதன் அடையாளம்தான் இது!
“1990களில் இருந்து, வளர்ந்துவரும் இந்தத் “தற்காலம்தான் தமிழ்க்கவிதையின் பொற்காலம்” என்று நான் (29.04.2001-தினமணிக்கதிர் நேர்காணலில்) கூறியது பொய்யில்லை என்பதற்கு மேலும் ஒரு சாட்சியாக, இதோ ஒரு ‘பிரவாகம்’ வந்திருக்கிறது

“கவியரங்கம் நீர்த்துப்போய்விட்டது”, “இனி நல்ல கவிதைகளை மேடையில் காணமுடியாது” என்று அங்கலாய்த்தவர்களும் உண்டு! ஆயினும்,பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள்கூடும்”கலைஇரவு”களில் வெற்றிகர மாக கவியரங்கத்தை நடத்திக் காட்டித் தடம் பதித்துவருகின்றது த.மு.எ.ச.!
1997ஆம் ஆண்டு  இந்தியச் சுதந்திரத்தின் பொன்விழாவை ஒட்டி,”50 கவிஞர்களின் 50 கவிதைகள்” கவியரங்கத்தை நடத்திய அனுபவத்தோடு, 2000இல் “வருக2000”எனும் 100 கவிஞர் பங்கேற்ற’மகா’கவியரங்கத்தை நடத்தியது புதுக்கோட்டை த.மு.எ.ச.!

இதில் வேகம்பெற்ற கோவை மாவட்ட முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தினர், 111 கவிஞர்கள் பங்கேற்ற ‘மாபெரும்’ கவியரங்கத்தைக் கோவையில் 9 மணி நேரம் நடத்தினர்! “மகா கவியரங்கம்-2001” எனும் பெயரில் அது தொகுப்பாகவும் வந்திருக்கிறது!

12.01.2002 அன்று, புதுக்கோட்டை நகர் மன்றத்தில்,13 மணி நேரம் –(காலை 10 மணிக்குத் தொடங்கி, இரவு 11 மணிவரை, மதிய உணவு இடைவேளை கூட இல்லாமல்)- 20 தலைப்புகளில் 202 கவிஞர்களைக் கொண்டு, மாபெரும் கவியரங்கம் நடத்தி - ‘தினமலர்’ நாளிதழ் எழுதியது போல, ‘கின்னஸ் சாதனை’ செய்த புதுக்கோட்டை த.மு.எ.ச., அதையும் ‘கவிதைப் பயணம்’ எனும் பெயரில் தொகுப்பாக வெளியிட்டிருக்கிறது.

தொடர்ந்து 2003இல், 101 கவிஞர்கள் பங்கேற்ற “மதவெறி எதிர்ப்பு மகாகவியரங்கம்” நடத்தி, அதனை, அண்ணல் காந்தி பிறந்த நாளில் தொகுப்பாகவும் வெளியிட்டது பாண்டிச்சேரி மு.எ.ச.!
இந்தக் கவியரங்குகள் மட்டுமல்லாமல், தமிழகத்தின் சில நூறு கிளைகளிலும் மாதாமாதமும் இலக்கியக்கூட்டங்கள் நடத்துவதும், கலை இரவுகளில் தவறாமல் கவிதை வாசிப்புகள் இடம்பெறுவதும் தொடர்ந்து நடக்கின்ற போது, கவிஞர்களின் எழுச்சிக்குக் கேட்கவேண்டுமா என்ன?
அப்படியான கவியரங்குகளைத் தொகுக்கும் பணியில் முன்னோடியாகச் செயல்பட்டிருக்கும்
சேலம் மாவட்டத் த.மு.எ.ச. நண்பர்கள் “பிரவாகம்” எனும் அருமையான கவிதைத்தொகுப்பைக் கொண்டுவந் திருக்கிறார்கள். - சேலம் மாவட்டத்தைச்சேர்ந்த 19 கவிஞர்களின் 44 கவிதைகளடங்கிய சிறிய தொகுப்பாக!

இந்திய அணுகுண்டுச்சோதனைக்கான சங்கேதச் சொல்லாக “புத்தன் சிரித்தான்” என்னும் வாசகத்தை வைத்திருந்தார்களாம்! அதைச்சொல்லாமல் சொல்லும்  மா.அசோகனின் கவிதை ஆழ்ந்த பொருளுள்ளது:
‘புத்தன் அழுதான்
போதிமரத்தையாவது
விட்டுவைத்திருக்கக் கூடாதா என்று’
-எனும்போது, அணுயுத்தநினைவே நெஞ்சில் அறைகிறது!
எத்தனை கோயில்களில், எத்தனை பூஜைகள் செய்தென்ன? எத்தனை வேள்விகள் செய்தென்ன? -
‘இன்னும் அணையாமல்
எரிந்துகொண்டுதான் இருக்கிறது-
பாதத்தில் பிறந்த பலரது வயிறுகள்!’
-என இமயபாலன் சொல்லும்போது, (ஆ)சாமிகள் மீது(ம்) கோபம் வருவது உறுதி!
பாரதியின் சாகாவரம்பெற்ற ‘தேடிச்சோறு..’ கவிதைபோன்றதொரு புதுக்கவிதையைத் தந்திருக்கிறார் - கி.சரவணக்குமார்.நாய்,மாடு,ஆடு,மீன் எல்லாம்தான் சாகின்றன,  மனிதன் எப்படிச் சாகவேண்டுமாம் தெரியுமோ?
‘வழியெங்கும் பசுமையூட்டி
அமைதியாய்ச் சென்று
கடலில் முடியும்
நதியொன்றின் சங்கமம் போல
நிகழவேண்டும் மனிதமரணம்!’
ஆழம் மட்டுமல்ல நுட்பமும் கைவந்திருக்கிறது இந்தக் கவிஞர்களுக்கு என்பதற்கு எடுத்துக்காட்டாக சு.சரவணமணியன் கவிதைகளைச் சொல்லலாம்.
‘மரியாதையும் அன்பும்
அங்க அசைவுகளில் உடனுக்குடன்
தேவைக்கேற்ற விகிதங்களில்’
-காட்டும் சிலரைக் காணும்போது இவரது கவிதை இனி நினைவுக்கு வரும்! இவரது ‘ஆசைகள்’ கவிதையையும், தி.ஜெயமுருகனின் ‘பயிலகம்’ கவிதையையும் கல்விக்கூடங்களில் எல்லாரும் பார்க்க பெரிதாக எழுதிப் போடவேண்டும்!
‘மகன் சோறு போடுவானா? மனைவியின் பணிவிடைகள் தொடருமா?’ என்பதான முதுமைக் கேள்விகள் தான் எத்தனை! எத்தனை! அத்தனை கேள்விகளையும் அடுக்கிவிட்டுக் கடைசியில்,
‘இப்படியாகக் கேள்விகள்
கீழ் நோக்கி இழுக்க
முதுமையில் முதுகு
   கூன் ஆவதில் வியப்பென்ன?’ -எனும் சூர்யநிலாவின் பதில் சுவையானது.
‘பிச்சைபுகினும் கற்கைநன்றே’ என்றாள் ஒளவை! கற்றபின் வேலைகிடைக்காத ஒருவன், ‘பிச்சைநன்றே’ என்றான்! இப்போதைய கல்வி ‘குலத்தொழிலில்’ கொண்டுபோய் விடுவதாகக் கூறும் செஞ்சுடர்,
‘பட்டதாரி அண்ணனுக்கு
எங்கள் குலத்தொழில்
வேலை கிடைத்தது-
ஒயின் ஷாப்பில்’
-என சமூகக்கேவலத்தை எதார்த்தக் கவிதையாக்கி இறுதியில் அதிர்ச்சியூட்டிவிடுகிறார்.
‘’எனக்கு உங்களைப்போலப் பேசவராது’-என்று (தன்)அடக்கமாகக் கூறிக்கொள்ளும் சேலம் மாவட்டத் த.மு.எ.ச. தலைவர் ஷேக் அப்துல்லா,அருமையான 3கவிதைகளை எழுதியிருப்பது, அதிர்ச்சிதரும் மகிழ்ச்சிதான்!
‘கீழத்தெருவான் கீழ்ச்சாதிக்காரன்
என்ற பரிகாசத்திற்குப் பரிகாரமாய்
தாடிவைத்து தொப்பிவைத்து
வாங்க பாய் என்று
எல்லோரும் அழைத்தபோது
அகமகிழ்ந்து போனார் என் முப்பாட்டனார்!

நாலு தலைமுறை கடந்துபோச்சு
முன்பாவது தனித்தெரு தனிக்கிணறு!
இப்போதோ அவர்கள்
ஆயிரம் மைலுக்கப்பால் தள்ளிப்போ!
அங்கே இருக்கிறது
துரைமார்கள் உனக்கு
பிரித்துக்கொடுத்த இடம்
என்கிறார்கள்’
-என்னும் ஷேக் அப்துல்லா கவிதையையும்,
‘பக்கத்து வீட்டு
ஏசுமரியான் இறந்ததற்காக
ரம்ஜான் பிரியாணிசெய்யவில்லை
அலிக்குட்டி பாய்!
- என்னும் காவேரிதுரை கவிதையையும், மதவெறியர் அனைவர்க்கும் அனுப்பவேண்டும்!

நல்ல கவிஞரும் விமர்சகருமான டாக்டர் பாலா, நல்ல கவிதைக்கான அடையாளமாகக் கூறும் புகழ்பெற்ற வாசகம் ஒன்றுண்டு: “நல்ல கவிதை, நம்மை மறக்கவிடாமல் நம்மோடு ஞாபக யுத்தம் செய்யும்”! சத்தியப்பிரியனின் கவிதை இதற்கு மிகவும் பொருத்தமாக நம்மை மறக்கவிடாது :
‘பலமுறை தோற்றுவிட்டேன் -
தெருவோரம் விற்ற
புல்லாங்குழலின் இசையை
வாங்கிய புல்லாங்குழலில்
இசைக்க!
வளரும் கவிஞருக்கு வளர்ந்தேயாக வேண்டிய ஒரு குணம் நிகழ்வுகளை நுட்பமாகக் கவனிப்பது. அப்படிக் கவனித்து நேர்த்தியாக அதை வார்த்தைப் படுத்தியிருக்கும் ஸ்ரீதேவியின் வரிகள் வியக்கவைக்கின்றன!
‘காக்கை விரட்டும்
கம்பு தட்ட
வாசலில் நறநறக்கிற
மணலின் நெறிப்பு...
அனைத்திலும் இருக்கிறது
கொள்ளுப் பாட்டியின் இழப்பு’
தாராவின் ‘குழந்தைகள்’கவிதையும், விருதைதுரைப்பாண்டியின் ‘தேடுதல்’கவிதையும் நன்றாகஇருந்தாலும் அவற்றுக்கான கவிதைத் தலைப்புகளை இன்னும் பொருத்தமாக வைத்திருக்கலாமென்று தோன்றுகிறது.
இந்த நல்லகவிதைகளைத் தொகுக்க, இரவீந்திரன்,சசிகலாவுடன் இணைந்து பணியாற்றியதோடு ஆழமான ஒரு முன்னுரையும் வழங்கியிருக்கிறார் சஹஸ். அழகான முன்னுரைக்காக கவிஞர் க.வை.பழனிச் சாமியையும், அருமையான அச்சுக்காக மாவட்ட த.மு.எ.ச. நிர்வாகிகளையும் நிச்சயம் பாராட்டலாம்.
‘பிரவாகம்’
(19 கவிஞர்களின் 44 கவிதைகள்)
பக்கம்:50, விலை: ரூ.30.
வெளியீடு:
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம்,
71, அருணாசல ஆசாரி தெரு,
சேலம் - 636 001
செல்பேசி:94432-26425.

பாடத் திட்டத்தில் ஊடகம் - தினமணியில் வந்த எனது கட்டுரை

=நா. முத்து நிலவன்=
இன்றைய மாணவர்கள் எந்தப் பயிற்றுமொழியில் படிக்கிறார்கள் என்பது முக்கியம்தான். தாய்மொழிவழிக் கல்விதான் தலைசிறந்தது. ஆனால், பயிற்றுமொழி பற்றிய விவாதத்திற்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை பாடத்திட்டத்திற்கும் தருவது முக்கியமில்லையா? ஆனால், பயிற்றுமொழி பற்றி விவாதம் நடக்கும் அளவிற்குக் கூட பாடத்திட்டம் பற்றி நடப்பதில்லையே அது ஏன்? அரசியல் வாதிகள் பேசுவதில்லை, சரி. ஆசிரியர் இயக்கங்களும், கல்வியாளர்களும் பேசாவிடில் மற்றவர்களா பேசுவார்கள்!

திரைப்படங்களையும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் ரசித்துப் பார்க்கும் மாணவர்கள், பாடங்களைப் படிக்கும்போது மட்டும் சலித்துக் கொள்வது ஏன்? என்று கல்வியாளர்கள் மட்டுமல்ல பெற்றோரும், சமுதாய அக்கறையுள்ள அனைவருமே யோசிக்க வேண்டும். "திரைக்காட்சியிலிருந்து கேள்விகேட்கப்படுவதில்லை. எனவே அதை மகிழ்ச்சியாக அனுபவித்துப் பார்க்கிறார்கள்' என்று சொல்லலாம். ஆனால் அதிலிருந்து கேள்வி கேட்டால் உடனுக்குடன் மிகச் சரியாகவே பதில் சொல்கிறார்கள் என்பதும் உண்மைதானே? அப்படியானால் அது மாணவர்களின் குறையல்ல! இன்றைய கல்விமுறையில், பாடத்திட்டத்தில், பயிற்றுமுறையில் உள்ள குறை என்றுதானே சொல்லவேண்டும்?
பள்ளிக் கூடத்திற்குப் போகமறுத்து, பள்ளிப்பேருந்தில் ஏறும்போது ""அம்மா டாட்டாம்மா'' என்று கதறும் குழந்தையின் அழுகுரல், ஒருவகையில் இன்றைய கல்விமுறையின் மீதான விமர்சனம்தானோ?

நமது பண்பாட்டைக் கெடுக்கக்கூடிய, கேவலமான சில தொலைக்காட்சி விளம்பரங்களைக் கூட ரசித்து, தன்னையறியாமலே மனப்பாடம் செய்து, கூடவே பாடும் ஒரு குழந்தை, ஒன்றரை வரித் திருக்குறளை மனப்பாடம் செய்யமுடியாமல் தடுமாறுவது ஏன் என்று யோசிக்க வேண்டும். ஒரு மிட்டாய் விளம்பரத்தில் வரும் "வந்தான் ஹீரோ பாட்டோட வடுகப்பட்டி ரோட்டோட' எனும் தொலைக்காட்சி விளம்பர வரியை குழந்தை அதுவாக வீட்டிலிருக்கும்போது பாடிக்கொண்டிருக்கிறதே! திருக்குறளின் ஒன்றரை வரிமட்டும் அவ்வளவு சுலபமாக மனதில் உட்கார மறுக்கிறதே! இது திருக்குறளின் குறையா? குழந்தையின் குற்றமா? இரண்டுமே இல்லை! நமது குறை! கல்வித்துறையில் இக்காலத்திற்கேற்றவாறு பாடத்திட்டங்களை, பயிற்சிமுறைகளை பயிற்றுமுறைகளை மற்றும் இவற்றைவிட முக்கியமாகத் தேர்வுமுறைகளை மாற்றாத நமதுகுறை!
மனப்பாடப்பகுதியின் 8 வரியைச் சொல்லமுடியாமல் பல நாள் தடுமாறிய மாணவன் ஒருவன், பள்ளி ஆண்டுவிழாப் பாட்டுப்போட்டியில் 80 வரிகளைக்கொண்ட "யுத்தம் இல்லாத உலகம் கேட்டேன்' எனும் திரைப்பாடலை முழுமையாகப் பாடிப் பரிசுபெறும் நிகழ்வுகள் தமிழ்நாட்டில் ஏராளம்!.

திரைக்கவிஞர் பலரும் திறமைசாலிகள்தாம். வள்ளுவருக்குக் கிடைக்காத பல வசதிகள் அவர்களுக்குக் கிடைப்பதால் வள்ளுவரை விடவும் அவர்களால் மாணவர் மனிதில் எளிதாக இடம்பிடிக்க முடிகின்றது. இந்தக் கசப்பான உண்மையைப் புரிந்து கொண்டு, அந்த வாய்ப்பு வசதிகளை, கல்விக் கூடங்களில் நாம் பயன்படுத்துவதில்லை. அதற்கு புதிய கல்வித் திட்டங்களிலும் இன்னும் போதிய இடம் தரப்படவில்லை என்பதுதான் எனது ஆதங்கம்.
மாணவர்களின் படைப்புத் திறனைக் கண்டுகொள்ளாமல், வெறுமனே மனப்பாடம் செய்யும் எந்திரமாக மட்டுமே அவர்களை நடத்தும் நமது "அரதப்பழசான' கல்விமுறையின் குறைகளால், ""எதிர்கால இந்தியா என்னாகுமோ?!'' என்னும் அச்சம் எழுவதும் இயல்புதானே! உலகின் மிகப் பெரிய பணக்காரராகக் கடந்த 12 ஆண்டுகளாக இருந்துவந்த அமெரிக்கப் பொருளாதாரத்திற்கே சவால்விட்டுவரும் மைக்ரோ-சாப்ட் நிறுவனத்தின் தலைவர்- பில்கேட்ஸ், எதிர்கால உலகின் தேவைகளைப்பற்றிய தனதுகற்பனையை, கோடிக்கணக்கில் விற்பனைசெய்ய, அவரது தொழில் நுட்ப அறிவால்தானே முடிந்தது! நமது கல்விமுறை புதிய தொழில் நுட்பங்களைப் பயன்படுத்துவதுடன், மாணவ-மாணவிகளுக்கும் அந்தத் தொழில்நுட்ப வளர்ச்சிகளை அறிமுகப்படுத்த வேண்டுமல்லவா?

"அனைவருக்கும் ஆரம்பக்கல்வி' எனும் புதிய கல்வித்திட்டத்தில், ஆடல், பாடல், செயல் வழிக்கற்றல், மாணவர்களின் படைப்பாக்கத்திற்குக் கல்வியில் இடம்தருதல் போலும் சில நல்ல மாற்றங்களைக் கொண்டு வந்திருப்பது நல்லதுதான். ஆனால், அவற்றைவிடவும் நம் மாணவர்களை அதிகமாகப் பாதிக்கும் ஊடகங்களைப் பற்றி இப்போதும் கண்டுகொள்ளாமல் விடுவது சரியல்லவே!

""ஊடகக் கல்வி''யே இன்றைய மாணவர்களை சரியான வழியில் கொண்டு செல்ல உதவ முடியும்!
திரைப்படம், தொலைக்காட்சி, பத்திரிகைகள், கணினி என அனைத்துவகை ஊடகங்களையும் மாணவர் கல்விக்குப் பயன்படுத்துவது பற்றித் திட்டமிடவேண்டும். இல்லையேல் தேவையற்ற திரைப்படங்கள் இனிப்பாகவும் தேவையான பள்ளிப்பாடங்கள் கசப்பாகவும் இருக்கும் இன்றைய நிலையை மாற்ற முடியாது. இதில் மாணவர்களையோ ஆசிரியர்களையோ குறைசொல்வதில் அர்த்தமில்லை. அதற்கேற்றவாறு பாடத்திட்டத்தில், முதற்கட்டமாகத் தேர்வு முறைகளிலாவது புதிய, புதிய வகைகளை யோசிக்க வேண்டும். தேர்வுமுறை மாற்றம் பற்றிய யோசனையைத் திறந்த விவாதத்திற்கு விடவேண்டும்.

புதுக்கோட்டையில் ஒரு நல்ல பள்ளிக்கூடத்தை நடத்திவரும் பிரபல கவிஞரும் எனது நண்பருமான தங்கம் மூர்த்தி, தனது பள்ளிக்கூடத்தில் ஒவ்வொரு மாதமும் கடைசிப் பள்ளிநாளில் மாணவர் யாரும் பாடப்புத்தகம் எதையும் கொண்டுவர வேண்டியதில்லை என்று சொல்லிவிடுவாராம். ஒருநாள் முழுவதும் புத்தகமில்லாநாள்! அடேங்கப்பா! மாணவர் மகிழ்ச்சிக்குக் கேட்கவா வேண்டும்? அன்று முழுவதும் பாட்டும், கதையும். பாடத்திட்டத்தையே அவ்வாறு யோசிப்பது எவ்வளவு பலனளிக்கும்!

இதுபோலப் "புத்தமில்லாப் பள்ளிநாள்கள்' அதிகரிக்கப்பட்டு திரை- தொலைக்காட்சி நாள், கணினி நாள், நூலக நாள், பத்திரிகை நாள், சுற்றுச்சூழல் நாள், பள்ளித்தோட்டத்தில் ஒரு நாள், அருகில் இருக்கும் தொழிற்சாலையைப் பார்வையிடும் நாள், வயலைப் பார்வையிடும் நாள், அலுவலகத்தை - வங்கிகளைப் பார்க்கும் நாள் என்பன போலும் புதிய, புதிய திட்டங்களைப் பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும். இன்றைய போட்டிகள் நிறைந்த உலகிற்கேற்ப நமது மாணவர்களைத் தயார்செய்ய வேண்டுமனில் நமது கல்வித்திட்டத்தில் ஊடகங்களைப் பயன்படுத்தும் முறை பற்றிய வகுப்புகளைச் சேர்க்கவேண்டுவது அவசியம். இதற்கென்று சோதனைக்கட்டமாக மதிப்பெண்களைக் கூட ஒதுக்கலாம்!
பாடங்களில் 25 விழுக்காடாவது சமகாலச் செய்தி கொண்டதாக இருக்க வேண்டாமா? செய்திகளைக் கேட்கும்- பார்க்கும்போதே அதன் "உண்மைத்தன்மை'யைப் புரிந்துகொள்ளும் அறிவு இருக்க வேண்டும். அந்த அறிவு மாணவப் பருவத்திலேயே கிடைக்குமாறு செய்துவிட்டால், ஆகா! அதுவன்றோ சான்றோர் நாடு! அதன் வித்து கல்வித்திட்ட மாற்றத்தில் அல்லவா இருக்கிறது?

பள்ளிக்கூடக் காலை வணக்கக் கூட்டங்களில் "இன்றைய பத்திரிகைகளின் முக்கியச் செய்திகள்' வாசிக்கப்படுவதுண்டு! எந்தெந்தப் பத்திரிகைகள் எந்தெந்தச் செய்திகளை எவ்வாறு வெளியிடுகின்றன? என்பதுபற்றித் தெரிந்தால்தானே அவற்றின் "உண்மைத்தன்மை'யை, -வள்ளுவர் சொன்னதுபோல- புரிந்து கொள்ள முடியும்? இல்லையெனில் ""செய்தியறிந்த முட்டாள்களாக''த் தானே வளரவேண்டியிருக்கும்? இது பற்றி அன்றாடமும் வகுப்புகளில் விவாதம் நடத்த வாய்ப்பில்லா விட்டாலும் மாதம் ஒருநாள் ஊடகங்கள் பற்றிய கலந்துரையாடலை மாணவர்களிடையே நடத்தலாமே!
பத்திரிகைகளின் தலையங்கங்கள், தலைப்புச் செய்திகள், அந்தமாதம் அதிகமாக அடிபட்ட செய்திகளின் உண்மைத் தன்மை, இதுபோலவே திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பற்றிய விவாதங்களையும் அவ்வப்போது 9,10,11,12 வகுப்பு மாணவர்களிடையே நடத்தினால், அதுதானே உண்மையான பொதுஅறிவுத்தூண்டலாக இருக்கும்? இல்லையேல் "இந்தப் பாட்டு எந்தப் படத்தில்? இதில் நடித்த நாயக- நாயகி யார்? என்பன போலும் "அரிய' கேள்விகளைக் கேட்டு பொதுஅறிவு என்று சில தொலைக்காட்சிகள் நடத்தும் "பொதுஅறிவுப்போட்டி(?) தானே மாணவர் கவனத்தை இழுத்துக்கொள்ளும்?

""அதிகமாக விற்பனையாகும் பத்திரிகைகளின் செய்திகளைவிடவும் அதிகமான மக்களால் மதிக்கப்படும் பத்திரிகைகளின் செய்திகள் முக்கியத்துவம் வாய்ந்தவை''- என்பதை நம் குழந்தைகளுக்கு சொல்லித்தரவிட்டால், நுனிப்புல்மேயும் மனப்பான்மையை வளர்த்துவிடும் குற்றத்திற்கு நாமே ஆளாகிவிட மாட்டோமா? பள்ளிக்கூடங்களில் படிக்கும் பாடம் போதவில்லை என்பதை பெற்றோரும், கல்வியாளர்களும் ஒத்துக்கொண்டாலும் அதற்கான மாற்று என்ன என்று யோசித்தால், ஊடகக் கல்வியின் அவசியத்தை நாம் உணர்ந்து கொள்ள முடியும்.

படித்துமுடித்து, வேலைக்கான நேர்காணலுக்குப் போகும்போதுமட்டும் செய்திகளைத் துரத்தித் துரத்திப் பார்க்கும்- படிக்கும் இளைஞர்களை நாம் பார்த்திருப்போம்! அப்போது படித்தால் மட்டும் போதாது! ஆரம்பத்திலிருந்தே அந்த "சேமிப்பு' இருந்தால் நல்லதுதானே? இதைச் செயல்படுத்த என்ன தடை? "பாடத்திட்டத்தில் பத்திரிகைகளைச் சேர்ப்பது' என்பது பற்றித் திட்டமிட்டால் ஊடகக் கல்வியில் உயர்ந்த அனுபவம் கொண்டவர்கள் சரியான வழிகளைச் சொல்ல மாட்டார்களா என்ன?

இதுபோலத்தான், "ஆகா, மோசமான படத்தைப் பார்த்துப் பிள்ளைகள் கெட்டுப்போவார்களே என்று, பெற்றோர்கள் கவலைப்படுவதற்கும் தீர்வுகான முடியும். "நல்லபடம் எது, வெறும் பொழுதுபோக்குப்படம் எது?' என்பது பற்றிய அறிவு அவர்களுக்கு எங்கிருந்து கிடைக்கும்? பள்ளி வகுப்புகளில் நடக்கும் "படக்காட்சி மற்றும் விவாதம்' தானே அதைத் தரமுடியும்? இயக்குநர் பாலுமகேந்திரா சொல்வதுபோல, "திரைப்பட ரசனை' பற்றிய தெளிவு கிடைத்தால், அதனால் வரும் தீங்குகள் பலவும் தொலைந்து போகுமே! நல்ல பத்திரிகைகளை, புத்தகங்களைப் "படிக்கச் சொல்லி'த் தருவது போல, நல்ல படங்களையும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் "பார்க்கச் சொல்லி'த் தந்தால், நல்ல மாற்றம் நிகழாதா என்ன?

பத்திரிகை, தொலைக்காட்சி, திரைப்படங்களைப் பாடத்திட்டத்தில் சேர்க்கவேண்டிய அவசியம் உணர்ந்து, முறைப்படி திட்டமிட்டுச் சேர்த்துவிட்டால், வீட்டில் இருக்கும் பெற்றோரே ஆசிரியாராக மாறுவர்! பள்ளியில் இருக்கும் ஆசிரியர், பெற்றோர்போல் மதிக்கப்படுவர்!
ஒரு சமுதாயமே தன் தேவைக்கான கல்வியின் புதிய அர்த்தத்தைப் புரிந்து புதிய படைப்புகளை உருவாக்கும். அதில் புதிய சமுதாயமும் எழும்!  "எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு'
--------------------------------------------------------------------------------------------
(கட்டுரையை 01-01-2009 அன்றைய தலையங்கப் பக்கக் கட்டுரையாக வெளியிட்ட ''தினமணி'' நாளிதழுக்கு நன்றி)

ரெண்டு புதுசு! ரெண்டு பழசு! - கவிதைகள் - நா.முத்து நிலவன்

இரண்டு புதுக்கவிதைகள் -

  பேடிக்கல்வி

 காலத்தால் அழியாத
 கவியாக்கும் அவசரத்தில்
 காளியம்மா வந்து
 சூலத்தால் எழுதியதில்-
 நாக்கு துண்டாகி,
 பேச்சும் போச்சு!
----------------------------------------------------------------
    சுதந்திரம்

  சட்டைத் துணி கேட்டு
 சண்டையிட்டோம்,
 ஒட்டுத்துணி கிடைத்தது-
 மூன்று வர்ணத்தில்.
 அதுவும் இப்போது
 நால்வர்ணத்திடையே
 நசுங்கி...
---------------------------------------------------------------------
இரண்டு மரபுக் கவிதைகள் -
                       
காப்பித்தூள் கடைமாற்றி வாங்க, வழியில்
            
காய்கறிக்கா ரன்பார்க்க, கடையை மாற்ற,
 '
சாப்பாடு இல்லை,கேஸ் இல்லை, மதியம்
           
சமாளியுங்கள்' எனமனைவி முகத்தைப் பார்க்க
 '
மோப்பெட்'டில் 'ரிசர்வு'வர, பிள்ளைமுணு முணுக்க,
           '
மூன்றாம்மாதம்' 'கேபிள்' காரன் திட்ட,
 
நாய்ப்பாடு பட்டுவரும் நடுத்தர வர்க்கம்
           
நாளொருபொழு தாகிவரும் நடுத்தெரு வர்க்கம்!


இமயத் தலைமுடி நரைத்தஎன் தாயே
      எத்தனை புகழ்வளர்த் தாயே, -உன்
குமரிக் கால்களில் கொஞ்சும் அலைகளில்
      நெஞ்சினைக் கொள்ளைகொண் டாயே! –முன்
அமைதியும் அழகும் எங்கு தொலைத்தனை
      ஐயகோ இன்றைய நிலவரம் –மனச்
சுமையினை எங்குபோய்ச் சொல்லுவேன் –அடடா
      சூழ்ந்ததே இனமதக் கலவரம்!

புத்தரும் காந்தியும் போலப் பெரும்புகழ்ப்
      புத்திரர்   உனக்கென்ன குறையா? – மத
யுத்தமும் சாதியால் ரத்தக் களரியாய்
      இன்றிங்கு நலிவதும் முறையா? -இவை
இத்தனைக் குள்ளுமோர் சுயநலப் பேய்பிடித்(து)
      ஆடுதல் இனியும் காண்கிலையா?

விடுதலை பெற்றநள் ளிரவிலே மௌனமாய்
      விரதம் இருந்ததேன் காந்தி? –மதப்
படுகொலை தொடர்வதும் பாரதர் கெடுவதும்
      பார்த்துத் தொலைந்ததோ சாந்தி- இனி
அடுதலும் கெடுதலும் அண்ணனே தம்பியை
      அடிப்பதோ இடிப்பதோ தாயே!- ஒரு
முடிவிலையா? உன் மோனம் கலைந்தெறி
      மூர்க்கமாய் விழி! எழு! தாயே!

குறிப்பு-1
1993இல் கவிஞர் மீரா அவர்களின் “அன்னம் பதிப்பகம்” வெளியீடாக வந்த எனது முதல் கவிதைத் தொகுப்பான “புதிய மரபுகள்” நூலில் இடம்பெற்ற கவிதைகள். இந்நூல் அந்த ஆண்டே “தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் -1993ஆம் ஆண்டுக்கான சிறந்தகவிதை நூலுக்கான விருதைப் பெற்றதோடு, 1995முதல் 2010வரை மதுரை காமராசர் பல்கலையின் முதுகலை தமிழ் வகுப்புக்குப் பாடநூலாகவும் இருந்தது.

குறிப்பு-2
முன்பின் தெரியாமலே இந்த நூலைப் பாடநூலாக்கி விட்டு என்னைத் தேடிய முனைவர் இரா.மோகன் ஐயா அவர்களின் பெருந்தன்மை எனக்கு மகிழ்வும் நம்பிக்கையும் ஊட்டியது!