பிள்ளையார், செட்டியார் முதலியார்கள் சேர்ந்து வளர்த்த ஐயர்!


தமிழ்த்தாத்தா உ.வே.சா.
தமிழ் தாத்தா என எல்லோராலும் அழைக்கப்படும் உ.வே.சாமிநாத ஐயர் 1855-ஆம் ஆண்டு பிப்ரவரி 19-ஆம் தேதி தமிழ் நாட்டில் கும்பகோணத்துக்கு அருகே உள்ள உத்தமதானபுரம் எனும் சிற்றூரில் பிறந்தார். இவருடைய பெற்றோர் வேங்கட சுப்பையர்- சரசுவதி அம்மாள்.

இவரது தந்தை ஒர் இசைக் கலைஞர். உ.வே.சா தனது தொடக்கத் தமிழ்க் கல்வியையும், இசைக் கல்வியையும் சொந்த ஊரில் உள்ள ஆசிரியர்களிடத்தே கற்றார். பின்னர் தன் 17 ஆம் வயதில் தஞ்சாவூர் திருவாவடுதுறை சைவ ஆதீனத்தில் தமிழ் கற்பித்துக் கொண்டிருந்த புகழ்பெற்ற மகாவித்துவான் என அழைக்கப்பட்ட தமிழறிஞர் திரிசிரபுரம் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களிடம் 5 ஆண்டு காலம் பயின்று தமிழறிஞர் ஆனார்.
தொடக்கத்தில் கும்பகோணத்திலிருந்த கல்லூரி ஒன்றில் ஆசிரியராகப் பணியில் இருந்த சாமிநாதன் பின்னர் சென்னை மாநிலக் கல்லூரியிலும் ஆசிரியராக இருந்தார்.

பலரும் மறந்து அழிந்துபோகும் நிலையிலிருந்த பண்டைத் தமிழ் இலக்கியங்கள் பலவற்றைத் தேடி அச்சிட்டுப் பதிப்பித்தவர். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழுக்குத் தொண்டாற்றியவர்களுள் உ.வே. சாமிநாதன் குறிப்பிடத்தக்கவர்.

தமது அச்சுப்பதிப்பிக்கும் பணியினால் தமிழ் இலக்கியத்தின் தொன்மையையும், செழுமையையும் அறியச் செய்தவர். உ.வே.சா 90 க்கும் மேற்பட்ட புத்தகங்களை அச்சுப்பதித்தது மட்டுமின்றி 3000 க்கும் அதிகமான ஏட்டுச்சுவடிகளையும் கையெழுத்தேடுகளையும் சேகரித்திருந்தார்.

1942-
ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இதேநாளில் இயற்கை மரணமடைந்தார். அப்போது அவருக்கு வயது 84.

உ.வே.சா தமிழுக்கும் இலக்கியத்துக்கும் ஆற்றிய பங்களிப்பினைப் பாராட்டி மார்ச் 21, 1932 அன்று சென்னைப் பல்கலைக்கழகம் மதிப்புறு முனைவர் பட்டம் அளித்தது. இதுதவிர மகாமகோபாத்தியாய மற்றும் தக்க்ஷிண கலாநிதி எனும் பட்டமும் பெற்றுள்ளார்.

இந்திய அரசு பிப்ரவரி 18,2006-ம் ஆண்டில் இவரது நினைவு அஞ்சல் தலை வெளியிட்டுள்ளது. உத்தமதானபுரத்தில் உ.வே.சா வாழ்ந்த இல்லம் தமிழ்நாடு அரசால் நினைவு இல்லமாக்கப்பட்டுள்ளது.1942-ல் இவர் பெயரால் சென்னை வசந்த நகரில் (பெசன்ட் நகரில்) டாக்டர் உ. வே.சா நூல்நிலையம் அமைக்கப்பட்டு இன்றும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

இதுதவிர இவரது வாழ்க்கை வரலாறு தமிழ் தாத்தா எனும் தலைப்பில் தொலைக்காட்சித் தொடராகவும் எடுக்கப்பட்டு சென்னைத் தொலைக்காட்சி நிலையத்தாரால் (தூர்தர்சன்) ஒளிபரப்பப்பட்டது.

நன்றி – மாலைமலர்-ஏப்.28, 2018 இணையக்கட்டுரை
 ---------------------------------------------------------------------------- 
நண்பர்களே! நான் உவேசா அவர்களைப்பற்றி எழுத நினைத்த போது இணையத்தில் இருந்த இந்த மாலைமலர்க் கட்டுரை கண்ணில் பட்டது. இதுவே சரியாக சுருக்கமாக இருக்கிறது என்பதை உணர்ந்து, எனது கட்டுரையை விடுத்து, இந்த மாலைமலர்க் கட்டுரையையே என் வலையில் போட்டுவிட்டேன்.
----------------------------------------------------------------------------
அதோடு-
உ.வே.சா.அவர்களுக்கும் எனக்குமான ஒரு சிறு பிணைப்பு என் வாழ்வில் நடந்தது பற்றி மட்டும் இங்குத் தெரிவிக்கிறேன். அது ஒரு நெகிழ்வான நிகழ்வு!

எளிய தமிழில் எழுதிய பெருந்தமிழ்த் தாத்தா!
2008-ஆம் ஆண்டு, புதுக்கோட்டை அரசு முன்மாதிரி மேல்நிலைப் பள்ளியின் மூத்த தமிழாசிரியராகவும் துணை முதல்வராகவும் இருந்த நான், தமிழக அரசின் சமச்சீர்க் கல்வி பாடத்திட்டக் குழுவின் அழைப்பின் பேரில் -ஒருவாரகால தாமதத்தில்- சென்று சேர்ந்தேன். சமச்சீர்க்கல்வி தமிழ்ப் பாடத்திட்டக் குழுத் தலைவராக இயக்குநர் இளங்கோவன் ஐயா தலைமையில் ஆறாம் வகுப்புத் தமிழ்ப்பாடத் திட்டக் குழுக் கூட்டம் அப்போது நடந்துகொண்டிருந்தது!
முதல் பாடமாகமகா வித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளைஎன்ற பாடம் எழுதப்பட்டு, பாடப்பொருள் பற்றிய இறுதி விவாதம் நடந்து கொண்டிருந்தது! வினாவிடைக் குறிப்புகள் பற்றிப் பேசியவர்கள் அடுத்த பாடம் பற்றிப் பேசலாமா என்றவுடன் நான் விழித்துக் கொண்டேன். இனியும் பேசாமல் இருந்தால் நாம் வந்ததே பொருளற்றுப் போய்விடும் என்றெண்ணி, அனைவருக்கும் வணக்கம் சொல்லி, “ஐயா, சமச்சீர்க் கல்வியின் ஆறாம்வகுப்புத் தமிழின் முதல் பாடம் மகா வித்துவான் பற்றி இருப்பதற்குக் காரணம் முதன்முதலாக உயர்நிலைப் பள்ளி வரும் குழந்தைகள் தமிழ்மொழி ஆர்வமும் அறிவும் பெறவேண்டும் என்பது தானே? என்றேன் இயக்குநர் ஆமாம் என்றார். தொடர்ந்த நான், “அப்படியெனில் .வே.சா.பற்றி இருப்பதுதானே இன்னும் பொருத்தமாக இருக்கும்?” என்றேன். இயல்பாகக் கேள்வியை எதிர்கொண்ட இளங்கோவன் அவர்கள், “அப்படியெனில் இருவரைப் பற்றியும் கொஞ்சம் எனக்கு ஒப்பிட்டுச் சொல்லுங்கள்என்றார்.
நான் கடகட வென்று சொல்ல ஆரம்பித்தேன் – “மகாவித்துவான் பெருந் தமிழறிஞர்தான் அவரை அறிந்தவர்களை விடவும் அவரது மாணவரான .வே.சா. அவர்களை அறிந்தவர்கள்தான் அதிகம்! ஏனெனில் ஏராளமான தமிழ்ச் செய்யுள்களை அவர் எழுதியிருந்தாலும் தமிழில் எம்ஏ படித்தவர் கூட அவரது ஒரு செய்யுளை உடனே கேட்டால் சொல்ல முடியாது! ஆனால், பாரதி சொன்னஎளிய பதம் எளிய சொற்கள்கொண்டு, பெரும் தமிழறிஞராக இருந்தாலும் தம் சுயவரலாற்றை கல்கி அவர்களின் வழியாக ஆனந்தவிகடன் வார இதழில் 122 வாரம் தொடர்ந்து எழுதியவர் உவேசா.
பிள்ளையவர்கள், சமயப்பற்றை விடாதவர் தம் மாணவர் வேங்கடராமனின் வைணவப் பெயரை சாமிநாதன் எனச் சைவத்துக்கு மாற்றியவரும் அவரே!. .வே.சா. அவர்களோ சமயம் கடந்து நின்று சமண நூல் என்றறியப்படும் சிந்தாமணி நூலை சைவமட ஆதரவுடன் முதன் முதலாக அச்சேற்றியவர். உவே.சா.அவர்களின் பழந்தமிழ்ப் பதிப்புப் பணிகளால்தான் தமிழுக்கு இன்றுசெம்மொழிஎனும் பெயர் பெறக் காரண நூல்கள் கிடைத்தன. “தமிழ்த்தாத்தாஎனப்படும் .வே.சா. அவர்களின் வாழ்க்கை வரலாற்று நிகழ்ச்சிகள் குழந்தைகளையும் கவர்ந்து தமிழின் பாலும் ஆர்வம் வளர்க்கும்என்றேன்.
உடனடியாக முடிவெடுத்த இயக்குநர் இளங்கோவன் ஐயா, “இது எனக்குச் சரியாகப் படுகிறதே! சரி நீங்களே அந்தப் பாடத்தை எழுதுங்கள்என்று சொல்லி கூட்டத்தைக் கலைத்துவிட்டார்! எனக்கே இது வியப்பாகத்தான் இருந்தது. நான் எழுதித் தந்த பாடத்தில் பின்னர் ஏராளமான திருத்தங்கள் வந்தாலும் 2009முதல் 2019முடிய ஆறாம் வகுப்புத் தமிழ்ப்பாட நூலின் முதல் பாடமாகதமிழ்த்தாத்தா .வே.சா.” என்பதே இருந்தது என்பதே இந்தப் பேரனின் சிறு பெருமை!
(பின்னர் அந்தப் பாடக்குழுவில் என்னால் தொடர்ந்து இயங்க முடியாமல் வெளியில் வந்ததும் “மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை” பாடத்தைத் தயாரித்து முடித்திருந்த குழுவினர் அந்தப் பாடத்தை ஆறாம் வகுப்பில் வைக்க முடியாமல் ஏழாம் வகுப்புக்கு வைத்ததும் தனிவரலாறு)
(இந்நிகழ்வை -
எனது “முதல்மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே” கல்விச் சிந்தனைகள் நூலின் முன்னுரையிலும் எழுதி யிருக்கிறேன் - படித்தவர்கள் நினைவிலிருக்கலாம்)
அந்தத் தமிழ்த் தாத்தாவின் நினைவு நாளில் தமிழர்கள் அனைவரும் பேரக் குழந்தைகளாகி அவரது தமிழ்த்தொண்டை நினைவு கூர்வது மட்டுமின்றி அவரது ஆய்வுகளைத் தொடர்ந்து தமிழின் பழமையை மட்டுமின்றி இன்றைய வாழ்வுப் பயனையும் நினைந்து தொடர்வோமாக. இன்றைய தலைமுறைக் குழந்தைகள் அவரது பணிகளால் தமிழ்ப்பற்று வளர்க்கட்டும். தமிழ்த்தாத்தா புகழ் தமிழுள்ள அளவும் நிலைக்கட்டும்
பொதிய மலைப் பிறந்தமொழி

வாழ்வறியும் காலமெலாம் புலவோர் வாயில்

துதியறிவாய், அவர் நெஞ்சின் வாழ்த்தறிவாய்,

இறப்பின்றித் துலங்கு வாயே!” - பாரதி
( இன்று ஏப்ரல்-28 .வே.சாமிநாதையர் அவர்களின் நினைவுநாள்)
-------------------------- 

அடுத்தொரு இணையக் கருத்தரங்கம் காண வருக!



'கரோனாக் காலத்தில்' எனது

மூன்றாவது 

இணைய உரையாடல் நிகழ்வு

காண, உரையாட வருக!
ஏற்கெனவே 
இரண்டு தலைப்புகளில் பேசிவிட்டேன்.
என்றாலும்,
இப்போது, திருப்பரங்குன்றத்தில் வாழும், நமது
புகழ்பெற்ற ஓவியர் வெண்புறா 
அழைத்த நிகழ்வு இது!
ஒருங்கிணைக்கும் தோழர்கள் - 
காளிதாஸ்,அருணகிரி, முத்துஅழகேசன், சிவா
நேரலையில் கேட்க, இணைய வானொலி-
26-04-2020 ஞாயிறு 
பிற்பகல் 3மணி
(ஒரு மணிநேர உரை 
பின்னர் குழு உறுப்பினர் கேள்வி-பதில்)

எனது தலைப்பு
“நாடென்ப நாடா வளத்தன…”

நீங்களும் கலந்துகொள்ளலாமே!
இணைப்பு கீழுள்ளது-
வருக நண்பர்களே!


குழு இணைய இணைப்பு
 ------------------------------------------------------ 
முன்னர் நான் பேசியுள்ள தலைப்புகள்-
(1) தமிழ்என்பது வெறும் இலக்கியமல்ல
(2) தமிழால் முடியும் தமிழரால் முடியாதா? 
இப்போது
(3) நாடென்ப நாடா வளத்தன...
(திருக்குறள் -எண்-739ஐ முன்வைத்து
கரோனா தீநுண்மி வரையான 
நமது வாழ்வின் செயற்கை பற்றியதாக உரையாடத் திட்டம்) 
தமிழறிஞர் மு வரதராசனார் இக்குறளுக்கு 
எழுதியுள்ள பொருள் :
 “முயற்சி செய்து தேடாமலே தரும் வளத்தை உடைய நாடுகளைச் சிறந்த நாடுகள் என்று கூறுவர்தேடி முயன்றால் வளம் தரும் நாடுகள் நாடுகள் அல்ல!”  
சேர்ந்து சிந்திப்போம் 
செயல்படுவோம் வாருங்கள்!

---------------------------------------------------