“ஈஸ்வர அல்லா தேரே நாம்” - காந்தி பிறந்தநாள் நினைவுக் கட்டுரை


ஈஸ்வர அல்லா தேரே நாம்

---நா.முத்துநிலவன்---

னவரி 30ஆம் தேதி, 1948ஆம் ஆண்டு, டெல்லி பிர்லாமந்திர்  வழிபாட்டுக் கூட்டத்தில் நேருக்கு நேராக வந்து, கைகூப்பி வணங்கி விட்டு, நெஞ்சுக்கு நேராகத் துப்பாக்கியை நீட்டிச் சுட்டதும் ஏ! ராம்! என மரண ஓலமிட்டுத் தரையில் சரிந்த அந்த மாமனிதரின் 152ஆம் பிறந்த நாள் இன்று!  

கோட்சே, காந்தியைப் படுகொலை செய்ததை நியாயப் படுத்தி வழக்காடினான். ஆனால், கோடி கோடி மக்களின் கண்ணீரே வரலாறானது!  

           இத்தனை ஆண்டுகளாக எங்களிடம் பத்திரமாக இருந்த காந்தியை, ஆறுமாதம் கூட உங்களால் பாதுகாக்க முடிய வில்லையே?என்று ஆங்கிலேயர் ஒருவர், இந்திய நண்பரிடம் கிண்டலாகச் சொன்னாராம். சுருக்கென்று தைக்கக்கூடிய அம்புதான்! ஆனாலும் ஏன் இழந்தோம், எப்படி இழந்தோம் என்னும் சிந்தனை இப்போது மிகவும்தேவை

      இந்திய ஒன்றியத்தைச் சுற்றியுள்ள பாகிஸ்தான், இலங்கை, பர்மா, வங்கதேசம் முதலான நாடுகளில் அவ்வப்போது ராணுவம் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து அதிகாரம் செய்ததுண்டு!

இந்தியா விடுதலை பெற்ற இந்த 75 ஆண்டுகளில் ஒருநாள் கூட ராணுவம் ஆட்சிக் கட்டிலில் ஏறாத ரகசியம், மற்றவர் கண்டு மயங்கும் அதிசயம், மக்களின் மத-சகிப்புத் தன்மையும், மதப்பற்றுக் கடந்த நாட்டுப் பற்றும், ஜனநாயக நம்பிக்கையும் தானே? இந்த மகத்தான உணர்வுப் பெருக்கை மக்கள் மனத்தில் ஊற்றெடுக்க வைத்ததில் அந்த மாமனிதர் காந்திக்கு நிகர் யாருண்டு? 

      “நான் ஒரு சனாதன இந்துஎன்று அறிவித்துக் கொண்டவர்தான் அவர்.  சமூக அமைதிக்குச் சாதிப் பிரிவுகள் தேவை, ஆனால் தீண்டாமை இருக்கக் கூடாது என்றதற்கொரு நீண்ட மரபு உண்டு! அதன் வெளிப்பாடே காந்தி!

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்என்ற வள்ளுவர்க்கும் சமய நம்பிக்கை உண்டு! ஆனால் எச்சமயத்தையும் அவர் சிபாரிசு செய்யவில்லை! அந்தத்  திருக்குறளின் அறன்வலியுறுத்தல் அதிகாரத்தை தனது நண்பர் டால்ஸ்டாய் வழியறிந்து, அதன் மூலத்தைப் பார்க்க வேண்டும் என்பதற்காக தமிழ்மொழியைக் கற்று, மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி என்று தமிழில் காந்தியைக் கையொப்பமிட வைத்தது இந்த அறக்கருத்துகள்தான்!! மதுரையில்தான் அவரது உலகப் புகழ்பெற்ற அரையாற்றம் மாற்றம் நிகழ்ந்தது. அதன் நூற்றாண்டை இந்த செப்-22ஆம் தேதி வரலாற்று நிகழ்வாகக் கொண்டாடி நெகிழ்ந்தனர் காந்தி அன்பர்கள்.

கருநிறம் கொண்டுபாற் கடல்மிசைக் கிடப்போன்

மகமது நபிக்கு மறையருள் புரிந்தோன்

ஏசுவின் தந்தை எனப்பல மதத்தினர்

பலவகையாகப் பரவிடும் பரம்பொருள் ஒன்றே என்றார் பாரதி!   அடுத்த வந்த பாரதிதாசன்-

 “இமயம் வாழும் ஒருவன் இருமினால்,

குமரி வாழ்வோன் மருந்து கொண்டு ஓடுவான்” என்றார்.

அடுத்து வந்த பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரமோ, இன்னும் எளிமையாக-

“ஆருமேல கீறினாலும் ரத்தம் ஒன்னுதான்,

ஆகமொத்தம் எல்லாருமே பத்தாம் மாசந்தான்என்பது நெத்தியடி!

     இவையெல்லாம் நமது நீண்ட நெடிய சங்கஇலக்கியம் தொட்டு, பக்தி இலக்கிய காலத்திலும், சித்தர் இலக்கியத்திலும் தொடர்ந்த உயர்பண்பாடு! இராமாவதாரம் பாடிய கம்பர், சிவனைப் பற்றிய புகழுரைகளை நூறு இடங்களுக்கு மேல் வைத்த நுட்ப வெளிப்பாடும் அந்த மரபுதான்!

      “ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்எனும் திருமூலரின் வரிகள் அப்படியே ஈஸ்வர அல்லா தேரே நாம்என்பதன் பொழிப்புரைதானே? இந்த  

மரபுதான் தமிழ்மரபு, குறள்மரபு, சித்தர் மரபு, இந்திய ஒன்றியத்தின் உலகப் புகழ்பெற்ற மதச் சசகிப்புத் தன்மையின் உயர் மரபு! இதுவே காந்தியின் மரபு

தமிழ்நாட்டில் வாழும் இந்துக்கள், வேளாங்கண்ணி மாதாவுக்கு “நேர்ந்து கொண்டு, மண்டிபோட்டு ஊர்ந்து போய் மெழுகுவத்தி ஏற்றுவது சர்வசாதாரணம்! நாகூர் தர்காவில் சர்க்கரை வாங்கி பாத்தியா ஓதி வணங்கிப் படுத்துறங்கும் இந்துக்கள் ஏராளம்! அல்லாபாண்டி என இந்துக்கள் நடத்தும் இஸ்லாமியத் திருவிழாவும் உண்டு! பிள்ளையார் கோவில் கட்ட நிதிஉதவும் இஸ்லாமியரும் உண்டு! புதுக்கோட்டை-மதுரைச் சாலையில் இஸ்லாமிய மன்னருக்கு இந்து மக்கள் கட்டியகாட்டுபாவா பள்ளிவாசல்போன்ற வரலாறு தெரியாதோர்தான் மதக் கலவரங்களை நடத்துகிறார்கள்! பல்வேறு சாதி-மதம் சார்ந்த மக்கள் வாழும் இந்திய ஒன்றியத்தில் மக்களைப் பிரித்து, அரசியல் அதிகாரத்தை ருசிக்கின்ற, ருசிக்கத் துடிக்கின்ற சுயநலத் தலைவர்கள் உள்ள வரை, “அரசியலில் மதம் கலவாத, எளிய,  காந்தி போலும் தலைவர் இல்லையே?” எனும் ஏக்கம் தொலையுமா என்ன?

        குபதிராகவ ராஜாராம் பதீத பாவன சீதாராம்பாடல், காந்தியின் வழிபாட்டுப் பாடலில் இஸ்லாமியர்கள் தனிமைப் படுகிறார்கள் என்பதால், ஈஸ்வர அல்லா தேரே நாம்எனும் வரிகளைக் காந்தி சேர்த்தார்.

ஈஸ்வரனும் அல்லாவும் ஒருவரே என்பதை இருமதத் தலைவர்களுமே ஏற்கவில்லை. ஆனால், இந்த வரிகள் என்றென்றும் காந்தியை நினைவு படுத்துவதாக வரலாற்றில் நிற்கின்றன. மக்கள், சாதி-மதங்களின் பெயரால் கலவரப்படும் போதெல்லாம் நினைவில் எழும் வரிகளிவை!

ராமராஜ்யம் அமைப்பதுதான் தமது லட்சியம் என்று கூறினார் காந்தி. கோட்சேயின் வாரிசுகளும் ராமனின் ஆட்சியை அமைப்பதுதான் தமது நோக்கம் என்கிறார்கள். ராமனை ஏற்காதவர்கள் இந்த நாட்டில் வாழத் தகுதியற்றோர் என்றும் சிலர் பேசுகிறார்கள்!  இப்படி ஒருபோதும் காந்தி பேசியதில்லை! அவரது நவகாளி யாத்திரையே இதற்குப் பதில் கூறும்.

காந்தியிடம் அம்பேத்கர், நேதாஜி, ஜோஷி, நேரு, பெரியாரும் கூட முரண்பட்டு நின்றதுண்டு! நூறு விழுக்காடும் பின்பற்றத்தக்க மனிதர் யாருண்டு? ஒவ்வொருவரிடமும் அறிவைப் பெறுவதுதானே அனுபவம்? இந்திய வரலாற்றில் “ஒற்றை ஆள் ராணுவமாய்நின்ற காந்தியின் மக்கள் ஒற்றுமைப் பணிகளை மறக்க முடியுமா? அவர் இறந்தபின், இந்த நாட்டைக் காந்திநாடு என்றழைக்க வேண்டும் என்றவர் தந்தை பெரியார். அது அந்த நேரத்து உணர்வல்ல சிந்தித்து வெளிப்பட்ட சொற்கள்! அர்த்தம் பெரிது!

காந்தியைப் பொறுத்தவரையில் ராம், ரஹீம் இருவரும் ஒன்றுதான், “வாய்மை மற்றும் நியாயம் என்ற கடவுளைத் தவிரவேறு கடவுளை நான் அங்கீகரிக்கவில்லைஎன்றார் காந்தி.

கோட்சே தனது வாக்கு மூலத்தில் “பகவத்கீதை தந்த உத்வேகம்தான் காந்தியைக் கொல்லத் தூண்டியது. கடமையைச் செய்தேன், பலனை எதிர்பார்க்கவில்லை” என்று சொல்லியிருந்தான். பகவத் கீதையை தேசிய நூலாக அறிவிக்கக் கோரும் இன்றைய சூழலில்தான்  காந்தியின் “ஈஸ்வர்-அல்லா”வுக்கான தேவை இன்னும் இன்னும் அதிக அவசியமாகிறது!

கோட்சேவை நாயகனாக, நாடாளுமன்ற மாநிலங்களவையில் பேசினார் பாஜக எம்.பி. சாக்ஷி மகராஜ். நாடு முழுவதும் சிலை வைக்கப் போவதாகவும் சொன்னார். எனில், கதை நாயகன் யார், எதிர் நாயகன் யார்?

தச்சார்பற்ற அரசியலில், மக்கள் ஒற்றுமை பேணுவதில் மிகப் பெரிய தியாக வரலாறுகளைக் கொண்டது நமது இந்திய ஒன்றியம்.

காந்தி உயிர்தந்து காப்பாற்றிய மதநல்லிணக்கம், மக்கள்ஒற்றுமை, ஆகிய கோட்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதே அவருக்குச் செய்யும் உண்மையான அஞ்சலியாகும்.

அண்ணல் காந்தி எம்மதம் ஆயினும்,

                    அவர்தான் எங்கள் தாத்தா!

        அன்னை தெரசா எம்மதம் ஆயினும்,

                    அவர்தான் எங்கள் அன்னை!

        அப்துல் கலாம் எம்மதம் ஆயினும்,

                    அவர்தான் எங்கள் வழிகாட்டி!   

--------------------------------------------------------------------------------------

            நா.முத்துநிலவன், எழுத்தாளர், தமிழாசிரியர்(.நி), புதுக்கோட்டை

     தொடர்புக்கு muthunilavanpdk@gmail.com

--------------------------------------------------------------------------------------

 முன்னர் எழுதிய கட்டுரையை 

எடுத்து,

இன்றைய நிலையைச் சேர்த்து

இந்தக் கட்டுரையை எழுதி

02-10-2021 இன்று வெளியிடுகிறேன்.

தலைப்பு அதேதான் என்பதால்

முந்திய இணைப்பிலேயே

அந்தக் குறிப்புகளுடனே 

வைக்கிறேன்.

நண்பர்கள் புரிந்துகொள்வீர்கள்

என்று நம்புகிறேன்.

வணக்கம்.

----------------------------------------------

    இன்று காந்தி நினைவுநாள். 
  30.1.48 டெல்லிபிர்லாமந்திர் 
பிரார்த்தனைக்காகக் கூடியிருந்த மக்கள் கூட்டத்து மத்தியில் காந்தியின் நேருக்கு நேராக வந்துநின்று, கரம்கூப்பி அவரை வணங்கிய பிறகு, துப்பாக்கியை அவரது நெஞ்சுக்கு நேராக நீட்டி கோட்சே சுட்டதும் அந்தமனிதர், “ஏ!ராம்!“ என மரண ஓலமிட்டு தரையில் சரிந்த நாள்!
   “இத்தனை ஆண்டுகளாக எங்கள் ஆட்சியில் பத்திரமாக இருந்த காந்தியை, சுதந்திரம் பெற்று ஆறுமாதம் கூட உங்களால் பாதுகாக்க முடிய வில்லையே?என்று ஆங்கிலேயர் ஒருவர், இந்திய நண்பரிடம் கிண்டலாகச் சொன்னாராம். சுருக்கென்று தைக்கக்கூடிய அம்புதான்! சுர்ரென்று சுடக்கூடிய உண்மைதான்! இதைப் புரிந்துகொள்வது கடினம்!
    காந்தியிடம் எனக்கு ஆயிரம் முரண்பாடுகள் உண்டு! “நான் ஒரு சனாதன இந்துஎன்று அறிவித்துக் கொண்டவர். “சமூக அமைதிக்குச் சாதிப்பிரிவுகள் இருக்கவேண்டும்“ என்று பகிரங்கமாகச் சொன்னவர், “ஆனால் தீண்டாமை இருக்கக் கூடாதுஎன்று வாய்மலர்ந்தவர். என் போலும் கருத்தோட்டம் உள்ளவர்கள் தமிழ்நாட்டு மேடைகளில் நின்று உரக்கக் கேட்டோம்- “தீண்டாமை இருக்கக் கூடாதாம்! ஆனால் நால்வர்ணங்கள் வேண்டுமாம்! இது என்ன கூத்து? “மது குடிக்கலாம் ஆனால் போதை வரக்கூடாது!“ என்பது மாதிரி! மதுவின் தேவையே போதைதானே? சாதிகளின் தேவையே தீண்டாமையை நியாயப் படுத்துவதன் மூலமான பொருளாதாரச் சுரண்டலை ஏற்கவைக்கும் நிரந்தர மனஏற்பாடுதானே?இதை நான் தமிழ்நாட்டின் பலப்பல மேடைகளில் கேட்டிருக்கிறேன். உண்மைதான்.

      ஆனாலும்... பல்வேறு சாதி-மதம் சார்ந்த மக்கள் வாழும் நம் நாட்டில், என்போல் சாதி-மத மறுப்பாளர்களால் எந்தப் பிரச்சினையும் இல்லை! சாதியை மதத்தைச் சொல்லி மக்களைப் பிரித்து ரத்தம் குடித்து, ஆட்சி அதிகாரத்தை ருசிக்கத் துடிக்கும் சுயநலத் தலைவர்கள் இருக்கும்வரை, மதநல்லிணக்கக் கோட்பாடு வெற்றிபெற தாய்மொழி வழிக் கல்வி நடைமுறையாகும்வரை, ஆடம்பரமற்ற - சுயநலமற்ற எளிய மக்கள்-தலைவர்கள் உருவாகும்வரை, காந்தி தேவைப்படுகிறார்!
        எனவேதான்,
    மேற்காணும் “ஈஸ்வர அல்லா தேரே நாம்“ என்னும் தலைப்பில் திரு சம்பந்தம் அவர்கள் ஆசிரியராக இருந்தபோது, தினமணிக்கு ஒரு கட்டுரை எழுதி அனுப்பியிருந்தேன். கட்டுரை வெளியாகவில்லை! நான் அதன் பிறகு தினமணிக்குக் கட்டுரைகள் அனுப்பவில்லை! ஒருநாள் தினமணியிலிருந்து தொலைபேசி (அப்போது செல்பேசி இல்லை!) நான் ஆசிரியருக்கு வணக்கம் சொன்னேன். அவர்கள் எடுத்த எடுப்பிலேயே கேட்டார்கள்-“என்ன முத்துநிலவன், கோவமா?நான் சற்றும் தயங்காமல் சொன்னேன் “ஆமாம் சார். நீங்க சொன்னீங்களேன்னு கட்டுரைகள் அனுப்பினேன். ஆனா சாதாரணக் கட்டுரைகள எல்லாம் வெளியிட்ட நீங்க, நான் ரொம்ப எதிர்பார்த்த “ஈஸ்வர அல்லா தேரே நாம்“ கட்டுரையை வெளியிடலயேனு எனக்கு வருத்தம் அதுதான் அதுக்கப்பறம் கட்டுரை எதையும் அனுப்பல“ என்றேன். அவர் சிரித்துக் கொண்டே மேலும் சொன்னார் “எனக்கு உங்கள மாதிரி ஷார்ப்பான எழுத்து தேவைப்படுது. ஆனால், உங்க கருத்தோடு என்னால் ஒத்துப்போக முடிகிறதா இல்லையாங்கிறது முக்கியமில்ல, இங்குள்ள எல்லாரும் ஒத்துப் போகணுமில்ல..? அதனால இதப் புரிஞ்சிக்கிட்டு நாம ரெண்டுபேரும் ஒத்துப் போறமாதிரி மத்த விஷயங்கள நீங்க தினமணிக்கு எழுதலாமே?என்றார். அவரது நியாயமும் புரிந்தது. நானோ அவரோ தினமணியின் உரிமையாளர்கள் அல்லவே? (அதன் பிறகு, “உங்களைப் போல கூர்மையான எழுத்துக் கொண்டவர் யாரேனும் இருந்தால் எனக்குச் சொல்லுங்க நான் பயன்படுத்திக்கிறேன்“ என்றார். அதன்பேரில் எனது இளைய நண்பன் ஒருவனை நான் பரிந்துரைக்க, அவனை அவர் தனது கோவை-திருப்பூர் பகுதிச் செய்தியாளராக நியமித்ததும் எனக்கே மறந்துபோனது, அந்த நண்பரே ஒருமுறை நான் அந்தப்பக்கம் சென்றபோது நினைவூட்டிதும் திரு சம்பந்தம் அவர்களின் ஊடக நேர்மை என்னை நெகிழவைத்தது)
அதன் பிறகு எனது வேறுசில கட்டுரைகள் தினமணியில் வந்தன. பின்னர் அவர் காலமானபிறகு, நீண்டகாலம் கழித்துத்தான் மீண்டும் என் கட்டுரைகள் தினமணியில் வந்தன... ஆனால், இப்போதும் அந்தக் கட்டுரை தினமணியில் வரமுடியாது என்பது எனக்குப் புரிகிறது. இன்றைய தினமணி ஆசிரியர் திரு வைத்தியநாதன் அவர்கள், எனது “விண்ணப்பித்து வாங்குவதா விருது?கட்டுரை தினமணியில் வெளிவந்த அன்று எனது எழுத்தைப் பாராட்டி நெடுநேரம் பேசினார்கள். “மாதம் ஒரு கட்டுரையாவது தினமணிக்கு எழுதவேண்டும்“ என்றும் சொன்னார்கள். பின்னரும் எனது சில கட்டுரைகள் தினமணியில் வந்தன... ஆனால், கணினி வாங்குவதற்கு முன் (2000ஆம் ஆண்டிற்குமுன்) எழுதிய அந்தக் கட்டுரையைப் பாதுகாத்து வைத்துக் கொள்ளாமல் நானும் தொலைத்துவிட்டேன். அந்தக் கருத்தோட்டம் இப்போதும் என் நெஞ்சில் ஓடிக்கொண்டே இருக்கிறது. அதன் சாராம்சம் இதுதான் –
“ரகுபதிராகவ ராஜாராம் பதீத பாவன சீதாராம்பாடல் காந்தியால் சுதந்திரப்போராட்டக் காலத்தில் பாடப்பட்ட ராம்பஜன் (ராம நாம பஜனைப் பாடல்). இதில் இசுலாமிய நண்பர்கள் தனிமைப் படுத்தப் படுகிறார்கள் என்னும் கருத்துக்கேற்ப “ஈஸ்வர அல்லா தேரே நாம், சபுகோ ஷண்மதி தே பக்வான்“ எனும் வரிகளைக் காந்தி சேர்த்தார். ஆனால், “ஒப்புமை சொல்லவியலாத அல்லாவை ராமனுடன் ஒப்பிட்டுச் சொன்னதை“ இசுலாமியத் தலைவர்கள் ஏற்கவில்லை. அதோடு, அல்லாவுடன் ராமனை ஒப்பிட்டதை இந்துமதத் தலைவர்களும் ஏற்கவில்லை. காந்தியின் இந்தப் பாடல்வரிகள் பொருளிழந்தன...!
இந்தச் சூழலில் இந்த வரிகள் என்றென்றும் காந்தியை நினைவு படுத்துவதாக வரலாற்றில் நிற்கின்றன...எமது மக்கள், மதத்தின் பெயரால் கலவரம் எனும் பெயரில் கொல்லப்படும் போதெல்லாம் இந்த வரிகள் என் நெஞ்சைக் குத்திக் கிழிக்கின்றன..
இப்போது அந்த சாராம்சத்தைக் கொண்டு ஒரு கட்டுரை எழுதலாம் என்று நினைத்துக் கொண்டிருந்த போது, எனது நண்பன் மதுக்கூர் இராமலிங்கத்தின் பின்வரும் கட்டுரையை இன்று காலையில் படித்தேன். இன்றைய தேவைக்குக் காந்தியைப் பற்றி மட்டுமின்றி இன்றை ஆட்சியாளர்கள் காந்தியின் பெயரைச் சொல்லிக் கொண்டே அவரது மதநல்லிணக்கத்தை எப்படி இழிவுபடுத்தி, தன் சுயநல வேலைகளைச் செய்துவருகிறார்கள் எனும் இவரின் கருத்தோட்டம் எனது கருத்தோடு ஒத்துப் போவதால் மதுக்கூர் இராமலிங்கத்துக்கு நன்றி சொல்லி, அந்தக் கட்டுரையை நம் வலை நண்பர்கள் படிக்கத் தருகிறேன் – படியுங்கள், கருத்துகளை உங்கள் நெஞ்சில் மட்டுமின்றி நம் கருத்துப் பெட்டியிலும் பதியுங்கள். வணக்கம்.
-----------------------------

28-01-2015 - திண்டுக்கல் வருகிறேன்.. வந்தேன்

28-01-2015  புதன்கிழமை  மாலை 
திண்டுக்கல் வந்தேன்..
(படங்கள் கீழே)

தலைமை உரை திரு மணிவண்ணன் அவர்கள்
தலைவர் -இந்திய சமூகவிஞ்ஞானக் கழகம்,
மற்றும் ஏ.பி .சி. கல்லூரி முதல்வர். திண்டுக்கல்
மற்றும்  ஆசிரியர் சங்கங்களின் மாவட்டத் தலைவர்கள்




நினைவுப்பரிசு வழங்குபவர்-
முனைவர் குருவம்மாள் 
(தமிழ்த்துறைத் தலைவர்-காந்திகிராம் பல்கலை, திண்டுக்கல்,
ஒருங்கிணை்ப்பாளர் திண்டுக்கல் கலை-இலக்கியக் களம்)
--------------------
படங்களுக்கு நன்றி -
திரு  சுபாஷ் சந்திர போஸ், திண்டுக்கல்.
----------------------------------------------------------
நமது வலைச்சித்தரை 
28-01-2015 மாலை5.30க்குச் சந்தித்து, நிறையப் பேசினோம்.
விரைவில் (மார்ச் மாதம்) புதுக்கோட்டையில் 
மீண்டும் இணையப் பயிற்சி பற்றிப் பேசினோம்..
விவரம் செயல்வடிவில் வரும்.
--------------------
29-01-2015 காலை
ஈரோடு -சத்தியமங்கலம் -டிஜி புதூர்
காமதேனு கலை-அறிவியல் கல்லூரி
மாணவ-மாணவியர்க்காக
மாவட்ட ஆட்சியர் தொடங்கிவைத்த
ஈரோடு மாவட்ட 
வேலைவாய்ப்பு அலுவலர் நடத்திய
மாணவ-இளைஞர்களுக்கான 
வேலைவாய்ப்பு மற்றும்
வழிகாட்டு நெறிக் கண்காட்சியில்
எனது நம்பிக்கை உரை
சுமார் 2000 மாணவ-மாணவியர் கொண்ட மாபெரும் நிகழ்வு.
படங்கள் கிடைத்ததும் இடுவேன்.
இந்தப்படம் கிடைத்ததும் இடுவேன்.
------------------- 

பேராசிரியர் ச.மாடசாமி அவர்களின் மதிப்புரை

முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே!’  நூலுக்கு பேராசிரியர் ச.மாடசாமி அவர்கள் எழுதிய மதிப்புரை-
 
பேராசிரியர் ச.மாடசாமி
பேசும் எழுத்துகள் எப்போதும் ஈர்க்கின்றன. திரு.வி.க தொடங்கி வைத்த மரபு.
அந்த மரபின் விளைச்சலாக இருக்கிறது “முதல் மதிப்பெண் எடுக்கவேண்டாம் மகளே!”
            முத்துநிலவன் எழுத்து-தொண்டை கட்டி உள்ளொடுங்கிய எழுத்தல்ல. கணீரென்று சத்தமிட்டு ஒலிக்கும் எழுத்து அவர் எழுத்து. ஆம்! எழுத்து பேசுகிறது. முத்துநிலவனின் புத்தகம் பேசுகிறது.
          முத்துநிலவனுக்கு ஒற்றை முகமல்ல. அவர் கவிஞர்; கட்டுரையாளர்; பேச்சாளர்; சமூகசிந்தனையாளர்; எல்லா வற்றுக்கும் மேலாக  ஓர் ஆசிரியர்.
   ஆசிரியப் பணியில் இருந்த காலத்தில் மாணவர்கள் என் வீடு நிறைந்து  இருப்பார்கள். அவர்கள் வீடு வராத நாள் இல்லை.நான் தூக்கிச் சுமந்த இந்தப் பெருமிதம் முத்துநிலவனின் புத்தகத்தின் முன் உடைந்து சிதறியது. முதல்மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே! வாசித்தபின் நான் எத்தனை மாணவர்களின் வீடுகளுக்குப் போயிருக்கிறேன் என்று குற்றவுணர்வுடன் நினைத்துப் பார்க்கிறேன். அபூர்வமாய் ஒன்றிரண்டு வீடுகள் ஞாபகத்துக்கு வருகின்றன.
               முத்துநிலவன் தம் மாணவர்களைப் பார்க்க வீடுவீடாகப் 
போகிறார்.  அவர் மாணவர் வீடு தேடிப் போகும் அனுபவங்கள் என்னை  மயக்குகின்றன. வகுப்பறை ஆசிரியரைத் தன் வீட்டு வாசலில்  பார்ப்பது மாணவர்க்கு எவ்வளவு பெரிய ஆனந்தம்! 
              கூல்டிரிங்க்ஸ் வாங்க ஓடும் தினேஷ், கையில் இருந்த விளக்குமாற்றை மறைத்து வரவேற்கும் கவிதா,ஒரு சொம்பு தண்ணீர் கொடுத்து வரவேற்கும் இணையதுல்லா,வீதியில் பார்த்ததுமே ‘அய்யா! வீட்டுக்கு வாங்கய்யா!என்று வரவேற்கும் விஜயலட்சுமி, தேய்த்துக் கொண்டிருந்த பாத்திரங்களைப் போட்டுவிட்டு ஓடி வந்து அழைக்கும் அபி என ஒவ்வொருவராக நம்முன் வந்து நிற்கிறார்கள்.மறக்கமுடியாத பிள்ளைகள்.
            மாணவர்களின் வீடு தேடிப்போன அனுபவத்தை முத்துநிலவன்விவரிப்பது நெஞ்சைத் தொடும் ஒரு கவிதை.
     “பார்த்தது என்னவோ பத்து,இருபது குழந்தைகளைத்தான். ஆனால் படித்ததென்னவோ,  பலபுத்தகங்களில் கிடைக்காத வாழ்க்கைப் பாடம்”.
   கடுங்கோபத்தையும் அதன் விளைவாகப் பெருத்த மனச் சோர்வை யும் உண்டாக்குகின்றன இன்றைய கல்விக்கூடங்கள். பாடத்திட்டம், பாடம் நடத்தும் முறை,வெற்றியைக் குறிவைத்து நடக்கும் சித்திரவதை, அவ்வப்போது வகுப்பறையில் தோன்றும் வன்முறை, அதற்குக் காரணங்களாகவும் தீர்வுகளாகவும் ஆசிரியர்களும் அதிகாரிகளும் முன்மொழியும் அபத்தங்கள்- எல்லாமே நம்மைத்  துன்புறுத்துகின்றன.
            ‘முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே! நூலிலும் இந்தக் கவலை பரவிக் கிடக்கிறது. மாணவர்களின் பன்முக ஆற்றல்களுக்கு இடமும் மதிப்பும் இன்றி தேர்வு வெற்றி ஒன்றே கொண்டாடப்படுவது
குறித்து முத்துநிலவன் கவலை கொள்கிறார். விமர்சனங்களை வைக்கிறார். அதற்கப்பால், இந்தக் கேவலத்தைக் கேலிக்குள்ளாக்கிச் சிரிக்கவும்  செய்கிறார். அது முத்துநிலவன் ஸ்பெசல்!
            “பாடமே இது பொய்யடா!-வெறும்
             மார்க்அடைத்த பையடா!என்பது முத்துநிலவனின்  புதுப்பாட்டு.
            தேர்வு முடிவுகள் வந்ததும் தனியார் மெட்ரிக் பள்ளிகள் எழுப்பும் வெற்றிக் கூச்சல்கள் சகிக்க முடியாதவை.கூச்சல்கள் எல்லாக் குற்றங்களையும் மறைத்து விடுகின்றன. தோலுரிக்கிறார்   முத்துநிலவன். 
     ’தனியார் பள்ளிகள் சாதனை!பின்னணி என்ன?’என்பது அருமையான ஆய்வுக் கட்டுரை.தனியார் பள்ளி மோகங்கொண்டோர் பிடிவாதங் களையும் அசைக்கக் கூடிய விதத்தில் கட்டுரை அமைந்து இருப்பது தனிச்சிறப்பு. கட்டுரையைப் படித்துவிட்டு முத்துநிலவனுக்கு வந்த கடிதங்கள் ஏராளம். அவற்றுள் முக்கியமானது சுவாதி செல்வா என்ற தலைமை ஆசிரியர் எழுதிய கடிதம்.
            “எங்கள் பள்ளியில் 5 மாணவர்கள் மனவளர்ச்சி குன்றியவர்கள். என் பள்ளிக்கு நான் எப்படி முழுதேர்ச்சி தெரிவிக்க முடியும்என் உதவி ஆசிரியர்களை நான் எப்படி கடிந்துகொள்ள  முடியும்?அவர்கள் நன்றாகப் பாடு படுகிறார்கள். நான் நல்ல தலைமை ஆசிரியர்.என் கடமையை நிறைவாகச் செய்கிறேன். மாணவர்கள் என்மீது கொள்ளைப் பிரியம் வைத்துள்ளார்கள்.  அது போதும்!என்கிறார் சுவாதி செல்வா. தெளிவும் திடமும் நிரம்பிய வார்த்தைகள். நல்ல முயற்சிகளும் நல்ல உள்ளங்களும் 
ஒரு நூலின் வழி இப்படி இணைவது எத்தனை அற்புதம்!
           தமிழ்ப் பாடத்திட்டம் குறித்து நெடுநாளாகவே நான் குமுறி வந்திருக்கிறேன். மூடநம்பிக்கைகளின் சேமிப்புக் கிடங்காக அது  இருப்பது ஒரு காரணம்; மாணவர்களோடு உரையாட விரும்பாத ஓர் அகங்கார மொழியில் அது தயாரிக்கப்படுவது மற்றொரு காரணம். ஆனால்,  ஆசிரியர்கள் பொதுவாகப் பாடங்கள் பற்றிக் கவலை கொள்வ தில்லை.(மாணவன் சன்னல் வழியே பார்த்துக் கொண்டு இருந்தால் கவலையும் கோபமும் கொள்வார்கள்). பாடப் புத்தகத்தில் என்ன இருக்கு?’  என்பதுதான் பலரின் பொதுவான அபிப்பிராயம்.
பாடப்புத்தகத்துக்குள் ஒழுங்கீனத்தின் விதைகள் ஊன்றிக் கிடப்பதைக் கண்கள் காணத் தவறுகின்றன. போகட்டும். முத்துநிலவனின்  கறார்க் கண்களுக்கு அவை தப்பவில்லை.
                ‘தமிழறிவு,பகுத்தறிவு,சமூக உணர்வு சார்ந்த செய்திகளைத்தமிழ்ப்பாட நூல்கள் சரிவரத் தருவதில்லை-என்பது முத்துநிலவனின்மையமான குற்றச்சாட்டு. புராணக் குப்பைகளை அடைக்கும் சாக்குப்பையாகத் தமிழ்ப் பாடத்திட்டம் இருப்பதைத் தெள்ளத் தெளிவான 
உதாரணங்களுடன் அவர் நிரூபிக்கிறார்.
                எட்டாம் வகுப்பு தமிழ்ப் பாடப் புத்தகத்தில் உள்ள குறிப்பு இது. மதுரையில் எழுந்தருளியுள்ள சோமசுந்தரக் கடவுள் செய்து  அருளிய அறுபத்துநான்கு திருவிளையாடல்களை விளக்கிக்  கூறும் பழைய வரலாற்று நூல் திருவிளையாடல்புராணம்.
          திருவிளையாடல் புராணம் வரலாற்று நூலாம்!கொடுமை! திருமூலர்  3000 ஆண்டுகள் வாழ்ந்தார். ஆண்டுக்கு ஒரு பாட்டாக  3000 பாடல் எழுதினார் என்று இலக்கிய வரலாற்றில் விடைஎழுதி மதிப்பெண் வாங்கிய என் பள்ளிப் பருவ வாழ்க்கை நினைவுக்கு வந்தது.
              திருவிளையாடற் புராணத்தை வரலாற்று நூல் என விவரிக்கும் காமெடி ஒரு பக்கம்; பாரதிதாசன் குடும்ப விளக்கில்  அமைந்த சுயமரியாதைச் சிந்தனைகளை யெல்லாம் விட்டுவிட்டு ஒரு பெண் காலையில் எழுந்து செய்ய வேண்டிய வேலைகள் என்னென்ன?” என்று கேள்வி கேட்டு பாரதிதாசனையும் பெண்ணையும் ஒரே நேரத்தில் அவமதிக்கும் தேர்வுத்தனம் இன்னொரு பக்கம்!
      ஒவ்வொரு முறை ஆட்சி மாறும் போதும் ஆட்சியாளர்கள்  தமிழ்ப் பாடத்துக்குள் நுழைந்து நடத்தும் ஆர்ப்பாட்டம் தனிக்கதை!
      எல்லாக் கூத்துக்களையும் விவரிக்கிறது தமிழ்ப் பாட நூல்களில் தமிழ் என்ற கட்டுரை.
              இன்று வகுப்பறை வன்முறை குறித்துத் தாறுமாறாகப் பேச்சு கேட்கிறது. ஓர்  அடிதடி நடந்து விட்டால் நீதிபோதனை  வகுப்பு வேண்டும்“ என்று சிலர் கருத்து உதிர்க்கிறார்கள். நீதிபோதனை வகுப்பில் என்ன சொல்வார்கள்? புராணக் கதைகளையும் பக்திக் கதை
களையும்  பேசி மாணவர்களைக் கொல்வார்கள்.
             உண்மையில் தீர்வுஎன்ன? ஆசிரியரும் வகுப்பறையும் காலத்துக் கேற்ற புதிய ரூபம் எடுப்பதிலும், வகுப்பறை  மாணவர் களிடம் கட்டற்ற நேசத்தை வெளீப்படுத்துவதிலுமே-வன்முறைக்கு எதிரான தீர்வு இருக்கிறது. முத்துநிலவன் இன்னும் எளிமையாகத் தீர்வை முன்வைக்கிறார். மாணவர்களைத் தொட்டுப் பேசுங்கள் என்கிறார். சிறுவர்களைத் தொட்டு ஆதரவாகப் பேசினால், தவறு  செய்த மாணவன் நெகிழ்ந்து விடுவது உறுதி’  என்கிறார்.
               நூலின் முகமாக அமைந்த கட்டுரை முதல் மதிப்பெண்  எடுக்க வேண்டாம் மகளே என்பது. அக்கட்டுரையின் சாராம்சமான வரிகள் இவை:
      ”சாதாரணமான  மதிப்பெண்களோடும் அசாதாரண மான புரிதல் களோடும் உனது கல்லூரிப் படிப்பை முடித்துக் கொண்டு வா மகளே!இது வேண்டுகோளா? இல்லை.
இது முழக்கம். மனித உறவுப் புரிதல்கள் பலவீனப்பட்டு- எத்தனைமார்க்? எத்தனாவதுரேங்க்? என்ற புள்ளிவிவரக் கணக்குகளின் கை ஓங்கிக் கிடக்கும் வகுப்பறைக்கு  எதிரான முழக்கம்.
                கல்வி குறித்த நூல்கள்கல்வியாளர்கள்,ஆசிரியர்கள் வீட்டுஅலமாரிகளில் மட்டும் கிடந்து என்ன பயன்?
               நூல்கள் பெற்றோர்களைத் தேடி நடக்க வேண்டும். எளியோர் வீடுகளின் முன் போய் நிற்க வேண்டும்.
              முத்துநிலவனின் எழுத்து இதைச் சாத்தியமாக்கும். பேசும்எழுத்து நிச்சயம் நடக்கும்.முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம்  மகளே! அந்த நம்பிக்கையின் தொடக்கம்.
-பேராசிரியர் ச.மாடசாமி - aruvi.ml@gmail.com
 நன்றி - தீக்கதிர்-நாளிதழ் “புத்தகமேசை”
25-01-2015 ஞாயிறு பக்கம்-4
-----------------------------------------------------------