முத்துநிலவன் பேச்சு


சமூக மாற்றத்தை உருவாக்கும் கருவியாக எழுத்து இருக்க வேண்டும்
-- கவிஞர் நா. முத்துநிலவன்  பேச்சு

First Published : 24 Apr 2012 10:39:19 AM IST –
  
 புதுக்கோட்டை, ஏப். 22: சமூக மாற்றத்தை உருவாக்கும் கருவியாக எழுத்து இருக்க வேண்டும் என்றார் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்க மாநிலச் செயற்குழு உறுப்பினர் கவிஞர் நா. முத்துநிலவன்.
                                புதுகை மாமன்னர் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு அறிவியல் இயக்கம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கம் மற்றும் பாரதி புத்தகாலயம் ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்திய உலக புத்தக தின விழாவில் அவர் மேலும் பேசியது:
                                மாற்றத்தை விரும்புவதும், அதை நோக்கி தனது பயணத்தை தொடர்வதும் எழுத்தாளர்கள், படைப்பாளிகளின் கடமையாக இருக்க வேண்டும். உலக அறிவுக்கும், சமகால நடைமுறை வாழ்க்கைக்கும் தொடர்பில்லாத ஒரு சமுதாயம் உருவாகிக் கொண்டிருக்கிறது. இது சிக்கல் நிறைந்த கட்டத்துக்குள் சமூகத்தை நிறுத்தி விடும் ஆபத்து உள்ளது. தான் எந்தத் துறையில் சிறந்து விளங்க முடியும் என்ற தெளிவு படைப்பாளிக்கு இருக்க வேண்டும்.
                                நூற்றுக்கணக்கான புத்தகங்களை எழுதிக் குவித்த மாமேதை லெனினிடம், ஒரு கவிதை எழுதித் தருமாறு ஒருவர் கேட்ட போது, என் உடம்பில் ஓடுகின்ற ரத்தம் முழுவதும் உறிஞ்சி எடுத்தாலும் என்னால் கவிதை எழுத முடியாது என்றார். தமிழகத்தில் சிறந்த சொற்பொழிவாளராக அறியப்படுகின்ற சாலமன் பாப்பையா, தான் எழுத்திய புத்தகத்தின் அனைத்துப் பிரதிகளும் தன் வீட்டிலேயே இருக்கிறது. ஒன்றுகூட விற்பனையாகவில்லை என்று மனம் திறந்து கூறினார்.
                                மிகவும் கீழ்நிலையில் வாழ்ந்தவர்களை உலகின் மிகச்சிறந்த ஆளுமையாளர்ளாக கொண்டு வந்து நிறுத்தியது புத்தகங்கள்தான்.
                                பல்கலைக் கழக நூலகத்தில் சாதாரண ஊழியராக இருந்த மாவோவை மக்கள் சீனத்தின் நாயகனாக பரிணமிக்கச் செய்தது புத்தகங்களே. அர்ஜென்டீனாவில் தொழு நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்த சேகுவேராவை புரட்சியாளராக அடையாளப்படுத்தியதற்கு, அவரது மனைவி வீட்டில் அமைத்திருந்த சிறிய நூலகமே முக்கிய காரணமாகும்.
                                தகவல் தொழில் நுட்பப் புரட்சியில புத்தகங்களெல்லாம் குறுந்தகடுகளாக மாறி வருகின்றன. காலத்திற்கேற்றார் போல புத்தக வடிவம் மாறுவது இயல்பு. ஆனால், புத்தகங்கள் என்றும் நிலைத்து நிற்கும் வல்லமையுடைவையாக ஆக்குவது எழுத்தாளர்களின் கையில்தான் உள்ளது என்றார் அவர்.

 தமுஎசக மாநில துணைப்பொதுச்செயலர் கவிஞர் ஜீவி பேசியது:
 எழுத்தாளர்களையும், கலைஞர்களையும் அடையாளப்படுத்துவது புத்தக தினம் போன்ற விழாக்கள்தான். பிற நிகழ்ச்சிகளுக்கு கூடுவதைப் போல புத்தக தின விழாக்களுக்கு மக்கள் கூடுவதில்லையே என சிலர் வருத்தப்பட்டார்கள். பீடிக்கட்டு எல்லா பெட்டிக் கடைகளிலும் கிடைக்கும். குங்குமப்பூவை தேடி அலைந்துதான் பெற வேண்டும். நாம் குங்குமப்பூவைப் போல இருக்கிறோம். நேருவிடம் நீங்கள் விரும்பாதது எது எனக் கேட்ட போது, எப்போதுமே மனிதர்களுடனேயே இருப்பது எனக்கூறினார். விரும்புவது எதுவெனக் கேட்டபோது, போதுமான புத்தகங்களுடன் தனிமைத் தீவுக்குள் சில காலம் வாழ்வது எனக்குறிப்பிட்டுள்ளார். முத்தையா என்கிற மனிதன் மரணமுற்று கண்ணதாசன் என்கிற கவிஞன் நிலைபெற்றிருப்பதற்கு புத்தகங்களே காரணம். எனவே, அனைவரும் புத்தகத்தை நேசிப்போம், வாசிப்போம் என்றார் அவர்.
 விழாவில் அறிவியல் இயக்க மாவட்டத் தலைவர் எல்.பிரபாகரன், அறிவியல் இயக்க மாநில செயற்குழு உறுப்பினர் கவிஞர் ஆர். நீலா, கல்லூரி முதல்வர் சிவ. கார்த்திகேயன், அறிவியல் இயக்க மாவட்ட நிர்வாகிகள் பொன். கருப்பையா, ராசி. பன்னீர்செல்வன், சி.கோவிந்தசாமி, ஏ.மணிகண்டன், தமுஎகச மாவட்டச் செயலர் ரமா ராமநாதன் ஆகியோர் பங்கேற்றனர். முன்னதாக, தமுஎகச மாநில செயற்குழு உறுப்பினர் கவிஞர் ஜனநேசன், கவிஞர் தங்கம் மூர்த்தி, திருக்குறள் கழகம் ராமையா, கவிஞர்கள் சுவாதி, பீர்முகமது, ஈழபாரதி, கவிபாலா, முத்துப்பாண்டியன், கஸ்தூரிநாதன், சதாசிவம் உள்ளிட்ட மாவட்டத்திலுள்ள 42 படைப்பாளிகளுக்கு பரிசளிக்கப்பட்டது.
------------------------------நன்றி –தினமணி திருச்சி பதிப்பு – 24-04-2012-------------------

எனது புதிய மரபுகள் கவிதைத் தொகுப்பிலிருந்து


தெருப்புகழ்

கல்லத் தனை உள்ளத் தவ ரிடம்
எள்ளத் தனை கஞ்சிக் கென வெயர்
வெள்ளத் தினில் தள்ளா டியகொடும்  நிலைமாறி

வெட்டிப் பயி ரிட்டுப் புனலென
சொட்டித் திடு பச்சைச் குருதியை
விட்டுத் தினம் வைத்துப் பயிரிடும்   உழவோனே

தத்தம் உரி மைக்குப் பயிரினை
வித்திட் டதன் மொத்தப் பலனையும்
ஒத்துக் கொளும் இந்தக் கனவினி  நினைவாக

ஒட்டும் வயி றிங்கிவ் வுழவனை
எட்டும் பொழு தில்லை எனஒளிர்
பட்டப் பகல் வட்டத் திகிரியென் றெழுவோமே
---------------------------------------------------------------------------(1993)

பத்தாம்வகுப்பு தமிழ்வினாத்தாள் 
குழப்பத்தைத் தீர்க்க
தமிழாசிரியர் கழகம் அரசுக்குக் கோரிக்கை
     கடந்த 04-04-2012 அன்று நடந்த பத்தாம்வகுப்பு அரசுப் பொதுத்தேர்வின் தமிழ் முதல்தாள் தேர்வில், சில குழப்பமான வினாக்கள் இடம்பெற்றிருப்பதாகவும், அதனைத் தீர்த்து வைத்து அதற்கான பாதிப்பிலிருந்து தேர்வெழுதிய மாணவர்களை விடுவிக்க தமிழகஅரசு உரிய நடவடிக்கையை எடுக்கவேண்டும் எனவும் தமிழகத் தமழாசிரியர் கழகம் தமிழ்நாடு அரசுக்கும் பள்ளிக்கல்வித்துறைக்கும் கோரிக்கை வைத்துள்ளது.
வினாத்தாள் குழப்பம் -1
      அரசுத்தேர்வுக்குரிய மாதிரி வினாத்தாள்கள் தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறையால் இரண்டு மாதத்திற்கு முன்னர் இணையதளத்தில் வெளியிடப்பட்டன. வினாத்தாள் வடிவமைப்பு மாற்றமேதும் இணையதளத்தில் தரப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது இணையதளத்தில் வெளியிடப்பட்ட ஐவகை மாதிரி வினாத்தாள்களின் அடிப்படையிலேயே மாணவர்களுக்கு இறுதிப் பயிற்சிகள் தரப்பட்டன. எனவே அரசே வெளியிட்ட ஐவகை மாதிரி வினாத்தாள்களின் அடிப்படையில் பொதுத் தேர்வு வினாத்தாள் அமையவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
வினாத்தாள் குழப்பம் -2 ( எட்டு மதிப்பெண் வினா)
      அரசுத்தேர்வுக்குரிய வினாத்தாள் வடிவமைப்பு (BluePrint) ஒவ்வொரு பாடப்புத்தகத்தின் கடைசியிலும் தரப்பட்டுள்ளது. அதன் அடிப்படையிலேயே மாணவர்களுக்கான காலாண்டு, அரையாண்டு, திருப்புதல் தேர்வு முதலான பயிற்சித் தேர்வுகள் நடத்தப்பட்டன. ஆனால், அரசால் தரப்பட்ட வினாத்தாள் வடிவமைப்புக்கு மாறாக, கடந்த 04-04-2012அன்று நடந்த அரசுப் பொதுத் தேர்வில்  உரைநடை 8மதிப்பெண் நெடுவினா தமிழ் முதல்தாள் தேர்வில் கேட்கப்பட்டிருந்தது (வினா எண்-48 மதிப்பெண்-8) 8மதிப்பெண் கொண்ட வினாஎண்கள்-47,48 நெடுவினா இரண்டில், செய்யுள்பகுதிக்குரிய வினாமட்டும் வினாத்தாள் வடிவமைப்பின் படியே இருக்க, உரைநடைப் பகுதிக்குரிய வினாமட்டும் மாறிவந்தது ஏனென்று தெரியவில்லை. இது, மாணவர்களுக்கு மட்டுமல்லாமல் ஆசிரியர்களுக்கும் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.
வினாத்தாள் குழப்பம் -3 ( ஐந்து மதிப்பெண் வினா)
     செய்யுள் பகுதியில் “தமிழ்விடுதூது“  5மதிப்பெண் வினா ஒன்று அரசுப்பொதுத்தேர்வில் கேட்கப்பட்டுள்ளது. இந்தவினா புத்தகத்தில் இல்லாதது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால், இப்பகுதியில் இல்லாத வடிவத்தில் “இப்பாடல் ஆசிரியரின் பெயர் யாது?”  என்று தற்போது அரசுப் பொதுத் தேர்வில் (வினா எண்45இல், உள்பிரிவு வினா எண்-2) கேட்கப்பட்டுள்ளது.
வினாத்தாள் குழப்பம் -4 (இரண்டு மதிப்பெண் வினா)
      வினாத்தாள் வினா-எண்29இல் “வள்ளலாரின் முழக்கம் எது?என்னும் இரண்டு மதிப்பெண் வினா கேட்கப்பட்டுள்ளது. இதற்கு “அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை“ என்று பொதுவாகச் சொல்லப்பட்டாலும் இதுபோல் எந்த வரியும் வள்ளலாரின் முழக்கமாகப் புத்தகப் பாடப்பகுதியில் குறிப்பிட்டுத் தரப்படவில்லை. இதற்கு ஒவ்வோர் ஆசிரியரும் ஒவ்வொரு விதமாகச் சொல்லித்தந்திருக்க வாய்ப்பு உண்டு. எனவே சந்தேகத்துக்குரிய வினா எதையும் பொதுத்தேர்வில் கேட்காமல் இருப்பதே மாணவர்களுக்கு உதவியாக இருக்கும்.
எனவே மேற்கண்ட காரணங்களால், முழுமதிப்பெண் பெற உழைத்துப் படித்த மற்றும் சொல்லித்தந்த ஆசிரியர்கள் பெரும் குழப்பத்தில் உள்ளனர் என்பதே இன்றயை நிலைமை.
சந்தேகத்திற்குரிய இந்த (8+5+2) 15மதிப்பெண்களை  முழுமையாகவோ பகுதியாகவோ மாணவர்களுக்கு வழங்கிவிடுவதே இதற்கான நியாயமாக இருக்கும் என்பதோடு, இனிவரும் மீதமுள்ள ஆறு தேர்வுகளும் அரசு வெளியிட்ட வினாத்தாள் வடிவமைப்புக்கு ஏற்பவே அமைவதை அரசு உறுதிப்படுத்தி பத்துலட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களை இந்தக் குழப்பத்திலிருந்து விடுவித்திட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் தமிழகத் தமிழாசிரியர் கழகம் தமிழக அரசைப் பணிவோடு கேட்டுக்கொளகிறது.
                             
சுப.காந்தி நாதன்
மாவட்டச் செயலர்,
தமிழகத் தமிழாசிரியர் கழகம்,
புதுக்கோட்டை மாவட்டம்                              
செல்பேசி-9842864674

மேலும் தொடர்புகளுக்கு – நா.முத்து நிலவன் - 9443193293
------------------------------------------------------------  
(இந்த அறிக்கையை வெளியிட்ட நாளிதழ்களுக்கு நன்றி - தினமணி திருச்சிப் பதிப்பு பக்கம்-05, தினமலர் திருச்சிப் பதிப்பு பக்கம்-09, தீக்கதிர் அனைத்துப் பதிப்புகள் பக்கம்-03 - நாள்-06-04-2012 மற்றும் தினகரன் திருச்சிப் பதிப்பு பக்கம்-15, நாள்-07-04-2012)
-----------------------------------------------------------------------------------------------------------------------

எனது புதிய மரபுகள் - தொகுப்பிலிருந்து...


டில்லி விளம்பரம்.

தொலைக்காட்சியின்
மொழி உணர்வு
தூய்மையானது
தமிழ்ச் செய்தி
இன்னும்
தமிழில்தான் வருகிறது!

தொல்பொருள் ஆய்விலும்
தொலைக்காட்சியின்
பங்களிப்பு அபாரம்
வாரா வாரம்
ஒரு திரைப்படம்!

எங்கள் தாத்தாவுக்கு
ஏக சந்தோஷம் -
அடுத்த வாரம்
ஆயிரம் தலைவாங்கிய
அபூர்வ சிந்தாமணியாம்!

கலைக்கு வயதில்லை!
சும்மா சொல்லக்கூடாது
அந்த ஐ.ஏ.எஸ். வீட்டுக்
கிழவியின் நடனம்
அருமை!

ஆக,
நீங்கள் இந்த
அரசாங்கத் திட்டத்தை
ஆதரிக்கிறீர்கள்
என்றே முடிந்து
எரிச்சலைக் கிளப்பும்
பேட்டிகள் -
திட்டங்களுக் கெதிராக
மக்களைத் திரட்டும்
நல்ல ஏற்பாடுகள்!

மேதைமைக்கு
கால வரம்பில்லை
தொடக்ககால
நாடகங்களை
இன்னும் தொடர்வது
அதனால்தான்.

மின் வெட்டுக்கூட
மக்களுக்கு
மகிழ்ச்சி தருவது
டி.வி. நாடகத்தால்தான்!

இரண்டாம்ப்பு படிக்கும்
 என் மகன்
Colour TV.’  என்பதை
கோளாறு டி.விஎன்றே
சரியாகப் படித்தான்!

எப்போதோ பூக்கும்
ர் அத்திக்காக
எவ்வளவு நாள் தான்
இதற்கு
மின்-நீர் விடுவது?

அறிவியலின்
இளைய பிள்ளை
ஆள் வோரின்
கைப் பிள்ளையாய்
ஆடும் வரை
டி.வி.யின்
சுருக்க விளக்கம்
டில்லி விளம்பரம் தானே?

அழுக்கில் கிடக்கும்
இந்த
சோப்புப் பெட்டியை
சுத்தப் படுத்தும் வரை
ஏ ! தவணைக் காரா!
என்னை
இரண்டு துன்பங்களிலிருந்து
காப்பாற்று!

இந்தப் பெட்டியை
வந்து
எடுத்துக்கொண்டுபோ!
--------------------------------------------(எழுதிய ஆண்டு 1989---தனியார் தொலைக்காட்சிகள் இல்லாத போது எழுதியது. இப்போதும் அரசுத் தொலைக்காட்சிக்கு இது பொருத்தமாகத்தானே உள்ளது? )---------------------------------------------------------  

‘மத்தியிலும் தமிழை ஆட்சி மொழியாக்க வேண்டும’


‘மத்தியிலும் தமிழை ஆட்சி மொழியாக்க வேண்டும’

தினமணி - 30.01.1997

தமிழ் வளர்ச்சி கருத்தரங்கில் (இடமிருந்து) போப் ஆதவன் சுஜாதா முத்துக்குமரன் ஞானி முத்துநிலவன் செந்தி;ல்நாதன் தேனிரா பாண்டியன்.

ஓசூர்ஜன.28- தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழிகளையும் இந்தியாவின் ஆட்சிமொழிகளாக அறிவிக்க வேண்டும் என்று ஒசூரில் நடைபெற்ற தமிழ் வளர்ச்சிக் கருத்தரங்கில் கோரிக்கை எழுப்பப்பட்டது.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் ஒசூர்கிளை சார்பில் ஞாயிற்றுக்கிழமை தமிழ் வளர்ச்சிக் கருத்தரங்கு நடைபெற்றது. இதில் பாரதிதாசன் பல்கலை. முன்னால் துணைவேந்தர் முத்துக்குமரன் எழுத்தாளர் சுஜாதா பத்திரிகையாளர் ஞாநி தமிழ் நாடு- புதுவை மாநில வழக்கறிஞர்  சங்கங்களின் கூட்டமைப்புத் துணைத் தலைவர் தேனிரா. பாண்டியன் கவிஞர்  முத்துநிலவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளார் சங்கத் தலைவர் செந்தில்நாதன் தலைமை தாங்கிப் பேசினார.; பழ.பாலசுந்தரம் வரவேற்றார்.

செந்தில்நாதன் பேசியதாவது இந்தியாலுள்ள அனைத்தும் மொழிகளுக்கும் சம உரிமை கொடுக்கப்பட வேண்டும். இந்திக்கு மட்டும் தனி அந்தஸ்து தருவது சரியல்ல.
ஊர்களின் பெயரையும் நிறுவனங்களின் பெயர்ப் பலகைகளையும் மாற்றுவதால் மட்டும் தமிழ் வளர்ந்து விடாது. நிர்வாக அளவில் மாற்றம் வந்தால்தான் தமிழ் வளர இயலும்.

சுஜாதா: அனைத்தையும் தனிதமிழில் வழங்கவேண்டும் என்பது இயலாத காரியம். சிலவற்றில் வார்த்தைகளுக்குச் சுதந்திரம் கொடுக்கலாம். இம்மாதிரியான வாசகங்களை வாசகர்கள் விரும்ப மாட்டார்கள் என்று நாமாக எதையும் முடிவு செய்யக் கூடாது.
தமிழ் எழுத்து வடிவம் தமிழில் தொழில்நுட்பச் சொற்கள் தமிழ்  விசைப்பலகை தமிழ்க் கணிப்பொறிக்கான குறியீடு போன்றவற்றை நிர்ணயிக்க தமிழக அரசின் உயர் கல்வி மன்றம் குழு ஒன்றை அமைந்தள்ளது. இக்குழுவின் பரிந்துரைகளைத் தமிழ் உலகம் ஏற்கும் போது இப்பணி ஒழுங்கு  பெற்று புதிய குறியீடுகளுக்கு வீணே செலவிடும் நேரம் குறையும்.
தகவல் தளம் அமைத்து அதில் தமிழ் இலக்கியங்கள் அனைத்தையும் உள்ளிடும் பணி தொடங்கியுள்ளது. இது தொடர வேண்டும். இப்பணியை அரசோ அல்லது ஏதாவது ஒரு பல்கலைக்கழகமோ அரசு நிறுவமோ ஏற்றுக் கொண்டு ஒருமைப்படுத்த வேண்டும் . இதனால் தமிழின் பண்டை இலக்கியங்கள் அனைத்தும் நிரந்தரமாக இதனால் பாதுகாக்கப்படும்.
முத்துக்குமரன்: ஆங்கிலப்பள்ளிகளில் படிக்க வைப்பதை இன்றைய பெற்றோர்  கௌவரமாகக் கருதுகின்றனர்.
தமிழை நம்முடைய மக்கள் புறக்கணிக்கக் காரணம்: ஆங்கிலம் படித்தால்தான் வேலை வாய்ப்பு கல்வி கிடைக்கும் என்ற தவறான கருத்து: ஆங்கிலம் படித்தவன் கெட்டிக்காரன் என்ற எண்ணம் : தமிழில் எளிதாக எழுதினால் அதை மதிப்பதில்லை. இத்தகைய கருத்துக்கள் மாற வேண்டும்;

ஞாநி: முன்பு பத்திரிக்கை படிக்கும் வழக்கம் குறைவு. பத்திரிகைகளும் குறையும.; மக்களுக்குப் புரியும் வகையில் வார்த்தைகளை நாம் தரவேண்டும். சுhதாரண மக்கள் மத்தியில் நீண்ட காலமாகப் புழக்கத்தில் இருக்கும் வார்த்தைகளை மாற்றினால் புரியாது. மக்கள் பயன்படுத்தும் தமிழ் கலப்பு மிக்கது. ரேஷன் கார்டு என்றால் அவர்களுக்குத் தெரிகிறது. குடும்பள அட்டை என்றால் புரிவதில்லை அதே சமயம் புதிய  வார்த்தைகளைக் கொடுத்துவிட்டு அவற்றின் பழைய வார்த்தையை அடைப்புக் குறிக்குள் கொடுக்கலாம்.
பொதுவாகத் தமிழைச் சிதைப்பதில் நாளேடுகளை விட வார இதழ்களே அதிகப் பங்காற்றுகின்றனர்.

தேனிரா.பாண்டியன்: நீதி மன்ற நடவடிக்கைகள் அனைத்தும் தமிழில் இருக்கவேண்டும். தமிழகத்தை பொறுத்தவரை இன்னும் ஆங்கிலமே நீதிமன்ற மெதழியாக உள்ளது.தாவா பைசல் வியாஜ்ஜியம் ஜப்தி சம்மன் சிரஸ்தார் போன்ற வார்த்தைகள் இன்னும் நீதிமன்றங்களில் புழக்கத்தில் உள்ளன.
அனைத்துச் சட்டங்களும் இன்றைய காலத்துக்கு ஏற்ப மாற்றப்பட வேண்டும். அவற்றைத் தமிழில் மொழிபெயர்த்து தமிழ் மக்கள் அறியச் செய்யவேண்டியது அரசின் கடமை.
முத்துநிலவன்: நடைமுறை தமிழ் பேசுகிறவர்களே தமிழை வளர்க்க முடியும். தமிழ் உணர்வு வெறியாமாறுவது தமிழ் வளர்ச்சியை  பாதிக்கும். தமிழிசை  இன்று மறக்கப்பட்டு வருகிறது. மக்கள் தொடர்புச் சாதனங்களில் ஆங்கிலமே கோலோச்சுகிறது. தமிழ் மொழியில் உள்ள சில சிறப்புகள் ஆங்கிலத்திலும் உண்டு. அதை குறைத்து மதிப்பிடமுடியாது. ஆனால் தமிழுக்கு உரிய மரியாதை கொடுக்கப்பட வேண்டும். தனித்தமிழில் பேசுவோரை கிண்டல் செய்வது தவறானது. அதேசமயம் வார்த்தைகளை வலிந்து திணிப்பதும் தவறானது. அறிவியல் தமிழ்ச் சொற்களை கண்டுபிடிப்பது ஊக்குவிக்கப்படவேண்டும்.
நிகழ்ச்சியில் ஓசூர் பகுதியில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத் தலைவர் ஆதவன் போப் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
சில முக்கிய நகரங்களில் தமிழில் தந்தி அனுப்பும் முறை உள்ளது. இது கிராமங்களில் விரிவுபடுத்தப்படவில்லை இதற்கு மாநில மற்றும் மத்திய அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் அரசியலமைப்ப சட்டத்தின் எட்டாவது  அட்டவணையில் உள்ள அனைத்து மொழிகளையும் மத்தியிலும் ஆட்சி மொழியாக்கச் சட்ட திருத்தம வேண்டும் என்பதை உள்ளிட்ட தீர்மானங்கள் கருத்தரஙகில் கொண்டு வரப்பட்டன.

முனைவர் மு.இளங்கோவன் அவர்களின் கலைஞர் தொலைக்காட்சி நேர்காணல்


அன்பினிய நமது வலை நண்பர்களே! வணக்கம்.
நான் தெரிவித்திருந்தபடி நமது நண்பர் புதுச்சேரி முனைவர் மு.இளங்கோவன் அவர்களின் கலைஞர் தொலைக்காட்சி நேர்காணலைப் பார்க்க முடியவில்லை என நண்பர்கள் பலரும் சொன்னது எனக்கும் கொஞ்சம் ஆறுதலாக இருந்தது! - நானும் அதே மின்வெட்டுக் காரணமாகப் பார்க்க முடியவில்லையே!
இப்போது நமது அய்யா அவர்கள் ஒரு நல்ல செய்தி அனுப்பியிருக்கிறார்கள்... பாருங்கள் பார்த்துவிட்டு அவருடன் பேச .. அலை பேசி எண் 9442029053
அன்புடன்,
நா.மு.
20-03-2012 காலை 7.50 (இன்னும் கொஞ்ச நேரத்தில் நம் பகுதியில் மின் வெட்டு தொடங்கிவிடும்!)
பி.கு -1 கீழே அவரது வலை - காணொளி இணைப்பும் தரப்பட்டுள்ளது கண்டு-கேட்டு-கணித்தமிழை உண்டு- உயிர்க்க வேண்டுகிறேன்... பிறகென்ன பொறாமை தான்... ம்... நான் சில ஆண்டுகளின் முன் இதே கலைஞர் தொலைக்காட்சியின் சந்தித்த வேளையில் பேசினேன்... அப்பல்லாம் இந்த மாதிரி “யு-ட்யுப்“ இணைப்புங்கிற சமாச்சாரமே நமக்குத் தெரியாதுங்க... சரி அய்யாவின் நேர்காணலையாவது பாருங்க..
பி.கு.-2 அய்யாவின் கடிதத்தைப் படியுங்க, அப்பறம் போய்ப் பாருங்க, பேசுங்க... நன்றிங்க..
-----------------------------------------------------------------------

அன்புடையீர் வணக்கம்.

கலைஞர் தொலைக்காட்சியில் 15.03.2012 காலை 8 மணி முதல் 9 மணிவரை சந்தித்தவேளையில் என்னும் பகுதியில் திரு.இரமேஷ் பிரபா அவர்கள் என்னை நேர்காணல் செய்தார்கள். அதன் காணொளியை விடுதலை வலைக்காட்சித் தளத்தில் திரு.பிரின்சு அவர்கள் வெளியிட்டுள்ளார்கள். அதனை நண்பர்களின் பார்வைக்கு இணைத்துள்ளேன்.
கண்டு மகிழுங்கள்.
கருத்துரைக்க வேண்டுகின்றேன்.


அன்புள்ள
மு.இளங்கோவன்
புதுச்சேரி,இந்தியா

எனது “புதிய மரபுகள்“ கவிதைத் தொகுப்பிலிருந்து...


போர்க்குணத்துக்கு ஏது தடை?

(உருதுக்கவிஞர் ஃபெய்ஸ்-ஏ-ஃபெய்ஸ் எழுதிய கருத்துச் சுதந்திரம் பற்றிய இக்கவிதையை மத்தியப் பிரதேச முற்போக்கு எழுத்தாளர் சங்கம் அஞ்சல் அட்டையில் அச்சிட்டு வெளியிட்டு உள்ளது – 1989.)
  (இந்தியிலிருந்து ஆங்கிலத்தில்-தேபேஷ் தாகூர் (மே. வங்கம்)

சுருக்கென எழுதும் என் இரும்புப் பேனாவை அவன்
சுக்கல் சுக்கலாய் முறிக்கலாம்!- நான்
நெருப்பெனப் பற்றுவேன் ! நிச்சயம் பரவுவேன்!
நினைப்பதைத் தடுக்க முடியாது!

எழுத்தைத் தடுக்கலாம்! எண்ணத் தடைபோட
எந்தத் தடைச்சட்டம் இங்கு வரும்?- என்
கழுத்தை ஒடிக்கலாம்! கையை முறிக்கலாம்
கவிதையைத் தடுக்க முடியாது!

வாயை அடைக்கலாம்! வன்சிறை பூட்டி என்
வாழ்க்கையைக்கூட அழிக்கலாம்! - மூச்சில்
ஓயாது பீறிடும் ஓங்காரப் போர்க்குண
உணர்ச்சியைத் தடுக்க முடியாது!
-----------------------------------------------------------------------
இந்தக் கவிதையை மொழிபெயர்க்கும் போது - ஒவ்வொரு சாவிலும் தன் தனி இழப்பை மனத்தில் கொண்டு எந்தச் சாவிற்கும் ஓயாமல் ஒப்பாரி தொடரும் கிழவிகளைப் போல் - நமது பாரதியின் பாடல்களுக்கு 1928இல் அன்றைய சென்னை ராஜதானி அரசு தடை விதித்த செய்தியை நினைத்துக் கொண்டு - எழுதியது இந்தக் கவிதை. என்ன நாஞ்சொல்றது சரிதானே? --நா.மு.-15-03-2012)

கலைஞர் தொலைக்காட்சியில் முனைவர் மு.இளங்கோவன் அய்யாவின் நேர்காணல்

அன்பின் வலை நண்பர்களே! வணக்கம்.
ஒரு மகிழ்ச்சியான செய்தி.
நாளை -15-03-2012 வியாழக் கிழமை- காலை 8மணியிலிருந்து 8.50வரை நமது கலைஞர் தொலைக்காட்சியில் நமது நண்பர் 
முனைவர் மு.இளங்கோவன் அவர்களின் நேர்காணல் வருகிறது.

மின்சார பாத்தியதை உள்ள பெருமக்கள் அனைவரும் கண்டு கேட்டு மகிழ வேண்டுகிறேன்.

அய்யா மு.இ.அவர்கள் -
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் ஒரு லட்ச ரூபாய் விருது பெற்ற செம்மாந்த தமிழறிஞர் என்பதால் மட்டுமல்ல-

சொந்த உழைப்பில் பாரதிதாசன்-பெரியார்-கருத்துகளைப் பரப்பும் கொள்கையாளர் என்பதால் மட்டுமல்ல -

இன்றைய தமிழின் நுனிமுனைக் கொழுந்தாம் “இணையத்தமிழ்“ வளர்ச்சிக்கு ஏற்பன செய்துவரும் ஏந்தலார் என்பதால் மட்டுமல்ல -

தொடர்ந்து எழுதியும் இயங்கியும் வரும் ஒருசில தமிழாசிரியர்களில் முன்னோடி என்பதால் மட்டுமல்ல -


நல்ல மனிதர் என்பதால் அவசியம் பாருங்கள்.

எனக்கு வலையார்வம் வரத் தூண்டிய “ஞான குரு” என்பதால் இந்த குருதட்சணை!

அவரது வலை வாசல் http://muelangovan.blogspot.in/

அவரது அலைபேசி 9442029053

கலைஞர் தொலைக்காட்சி பார்த்துவிட்டு அவரிடம் பேசுங்களேன்?
அன்புடன்,
நா.மு.

எனது “புதிய மரபுகள்“ கவிதைத் தொகுப்பிலிருந்து...


பேடிக் கல்வி…
காலத்தால் அழியாத    
கவியாக்கும் அவசரத்தில்    காளியம்மா வந்து
சூலத்தால் எழுதியதில்
நாக்கு துண்டாகி...
பேச்சும் போச்சு!

சுதந்திர ஆட்சி!

சட்டைத்துணி கேட்டு
சண்டையிட்டோம்!
மூன்று வண்ணத்தில்
ஒட்டுத்துணி கிடைத்தது!
------------------------------------------------

எங்கோ எவனோ?

இலங்கையிலே செத்ததுவும் மனிதன்,  அஸ்ஸாம்
              எரிந்ததிலே செத்ததுவும் மனிதன்,  பஞ்சாப்
கலங்கையிலே செத்ததுவும் மனிதன்,  டெல்லிக்
              கலவரத்தில் செத்ததுவும் மனிதன், காஷ்மீர்
குலுங்கையிலே செத்ததுவும் மனிதன், பாபர்
              கோவிலிலே செத்ததுவும் மனிதன், அறிவு
மழுங்கையிலே செத்ததெல்லாம் சிவந்த ரத்த
              மனிதர்கள்! மனிதர்கள்! மனிதர் கள்தான்!

(எனது “புதிய மரபுகள்“ கவிதைத் தொகுப்பிலிருந்து -1993)

கல்வியில் ஜனநாயகம் தேவை! – நா.முத்து நிலவன்



                  தேர்வு எழுதிய மாணவர்க்கு திருத்தப்பட்ட விடைத்தாளின் நகல் தரப்படும் என முடிவெடுத்த மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலை ஆசிரியர்களும் ஆட்சிக்குழு உறுப்பினர்களும் துணைவேந்தரும் பாராட்டுக்கு உரியவர்கள் கல்வியில்-நாட்டு முன்னேற்றத்தில்-ஜனநாயகத்தில் அக்கறையுள்ள யாரும் பாராட்ட வேண்டிய முடிவு இது.
உயிரைக் கொடுத்துப் படிக்கும் மாணவர்க்கு தமது விடைத்தாள்கள் எவ்வாறு திருத்தப்பட்டுள்ளன என அறிந்து கொள்ள முழு உரிமையும் உண்டு.
மதிப்பெண்ணிலேயே தமது குழந்தைகளின் எதிர்காலம் உள்ளதாக நம்பும் பெற்றோர்க்கு இதன்மூலம் மன உளைச்சல் குறையும் மிகச்சிறந்த அத்திட்டத்தைச் செயல்படுத்துவதில் மிகுந்த நிதானம் அவசியம். திருத்தும் ஆசிரியர்க்கும் அரசுக்கும் பொறுப்பு கூடுதலாகும். இந்த  இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் குற்றஞ்சுமத்தாத அளவில் ‘பழிவாங்கப்படுவார்கள்’ எனும் நியாயமான சந்தேகத்தைத் தனது செயல்பாடுகளின் மூலம் அரசு போக்க முன்வர வேண்டும்.
மூன்று மணி நேரத்தில் எழுப்படும் தேர்வுத்தாளை திருத்த குறைந்தது பதினைந்து நிமிஷமாவது தேவைப்படும். திருத்தும் ஆசிரியர் அதே பாடத்தைப் பல ஆண்டுகள் நடத்திய அனுபவசாலியாக இருப்பின் 3 மணி நேரத்தில் 12 தாள் திருத்தினால் மதிப்பீடு முறையாக இருக்கும். ஆனால் கசப்பான உண்மை என்னவெனில் திருத்துவோர் அவ்வளவு நேரம் எடுத்துப் பெரும்பாலும் திருத்துவதில்லை ‘ஆள் போதவில்லை’ என்று 50 தாள்களை ஒரே நாளில் தருவதை அரசும் நிறுத்துவதில்லை!  இதனால் இருவகைப் பாதிப்புகள் உண்டு. அரசு இதில் சிக்கனம் பார்ப்பதோ ஆசிரியர்கள் மெத்தனம் காட்டுவதோ சரியல்ல என்பதை உணர வேண்டும்.
மாணவர்கள் மற்றும் எதிர்காலத் தமிழகத்தின் நலன் கருதி திட்டமிட்டு மதிப்பீடு நடத்தப்படுமானால் தமிழகம்  இந்தியாவுக்கே வழிகாட்டியாக முடியும். மகத்தான வழியில் கல்வித்துறை உயர் அதிகாரிகளும் கல்வி அமைச்சரும். தமிழக முதல்வரும் மனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும். இதனால் மாணவர்-பெற்றோர் கவலை தீரவும் ஆசிரியர் பெருமை உயரவும் தமிழகமே தலைநிமிரவும் வழி பிறக்கும்.

வெளயிட்டமைக்கு நன்றி : ‘தினமணி’ நாளிதழ் நாள்: 07.06.1997
---------------------------------------------------------------
மதிப்பீட்டு முறை பற்றியே மறுமதிப்பிடு தேவை! – நா.முத்து நிலவன்
கல்விமுறை கெடுத்தது பாதி தேர்வுமுறை கெடுத்தது மீதி! மெக்காலே கல்வி முறையால் சிந்தனையை மழுங்கடித்து ‘கிளிப்பிள்ளை கிளார்க்கு’களையே இதுவரை உருவாக்கி வந்தோம். அதிலும் ‘தப்பித்து’ வந்த சிலரை மதிப்பீட்டு முறையால் மடக்கியிருக்கிறோம்! இரண்டு தலைமுறைகளின் இழப்புக்கு எப்படி ஈடுசெய்யப்போகிறோம்?
துணைவேந்தர் ப.க.பொன்னுசாமி கட்டுரைகளைப் படித்தபிறகு ‘மைய மதிப்பீட்டு முறையா? இல்ல மதிப்பீட்டு முறையா? என்பது பற்றி இனிமேலும் விவாதிக்க வேண்டியதில்லை என்றே தோன்றுகிறது. மதிப்பீட்டு முறையின் சமூக விளைவுகளைச் சரியாக மதிப்பிட்டு தேவையான மாற்றங்களைச் செய்வதே உடனடித் தேவையாகும்.
அதோடு இந்த மதிப்பீட்டுக் குறைபாடுகள் கல்லூரிக் கல்விக்கு மட்டுமல்ல நூறு சதவிதம் பள்ளிக்கல்வி புண் புரையோடி விட்டது இனியும் புனுகு ப+சுவதில் அர்த்தமில்லை. (10,12-ஆம் வகுப்புக்கும் பொருந்தக் கூடியதே! கடந்த  கல்வி ஆண்டில் 12ஆம் வகுப்பு மாணவர்கள் பல ஆயிரம் பேர் மறுகூட்டல் கேட்டார்களே! இங்கு மறுமதிப்பீட்டுக்கும் வழியில் லையாமே! இதை என்ன செய்வது?) மறுமதிப்பீடு மறுகூட்டல் கேட்டு அலையும் மாணவர்களின் எண்ணிக்கை நூறு சதவீதத்தை எட்டுவதற்குள் மதிப்பீட்டு முறையை மாற்றி அமைக்க வேண்டும். அதுவும் கூட முதற்கட்டம்தான். இறுதிக்கட்டம் செல்லரித்துப்போன நமது கல்வி முறையையே மாற்றியமைப்பதில் முடிய வேண்டும்.
கல்வி முறையில் கை வைக்காமல் சமூக மாற்றம் சாத்தியமேயில்லை. இந்த வகையில் ப+னைக்கு மணி கட்டும் வேலையைச் செய்திருக்கும் துணைவேந்தரை மனமாரப் பாராட்டுகிறேன்.
கல்வியாளர்களே கைகோத்து வாருங்கள. மூன்றாவது கண்ணைத் திறக்கும் அவசரத்தில் இருக்கும் கண்களையே குருடாக்கும் கல்வி முறை தேர்வு மதிப்பீட்டு முறைகளை மறுமதிப்பீடு செய்வோம்! புதிய தோர் உலகம் செய்வோம்!

வெளியிட்டமைக்கு நன்றி: ‘தினமணி’ நாளிதழ் 22.07.1997
--------------------------------------------------------------------------