தினமணி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தினமணி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

‘மத்தியிலும் தமிழை ஆட்சி மொழியாக்க வேண்டும’


‘மத்தியிலும் தமிழை ஆட்சி மொழியாக்க வேண்டும’

தினமணி - 30.01.1997

தமிழ் வளர்ச்சி கருத்தரங்கில் (இடமிருந்து) போப் ஆதவன் சுஜாதா முத்துக்குமரன் ஞானி முத்துநிலவன் செந்தி;ல்நாதன் தேனிரா பாண்டியன்.

ஓசூர்ஜன.28- தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழிகளையும் இந்தியாவின் ஆட்சிமொழிகளாக அறிவிக்க வேண்டும் என்று ஒசூரில் நடைபெற்ற தமிழ் வளர்ச்சிக் கருத்தரங்கில் கோரிக்கை எழுப்பப்பட்டது.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் ஒசூர்கிளை சார்பில் ஞாயிற்றுக்கிழமை தமிழ் வளர்ச்சிக் கருத்தரங்கு நடைபெற்றது. இதில் பாரதிதாசன் பல்கலை. முன்னால் துணைவேந்தர் முத்துக்குமரன் எழுத்தாளர் சுஜாதா பத்திரிகையாளர் ஞாநி தமிழ் நாடு- புதுவை மாநில வழக்கறிஞர்  சங்கங்களின் கூட்டமைப்புத் துணைத் தலைவர் தேனிரா. பாண்டியன் கவிஞர்  முத்துநிலவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளார் சங்கத் தலைவர் செந்தில்நாதன் தலைமை தாங்கிப் பேசினார.; பழ.பாலசுந்தரம் வரவேற்றார்.

செந்தில்நாதன் பேசியதாவது இந்தியாலுள்ள அனைத்தும் மொழிகளுக்கும் சம உரிமை கொடுக்கப்பட வேண்டும். இந்திக்கு மட்டும் தனி அந்தஸ்து தருவது சரியல்ல.
ஊர்களின் பெயரையும் நிறுவனங்களின் பெயர்ப் பலகைகளையும் மாற்றுவதால் மட்டும் தமிழ் வளர்ந்து விடாது. நிர்வாக அளவில் மாற்றம் வந்தால்தான் தமிழ் வளர இயலும்.

சுஜாதா: அனைத்தையும் தனிதமிழில் வழங்கவேண்டும் என்பது இயலாத காரியம். சிலவற்றில் வார்த்தைகளுக்குச் சுதந்திரம் கொடுக்கலாம். இம்மாதிரியான வாசகங்களை வாசகர்கள் விரும்ப மாட்டார்கள் என்று நாமாக எதையும் முடிவு செய்யக் கூடாது.
தமிழ் எழுத்து வடிவம் தமிழில் தொழில்நுட்பச் சொற்கள் தமிழ்  விசைப்பலகை தமிழ்க் கணிப்பொறிக்கான குறியீடு போன்றவற்றை நிர்ணயிக்க தமிழக அரசின் உயர் கல்வி மன்றம் குழு ஒன்றை அமைந்தள்ளது. இக்குழுவின் பரிந்துரைகளைத் தமிழ் உலகம் ஏற்கும் போது இப்பணி ஒழுங்கு  பெற்று புதிய குறியீடுகளுக்கு வீணே செலவிடும் நேரம் குறையும்.
தகவல் தளம் அமைத்து அதில் தமிழ் இலக்கியங்கள் அனைத்தையும் உள்ளிடும் பணி தொடங்கியுள்ளது. இது தொடர வேண்டும். இப்பணியை அரசோ அல்லது ஏதாவது ஒரு பல்கலைக்கழகமோ அரசு நிறுவமோ ஏற்றுக் கொண்டு ஒருமைப்படுத்த வேண்டும் . இதனால் தமிழின் பண்டை இலக்கியங்கள் அனைத்தும் நிரந்தரமாக இதனால் பாதுகாக்கப்படும்.
முத்துக்குமரன்: ஆங்கிலப்பள்ளிகளில் படிக்க வைப்பதை இன்றைய பெற்றோர்  கௌவரமாகக் கருதுகின்றனர்.
தமிழை நம்முடைய மக்கள் புறக்கணிக்கக் காரணம்: ஆங்கிலம் படித்தால்தான் வேலை வாய்ப்பு கல்வி கிடைக்கும் என்ற தவறான கருத்து: ஆங்கிலம் படித்தவன் கெட்டிக்காரன் என்ற எண்ணம் : தமிழில் எளிதாக எழுதினால் அதை மதிப்பதில்லை. இத்தகைய கருத்துக்கள் மாற வேண்டும்;

ஞாநி: முன்பு பத்திரிக்கை படிக்கும் வழக்கம் குறைவு. பத்திரிகைகளும் குறையும.; மக்களுக்குப் புரியும் வகையில் வார்த்தைகளை நாம் தரவேண்டும். சுhதாரண மக்கள் மத்தியில் நீண்ட காலமாகப் புழக்கத்தில் இருக்கும் வார்த்தைகளை மாற்றினால் புரியாது. மக்கள் பயன்படுத்தும் தமிழ் கலப்பு மிக்கது. ரேஷன் கார்டு என்றால் அவர்களுக்குத் தெரிகிறது. குடும்பள அட்டை என்றால் புரிவதில்லை அதே சமயம் புதிய  வார்த்தைகளைக் கொடுத்துவிட்டு அவற்றின் பழைய வார்த்தையை அடைப்புக் குறிக்குள் கொடுக்கலாம்.
பொதுவாகத் தமிழைச் சிதைப்பதில் நாளேடுகளை விட வார இதழ்களே அதிகப் பங்காற்றுகின்றனர்.

தேனிரா.பாண்டியன்: நீதி மன்ற நடவடிக்கைகள் அனைத்தும் தமிழில் இருக்கவேண்டும். தமிழகத்தை பொறுத்தவரை இன்னும் ஆங்கிலமே நீதிமன்ற மெதழியாக உள்ளது.தாவா பைசல் வியாஜ்ஜியம் ஜப்தி சம்மன் சிரஸ்தார் போன்ற வார்த்தைகள் இன்னும் நீதிமன்றங்களில் புழக்கத்தில் உள்ளன.
அனைத்துச் சட்டங்களும் இன்றைய காலத்துக்கு ஏற்ப மாற்றப்பட வேண்டும். அவற்றைத் தமிழில் மொழிபெயர்த்து தமிழ் மக்கள் அறியச் செய்யவேண்டியது அரசின் கடமை.
முத்துநிலவன்: நடைமுறை தமிழ் பேசுகிறவர்களே தமிழை வளர்க்க முடியும். தமிழ் உணர்வு வெறியாமாறுவது தமிழ் வளர்ச்சியை  பாதிக்கும். தமிழிசை  இன்று மறக்கப்பட்டு வருகிறது. மக்கள் தொடர்புச் சாதனங்களில் ஆங்கிலமே கோலோச்சுகிறது. தமிழ் மொழியில் உள்ள சில சிறப்புகள் ஆங்கிலத்திலும் உண்டு. அதை குறைத்து மதிப்பிடமுடியாது. ஆனால் தமிழுக்கு உரிய மரியாதை கொடுக்கப்பட வேண்டும். தனித்தமிழில் பேசுவோரை கிண்டல் செய்வது தவறானது. அதேசமயம் வார்த்தைகளை வலிந்து திணிப்பதும் தவறானது. அறிவியல் தமிழ்ச் சொற்களை கண்டுபிடிப்பது ஊக்குவிக்கப்படவேண்டும்.
நிகழ்ச்சியில் ஓசூர் பகுதியில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத் தலைவர் ஆதவன் போப் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
சில முக்கிய நகரங்களில் தமிழில் தந்தி அனுப்பும் முறை உள்ளது. இது கிராமங்களில் விரிவுபடுத்தப்படவில்லை இதற்கு மாநில மற்றும் மத்திய அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் அரசியலமைப்ப சட்டத்தின் எட்டாவது  அட்டவணையில் உள்ள அனைத்து மொழிகளையும் மத்தியிலும் ஆட்சி மொழியாக்கச் சட்ட திருத்தம வேண்டும் என்பதை உள்ளிட்ட தீர்மானங்கள் கருத்தரஙகில் கொண்டு வரப்பட்டன.

தினமணி - கட்டுரை


                   பட்டுக்கோட்டையின் பாட்டுக் கனவுகள்…
                                    -- நா.முத்துநிலவன்--


                       “ எளிய பதங்கள் எளியநடை அறிந்து கொள்ளக்கூடிய சந்தம் பொது ஜனங்கள் விரும்பும் மெட்டு இவற்றினுடைய காவியமென்று செய்து தருவோம் நமது தாய்மொழிக்குப் புதிய உயிர் தருவோனாகிறான். ஓரிரண்டு வருடத்து நூல் பழக்கமுள்ள தமிழ்மக்கள் எல்லோருக்கும் நன்கு பொருள் விளங்கும்படி எழுதுவதுடன் காவியத்துக்கு உள்ள நயங்கள் குறைவு படாமலும் நடத்துதல் வேண்டும்.” என்று மகாகவி பாரதி தனது ‘பாஞ்சாலி சபதம் ‘முன்னுரiயில் பிரகடனம் செய்வார்.

                           மகாகவியின் எளிமையும் புராட்சிக் கவியின் கூர்மையும் இணைந்துவரத் தமிழ்ப் பாடல் உலகில் தனிப்பாதை போட்டவர் ‘மக்கள் கவிஞர் ‘ பட்டக்கோட்டை கல்யாணசுந்தரம்.
பட்டுக்கோட்டையின்  அருகில் உள்ள செங்கப்படத்தான் காடு எனும் ஊரில் சிற்றூரில் பிறந்து 29 வயதுவரை வாழ்ந்து அதற்குள் படாக சிரமங்களையெல்லாம் பட்டு தற்காலக்கவிஞர்கள்  எவரும் தொடாத சிகரங்களையெல்லாம் தொட்டவர்.

                          கார்ல் மார்க்ஸ் எழுதிய மூலதனம் (டாஸ்கேபிடல்) எனும் நூலின் சாராம்சமே வர்க்கப் போர்தான். இதை எளிமைப்படுத்திய பலரும் ‘முழிபெயர்த்து’நின்றபோது ‘வர்க்கப் போர்’ என்பது வேறொன்றுமில்லை… என்பது வழிகாட்டுவதுபோல-
‘வசதி இருக்கிறவன் தரமாட்டான்-அவனை
வயிறு பசிக்கிறவன் விடமாட்டான்’
என்று எழுதியவர் பட்டுக்கோட்டை .

                          ‘உலகத் தொழிலாளர்களே! ஓன்றுபடுங்கள்! நீங்கள் இழப்பதற்க்கு எதுவும்மில்லை அடிமைச் சங்கிலிகளைத் தவிர!’ எனும் மார்க்ஸ் ஏங்கெல்ஸின் உலகப் புகழ்பெற்ற தொழிற்சங்க அறைகூவலைக்கூட
‘காடு வெளைஞ்சென்ன மச்சான்-நமக்கு
கையும் காலும் தானே மிச்சம்!’ என்று எளிமைப்படுத்தி எழுதிய கவிஞர் வேறு எவர் இருக்கிறார்கள்?

                                இன்றும் இந்தியாவில் உழைக்கும் மக்களிடையே பெரும்பான்மையாகக் கிடக்கும் கூலி விவசாயிக்கு’ இழப்பதற்கு எதுவுமில்லை-உழுபடைக் கருவிகள் கூட அவனுக்குச் சொந்தமில்லை.

பாரதி வழிவரும் சிந்தனைப் பரிணாமத்தை பட்டுக்கோட்டையின் பாடல்களில் நிறையப் பார்க்க முடியும்.

                             இரண்டு வேறுவேறு நிலைகளை-முரண்பாட்டை-ஒப்பிட்டு பாரதி காட்டிய சிந்தனை ஒன்றுண்டு:
‘இனிய பொழில்கள் நெடிய வயல்கள்
                  என்னரும் திரு நாடு
கனியும் கிழங்கும் தானியங்களும்
                   கணக்கின்றித் தரும் நாடு’ என்று பாடிவிட்டு இந்த நாட்டில்தான்
‘கஞ்சி குடிப்பதற்கிலார்-அதன்
காரணம் இதுவெனும் அறிவுமிலார்’ என்று வருந்துவார்.

                             இதையே தனது பாணியில் பாடிய பட்டுக்கோட்டையார்
 'தேனாறு பாயுது செங்கதிரும் சாயுது!
ஆனாலும் மக்கள் வயிறு காயிது!’ என்று பாமரத் திருக்குறள் போலப் பாடிவிட்டு அதற்கும் மேலே போய்க் காரணத்தையும் பாட்டிலேயே போட்டுடைக்கிறார்:
‘மாடா உழைச்சவன் வாழ்க்கையிலே-பசி
                   வந்திடக் காரணம் என்ன மச்சான்? -அவன்
தேடிய செல்வங்கள் சீமான் வீட்டிலே
                    சேர்ந்தனால் வரும் தொல்லையடி!’ அதிலும் “சீமான் வுpட” என்பது மிகச்சரியான குறி என்பதை உணர்ந்தே திரைப்படம் எடுத்தவர்கள் அந்த வார்த்தைகளை சந்தம் மாறாமல்(!) “வேறே இடம்” என்று திருத்திவிட்டார்கள்!

                           விடுதலை பெறுவதற்கு 30 வருடமுன்பே
'ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே!
ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று’ என்று பாரதி போல எதிர்கால மாற்றம் பற்றி உறுதியோடிருந்தார் பட்டுக்கோட்டையார். அந்த மாற்றமும் 'தானாக ஒன்றும் நடந்து விடாது' எனும் எதார்த்தத் தெளிவோடு நாம்தான் முன்கை எடுக்க வேண்டும் என முடுக்கிவிட்டு
‘தனி உடமைக் கொடுமைகள் தீர
             தொண்டு செய்யடா!
தானா எல்லாம் என்புத
            பழைய பொய்யடா!’ என்பது தமிழின் புதிய குரல்!

'பொதுநலம் பேசும் புண்ணியவாங்களின்
                போக்கினில் அனேக வித்தியாசம்
புதுப்புது வகையில் புலம்புவதெல்லாம்
               புவியை மயக்கும் வெளிவேசம் ‘என்று அவர் பாடியது இன்றைக்கும் பொருந்துகிறதே!

                 இறுதியாக முக்கியமான ஒன்று:
                 எளிமைப்படுத்துவது வேறு மலிகப்படுத்துவது வேறு!

                 ‘போட்டுக்கிட்டா-தாலி போட்டுக்கிட்டா
                  ரெண்டுபேரும் சேர்ந்து போட்டுக்கணும் - என்று ‘டப்பாங்குத்துப் பாடல் இசையில்கூட பெண் சமத்துவக் கருத்தைப் பேசியவர் பட்டுக்கோட்டை!

‘காளை மாட்டுக்குக் காம்பெதுக்கு
கன்னி கழிக்கப் படிப்பெதுக்கு’ எனும் உழுத்த எழுத்தே ஓங்கிவரும் இன்றைய சூழலில்  ‘படிப்பு தேவை-அதோடு உழைப்பும் தேவை‘ என்று சமூகப் பொறுப்பைச் சரியாக இலக்கியமாக்கிய பட்டுக்கோட்டையாரை மறக்க முடியுமா?

‘ஆசை வைக்கிற இடம் தெரியணும்  மறந்துவிடதே!
 அதுக்கு மேலே வார்த்தையில்லே வருத்தப்படாதே’ என்று எழுதியதும் பருவக் கிளர்ச்சிக்கும் ஒரு வரம்பு நெறிமுறை உண்டு என்பதையே இலக்கியமாக்கி
‘மாலை வெயில் மயக்கத்திலே
            மறந்திடலாமோ?-நான்
மனைவியென்றே ஆகுமுன்னே
           நெருங்கிடலாமோ?' என்றும் எழுதிய பாடல் வரிகள் கமூக ஒழுக்கத்துக்கும் சரியான வழிகாட்டியாக இருப்பதை மறந்துவிட முடியுமா?

            மக்கள் ஒற்றுமையின் மகத்துவத்தை வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் பாடத் தவறாத பட்டுக்கோட்டையார்,
'உச்சி மலையில் ஊறும் அருவிகள்
            ஒரே வழியில் கலக்குது!
ஓற்றுமையில்லா மனித குலம்
             உயர்வும் தாழ்வும் வளர்க்குது!’ என்று வருந்தும் பட்டுக்கோட்டையார்,
‘யாருமேல கீறினாலும் ரத்தம் ஒண்ணுதானே?
ஆக மொத்தம் பிறந்ததெல்லாம் பத்தாம் மாதம்தானே? - என்று கேட்பது இன்றும் பொருந்துகிறதே!

பட்டுக்கோட்டையாரின் மறைவைப்பற்றி
வாழும் தமிழ்நாடும் வளர்தமிழும் கலைஞர்களும்
வாழும் காலம்வரை வாழ்ந்துவரும் நின்பெயரே’என்று எழுதிய கவிஞர் கண்ணதாசனை விட வேறு என்ன சொல்வது?

ஆனாலும் ஒன்றுண்டு:
கவிஞரின் பெயரால் பட்டுக்கோட்டையில் ஒரு நினைவு மண்டபம் கட்டுவதற்காக எடுக்கப்பட்டுவரும் தமிழக அரசின் முயற்சிகள் ஆண்டுக்கணக்கில் தாமதமாவதைத் தவிர்த்து இன்றைய அரசு துரிதப்படுத்தி கலை இலக்கிய நிகழ்ச்சிகள் நடத்த உதவுவதே பட்டுக்கோட்டையாருக்குச் செலுத்தும் சிறந்த அஞ்சலியாகும்! அதுவே அவர் கனவுகளை நினைவாக்கும்!
----------------------------------------------------------------------------------------------------------
(ஏப்ரல்-13 மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் பிறந்தநாள்
கட்டுரையாளர் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க மாநிலத் துணைச் செயல்ர். -------- தினமணி 13.04.1998 )

தினமணியில் வெளிவந்தது


'பெண்கள் இன்னும் சமத்துவம் பெறவில்லை"

கவிஞர் முத்துநிலவன் பேச்சு

(நன்றி: தினமணி- நாளிதழ்) 

           பெண்கள் கல்வி மற்றும் உழைப்பில் முன்னேறினாலும் வாழ்க்கையில் சமத்துவம் பெறவில்லை என்றார் கவிஞர் நா.முத்துநிலவன்.

புதுக்கோட்டை காமராஜபுரத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற விழாவில் அவர் பேசியது:
          
 ‘தாய்க்குலமே’ என்று தொடங்கி தாய் ‘மண்ணே வணக்கம்’ என்பது வரை பெண்களை பெருமைப்படுத்தும் நாடு நம் நாடு.
ஆனால் நீண்ட நெடுங்காலமாகவே பெண்களை பெருமைப்படுத்தும் படியான வாழ்க் கையை இந்த சமூகம் தந்திருக்கிறதா? என்றால் இல்லை என்பதுதான் இன்றைய நிலை.
            மேலும் புராண அதிகாசங்களில் சீதையும்  பாஞ்சாலியும் தங்கள் கண்ணீரிலேயே வாழ்க்கையை கழித்துவிட்டனர். வரலாறு முழுவதும் பெண்களின் வாழ்வில் வற்றாத கண்ணீரே வழிந்து ஒடக் கண்டோம்.
            இன்றைய பெண்கள் படிப்பாலும் உழைப்பாலும் உயர்ந்த நிலைக்கு வந்த பிறகும் அவர்கள் வாழ்வில் சமத்துவம் வந்து விடடதாக கூற முடியவில்லை
வேலைக்குச் செல்லும் பெண்களின் உழைப்பை ஆணாதிக்க உலகம் கணக்கில் எடுத்துக்கொள்வதே இல்லை. ஆணுக்கு நிகராக வருமானம் பெனும் பெண்ணாக இருந்தாலும் அவள் வீட்டிலும் கூடுலகவே உழைக்க வேண்டி நினலயில் இருக்கிறாள்;;; .
           இது கண்ணுக்குத் தெரியாத நெருப்பு. இதை ஆணாதிக்க உலகம் கவனத்தில் கொண்டு ஏற்கவில்லை என்றால் இந்த சமத்துவ மில்லாத உலகத்தை ஒரு நாள் அந்த நெருப்பு எரித்துவிடும் என்பதை ஆணாதிக்க சமூகம் உணர வேண்டும் என்றார் கவிஞர் முத்துநிலவன்.
            நகர் மன்ற உறுப்பினர் சுப.சரவணன் தலைமை வகித்தார்.
            வசந்தம் மகளிர் சுய உதவிக் குழுத் தலைவர் ஏ.ரெஜினா முன்னிலை வகித்தார்.உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்பாளர் கண்ணம்மா ஆசிரியர் சங்க மாநிலத் துணைத் தலைவர் வாசுகி கவிஞர் ஜெயசீலன் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர். தொண்டு நிறுவன பிரதிநிதிகள் மாரியப்பன் களப் பணியாளர் மலர்வேந்தன் ஒவியர் புகழேந்தி சகாயராணி மற்றும் நூற்றுக்கணக்கான மகளிர் கலந்து கொண்டனர்.



தினமணியில் வெளிவந்த எனது கடிதம்


‘சாதி ரீதியான தேசிய இனம்’: புதிய ஆபத்து!
(தினமணி -- 06.12.2000)

‘யாதவர்கள் தேசிய இனம்’ எனும் ஒரு புதிய ஆபத்தான கருத்தைத் தமிழ்நாடு யாதவ மகாசபைத் தலைவர் மா.கோபாலகிருஷ்ணனின் கடிதத்தில்  (தினமணி-22-11-2000) பார்த்து அதிர்ச்சியடைந்தேன்.

அவரது கருத்தில் மூன்று வகையான தவறுகள் உள்ளன. முதல்தவறு: ‘சாதி ரீதியாக தேசிய இனம்’ என்பது தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவிலும் உலகின் எந்த நாட்டிலும் இல்லை.

தாய்மொழிவாரி தேசிய இனங்கள்தான் இருக்க முடியம்  தாய்மொழி வாழும்  இடம் பொருளியல்  தொடர்புகள் பண்பாட்டு நிகழ்வுகள் மன இயல்புகளில் பொதுப்பண்பைக் கொண்டிருக்கும் ஒரு மக்கள் சமூகத்தையே ஒரு தேசிய இனமாக வரையறுக்க முடியும்.

இதில் விதிவிலக்குகளும் உண்டு – விதிவிலக்குள்தான். விதியல்ல. அதுதான் வேற்றுமையில் ஒற்றுமை கண்டு முன்னேறும் ஜனநாயகப் பண்பு உதாரணத்துக்கு ஒரு மாநிலத்தில் ஒரு தேசிய இனத்தவர் மட்டுமே வாழவேண்டும் என்று கூற முடியாது. அப்படிக் கூறுவது தேசிய இனவெறி! அதேபோல் ஒரு தேசிய இனத்தவர் ஒரு மாநிலத்தில் மட்டுமே  வாழமுடியும்  என்றும் கூற இயலாது-அது அறியாமை.

ஒரே தேசிய இனத்தைக் கொண்ட ஒரே ‘தூயதேசம்’ என்பது உலகின் எந்த நாட்டிலும் இந்தியாவின் எந்த மாநிலத்திலும் கிடையாது.

தேசிய இன வரையறைகள் இப்படியிருக்க இந்தியா முழுவதும் பரவியரும் தேசிய இனமாக’ இவர் சொல்லும் சாதியினரை மட்டுமல்ல இந்தியாவின் எந்தச் சாதியினரையும் அடையாளப்படுத்த முடியாது.

இரண்டாவது தவறு: இரசியல் ரீதியாக வடநாட்டுத் தலைவர்களைத்  தமிழ்நாடு ஏற்றுக்கொண்டிருக்கிறது. எனவே ‘சாதி ரீதியாக வடக்கிலும் தெற்கிலும் ஒன்றானவர்கள் (?) ஏன் ஒரு தேசிய இனமாகக் கூடாது?’ என்பது. ஆரசியல் ரீதியாக வடஇந்தியத் தலைவர்கள் பலரைத் தென்னிந்தியர் ஏற்பதும் தென்னிந்தியர் சிலரை வட இந்திய மக்கள் ஏற்பதும் புதியதல்ல கண்டு பிடிப்புகளைப் பயன்படுத்துவதும் கருத்துகளைக் கடைப்பிடிப்பதும் உலகமயமானது. வாழ்ந்தபோது நாடு கடத்தப்பட்ட தலைவர்களை இறந்தபிறகு நாடு நாடாக ஏற்று முன்னேறுவது தான் எல்லாம். இத்தாலிக்கோ ஜெர்மனிக்கோ இந்தியாவின் ‘தேசிய இன உறவு’ ஏற்பட்டுவிடாது.

மூன்றாவது தவறு: தொல்காப்பியர் காட்டும் ‘மாயோன்’ பற்றியது. தொல்காப்பியர் முல்லைநிலத்து ஆயர்களைப் பற்றி மட்டுமா முன்மொழிந்தார்? குறிஞ்சி நிலத்துக் குறவர்களையும் மருத நிலத்து உழவர்களையும் நெய்தல் நிலத்துப் பரதவர்களையும் பற்றியும்தான் பாடியிருக்கிறார்.

மேலும் சாதிப்பெயர்கள் அனைத்தின் மூலக்கூறுகளும் அன்றைய வேலைக் கூறுகளே அதை விடாமல் பிடித்துக்கொண்டு இன்றும் பெருமையோ சிறுமையோ பேசுவது உள்நோக்கமுடையதன்றி வேறில்லை என்பதுதான் வெளிப்படை.

‘நாம் எப்பேர்ப்பட்ட பெருமையுடையவர்! எத்தகைய பரம்பரை! என்று சாதிப்பெருமை பேசுவதும் ‘அத்தகைய எங்களை மிகவும் பிற்பட்டவர் பட்டியலில் சேர்க்க மறுக்கிறார்களே? ‘என்பதும் எவ்வளவு முரண்பாடு!

இட ஒதுக்கீடு என்பது நின்று இளைப்பாற உதவும் நிழலாகத்தான் இருக்க முடியுமே தவிர அங்கேயே குடியிருக்க நினைப்பது ஆபத்தில்தான் முடியும்.
------------------------------------------------------------------------------------------------------------ 

தினமணிக் கதிர் இதழில் நேர்காணல்


கவிதையின் பொற்காலம் எது? 
தினமணிக் கதிர் இதழில் நா.முத்துநிலவன் நேர்காணல்

முகாம்களாவும் முகங்களாவும் திரண்டு முரண்பட்டு இயங்கிக் கொண்டிருக்கிறது இன்றைய தமிழ்க் கவிதை உலகம் முரண்படுவது என்பது மனிதகுல வாழ்க்கையின் ஒர் அங்கம்தான். எனினும் முரண்படுவதே வாழ்க்கையாகிவிட்டது நமது தமிழ்க் கவிஞர்களுக்கு. எல்லோரையும் ஏற்றுக் கொள்ள முடியாதவராகி விடுகிறார்கள். இலக்கியத்தால் முரண்படுவது என்கிற நமது முன்னோர்களின் மரபு தவறாமல் கடைப்பிடிக்கப்பட்டு வளர்ந்து வளர்ந்து இன்றைக்குக் குடுமிப்பிடிச் சண்டையாகப் பரிணாமம் பெற்றிருக்கிறது.’எது கவிதை என்று காலம் தீர்மானிக்கும் என்று சொல்லிக் கொண்டு ஆறுதல் அடைவதுதான் ஒரே வழி என்கிற முடிவுக்கு இன்றைய பல கவிஞர்கள் வலுக்கட்டாயமாத் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.
இந்தச் சூழ்நிலைலையில் நேற்றைய தமிழ்க் சங்க காலம் தொடங்கி இன்றைய சாதிச் சங்க காலம் வரையிலான தமிழ்க் கவிதையின் வரலாற்றை ஆய்வு செய்து தொகுத்து வழங்கும் பணியில் இறங்கியிருக்கிறார் புதுக்கோட்டையைச் சேர்ந்த கவிஞர் நா.முத்துநிலவன். தான் மேற்கொண்டிருக்கும் ‘கவிதையின் கதை’ என்கிற ஆய்வுத் திட்டப் பணிகளைப் பற்றி நீண்ட நேரம் நம்மிடம் மிகத் தெளிவாக விளக்கினார் அவர்.
இப்படியொரு முயற்சியில் நீங்கள் இறங்கக் காரணம் என்ன?
தமிழ்க் கவிதையின் வரலாறு நெடுகிலும் ஒன்றையொன்று ஏற்றுக்கொள்ளாத போக்கு பரவலாகக் காணப்படுகிறது. தனக்குப் பிடிக்காத ஒரு வடிவத்தில் பொதிந்து மிளிரும் கவிதையைப் பார்க்கவோ பாராட்டவோ தவறிவிடுகிறார்கள். மரபுக்கவிதை புதுக்கவிதை ஹைகூ ஆகிய மூன்றிலும் கவிதை இருக்கிறது. அல்லது இல்லாமலும் இருக்கிறது. பண்டிதர்கள் புதுக்கவிதையை ஒதுக்குவது அநியாயம். அது கவிதையே அல்ல என்பது அதைவிட அநியாயம். தமிழ்ச் செய்யுள் தொடங்கிய காலம் முதல் இன்று வரை தமிழ்க் கவிதையின் பரிணாம வளர்ச்சிப் போக்குகளை ஒருசேரத் திரட்டித் தர வேண்டியது இன்றைய முக்கியத் தேவையாக இருக்கிறது. மூன்றையும் சேர்த்து எழுதினால்தான் நியாயம் கிடைக்கும் என்பதால் இப்படியொரு முயற்சியை மேற்கொண்டிருக்கிறேன்.
இதற்கு முன் இப்படித் தமிழ்க் கவிதைகள் பற்றியும் அதன் வரலாறு பற்றியும் எழுதப்படவில்லையா?
உ.வே.சா.. தொ.பொ.மீ.. மு.வ.. தமிழண்ணல் சி.பாலசுப்பிரமணியம் போலும்  தமிழறிஞர் பலரும் தமிழ் இலக்கிய வரலாற்றை ஆய்வு செய்து எழுதியுள்ளனர். இந்த ஆய்வுகளில் அவ்வளவாகப் புதுக்கவிதை இடம்பெறவில்லை. ஹைகூ இல்லவே இல்லை.
வல்லிக்கண்ணன் பாலா தமிழவன் போன்றவர்கள் புதுக்கவிதைப் போக்குகள் பற்றி ஆய்வு செய்து எழுதியிருக்கின்றனர். அப்துல்ரகுமான். நிர்மலா சுரேஷ் அறிவுமதி சுஜாதா ஆகியோர் ஹைகூ கவிதைகளைப் பற்றிநிறைய எழுதியிருக்கின்றனர். இப்படியாகக் கவிதையின் தனித்தனி வடிவங்கள் தனித் தனியாகத் தாலாட்டப் பட்டிருக்கின்றன.
மூன்றையும்சேர்த்துத் தாலாட்டுவதுதான் முழுமையாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்.
எத்தகைய கவிதைகளுக்கும் கவிஞர்களுக்கும் உங்கள் ஆய்வில் இடமளித்திருக்கிறீர்கள்?
எந்த வடித்தில் எவர் எழுதியிருந்தாலும் அந்த வடிவத்தில் கவிதையும் புதியதொரு சிந்தனையும் இருந்தால் தயங்காமல் எனது ஆய்வில் அவற்றை இணைத்துக் கொள்கிறேன். பத்தரைக்கம்பன். நாலரைக்கம்பன் என்றெல்லாம் தங்களைப் பிரகடனப்படுத்திக்கொண்டு கவிதையென்பது வரிக்கணக்கு என்று புரிந்து கொண்டு எழுதித் தள்ளுகிறவர்களை என் ஆய்வில் வருத்தமுடன் தவிர்க்கிறேன். அதே நேரத்தில் ‘கல்லானால் ரோட்டுக்கு. புல்லானால் மாட்டுக்கு’ என்று புதியதொரு புருஷ இலக்கணத்தை வகுத்திருக்கும் முகம் தெரியாத ஒரு கல்லூரி மாணவிணையும் ‘மாமனார் உழவர் சந்தையில் காய்கறி விற்கிறார். மருமகன் உலகச் சந்தையில் இந்தியாவை விற்கிறார். என்று எழுதிய அறியப்படாத ஓர் இளைஞனையும் ‘இஷ்டப்பட்ட இருவர் சேர்ந்த கஷ்டப்படுவதே காதல்’ என்று ஒரு நேர்காணலின்போது சொன்ன நடிகை அர்ச்சனாவையும் நான் விட்டுவிடவில்லை.
இது கவிதைகளின் தொகுப்பல்ல அறிஞர் ரா.பி.சேதுபிள்ளை 1960-ஆம் ஆண்டு ‘தமிழ்க்கவிதை களஞ்சியம்;;’ எனும் நூலைக் கால வரிசைப்படி தொகுத்திருக்கும் வேலையைச் செய்து விட்டார். அதுவும் நியாயமான பங்கீட்டில் தொகுக்கப்படவில்லை என்பது வேறு விஷயம்.
கவிதையின் பொற்காலம் எது?
கவிதை வரலாற்றில் மூவாயிரம் ஆண்டுகளைவிடக் கடந்த முப்பது ஆண்டுகளின் வீச்சு அதிகமாக இருக்கிறது. ‘திருக்குவளை இருந்தென்ன இரு குவளை இருக்கிதே’ என்கிற மா.காளிதாஸ் கவிதை கலைஞரையே கலங்கச் செய்யும் என்பதுதானே உண்மை.
புதுக்கவிதை வரலாற்றில் அதன் வீச்சை எப்படி உணர்கிறீர்கள்?
புதுக்கவிதை அறிமுகமான (1930) ‘மணிக்கொடி’ காலத்தில் கவிதைகள் தூவானம் போலச் சிதறியது. ‘எழுத்து’க்காலம் என்றழைக்கப்படுகிற 1950-களில் கவிதை மழை போலப் பொழிந்தது. ஆயினும அது மக்களிடம் போய்ச் சேரவில்லை 1970-களில் வந்த ‘வானம்பாடி’களின் கவிதைகள் மக்கள் இயக்கமாகிப் ‘புயல்’ போல வீசியடித்து ஓர் இலக்கிய மறுமலர்ச்சியைத் தோற்றுவித்தன. 1980-களில் இந்தக் கவிதைச் சுதந்திரம் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டு ஏராளமான கவிதைகள் ‘உற்பத்தி’ செய்யப்பட்டன. அதன் விளைவாக நீர்த்துப்போய்க் காணப்பட்ட கவிதை 1990-களில் மீண்டும் ‘புயலாக’ வடிவெடுத்து வீசிக் கொண்டிருக்கிறது. வானம்பாடிகளின் எழுச்சி வீண்போகாமல் தமிழ்க் கவிதைகளில் இப்போது அதிசயிக்கத்தக்க அருமையான மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. தமிழ்க் கவிதைகளின் பொற்காலம் 1990-களில் தொடங்கித் தொடர்கிறது என்பதுதான் என் ஆய்வுகள் சொல்லும் உண்மையாக இருக்கிறது.
புரியாத கவிதைகள் குறித்து என்ன நினைக்கிறீர்கள்?
எல்லாம் புரிந்த பின்னாலும் சிந்தனையைத் தொட்டுச் சிலிர்ப்பதுதான் கவிதை. ஆனால் ‘எதுவுமே புரியாமல் இருப்பதுதான் கவிதை’ ‘எந்த அளவுக்குப் புரியவில்லையோ அது அந்த அளவுக்கு நல்ல கவிதை’ என்பது போன்ற புரிதல் வியாக்கியானங்களும் இங்கே  தாப்படுகின்றன. இது ஏதோ புதுக்கவிஞ்ர்களின் புலம்பல் அல்ல. மாபுக்கு இந்த மரபு உண்டு. புரியாத கவிதைகள் குறித்து அதிகம் பேசப்படுவதால் அதில் மயங்கிப் பல கவிஞர்கள் இப்படி எழுதத் தொடங்கி விட்டார்களோ என்று எண்ணத் கோன்றுகிறது. மரபில் புரியாமல் எழுதும் வழக்கம் இருந்தது புதுக்கவிதையிலும் அதுநீடிக்கறது. இதில்ஏதாவது அர்த்தம்இருக்குமோஎன்று குழம்ப  வைக்கிறார்கள்.
நீங்கள் ஒரு முகாம் சார்ந்த படைப்பாளியாக இருக்கிறீர்கள. இந்த நிலையில் ‘பாரபட்சமற்ற முறையில்’ என்பது எவ்வளவு தூரம் சாத்தியம்?
நான் ஒரு முகாமைச் சார்ந்தவன் என்பது உண்மைதான். ஆனால் ‘கற்றுணை பூட்டியோர் கடலுள் பாய்ச்சினும் நற்றுணை யாவது நமச்சிலாயமே’ என்று திருநாவுக்கரசர் பாடும்போது தமிழ்க் கவிதைதான் திருநாவுக்கரசரை முந்திக்கொண்டு கடலுக்கு மேலே வந்து கம்பீரமாக நிற்பதாக நான் உணர்கிறேன். முகாம் நோக்கத்தோடு இந்தப் பணியைச் செய்தால் அது நிறைவானதாகவும் முறையானதாகவும் இருக்காது என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன். நான் ஒரு குறிப்பிட்ட முகாமைச் சேர்ந்தவன் என்று தெரிந்தேதான் அனைத்து முகாம்களில் இருந்தும் எனது முயற்சிக்கு மிக உறுதியான ஆதரவைத் தெரிவித்துக் கவிதை நூல்களை அனுப்பபிக் கொண்டிருக்கிறார்கள் பல கவிஞர்கள். வெளி முகாம்களில் இருந்து இதுவரை 250-க்கும் மேற்ப்பட்ட கவிதைத் தொகுதிகள் எனக்கு வந்திருக்கின்றன.
பல அறிஞர்கள் பல ஆண்டுகளாகச் செய்ய வேண்டிய பெரும்பணி இது. தனியொருவராக நீங்கள் சரியாகச் செய்து விட முடியும் என்று நம்புகிறீர்கள்?
எனது முன்னோடிகள் பலர் எழுதியதை முக்கியமான இடங்களில் தொட்டு. நான் தொடர்கிறேன் என்;பதுதான் எனது பலம் தமிழ்க் கவிதை ஆய்வில் தவிர்க்க முடியாத வல்லிக்கண்ணன். பாலா தி.க.சி.. அப்துல்ரகுமான் வைரமுத்து ஞானி வா.செ.கு.. செந்தில்நாதன் பொன்னீலன் போன்ற கவிஞர்கள் இலக்கிய ஆய்வாளர்களிடம் அவ்வப்போது ஆலோசனை கேட்டிருக்கிறேன் சேரன் சிவத்தம்பி ‘சிங்கைச்சுடர்’ஆசிரியர் இளங்கோ மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா போன்றவர்களைப் படைப்புகளில் சந்திக்க விருக்கிறேன்.
தமிழ்நாடு தாண்டியும் நல்ல தமிழ்க் கவிஞர்கள் இருக்கிறார்களே அவர்களையும் சேர்த்துதான் எழுதப்போகிறேன். வெளிநாடுகளிலிருந்தும் தமிழ்க்கவிதைத் தொகுப்புகளை அனுப்பியும். அனுப்புவதாகக் கூறியும் பல தொடர்புகள் கிடைத்திருப்பதால்தான் நூல வெளியீட்டைத் தள்ளி வைக்க நேர்ந்திருக்கிறது.
--------------------------------------------------------------------------------------------------------
‘கவிதையின் கதை’யை எழுதி வரும் நா.முத்துநிலவன் இந்த முயற்சிக்கு முன்னோடியாகச் சில ஆய்வு நூல்களை எழுதிய அனுபவம் பெற்றவர். க.நா.சு.ஜெயகாந்தன் இருவரைப் பற்றி இவர் எழுதிய’இருபதாம் நூற்றாண்டு இலக்கியச் சிற்பிகள்’ என்னும் ஆய்வு நூல் தமிழ் இலக்கிய உலகின் நல்ல ஆதரவைப் பெற்றது.; ‘கவிதையின் கதை’ நூல் உருவாக்கத்திற்கு அலுவலகப் பொறுப்பாளராக இருந்து செயல்படுகிறவர் இவரது துணைவியர் மல்லிகா
புதுக்கோட்டை இலக்கிய ஆர்வலர்களின் அயராத ஒத்துழைப்பும் முத்துநிலவனுக்கு உண்டு.
-------------------------------------------------------------------------------------------------------
நேர்காணல் : கவிஞர் ஜெயபாஸ்கரன் - தினமணி கதிர் - 29.04.2001 

தினமணியில் வெளிவந்த எனது கட்டுரைகள்


எழுதுகோல் தெய்வம்! எழுத்தும் தெய்வம்!
தினமணி -- அக்12.10.1995

நா.முத்துநிலவன்

எழுதுபவர்கள் மூன்று வகையினர் முதல் வகையினர் மிகப் பெரும்பான்மையோர்-கணக்கெழுதுபவர் அல்லது  கடிதம் எழுதுபவர். இவர்களது எழுத்தால் சமுதாயம் எந்தவிதத்திலும் பாதிக்கப்படுவதி;லை. ஆதனால் ஏற்படும் லாப நஷ்டம் இவர்களையே பொருத்தது.
இரண்டாம் வகையினர்-மிகச் சிறுபான்மையோர் தம் அளவில் ஆத்ம திருப்திக்காக எழுதி வெளிப்படுத்தாமலே விட்டு விடுவோர். ;டைரி எழுத்தாளர் போன்ற இவர்களாலும் மற்றவர்களுக்குப் பாதிப்பில்லை.
மூன்றாம் வகைதான் முக்கியமானது இலக்கியமாகவோ தொழிலாகவோ இருப்பது இந்த வகை எழுத்துதான். இந்த இரண்டுமே அவர்களுடைய அளவில் மட்டுமல்லாமல் சமுதாயத்தில் பேசப்படுவதாகவும் பின்பற்றப் படுவதாகவும் இருப்பதால் இந்த வகை எழுத்துதான் கவனம் மிகுந்ததாகவும் அமைகிறது.
அதுவும் அழகான கலைநயத்தோடு கூடிய கதையாக, நாவலாக, கவிதையாக, துணுக்காக ஜோக் ஆக எழுதக் கைவந்தர்கள் எப்படியும் அடுத்தவரை பாதிக்காமல் விடுவதில்லை. அவர்கள் கவனமாக எழுதுகிறார்களோ இல்லையோ அவர் தம் எழுத்துகளில் சமுதாயம் கவனமாக இருக்க வேண்டியுள்ளது.
எழுத்தாளனுக்கு என்ன சமூகப் பொறுப்பு?  ‘அது என் தொழில்’ அவரவர் தொழிலை அவரவரும் ஒழுக்கமாக பார்ப்பது தானே சரி ‘‘எனக்குக் காசு வருகிறது எழுதுகிறேன். இதில் என்ன சமூகப் பொறுப்பு?” என்று ஒருவர் கேட்கக் கூடும். “வையகம் காப்பவரேனும் - சிறு – வாழைப்பழக் கடை வைப்பரேனும்…” எந்த ஒரு தனி மனிதனுக்கும் கூட சமூகப் பொறுப்பு உண்டு என்பது ஒரு பக்கம் இருக்கட்டும்.  எழுத்தைத் தொழிலாகக் கொண்டவனுக்குப் பல மடங்கு பொறுப்பு உண்டு என்பது தான் உண்மை.
பேனா விற்பவனுக்கும் பேனாவைப்  பயன்படுத்துவோனுக்குமான வேறுபாட்டை மறைத்துவிடலாகாது.  மோசமான எழுத்து மக்கள் மனத்தில் நிலைத்து நிற்காது விரைவில்  மறந்து மறைந்து போகும் என்பது உண்மைதான் என்றாலும் பல நூறு ஆண்டுகளாகக் கட்டிக் காத்துவந்த மரபுகளை எளிதில் உடைத்து நல்ல வளர்ச்சியைப் குழப்பி சமூக மாற்றங்களைத் தள்ளிப் போடும் சக்தி, மோசமான பிற்போக்கான எழுத்து என்னும் கலைத்தன்மையால் வெற்றிபெறக்கூடிய எழுத்துக்கும் உண்டு என்பது தானே நமது கவலை.
வார மாத இதழ்கள் இலக்கியப் பகுதியுடன்  வந்தால் இரண்டொரு சிறுகதை நிச்சயம் உண்டு. தமிழின் வார-இருவார-மாத இதழ்களில் மாதாமாதமும் சுமார் 200சிறுகதைகள் வருகின்றன.
இதிலும் மர்மக்கதை துப்பறியும் கதை 'ஃபிக்ஷன்" கதை போன்றவற்றை விட்டுவிட்டாலும் சமூகக் கதைகள் சுமார்100 வரும் இதில் எத்தனை கதைகள் நம் நெஞசில் பலகாலம் நிற்கக் கூடியதாக இருக்கின்றனா?
ஒரு நாற்காலியைச் செய்யும் தச்சுத் தொழிலாளி அதற்கான தேவையும் அழகும் பொருந்திவரும்படி செய்து முடிக்க எடுத்துக் கொள்ளும் உழைப்பும் சிந்தனையும் கூட சில கதாசிரியர்கள் எடுத்துக் கொள்வதி;ல்லையே! நோயைத் தீர்க்காத மருந்து என்பதை விடவும் நோயை வளர்த்து விடும் மருந்தைக் கொடுத்து விடுவதுபோல ஏற்கெனவே இருக்கும் சமூகச் சிக்கலை மேலும் சிக்கலாக்கும் கதாசிரியர்கள் போலி மருத்துவர்களின் ரகத்தை விடவும் ஆபத்தானவர்கள். சமீபத்திய இதழ் ஒன்றில் ஒரு கதை:
‘சாதிகள் இல்லையடி பாப்பா’ எனும் பாடத்தை ஆசிரியர்  நடத்த மறுத்து வேலையை விட்டே போய்விடுகிறார் ஏனெனில் மாணவனிடம் பள்ளியில் சேரும்போதே சாதியைக் கேட்டுக் கொண்டு சாதிகள் இல்லை  என்று பொய் சொல்ல அவரால் முடியாதாம்.
சமத்துவ உணர்வு சரிதான். தராசின் எடைக் குறைவைப் ‘பார்த்து’ சரி செய்யும் நோக்கத்தையே இந்தக் கதாசிரியர் தவறாகப் புரிந்து கொண்டிருப்பதும் அதை எழுதிப் பிரசாரம் செய்வதும்… என்ன பொறுப்பற்ற தன்மை இது?
இதே போல நாவல்களிலும் தொடர்கதைகளிலும் கூட உண்டு.
பெரும்பாலான தொடர்கதைகள் காதல் எனும் பெயரில் வரும் சதைக் கதைகள்தான் ஒரு பெண்ணை ஒருவர் அல்லது இரண்டு மூன்று பேர் வெற்றி கொள்வதில் பல கதைகள் முடிந்து போகும் உண்மையில் வாழ்க்கை அதன் பிறகுதான் தொடங்கும் என்பதையே இவரகள் மறைத்து விடுவது ஒரு பக்கம் எனில் மறு பக்கம் குழப்படி வேலைகள்.
இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த ஒரு வரலாற்றுக் கொடுமையை திசைதிருப்பி நாவல் எழுதி பரிசும் பெற்ற கூத்துகள் தமிழ் இலக்கியத்தில் உண்டு. இப்போதும் உண்டு. கவிஞர் வைரமுத்து சொல்வது  போல ‘காலத்தின் விமர்சனம் இவர்களின் பிணங்களைக் கூட தோண்டி எடுத்து வந்து தூக்கில் போடும’;  என்பது  மட்டும் நிச்சயம். வேறென்ன சொல்லா!
அற்புதமான கலைத்தன்மையோடும் சமூகப் பொறுப்போடும் ஆரம்பத்தில் அறியப்பட்ட கவிஞர் வைரமுது;து இப்போது விடலைக் குரல் பாட்டுக்காக ‘சமூகப் பிரச்சனைகளைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாதே டேக் இட் ஈஸி’ என்பது நியாயம்தானா? அதுவும் அவரது ‘சுடும் வரை நெருப்பு சுற்றும் வரை ப+மி போராடும் வரை மனிதன்’ எனும் உன்னதக் கவிதை ஒரு சிலருக்கே தெரிந்திருக்க இந்த ‘ஈஸிபாலிஸி’ பாடல் உலகம் முழுவதும் உள்ள தமிழ் தெரிந்த குஞ்சு குளுவானுக்கும் போய்ச் சேரக்கூடிய ‘மீடியா’ வில் போய்ச்சேர்ந்து விட்டதே!  ‘அது திருப்திக்கு இது தொழிலுக்கு’  என்று அவர் கூறினாலும் எத்தனை ‘ஈஸி கோயிங்’ இளசுகள் அவரே சொன்ன போராடும் வரை மனிதன் என்பதைப் புறந்தள்ளி விட்டார்கள் என்பது அவருக்கும் நமக்கும் கவலை கருவது அல்லவா?
‘தரைமேல் பிறக்க வைத்தான் -எங்களை
 தண்ணீரில் பிழைக்க வைத்தான்
 கரைமேல் இருக்க வைத்தான் -பெண்களை
 கண்ணீரில் குளிக்க வைத்தான்’ -- என்று மீனவர்களின் மிகுந்த பிரச்சனைகளை ‘கருக்’ கென்று தைக்ககும்படி வளமான தமிழில் சொல்லத் தெரிந்த வாலி அப்போது ‘எப்படி… எப்படி…’ என்று எப்படி எழுதலாம்?’ அந்த ‘அவதார புருஷ’னுக்கு இப்படி அவமாரியாதை வரலாமா?
‘கேட்கிறார்கள் கொடுக்கிறேன் என்பதற்கு இது என்ன அவர்கள் வீட்டுப் பழைய குழம்பா? 
எழுத்து! எரிமலைக் குழம்பல்லவா?
வள்ளுவர் சொன்னபடி ‘கசடறக் கற்று’முடித்து வேலை வாய்ப்பக வாசலில் ‘அதற்குத் தக நிற்கும்’ இளையவர்களாகட்டும் வீடு உண்டு குழந்தைகள் உண்டு என்று குண்டு சட்டிக்குள் குதிரை ஒட்டும் நடுத்தர வர்க்கத்தினராகட்டும் கைகளில் ஏந்திக் கிடப்பது வார-மாத நாவல் இலக்கியங்களைத்தான்.
லட்சக்கணக்கில் உற்பத்தியாகி ஒரு வாரம் கடைக்கம்பிகளில் தொங்கி அடுத்த வாரமே பழைய புத்தகக் கடைக்கு அடிமாட்டு விலைக்கு வந்தாலும் கூட அந்தக் குறுகிய காலத்தில் அவற்றால் ஏற்படும் காலக் கொலையும் கனவுத்திருட்டுகளும் மிக  அதிகம் 
பினாமி  எழுத்தாளர்களை கூலிக்கு வைத்து கொண்டு  குப்பைகளையே கிளறிக்கிளறி எழுதி அட்டை மாற்றி ஊர் மாற்றி பேர் மாற்றி ஒரே கதையை ஒன்பது முறை மாற்றி இவர்கள் எழுதி விற்பதும் எழுத்தாமோ?  ‘நாவல்’ உனும் பெயரில் நாலைந்து ரூபாயில் இவர்கள் தருவது நாசத்தை அல்லவா? இவர்களின் கதைக்கருவே திருட்டு கொலை எனில் இவர்கள் செய்வதும் அதுதானே? கதைத்  திருட்டும் கலாச்சாரக் கொலையும்!
‘நில் கவனி  கொல்’,‘டெட்மார்னிங்’, மை டியர் மர்டரர்’ என்பன போன்ற ‘ரெண்டுங்கெட்டான்’ தமிழில்  எழுதும் இவர்களுக்கும் எழுத்தாளர் எனும் மதிப்பும் மரியாதையும் கிடைப்பது தமிழர்கள் விஞ்ஞாகத் தவமிருந்து பெற்ற  சாபமின்றி வேறென்ன?
‘டிட் பிட்ஸ்’ எனும் நொறுக்குத்தீனி இலக்கிய வகை சத்தமில்லாமல் தமிழிலும் பிரபலமடைந்து வருகிறது. இதில் அரிய தகவலாகவோ உலக அறிவுச்செய்திகளாகவோ வருவன உண்மையில் பயன்மிகுந்தவைதாம். பெரும்பாலானவர்கள் வார இருவார இதழ்களில் முதலில் இவற்றைப் படிப்பதும் இவற்றின் சுவைப் பயன் கருதித்தான்.
ஆனால் பெரும்பாலான துணுக்குகள் சினிமா அல்லது அரசியல் பிரமுகர்களின் தனிவாழ்க்கையில் மூக்கை நுழைத்து எடுத்துச் சிந்தும் செய்திகளாகவே இருப்பது என்ன சிந்தனையோ?
‘அந்த நடிகையின் காலை டிபன் ஒரேஓரு இட்லிதானாம்’ ஏன்? சட்னிகூட கிடைக்கவில்லையாமா?  ‘இந்த’ அமைச்சரின் சின்ன வீட்டுக்கும் பெரிய வீட்டுக்குமான தகராறில் இவர் இந்த நடிகையை முன்றாவது வீடாக்கிவிட்டாராம்’ என்பது போன்ற கொள்ளைப் படிப்பு உள்ள துணுக்குகள் ரொம்ப அவசியம் பாருங்கள்?
இதில் ‘கிசு கிசு ; இன்னும் கேவலமானது, உண்மையில் சம்பந்தப்பட்டவர்களையும் படிப்பவரையும் ‘கிச்சு கிச்சு’ மூட்டும் வேலையின்றி அடுத்த வீட்டுக்காரர்களையும் பற்றிக்கூட நல்ல விஷயங்களை விட்டுவிட்டு வேறு மாதிரி விஷயங்களையே பேசிப்பேசி அதில் ஒரு ருசி காணும் ‘வக்ர’ உணர்வுக்குத் தீனி போடும் மகத்தான இலக்கியப் பணி இது! கிசுகிசுக்களில் பெரும்பாலும் உண்மை இருக்காது என்பது எழுதுபவர்க்கும் படிப்பவர்க்கும் கூடப் பெரும்பாலும் தெரிந்ததுதான். என்றாலும் அதை ஒருவர் எழுத பலரும் படித்து அடுத்தவரிடம் எடுத்துச் சொல்ல… என்ன ஒருரசனை வளர்ச்சி! அடடா!
சிரிக்கக் கூடியவர்கள் ஆரோக்கியமானவர்கள். உடலும் அறிவும் ஆரோக்கியமாயிருப்பதன் அடையாளமே நல்ல நகைச்சுவைக்கு உடனடியாகச் சிரித்துவிடுவதுதான். அப்புறமாகச் சிரிப்பது ஆபத்தானது! சிரிக்காமலே இருப்பது சிக்கலானது.
உயர்ந்த ரசனையோடு சிரிக்கும்படியாக எழுதவும் பேசவும் கூடியவர்கள் பாக்கியவான்கள் எனக்குத் தெரிந்து உ.ராஜாஜி போல உடல்நிலை மிகவும் பாதிப்புக்கு உள்ளான நிலையிலும் தொடர்ந்து சமூகப் பொறுப்பு மிகுந்த நகைச்சுவைத் துணுக்குகளை எழுதக் கூடியவர்களும் இருக்கிறார்கள் என்பது பாராட்டுக்குரியது.
ஆனால் பெரும்பாலான ஜோக் எழுத்தாளர்களின்  ஊற்றுக்கண்ணே வீட்டில் அடிமைப்பட்டிருக்கும் ஆண் ஆபீஸில் தூங்கும் ஊழியர்கள் ஜொள்ளு விட மட்டுமே தெரிந்த இளைய சமூகம்- இவைதான். இதில் உண்மையான நகைச்சுவை என்னவெனில்  நடைமுறையில் இது பெரும்பாலும் தலைகீழாக இருப்பதுதான்.
இதில் யு கிளாஸ் சிரிப்பு அக்கரைப் பச்சை சிரிப்பு நீலம் பச்சை ஜோக்குகள் ‘படிக்கக் கூடாத ஜோக்குகள்’ வேறு ‘அதான் படிக்கக் கூடாதுல்ல அப்புறம் ஏன் போடுற?’ன்னு யாரும் கேட்கிறதில்லை இதுவும் ஒர் அடையாளமாம்!
‘எழுதுகோல் தெய்வம்! எழுத்தும் தெய்வம்’  என்றாயே பாரதி நீ வளர்த்த நெருப்புத் தமிழில் எச்சில் உமிழும் எழுத்தாளர்களை நீ என்ன சொல்வாயோ தெரியாது. எழுதினவன் இன்று ஏட்டைக் கெடுத்தான் நாளை நாட்டைக் கெடுத்தான் என்பதைப் புரிந்து கொண்டால் மனச்சாட்சி உள்ளவர்கள் மனம்மாறக் கூடும். இல்லையேல் மக்கள் மாற்றுவார்கள். மக்கள் என்றுமே அசிங்க விரும்பிகள் அல்லரே? பொறுப்பான பத்திரிக்கையாளர்களும் இதைப் புரிந்துதான் எதை வெளிப்படுவது என்பதில் தெளிவாகவே இருக்கிறார்கள் எழுதுவது எல்லாமே எழுத்தல்ல. எழுப்புவதே மிகச் சிறந்த எழுத்து. இதை உணர்ந்தவனே மிகச் சிறந்த எழுத்தாளன்.